Search This Blog

8.3.10

திராவிடன் ஏன்?


தீரமிக்க திராவிட இளைஞர்கள் பயணிக்க வேண்டிய பாதை!

அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளினையொட்டி (மார்ச் 10) தமிழ் நாடெங்கும் கருத்தரங்குகளை திராவிடர் கழக இளைஞரணி நெறிப்படுத்தியுள்ளது.

தீரமிக்க திராவிட இளைஞர்கள் பயணிக்க வேண்டிய பாதை என்று கருத்தரங்கிற்குத் தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்த அவர்தம் மறைவிற்குப் பிறகு கழகத்தையும் கட்டிக் காத்த சமூகப் புரட்சி இயக்கம் ஒன்றுக்கு தலைமை வகித்த ஒரே பெண்மணி என்ற ஓங்கு புகழுக்குரிய அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றி இளைஞர்கள் குறிப்பாக இயக்கத்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்!

இளம் வயதில் வாழ்வின் வசந்தங்களை எல்லாம் தூக்கி எறிந்து இலட்சியப் போருக்கு ஈரோட்டு ஏந்தலிடம் தம்மை ஒப்படைத்துக் கொண்ட ஒப்பரும் தலைவர் நமது அம்மா.

இலட்சியவாதிகள் எளிமையாகத்தானிருப்பார்கள். அவர்கள் இன்பம் காண்பது என்பது கொண்ட கொள்கைகள் வெற்றிப் புன்னகையைக் காணும்போதுதான்.

நாம் எந்த இயக்கத்தில் இருக்கின்றோம்? எந்த தலைமையை ஏற்றுக் கொண்டோம்? எந்தக் கொள்கை நம்மை ஈர்த்தது? என்பதில் நம் இளைஞர்கள் தெளிவாக, உறுதியாக இருக்கக் கூடியவர்கள். மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் வேட்கை(டை)யில் ஈடுபட வேண்டியவர்கள்.

சில அரைவேக்காடுகள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று திரிபுகளைச் செய்ய முனைந்து முனை முறிந்து போயின.

இப்பொழுது சில மழைக் காலத்துத் தவளைகள் அதனைக் கடன்வாங்கிக் கதைக்கத் தலைப்பட்டுள்ளன.

திராவிடன் ஏன்? என்பதற்குத் தந்தை பெரியார் கூறும் காரணம் மட்டுமல்ல. அதற்கு வரலாற்றுப் பூர்வமான வலிமையான ஆதாரம் உண்டு.

தொடக்கப்பள்ளியிலே ஆரியர்-திராவிடர் என்பது கற்றுக் கொடுக்கப்பட்ட பாலபாடம்! பால பாடத்தைக் கூடத் தெரிந்து கொள்ளாத பாலகர்கள் ஏதோ புதிதாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்ற அரிப்பில் பிதற்றுகிறார்கள்.

"நாம் இந்துக்கள் என்பதை மறுக்கிற படியாலும், இனவுணர்ச்சியும், எழுச்சியும் பெறப் போராடுவதாலும் திராவிடர் என்னும் பெயரைக் கொண்டோம். இது புதியதாக உண்டாக்கியதல்ல. மறந்ததை நினைத்துக் கொண்டதாகும். நம்மைக் குறிக்க பார்ப்பனரல்லாதோர் என்கின்றோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லாதார் ஆகவேண்டும்?

(குடிஅரசு, 9.12.1944)

திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவலம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல் பெரிய வரலாறுகள் வரை எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. பழக்க வழக்கங்களிலும் ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

- தந்தை பெரியார்-
விடுதலை தலையங்கம், 18.9.1946

இந்த அடிப்படையை உணராதவர்கள், உணர்ந்தும் வேறு நோக்கத்துக்காகக் குரல் மாற்றிப் பேசுபவர்கள், பார்ப்பனர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, வெண்சாமரம் வீசி, நம்மைச் சூத்திரர்கள் என்ற படு குழியில் தள்ளி ஏறி மிதிக்கத் துடிக்கும் எதிரிகளின் அம்புகள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தத் திராவிடர் இயக்கம்தான் நம் இனத்தைக் கூறுபோட்ட வருணாசிரமத்தை, ஜாதி அமைப்பு முறையை அதன் மூலவேர் வரை சென்று அழித்து வந்திருக்கின்றது. ஜாதி என்கிற உணர்ச்சி உள்ள வரை நமது இனவுணர்ச்சிக்கு இடமில்லை.

திராவிடர் என்று சொல்லி வந்தால் தமிழர் என்ற பெயரைப் புறக்கணிக்கிறோம் என்பது பொருள் அல்ல. இவ்வாறு சொல்லப்படுமானால் திராவிடர் என்ற சொல் எப்படி தமிழர் என்று ஆயிற்று என்பதற்கு பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் புத்தியில் படும்படி விளக்கமும் கொடுத்துள்ளனர்.

திராவிடர் என்றாலும், தமிழர் என்றாலும் ஒன்றுதான். இதில் என்ன முக்கிய வேறுபாடு என்றால் தமிழர் என்று சொன்னால், நானும் தமிழ் பேசுகிறேன் என்று கூறி பார்ப்பனர்கள் ஊடுருவும் பேராபத்து இருக்கிறது ஆனால் எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்ள முன்வரமாட்டான்.

அப்படி யாராவது வந்திருந்தால் அவர் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவர். ஆபத்துக்கு வழிகோலுபவர் என்று பொருள்.

புத்த மார்க்கத்திற்கு வந்த கதி திராவிட இயக்கத்துக்கு வந்துவிடக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வை இதன் பின்னணியில் மிக ஆழமாகவே உள்ளது.

பார்ப்பன எதிர்ப்புதான் திராவிடர்களை தமிழர்களை மேலே உயர்த்தியிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. பார்ப்பன எதிர்ப்புதான் நம் மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தது வேலை வாய்ப்பைக் கொடுத்தது சமூக நீதிக் கொடியை உயர்த்திப் பிடித்தது. தன்மானத்தைக் கொடுத்தது பகுத்தறிவைப் பாய்ச்சியது!

நமஸ்காரம் போய் வணக்கம் வந்ததும், அக்கிராசனர் போய் தலைவர் வந்ததும், உபந்நியாசம் ஓடி, சொற்பொழிவு பிறந்ததும், வந்தனோபசாரம் வந்த வழியைப் பார்த்துச் சென்று, நன்றி மலர்ந்ததும் ஸ்ரீ ஒதுங்கி திரு தென்றலாய் இனித்ததும் இந்த திராவிட இயக்கத்தால்தான்.

இந்திக்கு இங்கு இடமில்லை என்று ஆக்கியது திராவிட இயக்கம்தான் திராவிட இயக்க ஆட்சிதான்.

சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று சட்ட ரீதியாக வடிவம் பெற்றதற்கும், சுயமரியாதைத் திருமணம் வந்ததற்கும், சட்டப்படி செல்லுபடியானதற்கும் காரணம் திராவிட இயக்கம்தான்.

இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு.

இளைஞர்களே, ஒன்றை உறுதியாகக் கொள்ளுங்கள். எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஆயிரம் அடிக்கும் கீழ் புதைத்து இருக்கிறோமோ, அந்தப் பிணத்தைத் தோண்டி எடுத்து அதன் எலும்புகளைக் கொண்டு வந்து தோரணம் கட்ட ஒரு கூட்டம் பிள்ளை பிடிக்கும் ஒரு வேலையில் இறங்கியிருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்! இருங்கள்!!

------------------ மின்சாரம் அவர்கள் 8-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: