Search This Blog

17.3.10

பிரம்மாவின் யோக்கியதை பற்றி பெரியார்


(அன்பிற்கினிய வலைப்பதிவு வாசகர்களே அனைவருக்கும் வணக்கம்.

சமீப காலமாக சாமியார்களின் பக்தி வேஷம் கலைந்து உண்மை முகம் அம்பலமாகி வருகிறது. ஒரு தீபாவளி நாளில் நடமாடும் கடவுள் என்றும் லோககுரு என்றும் சொல்லி ஏமாற்றிய காஞ்சி காமகோடி ஜெயேந்திர சர(ஸ்)ஸவதியை காவல்துறையினர் கைது செய்தனர். புலன் விசாரணையில் அக்கிரகார மாமிகளுடன் ஜெயேந்திர சர(ஸ்)ஸவதிக்கு உள்ள தொடர்பு, பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திர சர(ஸ்)ஸவதி தன்னை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறிய செய்திகள், நடிகைகளுடன் தொடர்பு, ஆபாசப் படம் பார்த்தல் போன்ற பல உண்மைகள் உலா வந்து பரபரப்புக்கு உள்ளானது.(அதற்கு முன் பிரேமானந்தா) தொடர்ந்து சதுர்வேதி சாமியார், கருவறைக்குள் காம லீலை நடத்திய அர்ச்சகப்பார்ப்பான் தேவநாதன் போன்றவர்களின் செயல்கள் மூலம் “பக்தி” மணம் கமழ்ந்து நாற்றமடித்தது.

தற்போது நித்தியானந்தா என்ற சாமியாரும் நடிகை ரஞ்சிதா வும் நடத்திய காமக் களியாட்டங்களை தொலைக்காட்சியில் உலகமே பார்த்து சாமியார்களை காறித்துப்பி வருகிறது. இதில் இதுபோன்ற போலிச்சாமியார்களை ஒழிக்க வேண்டும் என்று ஒரு சிலர் குரல்கொடுக்கின்றனர். சாமிகள் என்றாலே போலி தான். இதில் உண்மைச் சாமிகள் எங்கே இருக்கிறது. என்ன சங்கராச்சாரி, நித்தியானந்தா போன்றவர்கள் மாட்டிக் கொண்டனர். உண்மைகள் தெரிந்து விட்டது. மாட்டிக் கொள்ளாத சாமியார்களைப் பற்றி தீவிரமாக விசாரித்தால் இது போல் பல உண்மைகள் வெளிவரும். அரசு இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இந்த சாமியார் பயல்கள் சுட்டிக் காட்டும் கடவுள்களாவது ஒழுக்கமாக இருந்துள்ளார்களா? படைத்தல்,காத்தல் அழித்தல் கடவுள்களாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரம்மா,விஸ்ணு, சிவன் யோக்கியதை என்ன? இது குறித்து ஆதார பூர்வமாக பெரியார் என்ன எழுதியுள்ளார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடவுள்களின் யோக்கியதையை சான்றுகளுடன் பெரியார் அம்பலப்படுத்தும் பகுதி இதோ உங்களின் பார்வைக்கு விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் ஆய்வு செய்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.)

*************************************************************************************
1.பிரம்மாவின் யோக்கியதை


புராணமும், கடவுள்களின் ஒழுக்கமும் :


இந்து மதத்துக்கு ஆதாரமாகவும், மத தத்துவங்களாகவும், பண்டிதர்களிடையும், பாமர மக்கிடையும் செல்வாக்குப் பெற்றிருப்பவை புராணங்களேயாகும். அப்புராணங்கள் பெரிதும் சைவம், வைணவம் என்று சொல்லப்படும் இரு உட்சமயத்தைப் பொருத்தேயாகும். இன்று பெரிதும் வைணவம், சைவம் என்னும் இருசமயம்தான் இந்துமதமாய் இருந்து வருகின்றது என்றாலும், இந்துமதத்தில் சங்கரர் மதம், மத்துவாச்சார் மதம் முதலியவைகளும் அடங்கும். புராணக் கோட்பாடுகளின்படியும், வேதசாஸ்திரக் கோட்பாடுகளின்படியும், அநேக கடவுள்களும், அநேக தேவர்களும், அக்கடவுள்கள் ஆகியவர்களுக்குப் பல பெண்டு பிள்ளைகளும், குடும்பம் விவகாரங்களும், லீலை முதலிய காம விளையாட்டுகளும் கணக்கிலடங்காத அளவுக்கு உண்டு.


இக்கடவுள்களில் முக்கியமாகவும், பிரதானமாகவும் சொல்லப்படும் கடவுள்கள் மூன்று. இம்மூன்று கடவுள்களுக்கும் முதற்கூறிய பெண்டுபிள்ளை, குடும்பம், வீடுவாசல், லீலை, திருவிளையாடல் மற்றும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற உத்தியோகம், விருப்பு, வெறுப்பு, பொறாமை ஆகிய காமவிவகாரம் முதலிய குணங்களும் உண்டு. இவைகளை விவரிப்பதும், விளக்குவதும் தான் புராணம் என்று சொல்லப்படுவதாகும்.

இப்புராணக் கோட்பாடுகளின்படி பிரம்மாவின் உத்தியோகம் படைத்தல், விஷ்ணுவின் உத்தியோகம் காத்தல், சிவனுடைய உத்தியோகம் அழித்தல். இந்த மூன்று இலாக்காக்களின் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்கள் வேலை செய்து கொண்டு வருகிறார்களாம். இவர்களின் யோக்கியதையைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இவர்களின் யோக்கியதை முழவதையும் எழுதுவதென்றால் இப்புத்தகம் இடங்கெடாது என்று அஞ்சுகிறோம். ஆகையால், ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு பதம் என்னும் பழமொழியை அனுசரித்து இம்மும்மூர்த்திகளின் யோக்கியதையைக் கூடியவரையில் சுருக்கமாகவே ஆராய்வோம்.


பிரம்மா :

முதலில் பிரம்மா என்பவரைப்பற்றி பார்ப்போம். புராணங்களில் பிரம்மாவினுடைய யோக்கியதையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தால்; முதலில் இவர் ஒரு பெரும் புளுகர் என்பதும், பொய்சாட்சி ஏற்படுத்துபவர் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவன் என்னும் விஷயமாய்ச் சண்டையிட்டுக் கொண்டார்களாம். அச்சமயத்தில் சிவன் இவ்விருவருக்கும் மத்தியில் ஒரு மலையுருவெடுத்து நின்று என் அடிமுடியைக் காண்பவரே பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்றியாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் உருவெடுத்துக் கொண்டு முறையே அடியையும், முடியையும் காணச் சென்றார்களாம். ஆனால், விஷ்ணு அடியைக் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டார். பிரம்மா முடியைக் காணமுடியாமல் தவிக்கும் போது ஒரு தாம்பூ சிவன் முடியிலிருந்து விழுந்ததாம். பிரம்மாதான் முடியைக் கண்டதாகப் பொய் சாட்சி சொல்லம்படி அத்தாழம்பூவிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கீழே வந்து தாம் முடியைக் கண்டுவிட்டதாகவும் அதற்குச் சாட்சியாகத் தாழம்பூவைக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். சிவன் இந்தப் பொய்யையறிந்து பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போகக்கடவது என்று சாபம் கொடுத்தாராம். இந்தப் புராணக்கதையினால் பிரம்மாவினுடைய யோக்கியதை வெளியாகியது.

இனி பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போனதன் காரணம் வேறு ஒரு விதமாகவும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், பிருகு என்னும் ஒரு ரிஷி இருந்தாராம். அவருக்கு புலொமை என்னும் ஒரு மனைவி இருந்தாளாம். மும்மூர்த்திகளுக்கே பெண்டாட்டிகள் இருக்கும் போது ரிஷிகளுக்கும் பெண்டாட்டியில்லாமல் இருக்குமா? இவர் தமது மனைவியோடு வாழுங்காலத்தில் ஒருநாள் மும்மூர்த்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சோதிக்க வேண்டுமென்னும் ஆசை இவருக்கு உண்டாயிற்றாம். உடனே இவர் பிரம்மலோகம் சென்று பிரம்மா இருக்கும் மாளிகையில் புகுந்தாராம். அச்சமயத்தில் பிரம்மா தன் மனைவியோடு சுகித்துக் கொண்டிருந்தாராம். அதையறிந்த பிருகு உனக்குக் கோயில் இல்லாற் போகக்கடவது என்று சபித்தாராம். ஆகையால், பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போய்விட்டதாம்.

இந்த இரண்டு கதைகளில் இரண்டு காரணம் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இதிலிருந்து என்ன ஏற்படுகிறது என்றால் பிரம்மாவுக்கும் சிற்றின்ப சுகத்தில் மிகுந்த விருப்பமுண்டாயிருந்தது என்று ஏற்படுகிறது. இது கடவுள் தன்மைக்கு அழகா? என்று யோசித்துப் பாருங்கள். சிலர் பிரம்மா தன் மனைவியிடத்தில் தானே சுகித்துக் கொண்டிருந்தார்? இது உலக வழக்கந்தானே? தன் மனைவியிடத்தில் கணவன் சேர்ந்து சுகிப்பது தவறல்லவே என்று சொல்லக்கூடும். இதை நாமும் ஒப்புக்கொள்கிறோம் என்றாலும், இவர் இன்னொரு வேலை செய்திருக்கிறார். அதையும் சொல்லிவிடுகிறேன்.

பிரம்மா ஒரு காலத்தில் பத்மை என்னும் ஒரு பெண்ணை உண்டாக்கினாராம். பிறகு அவள் வெகு அழகாயிருப்பதைக் கண்டு தன் மகள் என்றும் யோசியாமல் அவளைக்கூடி கற்பழித்துவிட்டாராம். இந்தச் சரித்திரமும் புராணங்களில் காணப்படுகிறது. இன்னும் சுப்பிரமணியரால் இவர் சிறையிடப்பட்டது முதலியவைகளைப் பற்றி சொல்லப்புகின் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். இதனால் மகளை மணந்து கொண்டவர் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

------------------ தந்தைபெரியார் - நூல்:- “புராணம்” பக்கம் 67-69

0 comments: