Search This Blog

23.3.10

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறப்பதா?

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறப்பதா?
இட ஒதுக்கீடுக்கு இடம் இல்லை என்பதை ஏற்க முடியுமா?
வெளிநாட்டுக்காரர்கள் கல்வியை வியாபாரம் செய்யலாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடா?
அனைத்துக் கட்சியினரும், மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்க்கவேண்டும்
தமிழர் தலைவர் அறிக்கை

இட ஒதுக்கீடுக்கு இடம் இல்லாத கல்வியை வியாபாரமாக்கத் துடிக்கும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் இடம் அளிக்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற கல்வித் துறையின் அமைச்சகம் செய்கின்ற பல புரட்சிகளில்(?) தலையாயது, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு, கதவு திறந்து, சிவப்புக் கம்பள வரவேற்பைத் தரும் சட்டம் ஒன்றை அவசர அவசரமாக நிறைவேற்றிவிடத் துடியாய்த் துடிப்பதுதான்.

ஏற்கெனவே 2005 ஆம் ஆண்டிலேயே இது யோசிக்கப்பட்டு, நாட்டில் இருந்த எதிர்ப்பு, நடை-முறையில் அது ஏற்படுத்தக் கூடிய பல சிக்கல்கள் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது.

கல்வித் துறையில் நுழையும் ஒட்டகம்

கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை; என்று கிராமங்களில் கூறும் பழமொழிக்கொப்ப இந்தக் கல்வி அமைச்சர், உலக மயம், தாராள மயம், தனியார் மயம் என்ற (L.P.G) அடிப்படையில் (இதற்கு முன் இது வாணிபத்தில்தான் நுழைந்தது இப்போது இந்த ஒட்டகம் கல்வியிலும் குறிப்பாக உயர்கல்வி-யிலும் புகுந்து கூடாரத்தையே தனதாக்கிக் கொண்டு சுரண்டிக் கொழுக்கும் ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெறுகின்றன) இந்த ஏற்பாடு போலும்!

கல்வியின் தரத்தை உயர்த்தவே இப்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்றால், இங்கே சுமார் 150 ஆண்டுகள் வரலாறு படைத்த (இந்தியாவின்) முக்கியப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் தரம் குறைந்தவைகளா?

இட ஒதுக்கீட்டில் படித்த தமிழர்கள் நாசாவில்!

1. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த வெளிநாடுகளில் சென்று மருத்துவ, பொறியியல், விஞ்ஞானத் துறைகளில் சாதனை புரிந்துள்ளவர்கள், ஏன் நோபல் பரிசு பெற்றவர்கள் தங்களது பட்டப் படிப்பைப் படித்துச் சென்றது இங்குள்ள பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் அல்லவா?

பிரசித்தி பெற்ற அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கூடமான நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில், முக்கியப் பொறுப்பில் தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்திலிருந்து, இட ஒதுக்கீட்டின்மூலம் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள், அங்கே பணியாற்றி, அமெரிக்க விண்வெளிச் சாதனையாளர்களுக்கு அஸ்திவாரமாக உள்ளனர். அது அவர்கள் பெற்ற கல்வியின் தரத்தையும், தகுதியையும், திறமையையும் காட்டவில்லையா? அதுபோலவே மருத்துவத் துறையையும் கூறலாமே!

எனவே, ஏதோ இங்கே இந்த நாட்டில் கல்வி தாழ்ந்து வீழ்ந்துள்ளதுபோலவும், அதனைத் தடுத்து நிமிர்த்த கல்வியின் தரத்தை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்-களால்தான் முடியும் என்பதுபோலவும் ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்க நினைக்கிறார்கள்.

மற்றொரு கிழக்கிந்திய கம்பெனியா?

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் அறிவு ஆராய்ச்சி நல்லதுதானே என்றால், அவர்களோடு இங்-குள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து (Tie Up) தற்போது பல இடங்களில் உள்ளதுபோல செய்தால்தானே, இங்குள்ளவர்களின் அறிவு, ஆற்றல், திறன் மேலும் பெருகிட வாய்ப்பு ஏற்படும்?

முழுக்க முழுக்க அந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் இங்கே வந்து அமைந்துவிட்டால், அது மற்றொரு கிழக்கிந்திய கம்பெனிதானே? மறுக்க முடியுமா?

இட ஒதுக்கீடு அறவே கிடையாதாம்!

சட்டப் பாதுகாப்பு லாபங்களை எடுத்துச் செல்ல முடியாது என்ற விதிகள் எல்லாம் நடைமுறையில் பிறகு வெறும் கண்துடைப்பாகத்தானே ஆக முடியும்?

2. அந்தப்படி வரவிருக்கும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடே அறவே கிடையாதாம்! அவர்கள் தங்கள் விருப்பம்போல் பல்கலைக் கழகங்களில் நடத்திக் கொள்ளலாமாம்! மத்தியக் கல்வித் துறை அமைச்சர் கபில்சிபல் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறார்! இதைவிட அரசியல் சட்ட விதியை உடைக்கும் முயற்சி வேறு உண்டா? வேலியே பயிரை மேயலாமா?

சமூக அநீதி வேறு உண்டா?

மத்தியக் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற பெரிய தொழில்நுட்ப (பல்கலைக் கழக தகுதி பெற்ற) மத்தியக் கல்வி நிறுவனங்களில்கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு (50 விழுக்காடு) அவசியம் என்ற அரசியல் சட்டத்தின் 93 ஆவது திருத்தம் தெளிவாகக் கூறுவது என்ன?

93 ஆவது திருத்தம் என்னாவது?

இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசோ, மற்றவர்களோ போடும் பிச்சை அல்ல. காட்டும் சலுகை அல்ல; மாறாக, உரிமை; அதுவும் அடிப்படை உரிமை, பிறப்புரிமை; இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் தந்தை பெரியார் நடத்திய (1951 இல்) சமூகப் புரட்சியால் பிறந்த முதல் சாதனை; இப்போது 2005 இல் அதே சமூகநீதிப் போரின் வெற்றியால் விளைந்த திருத்தம் 93 ஆவதுப்படி மத்தியக் கல்வி நிறுவனங்களும் இட ஒதுக்கீடு தருவது என்பதை மறுக்க முடியுமா?

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள்பற்றிய 15 ஆவது விதியில் புதிதாக சேர்க்கப்பட்ட 93 ஆவது சட்டத் திருத்தத்தின்படி துணைப் பிரிவு 5 என்ன கூறுகிறது?

Amendment of article 15. In article 15 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-

‘‘(5) Nothing in this article or in sub-clause (g) of clause (1) of article 19 shall prevent the State from making special provision, by law, for the advancement of any socially and educationally backward classess of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

15 ஆவது சரத்தின் திருத்தம்

அரசமைப்புச் சட்டத்தின் 15 ஆவது சரத்தில் (4) ஆம் துணைச் சரத்தை அடுத்துப் பின்வரும் துணைச் சரத்தைச் சேர்க்கவேண்டும்:

(5) சமுதாயம் மற்றும் கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அல்லது ஷெட்யூல்டு ஜாதியினருக்கு அல்லது ஷெட்யூல்டு பழங்குடியினருக்கு, அவர்களின் முன்னேற்றத்திற்காக, கல்வி நிறுவனங்களில் அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குச் சட்டத்தின்மூலம் அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யும். கல்வி நிறுவனங்கள் என இங்கே குறிக்கப்படுவனவற்றில், 30 ஆவது சரத்தில் (1) ஆம் துணைச் சரத்தில் சுட்டப்பட்டுள்ள சிறுபான்மையர் கல்வி நிறுவனங்களைத் தவிர, அரசு உதவி பெறுகிற அல்லது பெறாத தனியார் கல்வி நிறுவனங்களும் சேரும். இந்தச் சரத்தில் அல்லது 19 ஆம் சரத்தின் (1) ஆம் துணைச் சரத்தின் (g) உள் சரத்தில் உள்ள எதுவும் இந்தச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் இருந்து அரசைத் தடுக்காது.

இதன்படி அரசுக்கு அப்பாற்பட்டு, நிதி உதவி பெறாத நிறுவனங்களாக இருப்பினும்கூட அவைகளிலும் இட ஒதுக்கீடு தந்தாக வேண்டும் என்பது சட்டக் கட்டாயம் (Mandatory) அல்லவா?

அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்ததை மறக்கலாமா?

இட ஒதுக்கீடு கோட்டா கிடையாது; ஒழித்துவிட்டோம், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் என்று பிரகடனப்படுத்துகிறார் மத்திய கல்வித் துறை அமைச்சர் கபில்சிபல் அவர்கள்; அரசியல் சட்டத்தைக் காப்பாற்றிட பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் இப்படி கூறலாமா? சட்ட வல்லுநரான அவருக்கா நாம் சட்டத்தை நினைவூட்டுவது? வேதனை! வெட்க-மும்கூட!

3. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிகளில் இயங்கும் என்கிறார்.

அதேநேரத்தில், இங்குள்ள எல்லா நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் விரைவில் ஒழிக்கப்பட்டுவிடும் என்கிறார்!

இரட்டை அளவுகோலா? இது முரண்பாடா? அல்லது முன்னேற்பாடா? விளங்கவில்லை பல கல்வி அறிஞர்களுக்கும்!

இங்குள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (Deemed to be universites) கல்வியை வியாபாரமாக்குகின்றன என்று குற்றம் சுமத்துகிறார்.

அந்தப்படி எந்தப் பல்கலைக் கழகத்தில் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க யாரும் ஆட்சபிக்கப் போவ-தில்லை; கடுமையான சட்டம் வரும் நிலைகூட உருவாவதை நாம் வரவேற்போமே தவிர, (அரசியல் காரணங்களுக்காக அச்சட்டம் துஷ்பிரயோகம் பண்ணப்படாத பாதுகாப்பு அதனுள் அமைவது அவசியம் ஆகும்) யாரும் எதிர்க்க முடியாது!

4. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வசூலிக்கவிருக்கும் கல்விக் கட்டணங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இந்த அரசு சார்பில் கிடையாது; அவர்களுக்கு சம்பளம் நிர்ணயித்துக் கொள்ள முழு சுதந்திரம் என்று கூறப்படுகிறது.

இது சரியானது என்றால், இதைவிடக் கேலிக் கூத்து வேறு உண்டா?

வெளிநாட்டவர் கல்வி வியாபாரம் செய்யலாமா?

உள்நாட்டில் கல்வி வியாபாரமாவதைத் தடுப்போம். ஆனால், வெளிநாட்டவர் கல்வி வியாபாரத்திற்காகவே இங்கு வந்தால், அதைத் தடுக்கமாட்டோம் வரவேற்போம் என்பது சரியா? சமூகநீதியா?

அவர்கள் இலவச உயர்கல்வி தருவதற்காகவா இங்கு வந்து பல்கலைக் கழகங்களைத் தொடங்கத் துடிக்கின்றனர்? இல்லையே!

அந்நாட்டில் பொருளாதார மந்தம் (Depression) வேலையில்லாத் திண்டாட்டம்; அதிலிருந்து மீளத்தானே இங்கே படையெடுப்பு?

வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் அதிக சம்பளம் என்றால் பேராசிரியர்கள் எல்லாம் அங்குதானே வேலைக்குச் செல்லுவர்!

மற்றொரு பிரச்சினை,

5. அவர்கள் நாட்டுப் பணத்தின் மதிப்பில் நமது ரூபாய் குறைவு என்பதால், அவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது அவர்களுக்குச் சாதாரணம் ஆகும்.

அதிக சம்பளம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வேலை செய்தால் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், இங்குள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர்களில் பலரும் அங்கு வேலை பார்க்கத்தானே செல்லுவர்?

இங்குள்ள மாணவர்களுக்குப் போதிக்கத்தக்க ஆசிரியர்கள் கிடைப்பார்களா?

இந்தப் பிரச்சினை அனுபவம்மிக்க பல கல்வி வல்லுநர்களால் இப்போதே சுட்டிக்காட்டப்படுகிறது.

அனைத்துத் தரப்பினரும் கிளர்ந்து எழுக!

இதனை நாட்டின் எதிர்காலம், கல்வியின் எதிர்காலம்பற்றி உண்மையான அக்கறையும், கவலையும் உள்ள அத்துணைப் பேரும் மிகவும் ஆழமாகச் சிந்தித்து, தடுத்து நிறுத்திட வேண்டும். மாணவர் சமுதாயத்தின் வருங்காலத்தை சூதாட்டமாக்கிவிடக் கூடாது.

இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் எதிர்ப்பு என்பவை மட்டும் போதாது. அனைத்துக் கட்சியினரும் (ஆளும் காங்கிரசில் உள்ள சமூகநீதியாளர்களும்) உள்பட இதனை எதிர்த்திடத் தயங்கக்கூடாது! இதுபற்றி போதிய விழிப்புணர்வை ஆங்காங்கு மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திட பல்வேறு கல்வி அமைப்புகளும், கல்வி அறிஞர்களும் முன்வருதல் அவசியம் அவசரமும்கூட!

தலைவர்,
திராவிடர் கழகம்


********************************************************************************

முதலில் வாதாடுவோம், தேவைப்பட்டால் போராடுவோம்!

செய்தியாளர் கேள்வி: வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வரவை எதிர்த்துப் போராட்டம் நடத்துவீர்களா?

பதில்: முதற்கட்டமாக எதிர்ப்புக் கருத்தினை உருவாக்குவோம்; கல்வியாளர்களை அழைத்து கருத்தரங்குகளை நடத்துவோம்.

இப்பொழுதே கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

பெங்களூருவிலிருந்து வெளிவரும் டெக்கான் ஹெரால்டு ஏட்டில் முன்னாள் துணைவேந்தரும், கருநாடக மாநில உயர்கல்வித் துறைத் துணைத் தலைவருமான பேராசிரியர் எம்.அய். சவடட்டி (Sava Datti) சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

கே.என். பணிக்கர் போன்ற கல்வியாளர்கள் எல்லாம் கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.

அரசியலிலும், இடதுசாரிகளும், எதிர்க்கட்சியான பி.ஜே.பி.யும்கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆளும் காங்கிரசும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தாலும், அண்மையில் மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித்த அகில இந்திய ரீதியான புதிய கல்வித் திட்டத்தை தி.மு.க. எதிர்த்துள்ளது. இந்தப் பிரச்சினையிலும் உரிய முடிவை தி.மு.க. எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அறிஞர் அண்ணா சொன்னதுபோல, முதலில் வாதாடும் கட்டம் இப்பொழுது! அடுத்து போராட்டம் என்ற கட்டம் வரும். இது ஓர் அரசியல் பிரச்சினை அல்ல கல்விப் பிரச்சினை சமூகநீதிப் பிரச்சினை நாட்டின் தன்மானப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினை என்று பல அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.

இதில் கல்வியாளர்கள் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை.

பத்திரிகையாளர்களுக்கும் பெரும் கடமை உண்டு. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

(செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்,
சென்னை, 22.3.2010)


*************************************************************************************


முரண்பாடான முடிவு

உலக மயம், தனியார் மயம், தாராள மயம் என்று பொருளாதாரத்தில் அந்நிய முதலீடுகள் குவிந்து உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாழடித்தது போதாது என்று கல்வியிலும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவுக்குள் படையெடுக்க அனுமதிக்கப்படுகின்றன. காய்கறி விற்பனையில்கூட அம்பானிகள் புகுந்து ஆதிக்கம் செலுத்துவதுபோல, கல்வித் துறையிலும் அந்நிய ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கப் போகிறது.

ஒரு வெள்ளைக்காரன் போய், புதிய வெள்ளைக்காரர்கள் நுழைகிறார்கள்.

இதன்மூலம் 150 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னைப் பல்கலைக்கழகம் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன, கொச்சைப்படுத்தப்-படுகின்றன.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனு-மதித்தால் தகுதி நிலை மேம்படுத்தப்படும் என்று சொல்லப்படுமேயானால், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களோடு இணைப்பினை (ஜிவீமீஜீ) ஏற்படுத்திக் கொள்ளலாமே, அப்படி வந்தால் நம் நாட்டுச் சட்டங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தும். அதுபற்றி ஏன் சிந்திக்கக்கூடாது?

பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறி ஏற்கெனவே இந்தியாவில் இருந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கூடாது என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிகர்நிலை தகுதி அளிக்கப்படும் என்று கூறுவது முரண்பாடு அல்லவா!

(செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்,
சென்னை, 22.3.2010)


------------------------ "விடுதலை” 22-3-2010

1 comments:

Unknown said...

இப்போது உள்ள தனியார் பல்கலைகழகங்களில் இட ஒதுக்கீடு உண்டா.வீரமணி அதை தெளிவுபடுத்துவாரா.இது நான் கொள்ளை அடிப்பேன், அவனை கொள்ளை அடிக்க விடக்கூடாது என்ற தொழில் போட்டியின் அடிப்படையில் எழும் எதிர்ப்பு.நாளைக்கு கூட்டுக் கொள்ளைக்கு அரசு ஒப்புதல் அளித்தால் வெளி-நாட்டு பலகலையின் கூட்டுறவில் என்று விளம்பரம் செய்து இன்னும் அதிக பணம் கறக்க முடியும்.அப்போது அதை முதலில் வரவேற்பது வீரமணியாகத்தான் இருக்கும்.
பெரியார்-மணியம்மை பல்கலைகழகத்தில் இட ஒதுக்கீடு உள்ளதா?. கல்விக் கட்டணம் எவ்வளவு?.இதற்கும் பிற தனியார் கல்லூரிகளுக்கும் என்ன வேறுபாடு?.
ஏன் நிகர்நிலை தகுதியை அரசு கேள்விக்குறியாக்கியது.
இதற்கெல்லாம் பதில் வருமா