Search This Blog

7.3.10

சங்பரிவார், பா.ஜ.க. கும்பல் பாரத மாதவைப்பற்றி உருகி உருகிப் பேசும் வக்கணை கொஞ்சமா, நஞ்சமா?

மகாமகா வெட்கக்கேடு!

நன்றி: அவுட் லுக்


உலகப் புகழ்பெற்ற ஓவியர் உசேன் படத்திற்கு எதிராகத் துப்பாக்கியை நீட்டும் வெறிபிடித்த சிவசேனா தொண்டர் இவர்! இது நாடா?

உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப். உசேன். இந்திய நாட்டைச் சேர்ந்தவர்தான்! ஆம்! பாரத மாதா புத்திரர்தான்!

இந்தியக் குடிமகனான அவர் இப்பொழுது கத்தார் நாட்டின் குடிமகனாகிவிட்டார்.

என்ன காரணம்?

அந்த ஓவியர் மதத்தால் ஒரு முஸ்லிம் இதுதான் காரணம்!

1996 மே திங்கள் அந்தப் பிரபல ஓவியர் உசேனின் ஓவியக் காட்சி நடந்துகொண்டு இருந்தது. சிவசேனா காலிகள் திடுதிப்பென்று அரங்குக்குள் நுழைந்தனர். கண்மூடி கண் திறப்பதற்குள் தீ வைத்து எரித்து சாம்பல் மேடாக்கி ஓடிவிட்டனர்.

என்ன காரணமாம்? 20 ஆண்டுகளுக்குமுன் இந்து மதக் கடவுளச்சியான சரஸ்வதியின் படத்தினை ஆபாசமாக வரைந்திருந்தாராம். 20 ஆண்டுகளுக்குப்பின் இந்த இந்துத்துவா கும்பலுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு கிளம்பிவிட்டதாம்.

இந்துக் கடவுள் சரஸ்வதியை ஓவியர் உசேன் ஆபாசமாக வரைந்தது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த இந்துக் கடவுளின் பிறப்பே ஆபாசமாயிற்றே!

இந்து புராணப்படி சரஸ்வதியின் தகப்பனும் பிரம்மா. புருஷனும் பிரம்மா... ஹி... ஹி... எப்படியிருக்கிறது?

இந்த யோக்கியதையில் ஒரு ஓவியர் இந்த அம்மாவை ஆபாசமாகத் தீட்டி விட்டாராம். 20 ஆண்டுகளுக்குப்பின், ஆகா, எப்படி, நமது இந்துக் கடவுளச்சியை அவமானப்படுத்தலாம்? என்று கிளம்பிவிட்டார்களாம்.

அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்டது. இந்தியாவைவிட்டு துபாய், லண்டன் முதலிய இடங்களில் காலம் கடத்தினார். அங்கு தன் புகழ்மிக்க ஓவியப் பணிகளைச் செய்துகொண்டுதானிருந்தார்.

இந்தியாவுக்கு மீண்டும் வரத்தான் அவருக்குக் கொள்ளை ஆசை. ஆனால், ஒரு கொள்ளைக் கூட்டம் கத்தியும், கட்டாரியுமாகத் திரிந்துகொண்டு இருக்கின்றதே அவர் என்ன செய்யட்டும்?

கத்தார் நாடு இந்தப் புகழ்பெற்ற ஓவியரை தன் குடிமகனாக ஏற்றுக்கொள்ள இரு கரங்களையும் கனிவுடன் நீட்டி அரவணைத்துக் கொண்டுவிட்டது.

110 கோடி மக்கள் வாழும் பாரதப் புண்ணிய பூமியில் (?) அந்த மண்ணின் மைந்தன் குடியுரிமையோடு வாழ முடியவில்லை என்பது இந்தியா என்னும் பெரும் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதுதானா?

இன்னொரு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் என்பவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்கிறது. ஆனால், சொந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெருமகனுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

இராணுவப் பலத்தில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கக்கூடிய இந்தியா தன் திருமகன் ஒருவன் உயிரோடு நடமாட உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை.

வெட்கம்! வெட்கம்!! மகாமகா வெட்கம்!!

சங் பரிவார் சிவசேனா போன்ற கும்பல் கலாச்சாரக் காவலர்களாகத் தங்களை வரித்துக் கொண்டு, சட்டத்தைக் கைப்பந்தாகத் தம் கையில் எடுத்துக்கொண்டு விளையாடித் தீர்க்கிறார்கள் - வட மாநிலங்களில் இந்த நிலை!

அதுவும் மத்தியிலும், பல மாநிலங்களிலும் இந்தக் காவிக் கும்பலின் ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்-றதும் அவற்றின் திமிருக்கு எல்லையில்லாமல் போய்விட்டது.

மும்பையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிவசேனா தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

மும்பைப் பகுதிக்குள் யார் கலை நிகழ்ச்சிகளை நடத்தினாலும், இந்தக் கும்பலின் அனுமதி தேவையாம். அப்படி அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்தினால் அவ்வளவுதான் சூறையாடித் தீர்த்துவிடுவார்கள் சிவசேனா குண்டர்கள்.

1998 டிசம்பர் 2 இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3 இல் டில்லியிலும் தீபா மேத்தாவின் ஃபயர் திரைப்படத்திற்கு எதிராக சிவசேனா சங் பரிவார்க் கும்பல் பெரும் ரகளையில் ஈடுபடவில்லையா? திரையரங்குகள் அடித்து நொறுக்கப்படவில்லையா? விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் தீக்கு இரையாக்கப்படவில்லையா?

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் குலாம் அலி நிகழ்த்த இருந்த இசை நிகழ்ச்சி அரங்கினுள் நுழைந்து துவம்சம் செய்து தீர்த்தார்களே! (26.4.1998).

உ.பி. தலைநகரமான லக்னோவில் நாடகத்தை நடத்திவிட்டு சஹ்மத் ரங்க்மஞ்ச் நாடகக் குழுவினர் திரும்பிக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல். வழிமறித்துத் தாக்கவில்லையா? உ.பி. மாநில பா.ஜ.க. மேலவை உறுப்பினர் அஜீத்சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக் காவிக் கும்பல் கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்தது (23.9.1999).

இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் திலீப்குமார் பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதினைத் திருப்பித் தரவேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்தி-னார்களே, திலிப் குமாரின் உருவப் பொம்மைக்குத் தீயிட்டார்களே! (13.7.1999).

அவுட்லுக் இதழின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹுசேன். வகுப்புவாதங்களை நுணுக்கமாகத் தோலுரித்து கேலிச் சித்திரங்கள் தீட்டுவதில் விற்பன்னர். விட்டு வைப்பார்களா?

குரூரமான வகையில் அந்த மாபெரும் கலைஞனைக் கொலை செய்து, சாக்குப் பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டிவிட்டனரே!

கத்தார் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள அந்த உசேன் இந்தியாவில் இருந்திருந்தால், இந்த ஹுசேனுக்கு ஏற்பட்ட கதிதானே அவருக்கும் ஏற்பட்டு இருக்கும்!

சரஸ்வதியை ஆபாசமாக வரைந்துவிட்டதாகத் தாம்தூம் என்று குதிக்கும் இந்தக் கூட்டம் யார்? மக்களுக்காகப் பாடுபட்ட மகாத்மா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைக் கொன்ற கூட்டமாயிற்றே! அப்பொழுது ஒருமுறை காந்தியாரைக் கொன்றார்கள். மைநாதுராம் கோட்சே என்ற நாடகத்தை டில்லியிலும், மும்பையிலும் நடத்தினார்களே! கோட்சேயைக் கடவுளாகவும், காந்தியாரை அரக்கனாகவும் சித்தரித்திருந்தார்களே! ஆம், இன்னொருமுறையும் காந்தியாரைக் கொன்றனர்.

அன்று பாபர் மசூதியை இடித்து பாரத மாதாவை தலைகுனிய வைத்தார்கள். இன்று ஓவியர் ஹுசேனை இன்னொரு நாட்டின் குடிமகனாக்கி, இந்தியாவின் மரியாதையைக் கப்பலேற்றி விட்டார்களே!

அடேயப்பா! இந்த சங்பரிவார், பா.ஜ.க. கும்பல் பாரத மாதவைப்பற்றி உருகி உருகிப் பேசும் வக்கணை கொஞ்சமா, நஞ்சமா?

ஆனால், இவர்களின் காவி வெறித்தனம் அந்தப் பாரத மாதாவின் முகத்தில் ஆற முடியாத சீழ் பிடித்த காயங்களை உண்டு பண்ணுகின்றன என்பதை மறுக்க முடியுமா?

------------------கருஞ்சட்டை அவர்கள் எழுதிய கட்டுரை - "விடுதலை” 27-2-2010

0 comments: