Search This Blog

6.3.10

தமிழர்கள் எல்லாம் தன்மானமற்றவர்களா? அயோக்கியர்களா?


தமிழர்கள் அனைவரும் அயோக்கியர்களா?

தமிழர்களின் மரியாதைக்குரிய தலைவர்களை தரங்குறைந்த சாக்கடை வார்த்தைகளால் தாக்கும் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது.

பார்ப்பனத் தலைவர்களான சங்கராச்சாரியார் போன்றவர்கள், சாமியார்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்ட பார்ப்பன வட்டாரம் அந்த ஆத்திரத்தை சகிக்க முடியாமல் தமிழர்களையும், தமிழ்நாட்டின் தலைவர்களையும் தரந்தாழ்த்தித் தாக்கும் தொழிலில் இறங்கியுள்ளது.

இராமாயண காலத்திலிருந்து நேரிடையாகவே பார்ப்பனர்கள் மோதமாட்டார்களே, தமிழகத்தில் மிகவும் மலிவாக விபீடணர்கள், தாசானுதாசர்கள் கிடைக்கத்தானே செய்வார்கள். எழுத்துக் கூலிகளும் தமிழர்களில் உண்டல்லவா? அத்தகையவர்களைத் தட்டிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து தாதா வேலைக்குச் சூ காட்டுகிறது ஒரு பார்ப்பன இதழ்.

இன்றைக்கு கருணாநிதி போன்ற தலைவர்கள் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு அழைக் கிறார்கள்! நாட்டில் உள்ள அயோக்கியர்கள் எல்லாம், தலைவர் நம்மைத்தான் அழைக்கிறார் என்று உள்ளே வந்துவிட்டார்கள். நாட்டில் உள்ள யோக்கியன் எல்லாம் இந்த அழைப்பு நமக்கு இல்லை என்று ஒதுங்கிக்கொண்டான். அழைப்பவர்கள் யாரோ அவரைப் பொறுத்து பின்பற்று பவர்களின் தகுதி இருக்கிறது.

***********************************

காந்தி அழைத்தபோது, தேவர் சமூகத்திலிருந்து முத்துராமலிங்கத் தேவர் வந்தார். நாடார் சமூகத்திலிருந்து காமராஜர் வந்தார். பிராமண சமூகத்திலிருந்து ராஜாஜி வந்தார். தாழ்த்தப்பட்டோர் சமூகத்திலிருந்து கக்கன் வந்தார். ரெட்டியார் சமூகத்திலிருந்து ஓ.பி. ராமசாமி ரெட்டியார் வந்தார். ராஜுக்கள் சமூகத்திலிருந்து குமாரசாமி ராஜா வந்தார். இப்படி காந்தி அழைத்தபோது, ஒவ்வொரு சமூகமும் தன்னிடமிருந்த சிறந்த உத்தமமான மனிதர்களை பொது வாழ்க்கைக்கு அளித்தது.

********************************************

இன்றைக்கும் அதே சமூகங்கள் இருக்கின்றன. எல்லா சமூகங்களும் தங்கள் பங்கிற்கு மந்திரி சபைக்கு ஆளை அனுப்புகின்றன. ஆனால் அந்த மந்திரி சபையில் ஒரு யோக்கியன் உண்டா?

*********************************************

காந்தியார் காலத்தில் அயோக்கியர்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை; கருணாநிதி காலத்தில் யோக்கியர்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை.

************************************************

மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் செருப்பு குத்தகைக்கு எடுக்கிறவனுக்கும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

செருப்பு குத்தகை எடுக்கிறவனும், துணை வேந்தரும் ஒரு நிலைக்கு வந்துவிட்ட பிறகு, கல்வியாளனும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒரு நிலைக்கு வந்துவிட்ட பிறகு இந்த நாடு என்னவாகும்?

இப்படியெல்லாம் ஒருவர் பேசியிருக்கிறார். இது இவ்வார துக்ளக் இதழில் (10.3.2010) சாங்கோ பாங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

*************************************************

இப்படிப் பேசியவரை திருவாளர் சோ ராமசாமி ஓகோ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சும் இவ்விதழில் வெளிவந்துள்ளது.

விபீடணத் தமிழரின் உரையும், அதனை வழி மொழிந்து ஆதரித்த திருவாளர் சோவும் இதன்மூலம் என்ன தெரிவிக்கின்றன?

இன்றைக்குக் கலைஞரிடம் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்கள்.

இன்றைக்கு கலைஞர் தலைமையிலான அமைச்சர்கள், அத்தனை பேரும் யோக்கியமற்றவர்கள்.

கலைஞர் அமைச்சரவையில் இருக்கும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அந்த ஜாதிகளில் உள்ள அயோக்கியர்கள்தான்.

சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தருக்கும், கோயிலில் செருப்பு குத்தகைக்கு எடுப்பவனுக்கும் வித்தியாசம் இல்லை. இவ்வாறு வெளிப்படையாகப் பேசப்பட்ட பேச்சு துக்ளக்கிலும் வெளிவந்துவிட்டது.

பார்ப்பான் நேரிடையாக எழுதவில்லைதான். பார்ப்பானின் பாதக் குறடுகள் இப்படியெல்லாம் எழுதுகின்றன.

தனிப்பட்ட யாரோ ஒருவரைத் தாக்கவில்லை. ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரையும், பல தரப்பினரையும், அயோக்கியர்கள் என்றும் இந்த 2010 ஆம் ஆண்டில் எழுத முடிகிறது.

இவற்றை அனுமதிக்கலாமா? தமிழர்கள் எல்லாம் தன்மானமற்றவர்களா? அயோக்கியர்களா?

தி.மு.க.வில் உள்ளவர்கள் அத்தனைப் பேரும் அயோக்கியர்களா?

யாரோ ஒரு நடிகர், நடிகை தமிழர்களைக் கொச்சைப்படுத்தயதற்கெல்லாம் ஆவேசப் போர்க் கோலம் பூண்ட தமிழர்களே, சிந்திப்பீர்!

------------------------ 5-3-2010 “விடுதலை” யில் கருஞ்சட்டை எழுதிய கட்டுரை

0 comments: