Search This Blog

4.3.10

தன்னடக்கத்தையே அணிகலனாகக் கொண்டவர் பெரியார்


நமது நாட்டில் மட்டுமல்ல, உலக முழுவதற்கும் உள்ள மக்களிடையே ஏதாவது சலிப்போ சங்கடமோ ஏற்படும்போதெல்லாம் அவர்கள் வாயிலிருந்து, அவர்களை அறியாமலேயே வந்து விழும் சொற்கள் சும்மா இருப்பதே சுகம்! என்பதாகும்.

இதுபற்றி ஆழமாக சிந்தித்தால், அது எவ்வளவு உண்மைக்கு மாறானது; நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது புரியும்! அர்த்தமற்ற சொற்களும் ஆகும்.

1927 ஆம் ஆண்டுஎன்னைப் போன்ற பலரும் பிறக்காத காலத்தில் வெளிவந்த வார ஏடான குடிஅரசு ஏட்டில், தந்தை பெரியார் அவர்கள் அக்காலத்தில், காரைக்குடிக்கு அடுத்து உள்ள சிராவயலில் அவருக்கு அளித்த ஒரு வரவேற்புக்குப் பதில் அளித்த உரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது!

தன்னடக்கத்தையே அணிகலனாகக் கொண்டவர் தந்தை பெரியார் என்பது அவரை அறிந்த அத்துணைப் பேரும் அறிவர்!

பெரியார் அவர்கள் பேசுகிறார் - சும்மா இருப்பது என்பதைப்பற்றி தத்துவார்த்தமாக அலசி ஆராய்கிறார்! அதிசயக்கத்தக்க அணுகுமுறை அது.

இதோ அவர்தம் உரையின் ஒரு பகுதி:

உலகில் உள்ள மக்களும் மற்ற ஜீவன்களும் அதனதன் உயிர் உள்ளவரை ஏதாவது ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பதுதான் ஜீவ சுபாவம். தொழிலில்லாமல் இருக்கவே முடியாது.

சும்மா இருப்பது என்பதும் ஒரு தொழிலேயாகும்! மற்ற எல்லா தொழிலையும்விட மிகவும் கஷ்டமானது. சிரமமாய் சொல்வதானால், செத்தால்தான் சும்மா இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டிருப்பதுபோல, அதாவது ஒருவன் வியாபாரம், ஒருவன் உத்தியோகம், ஒருவன் சாமியார், ஒருவன் பத்திரிகை ஆசிரியர், ஒருவன் தேசத் தலைவன், ஒருவன் பூசாரி, ஒருவன் தாசி வியாபாரம், ஒருவன் கள்ளு வியாபாரி என்பதாகப் பல தொழில் செய்வதுபோல், நானும் ஏதேதோ தொழில் செய்து இங்கே இந்தத் தொழில் செய்கிறேன்.

இவை சேர்க்கை, சேனை, தற்செயல் முதலிய பல காரணங்களால் ஏற்பட்டனவே தவிர, இதற்கு பிரமாதமான யோக்கியதை ஒன்றும் கொடுக்கவேண்டியதே இல்லை என்பதே என் அபிப்பிராயம். மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் இம்மாதிரி ஏதாவது ஒரு தொழில் இருந்துதான் தீரும். எந்தத் தொழிலை யார் செய்தாலும் அவனவன் ஜீவ சுபாவத்தைக் காட்டுவதில் ஒன்றாகுமே ஒழிய, அதற்குமேல் யோக்கியதை கொடுக்கவேண்டியதில்லை. இவை உலக வாழ்க்கையில் ஒரு மாற்றம் மக்களுக்கு அனுகூலம் இருப்பதுபோலவும், ஒரு சமயம் அவருக்கு மாத்திரம் சுயநலம் இருப்பதுபோலவும், மற்றொரு சமயம் ஒன்றுக்கும் உதவாமல் மக்களையும் கெடுத்து, தானும் கெடுவதாகவும் காணப்படும்.

இவ்வித ஜீவ சுபாவமான தோற்றங்களால் காணுவதினாலேயே ஆச்சரியப்படத்தக்கதும், புகழத்தக்கதும் ஒன்றுமில்லை.

மேற்காட்டிய பகுதியை சிலர் ஒருமுறைக்குப் பதிலாக இரண்டு, மூன்று முறை படித்தால், அதன் முழு சுவையும் புரிந்து சுவைத்து மகிழ முடியும்!

தந்தை பெரியார் அவர்கள் சொல்வது 100 க்கு 100 உண்மையாகும்.

யாரும் சும்மா இருப்பதில்லை;

யாரும் சும்மா இருக்கவும் முடியாது!

மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்கிறேன் என்பவர்கூட சும்மா இல்லையே!

அவரும் அவருக்குப் பிடித்தமான அல்லது விரும்பும் விழையும் ஒன்றைத்தானே மூச்சுப் பயிற்சியையோ அல்லது சலனமற்ற தனித் தன்மையையோ செய்கிறார்!

எனவே, சும்மா இருப்பது என்பது எளிதில் நடக்க முடியாது!

சோம்பேறித்தனத்திற்கு இப்படி ஒரு தங்கமுலாம் பூசி தங்களைத் தாங்களே மனிதர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்!

ஓய்வு பெற்ற பெரியவர்கள், தாய்மார்கள், அவர்கள் வீட்டில் செய்யும் வேலை பேரக்குழந்தைகளுக்காகவும், தங்களுக்காகவும் எவ்வளவு?

பெரிய பெரிய அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள்கூட வெளிநாட்டிலிருக்கும் தங்களது பிள்ளை, பெண்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயா வேலை பார்த்துதானே மகிழ்கின்றனர்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ‘‘idle mind is Devil’s work shop’’

சோம்பேறியின் மூளை என்பது சாத்தானின் தொழில் பட்டறை என்று.

அவர்கள் சாத்தானை நம்புவதினால் ஏற்பட்டதுபோலும்!

உண்மையில் எவரும் சும்மா இருப்பது கிடையாது; உடல் ரீதியாக, மனம் அலைபாயும் ஒன்று. மூளை ஏதாவது ஒன்றைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டேதான் இருக்கும்.

எனவே, நல்லனவற்றையே சிந்திப்போம்; ஆக்க ரீதியாகச் சிந்திப்போம்!

ஏதோ சும்மா இருக்கின்றோம் என்று யாரும் பதிலளித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவேண்டாம்! சும்மா இருப்பது முடியாது; அப்படி ஒருவேளை இருந்தால், அதைவிட மனிதனுக்குக் கொடுந்தண்டனை வேறு எதுவும் கிடையாது!

தூங்கும்போதுகூட குறட்டை விடுகிறோம்; கனவு காணுகிறோம்; புரண்டு புரண்டு படுக்கிறோம். சும்மாவா இருக்கிறோம்?

----------------2-3-2010 “விடுதலை” யில் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனையிலிருந்து

0 comments: