Search This Blog

4.3.10

காமக்கோட்டமா ஆசிரமங்கள்?


சாமியார்களின் காலித்தனங்களுக்கு அளவேயில்லை

காவல்துறையில் தனிப்படையை உருவாக்கிக் கண்காணிக்கவேண்டும்

குற்றவாளிகளைக் கால தாமதமின்றிக் கைது செய்க!

மார்ச் 11 காலை மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

பக்தியின் பெயரால் மக்களைச் சுரண்டும், ஆபாசக் களியாட்டம் ஆடும் சாமியார்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆன்மிகத்தின் பெயரால் சாமியார்களின் அட்டகாசங்கள் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றன.

பக்தி என்பது மனித மூளைமீது பூட்டப்பட்ட விலங்கு, பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது இந்த அடிப்படையில்தான்.

அறிவையும், ஒழுக்கத்தையும் பலியாக்கும் பக்தி

பக்தி அறிவை மட்டும் பலிவாங்கவில்லை; ஒழுக்கத்தையும், மான உணர்வையும் சேர்த்தே அழித்து வருகிறது.

ஒரு பக்கம் அச்சத்தையும், இன்னொரு பக்கம் பேராசைத் தூண்டிலையும் போட்டு முற்றாக மனிதர்களை மவுடிகத்துக்குள் வீழச் செய்து வருகின்றனர்.

இப்பொழுதெல்லாம் இந்தச் சாமியார்கள் சொற்பொழிவுகளில் தொடர் சொற்பொழிவுகளில் இறங்கி விடுகின்றனர்.

இவர்களுக்குப் பார்ப்பன ஏடுகளும், முதலாளித்துவ ஊடகங்களும் முக்கிய இடம் கொடுத்து விளம்பரப் பதாகையைத் தூக்கிப் பிடிக்கின்றன.

விளம்பர வெறியர்கள்!

அரசியல்வாதிகள்தான் அதிக விளம்பரத்தை நாடுகின்றனர் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு; ஆனால், இந்தச் சாமியார்களிடத்தில் இந்த விளம்பரக் கலையில் அரசியல்வாதிகள் பிச்சை வாங்கவேண்டும்.

பல வண்ண சுவரொட்டிகள் பெருஞ்செலவில்; ஊடகங்களில் விளம்பரங்கள், கட் அவுட்டுகள், ஃப்ளக்சுகள் என்று ஏகப்பட்ட தடபுடல் விளம்பரங்கள்.

ஒவ்வொரு வார இதழுக்கும் ஆஸ்தான சாமியார்களின் கட்டுரைகள், கதவைத் திற காற்று வரும்! என்கிறார்கள். இவர்கள் சொல்லித்தான் இது தெரிய வேண்டுமா? பெரிய பெரிய தத்துவங்களைச் சொல்லுகிறார்களாம்.

பெரிய மனிதர்கள் பங்கேற்பு!

இவர்கள் சொற்பொழிவாற்றினால் முன்வரிசையில் நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், பெரும் முதலாளிகள், வியாபாரிகள், கனபாடிகள் எல்லாம் குடும்ப சகிதமாக உட்காருவார்கள் அதைப் பெருமையாகவும் கருதும் மனப்பான்மை!

இவர்கள் நடத்தும் ஆசிரமங்களுக்குப் பெண்களைத் தாராளமாக அனுப்பி வைக்கிறார்கள். பணத்தைக் கண்மண் தெரியாமல் கொட்டிக் கொடுக்கிறார்கள். ஊக்க உதவிகளுக்குப் (Sponsor Ship) பஞ்சமில்லை; வெளிநாட்டுப் ப(ய)ணங்கள் என்பவையும் சர்வ சாதாரணம்.

ஆசிரமம் என்றால் ஓர் இடத்தில் மட்டுமல்ல, நாடு தழுவிய அளவில் கிளைகள் வேறு.

சொகுசான சுக போக வாழ்க்கை

கட்டுவது மட்டும் காவி நடப்புகள் எல்லாம் அய்ந்து நட்சத்திரக் கலாச்சார வாழ்க்கை!

காயமே பொய் என்று கதை சொல்லும் இவர்களின் சொகுசும், சுகபோகமும் கொஞ்சநஞ்சமல்ல. இவற்றையெல்லாம் மக்கள் நேரில் கண்டு கொண்டிருந்தும், பக்தி என்னும் மயக்கப் போதை அவர்களின் கண்களை திரைபோட்டுப் மறைத்து வந்தது.

அந்தப் போதைகள் கூடத் தெளியக் கூடிய அளவிற்கு அண்மைக்கால நிகழ்ச்சிகள் காவி வேட சாமியார்களை அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டன.

காமக்கோட்டமா ஆசிரமங்கள்?

டில்லியிலே சிவ்முராத் திவிவேதி என்ற சாமியார் 200 பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தியுள்ளார். 2000 கோடி ரூபாய் சொத்துக் குவியலாம்!

திருச்செந்தூரிலே பக்தர்கள் பணத்தை சுருட்டிய பேர்வழி ஆத்ம சைதன்யானந்த மகராஜ்! (பிறந்தது தமிழ்நாட்டில், பெயர் வைத்துக்கொள்வதோ இப்படி!)

தமிழ்நாட்டிலே பரமஹம்ச நித்யானந்த சாமியார் ஆசிரமத்திலே நடிகையுடன் நடந்துகொண்ட ஆபாசம் காமக் களியாட்டம். ஊரே சிரிக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் சன் தொலைக்காட்சியின் சேவையை பகுத்தறிவாளர்கள் சார்பாகப் பாராட்டுகிறோம்.

பெயரே நித்ய ஆனந்தம்! நாள்தோறும் ஆனந்தத்திலே குளித்து மூழ்குபவர் அல்லவா பெயரும் பொருத்தமாகத்தான் அமைந்துவிட்டதுபோலும்!

பொங்கி எழும் பக்தகோடிகள்

பக்தர்களே, ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். விளம்பரத் தட்டிகளைத் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர். பல வண்ணங்களில் ஜொலிக்கும் அவர்களின் உருவங்களைத் தாங்கும் தட்டிகளைக் கீழே தள்ளி செருப்பால் அடிக்கிறார்கள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்ற பழமொழி இப்பொழுது பொன்மொழியாக ஜொலிக்கிறது!

கொலைவழக்கில் சிக்கிய லோகக் குரு பவள விழா என்ற பேரில் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

ஆந்திராவிலே கல்கி சாமியாராம்; அவர் ஆசிரமத்தில் நடக்கும் அட்டூழியங்களை எதிர்த்து பக்தர்களே, கொந்தளித்து எழுந்து ஆசிரமத்தைத் தூள் தூளாக்கியிருக்கிறார்கள்.

தக்க தருணம் இது, பிரச்சாரம் செய்வீர்!

காவிக் கூட்டத்தின் பித்தலாட்டத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டும் வேலையில் கழகத் தோழர்களே, பகுத்தறிவாளர்களே மும்முரமாக ஈடுபடுவீர்!

துண்டறிக்கைகளை வெளியிடுவீர்! தெருமுனைக் கூட்டங்களை நடத்துவீர்! மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட இதுவே தக்க தருணம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சமூக சீர் திருத்தத் துறையை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட வேண்டும். மத விஷயம் என்று ஒதுங்கிவிடக் கூடாது. மதத்தின் பெயரால் தானே இவ்வளவு அக்கிரமங்களும், வக்கிரங்களும் நடந்துகொண்டு இருக்கின்றன.

ஆன்மிகப் போர்வையில்தானே பெண்கள் சூறையாடப்படுகின்றனர். மக்கள் பணம் சுரண்டப்படுகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

விசாரணை தேவை - தண்டனையும் தேவை!

இந்தச் சாமியார்கள் யார்? இவர்களின் தொடக்க நிலை என்ன? இவ்வளவுப் பெருந்தொகை எங்கிருந்து வந்தது இவர்களின் அன்றாட நடப்புகள் என்ன என்பதையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

காவல்துறையிலேயே ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி சாமியார்களைக் கண்காணிக்கவேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும். உரிய தண்டனைகளைப் பெற்றுத் தருவதில் அரசு பின்வாங்கக் கூடாது. மோசடியாகச் சுருட்டிய சொத்துகளைப் பறிமுதல் செய்யவேண்டும். அத்துமீறும் ஆசிரமங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.




யோகா என்ற பெயரில் உடற்பயிற்சி என்று கூறி உடல்நலம் பேணுவதாகத் தெரிவித்து நிறுவனங்கள் பெருகுகின்றன. அவற்றில் பல தவறுகள் நடப்பதும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கிளைகளை ஏற்படுத்தி சாமியார்கள் பெரும் பணம் பண்ணுகிறார்கள்.

இந்தப் பயிற்சிகளை நடத்துபவர்கள் யோகா பெயரில் பயிற்சிகளை அளிப்பவர்கள், அதற்கான தகுதி உடையவர்கள்தானா? யோகா என்ற பெயரில் எவற்றைச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதில் சில கட்டுப்பாடுகள் தேவை!

இத்தகைய நிலையங்களை நடத்துபவர்கள் அரசிடம் அனுமதி (லைசென்ஸ்) பெற நிபந்தனையை ஏற்படுத்தவேண்டும். தகுதியானவர்களைக் கொண்ட குழு ஒன்றை அரசு ஏற்படுத்தி அதன்மூலம் இதனை ஒழுங்குப்படுத்தவேண்டும்.

குறுக்குவழியில் கொள்ளையடிக்க
சாமியார் தொழில்!

இல்லாவிட்டால் சாமியார் தொழில்தான் இருப்பதிலேயே கொள்ளையடிக்க சுலபமான குறுக்கு வழி என்ற முடிவுக்கு வந்து வேலை வாய்ப்புக்காக ஏங்கும் பட்டதாரிகளும்கூட அதை சிக்கெனப் பிடித்துக் கொள்வார்கள்.

கோயில் கர்ப்பக் கிரகத்தைக்கூட காமக்கோட்டமாக மாற்றும் காலிகளுக்குக் காலம் கடத்தாமல் தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்.

இவற்றையெல்லாம் வலியுறுத்தும் வகையில் இம்மாதம் 11 ஆம் தேதி வியாழன் காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரையும் அணுகி அழைத்து, இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

பகுத்தறிவுப் பணியே மிக முக்கியமானது என்று மக்கள் உணரும் இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம்! அவசியம்!!

----------------"விடுதலை” 4.3.2010





0 comments: