Search This Blog

17.3.10

பாடத் திட்டத்தில் கீதையா?இந்துத்துவா ஆட்சியை இந்தியா முழுமையும் கொண்டு வந்தே தீருவோம் என்று தோள்தட்டி தொடைதட்டிக் கிளம்பியிருக்கும் பாரதீய ஜனதா கட்சி மக்களால் நாளும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

இரண்டொரு மாநிலங்களில் அக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், தங்களுடைய இந்துத்துவா கொடுக்கை அவ்வப்பொழுது நீட்டி, தங்களின் அங்க மச்ச அடையாளங்களைக் காட்டிக் கொண்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் அமர்ந்தபோது பாடத் திட்டங்களில் இந்துத் தனத்தின் சீழ் பிடித்த குணத்தைக் காட்டியது. ஹிட்லரைப்போல கணக்குப் பாடத்தில்கூட தன் கோரப் புத்தியைக் காட்டியது.

பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்த-போது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? என்றெல்லாம் தேர்வில் வினாக்கள் தொடுக்கப்பட்டன.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவே பொறுக்கி எடுத்து நியமிக்கப்பட்டனர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் புகழ் வாய்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு சங் பரிவார் சிஷ்யர்கள் அவ்விடங்களில் அமர்த்தப்பட்டனர்.

இப்பொழுது மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பாடத் திட்டத்தில் கீதை சேர்க்கப்பட்டு, மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களாம். காங்கிரஸ், முசுலிம் லீக் அமைப்புகள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

முசுலிம்களைப் பன்றிகள் என்று கேவலப்படுத்தும் வந்தே மாதரம் பாடலை இதே மத்திய பிரதேசத்தில்தான் 2003 இல் திணிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது.

பள்ளிகளில் மதிய உணவின்போது அன்ன சுலோகம் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதும் உண்டு.

எதிர்ப்பின் காரணமாக அதுவும் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக இருக்கலாம் என்று இதே முதலமைச்சர் கூறி வாங்கிக் கட்டிக்கொண்டதெல்லாம் பழைய கதை.

இப்பொழுது கீதையைச் சொல்லிக் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார். கீதை என்பது வருணாசிரமத்தைப் போதிக்கக் கூடிய ஆரிய நூலாகும். ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது வருண தருமத்தை ஜாதியைக் காப்பாற்றக் கூடியதாகும். அந்தக் கண்ணோட்டத்திலும் இந்த வேலையை அங்குத் தொடங்கியிருக்கலாம்.

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவதும் இதே கீதைதான். பள்ளியில் படிக்கும் மாணவிகளின் நிலைப்பாடு எதுவாக இருக்க முடியும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

கீதையை ஒரு முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் சென்னைக்கு வந்தபோதுதான் கூறினார்.

புத்த மார்க்கம் நாட்டில் வலிவுற்ற சூழலில் அதனைப் புரட்டி எறிய சூதாகத் திணிக்கப்பட்ட அவதாரம்தான் கிருஷ்ணனும், அவன் அருளியதாகக் கூறப்படும் கீதையுமாகும்.

மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்குப் பகவான் காதோடு காதாக ஓதியதுதான் இந்தக் கீதையாம். ஒரு யுத்த களத்தில் இவ்வளவு இதோபதேசங்களைச் சொல்ல முடியுமா? கிருஷ்ணன் சொல்லி முடிக்கும்வரை எதிரிப் படைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? என்பதெல்லாம் பொருள் நிறைந்த வினாவாகும்.

கீதையைப் படிப்பதைவிட கால் பந்து விளையாடக் கற்றுக்கொள்வது மேல் என்றார் இந்துத்துவாவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்.

தேவையற்றதற்கெல்லாம் மூக்கை நுழைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு விரோதமாகக் கத்தி தீட்டும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் கல்வித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தனி ஏற்பாட்டைச் செய்ய-வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


-------------------- " விடுதலை” தலையங்கம் 17-3-2010


1 comments:

காஞ்சி பிலிம்ஸ் said...

அதே போல் பெரியாரின் சமாதியில் மலர்களால் வண்ண வண்ண கோலங்கள் போட்டு கூத்தாடி பெரியாரின் ஆவியை குளிர வைத்துக்கொண்டிருக்கும் கீ.வீரமணியின் அறியமையைக் கொஞ்சம் எடுத்துக்கூறினால் பரவாயில்லை.

பி.கு: இதை வீரமணியிடமே பாரீசில் வைத்து கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் " அதை தடுப்பதற்கு வேற ஒரு பெரியார் வருவார்யா ", என்று மிக பொறுப்பாக பதிலலித்தார்.