Search This Blog

3.3.10

திராவிட இயக்கத்தின் இளஞ்சூரியன்

இந்து ராம் உரை காலத்தின் கட்டாயம்
பயன்படுத்த வேண்டிய நேரத்தில் பயன்படுத்துவோம்!
சென்னை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பாராட்டிப் பேச்சு


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் இனிமேல்தான் தெரியப்போகிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில் என்ற தலைப்பில் எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலை காமராசர் அரங்கில் நேற்று (2.3.2010) மாலை நடைபெற்றது.

ஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில் நூலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, பத்மசிறீ டாக்டர் கமலகாசன் பெற்றுக்கொண்டார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு:

நான் அதிக நேரம் பேச வேண்டிய அவசியமில்லை. பேச வேண்டிய அவசியம் எங்களைப் போன்றவர்களுக்கு இல்லை. இந்த மேடையில் பேசியவர்களுடைய பேச்சுக்களை எல்லாம் கேட்டு நாங்கள் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றோம்.

திராவிட இயக்கத்தின் இளஞ்சூரியன்

இவ்வளவு பேரும் திராவிட இயக்கத்தில் பூத்த இளஞ்சூரியனைப் பாராட்ட வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் திராவிட இயக்கத்தினுடைய வெற்றி இதிலே உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி உணர்த்தியிருக்கிறது (கைதட்டல்).

இங்குள்ள அத்துணை பேரையும் இணைக்கின்ற மய்யப் புள்ளி எது என்று சொன்னால் அவர்தான் ஸ்டாலின். நம்முடைய கலைஞர் அவர்களின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழினத்திற்காக பாடுபட்ட, பாடுபட்டு வருகின்ற தலைவர்களை இத்தனை பத்திரிகை யாளர்களும் இங்கே சிறப்பாகப் பாராட்டி பேசினார்கள்.

மிசா கால கொடுமை

நாங்கள் 1976ஆம் ஆண்டு மிசா நெருக்கடி காலத்திலே ஒன்பதாம் நெம்பர் பிளாக்கில் அடைக்கப்பட்டோம். இது ஏதோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றது போன்ற ஒன்றல்ல. நாங்கள் மிசா விலிருந்து வெளியே வந்தபொழுது மிசா வீரமணி, மிசா கணேசன் என்று அழைக்கப்பட்டோம்.

இது பட்டமல்ல, சிறைப்பட்டறையில் நாங்கள் அனுபவித்த கொடுமைகளின் அடையாளம். அந்த நெருக்கடி நிகழ்ச்சிகளை எல்லாம் தோழர் சோலை அவர்கள் மிக அழகாக எழுதியிருக்கின்றார். சகோதரர் ஸ்டாலின் அவர்கள் மிசா கொட்டடிக்கு வந்ததை அழகாக இந்த நூலிலே சுட்டிக் காட்டிருக்கின்றார்கள்.

என்மீது ஒரு கால் இடறியது

நாங்கள் எல்லாம் சிறைச்சாலையிலே படுத்திருக்கின்றோம். சிறை அறையில் நான் படுத்திருந்தபொழுது ஒரு கால் இடறியது, யார் என்று பார்த்தவுடனே தம்பி ஸ்டாலின் என்று தெரிந்தவுடன் அன்போடு அணைத்துக்கொண்டோம் என்பதை எல்லாம் இந்த நூலிலே சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அம்மா அவர்கள் (தயாளு அம்மையார்) ஸ்டாலினை வளர்த்த நேரத்திலே எத்துணை முறை அவருடைய கால்பட்டிருக்கும்?

கலைஞர் அவர்கள் தன் மகன் ஸ்டாலினைத் தூக்கிக் கொஞ்சுகிற நேரத்திலே எத்துணை முறை ஸ்டாலின் அவர்களுடைய கால்கள் கலைஞர் அவர்கள் மீது பட்டிருக்கும்.

சிறைச்சாலையில் பெற்ற பயிற்சி

எங்களுக்கு அதிலே மகிழ்ச்சி. சரியான பாதையில் தளபதி ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு கொள்கைப் பயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறாரே, அது அவர்கள் சிறைச்சாலையிலேயிருந்து பெற்ற பயிற்சி.

மறைந்த மிசா சிட்டிபாபு அவர்களுடைய நாள்குறிப்பிலிருந்து செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார் சோலை அவர்கள்.

நீதிபதி இஸ்மாயில் கமிசன்

உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதிபதியாக எப்பொழுதும் உண்மையே பேசிப் பழக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் தலைமையிலே மிசா கொடுமைகளை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டது. பொது வாழ்க்கையிலே இருப்பவர்களுக்கு இந்த சிறைக் கொடுமை அனுபவம் இருக்கிறதே அது பல்கலைக் கழக பட்டங்களைவிட மிக முக்கியமானது. பல கமிசன்கள் அலமாரிக்குள்ளே போயிருக்கிறது. ஆனால் இஸ்மாயில் அவர்களுடைய கமிசன் காலத்தை இன்றைக்கும் வென்று காட்டியிருக்கிறது. மிசா காலத்தில் சிறையில் நடந்த அத்துணை கொடுமைகளும் இதில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தண்ணீர் குடிக்க ஸ்டாலினுக்கு உரிமை இல்லை

ஸ்டாலின் அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்ணீர் குடிப்பதற்குக் கூட கதவு திறந்து விடவில்லை சிறைக் காவலர்கள். சிறை அறையின் கம்பிகளுக்கிடையே கைகளை நீட்டி தண்ணீர் வாங்கிக் குடித்தார். அதுதான் அன்றைய நிலை.

திடீர் என விழுந்த பதவி அல்ல!

இன்றைக்கு எல்லோரும் பாராட்டக்கூடிய அளவுக்கு உலகமே வியந்து பாராட்டக் கூடிய அளவிற்கு திடீர் என்று விழுந்த பதவி அல்ல, பரிசு அல்ல அவருக்கு. ஸ்டாலின் அவர்களுடைய உழைப்பால், அவருடைய உறுதியால் வளர்ந்தவர். அவரைப் பற்றி மற்ற பத்திரிகையாளர்கள் பேசுவதைத்தான் நான் கேட்டு, கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

விடுதலை, முரசொலி பட்டபாடு

நெருக்கடி காலத்தில் பத்திரிகையாளர்கள் பட்ட பாடு என்ன என்பது பத்திரிகை நடத்துகிற எங்களைப் போன்றவர்களுக்கு என்ன என்பது தெரியும். விடுதலை, முரசொலி பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த இரு ஏடுகளும் தயார் ஆனவுடன் நெருக்கடி கால அதிகாரிகளிடம் தினசரி கொண்டு போய் காட்ட வேண்டும். அவர்கள் அடிக்கின்ற செய்தி பத்திரிகையில் வரக்கூடாது. இப்படித் தணிக்கை செய்தார்கள்.

இருண்ட காலம் நாட்டைவிட்டு ஓடியது

இங்கே துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களை இத்துணை பத்திரிகையாளர்கள் பாராட்டு கின்றார்கள் என்று சொன்னால் இருண்ட காலம் இந்த நாட்டை விட்டு ஓடியது. ஒளி மிகுந்த காலம் இந்த நாட்டில் உண்டாகியிருக்கிறது. காரணம் உதயசூரியனால் இந்த நிலை வந்திருக்கிறது.

இருட்டறையில் உள்ளதடா உலகம்

என்ற நிலை இன்றைக்கு இல்லை.

நாங்கள் சிறையிலிருப்பது வெளி உலகத்திற்குத் தெரியாது

முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதிய கருத்துகளை எல்லாம் சென்சார் அதிகாரிகள் அடித்தார்கள். நாங்கள் மிசாவில் சிறையில் இருக்கிறோம் என்ற செய்தி கூட வெளிவரவில்லை. வெளியிட முடியாத ஒரு கொடுமையான நிலைமை இருந்தது.

கலைஞரின் கெட்டிக்காரத்தனம்

ஆனால் கலைஞர் அவர்களுடைய கெட்டிக்காரத் தனம் இருக்கிறதே, அவருக்கு வேகம் மட்டுமல்ல, விவேகமும் அவரோடு எப்பொழுதும் கூடப் பிறந்தது. நெருக்கடி காலத்தை அவர் எப்படி அணுகினார் என்பதை, இந்த செய்திகளை எல்லாம் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணா அவர்களுடைய நினைவுநாள் பிப்ரவரி 3ஆம் தேதி, அதற்கு முன்னாலே ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்ருக்கின்றோம். பிப்ரவரி 2ஆம் தேதி அடிபட்டிருக்கின்றோம். நாங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டோம்.

எங்களுக்கு காயங்கள் ஆறாத சூழ்நிலை மனக்காயங்கள் உள்பட. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. யார் யார் மிசாவிலே கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலே இருக்கின்றார்கள் என்பது தெரியாது. அந்த நிலையிலே இதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக, தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக மிசாவிலே கைது செய்யப்பட்டவர்களுடைய பட்டியல் வெளியிடக் கூடாது. இது மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் நெருக்கடி கால அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். உடனே கலைஞர் என்ன செய்தார் தெரியுமா?

அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்கள்!

அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்கள் என்று ஒரு பட்டியலை முரசொலியில் எழுதினார்கள். அதில்தான் எங்களுடைய பெயர்கள் எல்லாம் இருந்தது. வீரமணி, ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், சிட்டிபாபு என்று இப்படி இத்தனை பேருடைய பட்டியலையும் கலைஞர் அவர்கள் வெளியிட்டார். அன்றைக்கு இருந்த தணிக்கை நிலை மாறி, எல்லா பத்திரிகைகளும் இன்றைக்குப் பாராட்டக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

கலைஞர் அவர்கள் எழுதியதை எல்லாம் முரசொலியில் அடித்தார்கள். இப்படி எல்லாம் அடிக்கிறார்களே, நமது கருத்துகளை வெளியிட முடியவில்லையே என்று கலைஞர் அவர்கள் சங்கடப்பட்டார்கள். என்னதான் எழுதுவது என்று பார்த்தார். முரசொலியில் எழுதினார். கத்தரிக்காய் விலை இவ்வளவு, புடலங்காய் விலை இவ்வளவு, இப்படி எல்லாம் எழுதினார்.

அன்றைக்கு இருந்த அந்த கொடுமையான நிலைகள் எல்லாம் மாறி, இன்றைக்கு பத்திரிகையாளர்கள் அற்புதமாக பாராட்டுகிறார்கள் கலைஞரை மட்டுமல்ல. கலைஞர் வழி வந்த விழுது இன்றைக்கு விருது பெற்ற நிலையை அடைந்திருக்கிறது.

வேர்கள் சரியாக இருந்த காரணத்தால்....!

வேர்கள் சரியாக இருந்த காரணத்தால்தான், விழுதுகளும் இன்றைக்கு அற்புதமாக இருக்கின்றன. ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இருந்தாலும் காலத்தைக் கருதி சொல்லுகின்றேன். சோலை எழுதியிருக்கிறார்கள். சோலையில் பூத்த பல மலர்கள் இருக்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை

இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய சிறப்பு Unity in Diversity வேற்றுமையில் ஒற்றுமை காட்டுவது எப்படி என்றால் ஸ்டாலின் என்ற மய்யப் புள்ளி திராவிட இயக்கம் என்ற மணிமகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல் என்ற செய்தி இதைவிட மகிழ்ச்சியான செய்தி, வேறு எங்களுக்குக் கிடையாது. இது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வந்த The Week பத்திரிகை. இந்த வீக் பத்திரிகையினுடைய செய்தியாளர் நம்முடைய தளபதி அவர்களை பேட்டி காணுகிறார். இது ஆங்கிலப் பத்திரிகை.

நான் சொன்னால் நீங்கள் தவறாகக் கருதக் கூடாது. அண்ணா அவர்கள் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். திராவிட இயக்கம் என்று சொன்னால் அன்றைக்கு எள்ளி நகையாடப்பட்டது.

இந்து ராம் கேட்டார்

ஏன் பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதவில்லை என்று கேட்கக்கூடிய அளவிற்கு திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறதென்றல் உள்ளபடியே எங்களுக்கு மகிழ்ச்சி.

அண்ணா சொல்லுவார். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. நாங்கள் பேசியிருக்கின்றோம் என்றால் இந்து பத்திரிகை என்ன எழுதும் என்றால்Annadurai also spokes என்றுதான் போடுவார்கள். இந்து பத்திரிகையில் அண்ணாதுரையும் பேசினார் என்றுதான் ஒரு வரி போடுவார்கள்.

அண்ணாவின் நகைச்சுவை

மேலும் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு சொன்னார். அண்ணாதுரையும் பேசினார் என்று ஏன் போடுகிறார்கள் என்றால் எங்காவது, யாராவது அண்ணாதுரை பாடினார் என்று நினைத்துக்கொள்ளக் கூடாதல்லவா அதற்காக இப்படி போட்டார்கள் என்று சொன்னார்.

எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் அப்படிப்பட்ட காலம் இன்றைக்கு மாறியிருக்கிறது. இளைய தலைமுறையினர் இன்றைக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். தட்டிக்கொடுக்கின்றோம். இதைவிட மகிழ்ச்சி எங்களுக்கு வேறு கிடையாது.

நேரத்தின் நெருக்கடி கருதி சொல்லுகின்றேன். தி வீக் பத்திரிகையிலே துணை முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய பேட்டி வந்திருக்கிறது. கவிதாமுரளிதரன் என்ற ஒரு அம்மையார் ஸ்டாலின் அவர்களை பேட்டி கண்டார்.

தலைப்பே, ஸ்டாலின் மெல்ல மெல்ல உறுதியாக வெற்றி அடைந்திருக்கிறார் என்பதுதான். தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி ஒரு பம்பர் ஆஃபர் போல் வரவில்லை. படிப்படியாக உழைத்து வெற்றி கண்டிருக்கிறார் என்பதை இந்த பேட்டியில் எடுத்துச் சொல்லிவிட்டு, மேலும் சிறப்பாக பல கருத்துகளை இதிலே சொல்லியிருக்கின்றார்கள். எழுத்தாளர் சோலை அவர்கள் ஸ்டாலின் அவர்களுடைய பெருமையைப்பற்றி மட்டும் சொல்லாமல், திராவிடர் இயக்க ஆட்சியின் சிறப்புகளையும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்.

குறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறமையைப் பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.

துணை முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?

இன்றைக்கு ஸ்டாலின் அவர்களைப் பற்றி கேட்வேண்டியவர்களிடம் கேட்டு மகிழக் கூடிய அளவிலே நாங்கள் இருக்கின்றோம்.

நம்முடைய துணை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை அவர் இன்றைக்கு எங்கேயிருக்கின்றார், பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

நாளை மாலை திருச்சியிலே விழா. 21 இலட்சம் பேருக்கு குடிசை ஒழிப்பு கான்கிரீட் வீடு கலைஞர் வீட்டு வசதி திட்டம் இருக்கிறதே அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக 3 இலட்சம் வீடுகள் வழங்கும் துவக்க விழா நடைபெறுகிறது. முதல் முறையாக கலைஞர் அவர்கள் துவக்கி வைக்கின்றார்.

முதல்வர் கலைஞர் திருச்சிக்குச் சென்று துவக்கி வைக்கின்றார். துணை முதல்வரும் அலங்காரத் திற்காக உடன் செல்லவில்லை. இவர் அப்படிப்பட்டவர் அல்லர்.

காட்சிக்கு எளியன்; கடுஞ்சொல்லன் அல்லன்

அவர் ஒரு தொண்டனாக அன்றைக்கும் இருந்தார். இன்றைக்கும் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இன்றைக்கு அவர் திருச்சிக்கு முன்னதாகவே சென்று நாளை முதல்வர் அவர்கள் வரக்கூடிய நிகழ்ச்சிக்கு என்ன ஏற்பாடுகள் என்பதைப் பார்க்க இயக்கத்தினுடைய ஊழியனாகச் சென்றிருக்கின்றார்.

இங்கே அருமையாகச் சொன்னீர்கள். ஸ்டாலின் அவர்கள் காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்று சொன்னீர்கள். அதே நேரத்திலே ஸ்டாலின் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்ட நேரத்திலே அவர் அடக்கமாகச் சொன்னார்.

ஸ்டாலின்- அடக்கத்தின் சின்னம்!

தன்னுடைய தலைவன் தன்னுடைய தொண்டை அங்கீகரித்த பொழுது அதுதான் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சி என்று ஸ்டாலின் சொல்லுகின்றார்.

நீங்கள் இப்பொழுது துணை முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறீர்களே என்ன நினைக்கிறீர்கள்? என்று திவீக் பத்திரிகையின் சார்பாக கேள்வி கேட்டபொழுது, அதற்கு ஸ்டாலின் பதில் சொன்னார்.

கலைஞர் அவர்களுடைய பணிகளை நான் ஓரளவுக்காவது, சுமக்கக் கூடிய அளவில் இருக்கிறேன் என்று சொன்னால் அந்த அளவுக்கு நான் பயன்படக் கூடிய அளவில் இருக்கிறேனே, அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்று சொல்லுகிறார். இதுதான் அடக்கத்தின் சின்னமாகும்.

ஆகவே இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லி நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன். பொது வாழ்க்கையில் அவரை எதிரிகளாக கருதுகிறவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் எதிரியாகக் கருதுகிறவர் எவருமில்லை என்பதுதான் அவருடைய சிறப்பு. பெரியாருக்கு இருந்த தனிச்சிறப்பு. அண்ணா அவர்களுக்கு இருந்த ஒரு தனிச்சிறப்பு. கலைஞர் அவர்களுக்குத் தொடருகிறது. நான்காவது தலைமுறையாக தொடருகிறது. நண்பர்களை, பகைவர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. பகைவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தத்துவம் பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பான தத்துவம். துணை முதல்வர் ஸ்டாலின் நீண்ட காலம் வாழ வேண்டும்.

பல மொழிகளில் நூல் வரவேண்டும்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, இந்து ராம் ஆகியோர் சொன்னதைப் போல சோலை எழுதிய நூல் போன்று இன்னும் பல நூல்கள் வரவேண்டும். அது இன்னும் பல மொழிகளிலும் வரவேண்டும் என்று அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

இனிமேல்தான் தெரியப் போகிறது.....!

ஸ்டாலின் அவர்களுடைய ஆற்றல் இனிமேல்தான் தெரியப்போகிறது. அதற்கு நாமெல்லாம் துணையாக இருப்போம். வேதனையான ஆட்சி இல்லாமல் மக்களுக்கு சாதனை நிகழ்த்தும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி திகழுகிறது. இந்த ஆட்சியைக் காக்கும் காவலராக இருக்கிறார்.

அவர் சிறைச் சாலையிலே அடிபட்ட பொழுது மாண்புமிகுவாக ஊர்வலம் வருவோம் என்று நினைக்கவில்லை. அன்றைக்கும் அவர் மானமிகு. இன்றைக்கும் அவர் மானமிகு. சுயமரியாதை சொக்கத்தங்கத்தின் வாரிசாகவே திகழ்வார். அது உடமைக்கு வாரிசு அல்ல. கொள்கைக்கு வாரிசு, ஸ்டாலின் வாழ்க! அவர் புகழ் நீள்க! அவருக்குத் துணையாக இருக்கின்ற அத்துணை பேரையும், அருமையான இந்த விழாவை நடத்திய அனைவரையும், பாராட்டுகிறோம். சிறப்பாக இந்த நூலை எழுதிய சோலை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


-----------------------"விடுதலை” 3-3-2010

0 comments: