Search This Blog

16.3.10

சாமியார் தொழிலைத் தடுத்து நிறுத்தவேண்டும்

திருவண்ணாமலை ராஜசேகரனாகிய நித்யானந்தா ஒழுக்கக்கேடுகள், மோசடியாக
சொத்துக் குவிப்புமீது சி.பி.அய். விசாரணை நடத்திடவேண்டும்
சாமியார் தொழிலைத் தடுத்து நிறுத்தவேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை

சாமியார் வேடத்தில் நித்யானந்தா என்பவர் செய்துள்ள ஒழுக்கக்கேடுகள், மோசடியாக சேர்த்த சொத்துக்கள் இவற்றின்மீது சி.பி.அய். விசாரணை நடத்திடவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓர் இளைஞன் ராஜசேகரன் என்ற பெயருள்ளவர் வெறும் டிப்ளமோ படித்தவர் என்று கூறப்படுகிறவர், ஆன்மிக வியாபாரம் சாமியார் வேஷம்தான் செழிப்பான வியாபாரம் என்று நன்கு புரிந்து(ஏனெனில், திருவண்ணாமலை ரமணாவில் தொடங்கிய ஆசிரமங்களின் வருவாய், எச்சில் சாமியார், சுருட்டுச் சாமியார், பீடிச் சாமியார், பீர் சாமியாரிணி நல்ல வருவாய் தரும் வழி என்பதை உணர்ந்து) அதைத் தொடக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக, தியானம், யோகா என்ற மூலதனத்தை முதலீடாக்கி, ஆன்மிக வியாபாரம் தொடங்கி, பல்லாயிரக்கணக்கில் சொத்து சேர்த்து ராஜசேகரன்கள் நித்யானந்தா சுவாமிகள் ஆகி, நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்-களையும் வளைத்துப் போட்டு, நல்ல அறுவடையை விதைக்காது விளையும் கழனியிலிருந்து பெற்று வந்தார்!

சிவ ரூபத்தில் சிரித்திடும் நரிகள்

இப்படிப்பட்ட இவருக்கு எடுபிடி சீடகோடிகள் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் எழுதி, வெளியிட்டும், எலக்ட்ரானிக் மீடியாக்களான நவீன மின்னணு தொழில்நுட்ப உத்திகளையும் துணைக்கழைத்துக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் ஆசிரமங்கள் அமைத்து, அறிஞர் அண்ணா வேலைக்காரியில் எழுதிக் காட்டியது போல் சிரித்திடும் நரி சிவசொரூபத்தில் இருந்து நன்றாக பக்தி என்ற செழுமையான வியாபாரம் நடத்தினார்.

திரைப்பட நடிகர், நடிகைகள், தியானம், யோகா, நிம்மதி நாடி, மணவிலக்கு வாங்கியவர்கள் உட்பட பலரும் சென்ற நிலையில்தான், சில நாள்களுக்கு முன் சன் தொலைக்காட்சி அந்த ஆனந்தாவின் ஆனந்த சொரூப, ஆன்மிக வகுப்பு ஆராய்ச்சி ஒரு பெண்மணியோடு நடைபெறுவதை அப்பட்டமாகக் காட்டியது.

அதனால் குறுகிய நேரத்தில் குவலயமே புரிந்து கொண்டு, காரி உமிழ்ந்தது காவிப்போர்வை மீது!

பக்தர்களாலேயே தொடுக்கப்பட்ட வழக்கு

மோசடி வழக்குகள் பக்தர்களாலேயே தரப்பட்டது. பிரதான சீடர்கள், சீடிகள் எல்லாம் இப்படி அந்தரங்கத்தை- அவலத்தைப் பற்றி விளக்கி சந்தி சிரிக்க வைத்தனர்.

பல பக்தர்கள் சாமியாரின் படங்களை எரித்தனர்; வேறு சில பக்தர்கள் பாதுகா பட்டாபிஷேகத்தை நடத்தி பக்தி பகல் வேஷத்தை அம்பலமாக்கி, இவரது கிருஷ்ண லீலைகளின் மீது அருவருப்புக் காட்டியது நாடறிந்த செய்தியாகும்.

எத்தனை எத்தனை முரண்பாடுகள்!

முதலில் இவரது தரப்பில் இந்த வீடியோ காட்சியில் இருப்பது இந்த மகான் கடவுள் அவதாரம் அல்ல; கிராபிக்ஸ் (graphics) மூலம் செய்யப்பட்ட புரட்டு என்று கதைவிட்டனர்.

பிறகு அதை எடுத்தவர், உண்மைகளை காவல் துறையிடம் கக்கி விட்டதனால், அதிர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட புளுகுப் படலத்தில், நான்தான் அது; ஆனால் தவறு நடக்கவில்லை, கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்துள்ள நிலை அது, எனக்குத் தொண்டு செய்த தூய்மையின் கோலம் அது என்றார்!

அடுத்த கட்டம் கெட்டபின்பு ஞானம் என்பது போல, வாழ்க்கையில் இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி இவையெல்லாம் சர்வசாதாரணம் என்று மாயாவாதத் தத்துவ ஞானியாக வியாக்கியானம் செய்து இப்போதும் பல மீடியாக்களைபெரும் பதவியாளர்களை எல்லாம் தன்வயப்படுத்திக் கொள்வதில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளார் இந்த மோசடிப் பேர்வழி!

அபத்தமான செய்தி

கருநாடக அரசு தரப்பிலிருந்து ஓர் அபத்தமான செய்தி வந்துள்ளது; இது சரியான செய்தி என்றால் அதை விட அந்த அரசுக்கு மகாவெட்கம் எதுவும் இல்லை.

யாரும் புகார் கொடுக்கவில்லை இந்த ஆனந்த சாமியார் மீது எனவே எந்த வழக்கும் தொடுக்க முடியாது என்பதுதான் அந்தச் செய்தி.

கொலை நடந்தால், ஆள் கடத்தல் நடந்தால், கற்பழிப்பு நடந்தால், சமூக விரோத செயல்கள் நடந்தால் புகார்களைத் தேடிக் கொண்டா இருக்கிறார்கள்? சட்டம்_ ஒழுங்கினைக் காக்க வேண்டிய அரசுகள் மெத்தனமாகவா நடந்து கொள்ளும்?

தமிழ்நாடு அரசு இவர் மீதான வழக்கினை கருநாடகாவிற்கு மாற்றியுள்ளதே, அது பற்றிய நிலை என்ன?

மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்

பல மாநிலங்களில் சொத்துக் குவிப்பு, மோசடி முதலிய இ.பி.கோ. பல்வேறு பிரிவுகளை ஈர்க்கும் குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்த (ஆ)சாமிமீது உடனடியாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்) விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சமூக விரோத செயல்கள்பற்றி விருப்பு வெறுப்பின்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்கப்பட வேண்டும்.

மற்ற மோசடிகளை விட இந்த பக்தி மோசடி, ஒழுக்கமற்ற அருவருக்கத்தக்க ஆபாசங்கள் எப்படி சகிப்புக்குரியவைகளாகிவிடுவது?

வருமான வரித்துறையின் கடமை

இந்த சாமியார்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து குவிந்தது என்று வருமான வரித்துறை முழு விசாரணை செய்ய வேண்டும்.

சாதாரணமாக உழைத்துப் பணம் சேர்க்கும் வியாபாரிகள் முதல் ஊராளும் அரசியல்வாதிகள் வரை யாருக்கும் தாட்சண்யம் காட்டாமல் சுழலும் வருமான வரித்துறை இந்த சாமியார்களின் கோடி கோடியான சொத்து வருமானம் பற்றி ஆய்வு செய்யவேண்டும். ஆங்காங்கு கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை வற்புறுத்தி, மத்திய அரசினை செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
16.3.2010

1 comments:

தமிழ்மகன் said...

சாமியார் தொழிலைத் தடுத்து நிறுத்தவேண்டும் - இது correct அதே மாதிரி உன்னைப்போல இருக்கும் டுபாக்கூர் அரசியல் வாதிகளையும் ஒழித்தால் நம் நாடு இன்னும் நன்றாக இருக்கும் அய்யா