இடஒதுக்கீட்டிற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க
மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலை- பெரியாருக்கு தொடர் வெற்றி
வேதாரண்யம் பெரியார் சிலை திறந்து தமிழர் தலைவர் பேச்சு
அந்தக் காலத்தில் வேதாரண்யத்தில் நான் மாணவனாக இருந்தபொழுது இங்கே திண்ணையிலே தங்க வைக்கப்பட்ட நிகழ்ச்சியையும் நான் பார்க்கின்றேன். இன்றைக்கு வரவேற்பளித்த நிகழ்ச்சியையும் எண்ணிப் பார்க்கிறேன் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
வேதாரண்யத்தில் 14.3.2010 அன்று நடைபெற்ற அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் சிலையை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:
மாநாடு போல சிலை திறப்பு விழா அறிவு ஆசான் சிலை திறப்பு என்று சொன்னால் இது ஒரு மாநாடு என்று கருதத்தக்க அளவிலே இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். மிக அருமையான ஒரு நிகழ்வு. வேதாரண்யத்தில் இன்றைக்கு திராவிடர் இயக்க வரலாற்றில் ஒரு பொன்னேடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு அறிவுஆசான் தலைவர் தந்தை பெரியார் சிலையை மிக நல்ல பகுதியிலே நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து முறைப்படி அரசினுடைய ஆணையைப் பெற்று இங்கே திறந்து வைத்து ஒரு நல்ல விழாவை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ராஜாஜி பூங்காவில் பெரியார் சிலை இங்கே நம்முடைய அருமை நண்பர் பி.வி.இராஜேந்திரன் அவர்கள் சொன்னார்கள். ராஜாஜி பூங்காவிலே பெரியார் சிலை அமைந்திருக்கிறது என்று சொன்னார்கள். இது ஒரு நல்ல பண்பாட்டினுடைய அடையாளம். ராஜகோபாலாச் சாரியாருடைய கொள்கையை மூர்த்தண்யமாகத் தந்தை பெரியார் எதிர்த்தார். அதே போல தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைக்கு நேர் எதிராக ராஜாஜி இருந்தார்.
தந்தை பெரியாரும், ராஜாஜியும் பொது வாழ்க்கையிலே இரு துருவங்களாக இருந்தாலும், அரசியலிலே, விஞ்ஞானத்திலே ஒரு கருத்தைச் சொல்லுவார்கள். எதிர் மறையாக இருக்கக் கூடியவைகள்தான் எப்பொழுதும் ஈர்ப்புக்குரியவைகள் என்று சொல்லக்கூடிய வண்ணம் எதிர்மறையாக அவர்கள் வாழ்ந்தாலும் அதுதான் அவர்களை ஈர்ப்புக்குள் ளாக்கியது.
ஒரே வரியில் சொன்னார்
நம்முடைய அருமைச் சகோதரர் பி.வி.ராஜேந்திரன் நன்றாகச் சொன்னார். இவர்களுக்குள்ளே கருத்து வேற்றுமை எப்பொழுது வந்து என்று சொன்னால் அது நம்மால்தான் வந்தது என்று நம்மைப் பார்த்து, மக்களைப் பார்த்து ஒரே வரியிலே மிக அழகாகச் சொன்னார். இந்த மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்று நினைத்த நேரத்திலே ராஜகோபாலாச்சாரியார் அவர்களுடைய சமுதாயத்திற்கு மட்டும்தான் பாடுபட்டார். அதற்காகவே தன்னை ஒதுக்கிக் கொண்டவர் ராஜாஜி.
அனைவர்க்கும் அனைத்தும்! அனைவர்க்கும் அனைத்தும் என்பதுதான் தந்தை பெரியாருடைய கொள்கை, இதோ சிலையாக நிற்கிறாரே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நடத்திய சுயமரியாதை இயக்கத்தினுடைய ஒரு கொள்கையை சுட்டிக்காட்டி ஒரே வாக்கியத்திலே சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கம் அனைவர்க்கும், அனைத்தும் என்று சொல்லக் கூடியது.
தேவாசுரப் போராட்டம்தான்!
ராஜகோபாலாச்சாரியாரின் கொள்கையை இன்றைக்கும் நாம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அவர்கள் உருவமாக இல்லா விட்டாலும் கூட, தேவாசுரப் போராட்டமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
உருவம் மாறினாலும் அதன் உள்தத்துவம் மாறியதில்லை என்று சொல்லக்கூடிய வண்ணம் இன்றைக்கும் போராட்டம் எப்படி நடந்து கொண்டிருக்கிறதென்று சொன்னால் ராஜகோ பாலாச்சாரியாருடைய அணி இன்னார்க்கு இதுதான் என்பது. எல்லார்க்கும் எல்லாமும் உருவாக வேண்டும் என்று தனது இறுதி மூச்சு அடங்குகிற வரை பணியாற்றிவர் தந்தை பெரியார்.
திராவிட இயக்கத்தவர்களின் உழைப்பு
எனவே போராட்டங்கள் தேவைப்படுகின்றன. இன்னமும் நம்முடைய இலட்சியத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருந்தாலும் அதை முழுமையாக அடைய முடியவில்லை. எனவே நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்று தந்தை பெரியார் சிலைகள் தேவைப்படுகின்றன, திறக்கப்படுகின்றன.
நான் எண்ணிப்பார்க்கிறேன். இங்கே சிலையினுடைய பீடத்தை அமைத்து நன்கொடை வழங்கினார்கள். ஆனால் இதுபோன்ற பீடத்தை அமைக்க யார் யாருடைய உழைப்பு திராவிட இயக்கத்தவர்களுடைய உழைப்பு எப்படிப்பட்டது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பிளர்கள் மேனாள் உறுப்பினர்கள் என்று எல்லோருமே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். கலந்திருக்கிறார்கள்.
ஜாதி இல்லை, மதம் இல்லை, கட்சி இல்லை; மனிதநேயம்தான் இருக்கிறது என்பதைச் சொன்ன தந்தை பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதற்கு இந்த மேடைதான் அடையாளமாகும்.
அண்ணா-பெரியார் பற்றிச் சொன்னார்
இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். நம்முடைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தைபெரியார் அவர்களுடைய சிலை திறப்பு விழாவிலே அழகாகச் சொன்னார்கள். 1967 செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா. பெரியாருடைய போர் முறை எத்தகையது என்பதை அவருக்கே உரித்தான முறையில் அண்ணா அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.
மற்றவர்களுடைய போர்முறை என்று சொன்னால் தடைகள் இருக்கும். தடைகளோடு போரிடக்கூடிய நிலை இருக்கும். இது சாதாரண நடைமுறை.
மூல பலத்தை முறியடிக்கும் போர் முறை
ஆனால் தந்தை பெரியார் காலம் காலமாக நடத்திட்ட போர் முறை இருக்கிறதே அது கண்ணுக்குத் தெரியாத, எதிரிகளை நோக்கி தந்தை பெரியார் போர் நடத்துவார். எனவே எதிரியின் மூலபலத்தை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று அழகாகச் சொன்னார்.
எனவே தந்தை பெரியார் தொடங்கிய பணி எதிரிகளின் மூலபலத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்னமும் அவருடைய பணி தொடர வேண்டும்.
கலைஞர் அவர்கள் ஒரு முறை தந்தை பெரியாருடைய சிலையைத் திறந்துவைத்த பொழுது சொன்னார்கள், பெரியாருடைய தொண்டு பற்றி எவ்வளவு பேசினாலும், நாம் ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்? என்று ஒரு கேள்வியைக் கேட்டு எண்ணிப் பாருங்கள் என்று சொன்னார்.
பெரியார் பிறவாமலிருந்திருந்தால்
பெரியார் பிறவாமலிருந்திருந்தால் நம்முடைய தோளிலே துண்டு இருக்குமா? நம்முடைய பிள்ளைகள் படித்திருப்பார்களா? நம்முடைய பிள்ளைகள் உத்தியோகத்திற்குப் போயிருப்பார்களா?
நம்முடைய தோழர்கள் எல்லாம் சட்ட மன்றத்திற்குப் போயிருப்பார்களா? பழைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நமக்கு அந்த உரிமையே இல்லை. அய்யா அரிமா எஸ்.சிவசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டது போல, நம்முடைய அருமை நண்பர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல இன்னமும் காலில் மலம் பட்டால் அந்தப் பகுதியை மட்டும் கழுவிக்கொள்ளலாம் என்ற கருதிக் கொள்கின்றோம். ஆனால் ஆறறிவு படைத்த நமது தாழ்த்தப்பட்ட சகோதரனை தொட்டால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை குளிக்க வேண்டும் என்று உயர்ஜாதிக்காரர்கள் சொல்லு கிறார்கள் என்றால் இன்னமும் நம்முடைய மூளைக்கு விலங்கு போடப்பட்டிருக்கிறது என்று நினைக் கின்றபொழுது, அந்த விலங்கை உடைத்தெறிந்த மாபெரும் தலைவர்தான், இதோ சிலையாக, சீலமாக நிற்கிறாரே தந்தை பெரியார் அவர்கள்.
எனவே இந்த சிலையைக் காணும்பொழு தெல்லாம் அந்த எண்ணம் வரவேண்டும். அந்தக் கொள்கை வரவேண்டும்.
எனக்கு எடைக்கு எடை நாணயம்
என்னை தராசிலே அமர்த்தி எடை போட்டுப் பார்த்து இங்கே பணம் கொடுத்தீர்கள். எடைக்கு எடை நாணயம் கொடுத்தீர்கள் என்று சொன்னால் கூட என்னுடைய நாணயத்தை எடை போட்டுப் பார்ப்பது எப்பொழுதும் நல்லது. அந்த வகையிலே சிந்தித்து எடைக்கு எடை எனக்கு நாணயம் வழங்கியிருக்கின்றீர்கள். அதற்காக நன்றி.
ஆனால் எடைக்கு எடை அல்ல. எடைக்கும் அதிகமாக. என்னுடைய எடைக்கு பதினைந்தாயிரம் ரூபாய் அளவுக்குத்தான் இருக்கும். இதற்காக எடையை அதிகரித்தால் அது நோய்க்கு சங்கடத் திற்குத்தான் ஆளாக நேரிடும். ஆகவேதான் நாங்கள் எச்சரிக்கையாக இருந்து கொண்டிருக் கின்றோம். ஆனால் நீங்கள் என்னுடைய எடைக்கு அதிகமாகப் பணம் தந்திருக்கிறீர்கள்.
எது தந்தாலும் வீட்டிற்குப் போகாது
நீங்கள் தருகின்ற எதுவாக இருந்தாலும் எங்கள் வீட்டிற்குப் போகாது. திருச்சியில் உள்ள அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்குப் போகும். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்குப் போகும். அதேபோல இயக்கத்திற்குப் போகும்.
எனவே இதை ஓர் அடையாளமாக நீங்கள் என்னை தராசிலே அமர வைத்திருக்கின்றீர்களே தவிர, நீங்கள் கொடுத்திருக்கின்ற பணம் இயக்கத் திற்காக, இந்தக் கொள்கையைப் பரப்புவதற்காகக் கொடுத்தமைக்கு தலைவணங்கி உங்களுக்கு நன்றி செலுத்தி எந்த நம்பிக்கையை வைத்து நீங்கள் பாராட்டுகின்றீர்களோ அந்த நம்பிக்கைக்கு எங்களுக்கு முழுத் தகுதி இருக்கிறதோ, இல்லையோ அந்த நம்பிக்கைக்கு எங்களை ஆக்கிக்கொள்வோம் என்ற உறுதிமொழியை உங்கள் முன்னாலே வைக்கின்றோம்.
மருதூர் சிதம்பரம்
இங்கே மிக அருமையாக இந்த பீடத்தை அமைத்து பெரியார் சிலையை அமைத்திருக்கின்றார்கள். இந்த நினைவு மேடையே அய்யா முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக இருந்து மறைந்த நாகை மாவட்ட திராவிடர் கழக தலைவராக இருந்தவர் ஆசிரியர் மருதூர் சிதம்பரம் அவர்கள். அவருடைய பெயரால் தான் இந்த மேடை அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த மேடையிலே நாங்கள் நிற்கிறோம் என்று சொன்னால் அது சாதாரண கல்மேடை என்று கருதாதீர்கள். இந்த இயக்கத்திற்காக அரும்பாடுபட்ட கருஞ்சட்டைத்தோழர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள்.
நினைத்துக்கொண்டே வந்தேன் இப்படிப்பட்ட ஒரு காட்சியை 50,60 ஆண்டுகளுக்கு முன்னாலே நாம் பார்க்க முடியுமா? இங்கே நான் வரும்பொழுது பழைய தோழர்களை எல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே வந்தேன். அண்மையிலே தலைவராக இருந்து மறைந்த அய்யா தங்கவேல் அவர்கள் அதேபோல எப்பொழுதும் கருப்புச் சட்டையோடு இருக்கக்கூடிய ஆதிமூலம் அவர்கள். அதுபோல இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு, வயதானவர்களுக்குத் தெரியும்.
சுருட்டு ஜெகந்நாதன்
ஜெகந்நாதன் என்ற அருமை நண்பர் இங்கே நகரத்தலைவராக இருந்தார். எப்பொழுதும் கையிலே சுருட்டோடு இருப்பார். நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாகப் படித்துக்கொண்டிருந்தபொழுது ஜெகந்நாதன் அவர்கள் என்னை அழைத்து ஒரு சாதாரண திண்ணையிலே தான் தங்க வைத்தார். படுக்க வைத்தார். முதல் முறையாக அப்பொழுதுதான் இந்த ஊருக்கு வந்தேன். அந்தக் காட்சியையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன். இந்தக் காட்சியையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன்.
இதே இடத்திலே ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் கூட்டம்
கொஞ்ச நாள்களுக்கு முன்னாலே இதே இடத்திலே ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக்கூட்டம் நடைபெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்றது. எப்பொழுதும் போல எங்களுக்கு கவசமாக நம்முடைய மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இருந்தார்கள். என்றாலும் என்கு நன்றாக இருந்தது. இந்தப் பக்கத்திலிருந்துதான் கற்கள் வந்து விழுந்தன. அந்தக் கற்கள்தான் இன்றைக்குப் பீடமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது அதை மறந்துவிடாதீர்கள். (கைதட்டல்).
எனவே தான் பீடத்தை நீங்கள் வெறும் கற்களால் செதுக்கவில்லை. மாறாக நீங்கள் அப்பொழுது கொடுத்த கற்களையும் பத்திரமாக வைத்திருக்கிறோம்.
நாங்கள் வெட்கப்படக்கூடிய அளவிற்கு....
அண்ணன் அழகிரி அவர்கள் நீண்டகாலமாக சொல்லிக்கொடுத்த பாலபாடம். தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டர்கள் எதிர்ப்பை சந்திக்காமல் எங்கும் சென்றதில்லை. இன்னும் கேட்டால் விளம்பரம் செய்வதற்குக்கூட ஆள் கிடையாது.
இன்றைக்கு நான் பார்க்கின்றேன். வெட்கப் படக்கூடிய அளவிற்கு டிஜிட்டல் பேனர்களை வைத்திருக்கின்றீர்கள். நான் கூட நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்வது தயவு செய்து எங்கள் உருவத்தை வரைந்து டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை கொஞ்சம் தவிருங்கள். அதற்கு மாறாக எங்களுடைய கொள்கைகளை எழுதி டிஜிட்டல் பேனர்களாக வையுங்கள். பெரியாருடைய கொள்கையை, பெரியாருடைய வெற்றியைப்பற்றி எழுதி வையுங்கள். அண்ணா அவர்களுடைய வெற்றியை எழுதி வையுங்கள். திராவிடர் இயக்கத்தினுடைய வெற்றியை எழுதி வையுங்கள். காமராஜரால் ஏற்பட்ட கல்விப் புரட்சியை சுட்டிக்காட்டுங்கள்.அன்றைக்கு எதிர் நீச்சல்தான் எங்களுக்கு. அண்ணன் அழகிரி சொல்லுவார்
பட்டுக்கோட்டை அழகிரி கம்பீரமாகச் சொன்னார். இன்னமும் எங்களுடைய காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. நீங்கள் எங்களை நோக்கி கற்களை எறிகின்ற காரணத்தாலே நாங்கள் அஞ்சிவிடுவோம். பயந்து விடுவோம். பேச்சை முடித்துவிடுவோம். ஓடிவிடுவோம் என்று யாரும் நினைக்காதீர்கள். மாறாக நீங்கள் கற்களை வீச, மாறாக அந்தக் கற்கள் எங்களைப் பார்த்து என்ன சொல்லும் தெரியுமா? அழகிரியே உரத்துப் பேசு. மேலும் உரத்துப் பேசு என்றுதான் சொல்லும் என்று சொன்னார்கள்.
மாஸ்கோ பல்கலையில் பெரியார் பற்றி ஆய்வு
அப்படி எல்லாம் எதிர்நீச்சல் அடித்துக் கடந்த பாதைதான் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பெரியார் சிலை. உலகம் முழுவதும் பெரியாருடைய தத்துவங்கள். உலகத்திலே மாஸ்கோ பல்கலைக் கழகத்திலே பெரியாரை ஆய்வு செய்கிறார்கள். பல்கலைக் கழகத்திற்கே போகாத பெரியார் ஏன் ஆரம்பப் பள்ளிக் கூடமே செல்லாத தந்தை பெரியார் இன்றைக்கு டாக்டர் படிப்புக்குரிய தலைப்பாக ஆகியிருக்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் தந்தை பெரியாருடைய தத்துவங்களை பாடமாக வைக்கக் கூடிய அளவிற்கு சென்றிருக்கிறதென்றால் அதுதான் சமுதாயப் புரட்சி. தந்தை பெரியார் அவர்கள் சமுதாயப் புரட்சியை செய்தார். பெரியாரின் சமூக புட்சியின் விளைவு
பெரியாரின் சமூகப் புரட்சியின் விளைவாகத்தான் நாடாளுமன்றத்திலே பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம். நம்முடைய அருமைச் சகோதரர் ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் இங்கே இருக்கின்றார்கள். அந்த சட்டத்தை நிறைவேற்றிட திருமதி சோனியா காந்தி, நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், நம்முடைய கலைஞர் ஆகி யோருடைய பங்களிப்பு மிக அதிகம். ஆகவே நாங்கள் என்றென்றைக்கும் நன்றியோடு இருப்போம் என்று புதிய சட்டப்பேரவை திறப்பு விழாவிலே சொன்னார்கள்.
கட்சிக்கு அப்பாற்பட்டு சொன்னார்கள். நீங்கள் கூட பார்த்திருக்கலாம். அதிலே எதிர்ப்புக் காட்டுகிறார்களே, ஏன் இந்த எதிர்ப்பை காட்டுகிறீர்கள் என்று நினைப்பீர்கள். நீங்கள் இன்னொரு கோணத்திலே பார்க்க வேண்டும். பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு சரியாக விளங்கும் வெறும் கண்ணாடி அல்ல. அது ஒரு நுண்ணாடி.
இடஒதுக்கீட்டை எதிர்த்த பா.ஜ.க கூட... பெண்களுக்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது என்று நினைத்த நேரத்திலே பெண்களுக்கு பங்களிப்பு வேண்டும் என்று சொன்னது தந்தை பெரியாருடைய தத்துவம். அதனை இப்பொழுது பா.ஜ.க உள்பட ஓட்டுப் போட்டு நிறைவேற்றக் கூடிய அளவிற்கு வந்தது. இடஒதுக்கீடு கொடுத்தார் என்பதற்காக வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தவர்கள் இதே பா.ஜ.க இன்றைக்கு அவர்களே பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு ஓட்டுப் போடக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் பெரியார் என்றைக்கும் வெற்றி பெறுவார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் சொல்லிவிட முடியாது. (கைதட்டல்)
ஆனால் அதே நேரத்திலே இன்னொன்றை நினைக்கலாம். ஏன் ஒரு லாலு பிரசாத்தும், முலாயம் சிங் யாதவும், இன்னொரு சரத்யாதவும். இந்த மூன்று யாதவர்களும் சேர்த்து என்ன முட்டுக் கட்டைப் போட்டதுபோல் இருக்கிறார்கள் என்று சொன்னாபொழுது. தெளிவாக ஒரு கருத்தை அவர்கள் சொன்னார்கள்.
இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை
நாங்கள் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதற்கு எதிரிகள் அல்ல. ஆனால் அதைக் காட்டி மேல் ஜாதிக்காரர்கள் வந்து நேரடியாக வர முடியாதவர்கள். கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் உள்ஒதுக்கீடு இருக்க வேண்டும். பாலியல் நீதி மட்டும் இருந்தால் போதாது. சமூக நீதியும் கலந்த பாலியல் நீதியும் வேண்டும். Gender Justice Combined with Social Justice. இப்பொழுது கொடுக்காவிட்டால் எப்பொழுதுமே கொடுக்க முடியாது. நாங்கள் வஞ்சிக்கப்படுவோம். காலம் காலமாக நாங்கள் வஞ்சிக்கப்பட்டிருந்தோம் என்று சொல்லுவார்கள்.
எனவே நண்பர்களே, பாராளுமன்றத்திலே பெரியார் நுழைந்தார் என்பது மட்டுமல்ல; பெரியாருடைய கொள்கையில் போட்டி. யார் வேகமாக உள்ளே நுழைவது என்பதில் போட்டி.
பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது பெரியார் கொள்கை. ஆனால் பெண்ணுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது. அது தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு, பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கு, சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயப் பெண்ணுக்கு, மற்றவர்கள் எல்லோருக்கும் இடஒதுக்கீடு தேவை என்பதைப் போல வரவேண்டும் என்று நினைக்கிறார்களே, இதிலே பார்த்தால் பெரியார் கொள்கை களுக்குள்ளேயே போட்டி..
-----------------------தொடரும்....."விடுதலை” 31-3-2010
3 comments:
சிலை வழிபாடு கூடாதுன்னு சொன்ன தலைவருக்கு ஊருக்கு ஊரு சிலை திறப்பது ஞாயமாக படுகிறதா தமிழ் ஓவியா.
கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பெரியாருக்கு எப்படிமா தொடர் வெற்றி கிடைக்கும்.
ஜகதீஸ்வரன் அவர்களே பெரியாரையும் தெரியவில்லை.பெரியார் கொள்கையும் உங்களுக்கு தெரியவில்லை. அருள்கூர்ந்து நுனிப்புல் மேயாமல் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு விமர்சியுங்கள்.
பெரியார் சிலை திறப்பு விழாவில் பெரியார் பேசியதை அப்படியே தருகிறேன். படியுங்கள்.தெளியுங்கள்.
இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். மனதறிந்து நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் இயக்கம் நாச இயக்கம் -ஆக்க இயக்கமல்ல. அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலையாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாச வேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள் அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால் நாசவேலை செய்வபவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக்கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின்படி நடப்பவர்கள் ஆவார்கள்.
மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என்றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வரவில்லை, மக்களை ஏமாற்றி வரவில்லை. எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம் சம்பிரதாயம் இல்லை, சாதி இல்லை. இவையாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டுகளைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.
நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் இராமாயணத்தைக் கொளுத்தியவர். புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்தகம் எழுதியவராவார். பத்திரிக்கைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால் நம் கொள்கைகள் - செயல்களை வெளியிடாமல் அதற்கு மாறானவற்றை விளம்பரம் செய்கிறார்கள் என்றாலும் அப்படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30- லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை - வெளியிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த 30 - இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே! அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?
அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால் கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை தேவையில்லை. ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே!
இது இந்த ஆட்சிக்குக் கடவுள் -மதம்- சஸ்திரங்களில் சாதி, பழமைகளில் நம்பிக்கைகக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த "சாமி படங்களை எல்லாம்" நீக்க வேண்டும் என்று உத்தரவு போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!
இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்.
--------24-05-1969 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. விடுதலை 09-06-1969
மூட நம்பிக்கை கூடாதுன்னு பெரியார் சொன்னாரு. இன்னிக்கு அவரோட கல்லறையில் மாலை போடுறது மூட நம்ம்பிக்கையா? இல்லையா?
//பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது பெரியார் கொள்கை. ஆனால் பெண்ணுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது. அது தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு, பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கு, சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயப் பெண்ணுக்கு, மற்றவர்கள் எல்லோருக்கும் இடஒதுக்கீடு தேவை என்பதைப் போல வரவேண்டும் என்று நினைக்கிறார்களே, இதிலே பார்த்தால் பெரியார் கொள்கை களுக்குள்ளேயே போட்டி.. //
அது எப்படி? ஜாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்லுறதும் நீங்கதான். அந்த பத்திலேயே நெறைய ஜாதி, மதம் தெரியுது. உங்களால ஒரே கருத்துள தெளிவா இருக்க முடியாதா? இதுக்கு பேரு தான் பெரியார் கொள்கையா?
Post a Comment