Search This Blog

19.3.12

பகுத்தறிவை ஊட்டுவதே எம் வேலை! - பெரியார்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே!! தோழர்களே!!! திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல. சட்டசபைக்குப் போக வேண்டும், பார்லிமெண்டுக்குப் போக வேண்டும். மந்திரியாக வேணடும் என்று பாடுபடக் கூடியது அல்ல. இது சமுதாய சீர்திருத்த இயக்கம். நமது ஜாதி இழிவு, மூட நம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் ஆகியவற்றைப் போக்கப் பாடுபடுகின்றது.

எங்கள் வேலை மனித சமுதாயத்தில் இருந்துவரும்படியான குறைபாடுகளை நீக்க வேண்டும். அதற்கு மக்களைப் பகுத்தறிவு உணர்ச்சி உடையவர்களாகச் செய்ய வேண்டும். 2,000 ஆண்டாக மனித சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய எவருமே தோன்றவேயில்லை. தோன்றினவன் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், ஆனந்தாக்கள், அவதார புருஷர்கள் என்று பலர் தோன்றினார்கள் என்றாலும் மக்களை மடமையில் ஆழ்த்தவே பாடுபட்டு வந்து இருக்கின்றனர்.

ஏதோ புத்தர் ஒருவர்தான் தோன்றி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். புத்தர் என்றால் புத்தியைக் கொண்டவன். புத்தியைக் கொண்டு எவர் சொன்ன எதையும் நம்பாமல் தன் புத்திக்குச் சரி என்று பட்டதைச் செய்பவன் என்றுதான் பொருள்.
புத்தருக்குப் பிறகும்கூட சித்தர்கள், ஞானிகள் என்பவர்கள் பலரும் இருந்து இருக்கின்றார்கள். சித்தர் என்றாலும் சித்தத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுபவர், நடப்பவர் என்பது பொருள்.

ஞானிகள் என்றால் அறிவை ஆதாரமாகக் கொண்டவர்கள். ஞானம் என்றால் அறிவு என்று தான் பொருள். இப்படி பலர் தோன்றி ஏதோ சில நல்ல கருத்துகளைச் சொல்லிச் சென்று இருந்தாலும்கூட புத்தர்தான் வெளியே வந்து இதற்காகத் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திப் பாடுபட்டு இருக்கிறார்.

இந்தப் புத்தர் அறிவு மார்க்கம் காஷ்மீரம் முதல் கன்னியா குமரி வரையிலும் ஒரு காலத்தில் பரவி மக்கள் மத்தியில் நன்கு செல்வாக்குப் பெற்று இருந்தது.

இதனைப் பார்ப்பனர்கள் தந்திரமாக ஒழித்துக் கட்டிவிட்டார்கள். அவருக்குப் பிறகு நாங்கள்தான் முன்வந்து இக்காரியத்திற்காகத் துணிந்து பாடுபட்டு வருகின்றோம்.


தோழர்களே, 30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே குடிஅரசுவில் எழுதி இருக்கின்றேன். உலகத்திலேயே பெரிய மடையன் இந்தக் கடவுளை உண்டாக்கியவன் என்று. இந்தக் கடவுளை நம்மிடையே புகுத்தியது. பயத்தையும், மடமையையும் வளர்க்கவே பயன்பட்டு வருகின்றது.

தோழர்களே, கடவுள் நமக்கு இருக்கின்றது. வெள்ளைக் காரனுக்கும் இருக்கின்றது. இந்த மைக், இந்த லைட் வெள்ளைக்காரன் தானே செய்கின்றான். நாம் ஏன் பண்ணவில்லை? அவனுக்கும் கடவுள், நமக்கும் கடவுள். அவன் கடவுளை வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டுமே வைத்துக் கொண்டு இருக்கிறான். அவனுடைய லட்சியம் தான் பிரதானம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றான்.

நாம்தான் குழவிக்கல்லைக் கட்டிக்கொண்டு அழுகின்றோம். பத்தாம் பசலிப் பசங்கள் என்றும் கூறுவதுபோல 1,000 - 700 வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டது தேவாரம், திருவாசகம், சித்தர்கள் சொன்னது, முத்தர்கள் சொன்னது என்று கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

உலக அனுபவம் இல்லாமல் குண்டு சட்டிக்குள்ளேயே புகுந்து கொண்டு நமது நாட்டையும், கடவுளையும், மத, சாஸ்திரம் இவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக் கின்றோம். இந்த இருபதாம் நூற்றாண்டில் உலகமே விஞ்ஞான அதிசய அற்புதங் களை எல்லாம் கண்டு எவ்வளவோ மாறுதல்கள் அடைந்தும்கூட நாம்தான் காட்டுமிராண்டிகளாக, மடையர்களாக உள்ளோம்.

நமது கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு நமது வேலை என்ன? நமது பகவான் வேலை என்ன? எந்த அளவு நமக்குச் சக்தி, எந்த அளவு கடவுளுக்குச் சக்தி என்று எவனும் சிந்திப்பதே கிடையாது.

ஏன்? மேல் நாடுகளில் பார்ப்பான் இல்லை. பறையன் இல்லை. இந்த நாட்டில் மட்டும் இருப்பானேன்? இப்படி ஆக்கிய கடவுளையும், மதத்தையும் ஒழிக்க வேண்டாமா? என்று கேட்டு, இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று மக்கள் உணர்கிறார்களே, அன்றுதான் நாமும், நம் நாடும் முன்னேற முடியும் என்று எடுத்துரைத்தார்.

----------------24.2.1961 அன்று திருப்பாலக்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை" 13.3.1961

6 comments:

தமிழ் ஓவியா said...

ங்கிலாந்தில் தகர்ந்துவரும் மத நம்பிக்கை


2030இல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது. மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 750,000 அளவுக்கு நாத்திகர்கள், கடவுள் பற்றிய கருத்து அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் என்ற இதழ் தெரி விக்கிறது. கிறித்துவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் அவை (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 37 விழுக்காடு உயர்ந்து 26 லட்சத்தை எட்டியுள்ளது. இந்துக்களும், புத்தர்களும் 74 விழுக் காடு உயர்ந்துள்ளனர். சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்று மெயில் தெரிவிக் கிறது. கடந்த வாரத்தில் நாடாளுமன்ற கிறித்துவ உறுப்பினர்கள் குழு ஒன்று, கிறித்துவர்களுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள இயலாத பாகுபாடு வளர்ந்து வருவதாகக் கூறியுள்ளது.

நம்பிக்கையாளர்கள் மீது மதச்சார்பற்ற எதிர்ப்பு உணர்வு கொண்ட அரசு அடக்கு முறையை மேற்கொள் வதாக, டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் கூறுகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 விழுக்காடு அளவு கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010 இல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன்.

அதே கால கட்டத்தில் நம்பிக்கை யற்றவர்கள் எண்ணிக்கை 49 விழுக்காடு உயர்ந்து 1.34 கோடி மக்கள் இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
உண்மை மார்ச் 16-31 2012

தமிழ் ஓவியா said...

சங்ககாலப் பாடல்களிலும் ஆரியக் கோட்பாடுகள்


- முனைவர் இரா.மணியன்

கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாத தமிழ் மக்களிடையே கடவுள் பற்றிய கருத்துகளை அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் விதைத்து விட்டனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலப் பாடல்கள் சிலவற்றுள் ஆரியக் கோட்பாடுகளைச் செய்திகளாகவோ, அவற்றை விளக்கும் உவமைகளாகவோ புலவர்கள் சிலர் கையாண்டுள்ளனர்.

ஆரியர்கள் தமிழ் மக்களிடையே ஊடுருவி தங்களின் கோட்பாடுகளைத் திணித்து, தமிழர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணத்தைப் பரப்பி விட்டார்கள். அவர்களை நம்பிய புலவர்கள் சிலர், தாம் பாடிய பாடல்களில் ஆரியக் கோட்பாடுகளான தெய்வம் முதலியவற்றைக் கூறியுள்ளனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல செய்திகளை சங்ககாலப் பாடல்களிலும் காண முடிகிறது.

ஒரு நூலுக்குக் கடவுள் வாழ்த்து கூறப்பெற வேண்டும் என்ற எண்ணமே ஆரியர்களின் கோட்பாடுகளால் உண்டானது என்றே கூறவேண்டும். தொல்காப்பியம் என்ற தமிழர்களின் வாழ்வியல் இலக்கண நூலுக்கே கடவுள் வாழ்த்து இல்லாதிருத்தலை நோக்க வேண்டும்.

கடவுள் வாழ்த்து என்பது கூறப்படாவிடினும் தொல்காப்பியத்துள்ளும் ஆரியக் கோட்பாடுகள் புகுந்துவிட்டன. தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவி என்றும், பால்வரை தெய்வம் என்றும், வழிபடு தெய்வம் என்றும், உள்ளுறை தெய்வம் என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது. எனவே, ஆரியக் கோட்பாடுகள் சங்க காலத்துக்கு முன்னமேயே தமிழ்நாட்டில் புகுந்து பகுத்தறிவைச் சீர்குலைத்துவிட்டன எனலாம்.

சங்க நூல்கள் என்று கூறப் பெறும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய எல்லாவற்றிலுமே ஆங்காங்கே ஆரியக் கருத்துகள் காணப்படுகின்றன. திருக்குறளிலும் பல இடங்களில் தெய்வம் பற்றிய கருத்துகள் புகுந்துவிட்டன.

சங்க நூல்களுள் முதலாகக் கூறப் பெறும் நற்றிணை என்ற நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். மாநிலம் சேவடியாக என்று தொடங்கும் அந்தப் பாடல் தீதற விளங்கிய திகிரியோனே என்று முடிகிறது. இறைவனை வேத முதல்வன் என்று குறிப்பிட்டு, அவனுக்கு இவ்வுலகம் பாதமாகவும், கடல் ஆடையாகவும், வானம் உடலாகவும், திசைகள் கைகளாகவும், சூரியனும், சந்திரனும் கண்களாகவும் உள்ளதாகக் கூறுகிறார். இந்தக் கருத்துகள் ஆரியப் பண்பாடு தமிழ்ப் புலவர்களிடத்திலேயும், அந்தக் காலத்திலேயே குடியேறிவிட்டதைப் புலப்படுத்துகிறது. இதற்குச் சான்றாக, நற்றிணைப் பாடல்களுள் ஒன்றை எடுத்துக்காட்டி, பகுத்தறிவு எப்படியெல்லாம் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தலாம்.

நற்றிணையில் ஒன்பதாம் பாடலாக உள்ளதைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பவர் ஆவார். இவர் தமிழ்ப் புலமை மிக்க மன்னராக விளங்கியவர். எனினும், ஆரியக் கருத்தைத் தம் பாடலிலே கூறிய புலவராகிவிட்டார். அழிவில முயலும் ஆர்வ மாக்கள், வழிபடு தெய்வம் கண்கண்டாங்கு என்னும் உவமையைக் கூறி தாம் சொல்ல வேண்டியதை விளக்கியுள்ளார்.

தலைவி, தலைவனை விரும்புகின்றாள் என்ற செய்தியைத் தெரிந்திருந்தும், அவளை அவனுக்கு மணம் செய்துதர அவளுடைய பெற்றோர் விரும்பாதபோது, தலைவியைத் தலைவன், பெற்றோருக்குத் தெரியாமலேயே தன்னூர்க்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்ளும் வழக்கம் அக்காலத்திலும் இருந்தது. இதனை அகநூலார் உடன்போக்கு எனக் குறிப்பிடுவர்.

அவ்வாறு உடன்போக்கு நிகழுமிடத்து தலைவிக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் தலைவன் சில சொற்களைச் சொல்வதுண்டு. அந்நிலையில், தலைவன் கூறுவதுபோலக் கூறியதுதான் மேற்குறித்த வழிபடு தெய்வம் பற்றிய கருத்து. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல என்று இன்றும் பகுத்தறிவு இல்லாத சிலர் கூறுவதுண்டு. இக்கருத்தைத்தான் தலைவன் தலைவிக்குக் கூறுவதாகப் புலவர் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட பாடல்களை இலக்கியங்களாகக் கருதக் கூடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாகும். எனவே, சங்க இலக்கியமாயினும், ஆரியக் கருத்துள்ள பாடல்களை நீக்கியே பயில வேண்டும். "உண்மை” மார்ச் 16-31 2012

தமிழ் ஓவியா said...

சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம்


திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1940இல் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. அங்கே சி.பி.ஆர். திவானாக இருந்தார். அந்த சமஸ்தானத்தில் மனுதர்மம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பார்ப்பான் எந்தக் குற்றம் செய்தாலும், மரண தண்டனை தரக்கூடாது என்ற நடைமுறை அமலில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனைத்துப் பிரிவினருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கிரிமினல் குற்றங்களில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். திருவாங்கூர் மன்னர் பதவிக்கு வருவதில் அவரது பரம்பரையினருக்குள் நடந்த மோதலில் ஒரு பிரிவினர், ஒரு பார்ப்பனரை வைத்து எதிரியைக் கொலை செய்வது வழக்கம். பார்ப்பனர் கொலை செய்தால் சமஸ்தானத்தில் தண்டனை கிடையாது என்பதற்காகவே கொலைக்குப் பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்தனர். எனவே, பிரிட்டிஷ் சட்டப்படி தண்டனை வழங்குவதில் அனைவரையும் சமமாகக் கருதிவிட்டால், பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் பார்ப்பனக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவே தமது சமஸ்தானத்தில் மரண தண்டனையை முற்றாக ஒழிக்க சர்.சி.பி. இராமசாமி அய்யா அறிவித்தார்.

- நூல்: அரசியல் தரகர் சுப்ரமணியசாமி, பக். 112

தமிழ் ஓவியா said...

தனியார் பள்ளிகளின் தரம்...?

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதைவிட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெற்றோர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் கல்விகற்பிக்கும் தரமும் ஒன்று. அதற்காகத்தான் ஏராளமாகப் பணம் செலுத்திப் படிக்கவைக்கிறார்கள். ஆனால், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அண்மையில் ஒரு ஆய்வு தோலுரித்துக் காட்டிவிட்டது.

பிராதம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் திறன் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் 32 விழுக்காட்டினர்க்கு தமிழில் ஒரு சாதாரண கதையைக் கூட படிக்க முடியவில்லை என்பதும், 4 ஆம் வகுப்பு மாணவர்களில் 40.6 விழுக்காட்டினர்க்கு இரட்டை இலக்க எண்களில் கழித்தல் கணக்கைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் சிறந்தவை என்ற கருத்து ஒரு மாயை என்பதை இந்த ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது.
16-31 2012

தமிழ் ஓவியா said...

போதையில் இந்தியா


அய்.நா.அவையின் ஆய்வு அறிக்கை ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7,500 ஹெக்டேரில் கஞ்சா பயிரிடப்படுகிறது. அதேபோல் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 30 லட்சம் பேர் ஹெராயின் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 2011ல் மட்டும் 17 டன் ஹெராயின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 டன் ஆப்கானில் இருந்து கடத்தப்பட்டது. 9 டன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

நகர்ப்புரங்களில்தான் ஹெராயின் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். தென் மாநிலங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஏற்கெனவே கடவுள் போதை, மத போதை, ஜாதி போதை அதிகம் உள்ள இந்தியாவில் இது வேறயா... நாடு வௌங்கிரும். 16-31 2012

தமிழ் ஓவியா said...

இந்தியா ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி- ஆதரவு 24; எதிர்ப்பு 15!

ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா.

தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது.

நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.

ஆனால், உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

ஆதரவளித்த நாடுகள்:

ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே

எதிராக வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.
Read: In English
இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.

தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.
---------http://tamil.oneindia.in/news/2012/03/22/world-us-resolution-against-sri-lanka-passed-successfully-aid0136.html