Search This Blog

22.3.10

மனுநீதி - ஒரு மறுபார்வைமனுநீதி - ஒரு மறுபார்வை

ஆசிரியர்: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து

மனுநீதி- ஒரு மறுபார்வை எனும் தலைப்பிலான நூல் மிகச் சிறப்பாக ஆய்வு செய்து எழுதிப் படைக்கப்பட்ட நூல். மனுதருமம் என்றே பலரும் கூறும் இந்நூல் யாருக்கான தருமங்களைக் கூறுகிறது என்பதை விளக்கிக் கூறுகிறது இந்நூல். ஒரு குலத்துக்கான தருமம் என்பதனை விரிவாகவும் அக்குலம் பார்ப்பன குலம் என்பதையும் தெளிந்த நீரோடை போன்ற தமிழ் நடையில் வடித்துத் தந்திருக்கிறார் பேராசிரியர் ப.காளிமுத்து.

மனுதருமம் என்பது பெரும்பான்மை மக்களுக்கு மனு அதருமம் என்றே காட்சி தரும் நிலையை இந்நூலைப் படிக்கும் எவரும் தெற்றெனத் தெளியலாம். உலகின் மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் மகளிர்க்கான மனுதருமம் எத்தகைய கேடானது, தீதானது, மகளிரைக் கீழாக நினைக்க வைப்பது என்பதை மிகவும் ஆவேசத்தோடு ஆசிரியர் விளக்கியிருக்கிறார். இந்தியச் சமூகத்திற்கு சட்டநூல் தந்த முதல்வர் (திவீக்ஷீ லிணீஷ் நிவீஸ்மீக்ஷீ) என்று பீற்றப்படும் மனு, வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் எந்த அளவுக்குக் கேடு பயக்கும் சட்டங்களைக் கூறியிருக்கிறார் என்பதை அந்நூல் பகுதிகளில் எடுத்துக் காட்டி விவரித்திருக்கிறார். ஆனாலும் கூட, இந்த மனு நூலின் அடிப்படையிலும் ஏனைய முனிவர்களின் பிதற்றல்களின் அடிப்படையிலும் இந்தியர்களில் பெரும்பான்மையினரான இந்துக்களுக்கான குடிமைச் சட்டம் (சிவில் சட்டம்) தொகுக்கப்பட்டுள்ளது என்பது அவலம் மட்டுமல்ல, கேவலமும் கூட!

அப்பேர்ப்பட்ட மனுநூலை ஒருவர் எழுதவில்லை; பலரும் பலகாலத்தில் எழுதி இருக்கிறார்கள் என்பதை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறுவியதை இந்நூல் குறிப்பிடுகிறது. ரிக் வேதமும், கீதையும் 4 மனுக்கள் என்றும் மனுநூலே 7 மனுக்கள் என்றும் குறிப்பதையும் இந்நூல் சுட்டுகிறது. காலவளர்ச்சியில், பலபேர் தொகுத்து வைத்த மனித விரோதக் கருத்துகளே மனுநீதி என்பதை விதவை மறுமணம்பற்றி இருவேறு கருத்துகளைக் கூறுவதில் இருந்தே அறியலாம். முற்பகுதியில் மறுமணம் கூடாது எனும் மனு பிற்பகுதியில் குழந்தை பாக்கியத்திற்காகச் செய்து கொள்ளலாம் என அனுமதிக்கிறது. ஒருவரல்ல, பலர் எழுதியதன் தொகுப்பே மனுதருமம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் கூட, உயர்நீதிமன்றங்களில் கூட மனுவுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள். காட்டாக, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றமே தடுத்தது. ஆனால், சில ஆண்டுகளில் மாநில ஆட்சியாளராக வந்துவிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் சிலை வைத்துட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவு சிலகாலம் மட்டுமே செல்லுமோ?

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரம்ப சமத்காரமாக மனுநீதிச் சோழன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சோழ அரசன் இருந்ததே கிடையாது என்பதை இந்நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளார் பேராசிரியர் காளிமுத்து. களப்பிரர் காலம் இருண்ட காலம் எனும் கருத்துகூட, மனுநீதிச் சோழன் திருவாரூரை ஆண்ட சரித்திரம் போலப் பொய்தான் என்பதை மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற ஆய்வறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். களப்பிரர் காலத்தில் அல்லலுற்றது தமிழ்நாடு அல்ல, தமிழ்நாட்டில் இருந்த பார்ப்பனர்களே என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில் இதுபற்றி முந்திய கருத்தினை நூலாசிரியர் எடுத்தாண்டிருப்பது நெருடலாக உள்ளது.

பார்ப்பனரும், அல்லாதாரும் சேர்ந்து உணவு அருந்துவது சாத்திர விரோதம் என்று வ.வே.சு. அய்யர் கூறி, சேரன்மாதேவி குருகுலத்தில் காட்டிய பாகுபாடு காந்தியாரால்கூட ஒப்புக் கொள்ளப்பட்டு பெரும் விளைவைத் தமிழ்நாட்டில் 1925 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது என்பது திராவிடர் இயக்கத்தின் தொடக்க கால வரலாறு. இந்தச் சாத்திரம் எந்தச் சாத்திரம் என்பதை நூலாசிரியர் எடுத்துக் காட்டி இருக்கிறார். (பக்கம் 53). இதன் தொடர்பாக இவ்வரலாற்றுக் குறிப்பை உணர்த்தியிருந்தால் இன்றைய இளைய தலைமுறையும் எதிர்வரும் தலை முறையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

உடலிலும் பிறப்புறுப்பிலும் நெய் பூசிக் கொண்டு, ஒருவனின் மனைவி தன் கணவன் அல்லாத வேறு ஆடவனுடன் (ஏழு தலைமுறை தாண்டியும் போகலாம்) உடல் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்ளும் நியோகம் எனும் முறையை மனுநூல் விதித்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்த முறையில் பிறந்தவர்கள் நியோகி (பார்ப்பனர்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். அந்தப் பார்ப்பனப் பிரிவினர் ஆந்திர மாநிலத்தில் அதிகம். அவர்களில் ஒருவரான காலஞ்சென்ற பி.வி.நரசிம்மராவ் இந்தியாவின் தலைமை அமைச்சராகவே பதவி வகித்தார். இந்த வகை நியோக சம்போகம் கைம்பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி வழங்கும் நிலையில் யார் யார் சாட்சியம் அளிக்கத் தகுதியானவர் என்பதைக் கூட மனுநூல் குறிக்கிறது; ஆனால் மகளிரின் சாட்சியத்தை ஏற்கக்கூடாது என மனுநூல் தடை செய்வதையும்கூடக் குறிப்பிட்டிருக்கிறார். நீதிபதிகளுக்கும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன ஜாதி அடிப்படையில்தான்! வழக்குகளை விசாரிக்கும் வரிசை முறை பற்றி கூட, விஸ்தாரமாகக் கூறுகிறது மனுநூல்! இதிலும் ஜாதிதான் அடிப்படை. முதலில் பார்ப்பனர் சம்பந்தப்பட்ட வழக்குகள், பிறகு க்ஷத்திரியர், பிறகு வைசியர், கடைசியில் சூத்திரர் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்று மனுதருமம் முழுக்க சர்வம் வருண மயம் ஜகத்தான்!

மகளிரைப் பழிக்கும் மனுதருமம் என ஓர் இயலையே ஆக்கி அளித்திருக்கிறார். மனுநூல் கொடுமைகளையும் தமிழ்நூல் தகைமைகளையும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. நல்ல நெசவுக்கூறையில் தங்க இழை ஊடுருவது போன்று புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளை எடுத்து ஆண்டிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.

பெண்ணையும் தந்து பொன்னையும் கொட்டிக் கொடுக்கும் வரன் தட்சணை முறை, எல்லாவற்றிலும் தட்சணை பார்க்கும் பார்ப்பனரின் பழக்கம் என்பதையும், பொன்னோ பொருளோ பரிசமாகக் கொடுத்து (முலை விலை) பெண்ணைக் கொள்வது தமிழரின் பழக்கம் என்பதையும் எடுத்துக் காட்டி எழுதியிருக்கிறார். இந்த இடத்தில் நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் என்போரின் செயல்முறைகள்பற்றி நயமாக இடித்துரைப்பது, சரியான பெரியாரிஸ்ட் என்பதற்குச் சான்றாக உள்ளது.

புதையல் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மனுதருமம் கூறுவதை-யும், கரிகால் பெருவளத்தான் காலத்தில் புதையல் பற்றி நடந்த வழக்கையும் ஒப்-பிட்டுக் காட்டி தமிழரின் செம்மாந்த பழக்க வழக்கங்களைப் பெருமைபடப் பேசுகிறார்.

தமிழரின் பண்பையொட்டியவாறுதான் ஆங்கிலேயர் அமைத்த Treasure Trove Act இருக்கிறது. பல கொலைகாரர்கள், பழங்காலத்தில் தண்டிக்கப்பட்டதே கிடையாது -அவர்கள் பார்ப்பனர்கள் என்ற காரணத்தினால் என்று கோபப்படுகிறார் - நியாயமாக! மனு தருமத்திற்கு எதிராக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனச் சட்டம் கொண்டு வந்த காரணத்தால்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மெக்காலேவைக் கண்டிக்கிறார்கள்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொலை செய்த பார்ப்பானுக்குத் தூக்குத் தண்டனை உறுதி என்பதை அறிந்துகொண்ட திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர், தீர்ப்பு நாளுக்கு முந்திய இரவு 12 மணிமுதலே நடை முறைக்கு வரும் வகையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து சட்டம் போட்டார் என்பதை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். (படிக்க. சங்கராச்சாரி-யார்?)

நூலின் அருமை, பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிற அளவுக்கு ஏராளமான மனுதருமக் கொடுமைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன இந்நூலில். இளைஞர்கள் படித்து எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் ஆற்றொழுக்கு நடையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள நூல். எங்கே பிராமணன் என்று தேடுகிறார்கள். ஹிந்து மகா சமுத்திரம் என்று காட்டுகிறார்கள். வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்று கேட்கிறார்கள். அனைத்துக்கும் ஆணி அடித்தாற் போன்ற விடைகளைத் தரும் நூல். ஆரியக் கொட்டத்தை அம்பலப்படுத்தும் நூல் மனுதருமம் ஒரு மறுபார்வை! எல்லோரும் வாங்கிப் படித்துத் தெளிவு பெறவேண்டும்.

-------------------------21-3-2010 “விடுதலை” யில் நூல் மதிப்புரை: -சு.அறிவுக்கரசு அவர்கள்

0 comments: