Search This Blog

6.3.10

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாதா?



தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அளித்த தீர்ப்பு அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேசன் நிறுவனத்தின் எஸ்ஸி., எஸ்டி., ஊழியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பதவி உயர்வுகளில் உரிமை கோர முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்நிறுவனத்தில் பொது மேலாளர் பதவிகளில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

பதவி உயர்வு வழங்கும்போது எஸ்ஸி., எஸ்டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று நிருவாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், நிருவாகம் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதன்மீதுதான் அந்தச் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி பின்வரும் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

அரசு நிறுவனங்களில் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசுதான் சட்டம் இயற்றவேண்டும்.

அவ்வாறு சட்டத்தை இயற்றுவதற்கு முன்பாக அந்தப் பிரிவினர் பின்தங்கியுள்ளனர் என்பதற்கும், அரசுப் பணிகளில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பதற்கும் ஆதாரமாகப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கவேண்டும். குறிப்பிட்ட பதவிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவேண்டும் என்றோ, விதிகளைத் தளர்த்தவேண்டும் என்றோ நீதிமன்றம் உத்தரவிட முடியாது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டமல்ல; வேறு சட்டங்களும் இந்த உரிமையை வழங்கவில்லை. எனவே, மனுதாரர்கள் இதை உரிமையாகக் கோர முடியாது என்று நீதிபதி கே. சந்துரு கூறியுள்ளார்.

மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு (15+7.5%) இட ஒதுக்கீடு என்பது அறுதியிடப்பட்ட ஒன்றாகும். புதிதாகப் புள்ளி விவரங்களைச் சேரிக்கவேண்டும் என்ற கேள்வி எழவே வாய்ப்பு கிடையாது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட உரிமையல்ல என்று கூறியிருப்பதுதான் ஆச்சரியமானது.

மண்டல் குழுப் பரிந்துரை தொடர்பான உச்சநீதிமன்ற (பெஞ்ச்) தீர்ப்பில் (16.11.1992) தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு பற்றி ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அய்ந்தாண்டுகளுக்கு அவர்களுக்கான பதவி உயர்வு நீட்டிக்கப்படலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 15.11.1997 வரை எஸ்ஸி., எஸ்டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அனுமதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசமைப்புச் சட்டம் 16(4_ஏ) பிரிவின்கீழ் 77 ஆவது சட்டத் திருத்தம் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு செய்யலாம் என்று கொண்டு வரப்பட்டது (1995 ஆம் ஆண்டே).

உண்மை இவ்வாறு இருக்க பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட உரிமையல்ல என்று நீதிபதி கூறியிருப்பது எப்படி என்று தென்படவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், வங்கிகளில் பதவி உயர்வு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் திரு. தர்மராவ், திரு. சி.டி. செல்வம் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று தீர்ப்பு அளித்தது (9.12.2009).

ஒரே நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறிய தீர்ப்புக்கு மாறாக, தனி நீதிபதி எப்படி இப்படி ஒரு தீர்ப்பு வழங்க முடியும் என்பதும் புரியாத புதிராகவேயிருக்கிறது.

இட ஒதுக்கீடு என்று வருகிறபோது உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகள் ஒரே சீரான சட்ட விதிகளைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கேரள உயர்நீதிமன்றம் மறுத்துத் தீர்ப்பு ஒன்று அண்மையில் வழங்கப்பட்டது. (பொருளாதாரம் மற்றும் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டுமாம். அரசமைப்புச் சட்டத்தில் இதுபோல் எங்கு கூறப்பட்டுள்ளது?)

இந்த முரண்பாடுகள் களையப்படவேண்டும். முரண்பாடாக நீதிமன்றங்கள் அளிக்கும் இத்தகைய தீர்ப்புகள்பற்றிப் பரிசீலனை செய்யவும், தவறுகள் திருத்தப்படவும் ஏதாவது ஒரு வழிமுறை உருவாக்கப்படவேண்டும்.

இல்லையென்றால் சட்டத்தின் ஆட்சி என்பதற்கு மாறாக அவரவர் மனதில்பட்டதைக் கூறலாம் என்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடும். அந்த நிலை நாட்டுக்கு நல்லதல்ல!

--------------------"விடுதலை” தலையங்கம் 6-3-2010

1 comments:

Thamizhan said...

அரசியல் சட்டத்தில் இருப்பதை நிறைவேற்றத்தான் நீதி பதிகள்.
அவர்கள் சட்டத்தை அவரவர் விருப்பம் போல் வளைத்துப் பார்ப்பதில் தான் இருக்கிறார்கள்.
பின்னர் ரெண்டு பெஞ்சு, அய்ந்து பெஞ்ச், உச்ச நீதிமன்றம், வீட்டிற்குப் போகும் முதல்நாள் அநீதியான தீர்ப்பு என்று நாற்காலிகளை அசிங்கப் படுத்துகிறார்கள்.