மகளிர் உரிமை மகுடம் சூட்டிக் கொள்ள திராவிடர் இயக்கத்தைத் தோளில் சுமப்பீர்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
மகளிர் முழு உரிமை பெற வேண்டுமானால் திராவிடர் இயக்கச் சிந்தனைகளை வரித்துக் கொள்ள வேண்டும் என்று - உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று உலக மகளிர் நாள் என்கிறபோது, நம் நாட்டில் நமது மகளிர் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர்; வாழுகின்றனர் என்பதையும், இவர்களது அடிமைத் தன்மை நீங்கி, இன்று அதிகார உரிமை பெற்றவர்களாகத் திகழ்வதற்கு யார் முக்கிய காரணம் என்பதையும் இன்று சிந்திக்க வேண்டிய நாள் ஆகும்.
பஞ்சமர்களுக்கும் கீழே பெண்கள்
1. பிறப்பினால் உயர்வு, தாழ்வு கூறும் நம் நாட்டுச் சமூக அமைப்பில், ஜாதி என்பதுபோலவே, மற்றொரு பேதம் வளர்க்கும் அமைப்பு ஆண் - பெண் பிரிவுகளுக்கும், அதாவது பிறவி பேதம் காரணமாக எப்படி உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது உருவாக்கப்பட்டு, பிராமணர் - சூத்திரர் - பஞ்சமர் என்ற வர்ணாசிரமப் பிரிவுகளை நிலைநாட்டினார்களோ, அதே வரிசையில், அந்த அய்ந்து பிரிவுகளுக்கும் கீழே வைக்கப்பட்டுள்ளவர்கள்தான் பெண்கள் - அவர்கள் எந்த ஜாதியானாலும் அடுக்கின் கீழே ஆறாவதாக - அமர்த்தப்பட்டவரே மகளிர்!
மனுவின் பார்வையில்...
எனவே அடிமைகளுக்கும் கீழே உள்ள அடிமைகளான இந்த மகளிருக்கு
1) படிக்க உரிமையில்லை.
2) சொத்துரிமை இல்லை.
3) தனக்கென சுதந்திரத்துடன் ஒரு அடையாளத் துடன் வாழ உரிமையில்லை.
4) கற்பு என்ற ஒரு பாலருக்கு மட்டுமே போடப்பட்ட இரும்பு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய முடியாத நிலை!
அதற்கான மனுவின் சுலோகங்கள் இதோ சில எடுத்துக்காட்டுக்கள்:
மதராடவர் தருமம் என்ற 9ஆவது அத்தியாயத்தில், கணவன் முதலிய பந்துக்கள் இரவிலும் பகலிலும், ஒரு காரியத்திலும் மாதரைச் சுவாதீனமில்லாதவர்களாக செய்ய வேண்டியது. அவர்கள் கெட்டதான விஷயப் பற்றுள்ளவர்களாக விருந்தாலும் தங்கள்வசத்தி லிருக்கச் செய்ய வேண்டியது. மாதர் இளமைப் பருவத்தில் பிதாவினாலும் யௌவனத்திற் கணவனாலும்,மூப்பில் மைந்தனாலும், காக்கத்தக்கவ ராகையால் எக்காலமும் மாதர் சுவா தீனமுடையவரல்லவர். (சுலோகம் 2,3)
மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடையவராதலால் கணவனாற்காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக் கின்றார்கள்.
மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதேயுண்டானதென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய் துரோகசிந்தை இவற் றினை மாதர் பொருட்டே மநுவானவர் கற்பித்தார். (சுலோகம் 15,16,17)
இது மட்டுமா?
பிரபலமாக பிரச்சாரம் செய்யப்படும் பகவத் கீதை பெண்களை பாவயோனிகள் என்று கொச்சைப் படுத்துகிறது!
மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களான ஹிந்துக்களுக்குசட்டம் ஹிந்துலா (Hindu law) அது முழுக்க, முழுக்க மனு போன்றவைகளையே அடிப் படையாகக் கொண்டு நீதிமன்றங்களில் நீதி வழங்கப் பட்டது. இதனை எதிர்த்து திராவிடர் இயக்கம், அண்ணல் அம்பேத்கர் மற்றும் சில முற்போக்கு சிந்தனையாளர்கள் குரல் கொடுத்தும் போராடியும், மகளிரிடையே விழிப் புணர்ச்சியையும் ஏற்படுத்தியதால், இன்று ஓரளவு விடியல் - விடுதலை - சமத்துவம், அதிகாரப் பகிர்வு கிடைத் துள்ளன!
பெண்கள் மாநாட்டில்...
13.11.1938இல் தமிழ்நாட்டில் உள்ள நன்றியுள்ள மகளிர் தலைநகரில் கூடி,
இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் வரலாற்றின் வைர வரிகள் ஆகும். நன்றி உணர்வின் நல்லதோர் சான்றாகும்.
(மறைமலைஅடிகளார் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னின்று நடத்தியவர்கள் தாமரைக் கண்ணி அம்மையார், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள், டாக்டர் தர்மாம்பாள், திருவாட்டி மலர்முகத்தம்மாள்)
சுயமரியாதை இயக்கத்தின் பணிகள்
அதற்கு முன்பே குடிஅரசு மூலம் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் சுயமரியாதை இயக்கமும், அதற்குமுன் ஆண்ட ஜஸ்டீஸ் கட்சி என்று அழைக்கப்பட்ட திராவிடர் இயக்க ஆட்சியும் மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பாதை அமைத்துப் பயணம் செய்வித்து பயன் பெற வைத்தன!
1967 முதல் அண்ணா தலைமையில் உதயமான தி.மு.க. ஆட்சி, லட்சிய ரீதியாக தொடர்ந்த கலைஞர் தலைமையிலான திராவிடர் இயக்க ஆட்சி, இப்படி பற்பல திராவிடர் இயக்க ஆட்சிகள், அக்கட்சி மத்தியில் பங்கு பெற்றதால் ஏற்பட்ட சட்டமாற்றம் - ஆண்களை ஒத்த சொத்துரிமை (2005) சட்டமானது வரை எத்தனையோ அமைதிப் புரட்சிகள் நடந்துள்ளன!
பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சியே!
இன்று நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஒரு பெண்மணி - அதுவும் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்மணி என்பதும், இதற்கு முதல் முதல் பெண்களுக்கு வாக்குரிமை என்பதை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வருவதற்கு முன்னரே அளித்தது அன்றைய நீதிக்கட்சி ஆட்சிதான் என்பதும் சென்னை மாநில திராவிடர் ஆட்சிதான் என்ற வரலாறும் பலர் அறியாத ஒன்றாகும்!
பெண்கள் மகுடம் சூட...
மகளிருக்கு சம சொத்துரிமையை - டாக்டர் அம்பேத் கர் கொண்டு வந்த இந்து சட்டத் திருத்த மசோதாவை அன்றைய குடிஅரசுத் தலைவரே ஏற்காததால் அண்ணல் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார்.
அதே காங்கிரசு - மத்திய ஆட்சி தி.மு.க. திராவிடர் இயக்கத்தின் துணையோடு வந்த நிலையில் சட்டமாக நிறைவேற்றி வரலாறு படைத்தது!
மகளிர் உரிமை என்பது ஆண்கள் பார்த்து அளிப்பது அல்ல; மகளிரே விழிப்புணர்வு பெற்று தட்டிப் பறிக்க வேண்டிய தகத்தகாய ஒளிவீசும் உரிமை!
அதே நேரத்தில் படிப்பில் வளர்ச்சி, பதவியில் முன்னேற்றம் - மகளிருக்குச் சிறப்புதான். ஆனால் இன்னமும் அலங்கார பொம்மைகளாகவோ, பிள்ளைப் பேறுக்குத் தவமாய் தவம் கிடக்கும் மனநிலை உடையோ ராகவோவா வாழுவது? தெளிவு வேண்டும். உரிமையின் சிறப்பு அடக்கத்தில்தான், எளிமையில்தான் உள்ளது என்று தந்தை பெரியார் அறிவுறுத்தினார். மறவாதீர் தோழியர்களே!
புரட்சிக் கவிஞர் பாடினார்:
அக்கா அக்கா என்றழைக்கும் (கூண்டுக்)கிளியே
சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!
அக்கா வந்து தர?
என்று எழுதியதை நினைவில் நிறுத்தி,
மகளிர் உரிமை காக்க திராவிடர் இயக்கத்தைத் தன் தோளில் சுமந்தால், மகளிர் தலைகளில் மனித உரிமைகள் மகுடம் தானே வந்து அமரும் என்பதை இந்த நாளில் உணர்ந்து செயல்படட்டும்!
வாழ்த்துக்கள்.
பெரியார் வாழ்க!
பெண்ணுரிமை ஓங்குக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
--------------"விடுதலை” 8-3-2012
14 comments:
மார்ச்சு 8
மார்ச்சு 8 உலக மகளிர் நாளாகக் கடைபிடிக்கப் படுகிறது.
உலகம் முழுமையுமே ஆண்கள் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. இன்னும், அமெரிக்கா விலோ, ருசியாவிலோ, சீனாவிலோ கூட ஒரு பெண் அதிகாரப் பீடத் தின் தலைமைப் பீடத்தை எட்டிப் பிடிக்க முடிய வில்லை.
மக்கள் தொகையில் சரி பகுதி பெண்கள் என்ற கணக்கும்கூட வீழ்ச்சி அடைந்து விட்டது.
சிசு மரணம் என்று எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவில் ஆண் சிசுக்களைவிட பெண் சிசுக்களின் மரணம் 20 விழுக்காடு கூடுதலாகும்.
சட்டமன்றம், நாடாளு மன்றங்களில் பெண் களின் விழுக்காடு 10 அய்த்தாண்டுவதற்கே தடுமாடுகிறது.
1996 முதல் மகளிர் மசோதா நொண்டியடித் துக் கொண்டிருக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் என் பதில் கட்சி வேறுபாடுகள் கிடையாது - இதில் மட்டும் அப்படியொரு ஒற்றுமை!
உண்மையில் குழந் தையை ஈன்று புரந் தரு தலில் தாய்க்கு நிகராக யாரைச் சொல்ல முடியும்?
ஒரு தகவல் - இப் பொழுது நினைத்தால் கூட உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கவே செய்கின்றன.
தன் குழந்தை களுக்கு தன் ரத்தத்தை பாலாக்கிக் கொடுக் கிறவள் தாய் என்பது உலகறிந்த ஒன்று. தன் ரத்தத்தையே குழந்தை களுக்குக் கொடுத்து அவர்களைக் காத்த தாயைப் பற்றிக் கேள்விப் படுவது அதிசயம்தானே.
1989-ஆம் ஆண்டில் ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில், ஒரு தாய் தனது மூன்று வயது குழந்தையுடன் இடிபாடு களுக்கு இடையில் சிக்கி யிருந்த 8 நாள்களும், குழந்தைக்கு தனது ரத்தத்தைக் கொடுத்தே, அது பசியால் இறந்து விடாதபடி காப்பாற்றி யிருக்கிறாள். தன் விரல் களை ஊசியால் குத்திக் குத்தி, ரத்தத்தை எடுத்து குழந்தைக்கு ஊட்டி வந்திருக்கிறாள். ஒரு தாய்க்கு இணையாக உலகில் ஏதும் இல்லை என்பது இதன் மூலம் அறிய முடிகிறது அல்லவா!
உலகில் எங்கு யுத்தம் நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஈழத்திலிருந்து ஈராக்கு வரை இதுதான் நிலை. ஈராக்கில் என்ன கொடுமை என்றால் அமெரிக்காவின் குண்டு நெருப்பில் தங்கள் கண வன்களை இழந்த பெண் கள் தங்கள் குழந்தை களைக் காப்பாற்றுவதற் காக விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்பது எவ்வளவுக் கொடுமை யான தகவல்!
ஆண்டாண்டு மகளிர் நாள் வந்து செல்கிறது! ஆனாலும் தந்தை பெரி யாரின் பெண்ணியம் கூடினால் புத்துலகம் பிறக்கும்.
வெல்லட்டும்
பெரியாரியம்!
- மயிலாடன் 8-3-2012
தலைநகரை நோக்கி கழக மகளிர்
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் மதசிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள், அதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய முறைகள் இவற்றோடு அவர்களுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் மற்றும் ஆலோ சனை மாநாடு புதுடில்லியில் மார்ச் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங் களின் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக பவர் அமைப்பின் இயக்குநர் பேரா.பர்வீன், பேராசிரியர் தவமணி, பேராசிரியர் டெய்சி மணியம்மை, மருத்துவர் பிறைநுதல் செல்வி, ஷேர் அறக்கட்டளை தலைவர் மேரி ஆக்சிலியா, வழக்கறிஞர் வீரமர்த்தினி, பொறியாளர் கனிமொழி, சமூக ஆர்வலர்கள் திருமகள், தகடூர் தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேர் அடங்கிய பிரதிநிதிக்குழு கலந்து கொண்டது.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட நம் குழுவினர் பிப்ரவரி 29ஆம் நாள் பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் இருந்து புறப்பட்டனர். அவர்களை திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் கோ.சாமிதுரை, பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் சங்க பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி, வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவர் தங்கமணி, வெற்றிச் செல்வி ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பெண்கள் விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தந்தைப் பெரியார் ஆற்றிய பணிகள் குறித்த செய்திகளை தெரிவித்து மாநாட்டில் இதனை வெளிப் படுத்த வேண்டுமென்று வழிகாட்டியும் பல அரிய செய்திகளை தமிழர் தலைவர் அய்யா அவர்கள் தொலைபேசியில் தெரிவித்து அனைவரையும் வாழ்த்தி அனுப்பினார்.
மார்ச் 2ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தலைநகரைச் சென்றடைந்த நம் குழுவி னரை வரவேற்று தங்கும்வசதி மற்றும் உணவு வசதிகளைச் சிறப்பாக செய்து கொடுத்தனர். இம்மாநாட்டினை ஏற்பாடு செய்தவர்கள் தேசிய மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் குழந்தைகள் முன்னேற்ற நிறுவன (National Institute of Çblic co-oprative and child development) வரவேற்பு குழுவினர்.
மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு NWCD ன் பொருளாதார ஆலோசகர் திருமதி. சங்கீதா வர்மா ஒருங்கிணைக்க, ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி பேராசிரி யர் பி.எஸ்.கிருஷ்ணன், தேசிய பிற்படுத்தப் பட்ட ஆணைய உறுப்பினர் திரு.கார்வேந்தன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு துறையின் கூடுதல் செயலர் திரு.சுதிர் குமார் கைத்தறித்துறையின் தலைமை பொறுப்பாளர் திரு.சவுபி அய்.ஏ.எஸ். ஆகியோர் கருத்துரை வழங்கினர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. கிருஷ்ணாதிராத் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.
உணவு இடைவேளைக்குப் பின் பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறையின் பொருளாதார வாழ் வாதாரம்,வேளாண் சாரா துறைகளின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி, மீனவர் வளர்ச்சி, மற்றும் கைவினைக் கலைஞர்களின் வளர்ச்சி என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பரிந் துரைக்கப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் நடத்தப்பட்டது.
அதுபோன்றே மார்ச் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு இரண்டாம்நாள் மாநாடு தொடங்கியது. இம்மாநாட்டிற்கு சமூக நீதி மற்றும் மேம்பாடு, சிறுபான்மை நலத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித்துறை, மற்றும் ஊராட்சித்துறைகளின் செயலா ளர்கள் கருத்துரை வழங்கினர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு பிரதிநிதிகள் மனித உரிமை, முன் தொடக்க கல்வி, தொடக்க கல்வி, உயர்கல்வி, தொழிற் கல்வி உள்ளிட்ட கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் சத்துணவு, மலைவாழ் மக்கள் பிரிவு, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் குறிப் பிட்ட பிரிவு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கலந்தாலோசனை நடத்தப் பட்டது. இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாட்டில் பிரதிநிதிகளாகச் சென்ற நம் குழுவினரால் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களாவன.
*உயர்கல்வித்துறையில் தொழிற்கல்வி பிரிவில் (vocational, groups) கைத்தறி கல்வியை, சிறந்த உள்கட்டமைப்பு பணிகளோடு இணைத்தல்.
*பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத் தப்பட்ட பெண்கள் நலனுக்கென்று அரசு அமைக்கும் நலத்திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
*திறன்வளர்க்கும் தொழிற்கல்வி முறையை பாடத் திட்டங்களில் அமல் படுத்துதல்
*கைத்தறித்துறையில் புதிய தொழில் நுட்ப வளர்ச்சிக்கான நிதி உதவியைப் பெருக்குதல்.
*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறிப்பாக, விவசாயம் சார்ந்த தொழி லாளர்களுக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத் துதல்.
* கடன் வசதி, முன்னுரிமை மற்றும் குறைந்த வட்டி விகிதம், பாதுகாப்பு கல்வியினை மேல்நிலை மற்றும் உயர் கல்வித் துறையில் தனிப்பட்ட ஒரு பாடப்பிரிவாக (subject) அறிமுகப் படுத்துதல்.
* அனைத்து நலத்திட்டங்களையும் ஊடகங்களின் மூலம் தெரிவித்தல்.
*மத்திய அரசு கல்வித்துறையில் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகை (scholarship) தந்தை பெரியார், நாராயணகுரு, ஜோதி பாபுலே ஆகிய தலைவர்களின் பெயரில் வழங்குவது.
* பெண்கள் காலங்காலமாக செய்துவந்த தொழில் அனுபவங்களுக்கு மாற்றாக, அவர்கள் பங்கெடுக்காத புதிய துறைகளிலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பெண்கள் கோயில்களில் பணி அமர்த்தப்பட வேண்டும்.
* 33 சதவிகிதம் ஒதுக்கீட்டில் பெண் களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
* 27 சதவிகிதம் ஒதுக்கீடு, பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இன்னும் பிரிக்கப்பட வேண்டும்.
*பிற்படுத்தப்பட்ட பெண் தொழிலாளர்கள் அதிகம் பயணிக்கும் இரயில் பொதுப் பெட்டிகள் பெண்கள் பெட்டிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
*13,000 மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கிய பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
*பஞ்சாயத்து ராஜ் முறையிலான பெண்களுக்கான இடஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மத்திய அளவில் கொண்டு வரப்படவேண்டும்.
பெண் சிசுக்கொலை சட்டங்கள், இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். பெண் வாரிசு இல்லாத குடும்பங்களுக்கு குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
*அறியா வயதுப் பருவத்தில் தவறாக கர்ப்பம் தரிக்கும் குழந்தைகளின் (child mother) எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்கும் பொருட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும். இருபால் விடலைப் பருவத்தினரை சீரழிப்பதில் சினிமாவும், தொலைக்காட்சி தொடர் களும் பெரும்பங்கு வகிக்கின்றன.
பெண்கள் மட்டுமே பங்குபெறும் தணிக் கைத்துறை சினிமாக்களும், தொலைக் காட்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
இம்மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதி களாக வந்திருந்த அனைவருக்கும் மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறையில் குறிப்பிடப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் நகலெடுத்து கொடுக்கப்பட்டது. அனை வருக்கும் MODERN RATIONALIST புத்தகமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி மார்ச் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவுற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்குபெற்ற குழுவினரை சந்தித்து அளவளாவியும், மாநாட்டுக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும் நம் குழுவினர் இந்தியத் தலைநகர் புதுதில்லியிலிருந்து தமிழகத் தலைநகர் சென்னை நோக்கி பயணப் பட்டனர். 8-3-2012
திராவிடர் இயக்கமும் பெண்களும்
இந்நாள் உலக மகளிர் நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை - இந்து மத ஆதிக்கம் நிலை நின்ற இச்சமூகத்தில் பெண்கள் நான்கு வருணத்துக்குள்ளும்கூட கொண்டு வரத் தகுதியற்றவர்கள் என்பதுதான் உண்மை நிலை.
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17).
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும் யௌனத் தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டிய தல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது.
(மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148).
இப்படிப்பட்ட சமூக அமைப்பில் இந்தியாவிலேயே பெண்ணுரிமைக்காகப் போர்க் குரல் கொடுத்தது தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்க மாகும்.
யாரும் கனவு காணாத காலத்திலேயே, யாருடைய கோரிக்கையின் அடிப்படையிலும் அல்லாமல், தன் சிந்தனையின் ஆற்றலால், மனிதநேய உணர்வின் மேம்பாட்டால் இவற்றைவிட வேறு யாரும் சிந்திக்கவும் முடியாது - போராடவும் முடியாது என்கிற அளவுக்குப் புரட்சிகரமான உயர் எண்ணங்களை உரத்த முறையில் சொன்னவர் தந்தை பெரியாரின்றி வேறு யார்?
தன் தங்கையின் ஒன்பது வயது பெண்ணின் கணவர் மறைந்த நிலையில், வீட்டார் எதிர்ப்பையும் கடந்து ஊரார் தூற்றலையும் தூக்கி எறிந்து, மறுமணம் செய்து வைத்ததிலிருந்து அவரது புரட்சிகர சிந்தனையின் வித்து இம்மண்ணில் விழுந்தது.
பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள் என்னும் புயல் நிகர்த்த வினாவினை எழுப்பியவர்! பெண்களே கர்ப்பப்பையைத் தூக்கி எறியுங்கள் என்கிற அளவுக்குப் பூகம்பமாய் வெடித்த சிந்தனையின் கருப்பை பெரியார்.
அவர் நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைக்கேகூட அதிர்ச்சி அலைகளைப் பிரசவிக்கக் கூடியவை.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று. 24.11.1928இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போதுமே!
(1) மக்கள் பிறவியிலும் ஆண், பெண் என்கிற தன்மையிலும் உள்ள உயர்வு - தாழ்வு என்கிற வித் தியாசங்கள் கண்டிப்பாய் ஒடுக்கப்பட வேண்டும்.
(அ) குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
(ஆ) புருஷன் மரணமடைந்து விட்டால், அவன் சொத்து முழுமையும் பெண் சாதிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.
(இ) பாகம் பிரிக்காத குடும்பங்களில் கணவன் இறந்து போனால் அக்கணவனுக்குள்ள சகல உரிமைகளும் சொத்துகளும், அவனது மனைவிக்கு சர்வ சுதந்திரமாக அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.
(ஈ) எல்லா பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண், பெண் என்கின்ற வித்தியாசமில்லாமலும் உயர்வு - தாழ்வு என்கின்ற வித்தியாசமில்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகு தீர்மானங்கள் 84 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றப்பட்டன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்னொரு முக்கிய தகவல்:
இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியது நீதிக்கட்சி ஆட்சியில்தான் (1921). கோவில்களில் பெண்களைப் பொட்டுக்கட்டி விடும் தேவதாசி முறையை ஒழித்ததும் நீதிக்கட்சி ஆட்சியில்தான் (1930).
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலே யேயாகும் (1990).
திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று வாயைத் திறப்பவர்களின் வாய்களை அடைப்பதற்கு இவை போதும் அல்லவா! 8-3-2012
தமிழகத்தில் பெண் கல்வி
1866ஆம் ஆண்டில்தான் பெண் கல்வி குறித்த சிந்தனையானது ஆங்கிலேயரது தீவிரமான கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
1865-லிருந்து 1870ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வியினைக் கற்ற பெண்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
ஆண்டுகள் பள்ளிக்கூடங்களில் இசுலாமியப் பெண்களின் பெண்களின் எண்ணிக்கை எண்ணிக்கை
1865-66 4,111 5
1866-67 4,638 8
1868-69 8,099 3
1869-70 9,421 7
1872-73இல் அரசாங்கம் இசுலாமிய இனத்தவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டது. இதனால் இவ்வாண்டில் ஆளுநராக இருந்த ஈ.பி.பவல் என்பவர் இசுலாமியப் பெண்களின் திறமையையும், அறிவாற்றலையும் உயர்த்துதல் பற்றி உயர்குடி முகமதியர்களிடம் கலந்து ஆலோசித்தார். இதன் பின்னர், இசுலாமியப் பெண் கல்வி வளர்ச்சிக்கெனக் குறிப்பிடத்தக்க நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகள் பெரும்பான்மை கிறித்துவ சமயப் பரப்பாளர்களால் நடத்தப்பட்டதால் அவற்றில் இசுலாமியப் பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே கல்வி பயின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் சென்ற ஆண்டுகளை விடவும் இவ்வெண்ணிக்கை கூடுதலாக இருந்ததை அறிய முடிகிறது.
ஆண்டுகள் சமயப்பரப்பு அரசுப் பள்ளிகளில் பள்ளிகளிலும் இசுலாமியப் பெண்களின் அறநிலையங்களிலும் எண்ணிக்கை பயின்ற இசுலாமியப் பெண்களின் எண்ணிக்கை
1871-72 7 5
1872-73 - 58
1873-74 67 238
1874-75 9 615
1871ஆம் ஆண்டு பொதுவாகப் பெண்கல்வி வளர்ச்சிக்கு ஆங்கில அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை நல்கியது. இருப்பினும், 1871ஆம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 620 பெண் மக்கள் தொகைக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே படித்தவராக இருந்தார். இவ்வாண்டில் உள்ளூரில் பயிலும் பெண்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகையானது தொடக்கப் பள்ளிகளில் பயில்பவரில் பதினாரு பேருக்கு நடுவிலே பள்ளிகளில் பயில்பவரில் முதல் நான்கு பேருக்கும் உயர்கல்விக்கு 75 விழுக்காடும் வழங்க ஆணையிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அவர்களுக்கு ஊதிய உதவித்தொகை வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
ஆனால், எந்தப் பள்ளிக்கும் ஊதிய உதவித் தொகை வழங்கப்படவும் இல்லை. இது தொடங்கப்படவும் இல்லை என்பதை அறிய முடிகிறது. மேலும் மூன்று மாதத்திற்கான சராசரி வருகைப் பதிவேடு இருபது மாணவிகளைக் கூட கொண்டதாக அமையவில்லை. இதற்கேற்றாற் போல், மொத்த ஊதியத்துடன் ஒரு பாதியைக் கூட கொண்டதாக அவ்வுதவித்தொகை அமையவில்லை.
ஆசிரியைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வரையறைகளைக் கொண்டு பயிற்சி பெற்ற சான்றிதழ்களை அல்லது சாதாரணச் சான்றிதழ்களை வைத்திருந்த ஆசிரியைகளுக்கு ஊதிய உதவித் தொகை வழங்கப்பட்டது. சான்றிதழ் பெறாத ஆசிரியைகளுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த ஊதியத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கும் மிகாமல் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இவர்களின் கல்வித் தகுதி நடுநிலை அல்லது உயர்நிலை அல்லது உயர் தொடக்க நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
பல்வேறு கல்வி நிலையங்களில் பயின்ற பெண்களின் எண்ணிக்கை:
1870ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8010 பெண்கள் கல்வி பயின்றனர். இவற்றில் சென்னையில் 3440 பெண்களும், திருநெல்வேலியில் 2317 பெண்களும், தஞ்சாவூரில் 689 பெண்களும் பயின்றனர். எல்லா மாவட்டங்களை விடவும், சென்னையில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் கல்வி பயின்றது தெரிய வருகிறது.
1865ஆம் ஆண்டில் இருந்து 1871ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வியில் பெண்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர் என்பதைப் பின்வரும் அட்டவணையால் அறிய முடிகிறது.
ஆண்டுகள் பள்ளிக்கூடங்களில் பெண்களின் எண்ணிக்கை
1865-66 4,111 1866-67 4,638 1868-69 8,099 1869-70 9,421
1870-71 10,185
1870ஆம் ஆண்டு சென்னையில் அரசுப் பள்ளிகளில் கீழ்நிலை தொடக்கக் கல்வியில் ஒரு பெண் கூட படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தனியார் மற்றும் மேற்பார்வைக் குழுக்களால் நடத்தப்பட்ட பள்ளிகளிலும் பெண்கள் கல்வி பயிலவில்லை. ஆனால், அரசு மானியம் பெற்று நாற்பத்தைந்து தனியார் பள்ளிகள் இயங்கின. இப்பள்ளிகளில் ஆயிரத்து அறுநூற்று முப்பத்து இரண்டு பெண்கள் கல்வி கற்றனர். இப்பள்ளிகள் உள்ளூர் நிதியும், அரசு நிதியும் பெற்று இயங்கின.
கிறித்துவ சமயப் பரப்பாளர்களின் பங்கு
கிறித்துவ சமயப் பரப்பாளர்கள் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதை அவர்களது செயல்பாடுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
தொடக்க காலத்தில் ஆங்கில வாணிகக் குழுவினர் இந்தியாவுக்கு வந்ததும் நாட்டுக் கல்வி முறை நடப்பிலிருப்பதை கண்ணுற்றனர். அவற்றில் அவர்கள் தலையிடவோ அல்லது அவற்றை வளர்க்கவோ முற்படவில்லை. மேலும், கலங்கிய அரசியல் குட்டையில் அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளும் எண்ணம் படைத்த அவர்கள் நாட்டு மக்களின் நலன்களில் கருத்தைச் செலுத்தாமல் போர், முற்றுகை, சூழ்ச்சி ஆகியவற்றிலேயே கருத்தாய் இருந்தனர். இதனால் இந்து, இசுலாமியக் கல்வி முறைகளைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தனர். கிறித்துவ சமயப் பரப்பாளர்களே. இவர்களது உள்நோக்கம் சமய மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டமைந்ததெனினும் இதற்குக் கல்வியமைப்பைச் சிறந்த ஊடகமாகப் பயன்படுத்தியதில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் பெரிதும் பயனடைந்தனர் எனலாம். ஆங்கிலேயர் ஆட்சியில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை சாசனம் புதுப்பிக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் 1698ஆம் ஆண்டு சாசனம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அதில் சமயப் பரப்பாளர்கள் இந்தியாவிற்கு வந்து சமயப்பணி புரிவதற்கும் கல்வி பணி புரிவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப் பட்டிருந்தன.இதற்காகும் செலவுகளை வணிகக் குழு நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் 1698இல் டேனிய சமயப் பரப்பாளர்கள் தரங்கம்பாடி வந்திருந்தனர். இவர்கள் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர்.
(தமிழகத்தில் பெண் கல்வி, - முனைவர் க.கண்மணி பிரியா 8-3-2012
உலக மகளிர் நாள் சிந்தனை
பெரியார் - அண்ணா வழியில் கழக ஆட்சியின் சாதனைகள் தி.மு.க. தலைவர் கலைஞர்
சென்னை, மார்ச் 8 - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் மகளிர் நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது குறித்து கலைஞர் அவர்கள் விளக்கி கூறியிருப்பதாவது: மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! உலக மகளிர் நாள்! இந்நாள், மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்! அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலை களில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலி யவற்றை வலியுறுத்திக் கிளர்ந் தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப் பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த் திடப் பெரிதும் பயன் படுகிறது. நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்தியா விலேயே முதன் முதலாக மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக் கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் பெற்றுத் தந்த நீதிக் கட்சி தொடங்கப்பட்ட நூறாம் ஆண்டு நடைபெறும் வேளையில் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்படுவது மகளிர் ஒவ்வொரு வரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத்தக்க இனிய நிகழ்வாகும்.
கழக ஆட்சியில் மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்
நீதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அறிவுறுத்திய சமத்துவ, சமதர்மக் கொள்கைகளின்படி, எல்லா வகையிலும் பெண்கள் சமுதாயம் ஆண்களுக் கிணையாக முன்னேற்றம் காண்பதற்குத் துணைபுரியும் வகை யில் - 1973இல் இந்தியா விலேயே முதல் முறையாகக் காவல் துறையில் மகளிர் நியமனம்; 1975இல் விதவை மகளிர் மறுவாழ்வுத் திட்டம்; இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் போன்ற பல திட் டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1989 இல் தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் 2006-2011 ஆகிய ஆண்டுகளில் 26 இலட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; அவற்றின் மூலம் 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கி கிராமப்புற மகளிர் பொருளாதார முன்னேற்றம் காண வழிவகுக்கப்பட்டது. பெண்கள் 10ஆம் வகுப்புவரையேனும் படிக்க வேண்டும் என்பதற்காக 8ஆம் வகுப்புவரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ்; பெண்கள் 10ஆம் வகுப்புவரை யேனும் படித்திட வேண்டும் என்பதற்காக 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996இல் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில்; 2001இல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்திருந்தது. ஆனால், ஏழை எளிய மகளிரின் முன்னேற்றம் கருதி கழக அரசு 2006இல் பொறுப்பேற்றபின் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன், 2008இல் 20 ஆயிரம் ரூபாய் எனவும், 2010இல் 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி 2006-2011 ஐந்தாண்டுகளில் 4 இலட்சத்து 95 ஆயிரத்து 634 ஏழை மகளிர் திருமணங்களுக்கு 937 கோடியே 50 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது. ஏழை மகளிர் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப் படுத்திய ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிக் கப்பட்டு இன்றும் பல்லாயிரக்கணக்கான மகளிர் பயனடை கின்றனர். அரசு வேலைவாய்ப்புகளில்
மகளிர்க்கு 30 சதவிகித இடஒதுக்கீடு
இவைமட்டுமல்லாமல், 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; 2006 இல் அமைந்த கழக அரசு ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப் புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்; அரவாணிகள் நல வாரியம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உட்படப் பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி நடை முறைப்படுத்தி பெண்கள் சமுதாயம் தொடர்ந்து முன்னேற வழி வகை செய்தது.
ஆனால், பொதுமக்கள் நலம் நாடாத இன்றைய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் வரலாறு காணாத வகையில் தினமும் 15 மணி நேர மின்சாரத் தடைகள், மிகவும் கடுமையான விலைவாசி உயர் வுகள் போன்றவைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மகளிர், இக்கொடுமைகள் எல்லாம் விரைவில் அகலும்; மீண்டும் நல்வாழ்வும், நலத் திட்டங்களும் கிடைக்கும்; நமது வீடும், வீட்டில் வளரும் இளம் செல்வங்களின் எதிர்கால வாழ்வும் மலரும் எனும் நம்பிக்கையோடு இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழாவைக் கொண்டாடிட தமிழக மகளிர்க்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் 8-3-2012
இவர்கள் பார்வையில் பெண்கள்
தந்தை பெரியார்
பெண்ணுரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் தமிழகத்தில் ஓங்கி ஒலித்த குரல் தந்தை பெரியாரின் குரல். இருபதாம் நூற் றாண்டின் முற்பகுதி யைச் சார்ந்த பெரி யார் ஈ.வெ.இராம சாமி 1879ஆம் ஆண் டில் ஈரோட்டில் பிறந் தார். பகுத்தறிவுப் பகலவனாய்க் கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகப் போராடி யவர். இவரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் உறங்கிக் கிடந்த தமிழகப் பெண்களை எழுச்சி கொள்ளச் செய்தன. பெண்ணுக்கு எல்லா வசதிகளும், வாய்ப்பு களும் கொடுக்கப்பட்டால் ஆண்களைப் போலவே அனைத்துத் துறைகளிலும் அவளால் முன்னேற முடியும் என்பதே பெரியாரின் கொள்கை ஆகும்.
தமிழகத்தில் பெண்கல்வி
பெண்களுக்கு அறிவாற்றல் இல்லை என்று காரணம் காட்டி அவர்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு, பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழலில், அவர்கள் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்று பெரியார் முழக்கமிட்டார். பெண்கள் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டால் அவர்களது ஒழுக்கம் கெட்டு விடும் என்ற மூடக் கொள்கை மாற வேண்டும் என்றார். கல்வியறிவின்மையே பெண்களை அலங்காரப் பிரியர்களாக, நகைப் பெட்டகங்களாக ஆக்கியிருக் கிறது. இதனால் கற்ற பெண்களை ஆண்கள் மணக்க வேண்டும். கல்லாத பெண்கள் கன்னியராகவே இருத்தல் வேண்டும் என்று கூக்குரலிட்டார்.
கூட்டுக் கல்வியை வரவேற்கவே செய்தார். இன்னின்ன துறைகளில் பெண்கள் பயிற்சி பெற வேண்டியவர்கள் என்று வரையறுத்து ஆண்களுடன் அவர்கள் சேர்ந்து பயில்வதைத் தடுத்து வந்தனர். இதனைப் பெரியார் வன்மையாக கண்டித்தார். அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி இரண்டுமே இருபாலர்க்கும் பொதுவானவை. மேலும், ஆணும், பெண்ணும் சேர்ந்து பயின்றால் பல தீங்குகள் விலகும் என்று சுட்டிக் காட்டினார். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பல நேரங்களில் அவர்களுக்கு உடற்பயிற்சிக் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். கும்மி, கோலாட்டம், ஆடல் பாடல், தையல் வேலை, குடும்பக் கலை போன்றவற்றைத் தவிர்த்து ஓடவும், தாண்டவும், மல்யுத்தம் செய்யவும் பெண்களைப் பழக்க வேண்டும்; பெண்கள் ஆண்களைப் போன்றே உடல் வலிமை பெற வேண்டும்; உடற்பயிற்சி, படைக்கல பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டும். தன்மானத்தைப் பாதிக்கக் கூடிய எந்த காலகட்டத்திலும் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இப்பயிற்சிகள் பயன்படும்; மேலும் அவர்கள் படையில் சேர்ந்து நாட்டுப் பணி புரிய வேண்டும்; தொழிற்கல்வியும் பெற வேண் டும்; நிர்வாகத்திலும், அரசியலிலும் அவர்கள் உயர் பதவி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இளவயதுத் திருமணங்கள் பழக்கத்தில் இருந் ததைக் கண்டித்துப் பேசும் பெரியார் அந்நிலை மாறி அனைவரும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். குழந்தை மணத்தைத் தடை செய்யும் சாரதாச் சட்டத்தையும் பெரியார் வரவேற்றார்.
பெண்கள் கல்வி பயில்வதால் தங்கள் முன் னோர்கள் வளர்ந்ததை விடவும் சிறப்பாக வாழ்ந்து பெண்கள் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற பெரியாரின் விருப்பம் மதிக்கப்பட்டுப் பெண்கள் பலர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி பயில்பவர்களாக மாறினர்.
இவ்வாறு பெண் கல்விக்காக ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து போராடினர். அவர்களுள் முன்னிலையில் இருந்தவர் டாக்டர் எஸ்.முத்துலட்சுமி ரெட்டி அவர்களாவார்.
புரட்சிக்கவிஞர் தேசிய மொட்டென அரும்பி, திராவிடப் பூவாய் மலர்ந்தவர் புரட்சிக்கவிஞர். இவர் புதுகையில் 29.4.1891 அன்று பிறந்தார். பாரதியாருக்கு அடுத்த படியாகப் பெண் கல்விக் காகவும், பெண்ணுரிமைக் காகவும் குரல் கொடுத் தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர்தம் மனக் குமுறலைக் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார். பெண்ணுரிமை பற்றி தனது எண்ணத்தைச் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்னும் தலைப்பில் கவிதையில் பெண்ணே சொல்வது போல் வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை
பெண்ணடிமை தீருமட்டும் பேசுமிந்தத் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
என்று பாடினார்.
பாரதிதாசன் பெண் கல்வியின் சிறப்பை விளக்கக் குடும்ப விளக்கு என்ற நூலையும், பெண் கல்வியின்றி இருக்கும் இழிநிலையைப் புலப்படுத்த இருண்ட வீடு என்ற நூலையும் எழுதினார். குடும்ப விளக்கு என்னும் நூலில் பெண்கள் பயில வேண்டியதன் தேவையை எடுத்துக் காட்டினார்.
பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்டுக் கல்வி வேண்டும்
உரிமையைப் பேணுதற்கே!
என்ற பெண்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி மட்டும் துணையாக அமையும் என்று வற்புறுத்தினார். அத்துடன் கல்வி இல்லாத பெண்களைக் களர் நிலத்துக்கு ஒப்பாகச் சொல்கிறார். களர் நிலத்தில் புல் விளைந்திடுமேயன்றி நல்ல புதல்வர்கள் விளையார் என்று கூறினார். மேலும், கல்வி ஒரு பெண்ணுக்கு மிகத் தேவை; கல்வியறிவற்ற பெண்களால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதைப் பெண்களே உணர வேண்டும் என்பதால் தான் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்றுப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார்.
டாக்டர் எஸ்.முத்துலட்சுமி ரெட்டி முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் இந்நாட்டிற்கு ஆற்றிய பெரும்பணி பெண் களின் விடுதலைக் குத் தான். சமூகத்திலும், குடும்பத்திலும் பெண் கள் சிறையிலிருப்பதை விடக் கொடுமையாக எவ்வித மரியாதையும் இன்றி, எப் பொழுதும் வீட்டில் அடங்கி, ஒடுங்கி, நடுங்கி வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். மனமிரங்கி அந்நிலையை மாற்ற முத்துலட்சுமி ரெட்டி முனைந்தார். எந்த ஒரு துறையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நுழைந்தாலும் அத் துறையில் முதல் தரப் பெண்மணியாக விளங்கினார். இவர்தான் மட்டும் முன்னேறியதோடு நில்லாமல் மற்ற பெண்களும் முன்னேற வேண்டும் என்பதில் பெரும் விருப்பம் கொண்டு விளங்கினார்.
பெண்களின் நலத்திற்கென்று டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி ஆற்றிய தொண்டுகளில் சிறப்பாக குறிக்கப்படுவன, தேவதாசி ஒழிப்புச் சட்டம், குழந்தை மணத் தடுப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம், தங்கள் கணவரைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை போன்றவையாகும்.
(தமிழகத்தில் பெண் கல்வி, - முனைவர் க.கண்மணி பிரியா 8-3-2012
தஞ்சையை நோக்கி...! மேரி கியூரி எங்கள் அம்மா!
மேரி கியூரி அம்மா மணியம்மையார்
அம்மா என்ற சொல்லுக்குள் விலை மதிக்க முடியாத அன்பு முத்துக்கள்! எங்கள் அம்மா மணியம்மையார் என்ற பெயருக்குள்ளோ பெரியார் என்னும் நம்பிக்கை ஒளியின் பிரமிப்பு! இந்த அமைதி வடிவத்தில் அந்தப் பூகம்பம் எப்படி இருப்புக் கொள்கிறது? இன்று வரை விடை காண முடியாத புதிர்தான் அது.
1974 டிசம்பர் 25 நினைவிருக்கிறதா? தந்தை பெரியார் முதலாம் ஆண்டு நினைவு நாளையடுத்த மறுநாள் டிசம்பர் 25.
இராவண லீலா, இராவண லீலா என்ற இன எழுச்சி எரிமலை நர்த்தனம் புரிந்ததே நினைவிருக் கிறதா?
பிரதமர் இந்திரா காந்தி கூட மிரட்டிப் பார்த்தாரே நினைவிருக்கிறதா?
அதைத் தடுத்து நிறுத்த எத்தனை எத்தனை அழுத்தங்கள். அசைந்து கொடுக்கவில்லையே - அந்த அருமைத் தாய்!
நடக்கும் - நடந்தே தீரும் என்ற நறுக்குச் சொற்களின் சுறுக்கு முனைகள்!
எங்கள் திராவிட வீரர்களை ராம்லீலா நடத்தி தீ மூட்டி நீ மகிழ்வாய்! குடும்பத்தோடு, பேரப்பிள்ளை களோடு குலவுவாய்!
மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்ட வீரக் குடியினர் நாங்கள். சோம்பல் முறித்துக் கிடக்க வேண்டுமா? மானம் மழுங்கி மண் புழுவாய்க் கிடக்க வேண்டுமா?
முதலில் அதை நிறுத்து! அதற்குப் பின் வேண்டு கோள் வை - எங்களை நோக்கி.
அப்பொழுது மாத்திரம்தான் இராமன் எரிதீயி லிருந்து தப்புவான். இலட்சுமணனையும் தீ தீண்டாது. சீதாப் பிராட்டியும் சிதையிடப்படமாட்டாள் என்று நிமிர்ந்த தலையோடு, தன்மானச் செருக்கோடு, தந்தை பெரியாரிடம் பயின்ற அந்த அரிமாப் பார்வையோடு பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கே பதிலடி பகர்ந்தவர் எங்கள் தாய் ஆயிற்றே!
அணுதொறும், அணுதொறும் அய்யாவின் உடலை ஓம்பி, அந்த உயிரின் பயணத்தை நீட்டிக்கச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி செலுத்தி தன் உடலை ஓம்ப மறுத்த உன்னதத் தாய் அவர்!
அறுபது ஆண்டைக்கூடக் காணாமல் அவசரப் பட்டுவிட்டோயே, அம்மா!
ஆனாலும் அய்யா மறைந்த நிலையிலும், கம்பீரமாக அந்த நான்கு ஆண்டுகள் இயக்கத்தை நடத்தி இயக்க வீரர்களின் உணர்வைக் கூர் தீட்டி வைத்து விட்டுத்தான் பறந்தாய் தாயே!.
தாய்ப் பறவையே! உங்கள் பிள்ளை, உங்கள் பயிற்சி யில் எங்களை அரவணைத்து, அய்யாவின் பெருமை மிகு கொள்கையை அகிலத்துக்கும் கொண்டு சென்று வருகிறது. உங்கள் பெயரை ஒவ்வொரு நாளும் உச்சரித்துக் கொண்டும் இருக்கிறது!
தஞ்சை வல்லத்தில் அய்யாவுடன் இணைந்து பல்கலைக் கழகமாகப் பரிணமிக்கச் செய்து விட்டாரே!
அம்மா உங்களுக்கு வயது 92 (மார்ச்சு 10இல்) அன்று உமது பிறந்தநாள் மகளிர் மாநாடாக - கழகத்தின் பாடி வீடான தஞ்சைத் தரணியிலே!
மங்கையர் முரசு கொட்ட இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தின் பயணத்தில், அதுவும் அரசியலுக்குள் கால் பதிக்காத புரட்சிகர சமுதாய இயக்கமாய் திரா விடர் கழகத்திற்குத் தலைமை தாங்கி பெண்ணுரிமை சிகரத்தின் விலாசத்தை வெளிப்படுத்திவிட்டாய்!
உன்னுள் புரட்சி மட்டுமா குடி கொண்டிருந்தது? உன்னுள் புதைந்திருந்த அந்த உத்தமமான சீலத்திற்கு இணை ஏது?
ஒரு வரலாற்றுத் தகவல் உண்டு. ரேடியம் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரிடம் அமெரிக்கப் பத்திரிகை ஆசிரியை உங்களுக்கு வேண்டியதைக் கேட்கச் சொன்னால் என்ன கேட்பீர்கள்? என்று கேட்டார். அதற்கு க்யூரி அம்மையார் ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது - எனது ஆராய்ச்சிகளைத் தொடர்வதற்காக. ஆனால், அது ஒரு லட்சம் டாலர் விலையாகிறது என்று ஏக்கத்துடன் கூறினார். அந்தப் பத்திரிகை ஆசிரியை அமெரிக்கா சென்று ஒரு குழு அமைத்து, பொது மக்களிடம் நிதி திரட்டி ஒரு கிராம் ரேடியத்தை வாங்கி அமெரிக்க ஜனாதிபதி கையால் மேரி கியூரிக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார். ரேடியத்தை வழங்கும் பத்திரத்தைப் படித்துப் பார்த்த மேரி கியூரி, தமது பெயருக்கு எழுதப் பட்டிருப்பதைக் கண்டார். அதை தமது ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி எழுதச் சொன்னார். தமக்குப் பிறகு சந்ததியினரின் தனி உரிமையாகி விடக் கூடாது அந்த ரேடியம் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.
தனது பெயரால் அந்த விலை மதிக்க முடியாத அந்த ரேடியத்தைப் பதிவு செய்து கொண்டால் தன் சந்ததி யினர் உரிமை கொண்டாடக் கூடுமே என்று கருதினார் அந்த மேரி கியூரி அம்மையார்.
அந்த ரேடியத்தைக் கொண்டு புற்றுநோய் பற்றி ஆய்வு செய்து கொடிய நோய்க்கு ஒரு மருத்துவத்தைத் தந்து, மண்ணில் நிலை பெற்றுவிட்டார் அந்த மாது.
இந்த நேரத்தில் தங்கள் நினைவு வருகிறது அன்னையே!
அய்யா அவர்கள் அம்மா தங்களுக்காக அளித்த சொத்துக்களை என்ன செய்தீர்கள்?
மேரி கியூரி போலவே நினைத்து, தன் பெயரில் இருந்தால் எங்கிருந்தோ வாரிசுகள் வரிந்து கட்டிக் கொண்டு வரக்கூடும் என்று கருதி, மருத்துவமனையில் இருந்தபோதே, உயில் எழுதி அறக்கட்டளையாக் கினாயே!
இன்று கல்வி நிறுவனங்களாக, குழந்தைகளைக் காக்கும் கரங்களாக ஒளி வீசிக் கொண்டு இருக் கின்றனவே!
உம்மை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? வரலாற்றில் மேரி கியூரிக்குப் பிறகு நீதான் அந்தச் சிகரத்தில் சிலிர்த்து நிற்கிறாய்.
வரும் 10 இல் தஞ்சையில் கூடுகிறோம். குடும்பம் குடும்பமாகக் கூடுகிறோம். கொள்கை முரசு கொட்டுவோம்!
முற்றிலும் பெண்களே கலந்து கொள்ளும் மாநாடு அது! வரலாற்றில் வைர வரிகளாக அது அமையப் போகிறது.
நாமும் அந்த வரலாற்றுக் காவியத்தின் சில பக்கங்களாக இருக்க வேண்டாமா?
தஞ்சை திணறட்டும்!
தமிழ்நாட்டுப் பெண்களே
விரைக! விரைக!! 8-3-2012
Post a Comment