ஜாதி ஒழிய அதற்கான அடிப்படைகள் ஒழிக்கப்பட வேண்டும்!
எனக்குக் கொடுத்த வரவேற்பிதழில் ஒரு வேடிக்கையான பாட்டின் சில அடிகள் குறிக்கப்பட்டு உள்ளன. அதாவது "ஏழையென்றும் அடிமை என்றும் எவனுமில்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே" என்பதாக. சாதாரணமாக இதற்கு என்ன அர்த்தம்? இரண்டு அர்த்தங்கள் சொல்லலாம்; ஓர் அர்த்தம் ஏழை, அடிமை என்பவன் எல்லா ஜாதியிலும் தான் இருக்கிறான் என்பது. இரண்டாவது அர்த்தம் ஜாதியினால் எவனையும் ஏழையாக இருக்கிறான், பணக்காரனாக இருக்கிறான் என்று சொல்லிவிட முடியாது.
ஒருவனுக்கு ஏழ்மைக்கும் ஒருவனுக்குப் பணக்காரத்தன்மைக்கும் காரணம் அவனவனின் ஜாதியில்லா காரணம் என்பதாகக் கொள்ளலாம். ஏன் இந்தப் படியா பாரதியார் சொன்னார் என்றால், ஜாதியின் காரணமாகத்தான் நாம் ஏழையாகவும், அடிமையாகவும் இருக்கிறோம் என்ற உண்மையை நம் மக்கள் உணர்ந்து விட்டால் ஜாதிகளுக்கெல்லாம் கெடுதல் வந்துவிடுகிறது. அதன் காரணமாகப் பார்ப்பனர்களின் சுகபோகமும் ஆதிக்கமும் அழிந்துவிடுமே என்பதற்கு ஆக மிக ஜாக்கிரதையாக மேல் ஜாதிக்காரன் சார்பாகப் பாடியிருக்கிறார்.
உள்ளபடி பார்ப்பான் சூத்திரன், பறையன் முதலியவர்கள் ஜாதியில் இல்லை, எல்லோரும் மனிதர்கள்தான் என்றால் இந்தப்படியான பேதங்களுக்கு ஆன மூலங்களை, ஆதாரங்களை அழிக்க முற்பட்டிருக்க வேண்டாமா? பாரதியாரே, பார்ப்பான், சூத்திரன், பறையன் என்பதாகப் பேதம் இருக்கிறதைப் பற்றி ஒத்துக் கொண்டிருக்கிறார். பாடுகிறாரே பாட்டில் "ஆயிரமுண்டிங்கு ஜாதி; எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி" என்று; அதாவது "எங்கள் நாட்டில் ஆயிரம் ஜாதிகள் இருக்கும்; அதற்கு ஆக, அந்நியன் மற்றவன் வந்து கேட்கக்கூடாது. அவனுக்கென்ன இங்கு வேலை" என்கிறார்!
படகு ஓட்டைதான்: ஆனால், ஆற்றுத் தண்ணீர் மட்டும் உள்ளே வரக்கூடாது என்றால் அது புத்திசாலித்தனமானது என்று சொல்ல முடியுமா? மற்றும் ஜாதிபேதத்தை வலியுறுத்தித்தானே பாரதியார் பாட்டுகளின் பல இடங்களிலும் காணப்படுகிறது. ஜாதி ஒழிவதற்கு என்று அவர் பாட்டிலே எங்காவது ஏதாவது பாடியிருக்கிறாரா? இன்னும் பாடுகிறார், "இது ஆரிய நாடு, ஆரியர் நாட்டிலே ஆரியர்கள் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்கிட," என்று! மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சோஷியலிஸ்டு, மற்ற எந்தக் கட்சியினாலும் அந்தக் கட்சிகள் என்பவைகள் சாதி ஒழிய என்று பாடுபடுகிறார்களா? இந்த காந்தியார் தான் ஆகட்டும். இந்தப்படி அவர் வாயிலே வந்திருக்குமா? சொல்லியிருப்பாரா? அவர் சாகும் வரை, கொல்லப்படும் வரை சொல்லியிருப்பாரா? இந்த அரசமைப்புச் சட்டத்தில்தான் ஆகட்டும் "ஜாதி ஒழிய" என்று இருக்கிறதா? இந்த முறை மாற வேண்டும் என்று இருக்கிறதா? மாறாக இந்த ஜாதிகள் அமைப்பு நிலைபெற்று நின்று நிலவும்படியான தன்மையில் தானே அரசமைப்புச் சட்டம் என்பதும் இருக்கிறது.
இவைகளெல்லாம் இந்த முறைகளெல்லாம் ஒழிய வேண்டும்என்று எங்களைத் தவிர யார் பாடுபடுகிறார்கள்? மற்றவர்கள் சொல்லுகிற சீர்திருத்தத்தைச், ஜாதி பேதத்தை வெள்ளைக்காரனே ஒழித்து விட்டுப் போய் விட்டானே! அவன் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பஞ்சாயத்து போர்டு, ஜில்லா போர்டு முனிசிபாலிடிகளில் பிரசிடெண்டாக (தலைவராக) கூட இடம் கொடுத்தானே! நண்பர் சிவராஜைச் சட்டசபை மெம்பராக்கினானே! 'பறையன்கள்' என்று சொன்னால் அபராதம் என்று சட்டத்தில் எழுதி வைத்தான்; அது இன்னமும் இருக்கிறது.
இந்தியன் பீனல் கோட்டிலே (இந்தியத் தண்டனைச் சட்டத்திலே) வகுப்புத் துவேஷச் சட்டம் இன்னமும் இருக்கிறதே! இல்லை என்று சட்டம் செய்யப்பட்டுவிட்டது என்றால் வகுப்புக்களின் மீது துவேஷம் (வெறுப்பு) என்பது எப்படி ஏற்பட முடியும்? ராஜா இல்லாத நாட்டில் ராஜத்துவேஷம் குற்றம் என்று சொல்ல முடியுமா? முடியாதே!
வகுப்புக்களை வைத்துக் கொண்டு அந்த வகுப்புக்களின் அமைப்பு, நடப்பு, அதனால் ஏற்படும் தீமைகள், நாம் அடையும் இழிவும், கீழ்மையும் பற்றிச் சொன்னால், அது வகுப்புத் துவேஷம் என்று சொல்லி, அச்சட்டத்தின்படி திருச்சியிலே 6-மாதம் என்னைத் தண்டித்தார்கள். எதற்காக?
ஜாதிகள் ஒழிய வேண்டுமென்றும் பார்ப்பனர்களைக் குறை சொன்னதற்காகவும் அதற்குக் கேசு (வழக்கு) என்றால் ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்று தானே! உள்ளபடி திருப்பித் திருப்பி அழுத்தமாகக் கூறுகிறேன்: ஜாதி ஒழிய வேண்டுமானால் சாதிக்கு உண்டான ஆதாரங்கள் ஒழியவேண்டும் அவை கடவுள் பேரால் இருந்தாலும், மத சாஸ்திர புராணங்கள் பேரால் இருந்தாலும் சரி. அவைகளை ஒழித்தாக வேண்டும். இவைகளெல்லாம் எனக்குத் தோன்றிய அளவில் சொன்னேன்.
--------------------------- 10.03.1954-இல் ஏத்தாப்பூர் பஞ்சாயத்து போர்டு வரவேற்பில் தந்தை பெரியார் விளக்கம்- ”விடுதலை”, 16.03.1954
2 comments:
முதலாளிகளின் பின்பலம்
அரசாங்கம் முதலாளிகளுக்கு அனுசரணையாக இல்லையானால், தொழிலாளிகளின் சமூகத்தை எதிர்த்துத் தனிப்பட்ட முதலாளிகள் எத்தனை நாள் வாழ முடியும்?
_ (விடுதலை, 20.1.1948)
Read more: http://viduthalai.in/e-paper/88901.html#ixzz3FYtx3gVF
பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?
கேள்வி: ஏன்யா, பகல் கொள்ளை, பகல் கொள்ளைன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாய்யா?
பதில்: அதென்னய்யா, நீ உலகம் புரியாத ஆளா இருக்கிறீயே, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயிலை உட்ராறு பாரு, நம்ம மோடி, அதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளை.
கேள்வி: எப்படிய்யா, பிரிமியம் ரயிலை பகல் கொள்ளைன்னு சொல்றே,
பதில்: பண்டிகை காலத்துலே, கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்ன்னு, விடுவாங்க. அந்த சிறப்பு ரயிலுக்கும் அதே கட்டணம்தான். ஆனா, நம்ம மோடி இருக்கார்லே, அதாவது, நான் டீ போட்டவன், சாதாரண ஆள்னு சொல்லிகிட்டு, அதானிங்கிற தொழிலதிபர் விமானத்திலே பறந்துகிட்டு இருக்கிற ஏழை மகராசன், அவர் என்ன செஞ்சிட்டார்னா, சிறப்பு ரயிலை, பிரிமியம் ரயில்ன்னு பேரை மாத்தினார். அதோட, கட் டணத்தை, அய்ந்து மடங்கு உசத்திப்புட்டார். அப்புறம், நீங்க டிக்கெட் வாங்கிட்டு, போக லைன்னா, பணமும் திருப்பி கிடைக்காது.
இப்ப புரியுதா, இதுக்குப் பெயர்தான், பகல் கொள்ளைன்னு.
கேள்வி கேட்டவர்: ஆகா, பேஷா புரியுது. ஆப் கி பார், மோடி சர்க்கார்ன்னு புரியுது.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/e-paper/88905.html#ixzz3FYukpTch
Post a Comment