Search This Blog

29.3.10

வடலூரில் புகுந்த பார்ப்பனியம்!
வடலூர் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் 1867இல் வடலூரில் தரும சாலை ஒன்றை நிறுவினார். அதில் உருவ வழிபாட்டுக்கு இடம் வைக்காமல், ஜோதியைத் தான் வணங்க வேண்டும் என்று ஏற்பாடும் செய்தார்.

அந்த ஜோதி வழிபாட்டுக்குக்கூட இடையில் பூசாரி இருக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக, தெளிவாக இருந்தார்.

தம்மால் நிறுவப்பட்ட அந்த ஞான சபைக்குள் பித்தளை முதலியவற்றால் ஆன குத்து விளக்கு வைக்கக் கூடாது; வெறும் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கப்பட வேண்டும் என்றார்.

பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் கையிலோ, அல்லது எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர் கையிலோ கொடுத்தாவது தகரக் கண்ணாடி விளக்கை உட்புற வாயில்களுக்கு சமீபத்தில் வைத்து வரச் செய்ய வேண்டும் என்று வடலூர் அடிகளார் கூறியிருக்கிறார்.

தொடக்கத்தில் திருவொற்றியூர், சிதம்பரம், கந்தக் கோட்டம் முதலிய இடங்களில் உள்ள சிவன், முருகன் போன்ற கடவுள்கள் பற்றியெல்லாம் விழுந்து விழுந்து எழுதியவர்தான் இராமலிங்க அடிகள். இராமனைப் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளார்.

முதல் திருமுறையில் 52 பதிகங்களும், 570 பாடங்களும் முருகனைப் பற்றி வடலூராரால் பாடப்பட்டவை தான்.

அதன் பிறகே உருவ வழிபாடுகளில் வெறுப்பு கொண்டு, கடந்த கால அறியாமை இருளிலிருந்து விடுபட்டு, ஒளி வழிபாடு என்னும் ஒரு முடிவுக்கு வந்தார்.

1873 அக்டோபர் 23 அன்று சன்மார்க்க அவையைக் கூட்டி, சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரையில் வடலூர் இராமலிங்கனார் தெரிவித்த கருத்துகளும், நிலைப்பாடும் தான் நிலையானவையாகும்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும், லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக் குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்..... நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அதே லட்சியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்திருந்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும், மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றனர். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார் வடலூரார்.

ஒருவரின் உண்மையான முதிர்ந்த கருத்து என்பது, இறுதி கட்டத்தில் வெளிப்படுத்தப்படுபவையே! இதற்கு மாறாக வடலூரில் அடிகளாரால் ஏற்படுத்தப்பட்ட சத்திய ஞான சபையில் சிவலிங்கம் உருவம் வைத்து வழிபாடு நடத்தினார் ஒரு பார்ப்பனர் என்றால், இதற்குப் பெயர்தான் பார்ப்பனிய ஊடுருவல் என்பது.

இந்த நிலைக்கு இந்து அறநிலையத்துறை தடை செய்த நிலையில், சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்ற ஞானசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்த நிலையில், அறநிலையத்துறை எடுத்த முடிவு சரியானதே என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

பார்ப்பனிய ஊடுருவல் எத்தகைய ஆபத்தானது என்பது ஆன்மிகவாதியான வடலூர் வள்ளலார் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தில் கிடைத்த இந்தப் பாடம் போதுமான சாட்சியமாகும்.

------------------- "விடுதலை” தலையங்கம் 29-3-2010

1 comments:

ttpian said...

why we cannot remove paarppaans from TN?