Search This Blog

23.6.15

ஒரு கோவிலையாவது பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா?- பெரியார்

காலத்திற்கேற்ப வாழுங்கள்!  


நம் கழகமும், நமது முயற்சியும், பிராசரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.

பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.

இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர்களாவோம். மற்ற நாட்டவரை விட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுகத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது.

நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம். நம்மில் 100-க்கு 10-பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100-க்கு 90-பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இல்லை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத்துறையில் கவலைப்படுவதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர்களாகி, பொதுவில் தலை தூக்க இடமில்லாமல் போய்விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு நமக்கு பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக் கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.

நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.

நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.

நம் கடவுள்கள் ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.

நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன.

ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்னவென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு, வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டு கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருக்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றத்தனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவைகளுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துக்கள்? அவைகளுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவைகள் மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாகிய ஆகிறவர்கள் யார்?
அவர்களுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?

நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா?

நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத்தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன். இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?

ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல்லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாக வேண்டும்.


நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப்பட்டவைகள், அல்லது கண்டுபிடிக்கப்பட்டவைகள், அல்லது நமக்குத் தெரிய வந்தவைகள். நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்டதாகும். நமது ஒழுக்கம், நீதி என்பவைகளும் அக்காலத்துக்கு ஏற்ப அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவையாகும்.

இன்று காலம் மாறிவிட்டது. இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு 20-ஆம் நூற்றாண்டுக்கு 4000-ஆம் 5000-ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒரு ஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள், மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிடமாவது உண்டா? நான் மதத்தின் மீது கடவுள் குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக்கப்பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.

இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படுவார்கள்.

உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.

இந்த மதத்தில் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

பெரிய அறிவாளிகள் கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?

கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தில் நீங்கள் விரும்பவில்லையா?

ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில் ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.

காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டா  

   
 ------------- தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு-”குடிஅரசு”15.01.1949  

12 comments:

தமிழ் ஓவியா said...

அட நடராஜா!

புதன், 24 ஜூன் 2015

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.

நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.

அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.

இதோ அந்த வரலாறு

முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும்,  பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.

தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.

கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.

ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).

இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா?      - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

பெண்களைக் கடத்திய மதபோதகர்

புதன், 24 ஜூன் 2015

திருச்சி, ஜூன் 24_ புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிட்டப்பா(வயது 48). இவர் விராலிமலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் விராலிமலை பகுதியில் விறகு வியாபா ரம் செய்து வருகிறேன். எனக்கு தனலெட்சுமி(45), மோகனா(38) என 2 மனைவிகளும், புஷ்ப லதா(27), ரேவதி(25), ராஜேஷ்வரி(19) பாக்கிய லெட்சுமி(17) என 4 மகள் களும் உள்ளனர். இவர் களில் புஷ்பலதாவுக்கும், ரேவதிக்கும் திருமணமாகி விட்டது. ராஜேஸ்வரி, பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் தனியார் கல் லூரியில் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த முத்து ஆப்ரகாம் என்ற மத போதகருக்கும், எனது மகள் ரேவதிக்கும் நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முத்து ஆப்ர காம் எனது மனைவிகள் தனலெட்சுமி, மோகனா, மகள்கள் ரேவதி, ராஜேஸ் வரி, பாக்கியலெட்சுமி ஆகியோரிடம் மூளை சலவை செய்துள்ளார்.

மேலும் நீங்கள் மதம் மாறினால் நன்றாக இருக் கலாம் என்று கூறி வீட்டில் வியாபாரத்திற்கு வைத்திருந்த ரூ. 8.6 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளுடன் அவர்களை கடத்திச் சென்று விட் டார். அவர்களை பத்திர மாக மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

இது குறித்து விசா ரணை நடத்திய விராலி மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வரு கிறார்கள். மத போதகர் ஒருவரே வியாபாரியின் 2 மனைவிகள், 3 மகள்களை கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் ஓவியா said...

துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லட்டும்!
வி.எச்.பி. சாமியாரிணி அடாவடிப் பேச்சு

புதுடில்லி, ஜூன் 24_ அதிரடி விவாதப் பேச் சைப் பேசிவரும்  விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் தலைவர்களில் ஒரு வரான சாமியாரினி பிராச்சி தற்போது மேலும் அடாவடித்தனமாகப் பேசியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலை வர் ஹமித் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்படா தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராச்சி யோகா தினம் ஒன்றும் திருமண நிகழ்ச்சி கிடை யாது; அழைப்பிதழ் வைத்து அழைக்க, அவரா கவே வந்து கலந்து கொள்ளவேண்டும். அப்படி பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்று துணைக் குடியரசுத் தலை வர் அமித் அன்சாரியைக் குறிப்பிட்டு அவர் கூறி யுள்ளார் மனங்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும் யோகாசனம் என்பது ஒரு தனிப்பட்ட மத நம்பிக்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

இந்தியாவில் உள்ள மக்களின் பாரம்பரியங் களுக்கும், கலாசாரங்களுக் கும் ஆட்சேபணை தெரி விப்பது ஒருபோதும் தேவையில்லாத செயலா கும். இந்த நாட்டின் நலனுக்காக அவர் (ஹமீது அன்சாரி) என்ன செய் துள்ளார் அவர் அந்தப் பதவியில் இருப்பதே எதற்காக என்று தெரிய வில்லை. இதை நானும் பல நாள்களாக பார்த்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச் சாரம் மற்றும் பாரம்பரி யத்துடன் முஸ்லிம்களே தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். அதை விடுத்து ஆட்சேபம் தெரி விக்கக்கூடாது என்றும், அப்படி ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இந் தியாவுக்குள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ் தானுக்கு போய் விடலாம் எனவும் சாமியாரிணி பிராச்சி கூறினார்.

தமிழ் ஓவியா said...

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!

இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.

பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!

இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.

உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)

இருதயம்:

எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.

நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.

கணையம்:

உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.

செரிமான உறுப்புகள்:

உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.

உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!

எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.

இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.

அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?

1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)

2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise

3. உடற்பருமன் - Obesity

4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்

இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.

தமிழ் ஓவியா said...

எதிலும் மதப்பார்வை என்பது ஆபத்தானது!


தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊடுருவ வேண்டும் என்ற திட்டத்தின்படி ராம் மாதவ் சிவ்பிரகாஷ் போன்றோர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி  பாஜகவில் இணைந்தனர். அதற்கு முன்வரை ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆந்திரக்காரர் இவர்.

முக்கியமாக ராம் மாதவ் பாஜகவில் இணைந்த உடனேயே பள்ளிக் கல்வியில் மாற்றம் குறித்த கூட்டத்திற்கு கலந்தாய்வு செய்ய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லாத பல இந்து அமைப்புகளின் தலைவர்களை அழைத்து ஸ்மிரிதி இராணியுடன் பேசச் செய்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடனான ஸ்மிரிதி இராணியின் சந்திப்பு முடிந்த பிறகுதான் சமஸ்கிருத பிரச்சினை வெடித்தது.    ராம் மாதவ் மத்தியில் உள்ள சிறுபான்மை இன அதிகாரிகளையும், உயர்பதவி வகிக்கும் பலரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து மத ரீதியாகவே விமர்சனம் செய்து வந்தார்.

ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் அமீத் அன்சாரி கொடிவணக்கம் செலுத்தவில்லை என்று கூறி பிரச்சினையைக் கிளப்பியதின் பின்புலத்திலும் ராம்மாதவ் இருந்திருக்கிறார்.  ராம்மாதவின் இதுபோன்ற மட்டமான செயல்களுக்கும் மோடி மறைமுக ஆதரவுஅளித்தார். ராம் மாதவ் எழுப்பும் எந்தவொரு செயலுக்கும் பாஜக தரப்பில் மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிப்பதில்லை. குடியரசு நாள் விழா விவாதத்தில்கூட துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் தான் விதிப்படி குடியரசுத் தலைவர் தலைமையில் நடக்கும் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் கொடிவணக்கம் செலுத்தக் கூடாது என்ற விதி உள்ளதைக் கூறியுள்ளது.  கடந்த ஞாயிறு அன்று  டில்லியில் நடைபெற்ற உலக யோகா நாள் நிகழ்ச்சிக்கு துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஏன் வரவில்லை என தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருந்தார்.

மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவரை சிறுபான்மை யினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மீண்டும் மீண்டும் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறார்கள். எதிலும் மதப் பார்வைதான் இந்த மதம் பிடித்தவர்களுக்கு. முதலில் யோகா நாள் விழாவில் கலந்துகொள்ள துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேயில்லை. இதற்கு ஆயுர் வேத அமைச்சகம் தெரிவித்துள்ள சப்பைக் காரணமானது பிரதமர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இது மிகவும் பொய்யான ஒரு தகவலாகும்; அரசின் சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். இது பாரம்பரியமாக இருந்துவரும் நடைமுறையேயாகும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி நேரில் சந்தித்து உலக யோகா நிகழ்ச்சிபற்றி உரையாடி அழைப்பிதழ் கொடுத்துள்ளார்; குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யோகா நாள் வாழ்த்துக்களும், அதற்காக சிறப்புரையும் ஆற்றினார். அப்படி இருக்க துணைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல்  இருந்துவிட்டு குட்டு உடைந்த பிறகு, ஒரு அமைச்சகமே இப்படி மக்களிடையே பொய் கூறியுள்ளது.

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டாமா? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்குத்தான் - இவர்கள் புளுகோ இரண்டு நாள்களுக்குத் தாங்கவில்லையே!

யோகாவுக்கு வராத துணைக் குடியரசுத் தலைவர் பாகிஸ்தான் செல்லவேண்டும் என்று வி.எச்.பி. முன்னணி தலைவரான பிராய்ச்சி சாமியாரிணி கீழ்த்தரமாகப் பேசியுள்ளார்! பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று இப்படி இந்தக் கூட்டம் அடிக்கடி கூறுவது - பக்கத்து நாட்டையும் பகைக்கும் தன்மையதே!

முதலில் துணைக் குடியரசுத் தலைவர் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று மேலும் ஒரு பொய்யைக் கூறிய உடன் தான் மத்திய அரசின் ஏமாற்றுவேலை வெளியே தெரியவந்துள்ளது.

ராம் மாதவின் இந்த பிரிவினைவாத நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறியதாவது, அன்சாரி புறக்கணிக்கப் பட்டதன்மூலம் பா.ஜ.க.வின் பிரிவினைவாத அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய ஆயுர்வேத அமைச்சர் சிறீபாத் நாயக் தெரியாமல் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், ராம் மாதவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இந்த இந்துத்துவாவாதிகளால் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களுக்கே இத்தகைய அவமானம் என்றால், பி.ஜே.பி. ஆட்சியில் சட்டம் ஒழுங்கையோ, மரபுகளையோ, நாகரிகத்தையோ எதிர்ப்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...

குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!


எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கியக் கடமையாகும். _ (விடுதலை, 9.5.1961)

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நடத்துகின்ற தகுதி யார் யாருக்கெல்லாம் உண்டு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு
கரூர், ஜூன் 24_ கரூர் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் திராவி டர் விழிப்புணர்வு 4ஆவது வட்டார மாநாடு வேலா யுதம்பாளையத்தில் பெரி யார் திடல், ச.சங்கரன் நினை வரங்கம் மலைவீதியில் நடைபெற்றன. நிகழ்ச்சி யில் ஆ.பழனிசாமி (பகுத் தறிவாளர் கழகம்) அவர் கள் அனைவரையும் வர வேற்று பேசினார். கரூர் ஒன்றியத் தலைவர் சு.பழனி சாமி தலைமையில் நடை பெற்ற மாநாட்டில் பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியின் தொடக் கத்தில் திண்டுக்கல் அழ கர்சாமியின் மந்திரமா? தந் திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டினார். சாமியார்கள் செய்யும் மந்திர வித்தை கள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றினைப் பற்றி எல்லாம் மந்திரம் அல்ல தந்திரமே என்று செய்து காட்டினார். மாநாட்டின் சிறப்புரையை தலைமைக் கழகப் பேச்சாளர் என்ன ரெசு பிராட்லா மத்திய, மாநில அரசுகளின் மக் கள் விரோத இந்துத்துவா கொள்கைகளை பரப்பும் செயல்களை கண்டித்துப் பேசினார். இறுதியாக கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசிய தாவது:_

நீதிக்கட்சி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி 100 ஆண்டு ஆகிறது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழாவை நடத்து கின்ற தகுதி திராவிடர் கழகத்திற்கும், திமுக, மதி முக போன்ற தோழமை கட்சிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாட தகுதி உள்ளது. பிஜேபியி னர் ராகுல் காந்திக்கு என்ன படிப்பு தகுதி உள் ளது என்று கேட்கின்றனர். ஆனால் பிஜேபி மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு என்ன கல்வித் தகுதி என்று காங்கிரஸ் கேட்டனர் பி.காம் என்று அமைச்சர் சொன்னார் ஹார்வர்ட் பல்கலைகழ கத்தில் நடந்த பயிற்சி முகா மில் 15 நாட்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கியுள்ளதை டிப் ளமோ படித்தேன் என்கி றார். உலகில் 53 இராமா யணங்கள் உள்ளது. ஜப் பான், இந்தோனேசியா, தாய்லாந்து, திபெத், இலங்கை போன்ற நாடு களில் ஒவ்வொரு இராமா யணக் கதை உள்ளன. இந் தோனேசியாவில் உள்ள இராமாயணத்தில் இரா மன் தலையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தாக அறிஞர் அண்ணா எடுத்து கூறி னார். கல்கியில் இராஜாஜி எழுதிய இராமாயணத் தில் எட்டாவது பக்கத்தில் இராமன் கடவுள் அல்ல கற்பனை கதை என்பதை மு.கருணாநிதி முரசொலி யில் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இராமாய ணத்தை முழுவதுமாக படித்தவர் பெரியார், இராஜாஜி இருவர் மட் டும் தான், உலகத்தில் மூன்று இனம் (வெள்ளை, கருப்பர் _ (நீக்ரோ இனம்), மாநிறம் (மங்கலான சிவப்பு) சாப்பிடவே வழி யில்லாமல் இருக்கும்போது யோகா ஒரு கேடா என் றார் லல்லுபிரசாத் யாதவ். தமிழகத்தில் இரண்டு முறை முதல்வர் பொறுப்பு வந்தும், வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் பெரி யார் என்று செயலவைத் தலைவர் பேசினார். இறுதியாக பெருமாள் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

யோகா திராவிடர் கலையே! ஆரியர்களுடையது அல்ல!

சூழ்ச்சியால், தங்கள் கலையாக்கிக் கொண்டனர்

பெங்களூரு மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல அதிரடி!பெங்களூரு ஜூன் 23_ யோகக்கலை திராவிடக் கலாச்சாரம் கொடுத்த கொடையாகும், அதை ஆரியர்கள் சூழ்ச்சி செய்து தனதாக்கிக் கொண் டார்கள்  என்று, நிடுமா முடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் திங்களன்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் நிடுமாமுடி மடத் தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது யோகா குறித்து அவர் கூறியதாவது:  யோகா கலை என்பது வாழ்வியல் தொடர்பான ஒன்று இது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்து தொடர்ச்சியாக திராவிட நாகரிகம் உள்ள இடங்கள் அனைத்திலும் வியாபித் திருந்தது. இது ஒரு தனிப் பட்ட இந்து மதத் துற வியோ அல்லது முனிவர் களோ வழங்கியது அல்ல, யோகாவிற்கும் ஆரிய வேத கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர் பில்லை. ஆரியர்கள் திரா விடர்களின் இந்த வாழ் வியல் கலையை தங்கள தாக்கிக் கொண்டனர். பிறகு அதனுடன் வேத ஸ்லோகங்களை இணைத்து அதை வேதகால கலையைப் போல் மாற்றிவிட்டனர்.   யோகா என்பது இந்து மத முனிவர்கள் அல்லது குருக்கள் கொண்டு வந்த கலை என்று தற்போது அதிகம் பேசப்பட்டு வரு கிறது. ஆனால் இது முழுவதும் பொய்யான ஒன்றாகும். யோகா கலையை வேதகாலத்தில் கற்றுக்கொண்டவர்கள் தங்களது மாணவர்களுக்கு இந்தக்கலை குறித்த பொய்யான தகவலைக் கூறிவைத்தனர். இந்த பொய்த்தகவல் காரண மாக பிற்காலத்தில் இது வேதமதம் தொடர்புடைய தாக மக்கள் நினைத்துக் கொண்டனர்.   யோகா என்பது மதம் தொடர்பானது அல்ல; இது மனித குலத்திற்குத் தேவையான நல்ல ஒரு மென்மையான உடற் பயிற்சியாகும். மனவளம் பெறவும் யோகா மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது சிலர் யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி, பணம் பார்க்கும் தொழிலாக  மாற்றிவிட்டனர். யோகாவின் மூலம் பணம் பார்ப்பவர்களால் எப்படி மக்களைத் தெளிவாக வைத்திருக்க முடியும்? இந்துத்துவ அமைப் புகள் வலுக்கட்டாயமாக யோகாவை பிறரிடம் திணிக்க முயற்சிக்கிறது. இந்துத்துவ அமைப்பு களின் பிடியில் இருந்து யோகா விடுதலை பெற்று அனைவரிடமும் போய்ச் சேரவேண்டும் என்று, நிடுமாமுடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கவனிக்கவேண்டும்

மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும் அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா, நீங்காதா என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
_ (விடுதலை,3.12.1962)

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்திய அதிகாரிக்கு மன்னிப்பாம்!


சென்னை, ஜூன் 23_ தமிழகத்தின் டெல்டா மாவட் டங்களில் பாசனத் துக்கு தேவையான தண் ணீர் இல்லை. எனவே, பயிர்கள் கருகும் நிலை உருவானது. எனவே, திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், 30 உப கோட்ட அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், மழை வேண்டி ஒவ்வொரு அலுவலகம் சார்பில் அந்தெந்த பகுதிகளில் உள்ள கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி திருச்சி மண்டலத்தில் 30 கோயில்களில் சிறப்பு யாகம் நடந்தது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், பொதுப் பணித் துறை தலைமை அறிவுரை இல்லாமல் அந்த தலைமை பொறியாளர் தன்னிச் சையாக யாகம் நடத்த உத்தர விட்ட தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு பொதுப் பணித் துறை தலைமை அறிவிக்கை அனுப்பியது. இந்த நிலையில், அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொதுப் பணித் துறை தலை மைக்கு உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து அந்த தலைமை பொறியாளரை அழைத்து விளக்கம் கேட்டதுடன், அவரை மன்னித்து அனுப்பிவிட்டது.

இதுகுறித்து பொதுப் பணித்துறை உயர் அதி காரி ஒருவர் கூறும் போது, மழை வேண்டி யாகம் நடத்த உத்தர விட்ட பிரச்சினையில் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்ப தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுதொடர்பாக மேலிடம் தலையிட்டு தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தர விட்டதால் அவரிடம் விளக்கம் மட்டும் கேட்கப்பட்டது.

தொடர்ந்து பொதுப் பணித்துறை தலைமை அனுமதி இல்லாமல் இனிமேல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்ற அறிவுரையும், மன்னிப்பும் வழங்கியது பொதுப்பணித் துறை என்றார்.

தமிழ் ஓவியா said...

கீதைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு!கீதை மனிதநேயத்தை சிதைக்கிறது, அரசு அலுவலகங்களில் பகவத் கீதை படிக்க கொடுப் பது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும் என்கிறார்- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ்விக்.

அமெரிக்க ஆளும் கட்சியின் இடஹோ மாகாண உறுப்பினர் தனது மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதைவகுப்பு  குறித்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இந்து மதம், மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை மய்யமாகக் கொண்டது, பகவத் கீதை ஜாதியை வலியுறுத் துகிறது மனித நேயமற்ற கருத்தை வலியுறுத்தும் ஒரு மதவழிபாடு இங்கு நடைபெறுமாயின் அது அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்று கூறினார்.

அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத் கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர் களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ் விக் கூறியதாவது:  அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும்  அரசு அலுவலகங்களில் பகவத் கீதைவகுப்பு களுக்கு அனுமதியளிக்கக்கூடாது.

மேலும் இந்து மதம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மத பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது.

அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகை யால் அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை, பகவத் கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது,

பிறப்பால் ஜாதிபாராட்டும் நூல் பகவத் கீதை, பிறப்பால் ஒருவரை ஜாதிகளாகப் பிரிக்கும் மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத் கீதை என்ற நூல் வலியு றுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும், அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக்கூடாது என்று கூறி இந்து மதவழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் அவர் முகநூலில் எழுதியுள்ளதாவது, இந்து மதவழிபாட்டை ஆதரித்துதான் இந்திய நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனது கருத்துகள் இந்தியாவில் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட லாம். அதுகுறித்து, நான் கவலைப்படமாட்டேன். எனது கருத்துகளை மனிதநேயமுள்ள இந்தி யர்கள் பாராட்டுவார்கள் என்று தனது முக நூலில் எழுதியிருந்தார்.

தமிழ் ஓவியா said...

மூளையின் அதிசய செயல்பாடுகள்மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒரு பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும்.

மிகவும் சோர்வாக இருக் கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள். நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

* மனஉளைச்சல் மூளையை சுருங்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும்.

* ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாக செய்தால் நிறைய சாதிக்கலாம்.

* சின்னச்சின்ன தூக்கம். அதாவது, பத்து நிமிடம் கண்மூடி அமைதி யாக இருப்பது மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டும்.

* ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை நினைவுகளை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிக மாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 அல்லது- 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது. படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது என்று நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள்.

காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள். பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9 முதல் 11 மணி ஆகும். மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும்.