Search This Blog

21.6.15

ஆட்சி புரிவது அரசியல் அல்ல; மத, சமூக, ஜாதி இயல்களே!-பெரியார்

ஆட்சி புரிவது அரசியல் அல்ல; மத, சமூக, ஜாதி இயல்களே!

  
தோழர்களே! வரவேற்பு மடலில் முதலாவது அரசியல், மதம், சமுதாயம் ஆகிய துறைகளில் புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

உண்மையிலேயே இத்துறைகளில் தொண்டாற்றி வருகின்றேன் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் அரசியல் என்று ஒன்று இல்லை என்று கருதுகிறவன். அதற்கு மாறாக மத இயலும், சமூக இயலும்தான் ஆட்சி புரிகின்றன என்றுதான் கூறவேண்டும்.

அரசியல் என்பது மத ஆட்சிக்கு அல்லது சமுதாய ஆட்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட சொல் ஆகும். இது சரித்திர காலம் தொட்டே இப்படி நடந்து வருகின்றது.

மக்களுடைய நலனுக்காக இன்ன கொள்கையைப் பொறுத்து ஆள்வது என்று புராணக் காலங்களிலும் இல்லை. அடுத்த சரித்திரக் காலங்களிலும் இல்லை. இந்த நாட்டு அரசுகள் எல்லாரும் தம் சொந்த புத்தியைக் கொண்டு ஆண்டது இல்லை.

அடுத்து முஸ்லிம்கள் ஆண்டார்கள் என்றால், அவர்கள் தங்கள் மதம், தங்கள் ஜாதி இதன் பெருமையைக் கருதி ஆண்டார்களே ஒழிய, மக்களுக்காக இன்னக் கொள்கை என்று வகுத்து ஆளவில்லை அப்படி ஆண்டதாக ஆதாரம் காட்ட முடியாது.

அடுத்து வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் என்ன நடந்தது? அவன் படித்தவன் நாகரிக நாட்டான் என்று கூறப்படுபவன். அவன் 200-ஆண்டுகள் ஆண்டுங்கூட நம் மக்களின் அத்தியாவசியம் ஆன குறைகளைப் போக்க முயலாமல் தங்கள் ஆட்சியைத் தொல்லை இல்லாமல் நடத்த யார் யார் தங்களுக்குப் பயன்பட்டார்களோ அந்தக் குறிப்பிட்ட மேல்ஜாதிக்காரர்களின் நலத்திற்குத்தான் வழிவகை செய்தான். 

எவனாவது மனித தருமத்தின்படி - நியாய முறைப்படி ஆண்டு இருப்பானேயானால் இப்படி 100-க்கு 80-பேர் தற்குறிகளாகவும், 100-க்குத் 97- பேர்கள் இழி மக்களாகவும் இருந்திருக்க மாட்டார்கள். உலகில் எந்த நாட்டிலும் இதுபோலத் தற்குறிகளும், அந்த நாட்டுக்கே சொந்தமான மக்கள் இழி மக்களாகவும் இருக்கவில்லை. இந்த நாட்டில்தான் இந்த அவல நிலை இருக்கின்றது.

நம் மதம் போல உளுத்துப்போன மதம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. இந்த உளுத்துப்போனக் காட்டுமிராண்டி இந்து மதம்தான் நம்மை இன்று ஆட்சி செய்கின்றது.

அடுத்து ஜாதி முறை. இது உலகிலேயே எங்கும் இல்லாத ஜாதி முறையாகும். மோசடியானதும், காட்டுமிராண்டித்தனம் ஆனதும், கொடுமை ஆனதும் ஆகும். இந்தச் சாதி முறைக்கும், மதத்திற்கும் பாதுகாப்ப அளிப்பதுதான் இன்றைய ஆட்சியின் சட்டமாக உள்ளது.

இந்த நாட்டில் உண்மையிலேயே ஒரு மனிதன் பொதுத் தொண்டாற்ற வேண்டும் என்று கருதுவானேயானால் அவன் முதலாவதாகக் செய்ய வேண்டிய முக்கியத் தொண்டு ஜாதியை ஒழிக்கப் பாடுபடுவதும் மக்களின் இழி நிலையையும் மடமையையும் ஒழிக்கப் பாடுபடுவதும் ஆகும்.

மற்றத் தொண்டுகள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புத் தொண்டுகளாகும். சும்மா வியாபாரத் தொண்டு மாதிரியாகத்தான் கூறுவேன். மற்றத் தொண்டுகள் செய்ய வேண்டுமானால் நாட்டில் ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் எங்கள் தொண்டுகள் செய்ய எங்களைத் தவிர வேறு யாரும் முன் வருவதும் இல்லை. வந்தாலும் மிஞ்சுவதும் இல்லை. எங்கள் தொண்டில் ஈடுபட்டால் பொதுமக்களை அணுகி ஓட்டுப் பெற முடியாது. இதன் காரணமாக எவரும் இந்தத் துறைக்கு வருவது இல்லை.

அடுத்து உள்ள வரவேற்புப் பத்திரத்தில் அந்நிய ஆட்சியை அடியோடு அழிக்க அரும்பாடுபட்டதாகக் குறித்து இருகின்றீர்கள். இது மிகவும் முட்டாள்தனம் என்றே கருதுகின்றேன். நாம் தற்குறிகளாக இருக்கும்போதே - அறிவு பெறுவதற்கு முன்னமேயே அநியாயமாக மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளத்தான் இந்தச் சுதந்திரம் பயன்பட்டது என்று கூறுவேன்.

சுதந்தர, ஜனநாயக ஆட்சியில் தான் ஜாதியை - மதத்தைக் காப்பாற்றப்படும் என்று அரசமைப்புச் சட்டம் உள்ளது.

நாட்டில் இன்றையத் தினம் மக்களிடத்தில் உள்ள கட்டுப்பாடுகள், கிளர்ச்சிகள் இருப்பதற்கு வெளிநாட்டுக்காரனாக இருந்தால் கட்டாயம் ஜாதியையும் மதத்தையும் ஒழித்து இருப்பான். இந்த இந்திய ஆட்சி ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதால் தான் இவற்றை ஒழிக்க முடியவில்லை.

ஜாதியை, மதத்தை, சாஸ்திரத்தை ஒழிக்கக் காரணமாக உள்ள எனக்கு இப்படி வரவேற்புக் கொடுத்துள்ளீர்கள். இந்தப் பணிக்கு உற்சாகப்படுத்துகின்றீர்கள்.

மற்ற நாட்டார்கள் போல நாமும் (தமிழர்களும்) சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும். நாம் இந்த 20-ஆம் நூற்றாண்டிலும் ஆமை வேகத்தில்தான் போய்க் கொண்டு இருக்கின்றோம். சீக்கிரம் போய் மற்ற நாட்டார் நிலையினைப் பிடிக்க வேண்டும்.

இன்றைய விஞ்ஞான - அதிசய - அற்புதக் காலத்தில் மணிக்கு 20.000, 25.000- மைல்கள் மனிதன் பறக்கும் சக்தியைப் பெற்றுவிட்டான். நாய்க் குட்டி எல்லாம் சந்திர மண்டலத்துக்குப் போய் உயிருடன் திரும்பி வந்துவிட்டது. அடுத்து மனிதனே போகப் போகின்றான். நம்முடைய அறிவின் நிலையோ மிகமிகப் பாதாளத்திலேயே இன்னும் உள்ளது.

உலகில் மனிதன் மற்ற ஜீவராசிகளை (உயிர்ப் பிறவிகளை) விடச் சிறந்தவனாகக் கருதப்படுவது அவன் எல்லையற்ற சக்தி அறிவு பெற்று இருப்பதால்தான்.

மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவினைப் பயன்படுத்தி மிகமிக முன்னுக்கு வந்திருக்கின்றான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டு இருக்கின்றான்.

இங்கு நாம் "ஞானபூமி", "வெங்காய பூமி" என்று சொல்லிக் கொண்டு செய்த காரியம் என்ன? கோயில் குளம் கட்டுவதும், சாமி சோறு கேட்கின்றது, சாறு கேட்கின்றது, பெண்டாட்டி - தேவடியாள் கேட்கின்றது என்று கூறிக் கொண்டு, தூக்கித் திரிந்து கொண்டு தானே உள்ளோம்?

நாம் துணிந்து இப்படிச் சமுகக் கேடானவைகளை எல்லாம், அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் மாற்ற வேண்டும். இப்படிப்பட்ட நகராட்சியில் அங்கம் வகிப்பவர்களும், இளைஞர்களும், துணிந்து இந்தத் துறையில் இறங்கிப் பாடுபட வேண்டும்.

இன்று இதற்குமேல் அரசியலில் என்ன வேண்டியுள்ளது? இதற்கு மேலே சுதந்திரம் வர வழியும், நியாயமும் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக்கூட ஓட்டு அளிக்கப்பட்டு உள்ளது. எவன் வேண்டுமானாலு; - ஓட்டர் லிஸ்ட்டில் (வாக்காளர் பட்டியல்) பேர் உள்ளவன் தேர்தலில் நிற்கலாம்; பதவிக்கு வரலாம் என்று உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்?


      ----------------------------- 25.03.1961- அன்று கோவையில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. ”விடுதலை”, 02.04.1961

13 comments:

தமிழ் ஓவியா said...

யோகா செய்தால் பசி எடுக்காதா ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
யோகா , பிராணாயாமம், தியானம் இவை சர்வரோக நிவாரணியாக தற்போது விற்கப்படுகிறது . பரபரப்பும் பதற்றமும் மிகுந்த இன்றையச் சூழலில் இவற்றின் அவசியத்தை யாரும் குறைத்து மதிப்பிட இயலாது ; ஆனால் இவை குறித்த பார்வை மிகவும் பழுதுபட்டதாக உள்ளது. ஆன்மிக மத மயக்கம் தருவதாகவும் , ஃபேக் சயின்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் போலி அறிவியல் சாரத்தோடும் சந்தைப்படுத்தப்படுகிறது. “ யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை ” என்கிற இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.
யோகா என்பது உடற்பயிற்சி போன்றதே , ஆனால் இது உள்ளுறுப்புகளுக்கான பயிற்சி. இது பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியோடு இணந்தது. தியானம் எனப்படுவது உள்ளத்தை அதாவது சிந்தனையை ஒருமுகப்படுத்தும் பயிற்சியாகும் . இவை அனைத்தும் உடல் நலனுக்கு அவசியமானது.இதில் யாருக்கும் ஐயமில்லை. இது அனைத்து பிரிவு மக்களுக்கும் உரியதாகும். ஆனால் இதனை மதத்தோடு சேர்த்து பிசைவது தேவயற்றது.பொருளற்றது.
இந்நூலில் முன்னுரை தொடங்கி முதல் எட்டு அத்தியாயம் முடிய 47 பக்கங்கள் பார்வைக்கோளாறு மிகுந்தவையாவேஉள்ளன. யோகா கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு கடவுள் நம்பிக்கையளிப்பதாக் கூறுவதும் ; இந்து தர்ம நெறிகளைக் கொண்டு அமையப்பெற்றதாகக் கூறுவதும் ; ஆத்ம தரிசனம் , ஆன்மிகத்தேடல் என்றெல்லம் ஜோடனை செய்வதும் அனைத்துபகுதி மக்களும் இதனை பயில மனத்தடைகளை உருவாக்கிவிடும்.
“ பசிக்கும் பொழுது உணவு கிடைக்காமல் போனால் தொண்டைகுழியில் சம்யமம் செய்தால் பசிதாகம் அற்றுப்போய் விடுகிறது ” [ பக்கம் 27 ] தாரணை , தியானம் , சமாதி மூன்றும் சேர்ந்தால் சம்யமம் என்கிறார் நூலாசிரியர் . இந்த வாதம் பகுத்தறிவுக்கு உகந்ததா ? பசிப்பிணிக்கு இது தீர்வாகுமா ? அது போல் , “ இறையருளையும் , உலகில் பொருளையும் ஒருங்கே பெற யோகாசனக்கலை மிகவும் உதவும் ” [ பக்கம் 11 ] என்கிறார். யோகா உடல் நலம் சார்ந்தது . அதற்கும் மேல் பொருளீட்ட உதவும் என்பது எப்படி சரியாகும் ? நூலாசிரியர் யோகா பயிற்சியளிப்பதன் மூலம் பொருளீட்டலாம் ; ஆனால் அது பொது நியதியாக முடியாது .

தமிழ் ஓவியா said...

“ மனம் புருஷனில் அடங்காத பூவை [ பெண் ] போல ..” என்றும் , பரமார்த்திக வாழ்வு எனபடும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட வாழ்வு இருப்பதாகவும் , ஸ்துல சரீரம் , சூக்‌ஷ்ம சரீரம் , காரண சரீரம் , மகாகாரண சரிரம் என்றெல்லம் அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியாத விவகாரங்களைக் கூறுவதும் , நூலாசிரியரின் அறிவியல் பார்வைக் குறைவையும் சமூக சிந்தனையின்மையையும் சுட்டுகிறது.
உடற் பயிற்சியும் யோகாசனமும் எதிர் எதிரானது அல்ல ; மாறாக ஒன்றோடொன்று நெருக்கமானது . பின்னிப் பிணைந்தது.ஆனால் நூலாசிரியர் இவற்றை எதிர் எதிராக நிறுத்துவது ஆபத்தான பார்வையாகும். மேலும் உடற் பயிற்சியால் அவசர புத்தியும் குறுக்கு புத்தியும் ஒழுக்கக்கேடும் எற்படும் என்பதும், பிற்போக்கு சிந்தனைகளும் சுயநல எண்ணங்களும் பேராசைகளும் பெருகும் என்பதும் அடிப்படை ஆதாரமற்றதாகும். அது போல் யோகாசனத்தால் முற்போக்கு சிந்தனைகளும் பொதுநல எண்ணங்களும் ஒழுக்கமான வாழ்க்கையும் பெருகும் என்பதும் அதீத கற்பனையே ! வெறும் விளம்பரச் சொல்லாடலே.
சுரப்பிகள் குறித்தும் உளவியல் குறித்தும் சில அறிவியல் தகவல்கள் இந்நூலில் விரவப்பட்டிருந்தாலும் பொதுவில் ஃபேக்சயின்ஸாகவே இந்நூல் அமைந்துள்ளது.உப்பு, சர்க்கரை , முட்டை , அரிசி , பால் என ஐந்தையும் தவிர்க்கச் சொல்வது மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது. யாருக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவர் தாம் முடிவு செய்யவேண்டும் . பொதவாகக் கூறுவது பிழையாகும் . மேலும் ஊட்டசத்து குறைவாக உள்ளோர் அதிகம் வாழும் நாட்டில் பாலையும் முட்டையையும் தவிர்க்கச் சொல்வது சமூகவிரோதப் பார்வையாகும்.
இப்படி பழுதான பார்வையைப் பேசும் முதல் 47 பக்கங்களைத் தொடர்ந்து யோகா செயல் விளக்கம் உள்ளது. அது குறித்து அத்துறை விற்பன்னர்கள் மட்டுமே கருத்துக் கூற இயலும். பாமரப் பார்வையில் பயனுள்ளதாகவேப் படுகிறது. ஆயினும் எல்லா யோகாசனத்தையும் எல்லோரும் செய்யக்கூடாது என்பதை வல்லுனர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இதயநோய் உள்ளவர்கள் செய்யக்கூடாதவை, கற்பிணிப்பெண்கள் செய்யக்கூடாதவை என விதிவிலக்குகள் உண்டு.ஆனால் இந்நூலில் அந்தத் தெளிவு இல்லை.
யோகாசனக் கலை என்கிற பெயரில் திசைதிருப்பும் இந்துத்துவ முயற்சிகளுக்கு இந்நூல் துணை போகிறதோ என்கிற ஐயம் இந்நூலை வாசிக்கும்போது ஏற்படுகிறது . இது போல் யோகா குறித்து வெளிவந்துள்ள எண்ணற்ற நூல்களையும் அறிவியல் கண்கொண்டு பார்கத்தவறினால் நம்மையறியாமலேயே நாம் இந்துத்துவ மாயையில் வீழ்ந்துவிட நேரிடலாம்.
யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை,
ஆசிரியர்கள் : கே . எஸ் . அழகிரி , திருமதி சிவகாமி,
வெளியீடு : நர்மதா பதிப்பகம்,
10, நானா தெரு , பாண்டி பஜார்,
தி.நகர் , சென்னை 600 017.
பக் : 164 , விலை : ரூ. 120.
குறிப்பு : இந்த நூல் விமர்சனம் இன்று காலையில் எழுதியதல்ல 2013 ஜூலை மாதம் எழுதியது .. தீக்கதிரிலும் வெளிவந்துள்ளது .. மோடியில் யோக பஜனையையொட்டி இதனை மறுபடியும் நினைவூட்டுகிறேன்…

தமிழ் ஓவியா said...

மக்கள்மீது யோகா பெயரில் இந்து மதத்தைத் திணிப்பதா?

மோடிமீது பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்குபாட்னா ஜூன் 21 யோகாக்கலையை பரப்பு பவர்கள் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே வலி யுறுத்துகிறார்கள், நாடெங்கும் உள்ள யோகா குருவென்பவர்கள் மதம் சார்ந்தவர்கள். இதை நன்கு அறிந்து கொண்டே மோடி நாட்டு மக்கள் மீது யோகா என்ற பெயரில் இந்து மதத்தை திணிக்கிறார் என்று தேவேந்திரகுமார் சிங் என்பவர் பாட்னா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பன்னாட்டு யோகா நாளாக இன்று (21.6.2015) நாடு முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது, ஆரம்பம் முதலே மோடி தலைமையினாலான பா.ஜ.க. அரசு நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தும் அதை மக்களி டம் மறைக்கும் வகையில் யோகா நாளை பெரும் பொருட்செலவில் கொண் டாடி வருகிறது.

முக்கிய மாக யோகா தினத்தில் இந்துமத ஸ்லோகம் சொல்லவும் சூரியநமஸ் காரம் செய்வது குறித்த அரசின் சுற்றறிக்கைக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், சூரிய நமஸ்காரம் மற்றும் இந்துமத சுலோகம் தேவையில்லை என்று பின் வாங்கியது. பன்னாட்டு யோகா நாளுக்கு கொடுத்த விளம் பரம் மற்றும் யோகா செய்யப் பயன்படும் பல்வேறு பொருட்களில் மதத்தைக் குறிப்பிடும்படி யான நிறமும் படங்களும் அமைந்திருந்தன. இதனால் யோகா என்பது மதம் சார்ந்த ஒன்று எனவே இதைச் செய்பவர்கள் அனைவரும் அந்த மதத்தவர் என்ற ஒரு நிலையை மறைமுக மாக உருவாக்கும் நோக் கத்திலேயே மோடி தலை மையினாலான அரசு செயல்பட்டுவருகிறது என்று கூறி பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவேந்திரக் குமார் சிங் குற்ற வழக்கு ஒன்றைத் மோடி மீது தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்து மதக் கொள்கைகளை மறைமுகமாக மக்களிடம் திணிப்பதற்கு மோடி மற்றும் அவருக்கு உடந் தையாக இருக்கும் பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இவர்கள் மீதும் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இதுகுறித்து பாட் னாவில் தேவேந்திர குமார் சிங் கூறியதாவது : ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா நாள் கொண் டாடப்படுகிறது, இதில் முழுக்க முழுக்க மக்கள் பணம் விரயம் செய்யப் படுகிறது. மத்திய அமைச் சர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெயரில் அரசுப் பணத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் இஸ் லாமியர்களின் வழிபாட்டு முறை, கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறை எல் லாம் யோகாவில் இருந்து உருவானது தான் என்று கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அந்த நூலில் யோகா இந்து மதத்தின் வழிபாட்டு தெய்வம் தான்(சிவன்) தலைமை யோகா குருவென் றும் அந்த தெய்வம் தான் யோகக்கலையை கற்றுக் கொடுத்தது என்றும் எழுதப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினத்தவரின் மதவழி பாட்டை இந்து மதவழி பாடு போன்று காட்டுவது போல் உள்ளது, சிறு பான்மை மதத்தவரின் வழிபாட்டை கிண்டல் செய்வது போலவும் உள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக அரசு அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் நாளேடுகளில் விளம்பரம் கொடுத்துவரு கிறது, இதற்கு கோடிக் கணக்கான ரூபாய் செல விடப்படுகிறது, நாட்டில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு பணம் இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் கூறிக் கொண்டு யோகா போன்ற அத்தியாவசிய மற்ற செயல்களுக்கு பணத்தை விரயம் செய்வது மக்கள் விரோதச் செயலாகும். இது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இந்த மனு குற்றவியல் தலைமை நீதிபதி பரத்பால்சிங் திங் களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது.Read more: http://www.viduthalai.in/e-paper/103651.html#ixzz3dhMS1x5d

தமிழ் ஓவியா said...

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அலட்சியம் செய்து யோகா நிகழ்ச்சி நடத்திய அமித்ஷா

பாட்னா. ஜூன் 21 உலக யோக நாளை ஒட்டி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய் யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இந்த உத்தரவை மதிக்காமல் பிகார் தலை நகர் பாட்னாவில் பி.ஜே.பி. கட்சித் தலைவர் அமித்ஷா யோகா நாள் நிகழ்ச் சியைக் கொண்டாடினார்.
பிகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வருவ தால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமு லில் உள்ளது. இந்த நிலை யில் தேர்தல் ஆணையர் பிகார் அரசியல் கட்சி களுக்கான சில விதி முறைகளை வகுத்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையர் அஜய் வி நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ள தாவது: அரசியல் கட்சிகள் யோகா நாளை தங்களது அரசியல் கட்சியின் லாபத் திற்காக பயன்படுத்துவது போல் தெரிகிறது. இது குறித்து தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே விதி முறைகளை வகுத்துள் ளது. மருத்துவ சேவை, பேரிடர் காலத்தில் மீட் புப்பணி, கலவரம் மற்றும் பள்ளி கல்லூரி விழாக்கள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிப் பெயரையோ, சின்னங்களையோ பயன் படுத்தக் கூடாது. அதே நேரத்தில் மறைமுகமாக வும் கட்சிபிரச்சாரப் பணிகளை இங்கு மேற் கொள்ளக்கூடாது. இது குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக் கும் துணை தேர்தல் ஆணையர்களுக்கு கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். மேலும் அரசியல் கட்சி கள் நடத்தும் யோகா நாள் நிகழ்வை காணொ லிகள் மூலம் கண்கானிக் கவும் உத்தர விட்டுள்ளோம்.

பாட்னாவில் உள்ள தொண்டு அமைப்பு ஒன்று டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள் ளது. அதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு யோகா நாளை தங்களது தேர்தல் விளம் பரத்திற்காக பயன்படுத் தும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பிகார் மாநிலம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் யோகா செய்வதை தடை செய்யவேண்டும் என்றும் யோகா நாளின் போது அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தப் புகார் மனுவில் குறிப் பிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை மீறி அமித்ஷா பாட்னாவில் உள்ள மைனல் திடலில் நூற்றுக் கணக்கான பா.ஜ.க. தொண் டர்களை அழைத்துக் கொண்டு யோகா நாள் கொண்டாடினார். இதில் பிகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிகாரில் உள்ள அனைத்து தொலை காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இதற்காக பிகார் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் களை செலவழித்துள்ளது.Read more: http://www.viduthalai.in/e-paper/103654.html#ixzz3dhMhrBRM

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் கண்ட கனவான பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்கவிஞர் கனிமொழி பேச்சு
திருவண்ணாமலை, ஜூன் 21_ பெண்களுக்கு சொத்தில் சம உரிமையைத் தந்து, அதை சட்டமாக இயற்றியவர் திமுக தலைவர் கலைஞர் என்று திமுக மகளிரணி செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனி மொழி கூறினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா, பாட்டு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவ லகத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலா ளருமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.
மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பாளர் உ.நித்யா முன்னிலை வகித் தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.

பாட்டு பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்து கனி மொழி பேசியதாவது:
சமுதாயத்தில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
குடும்பத் தலைவியாக இருந்தாலும் கூட, அவர் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்புக்கு பொருளாதார ரீதியாக கணக்கிட்டால்

உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. படித்தப் பெண்கள் போராட வேண் டும். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
அப்படி கேட்கும்போது தான் இந்த சமுதாயம் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும். 1929-இல் செங்கல்பட்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிட இயக்க மாநாட்டில் பெண் களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்றத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானத்தை தனது 65-ஆவது வயதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, பெரியார் கண்ட கனவை நிறைவேற் றியவர் கலைஞர். திருக் குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக் கியங்களையும் மக்களிடம் கொண்டு சென்றவர் கலைஞர் என்றார்.

திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாளை யொட்டி, திருவண்ணா மலை ஜீவா வேலு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1,092 மரக்கன்றுகள் நடும் விழா, கீழ்கச்சிராப்பட்டு ஊராட் சியில் கம்பன் மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாக்களில் கனிமொழி கலந்து கொண் டார். பின்னர், திருவண் ணாமலையை அடுத்த மெய்யூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு 1,092 மரக்கன்றுகளை நட்டார்.

குடும்பத்துக்கு ஒரு தென்னங்கன்று வீதம் வழங்கி அந்தக் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துக் கொண்டார்Read more: http://www.viduthalai.in/page-7/103680.html#ixzz3dhNtn1fW

தமிழ் ஓவியா said...

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட்மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல்களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதுக்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.

பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பி ராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்ட தாகவும் தெரியவருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுதானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. தலதாபன நிர்வாகங் களில் காண்ட்ராக்ட்டு வேலைகளும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்ப தினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன.

இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும்,  கவுன்சிலர்களுக்கும், மெம்பர் களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகிவிடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடம் இருக்காது.

ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரியமேற்படும். ஆகவே, முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ,

ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934

தமிழ் ஓவியா said...

அடைய முடியும்

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
(விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...

எதிலும் அளவறிந்து வாழ்வோம் (2)


எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.

மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.

இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.

எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!

உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!

உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.

குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?

இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!

சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.

‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.

நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)

பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.

இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)

பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.

எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!

அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)

பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.

குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?

அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!

கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.

அப்போது விளங்கி யாருக்குப் பயன்?

“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”

ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!

எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

 

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

ஓரணியாய் திரள்வோம் - சமூகநீதி காப்போம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில், புதுமைப்பித்தன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனை முத்துக்கள், காண்டேகரின் கருத்துமழை ஆகிய இலக்கியச் சுவை பகுதிகளை, அவரும் சுவைத்து நம்முடன் பகிர்ந்தளித்த மாண்பை மிகவும் ரசித்துப்படித்து உணர்கிறேன். இனமானப் பேராசிரியரைப் பார்க்கச் சென்றபோது பெற்ற இதயம் காக்க, நூலைப்படித்து எமக்குத்தந்த குறிப்புகள் மிகச்சிறப்பாக பயன் தருகிறது. புத்தகத்தை வாங்கிப்படிக்க ஆர்வம்.

புதுமைப்பித்தன் சிந்தனைச் சுவைகளைத் தொடுத்து பெரியார் புத்தக நிலையம் வெளியிடலாமே. இதயம் காக்க நூலையும் வாங்கி விற்பனை செய்யலாமே.

தாலி அகற்றும் நிகழ்ச்சியன்று நடந்த மதவாதிகளின் தாக்குதலை சந்திக்க உருவாக்கப்பட்ட வழக்கு நிதிக்கு, தந்தை பெரியாரின் உழைப்பால் சகிப்புத் தன்மை நிறைந்த தியாகத்தால் பெற்ற இடஒதுக்கீடு காரணமாக அரசுப் பணியில் உள்ள பார்ப்பனரல்லாத பணியாளர்கள், வழக்கு நிதியை வழங்கிட முன்வர வேண்டும்.

மய்ய, மாநில அரசுகளின் முன்னணித் துறைகளில் மறுக்கப்படுகின்ற சமூக நீதியை ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக மட்டுமல்ல நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கேட்கவும், கழக வழக்குரைஞர்கள் சட்டத்தின் சரத்துகளை வைத்து வாதாடி வென்றிடவும் வழக்குநிதி நிறைய தேவைப்படுவதாக உணர்கிறோம். தங்களால் இயன்ற நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டுகிறோம்.

உயர்நீதிமன்றம், அய்.அய்.டி. நியமனம், அஞ்சலகங்கள், விமான நிலையங்கள், வானிலை ஆய்வு நிறுவனங்கள், ரயில்வே துறை போன்றவற்றில் மறுக்கப்படுகிற சமூகநீதியை எதிர்ப்போம். ஆசிரியரின் தன்னலமற்ற பொதுப்பணியில் நம்மை இணைத்துக் கொள்வோம். வேண்டு கோளையும், திட்டங்களையும் செயல் படுத்துவதில் முனைப்பு எடுப்போம்.

ஆர்.எஸ்.எஸ். மதவாதி மோகன் பகவத்துக்கும், ராம்தேவ் உணவகத்துக்கும், மத்திய அரசின் பாதுகாப்பா? கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி, தமிழக அரசின் திட்ட நிதிகளைப்போல எங் கேயோ ஒதுக்கி எப்போதோ பட்டுவாடா செய்யவா? பகுத்தறிவுச் சிந்தனையாளர் களும், சமூகநீதி சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டிய நேரம், மிக அவசரமாக நெருங்கி வருகிறது. இணைந்து பணியாற்ற பெரியார் திடல் வருக. மதவாத சதியாளர்களை துரத்திட கரம் கோர்த்து வருக. இணையதளங் களிலும் பரப்புரை புள்ளி விவரங்களை பதிவேற்றுவோம்.

- ஆ.வேல்சாமி
பகுத்தறிவாளர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்

தமிழ் ஓவியா said...

நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்நமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப்பைகளே சுவாசத்தில் பங்கு  வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறிப்பாக புகைபிடிக்கும்  பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே அத்தகைய பாதிப்பு  இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ட்டின் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான  ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர்.

தினமும் குறைந்த பட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ்  உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத்திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத்திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவ தில்லை.

எலும்புகள் எலும்பரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பரிப்பு நோய் தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண்தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத்தசைகள் ஆண் களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச் சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச்சத்து சமநிலை அடைகிறது.

அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்கு பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும் பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுகுறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகிவிடு கி றது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச்சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப்பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண்கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங் கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந் துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்ட சத்து, நீர்ச்சத்து, கொழுப்புசத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

இந்தக் கீ ரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லிய மாக தெரிய உதவும். பொன்னாங்கண்ணியின் பயன்கள் சில..
1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

3. உடலை, தோலைப்பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொன்னாங்கண்ணிக்கு உண்டு

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குறிப்புகள்


* தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகி விடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும் பல் வலி குணமாகிவிடும். ர் உடம்பெல்லாம் வலிக்கிறதா? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தினமும் கொஞ்சம் வேப்பம் கொழுந்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும்.

* சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு இளஞ்சூடான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிவிடும். சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஜீரணத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். ர் பெண்களே, உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்க வில்லையா? எள் உருண்டை நிறையச் சாப்பிடுங்கள். எள், நிறைய பால் சுரக்கும்படி செய்கிறது.

* உடம்பு எப்போதும் சூடாக இருக்கிறதா? கொஞ்சம் வெந்தயத்தைத் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயில் வெந்தயத்தைப் போட்டு மென்று சாப்பிட்டால், உடல் சூடு தணிந்துவிடும். வெயில் காலத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு கிளாஸ் மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாப்பிடலாம். மோரில் இளநீர் கலந்து சாப்பிடுங்கள். நீர்க்கடுப்பு குணமாகிவிடும்.

* குழந்தைகள் குடல் வளர்ச்சி பெறச் சிறந்த டானிக் எது தெரியுமா? தேன். உங்கள் குழந்தைகளுக்குத் தினசரி கால் ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் தேன் கொடுத்து வாருங்கள். குழந்தைகளின் தசைகளும் உடலும் வலிமை பெறும் பெண்கள் அடிக்கடி தலைவலி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. தலைவலி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தைகள் பிறப்பதில்லை.

* தினசரி ஏதாவது ஒரு காய்கறி சூப் சாப்பிடுங்கள். காய்கறி சூப்பைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. வேப்பம் விதையில் உள்ள பருப்பையும் வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகிறது. தோலில் ஏற்படும் நோய்களும் கூட இதனால் குணமாகின்றன. சாப்பிட்டவுடன் வாந்திவரும் போல் இருந்தால் இலவங்கம், அல்லது ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். குமட்டல் நிற்கும். வாந்தி வராது.