Search This Blog

28.3.10

பெரியாரின் குடிஅரசு களஞ்சியம் வெளியீடு

அறிவுச்சோலை விழா அழைக்கிறது

வரும் செவ்வாயன்று (30.3.2010) சென்னை பெரியார் திடலில் ஒரு சிறப்பான விழா.

தந்தை பெரியார் தம் குடிஅரசு களஞ்சியம் ஆறு தொகுதிகள் வெளியிடப்பட உள்ளன. 1926, 1927, 1928 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான தொகுதிகள் இவை. ஒவ்வொரு ஆண்டுக்கும் இரு தொகுதிகள்.

இவை வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட (Selected Works) கட்டுரைகள் அல்ல. அனைத்தும் அடங்கிய (Collected Works) கருத்துப் பெட்டகமாக களஞ்சியமாக வெளிவருகிறது. 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கடந்த ஆண்டு அய்யா பிறந்த நாளன்று (17.9.2009) வீடியோ கான்பரன்சிங் மூலம் சேலத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து இப்பொழுது ஆறு தொகுதிகளும் அழகான அச்சுப் பொலிவுடன், கண்களில் ஒத்திக்கொள்ளும் நேர்த்தியுடன் காலத்திற்கேற்ற நவீன கோலத்துடன் வெளிவரவிருக்கிறது.

தொழில் ரீதியாக வெளியிடும் பதிப்பகத்தாரே மூக்கில் விரலை வைக்கும் வண்ணம் நமது ஏடுகளும், இதழ்களும், வெளியீடுகளும் வெளிவருவதை நெருப்புக்கோழி மனப்பான்மையினர் தவிர்த்து அனைவரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

நெஞ்சில் காழ்ப்பு இல்லையென்றால், நேர்மையான விமர்சனங்களும் வரும் அல்லவா?

இவ்வளவு நேர்த்தியாக பொருள் செலவுடன் வெளியிட்டாலும் இலாப நோக்கம் சிறிதும் இன்றி பிரச்சார வெறியுடன், நெறியுடன் நன்கொடைகள் பெறப்பட்டு அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும், அடேயப்பா! 80, 85 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய சிந்தனைகளா? தொலைநோக்குப் பார்வையா? என்று மலைக்கத்தான் செய்கிறது.

குடந்தை பெரியவர் வெங்கட்ராமன் அவர்கள் தந்தை பெரியாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

கடவுள் மறுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நம் குடிஅரசு அதிகமாக மக்களிடம் போகுமே என்பதுதான் அந்த யோசனை.

அதற்குத் தந்தை பெரியார் அளித்த பதில், போகும்தான், அதற்காக இந்த இதழை நான் தொடங்கவில்லை. கொள்கையைப் பரப்புவதற்காக, நான் ஒருவனே அச்சிட்டு நான் ஒருவனே படிக்க நேர்ந்தாலும் கொள்கையில் சமரசம் என்பது கனவிலும் இல்லை என்று கறாராகக் கூறினார்.

அந்தக் கருத்துப் பெட்டகம்தான் குடிஅரசு. இந்த இதழைத் தொடங்க தந்தை பெரியார் விரும்பிய கட்டத்தில் ஆச்சாரியார் இந்த முயற்சி வேண்டாம்? என்று தடுத்தார். திரு.வி.க. அவர்களோ, தாராளமாக நடத்துங்கள், பத்திரிகை நடத்த தகுதியானவர் நீங்கள்தான் என்று தைரியத்தையும், ஆர்வத்தையும் அளித்தார்.

குடிஅரசின் பயணம் 1949 வரை தொடர்ந்தது. இடையில் ஏடுகளின் பெயர்கள் மாறி இருக்கலாம்; அரசுகளின் தடை வாள்கள் தீண்டியிருக்கலாம். ஆனாலும், அய்யாவின் இதழ் பயணம், இலட்சியப் பாட்டையில் வீறுநடை போட்டே வந்தது.

காலத்தால் அழிக்க முடியாத, பணத்தால் எடை போட முடியாத இந்த அறிவுச் செல்வம் தமிழர் இல்லம் ஒவ்வொன்றிலும் இடம்பெற வேண்டாமா?

நமது சந்ததியினர்க்குச் சேர்த்து வைப்பது நிலமோ, பணமோ, நகைகளோ அல்ல!

அறிவுலக ஆசானின் அறிவுச் செல்வமாம் இந்தத் தொகுதிகள் வீட்டுக்கு வீடு வீற்றிருக்கட்டும்.

தாய்ப் பாலோடு இந்தக் குடிஅரசு இதழையும் புகட்டி வந்தால், நோயில் பொல்லா நோயாகிய அறியாமை நோய் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

துணிவையும், அறிவையும் கொடுத்துவிட்டால், துன்பம் துன்பம் அடையும், தோல்வி தோல்வி அடையும். வைத்த அடி விளங்கும் வாகை மலர்கள் வணக்கம் கூறி வரவேற்கும்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் ஆறு தொகுதிகளையும் வெளியிடுகிறார். நூலகத்துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் க. அறிவொளி (சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவர்), திராவிட இயக்கத் தீந்தமிழர் எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோர் கருத்து மணம் கமழவிருக்கின்றனர்.

தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார். ஆன்றோர் பெருமக்கள், தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளர்கள் தொகுதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

வெளியீட்டு விழா அன்று ஆறு தொகுதிகளை வாங்குவோர்க்கு சிறப்பான கழிவு உண்டு. ரூபாய் 370 தள்ளுபடி போக ரூபாய் ஓராயிரத்துக்கு ஆறு தொகுதிகள் கிடைக்கும்.

முதல்வர் கலைஞர் வெளியிட்ட முதல் தொகுதியும் கிடைக்கும். விழாவுக்குக் குடும்பத்தோடு வாருங்கள். நண்பர்களோடு வாருங்கள்.

கருத்துச் செல்வம் குதூகலிக்கும் ஓர் அறிவுச்சோலை விழாவின் மணத்தை நுகரும் வாய்ப்புண்டு வாரீர்! வாரீர்!!

----------------------- கருஞ்சட்டை 27-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

ssk said...

சமீபத்தில் பெரியவர் வே.ஆனைமுத்து பெரியாரின் குடியரசு தொகுதிகளை கலைஞரை கொண்டு வெளியிட்டார். சிறப்பான கருத்துகளை எடுத்து கூறினார். ஆனால் அது பற்றி ஒரு சிறு வரி கூட விடுதலையில் இல்லை. ஏன் இந்த அவல நிலை. அவரும் பெரியாரின் புகழை தான் பாடுகிறார். எதோ காரணதிற்காக பிரிந்தாலும் இந்த பல பெரியார் புகழ் பாடும் குழுக்கள் ஒன்று சேர்ந்து இயங்கினால் பெரியார் கருத்துகள் மேலும் சிறப்பாக பரவும். எவ்வளவோ ஏச்சும் பேசும் பேசியவர்களை கலைஞர் அரவணைத்து செல்கிறார். அது போல் தலைவர் வீரமணியும் பெரியார் பற்றாளர்களை ஒன்றினைத்து செயல்பட இயலுமா.
பிரிந்து போன குழுக்களை பற்றி ஒரு பதிவு போட்டால் நன்ற இருக்கும். என் போன்ற புதிய வரவுகளுக்கு பெரியாரின் இயக்க வரலாறு, பட்ட சிரமங்கள் புரியும்.
என்னை போன்ற புதியவர்களுக்கு, எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் கொள்கைக்காக கட்சி நடத்துவதாக திராவிடர் கழகம் தவிர்த்து மற்ற பெரியார் அமைப்புகளை பற்றியும் தோன்றுகிறது. இதில் உண்மை இல்லாமல் இருக்கலாம். இதை பற்றி உங்களுக்கு இயலும் போது பதிவு போடவும். எனக்கு தெரிந்தவர்கள் வே.ஆனைமுத்து, சாலை.இளந்திரையன். மேலும் பலர் இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...

கேள்வி:- திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று புதிய அமைப்பை உருவாக்கியவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை?

கி.வீரமணி பதில்:-
வழி தவறியவர்கள் திரும்பி வருவது போல் வாருங்கள்.வர முடியாவிட்டால் தாய்க் கழகத்தைப் பலவீனப்படுத்தியோ, அதனைக் கொச்சைப்ப் அடுத்தியோ பிரச்சாரப் பணி செய்யாமல் ,கொள்கையில் தீவிர நாட்டம் செலுத்துங்கள்.

வீரமணி அவர்களின் இந்த விடையே தங்களுக்கு போதுமானது என கருதுகிறேன்.

இது குறித்து இந்த வலைப்பூவில் விவாதிக்கப்பட்டுள்ளது. தேடிப் படியுங்கள் ssk

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ssk said...

நன்றி. இது பற்றி வலைப்பூவில் தேடிய பொழுது சரியாக எதுவும் கிடைக்கவில்லை. இருபினும் தலைவரின் பதில் திருப்தியே.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்