Search This Blog

5.3.10

பண்ணாரி மாரியம்மனுக்கு ஒரு சவால்


மரக்கட்டைகள் எரிவதால் உண்டாகும் தழற் கட்டிகளுக்கு (நெருப்புத் துண்டங் களுக்கு) வெப்பத்தைக் கடத்தும் திறன் குறைவு. அதனால்தான் சமையல் செய்யும் போது அடுப்பிலிருந்து வெளியில் வந்து விழும் நெருப்புக் கட்டிகளை மகளிரும் கையால் எடுத்து அடுப்பினுள் மீண்டும் இட முடிகிறது. நெருப்பைக் காலாலும் மிதிக்க லாம். கையால் எடுத்தும் விளையாடலாம். இச் செய்கைகளுக்கு எதன் பாலும் மனதைப் பறி கொடுத்த நிலை இருந்தாக வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஆனாலும் நெருப்பின் மீது எவரும் நின்று கொண்டே இருக்க முடியாது. நெருப்பினைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டே இருக்க முடியாது. நெருப்பில் காலை மாற்றி மாற்றி நடக்கவேண்டும். சுடுமணலிலும் குறைந்த அளவே சூடு உறைக்கும். கைகளை மாற்றி மாற்றி அம்மானைக் காய்போல் நெருப்புக் கட்டிகளை நில்லாமல் சுழற்ற வேண்டும். காப்பித் தம்ளர் சுடுவதிலும் குறைந்த அளவே சூடு உறைக்கும். இதுவே நெருப் பில் நடத்தல், நெருப்பை எடுத்தல் ஆகிய செயல்களில் அடங்கியுள்ள உண்மை.

தீ மிதித்தலில் உள்ள அறிவியல் பூர்வமான இந்த உண்மையைக் கூறுவது விடுதலை பத்திரிகையல்ல; உண்மை இதழும் அல்ல. கலைக்கதிர் என்னும் அறிவியல் இதழாகும் (அக்டோபர் 1971).

உண்மை இவ்வாறு இருக்க கோயிலில் பூக்குழி என்றும் தீக்குண்டம் என்றும் கூறி பக்தர்கள் தீயில் நடந்து செல்வது கடவுள் சக்தி என்று உண்மைக்கு மாறாகப் புரளி செய்கிறார்கள்.

விரதம் இருக்க வேண்டும், பக்தி செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் நெருப்பு சுடாது என்பதெல்லாம் சுத்த புருடா என்று நிரூபிப்பதற்கே திராவிடர் கழகத் தோழர்கள் ஆங்காங்கே தீக்குண்டம் இறங்கிக் காட்டி வருகின்றனர்.

விறகுக் கட்டை நெருப்பில் இறங்கும் பக்தர்கள், இரும்புத் தகட்டைச் சூடாக்கி அதில் நடந்து காட்ட முடியுமா? முடியாது. விறகுக்கும், இரும்புக்கும் இடையில் உள்ள வெப்பம் கடத்தும் திறனில் உள்ள வித்தியாசமே இதற்குக் காரணம்.

விறகுக் கட்டை நெருப்பில் கூட ஓடலாமே தவிர யாராலும் அந்தத் தீக்குண்டத்தில் நின்று கொண்டிருக்க முடியாது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்னும் ஊரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கோயில் பண்ணாரி மாரியம்மன் கோயில். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலில் தீ மிதித் திருவிழா என்பது பிரசித்தி பெற்றது. பண்ணாரி மாரியம்மன் என்றால் சாதாரணமானதல்ல. மிகப் பெரிய சக்தி வாய்ந்தது என்று பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர். தீமிதி விழாவின்போது சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள்.

தி.மு.க. அமைச்சர் ஒருவர் பண்ணாரி மாரியம்மன் கோயில் தீமிதியில் பங்கெடுத்துக் கொண்டார் என்பதற்காகக் கண்டித்து, காட்டுமிராண்டித்தனம் என்று முதலமைச்சர் கலைஞர் விமர்சனம் செய்ததுண்டு.

முதலமைச்சராக இருக்கக்கூடியவர் இப்படி சொல்லலாமா? என்று சில சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினார்கள். முதலமைச்சர் கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? அன்றைய தினம் விடுதலையில் வெளிவந்த ஆதாரப்பூர்வமான படம் ஒன்றை எடுத்துக்காட்டி இது காட்டுமிராண்டித்தனம் அல்லாமல் வேறு என்ன? என்ற பகுத்தறிவு வினாவையும் எழுப்பினார். கேள்வி கேட்டவர்கள் கப்சிப் ஆனார்கள்.

அந்தப்படம் என்ன தெரியுமா? திருப்பூரை அடுத்த காரமடை என்னும் ஊரில் உள்ள கோயில் பூசாரி வாழைப்பழத்தை வாயில் போட்டு மென்று, - குழந்தை வரம் கேட்கும் பெண்களின் வாயோடு வாய் வைத்து துப்புகின்ற காட்சி அது! (கேட்கவே வாந்தி வருகிறது. இப்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது ( இவ்வாரம் ஓர் இதழில் இதனைக் காணலாம்).

விடுதலையில் வெளிவந்த அந்தப் படத்தைத்தான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடுத்துக் காட்டினார்.

அன்றைக்குப் பிரச்சினையான அதே பண்ணாரி மாரியம்மன் கோயில் தீமிதியைக் கருத்தில் கொண்டு பக்திக்கும், சக்திக்கும், தீமிதிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட இதோ, திராவிடர் கழகத் தோழர்கள் கருஞ்சிறுத்தைகள் கிளம்பி விட்டனர்.

வரும் 6 ஆம் தேதி சனி மாலை 3 மணிக்கு பண்ணாரிக்கு அருகில் உள்ள சத்தியமங்கலத்தில் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லி தீக்குண்டம் இறங்கிக் காட்டுகிறார்கள். ஊரே பரபரப்பாகியுள்ளது. இளைஞர்கள் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல் இந்து முன்னணியினர் எதிர்ப்புச் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். எதிரி செலவில் நமது நிகழ்ச்சிக்கு நல்ல அளவுக்கு விளம்பரம் ஆகியிருக்கிறது.

யாரையோ சீண்டுவதற்கல்ல இந்தத் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி.

மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கை இருளை விரட்டுவதற்கேபகுத்தறிவு ஒளியைப் பரப்புவதற்கே!

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறியுள்ளது 51_ஏ. இந்தக் கடமையினை ஆற்ற இளைஞர் பட்டாளமே எழு! எழு!!

கிளம்பியதுகாண் கருஞ்சட்டைப் பட்டாளம் என்று முரசொலித்துப் புறப்படு! புறப்படு!!

மதத்தின் பெயரால் சாமியார்கள் நடத்தும் அட்டகாசம் பெருகி வருகிறது. இந்த நேரத்தில் பகுத்தறிவு ரீதியான செயல்முறைத் திட்டங்கள் (Demonstrations) தேவை! தேவை!!

புதுத்திருப்பம் புதுத் திருப்பம். புயல் போல் கிளம்புவீர் கழகப் புலிப் போத்துகளே!

------------------ மின்சாரம் அவர்கள் 4-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: