Search This Blog

3.3.10

திருச்செந்தூரில் ஒரு மோசடி சாமியார்

ஆத்ம சைதன்யா மடத்தின் தமிழக பிரதிநிதி நான்! தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு நான்தான் பொறுப்பாளர். திருச்செந்தூரில் பக்தர்கள் வசதிக்காக27 அடி உயர தியான லிங்கம் அமைக்கப்போகிறேன். அதில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யலாம் என்று அந்த இளம் சாமியார் அள்ளிவிட்ட போது பலரும் அதை நம்பிவிட்டார்கள்.

அதுவும் டெல்லியைத் தலைமையிடமாய்க் கொண்டு உலகின் பல பகுதிகளில் கிளை விரித்திருக்கும் ஆத்ம சைதன்யா மடத்தின் பிரதிநிதி என்றால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்? இப்படிச் சொல்லி திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஏராளமான பக்த கோடிகளிடம் கல்லா கட்டிவிட்டார் அந்த ஆத்ம சைதன்யானந்த மஹராஜ் சாமி. அவரிடம் ஏமாந்தவர்கள் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, சாமியாரின் கைதுப் படலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்த கேப்பில் அந்த சாமியார் இந்து முன்னணியினர் தன்னை மிரட்டுவதாகப் புகார் கொடுக்க, அவர் சாமியாரே இல்லை என்று பதிலுக்கு சாட்டை சொடுக்குகிறார்கள் இந்து முன்னணியினர்.

இந்தப் பிரச்சினையை முதன் முதலில் நம் கவனத்துக் கொண்டு வந்தவர் அம்மன்புரத்தைச் சேர்ந்த பெருமாள். அவரை நாம் சந்தித்தோம்.

கிராமப்புறங்களில் உள்ள சிதிலமடைந்த பழங்காலக் கோயில்களைப் புதுப்பித்துக் கட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் செமையாக மீட்டர் போடுவதுதான் அந்த சாமியாரின் வேலை. கடந்த வருடம் இவர் குரும்பூர் அருகேயுள்ள அக்கமங்கலம் என்ற ஊருக்கு வந்து அங்கே சிதிலமாகி இருக்கும் நரசிங்கநாதர் கோயிலைப் பார்வையிட்டார். இது போன்ற கோயில்களைச் சீரமைப்பதற்காகவே எங்கள் பீடம் 100 கோடி ருபாயை ஒதுக்கி வைத்திருக்கிறது என்று அவர் சொன்னபோது ஊர் மக்கள் புல்லரித்துப் போனார்கள்.

அதே போல, காயல்பட்டினம், அம்மன்புரம் பகுதிகளில் உள்ள பழைமையான கோயில்களையும் அவர் பார்த்தார். ஒரு நாள் எங்களை பத்தமடையில் உள்ள சிவாலய மடத்துக்கு வரச்சொன்னார். அங்கே அவர் உலாவிய ஜோரைப் பார்த்து நாங்கள் அவரை நம்பிவிட்டோம். இடையில் திடீரென்று நான்கு மாதங்களாக அவரைக் காணவில்லை. பிறகு திரும்பி வந்த அவரிடம், சாமி எங்கே போனீங்க? என்று கேட்டபோது டெல்லி போயிருந்தேன். என் ஆக்ஸிஸ் வங்கி பாஸ்புக், ஏ.டி.எம். கார்டு எல்லாம் காணாமல் போய்விட்டன. அவற்றைத் திரும்ப வாங்க சில மாதமாகும். கோயில் வேலை ஆரம்பிக்க நினைத்த போது இப்படியொரு தடங்கல் ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டார்.

பிறகு, இப்போது நீங்கள் எனக்கு பணம் தாருங்கள். பிறகு நான் வங்கியிலிருந்து பணம் எடுத்து கோயில் வேலையை ஆரம்பிக்கிறேன் என்றார். அவரது பேச்சை நம்பி முதல்கட்டமாக நான் ரூ.50 ஆயிரம் கொடுத்தேன். அங்கமங்கலத்தைச் சேர்ந்த பாலமுருகன் ரூ.25000 ஆயிரமும், திருச்செந்தூரைச் சேர்ந்த சுடலை என்பவர் ரூ.50 ஆயிரமும் கொடுத்தனர். இன்னும் பலரும் பணம் கொடுத்தார்கள். ஆனால் சாமியார் கோயில் வேலை எதையும் ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை.

வாடகை காரில் வந்து போய்க் கொண்டிருந்த அவர் திடீரென சொந்த ஆம்னி காரில் வந்து இறங்கினார். என்ன சாமி? வங்கியில் இருந்து எப்ப பணத்தை எடுத்து வேலையைத் தொடங்குவீர்கள்? என்று கேட்டபோது அவரிடமிருந்து சரியான பதில் இல்லை. மேலும் மேலும் பணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மீது எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அவரைப் பற்றி இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமாருக்குத் தகவல் தெரிவித்து காவல் நிலையத்திலும் புகார் செய்தோம் என்றார் பெருமாள்.

வி.பி.ஜெயகுமாரிடம் பேசினோம். அந்த ஆள் ஒரு போலி சாமியார். அவரது சொந்த ஊர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குளச்சல். வருமானத்துக்கு வழியில்லாமல் தூத்துக்குடி மாதா நகருக்கு வந்து கடந்த பத்தாண்டுகளாக அங்கே குடியிருந்திருக்கிறார். மூன்று வயதிலேயே சன்னியாசம் வாங்கிவிட்டதாக அவர் சொல்வதெல்லாம் முழுப்பொய்.

கையில் காசில்லாமல் அங்குள்ள சிவன் கோயிலில் உட்கார்ந்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்த அவர், அதன்பிறகுதான் காவி அணியத் தொடங்கியிருக்கிறார். இடையில் தூத்துக்குடியிலேயே திருமணமும் முடிந்து அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து, திருச்செந்தூர் பகுதி பக்தர்களை ஏமாற்றி பண வசூல் செய்ததால், இப்போது எஸ்.பி. அலு-வலகத்தில அவர்மீது புகார் கொடுத்திருக்கிறோம் என்றார் ஜெயகுமார்.

இது பற்றி சாமியார் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய திருச்செந்தூர் கிருஷ்ணா நகரில் வீடு எடுத்துத் தங்கியிருக்கும் அவரைச் சந்தித்தோம். வீட்டையே சைதன்ய பீடமாக்கியிருந்த அவரிடம், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்? எனக்கேட்டபோது சொல்லத் தொடங்கினார்.

சிறு வயது முதலே எனக்கு இந்து மதத்தின் மீது தீராக்காதல் உண்டு. 1991- ஆம் வருடம் காசி யாத்திரை போய் அங்கு சைதன்ய சுவாமிகளின் ஆசிரமத்தில் தங்கி அவரிடம் தீட்சை பெற்றேன். அவர் சமாதியான பிறகு திருவண்ணாமலை வந்து பல சித்தர்களைச் சந்தித்தேன். 2000 ஆம் ஆண்டில் தூத்துக்குடி வந்து மாதா நகரில் 3 செண்ட் நிலம் வாங்கி நாராயணி கோயிலைக் கட்டினேன். சமய சொற்பொழிவுகளே என் தொழிலாக மாறியது.

என்னை அங்கமங்கலம் கோயிலுக்குக் கூட்டிச் சென்று அங்கு கோயிலைக் கட்டவேண்டும் என்றவரே அந்த பெருமாள்தான். கோயிலை புதுப்பித்துக் கட்ட கோடிக்கணக்கில் பணம் வேண்டுமே? அதனால் பொறு-மையாகச் செய்வோம் என்றேன். ஏற்கெனவே அங்கு கோயில் கட்ட திட்டமிட்டு பின்பு விரட்டி அடிக்கப்பட்ட ஜோதிடர் முருகன் என்பவர் அந்தத் திட்டக் குறிப்புகளை என்னிடம் கொடுத்தார். ஆனால், நான் அங்க-மங்கலம் கோயிலில் அக்கறை காட்டுவது ஏனோ பெருமாளுக்கே பிடிக்காமல் போனதால் என்னப் பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தார். எனக்குத் திருமணம் ஆகி குழந்தை இருப்பதை நான் எப்போதும் மறைத்ததே இல்லை. ஆனால், பெருமாள் என் திருமண சி.டி.யை திருட்டுத்தனமாக எடுத்து ஊர் ஊராகப் போட்டுக் காட்டி வருகிறார்.

இப்போது அவருடன் இந்து முன்னணியினரும் சேர்ந்து கொண்டு என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். எனக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவரை வீட்டைக்காலி பண்ணச் சொல்லி மிரட்டுகிறார்கள். உயிருக்குப் பயந்துபோன நான், சென்னை சென்று டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன் என்ற அவர், ஒருவரிடம் கூட நான் இதுவரை நயா பைசா வாங்கியதில்லை. அப்படி வாங்கியிருந்தால், அவர்கள் என் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும் என்றார் சவாலாக.

யார் சொல்வது உண்மை என்று தெரியாவிட்டாலும் சாமியார்கள் விஷயத்தில் பக்தர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.

- எஸ். அண்ணாதுரை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்,
7.3.2010

0 comments: