Search This Blog

19.3.10

விஷ்ணு யோக்கியதை பற்றி பெரியார்



(அன்பிற்கினிய வலைப்பதிவு வாசகர்களே அனைவருக்கும் வணக்கம்.

சமீப காலமாக சாமியார்களின் பக்தி வேஷம் கலைந்து உண்மை முகம் அம்பலமாகி வருகிறது. ஒரு தீபாவளி நாளில் நடமாடும் கடவுள் என்றும் லோககுரு என்றும் சொல்லி ஏமாற்றிய காஞ்சி காமகோடி ஜெயேந்திர சர(ஸ்)ஸவதியை காவல்துறையினர் கைது செய்தனர். புலன் விசாரணையில் அக்கிரகார மாமிகளுடன் ஜெயேந்திர சர(ஸ்)ஸவதிக்கு உள்ள தொடர்பு, பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திர சர(ஸ்)ஸவதி தன்னை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறிய செய்திகள், நடிகைகளுடன் தொடர்பு, ஆபாசப் படம் பார்த்தல் போன்ற பல உண்மைகள் உலா வந்து பரபரப்புக்கு உள்ளானது.(அதற்கு முன் பிரேமானந்தா) தொடர்ந்து சதுர்வேதி சாமியார், கருவறைக்குள் காம லீலை நடத்திய அர்ச்சகப்பார்ப்பான் தேவநாதன் போன்றவர்களின் செயல்கள் மூலம் “பக்தி” மணம் கமழ்ந்து நாற்றமடித்தது.

தற்போது நித்தியானந்தா என்ற சாமியாரும் நடிகை ரஞ்சிதா வும் நடத்திய காமக் களியாட்டங்களை தொலைக்காட்சியில் உலகமே பார்த்து சாமியார்களை காறித்துப்பி வருகிறது. இதில் இதுபோன்ற போலிச்சாமியார்களை ஒழிக்க வேண்டும் என்று ஒரு சிலர் குரல்கொடுக்கின்றனர். சாமிகள் என்றாலே போலி தான். இதில் உண்மைச் சாமிகள் எங்கே இருக்கிறது. என்ன சங்கராச்சாரி, நித்தியானந்தா போன்றவர்கள் மாட்டிக் கொண்டனர். உண்மைகள் தெரிந்து விட்டது. மாட்டிக் கொள்ளாத சாமியார்களைப் பற்றி தீவிரமாக விசாரித்தால் இது போல் பல உண்மைகள் வெளிவரும். அரசு இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இந்த சாமியார் பயல்கள் சுட்டிக் காட்டும் கடவுள்களாவது ஒழுக்கமாக இருந்துள்ளார்களா? படைத்தல்,காத்தல் அழித்தல் கடவுள்களாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரம்மா,விஸ்ணு, சிவன் யோக்கியதை என்ன? இது குறித்து ஆதார பூர்வமாக பெரியார் என்ன எழுதியுள்ளார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடவுள்களின் யோக்கியதையை சான்றுகளுடன் பெரியார் அம்பலப்படுத்தும் பகுதி இதோ உங்களின் பார்வைக்கு விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் ஆய்வு செய்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.)

*********************************************************************************


2.விஷ்ணு

இனி விஷ்ணு என்பவருடைய யோக்கியதையைப் பற்றிக் கவனிப்போம். இவர் எவ்வளவு அயோக்கியத்தனமான காரியங்களையும் முன்பின் பாராமல் செய்து விடுவார். இவர் செய்துள்ள காரியங்களில் அறிவாளிகள் ஒப்புக்கொள்ளக்கூடிய நன்மைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். காமம், வஞ்சனை, பொறாமை, தந்திரம், அநியாயம் முதலிய குணங்கள் இவரிடத்தில் பதிந்துகிடக்கின்றன. அப்படியிருந்தும் இவருக்குக் கோயில், குளங்களும், தேர் திருவிழாக்களும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இவர் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைக் கொன்று யாகம் செய்து வந்த முனிவர்களையும், ரிஷிகளையும் காப்பாற்றவற்காகவும் யாகம் செய்யக்கூடாது என்று சொல்லித் தடுத்துவந்த "அரக்கர்களை" ஒழிப்பதற்காகவும் வேண்டி இராமாவதாராம் செய்தார் என்றால் இவருடைய குணம் எப்படிப்பட்டதென்பதை நன்குணரலாம். இவர் செய்த அவதாரங்களுக்கும், கற்பழித்தல், வஞ்சித்தல், சாபம் பெறுதல், சாபவிமோசனம் பெறுதல் முதலியவைகளுக்கும் கணக்கு வழக்கு இல்லை. இவற்றையெல்லாம் சொல்லப்போனால் இப்புத்தகம் இடம் கொள்ளாது. ஆகையால் இவரைப்பற்றி ஒரு விஷயத்தை மாத்திரம் எழுதிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

சலந்தரன் என்னும் அரசன் இருந்தானாம். அவன் காலநேமி என்பவன் மகளாகிய கற்பிற் சிறந்த பிருந்தை என்பவளை மணந்து அரசாட்சி செய்து கொண்டிருக்கையில் தேவர்களையெல்லாம் வெற்றி கொண்டு கைலாயஞ்சென்று சிவனை எதிர்த்துச் சண்டை செய்தான். சிவன் கிழவடிவம் கொண்டு நிலத்தை வட்டமாகக் கீறி இதை நீ தூக்க முடியுமா? என்று கேட்டராம். சுலந்தரன் "இதுதானா பிரமாதம்" என்று சொல்லி அதைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள அது வெடித்து அவனைக் கொன்று விட்டதாம். அவனுடைய சேனைகளும், சிவனுடைய நெற்றிக் கண்ணால் எரிந்து போய் விட்டனவாம். சுலந்தராசுரன் சிவனோடு சண்டை செய்து கொண்டிருந்த நாளில் விஷ்ணு என்பவர் சலந்தரன் மனைவி பிருந்தையின் மேல் காமங்கொண்டு அவள் பதிவிரதை என்பதை மறந்து அவளைச் சேருவதற்காக ஒரு சூது செய்தார்.
அதாவது, சலந்திரனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு தன்னுடைய "பக்தர்"களை அசுரச் சேனைகள் போல வடிவம் எடுத்துக் கொள்ளச் செய்து சலந்தராசுரன் சண்டையிலிருந்து திரும்பிவருவது போல பிருந்தையிடம் சென்றாராம். இச்சூது அறியாத பிருந்தை தன் கணவன் என்றே நினைத்துக் கொண்டாளாம். பிறகு விஷ்ணு தினந்தோறும் அவளைக் கூடி இன்பந்துய்த்தாராம்! அந்தோ! அயோக்கியப் பாதகர்கள்கூட இக்காரியஞ்செய்ய அஞ்சுவார்கள் என்றால் கடவுள் என்று கொண்டாடப்படும் மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே ஒரு கற்பரசியை வஞ்சகமாகக் கற்பழித்தாரென்றால் இதைவிடக் கொடுமை என்னத்தான் வேண்டும். இவரையும் கடவுள் என்று கும்பிடுகிறார்களே! இருக்கட்டும், கதையைத் தொடர்வோம்.


கடைசியில், பிருந்தை இவர் இன்னார் என்பதைத் தெரிந்து கொண்டாளாம். அவள் கற்பரசியாகையால் அகலிகை, அருந்ததி முதலியவர்களைப்போல் உயிர் வாழ்ந்திருக்கச் சகியாமல், நெருப்பை உண்டாக்கி அதில் விழுந்து இறந்துவிட்டாளாம். அச்சமயத்தில் அவள் விஷ்ணுவுக்கு ஒரு சாபம் கொடுக்கிறாள். அதாவது விஷ்ணுவின் மனைவி தன்னை (பிருந்தை)ப் போலவே மாற்றான் கையில் அகப்பட்டுக் கற்பழியட்டும் என்று சாபம் கொடுத்தாளாம். ஆனால், காமப்பித்துக் கொண்ட விஷ்ணு பிருந்ததை இறந்துவிட்ட பிறகும், அவள் மேல் மோகங்கொண்டு அவள் இறந்த சாம்பலில் துளசி புரண்டு புரண்டு அழுதாராம். எவ்வளவு மானக்கேடு பாருங்கள்! பிறகு அந்தச் சாம்பலில் துளசி உற்பத்தியாயிற்றாம். அவர் பிருந்தை மேலுள்ள காதலால் அத்துளசியை மார்பில் அணிந்து கொண்டாராம்.

இக்காலத்திலும் விஷ்ணு கோயில்களில் துளசிதான் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதையும், அங்கு செல்லும் "பக்தர்"களுக்குத் துளசி கொடுக்கப்படுவதையும் எல்லோரும் அறிவார்கள். பிருத்தையினிடத்தில் விஷ்ணு நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர் எத்தகைய அயோக்கியத்தன முள்ளவர்கள் என்பது நன்கு விளங்கும். வேலியே பயிரை மேய்வது போல பிருந்தையின் கற்பைக் காக்கவேண்டியது கடவுள் என்று சொல்லப்படும் இவரது கடமையாயிருக்க இவரா கற்புடைய பிருந்தையை ஏமாற்றி வஞ்சகமாகக் கழிபழித்தாரென்றால் இவர் அயோக்கியத்தனம் உள்ளவர் என்பது சொல்லாமலேயமையும் ஆனால், இத்தகைய கடவுளின் சீடர்கள் எனப்படுவோர் இதற்கு ஒரு நொண்டிச் சமாதானம் சொல்லுகிறார்கள். அதென்னவென்றால் பிருந்தை கற்பழிவாளானால் சலந்தராசுரன் செத்துப்போவானென்றும், அவள் கற்புடையவளாயிருக்கிற வரையில் சலந்தரனுக்குச் சாவு வரக்கூடாதென்று வரம்பெற்றிருந்தானென்றும் ஆகையால், அவன் சாகும்பொருட்டு விஷ்ணு பிருந்தையைக் கற்பழித்தாரென்றும் சொல்லுகிறார்கள்.

இவர்களின் சமாதானங்களும் அகச்சான்று புறச்சான்றுகளும் வெகு விநோதமாகவிருக்கின்றன. சலந்தரன் இறப்பான் வேண்டி பிருந்தயை விஷ்ணு கற்பழித்தார் என்பது பெரும் பொய். அவர் காமவிகாரங்கொண்டு வேண்டுமென்றே பிருந்தையைக் கற்பழித்தார். இதற்குச் சான்று என்னவென்றால் பிருந்தை நெருப்பில் விழுந்து எரிந்து சாம்பலாய்விட்ட பிறகுங்கூட விஷ்ணு அவளையே நினைத்து வருந்தி அச்சாம்பலில் புரண்டு புரண்டு அழுதார்! அம்மட்டோ? அந்தச் சாம்பலில் துளசி முளைக்க அதையும் பிருந்தையின் மேலுள்ள அன்பினால் விஷ்ணு அணிந்து கொண்டார். இவர் கற்பழிக்க வேண்டுமென்று மாத்திரம் கருதியிருந்தால் இவ்விதம் செய்திருப்பாரா? நிற்க,

பிருந்தையின் சாபம் விஷ்ணுவை விடவில்லை. அச்சாபத்தின் பலனாகத்தான் விஷ்ணு இராமனாகவும், லட்சுமி சீதையாகவும் பிறந்து இராவணனால் சீதை தூக்கிக் கொண்டு போகப்பட்டாளெனறு சில புராணங்கள் சொல்லுகின்றன. இச்சமயத்தில் வாசகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். அதாவது சீதை இராவணனால் கட்டாயம் கற்பழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே. எப்படியென்றால் பிருந்தை நெருப்பில் விழும்போது விஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம் என்னவென்றால், "உன் மனைவியும் என் கதியடையட்டும்" என்பதே. அதாவது பிருந்தை விஷ்ணுவினால் கற்பழிக்கப்பட்டது போல "உன் மனைவியும் உன்னைப் பிரிந்து கற்பழிக்கப்படட்டும்" என்பதேயாகும்.

அவ்வாறேதான் இராமாவதாரத்தில் விஷ்ணு சீதையைப் பிரிந்து வருந்தினார் என்பதோடு மாத்திரமல்லாமல், வால்மீகி சீதை இராவணனால் கற்பழிக்கப்பட்ட விஷயத்தை நேர்முகமாகச் சொல்லாவிட்டாலும் ஊகித்தறியும்படியான வித்ததில் மறை முகமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் இராமாயணம் ஆராய்ச்சி என்னும் நூலைப் படித்தால் தெளிவாக விளங்கும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து விஷ்ணு எனப்படும் கடவுள் செய்துள்ள எண்ணிரந்த அயோக்கியத்தனங்களில் நூற்றில் ஒரு பாகம் மட்டும் விளக்கப்பட்டது. அதாவது விஷ்ணு கற்புள்ள ஒரு மங்கையை வேண்டுமென்றே கற்பழித்து அதன் பலனாகச் சாபத்தையும் அடைந்து ஒரு பாவமும் அறியாத தனது மனைவி லட்சுமியும் பழியடைவதற்குக் காரணமாயிருந்தார் என்பதே.

-------------------------------தொடரும்....

------------------ தந்தைபெரியார் - நூல்:- “புராணம்” பக்கம் 69 - 73

1 comments:

suku said...

Yaen sir, kadavule illannu sollittu, avar karpazhichar-nu solrathu different-a irukke?
Etho, vadivelu kenaru kanom-nu sonna kathaya irukku!