Search This Blog

18.3.10

மூளை விலங்கை உடைத்தவர் மணியம்மையார்

எளிமை, தியாகம், இலட்சியம் எடுத்துக்காட்டான தலைவர் மணியம்மையார்
தமிழர் தலைவர் உருக்கத்துடன் புகழாரம்

எளிமை, தியாகம், இலட்சியத்திற்கு எடுத்துக் காட்டானவர் அன்னை மணியம்மையார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

சென்னை பெரியார் திடலில் நேற்று (16-.3-.2010) மாலை அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதி வருமாறு:

தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என்ற ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலை இன்றைக்கு அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாளில் வெளியிட்டிருக்கின்றோம். பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய இந்த நூலை யாரை அழைத்து வெளியிடலாம் என்று நாங்கள் நினைத்த பொழுது, எங்களுக்கு நினைவுக்கு வந்த ஒரே பெயர் கவிஞர் கனிமொழி அவர்கள்தான்.

அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூலினை கவிஞர் கனிமொழி எம்.பி. வெளியிட, குஞ்சிதம் அம்மையார் பெற்றுக்கொண்டார். கவிஞர் கனிமொழிக்கு நினைவுப் பரிசினை வழங்கினார் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை, பெரியார் திடல், 16.3.2010).

கனிமொழியின் சிறப்பு

யார் யாரெல்லாம் நசுக்கப்பட்டு இருக்கிறார்களோ, ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கதவுகளை சங்கமம் என்ற பெயராலே திறந்து விட்டவர். நாடு முழுக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி பெண்கள் இன்றைக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக மூச்சு முட்டித் திணறிக்கொண்டு இருக்கின்ற வேளையில், அந்த இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவோம் என்று நாடாளுமன்றத்திலே குரல் எழுப்பிய கவிஞர் கனிமொழி அவர்கள்தான் அன்னை மணியம்மையார் நினைவு நாளில் இந்த நூலை வெளியிட பொருத்தமானவர் என்று அழைக்கப்பட்டு இங்கே வந்திருக்கிறார். என்னுடைய உரை சுருக்கமாகத்தான் இருக்கும். அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் பல நாட்கள் பேசிக் கொண்டேயிருக்கலாம்.

நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்...

என்னதான் நான் பகுத்தறிவாளராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படுவது இது போன்ற நிலைமைகளில் எனக்கு வழமை. அதை என் குடும்பத்தார்களும் அறிவார்கள்.

அன்னை மணியம்மையார் மட்டும் இந்த இயக்கத்திற்குத் தலைமை ஏற்காமல் இருந்திருந்தால், இந்த இயக்கம் இவ்வளவு சிறப்பாக வளர்ந்திருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பார்க்கின்றோம்.

எனக்கு ஆணையிட்டார்கள்

மிகப்பெரிய பொறுப்பை, தாங்க முடியாத பொறுப்பை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் எனக்கு வழங்கி விட்டார்கள். என்னை சுமக்க அவர்கள் ஆணையிட்டு விட்டார்கள்.

அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக நாணயமாக உழைக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்டும் உறுதி ஏற்றுப் புதுப்பித்துக் கொள்வது வாடிக்கை என்றாலும், இந்த ஆண்டு அதற்கு சிறப்பு ஏற்படுகின்ற வகையிலே பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் அம்மா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதி அது நூலாக வெளிவருவது என்பது வரலாற்றுக் குறிப்பு மிக்க நாள் இந்த நாள்.

திராவிட இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள்

அதற்காக நூல் ஆசிரியர் மங்களமுருகேசன் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, இனி வரக் கூடிய இளைய தலைமுறையினரும் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்க வரலாற்றை, திராவிட இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களுடைய வரலாறு நிறைய வெளி வரவேண்டும்.

கடன்பட்டிருக்கிறது

இந்த நூலை எழுதிய பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்களுக்கு திராவிடர் இயக்கம் கடன்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கவிஞர் கனிமொழி அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி, அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி, கலைஞர் அவர்களைப் பற்றி, ஏன் திராவிட இயக்கக் கொள்கைகள் பரவுவதற்கு நாடாளு மன்றத்திலே அவர் ஒரு ஒலி பெருக்கியாகத் திகழுகின்றார். நாடாளுமன்றத்திலே அவர் ஆற்றிய உரையைக் கேட்டு நாங்கள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.

இங்கே வழங்கப்பட்ட படம் என்ன தெரியுமா?

இந்த மேடையிலே ஒரு படம் நினைவுப் பரிசாக கவிஞர் கனிமொழி அவர்களுக்கு வழங்கப்பட்டது? அது ஏதோ ஒரு படம் என்று நினைப்பீர்கள். மிசா காலத்தில் அன்னை மணியம்மையார் அவர்களால் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்களுக்கு ஆறுதல் சொல்லியபோது எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் சிறுமியாக இருப்பவர்தான் கவிஞர் கனிமொழி. இந்தப் படம் சாதாரண படமல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படம்.

மிசா காலத்திலே கலைஞர் அவர்களுக்கு ஒருவர் கார் ஓட்டுகிறாரே, பரவாயில்லை, நாளைக்கு சிறைச்சாலைக்கு ஒரு புது நண்பர் வரப்போகிறார் என்று பேசிக் கொண்ட காலம் அது.

மணியம்மையார் கோபமாகக் கேட்டார்

அன்னை மணியம்மையார் கேட்டார். தி.மு.க. காரர்களைக் கைது செய்தீர்கள். ஆனால் அவர்களுடைய இல்லத்தாரை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள்? என்று கோபமாக கேட்ட காட்சி மறக்கமுடியாத காட்சி.

எங்கள் வாழ்க்கையின் பொற்காலம்

எங்களுக்கெல்லாம் வரலாற்றிலே மறக்க முடியாத காலம் எது என்று சொன்னால், மிசா காலத்திலே நாங்கள் சிறையிலே இருந்தோமே அதுதான் மறக்கமுடியாத நாள். இதுதான் எங்களுடைய பொது வாழ்க்கையின் பொற்காலம். இங்கே பேசியவர்கள் புண்ணுக்கு மருந்திட்டதைப் போலப் பேசினார்கள்.

எளிமை, இனிமை, கொள்கை, இலட்சியம், தியாகம் இவற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அன்னை மணியம்மையார்.

கதவை உடைக்கும் ஆற்றல்

இன்றைக்குப் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாதி நிறைவேறியிருக்கிறது. பாலியல் நீதியோடு சமூக நீதியும் வரவேண்டும். இந்த மசோதா நிறைவேறாமல் கதவை மூட நினைத்தால், அதை உடைத்துத் திறக்கக்கூடிய ஆற்றல் கனிமொழி அவர்களிடத்தில் இருக்கிறது.

பெண்களுக்கென்று முகவரி இல்லையே!

ஆண் எஜமானன் பெண் அடிமை என்ற நிலை சமுதாயத்தில் இருக்கிறது. ஆண்களுக்கு என்று தனி அடையாளம், முகவரி இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு இந்தக் காலம் வரை எந்தவித தனி அடையாளமும் முகவரியும் கிடையாது. இவர் இன்னாருடைய மனைவி, இன்னாருடைய மகள் என்று சொல்லக்கூடிய நிலைதான் இருக்கிறது.

இது என்னுடைய ஆட்டுக்குட்டி என்று சொல்லுவது போல இது என்னுடைய மாடு என்று சொல்லுவது போல மன்னிக்க வேண்டும். இப்படிப் பெண்களைஅழைக்கக் கூடிய சமூக அவல நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. காரணம் ஆண்களின் சுயநலம். குதிரைக்கு மனிதன் கொள்ளு வைக்கிறானே எதற்காக? குதிரை கொழு கொழு என்று இருக்க வேண்-டும் என்ற அன்பு நேயத்தாலா? அல்ல. குதி நன்கு ஓடவேண்டும். தன்னுடைய சுயநலத்திற்கு சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக.

புரட்சி செய்ய வேண்டும்

தந்தை பெரியார்தான் சொன்னார். இப்படிப்பட்ட நிலைகளை எல்லாம் பெண்கள் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்த அடிமை நிலையை எதிர்த்து நீங்கள் புரட்சி செய்ய வேண்டும். அத்தகைய புரட்சி வீட்டிற்குள் இருந்து கிளம்பவேண்டும் என்று சொன்னார்.

பெண்கள் சமத்துவ உரிமை பெற ஆண்மை என்ற பதமே இருக்கக்கூடாது, அது ஒழிய வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.

வானொலி நிலையத்தில்...

சென்னை வானொலியிலே ஒரு முறை என்னை பேட்டிக்கு அழைத்தார்கள். இவ்வளவு செய்திகளையும் நான் சொல்லி முடித்தபிறகு, அந்த அம்மையார் கேட்டார். இவ்வளவு சமத்துவக் கருத்துகளையும் சொன்ன பெரியார் ஒரு ஆண்தானே என்று கேட்டார்.

நான் சொன்னேன். நீங்கள் அவரை ஓர் ஆணாக மட்டும் பார்க்கிறீர்கள். அவர் ஒரு சமூக விஞ்ஞானி என்ற கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். பெண்களுடைய உரிமைகளுக்காக இந்த அளவு சிந்திக்கச் சொன்னவர் உலகில் வேறு எவரும் இருக்க முடியாது என்று சொன்னேன். திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ஒரு திருமணத்திலே தந்தை பெரியார் விளக்கமாக ஒரு புதிய கருத்தைச் சொன்னார். கணவன், மனைவி இருவருக்குமே குழந்தை இல்லை. குறைபாடு பெண்ணுக்கு என்றவுடன் குழந்தைக்காக ஆண் இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான்.

அய்யா கேட்ட ஓர் அற்புத கேள்வி

இதையே மாற்றி அய்யா கேள்வி கேட்டார். சரி, கோளாறு ஆணுக்கு இருந்து மனைவி குழந்தை பெறுவதற்காக இன்னொரு திருமணத்தை நான் செய்து கொள்கிறேன் என்று கேட்டால் இந்த ஆண் சமுதாயம் விட்டு விடுமா? என்று தந்தை பெரியார் கேட்டார். இப்படிச் சொன்னால், கணவன் அரிவாளை அல்லவா எடுத்துக் கொள்வான்?

இன்றைக்கு கற்பு என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல் கண்டுபிடித்துவிட்டார்கள். இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்திட்ட வெற்றியாகும் (கைதட்டல்).

அன்னை மணியம்மையார் சுமந்த பழிகள், ஆபாசங்கள் கொஞ்ச நஞ்சமா? மனிதன் மனைவியை கோவிலுக்குப் போக அனுமதிக்கின்றான். அர்ச்சகர் தேவநாதன் கதை தெரியுமே. பெண்களை ஆசிரமத்திற்குச் செல்ல அனுமதிக்கின்றான். டாக்டரிடம் செல்ல அனுமதிப்பதில்லையே.

மூளை விலங்கை உடைத்தவர் மணியம்மையார்

வெளியில் தெரிகின்ற விலங்கை விட மனிதனின் மூளையில் போடப்பட்ட விலங்கை சம்மட்டியால் உடைத்தவர்தான் அன்னை மணியம்மையார்.

_இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-------------------- “விடுதலை” 17-3-2010

0 comments: