Search This Blog

30.6.15

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!



உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் படுகொலைகள்

மதங்களால் மக்களுக்கு அமைதியில்லை - ஒற்றுமையில்லை!

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவுவாதிகளே, சமதர்மவாதிகளே முன்வருக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அழைப்பு!



உலகம் முழுவதும் மதங்களின் பெயரால் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளன; மதங்களால் உலகில் அமைதி நிலவாது; ஒற்றுமை யும் ஏற்படாது. எனவே பகுத்தறிவுவாதிகளும், சமதர்மவாதிகளும் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திட முன் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மத ஓடத்தில் ஏறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே

என்று 70 ஆண்டுகளுக்கு முன் கவிதை வரிகளில் மக்களைப் பார்த்து, பரிதாபப்பட்டுக் கேட்டார் புரட்சிக் கவிஞர்.

மதம் என்பது மக்களை ஒரு போதும் ஒன்று சேர்ந்து அமைதியாக கூடிவாழ உதவி செய்யாது; அது தன் வெறியை உண்டாக்கி மனித குலத்தின் ஒற்றுமைக்கு உலை வைத்து அவர்களை நிம்மதியாக வாழ விட்டதாக வரலாறு இல்லை என்றார் தந்தை பெரியார்.

மதம் மக்களுக்கு அபின், போதை என்றார் கார்ல் மார்க்ஸ்.

மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன? என்று கேட்டு, இல்லை இல்லை என்று விளக்கம் கூறினார் இங்கர்சால்.

இக்கூற்றுக்கு இன்றும் - மனிதன் விண்வெளியில், ராக்கெட் விட்டு, பறந்து, அடுத்து செவ்வாய்க்கோளில் குடியேறவும் ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தி வரும் நிலையில், நமது ஞானபூமியில் மட்டும் மதச் சண்டை அதன் விளைவான ஜாதிச் சண்டை நடந்து கொண்டே உள்ள அவலம் அன்றாட அவலமாகக் காட்சியளிக்கிறது. 

மதவாதிகள் கூற்றும் - நடைமுறை முரண்பாடுகளும்

எந்த மதமும் மனிதர்களை ஒழுக்கவாதியாக சமூகத்தில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவுவதற்கே ஏற்பட்டன என்ற மதக் குருமார்களும், மதவியாபாரிகளும் இன்றுகூட கூறத் தவறுவதில்லை.

ஆனால், நடைமுறைக் காட்சி  முந்தைய வரலாற்றுக் காலம் முதல் இன்றைய கால நிகழ்வுகள் வரை என்ன?

அய்ரோப்பாவில் சிலுவைப் போர்கள் (Crusades) என்பவை முதல் தொடங்கி, இன்றும் மதங்களிடையே போர்களும், வன்முறைகளும் தொடர் கதையாகவே தொடருகின்ற கொடுமையின் கோரத் தாண்டவம் மாறி உள்ளதா? இல்லையே!

மூன்று கண்டங்களில் நடந்த மதக்கொலைகள்!

அண்மைக்காலத்தில் மூன்று கண்டங்களில் நிகழ்ந்த மதப் படுகொலைகள் மனித குலத்தின் மாண்பினைத் துடைத்தெறிகின்றன!

அந்தோ கொடுமை! கொடுமை!!

1. துனிஷியாவில் 37 (அந்நியர்கள் உட்பட)  சுட்டுக் கொல்லப்பட்டனர். தேசிய கண்காட்சி அகத்தில் இது நடந்துள்ளது.

2. குவைத் நாட்டில் மசூதியில் தொழுகையில் இருந்த வர்களை நோக்கி மனிதவெடிகுண்டு 25 பேர்களைக் கொன்றுள்ளது. (இவர்கள் ஒரே மதம்  - இஸ்லாமின் ஒரு பிரிவிற்கும் மற்றொரு பிரிவுக்கும் நடந்த சண்டை).

3. பிரான்சில் அமெரிக்கருக்குச் சொந்தமான தொழிற்சாலை - அதற்குமுன் ஒரு பத்திரிகை அலுவலகம்!

துனிஷியாவிலும், குவைத்திலும் மொத்தம் 67 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்

இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ்லாமியர், ஹிந்துத்துவா பஜ்ரங்தளம் போன்ற தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியப் பாதிரியார் - தொழுநோயாளிகளுக்கு உதவிட குழந்தைகளோடு வந்து தொண்டு செய்த ஸ்டேன்ஸ் பாதிரியார் குடும்பத்துடன் எரிக்கப்பட்ட கதை மறக்கக் கூடியதுதானா?

75 வயது நிறைந்த கன்னியாஸ்திரி கல்கத்தாவில் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்; கிறித்தவர்களின் சர்ச்சு களும் இடிக்கப்படுகின்றன.

கர்வாப்சி என்ற கட்டாய மதமாற்றம் ஆக்ரா போன்ற பகுதிகளில் - தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி உணவுக்குத் தடைச் சட்டம்!
உலகம் முழுவதும்கூட மதச் சண்டைகளுக்கு பஞ்சமில்லையே!

மதங்களுக்குள்ளேயே சண்டைகள்

இஸ்ரேல் - பாலஸ்தீனங்கள் பிரச்சினை இரு மதங் களின் அடிப்படையில் தானே ஏற்பட்டுள்ளன.

ஒரே மதத்திலும்  இச்சண்டை; எல்லா மதங்களிலும் இந்த நிலை! புத்தரின் பர்மா - மியன்மாவில் - இலங்கையில் - இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு விரட்டப்படும் நிலை ஒருபுறம்; ஏற்கெனவே இலங்கை புத்த பூமி - ரத்த பூமி ஆனது  - சிங்கள இராஜபக்சே ஆட்சிகளில் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது!

மதம் மக்களுக்கு நன்மை செய்யாது. யானைக்கு வடகலை நாமமா? தென் கலை நாமமா? வழக்குக்கு சண்டைத் தீர்வு இன்னும் அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில் காணப்படவில்லையே!

எனவே, மதங்களால் கெட்டுள்ள உலக அமைதி - மக்கள் ஒற்றுமை கைப்புண் போலத் தெரிந்தும், இன்னமும் மத குருமார்களுக்கு செல்வாக்கும், செழுமையும் இருக்கலாமா?

இன்னமும் பாபா ராம்தேவ்களுக்கும், சங்கராச்சாரிகளுக் கும், ராம்பால் போன்ற ஹரியானா சாமியார்களுக்கும், ஆசாராம்களுக்கும் நித்தியானந்தா போன்ற காமக் கொடூரர்களுக்கும் (தனக்கு ஆண்மை இல்லை என்று பொய் சொன்ன மதத் தலைவர் இந்த மத வியாபாரி) செல்வாக்கு இருப்பது எதனால்?

மதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய பகுத்தறிவாளர்களே முன்வருக!

ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதனாலும், அமைச்சர்கள் அடிபணிந்து விளம்பரப்படுத்துவதாலும் மக்களின் அறியாமையினாலும் தானே!

எனவே இதனை எதிர்த்து கடும் பிரச்சாரம் மனிதநேயப் பிரச்சாரம் செய்ய அனைத்துப் பகுத்தறிவாளர்கள், சமதர்மவாதிகள் முன் வர வேண்டும்.

   --------------------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்---30-06-2015

29.6.15

தமிழும் தமிழர் முன்னேற்றமும்-பெரியார்

தந்தை பெரியார்

தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக் கணம் கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.


உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத் திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?


இனிப் பள்ளிக் கூடப் பிள்ளை களுக்குத் தமிழ் இலக்கியத் துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மததத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப் பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ் சியங்களும் அல்லாமல் வேறு இலக் கியங்கள் காணப்படுகின்றனவா? பண்டி தர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம் தானே அதிகமாயி ருக்கின்றது?


மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ் பியர் வேண்டும் என்பானாம். தமிழன் எதைக் கேட்பது?


இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.

மேல் நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறி வாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.


மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்த மின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால்  நுற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக் கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள், சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக் கும் பொதுவான இலக்கியம், ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும்மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக் கியம் ஆகியவை மூலம்தான், ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத் திரமல்லாமல், அதைக் கையாளும் மக் களும் ஞானமுடையவர்களா வார்கள்.
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்களே இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது! தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. சுயமரி யாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக் களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

தமிழ் மொழியின் பெருமை பரம சிவனுடைய படைப்பினால் வந்த தென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதினிடை விடுத்த தாலும், முதலை உண்ட பாலனை அழைத்த தாலும் எலும்பைப் பெண்ணாக்கின தாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத் தான் பயன்படும்.
பரமசிவனுக்கு உகந்த மொழி தமிழ் என்றால் - வைண வனும், முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.


இன்று தமிழ் நாட்டில் வந்து, தமிழ் கற்று, வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்கள் தானே, இந்தி பாஷை இந்தியப் பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள்? கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்களே. காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்.


தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா லோர்க்கு இதைப் பற்றி சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் கோபத்துக்கும் பயந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ் கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ்மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்ப தில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள்.
ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜ்கள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரி களும் பாடுபடுகின்றார்களே! 

நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.


தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? 

தமிழ்மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக் கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்ப தில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதர வளிப்பது மில்லை. தற்கால நிலைக்குத் தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ள தாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்?


மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன.

எழுத்துக் களில் எவ்வளவு மாறுதல் செய்து வரு கிறார்கள்! ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத் துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய ஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்து விட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றி கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண் டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ ராவது, அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.


ஆனால் தகுதி உள்ள வேறு எவரும் வெளிவராவிட்டால் என்செய்வது?
ஆனாலும், நான் அம்முறை யிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே பல புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வ ளவோ செய்ய வேண்டி இருக்கிறது, இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப் பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு அதரவு அளித்தார்கள்.


எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றிய மையாதது. அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.


தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானது மான பண்டிகைகள் கொண்டாடு வதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக் கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல மாகத் திருநாள்களைப் பரப்ப வேண்டும்.

நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் - தீபாவளியும், மாரிப்பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்.
இந்தப் பண்டிகையால் தமிழர் முன்னேற முடியுமா? சுயமரியாதை உணர்வுகள் வந்திருந்தால் தான் முன்னேற முடியும்.


-----------------------------------தந்தை பெரியார் அவர்கள் "விடுதலை"யில்  எழுதிய கட்டுரை,  - “விடுதலை” 28.6.1964



Read more: http://www.viduthalai.in/page1/104101.html#ixzz3eS8wNUcU

28.6.15

பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா?-பெரியார்

ஜாதிக்குச் சட்டப் பாதுகாப்பு அளித்தது காந்தியே!

  

2500- ஆண்டுகட்கு முன் சித்தார்த்தர் 'ஜாதி இல்லை' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியாளர்களின் மடங்களுக்குத் தீ வைத்தும், கொடூரமாகக் கொன்று குவித்தும், கழுவேற்றியும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.

அதற்கு 500- வருடங்களுக்குப் பிறகு வள்ளுவர் சொன்னார். மிகவும் பயந்து "பிறப்பினால் எல்லோரும் ஒத்தவர்கள்" என்று சொன்னார். அந்தக் குறளைக் குப்பையில் போட்டுவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள் ஆகிய நாங்கள் அதை வெளிப்படுத்திய பிறகுதான் இப்போது திருக்குறள் வெளிவருகிறது. ஒரு மூலையில் செருப்புத் தைப்பவனிடம போய் "வள்ளி சுப்பிரமணியன் யார்?" என்றால் உடனே சொல்லுவான்; வள்ளுவர் யார் என்றால் "படி என்ன விலை?" என்பான். அந்த அளவு அவர் மறைக்கப்பட்டுவிட்டார்.

இது தவிர ஜாதியை எதிர்த்துப் போராடியதாகச் சொல்ல சரித்திரப்படி ஆதாரமில்லை. பார்ப்பனருக்கான சில இலக்கிய முண்டல்லவா! இராமாயணம், பாரதம், புராணங்கள், கந்த புராணம், பாகவதம் இப்படி? அவற்றிலிருந்து ஜாதியை ஒழிக்க, பார்ப்பானை ஒழிக்க வேத சாஸ்திர புராணங்களை ஒழிக்க முயற்சி நடந்ததாக அறிகிறோம்.

அதாவது இரணியன், இராவணன், சூரபத்மன் முதலியவர்கள் வேதம், யாகம், பார்ப்பனர் இவற்றை ஒழிக்கப் பாடுபட்டதாக உள்ளது. நேரிடையாகப் பார்ப்பானிடமே சண்டை போட்டிருக்கிறார்கள். அதைத்தான் பித்தலாட்டமாகத் தேவர்களுடன் சண்டையிட்டார்கள் என எழுதி, ஜாதி ஒழிய வேண்டும் என்றவர்களைக் கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். அதுவே புராணங்களாயின. இன்று நாம் தான் ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடுகிறோம். மற்றவன் எவனுக்கும் கவலையில்லை.

இன்று படித்தவன் இருக்கிறான்; படித்தவன் எல்லாம் படிப்பைக் கொண்டு வயிறு வளர்க்கலாமா என்று பார்க்கிறானே தவிர, இதுபற்றி கவலைப்படுவதில்லை! "பணக்காரனுக்குப் பத்துலட்சம், அய்ம்பது லட்சமாக வேண்டும்; கோடியாக வேண்டும்" என்று இப்படிக் கவலைப்படுகிறானே தவிர, அம்பது லட்சமிருந்தும் நாம் ஏன் தேவடியாள் மகனாக சூத்திரனாக இருக்க வேண்டும் என்று யார் கவலைப்படுகிறார்கள்? பதவியில் இருப்பவனுக்கும் இந்த உத்தியோகத்தைவிட இன்னும் பெரிய உத்தியோகம் வராதா? சட்டசபை மெம்பராக உறுப்பினராக இருந்து மந்திரியாக மாட்டோமா? என்றுதான் கவலைப்படுவானே தவிர, நாம் ஏன் கீழ்ஜாதி என்று எவனுக்குக் கவலையிருக்கிறது? சட்டசபை மெம்பராவதில் உறுப்பினராவதில் தான் கவலை. நாம் ஏண்டா தேவடியாள் மகனாக இருக்க வேண்டும் என்று எவன் சிந்திக்கிறான்? எப்படியோ இது எனக்குத்தான் அவமானமாகத் தோன்றியது?

ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் (நீதிக்கட்சியினர்) கூட பார்ப்பான் மட்டும் என்ன உயர்ந்தவன் - அதுவும் உத்தியோகத்துறையில் மாத்திரம்? என்றார்களே தவிர, நாம் ஏன் கீழ்ஜாதி, மட்டமான ஜாதி என்று சிந்திக்கவில்லை; ஆயினும் அந்த அளவில் அதுவே பெரிய புரட்சிதான்.

இன்று இந்தியா முழுவதுமே வேறு யாரும் செய்யாத தொண்டு இப்போது திராவிடர் கழகம் செய்துவரும் தொண்டு. 30, 35- வருட காலமாகச் சொல்லி வந்தாலும் இவ்வளவு முக்கியமாகக் கருதும் நிலை இப்போதுதான் வந்துள்ளது. நான் பொதுவாழ்வுக்கு வரும்போது ஜாதி ஒழிய வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. காங்கிரசில் இருக்கும் போதே ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசி எழுதிவந்தவன் நான். இது இப்போது ஏதோ சமய சந்தர்ப்பவாதமாகச் சொல்வதல்ல; 1925, 26- 'குடிஅரசு' முதல் வால்யூம் (தொகுதி) இதோ இருக்கிறது. இதில் பார்த்தால் தெரியும். தீண்டாமை ஒழிப்புப் பித்தலாட்டத்தை அப்போதே கண்டித்து நிறைய எழுதியிருக்கிறேன்.

அதுமுதல் 30, 35- வருட காலமாகவே ஜாதி ஒழிப்பை முக்கியமாக வைத்து, ஜாதிக்கு ஆதாரம் என்ற முறையில் மதம், சாஸ்திர புராணங்கள், கடவுள்கள் ஒழிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறேன்.

சென்ற வருடம் பிறந்த தினவிழா அறிக்கையில் ஜாதி ஒழிப்பது இந்த ஆண்டு வேலைத்திட்டம்; அதற்காக இரண்டு காரியங்கள் நடக்க வேண்டும்; ஒன்று, சர்க்கார் (அரசு) அனுமதி பெற்று நடத்தப்படும் ஓட்டல்களில் 'பிராமணாள்' என்று பெயர்ப்பலகையில் போடக்கூடாது; மற்றது, கோவிலில் பார்ப்பான் தான் மணியடிக்கலாம் என்று இருக்கக் கூடாது என்பதாகும்.

இதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று சொன்னேன்; தேர்தலால் சிறிது காலம் கடந்தது.

தேர்தல் முடிந்ததும் "பிராமணாள்" என்ற போட்டிருப்பதை அழித்துவிடுங்கள்; அழிக்காவிட்டால் நாங்கள் அழிப்போம்; தடுத்தால் அந்தக்கடையில் யாரும் சாப்பிடக்கூடாது என்று மறியல் செய்வோம்" என்று ஆரம்பித்தோம். இதைச் சாதாரணமாக நினைத்துத்தான் ஆரம்பித்தோம். 100- க்கு 90- பார்ப்பான் அழித்துவிட்டான். சென்னையில் ஒரு பார்ப்பான் மட்டும் அழிக்கமாட்டேன் என்றான். மறியல் ஆரம்பித்தோம்; அதாவது, 'அவன் பிராமணனாம்! அதன் மூலம் நம்மைச் சூத்திரன் என்கிறான்! அங்குப் போய்ச் சாப்பிடாதே' அவ்வளவுதான் நமது வேண்டுகோள்.

இதற்குப் பார்ப்பானும் சண்டைக்கு வரவில்லை; சாப்பிடப் போகிறவனும் சண்டைக்கு வரவில்லை; சர்க்கார் (அரசு) குறுக்கே வந்து விழுந்து கைது செய்கிறது! அதிலும் அக்கிரமமாக! மறியல் செய்யச் சட்டப்படி உரிமையிருக்கும் போது போக்குவரத்துக்கு இடைஞ்சல், அது இது என்று சொல்லிக் கைது செய்கிறார்கள்! இதுவரை 600- பேருக்கு மேல் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். நாம் இன்னும் கொஞ்சம் தீவிரமான பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. கடினமான பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பார்க்கும் போது விஷயம் தெரிந்தது. சட்டத்திலேயே ஜாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்; அந்தப்படி செய்வதற்கு அடிப்படைக் காரணம் காந்தி.

காந்தி பெயரைச் சொல்லித்தான் ஜாதிக்கும் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது எனவே இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன்.

காந்தி சிலையை உடைக்க நமக்கு உரிமையுண்டு.

இன்று காங்கிரஸ்காரன் சொல்கிறானே, வெல்லிங்டன் சிலை இருக்கக்கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது என்று! அதுபோல காந்தி சிலை எங்கள் தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

ஒரு வெல்லிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தைக் காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றிச் ஜாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்பு கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்து விட்டுக் போய்விட்டார்.

நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு, சூத்திரன் (தேவடியாள் மகன்) என்பதைப் பற்றிக் கவலைப்படமால் இருக்கிறானே தவிர வேறு என்ன? தெரியாமல் தொட்டால் நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாததுபோலவே இருந்துவிட்டால் சூத்திரப்பட்டம் இல்லாது போய்விடுமா?

இந்தியா முழுவிலும் அகில இந்தியக் காங்கிரஸ் வந்து 70- வருடமாக இருக்கிறது. இந்தக் காங்கிரஸ் வந்தபின் நமக்கு ஏற்பட்ட இலாபமென்ன? பார்ப்பானுக்கு ஏற்பட்ட இலாபமென்ன? என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டாமா?

காங்கிரஸ் வந்த 50- வருடத்தில் பார்ப்பான் 100-க்கு 100- பேர் படித்தவன். பாப்பாத்தியும் படித்தவள். 70- வருட காங்கிரஸ் அவர்களை அந்த அந்தஸ்தில் (உயர்மதிப்பில்) வைத்துவிட்டது. அதே காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து தீர்மானங்களுக்குக் கைதுக்கிப் பலப்படுத்திய நம் கதி என்ன? 100- க்கு 18- பேர் படித்திருக்கிறான்; இந்த 18- பேரும் எப்படிப் படித்தவன்? பார்ப்பானைப் போலவே படித்தவனா? அதில் 10- பேர் சும்மா கையெழுத்துப் போடத் தெரிந்தவன்; அவ்வளவுதான்! வெள்ளைக்காரன் போகிறபோது 12- பேர்தான் படித்தவன்; சுதந்திரம் வந்து 10- ஆண்டு ஆகியும் அதுவும் காமராசர் முதலைச்சராக வந்ததால் இன்று 100- க்கு 18- பேர் படித்தவன்.

காமராசர் வராவிட்டால் குறைந்திருக்கும். ஆச்சாரியார் வந்ததும் 4000- பள்ளிக்கூடத்தை மூடினார். மெடிக்கல், எஞ்சினியரிங் காலேஜ்களில் (கல்லூரிகளில்) பார்ப்பானுக்குக் கொடுப்பார்; மிஞ்சினால் மலையாளிக்குக் (மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில்) கிறிஸ்தவனுக்குக் கொடுப்பார்; நம்மவனுக்குக் கிடைக்காது; பிறகு அவனவன் ஜாதித்தொழில்தான் படிக்கணும். எல்லோரும் படித்தால் வேலைக்கு எங்கே போவது? சூத்திரனுக்கு சூத்திரனுக்கு எதற்குப் படிப்பு என்று சொல்லிவிட்டார்.

அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து ஒழிக்க வேண்டிய அவசியம் வந்தது; காமராசர் வந்தார்; ஆச்சாரியார் மூடிய பள்ளிகளைத் திறந்து மேற்கொண்டும் பள்ளிக்கூடம் திறந்தார். காலேஜ்களில் (கல்லூரிகளில்) ஆச்சாரியார் இருக்கும்போது பார்ப்பானுக்கு 100- க்கு 63- கொடுத்தார். இவர் வந்ததும் தமிழனுக்கு 63- வீதம் என்ற கொடுத்தார். அய்க்கோர்ட் ஜட்ஜ் (உயர் நீதி மன்றம் நீதிபதி) காலியானது 2- தமிழனுக்குக் கொடுத்தார். நேற்று கூட மெடிக்கல் சர்வீசு டைரக்டர் (மருத்துவத் துறை இயக்குநர்) பதவி காலியாயிற்று ஒரு வடநாட்டான் இருந்தான். அதை இப்போது ஒரு தமிழனுக்குக் கொடுத்துள்ளார்.

எத்தனை நாளைக்குக் காமராசரே இருக்க முடியும்? எலும்பு போட்டால் நம் ஆளே காமராசர் தலையில் கல்போடுவானே? இதையெல்லாம் யார் சிந்தித்தார்கள்? ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டுத் தீர வேண்டும்.

பார்ப்பானும் பறையனும் ஒழிந்து ஒரே ஜாதி ஆவதால் வரும் நட்டமென்ன?

பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன காரியம் நடக்காது? "அய்யோ பாவம்! பார்ப்பான் எங்கே போவான்?" என்கிறவன்தான் சொல்லட்டுமே!

நான் தான் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பவனை வைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா? அப்படியெனில் உச்சிக்குடுமியையும் பூணூலையும்அறுத்துக் கொண்டு நிர்வாணமாக (அம்மணமாக) நிற்க வைத்தால் மற்றவனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் காணமுடியும்? கடவுள் படைத்தார் என்றால் ஒரு அடையாளம் வைத்துப் படைத்திருக்க மாட்டாரா? இந்தப் புத்திகூட இல்லையே நம்மவனுக்கு? அந்தக் கடவுளே அவனைப் பார்ப்பானாகவும் நம்மைத் தேவடியாள் மகனாகவும் படைத்திருந்தால் அந்த கடவுளே பித்தலாட்டக் கடவுள்தானே! நான் மட்டும் என்ன காரணத்திற்காகத் தாழ்ந்தவன் என்று கேட்க வேண்டாமா?

ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுகளைப் போக்கச் சட்டம் செய்ததுபோல பார்ப்பானுக்கும் போட வேண்டியதுதானே? "நீ ஏன் உயர்ந்தவன்? பிறக்கும் போதே பூணூலுடனா பிறந்தாய்? கழற்று பூணூலை! வெட்டு உச்சிக்குடுமியை! என்று சொல்ல வேண்டியது தானே?

கேரளத்தில் 10- ஏக்கருக்கு மேல் உனக்குப் பூமி வேண்டாம் என்று பிடுங்கி வருகிறான். இங்கு ஏதோ மிராசுதாரன் தயவு கேட்டு காலத்தை தட்டிக் கொண்டு வருகிறான். இங்கு வரத்தான் போகிறது. இந்தச் சட்டமெல்லாம் செய்வதற்கு மக்கள் உரிமை கொடுத்துள்ள போது பார்ப்பானை ஒழிக்கிற உரிமை மாத்திரம் கூடாதென்றால் என்ன நியாயம்? சூத்திரன் சூத்திரனாகவே தான் இருக்க வேண்டும்; வண்ணான் வண்ணானாகவே தான் இருக்க வேண்டும்; அதுபற்றிப் பேசமாட்டேன் என்றால் பேச வைக்க வேண்டாமா?

'சுலபமாகக் காரியம் நடந்துவிடும். நமது மந்திரிகள் செய்துவிடுவார்கள். நீதானே காமராசரை ஆதரித்தாய்; அவர் செய்வது தானே' என்று பொறுப்பில்லாமல் பேசலாம்; ஆனால் ஜாதி ஒழிய வேண்டும் என்பது காமராசர், சுப்பிரமணியம் பக்தவச்சலம் இவர்கள் கையில் இல்லை. இவர்  ரயில்வேயின் கட்டணத்தில் ஒரு காசு குறைக்க முடியுமா? கார்டு கவருக்குக் காசு ஏற்றுகிறான் என்பதற்காக காமராசர் ஒழிக என்பது பொருந்துமா?  

காமராசருக்குச் ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் ஆசையில்லாமல் இருக்குமா? ஜாதி ஒழியாமல் மத்திய அரசாங்கத்தில் சட்டம் செய்து பலமான பாதுகாப்புத்தேடி வைத்துள்ளார்கள். அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு அளித்துச் சட்டம் செய்துள்ளார்கள். அடிப்படை உரிமை (Fundamental Right) குறித்து சட்டம் செய்கையில் அவரவர் பழக்க வழக்கம், மத அனுஷ்டானங்கள் காப்பாற்றப்படும் என்று ஜாதியைக் காப்பாற்ற, பலமான பாதுகாப்புச் செய்துள்ளார்கள்! அதுமாத்திரமல்ல. இது பற்றி ராஜ்ய அரசாங்கம் சட்டம் செய்யக்கூடாது என்று இருக்கிற, அடிப்படைச் சுதந்திரம் பற்றிச் சட்டம் செய்யும் உரிமை மத்திய அரசாங்கத்திற்குத்தான். சட்டத்தை மாற்ற வேண்டும். சட்டத்தை மாற்றினாலும் ஜனாதிபதி (குடியரசுத் தலைவர்) அங்கீகாரம் செய்தால்தான் உண்டு 'இது அடிப்படைக்கு விரோதம். பொதுஜன அமைதிக்கு கேடு', என்று சொல்லிப் பிரசாரத்தை நிறுத்திவிட முடியும்.

இதற்கு என்ன வழி? இதை மாற்றுவேன் என்று சர்க்கார் (அரசு) இணங்கும்படியான கிளர்ச்சியில் இறங்க வேண்டும். கிளர்ச்சி மூலம்தான் முடியும். பார்லிமெண்ட் (நாடாளுமன்ற) முறை பயன்படாது.

---------------------------------- 19.09.1957- இல் தருமபுரியில் தந்தை பெரியார் விரிவுரை:  “விடுதலை”, 08.10.1957