Search This Blog

31.3.10

குடிஅரசு 50 தொகுதிகள் வெளிவரும் - ஆசிரியர் வீரமணி அறிவிப்பு

தலைமுறைகளைக் கடந்தும் தேவைப்படும்
குடிஅரசு கருவூலங்கள்

1926, 1927, 1928 ஆம் ஆண்டுக்கான குடிஅரசு தொகுப்புகள் தந்தை பெரியார் அவர்களின் கட்டுரைகள் உரைகள் அடங்கிய தொகுப்பு ஆண்டு ஒன்றுக்கு இரு தொகுதிகள் வீதம் ஆறு தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது. (30.3.2010, மாலை).

பல்துறைப் பெருமக்கள்

பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பகுத்தறிவாளர்கள், கழகத் தோழர்கள் அடங்கிய மன்றம் நிரம்பி வழிந்தது.

17.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்த நாளில் வீடியோ கான்ஃபரன்சிங்மூலம் 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை முதலமைச்சர் கலைஞர் சேலத்தில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஆறு தொகுதிகள் (இதுவரை 7) வெளியிடப்பட்டுள்ளன.

புரட்சி மகுடம்!

குடிஅரசு என்பது இதழ்கள் உலகில் தனி ஒளிவீசும் புரட்சி மகுடமாகும்.

பழைமையைச் சூறையாட வந்த புரட்சிப் புயல் பெண்ணடிமையைப் பெயர்த்து எறிய வந்த பூகம்பம், முன்னேற்றத்தின் புதிய திக்குகளைக் காட்ட வந்த கலங்கரை விளக்கு.

குடிஅரசு என்ன கூறுகிறது?

குடிஅரசு முதல் இதழின் தலையங்கம் (2.5.1925) பின்வருமாறு கூறுகிறது.

மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும்; ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகலவேண்டும். உலகில் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்கவேண்டும். வகுப்புச் சண்டைகள் மறையவேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச் செய்வதற்காக நாம் உழைக்கும் காலத்தில், நம்மைத் தாக்குபவர்களுடைய வார்த்தைகளையா வது, செய்கைகளையாவது நாம் சிறிதும் பயமின்றி - சினேகிதர், விரோதி என்ற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப் போவதில்லை.

என்று அய்யா அன்று கொடுத்த சங்கநாதம் இன்னும் வெவ்வேறு தடங்களில் ஒலி முழக்கமாகக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

குடிஅரசு விட்ட இடத்தில் விடுதலை தொடர்கிறது

வெற்றிகள் பல ஈட்டப்பட்டுள்ள நிலுவைகள் பல நம் முன் நிற்கத்தான் செய்கின்றன. குடிஅரசு விட்ட இடத்திலிருந்து விடுதலை தன் வீரப்பிரதாபங்களைக் காட்டிக் கொண்டுதானிருக்கிறது. விவேகப் பூக்களை அன்றாடம் மலர்வித்துக் கொண்டுதானிருக்கிறது.

குடிஅரசு இதழ் தொடக்க நாளை சுயமரியாதை இயக்கத்தின் பிறந்த நாளாகக் கூறும் ஆய்வாளர்கள் உண்டு அதனைப் பிழையென்றும் கூற முடியாது. காரணம், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தமது சுய சிந்தனையில் வெடிக்கும் புரட்சிக் கருத்துகளைப் பரப்புவதற்காகவே தோற்றுவித்தார்.

அப்படிப் பார்த்தால், குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் வெவ்வேறானவை யல்லவே!

அமைப்பின் பெயரோ சுயமரியாதை இயக்கம் இதழின் பெயரோ குடிஅரசு. அதன் முதல் தலையங்கத்திலேயே சுயமரியாதை உணர்ச்சியைப் பரப்புவதே தன் நோக்கம் என்று கூறியிருக்கிறார்!

சுயமரியாதை என்ற பெயர்

விழாவில் பங்குகொண்டு ஆறு தொகுதிகளையும் வெளியிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தைக் கூறியதைக் குறிப்பிட்டார்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த் தாலும் அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது (குடிஅரசு, 1.6.1930) என்பதுதான் அமைச்சர் சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் அகராதிப் பொருள்.

இடையில் பிரிட்டீஷ் அரசின் அடக்குமுறை வாள் வீச்சுக்குக் குடிஅரசு ஆளானபோது, வெவ்வேறு பெயர்களில் இதழ்கள் குடிஅரசின் குரலையே ஒலித்ததுண்டு. புரட்சி, பகுத்தறிவு என்று புதுப் பெயர்கள் பூண்டு தமது கொள்கையில் கால் மாத்திரை அளவுக்குக்கூட குறைவின்றி ஒலிக்கச் செய்த யுகத் தலைவர்தான் தந்தை பெரியார்.

தமிழுக்குத் தந்தை பெரியார் என்ன செய்தார் என்று ஏகடியம் செய்யும் ஈயம் பித்தளைகளின் முகத்தில் தந்தை பெரியார் நடத்திய இதழ்களின் பெயர்களே மொத்தும்.

எழில் கொஞ்சும் தமிழ்ப் பெயர்கள்

குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை இவற்றைவிட எழில் கொஞ்சும் இனிய தமிழில் எழுச்சி முரசு கொட்டிய கோமான்கள் யார்?


30.4.1933 நாளிட்ட குடிஅரசு இதழில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைச் சித்திரம் ஒன்றைத் தீட்டினார் குடிஅரசுபற்றி,

போர் முகத்தில் அணிவகுக்க இன்றழைத்தாய்

பொதுவுடைமை முரசறையக் கோலெடுத்தாய்

ஓர் முகத்தில் சந்தோசம் ஒன்றில் வாட்டம்

உண்டாக்கும் அரசியலை விழிநெறித்தே

ஊர் முகத்தில் நிற்காதே என முழங்க

ஒன்பதாம் ஆண்டினிலே உயர்ந்தாய் இந்நாள்

பார்முகத்தைச் சமப்படுத்த ஓகோகோகோ

பறந்தேறுகின்றாய் நீ வாழி நின்றே!

என்று பாடுகின்றார் புரட்சிப் பாவலர்.

அத்தகு குடிஅரசு கருவூலக்கிடங்கிலிருந்து கருத்து மணிகளைத் தொகுத்து வெளியிடும் பணியைத்தான் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் செய்து வருகிறது.

இயக்க வெளியீடுகள்

இதற்குமுன் பெரியார் களஞ்சியம் எனும் பெயரில் பொருள் வாரியாக இதுவரை 32 தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

கடவுள் _ 3 தொகுதிகள்

மதம் _ 7 தொகுதிகள்

பெண்ணுரிமை _ 5 தொகுதிகள்

ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு _ 17 தொகுதிகள் என்று வெளிவந்துள்ளன.

குடிஅரசின் பல கட்டுரைகளையும் சிறுசிறு வெளியீடாகவும் மக்கள் கரத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் பட்டுள்ளன.

பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுப்பு தொகுதிகள் என்று இன்னொரு வடிவத்தில் இப்பணிகள் நடந்து வருகின்றன.

1949 ஆம் ஆண்டுவரைக்கான தொகுதிகள் விரைவாக வெளிவரும்.

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமிருந்து எழுத்தாளர் சின்னக்குத்தூசி பெற்றுக்கொண்டார். உடன் தமிழர் தலைவர் கி. வீரமணி, கோ. சாமிதுரை ஆகியோர் உள்ளனர்.

அடுத்த கோட்டை அருப்புக்கோட்டை

அடுத்து, சுயமரியாதைக் கோட்டையாகிய அருப்புக்கோட்டையில் வெளியிடும் விழா நடைபெறும். மாண்பு-மிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களே தாமாக முன்வந்து இத்தகையதோர் விழைவினை வெளிப்படுத்திக் கொண்டார்.

அருப்புக்கோட்டை என்பது எண்ணற்ற சுயமரி-யாதைச் சுடர்களை ஈன்று புறந்தந்த புதுப் புறநானூற்று மண்ணாயிற்றே!

அருப்புக்கோட்டையையடுத்த சுக்லநத்தம் கிராமத்தில்தான் தந்தை பெரியார் தலைமை தாங்கி முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார் (28.5.1928).

இதுவரை ஏழு தொகுதிகள்

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 17.9.2009 அன்று வெளியிட்ட பெரியார் களஞ்சியம் குடிஅரசு முதல் தொகுதி 344 பக்கங்களைக் கொண்டதாகும். நன்கொடை ரூ.220. 2 முதல் 7 வரை நேற்று வெளியிடப்பட்ட 6 தொகுதிகளின் மொத்த பக்கங்கள் 2160.

6 தொகுதிகளில் மொத்த கட்டுரைகள் 626 ஆகும்.

இவ்வளவு மலிவு விலையிலா?

ரூ.1390 மதிப்புள்ள 6 தொகுதிகளும் நேற்று வெளியீட்டு விழாவையொட்டி ரூ.390 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூபாய் ஆயிரத்துக்கு அளிக்கப்பட்டது.

ஆறு தொகுதிகளையும் அடக்கிக் கொள்ளும் அழகிய பையில் வைத்து நூல்கள் அளிக்கப்பட்டன.

இரவு 7.15 மணி அளவில் வெளியீட்டு விழா தொடங்கப்பட்டது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையை வழங்கினார்.

இயக்கம் வெளியிட்டு வரும் வெளியீடுகள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.

35 ஆண்டு காணும் பெரியார் நூலகம்- ஆய்வகம்

இந்த வெளியீட்டு விழாவோடு, சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வகத்தின் 35 ஆம் ஆண்டு விழாவும் இணைத்துக் கொண்டாடப்பட்டது.

இந்நூலகம் 17.9.1974 அன்று மாண்புமிகு கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்-களின் தலைமையிலும், அன்னை மணியம்மையார் முன்னிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழர் தலைவர் அளித்த அரிய நூல்கள் 10,227

பல்துறைகளைச் சார்ந்த 50,236 நூல்கள் இந்நூலகத்தில் அணி செய்கின்றன. தமிழர் தலைவர் தமது இல்லத்தில் சேர்த்து வைத்திருந்த 10,227 அரிய நூல்களையும் இந்நூலகத்திற்கு வழங்கினார் தமது 75 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி. மாண்புமிகு ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அப்பகுதியை நூலகத்தில் திறந்து வைத்தார்.

26 வெளிநாட்டு ஆய்வாளர்களையும் சேர்த்து இதுவரை 376 ஆய்வுகள் இந்நூலகத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு எம்.ஃபில்., பிஎச்.டி., பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

வெளிநாடு என்கிறபோது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், சுவீடன், பிரான்சு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை முதலிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் அடங்குவர்.

கொல்கத்தா ராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை 2009 இல் இந்நூலகத்தின் பணிகளைப் பாராட்டி ரூபாய் ஒன்றரை லட்சம் அளித்து ஊக்கப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நூலகத்தின் சிறப்பை விளக்கி தினமணி ஒரு சிறப்புக் கட்டுரையைக்கூட வெளியிட்டதுண்டு (22.2.1998). இத்தகவல்களை தமது அறிமுக உரையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் எடுத்துக் கூறினார்.

நூலகத்தைச் சிறப்பாக நடத்தி வருவதற்காக நூலகர் கோவிந்தன் அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு சால்வை போர்த்தி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கழகப் பொருளாளர் வரவேற்புரை

திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் கோ. சாமிதுரை வரவேற்புரையாற்றினார்.

குடிஅரசு இதழின் ஆறாம் ஆண்டையொட்டி தந்தை பெரியார் எழுதிய செய்தியை படித்தார். குடிஅரசு இதழ் விருப்பு, வெறுப்பு இல்லாது பாடுபட்டு பார்ப்பனியத்தை ஒழித்து, பார்ப்பனரல்லாத மக்களுக்கு இன்று ஓரளவுக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் தொண்டாற்றி வருகிறது என்று பெரியார் கூறிய செய்தியை, அவருடைய உரையின்மூலம் விளக்கினார்.

பகுத்தறிவு குடும்பத்தைச் சார்ந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குடிஅரசு இதழை வெளியிடுவதற்கு வந்திருப்பது பொருத்த-மானது. இந்த விழாவில் வரவேற்புரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த நமது தமிழர் தலைவருக்கு நன்றி என்று கூறினார்.

கயல் தினகரன்

பகுத்தறிவாளரும், திராவிட இயக்க எழுத்தாளரும், பத்திரிகையாளரும் சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவருமான கயல் தினகரன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

சூடு சுரணையற்றுக் கிடந்த தமிழின மக்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டிய தந்தை பெரியார் வாழ்ந்த இந்த இடம் வெறும் திடல் அல்ல; பெரியார் கடல் ஆகும் என்று சொன்னபொழுது கரவொலி எழுந்தது.

தமிழ்முரசு ஏட்டின் ஆசிரியராகவும், முரசொலியில் துணை ஆசிரியராகவும், செய்தியாளராகவும் இருந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களைக் காணவும், ஒரு-முறை பேட்டி காணவும் தமக்குக் கிடைத்த வாய்ப்-பினை மிகப்பெருமையாகக் குறிப்பிட்டார்.

உடல் உபாதையோடு முக்கல் முணுகலோடு தமிழ்ச் சமுதாயத்திற்கு அய்யா ஆற்றிய தொண்டை அளவிடவே முடியாது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகளவிலேயேகூட தந்தை பெரியார் அவர்களுக்கு ஈடு இணையான தலைவர் கிடையவே கிடையாது.

இரட்டைக் குழல் துப்பாக்கிகள்

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்து தமிழின உணர்வை உரிமைகளைக் காப்பாற்றி வருகின்றன.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு திராவிடர் கழகத்தை தமிழர் தலைவர் சீரிய முறையில் வழிநடத்திச் செல்கிறார். அதுபோலவே, அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் கழகத்தையும், தமிழர்களையும் காத்து வருகிறார் என்று குறிப்பிட்டார் கயல் தினகரன் அவர்கள்.

கயல் என்ற அச்சகத்தை அவர் நடத்தி வந்ததால், அந்த அச்சகம் அவர் பெயரில் முன்னொட்டாக இணைந்து கொண்டது.

குலக்கல்வித் திட்டம்

மற்றொரு முக்கியமான தகவலையும், கருத்தையும் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வகையில் எடுத்துக்காட்டினார் கயல் தினகரன்.

1952 இல் ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது குலக்கல்வித் திட்டம் என்ற வருணாசிரமத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரை நேரம் பள்ளிப் படிப்பு, மீதி அரை நேரம் அப்பன் செய்யும் குலத்தொழிலை மகன் செய்யவேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம்.

**************************************************************************************

ஆசிரமம் என்றால் என்ன?

1926 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் பிராமண அகராதி என்ற தலைப்பில் வினா_விடையாக கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் ஆசிரமம் என்றால் என்ன கேள்வி? அதற்குத் தந்தை பெரியார் கூறும் விடை.

காந்தர்வ விவாஹமும்,

ராட்சச விவாகமும்

நடக்குமிடங்கள்

(குடிஅரசு, 2.5.1926) என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு ஆசிரமங்களில் நடக்கும் ஒழுக்கக் கேடுகள்பற்றி 84 ஆண்டுகளுக்குமுன்பே படம் பிடித்துக் காட்டியுள்ளார் தந்தை பெரியார் என்று கழகத் தலைவர் நேற்றைய நிகழ்ச்சியில் குறிப்பிட்ட பொழுது சிரிப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று.

காந்தர்வ மணம் என்பது என்ன? ஆரியர்களின் கற்பியல் முறையைக் குறிப்பிடுவதாகும். இதற்கொரு எடுத்துக்காட்டுதான் பருவம் அடைந்திராத மீனவப் பெண்ணான மச்சகந்தியை பராசர் என்னும் முனிவர் பட்டப்பகலில் நடு ஆற்றிலே ஓடத்திலேயே புணர்ந்து ரிஷிப் பிண்டம் ரா தங்காது என்பதற்கேற்ப வியாசனைப் பெற்றெடுத்ததாகும். இதுபோல ஏராளமான புராண ஆதாரங்கள் உண்டு. பராச மகரிஷி செய்த அந்த வேலையைத்தான் யோகானந்த பரமஹம்சரும் இப்பொழுது செய்துகொண்டுள்ளார்.

ராட்சச திருமணம் என்றால் என்ன?

ஒருவன் தன் பலத்தினாலோ அல்லது சாமர்த்தியத்தினாலோ ஒரு கன்னிகையை, அவள் பெற்றோர், சுற்றத்தார்கள் முதலிய மற்ற யாருடைய சம்மதம் இல்லாமலே, சிறை பிடித்துத் தூக்கிக் கொண்டுபோய் தம் இஷ்ட காமியத்தைப் பூர்த்தி செய்துகொள்வதுதான் (விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர் கழகம் வெளியிட்ட சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் எனும் நூலைப் பார்க்க).


பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள்
6 வெளியீடு

1926, 1927, 1928 ஆம் ஆண்டுகளுக்குரிய _ தந்தை பெரியார் அவர்களின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய பெரியார் களஞ்சியம் குடிஅரசு ஆறு தொகுதிகளை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட முதல் பிரதிகளை பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பெரியார் பெருந்-தொண்டர் செய்யாறு பா. அருணாசலம் அவர்கள் ரூபாய் பத்தாயிரம் அளித்து பத்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்கள் ரூபாய் 5000 அளித்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

தமிழக மூதறிஞர் குழு செயலாளர் பொறியாளர் டாக்டர் வ. சுந்தர்ராஜுலு, எமரால்டு பதிப்பக உரிமை-யாளர் கோ. ஒளிவண்ணன், குஞ்சிதம் நடராசன், மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி, திராவிட இயக்க எழுத்தாளர் மயிலை க. திருநாவுக்கரசு, பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், துணைத் தலைவர் புதுவை மு.ந. நடராசன், டாக்டர் சரோஜா பழனியப்பன், டாக்டர் சரோஜா இளங்கோவன் (சிகாகோ), மடிப்பாக்கம் சித்ரா சுந்தரம், பேராசிரியர் முனைவர் மங்களமுருகேசன், பரமேசுவரி கிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவன், எவர்கிரீன் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் பி. புருசோத்தமன் (ரூபாய் மூவாயிரம் அளித்து) மூன்று தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

பாளையங்கோட்டை சுப. சீதாராமன், என்.ஜி.ஜி.ஓ. சங்கத் தலைவர் சூரியமூர்த்தி, ஆடிட்டர் அரங்க. இராமச்சந்தின், பொறியாளர் வேல். சோ. நெடுமாறன், தஞ்சாவூர் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், சைதை எம்.பி. பாலு, ஆவடி பா. தெட்சிணாமூர்த்தி, ஆர்.டி. வீரபத்திரன், வாய்ஸ் ஆஃப் ஓ.பி.சி. சார்பாக அதன் ஆசிரியர் பார்த்தசாரதி, திருமகள் இறையன், பண்பொளி கண்ணப்பன், வடசென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தென்சென்னை ப.க. துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, பாவலர் புரட்சிதாசன் (2 தொகுதிகள்) பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான், கோபாலகிருட்டிணன், திருவள்ளூர் வழக்கறிஞர் கெ. கணேசன், வழக்கறிஞர் த. வீரசேகரன், தாம்பரம் லட்சுமிபதி, ஆதம்பாக்கம் சவுரியப்பன், விழுதுகள் பதிப்பகம் வேணு, தே. தயாளன் (பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) முதலியோர் பணம் கொடுத்து மேடையில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.

************************************************************************************அந்த வருணாசிரமத் திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் போராடி ஒழிக்காவிட்டால், தமிழர்களில் இன்றைய தினம் அய்.ஏ.எஸ்.,களையும், அய்.பி.எஸ்.களையும் பார்த்திருக்க முடியுமா? என்ற அருத்தமிக்க வினாவை உருக்கமோடு எழுப்பினார் தினகரன் அவர்கள்.

தமிழர்கள் வீடு ஒவ்வொன்றிலும் தந்தை பெரியார் படம் இடம்பெற்றிருக்கவேண்டும். பக்தர்களாக இருந்தால்கூட தந்தை பெரியார் படத்தை வீட்டில் மாட்டவேண்டும்.

இதுவரை அந்தப் படத்தை மாட்டாமல் இருந்தால், இந்தத் திடலை விட்டுச் செல்லும்போதே அந்தக் கடமையைச் செய்தே தீருவது என்ற உறுதியோடு செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

கயல் தினகரன் அவர்கள் உரை உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும், உருக்கமாகவும் அமைந்திருந்தது என்பதே சரியாகும்.

முனைவர் க. அறிவொளி

பொது நூலக இயக்குநர் முனைவர் க. அறிவொளி சுருக்கமாக அதேநேரத்தில் தந்தை பெரியார் கொள்கையோடு அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் இருந்து வந்த இருந்து வரும் ஈடுபாட்டை உணர்ச்சியோடு எடுத்துக் கூறினார்.

எடுத்த எடுப்பிலேயே எனக்கு அறிவொளி என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார்தான் என்று சொன்னபோது, ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.

என் தந்தையார் இந்தக் கொள்கைக்காரர். அதனைத் தொடர்ந்து நான், என்னைத் தொடர்ந்து என் மகன் என்று வாழையடி வாழையாக சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு உடைய குடும்பம் எங்கள் குடும்பம்.

கொள்கை வழியில் ஆசிரியர்

ஜெயங்கொண்டம் பயணியர் விடுதியில் தந்தை பெரியார் தங்கி இருந்தார். நான் தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, என் தந்தையார் என்னையும், அய்யாவைக் காண அழைத்துச் சென்றார்.

நான் சிறுவன். பெஞ்சில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தேன்.

என் தந்தையார் என்னைக் கண்டித்தார். அதைக் கவனித்த தந்தை பெரியார் அவர்களோ, என் தந்தையைக் கண்டித்தார். இன்று நினைத்தாலும் அந்த நிகழ்ச்சி தந்தை பெரியார்மீது எனக்கிருக்கும் மரியாதையை அதிகப்படுத்தியது என்று குறிப்பிட்டார்.

அன்றைக்கு தந்தை பெரியார் கொள்கைகளுக்கு நேரிடையான எதிர்ப்பு இருந்தது. இன்றைக்கு மறைமுகமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. ஆசிரியர் அவர்கள் அய்யா கொள்கைகளை நன்கு வழி நடத்திச் செல்லுகிறார் என்று குறிப்பிட்டார்.

மாண்புமிகு தங்கம் தென்னரசு

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் தொகுதிகளை வெளியிடுவதில் மிகுந்த மன நிறைவு கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் சென்றால், அந்த நூலை முழுவதுமாகப் படித்துவிட்டே செல்லுவார். நாங்கள் அவரிடம் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டவர்கள்தாம்.

அதேநேரத்தில், இன்று நான் வெளியிட்ட குடிஅரசு ஆறு தொகுதிகளில் ஒன்றைக்கூட நான் படிக்கவில்லை. வேறு தொகுதியில் நான் இருந்ததால், இந்தத் தொகுதிகளை நான் படிக்க வாய்ப்புக் கிட்டாமற் போய்விட்டது.

எந்தத் தொகுதி?

எந்தத் தொகுதியில் நாம் வெற்றி பெறுவதாக இருந்தாலும், இந்தக் குடிஅரசு தொகுதிகளில் நாம் எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதுதான் மிக முக்கியம் என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட கருத்து மிகவும் ஆழமானதாகும்.

இதன் பொருள்: அரசியலில் நாம் ஈடுபட்டாலும், தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளில் உறுதியாக இருந்தால்தான் நிரந்தர வெற்றியைப் பெற முடியும் என்பதாகும். இதைத்தான் அவருக்கே உரித்தான முறையில் ஆழமாகச் சொன்னார் அமைச்சர் அவர்கள்.

எனக்குள்ள வருத்தம் தந்தை பெரியார் அவர்களை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதுதான்.

ஆசிரியரைக் காணும்போது அய்யாவைக் காணுகிறோம்

புழு பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய்க் கிடந்த நம் மக்களை மானமுள்ள மக்களாக்கப் பாடுபட்ட தந்தை பெரியார் இன்று இல்லையென்றாலும், நமது ஆசிரியர் அவர்கள் அந்தக் கொள்கையை நாளும் மக்களிடம் எடுத்துக் கூறி அந்த உணர்வுகளை வளர்த்து வருகிறார்கள். ஆசிரியர் அவர்களைக் காணும்போது அய்யாவைக் காணும் உணர்வுகளை நான் மட்டுமல்ல, தமிழர்கள் பெறுகிறார்கள் என்று உணர்ச்சிப் பொங்கக் குறிப்பிட்டார் அமைச்சர்.

இன்றைய தினம் நம் தமிழர்கள் படித்தவர்களாக, பட்டதாரிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஏன், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வர முடிந்திருக்கின்றது என்றால், அதற்குக் காரணம், தந்தை பெரியார் அல்லவா? அவர் இல்லாவிட்டால் இந்த ஏற்றங்கள் நமக்கு ஏது என்ற வினாவை மிகுந்த யதார்த்தத்தோடும், உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் அமைச்சர் கூறினார்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தேவை!

இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த குடிஅரசு தொகுப்புகள் வாழும் நமது தலைமுறைக்கு மட்டுமல்ல; அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கும் தேவைப்படும் விலை மதிக்க முடியாத கருத்துச் செல்வங்களாகும்.

இத்தகைய பணிகளை மேற்கொண்டுவரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு தமிழர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பல நேரங்களில் பல சங்கடங்களைச் சந்திப்பது உண்டு. அந்த நேரத்தில் எல்லாம் அவர் மனம் செல்லும் இடம் உருவம் நமது தமிழர் தலைவர்தான். வீரமணி எங்கே இருக்கிறார்? எப்பொழுது வருவார்? என்று கேட்பார். இதனை நான் அருகில் இருந்து பார்த்திருக்கின்றேன் என்று கூறினார்.

இவ்வளவு குறைந்த விலையிலா?

குடிஅரசு தொகுதிகளைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இத்தனைப் பக்கங்களில் இவ்வளவு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ஆறு தொகுதிகளை இதற்காகவென்றே தயாரிக்கப்பட்ட அழகிய பையில் வைத்து வெறும் ஆயிரம் ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடிகிறது என்பதை நினைத்துத் தாம் ஆச்சரியப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு நூல்கள் வெளியில் விற்கும் தன்மையை உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆளாகியிருக்கும் உணர்வைத்தான் பெறுவார்கள் என்பதில் அய்யமில்லை. கருத்துகள் பரவவேண்டும் என்ற நோக்கம் இதன்மூலம் தெளிவாகிறது என்றார் அமைச்சர்.

இந்த நூல்கள் மட்டும் கனமல்ல; இதற்குள் இருக்கும் கருத்துகளும் கனமானவைதான் என்று அமைச்சர் குறிப்பிட்டபோது பலத்த கைதட்டல்!

எல்லா நூலகங்களுக்கும் குடிஅரசு தொகுப்புகள்

இந்தக் கருத்துகள் மாணவர்கள் மத்தியில் செல்லவேண்டும். இங்கே பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களும் வந்திருக்கிறார். அய்யாவின் இந்தக் கருவூலங்கள் அனைத்து இடங்களுக்கும் செல்லவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

சமச்சீர் கல்வியும், தந்தை பெரியாரும்!

சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதில் மனிதர்களை வருணசிரமம் பெயரால் பிளவுபடுத்துவதை எதிர்த்து மனித சமத்துவத்திற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் பாடமே முதல் பாடம் என்று கல்வித் துறை அமைச்சர் சொன்னபோது, கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் குடிஅரசில் பணிபுரிந்ததையும், தீட்டாயிடுத்து என்று குடிஅரசில் மு.க. என்ற பெயரில் எழுதியதையும் எடுத்துக் காட்டிப் பேசினார் அமைச்சர்.

ஆறு தொகுதிகளைக் கொண்ட குடிஅரசு வெளியீடு ஒவ்வொன்றிலும் பத்து தொகுதிகளை தம் சொந்தப் பொறுப்பில் ரூபாய் பத்தாயிரம் அளித்து பலத்த கைதட்டலுக்கிடையே தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டார் அமைச்சர்.

தமிழர் தலைவர் உரை

கடந்த 20 நாள்களாக கடும் வெயிலுக்கிடையே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கோடையிலே இளைப்பாறக் கிடந்த குளிர்தருவே என்பதுபோல, அமைச்சர் அவர்களுக்கு இது ஓர் இளைப்பாறும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

இந்தத் தேதியை அமைச்சர் அவர்கள்தான் கொடுத்தார். இந்தத் தேதி வெற்றிக் கனியைப் பெரியார் திடலுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தேதியாக அல்லவா அமைந்துவிட்டது! (பலத்த கைதட்டல்).

தந்தை பெரியார் அவர்களைப் போல மனதில் தோன்றிய கருத்துகளை யார் மனம் புண்படுகிறது என்று பார்க்காமல் பளிச்சென்று சொல்லக்கூடியவர். வேறு யாரும் அல்லர்.

மதுரை மேலூரில் வெற்றிலைப்பாக்குக் கடைக்காரர்கள் தங்கள் ஆண்டு விழாவுக்காக தந்தை பெரியார் அவர்களை அழைத்தார்கள்.

அங்கு சென்ற தந்தை பெரியார் என்ன பேசினார்? நீங்கள் புகையிலை விற்பதால் புற்றுநோய் வருகிறது. வெற்றிலைப் பாக்குப் போடுவதால் கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறார்கள். எனவே, இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு நல்ல தொழிலை மக்களுக்குப் பயன்படும் தொழிலைச் செய்யுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னதை கழகத் தலைவர் எடுத்துச் சொன்னபோது, அமைச்சர் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

கெட்ட பெயர் வாங்குவதுபற்றிக் கவலைப்படாதே!

யார் யாரை எல்லாம் பெரியார் கண்டித்தார்? எதை எதையெல்லாம் பெரியார் கண்டித்தார்? என்பதை தந்தை பெரியார் அவர்களே எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டி, தமிழர் தலைவர் படித்தபோது, தந்தை பெரியார் எத்தகு எதிர்ப்புச் சூழலில் தமது தொண்டைத் தொடர்ந்திருக்கிறார் என்று ஒருகணம் எண்ணிப் பார்த்தால் தலைசுற்றுகிறது.

உண்மையான பொதுத்தொண்டு செய்ய விரும்புவோர் யாரும் கெட்ட பெயர் வாங்குவதுபற்றிக் கவலைப்படக் கூடாது என்பார் தந்தை பெரியார். மான உணர்வைப்பற்றிக் கவலைப்படாத மக்களிடம் எதற்காக நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று கேட்பார் தந்தை பெரியார் என்று கழகத் தலைவர் எடுத்துச்சொன்னபொழுது, திரண்டிருந்த மக்கள் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்ததுபோல உணர்ச்சிகளைப் பிரதிபலித்தனர்.

அண்ணா பெயரில் நூலகம்

மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைப்பற்றி தமிழர் தலைவர் தெரிவிக்கும்பொழுது நல்ல பகுத்தறிவுவாதி அவர் தந்தையார் தங்கபாண்டியன் அவர்களும் அப்படியே. தந்தையார் வழியில் கொள்கை உணர்வோடு இருக்கிறார்.

சென்னை கோட்டூர்புரத்தில் பிரம்மாண்டமான முறையில் அறிஞர் அண்ணா பெயரில் நூலகம் ஒன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உறுதுணையோடு நமது கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் ஆர்வத்தோடு உருவாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் தந்தை பெரியார் அவர்களின் பெயராலே அமைந்த பெரியார் அறிவியல் மய்யத்தின் அருகில் உருவாவது பொருத்தமானது என்றார்.

சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை விஞ்சக்கூடிய வகையில் இந்நூலகம் உருவாவதைப் பெருமை பொங்க எடுத்துரைத்தார் ஆசிரியர்.

50 தொகுதிகள் வெளிவரும்

குடிஅரசு தொகுப்பு தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். மாதாமாதம் வந்து கொண்டிருக்கும். 50 தொகுதிகள்வரை வரும் என்றும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் ஆசிரியர் கூறினார்.

இறுதியாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு நன்றி நவில, இரவு 9 மணிக்கு இந்த நேர்த்தியான விழா நிறைவு பெற்றது.

அறிவார்ந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட உணர்வோடு பொதுமக்கள் திரும்பினர்.


குடிஅரசு தொகுப்புப் பணிகளில் ஈடுபட்டோருக்குச் சிறப்பு

குடிஅரசு கட்டுரைகளையும், உரைகளையும் தொகுக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு தங்கள் பங்களிப்பினைச் செய்தவர்களுக்கு விழா மேடையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவகுத்து சிறப்பு செய்தார்.

குடிஅரசு தொகுப்புப் பணியில் துணைச் செயலாளர்களாக தஞ்சை இரெ. இரத்தினகிரி, தஞ்சை மருதவாணன் ஆகியோர் சார்பாக அவர்களின் மகன்கள் முறையே கார்க்கி, லெனின் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

பேராசிரியர் மு.நீ. சிவராசன் (ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி, பெரியார் பயிலக நெறியாளர்), தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சைதை மதியழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், இறைவி, க. விசேயந்திரன், தாஸ், விழிவேந்தன், மீனாகுமாரி, கலைவாணி, மணியம்மை, மரகதமணி, ரமா, இல.சங்கர், கதிரேசன், கலைச்செல்வி, பண்பொளி, பேராசிரியர் முனைவர் இராமு, புதுவை நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஆசிரியர் நல்லதேவன், ஆசிரியர் குணசேகரன் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

தனது நிறைவு உரையிலும், மேற்கண்ட தோழர்களின் உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர் கி. வீரமணி.


------------------" விடுதலை” 31-3-2010 இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: