Search This Blog

29.3.12

ராமன் பாலம் தேசிய நினைவுச் சின்னமா?அண்ணா தி.மு.க. அண்ணாவைக் கொச்சைப்படுத்தலாமா?


ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுவதா?


கழகத் தோழர்களே, மதச் சார்பற்ற கொள்கை உடையோரே!
முதல்வர் கோரிக்கையை எதிர்த்து பிரதமருக்குத் தந்தி கொடுப்பீர்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைக் கண்டித்தும், இதனை எதிர்த்துப் பிரதமருக்குக் கழகத் தோழர்களும், மதச் சார்பற்ற கொள்கையுடையவர்களும் தந்தி கொடுக்க வேண்டும் என்று கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முதல் அமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் ராமன்பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க ராமர் பாலத்தின் முக்கியத்துவம் கருதி அதனை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை தாமதமின்றி, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, ஒரு பதில் மனு மூலமாக, தமது கருத்துக்களை தனியே, உச்சநீதிமன் றத்தில் தெரிவிக்கும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். (டாக்டர் நமது எம்.ஜி.ஆர். 29.3.2012 பக்கம் 1 மற்றும் இரண்டு).

நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் இந்தத் திசையில் குரல் கொடுத்துள்ளனர். தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
அண்ணாவின் கொள்கை என்ன?

1) முதலாவதாக செல்வி ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய கட்சியின் பெயர் அண்ணா தி.மு.க. என்பதாகும்.

ராமன் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று கூறி டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் வாதிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.

புலவர் குழந்தையின் இராவண காவியம் எனும் நூலுக்கு முன்னுரை அளித்த அறிஞர் அண்ணா அவர்கள்,

இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர்களுக்கு தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இராவண காவியம் நூல்.

இராவணகாவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இராவணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே! (மேலும் முக்கிய பகுதிகளை இரண்டாம் பக்கம் காண்க)

அண்ணாவை அவமதிக்கலாமா?

அண்ணா தி.மு.க. என்று கட்சிப் பெயரையும், கொடியில் அண்ணா உருவத்தையும் பொறித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அண்ணாவின் சிந்தனைக்கும், கொள்கைக் கோட்பாட்டுக்கும் எதிராக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா நடந்து கொள்ளலாமா? இதன்மூலம் அண்ணாவை அவமதிக்கலாமா?

அண்ணா தி.மு.க.வில் அண்ணாவின் கொள்கைக்காக இருக்கும் அக்கட்சித் தொண்டர்கள், முன்னணியினர் சிந்திப்பார்களா?

ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் செல்வி ஜெயலலிதா எந்தப் பக்கம்?

(2) இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப்பது என்று பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர், பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்களே -

அப்படியென்றால் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆரியர் பக்கம் நின்று திராவிடர்கள்மீது போர் தொடுக்கிறாரா?

சூத்திரன் சம்புகன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அந்த ராமனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு விட்டாரா?

அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற இனச் சுட்டையும் கட்சியில் வைத்திருக்கும் காரணத்தால் தாய்க் கழகம் என்ற முறையில் திராவிடர் கழகம் இந்த வினாக் களை எழுப்புவதற்கு உரிமையும், கடமையும் பெற்றுள்ளது.

எந்த தொல்பொருள் ஆய்வு கூறியது?

(3) தொல் பொருள் ஆராய்ச்சி கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளாரே - எந்தத் தொல் பொருள் ஆய்வு 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்று கூறியிருந்தது?

முதல் பாலம் கட்டப்பட்டதே எகிப்தில்தானே - நைல் நதியில் அவ்வாறு கட்டப்பட்டது. கி.மு. 2650 இல் என்கிற போது 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது கடைந்தெடுத்த பொய்யல்லவா!

நாசா மறுத்துவிட்டதே!

அமெரிக்காவின் நாசா சொல்லியிருக்கிறது என்று ஒரு கதையைக் கிளப்பிய நேரத்தில் சேது சமுத்திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. இரகுபதி நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டபோது (26.7.2007) அன்று மாலையே நாசா பதிலையும் அனுப்பவில்லையா?

இந்தியா - இலங்கையிடையே உள்ள ஆதாம் பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று தெரிவித்து விட்டதே!

இதுபோன்ற மணல் திட்டு இராமேசுவரம் - இலங்கைக்கு இடையே மட்டுமல்ல; ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேலாக இருக்கிறதே - அதையும் ராமன்தான் கட்டினானா?

அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?

4) 2001 சட்டப் பேரவைக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதே செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டது என்ன?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம், இத்திட்டத்தின்படி ராமேசு வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் (2001 - அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83-84).

இந்தப் பகுதியில் தெளிவாகக் காணப்படுவது என்ன?

(அ) சேது சமுத்திரத் திட்டம் தேவையானதுதான்.

(ஆ) இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் - அது மணல் மேடுகள், பாறைகள்தான் (இராமன் பாலம் அல்ல)

இவ்வளவு தெளிவாக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்ட பிறகு, அதற்கு முற்றிலும் எதிராக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?

மதச்சார்பின்மையைச் சிதைக்கலாமா?

5) மதச்சார்பின்மை என்பதுதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டப்படியான நிலை. இதில் மதவாதத்தைத் திணிப்பது எப்படி சரி?

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து மத சம்பந்தமான கடவுள் படங்களையும் நீக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி அரசின் மதச் சார்பின்மை என்னும் கொள்கைக்கு மதிப்பைக் கூட்டினாரே!

அந்த அண்ணா பெயரைத் தாங்கும் கட்சியின் பொதுச் செயலாளர் மதச் சார்பின்மைக்கு விரோதமாக இந்துத்துவாவின் கதாநாயகனான ராமனுக்காகக் கொடி தூக்கலாமா?

வரலாறு என்பது வேறு - இதிகாச புராணங்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்த நிலையில் இதிகாசங்களையும் புராணங்களையும் விஞ்ஞான ரீதியான ஒரு திட்டத்தில் திணித்துத் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் கடமை என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (51ஏ(எச்).

இந்த நிலையில் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக நடந்து கொள்வது சட்டப்படியாகவே குற்றமாயிற்றே!

மாநில அரசோ, மத்திய அரசோ, நீதிமன்றமோ விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக சிந்திக்க முடியுமா? செயல்படத்தான் முடியுமா?

வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. இருக்க முடியுமா?

(6) இதே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு வந்தபோது நீதியரசர் ரவீந்திரன் அவர்களால் எழுப்பப் பட்ட வினாக்கள் முக்கியமானவை.

நாம் பூமியைத் தாயாக வணங்குகிறோம். அதனால் அதனைத் தொட முடியாது என்று அர்த்தமல்ல. இமயமலையை நாம் வணங்குகிறோம். அதனால் இமால யத்தைத் தொட முடியாது என்று அர்த்தம் அல்ல.

கோவர்த்தன மலையை நாம் வணங்குகிறோம், அதனால் கோவர்த்தன மலையை எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமா? என்ற வினாக்களை எழுப்பிய நீதியரசர் ரவீந்திரன் இன்னொரு அர்த்தமிக்க வினாவையும் தொடுத்தாரே -

ஒரு வழிபாட்டுத்தலம் 25 கி.மீ. நீளத்திற்கு இருக்குமா? என்பதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வியாகும். இந்த அறிவார்ந்த வினாவுக்கு ஜெயலலிதாவோ, சு.சாமியோ, அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்குரை ஞர்களோ, பி.ஜே.பி. உள்ளிட்ட சங்பரிவார்க் கூட்டமோ இதுவரை பதில் சொன்னதுண்டா?

ராமராஜ்ஜியம் உருவாக்கத் துடிக்கும் கும்பல்!


ராமராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்றுகூறிக் கொண்டு அலைகிற கூட்டத்தின் பிரதிபிம்பமாகவும், மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்பதற்கு அடையாளம்தான் பிரதம ருக்கு இவர் எழுதிய அதிகாரபூர்வமான கடிதம் ஆகும்.

பிரதமருக்குத் தந்தி கொடுங்கள்!

இந்த நிலையில் கழகத் தோழர்களே, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களே, பகுத்தறிவாளர்களே, அறிவியல் சிந்தனை கொண்டோரே, மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட நண்பர்களே, கட்சிகளைக் கடந்து தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இசைவு தரக் கூடாது - மதச் சார்பற்ற தன்மையோடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று பொருள்படும்படியாக தந்திகளை இலட்சக்கணக்கில் பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மதச் சார்பற்ற கொள்கையுடைய அத்தனைக் கட்சித் தலைவர்களும் கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவிலும் பிரதமருக்குக் கடிதங்களை எழுத வேண்டும்.

இதில் நாம் நமது கடமையைச் செய்யாவிட்டால், ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று புறப்பட்டுள்ள மனுதர்மவாதிகளுக்கு வலிமையை உண்டாக்கிக் கொடுக்கிறோம் என்று பொருள்.

மதச்சார்பின்மையைக் காப்போம்!

பாபர் மசூதியை இடித்தது சரிதான் என்பதற்கு இசைவு கொடுத்து விட்டோம் என்று பொருளாகும். இதனைத் தடுத்தே தீர வேண்டும்.
மதவெறி மாய்ப்போம்!

மனிதநேயம் காப்போம்!

மதச் சார்பின்மையைக் கட்டுவோம்!!

----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். "விடுதலை” 29-3-2012

7 comments:

தமிழ் ஓவியா said...

இராமன்பற்றி அறிஞர் அண்ணாஇராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள். அதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தான் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே. செந்தமிழை வாணிகம் செய் வோர், இராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்றுரைப்பரேயொழிய, மற்றைப் போதினில், இராமனை நிஜ புருஷ னாகவே எண்ணுவர் - மதிப்பர் - வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்ற போதெல் லாம் அவர்கள் இராமதாசர்களே.

தன்மான இயக்கத்தவர் - இராவண தாசர்களல்லர். இராவணனுக்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித் துப் பூஜாரிகளாக வேண்டும் என்பதற் காக அல்ல அக்காவியம் புனைந்தது. பழி சுமத்தினரே பண்டைக் கவிஞர்கள் இராவணன்மீது. இது முறையல்லவே, துருவிப் பார்க்குங்கால் விஷயம் முற்றிலும் வேறாகவன்றோ உளது என்று எண்ணித் தீட்டியதே இந்த ஏடு.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்கு மருந்து இது. தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.

இராமாயணம் தீட்டப்பட்ட காலம், இந்தப் பரந்த பூபாகத்திலே இரு வேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல், நாட்டு நிலை அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை.

திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக்கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமிலை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோமில்லை. ஏனெனில், இது மறைக்கமுடியாத உண்மையாகி விட்டது.

தமிழ் ஓவியா said...

திராவிடம் -ஆரியம் எனும் இருவேறு பண்பாடுகள் இருந்தன, கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்து விட்டது என்று புன்முறுவலுடன் கூறுவர். பிரித்துக் கூறக்கூடாது என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது மட்டுமல்ல. அவர்தம் ஆராய்ச்சியாலும் தெரிவது, பிற்காலத்தில் பிரிக்கக்கூடாதவாறு, சர்வ ஜாக்கிரதையாக மிகத் திறமையுடன், அந்நாளிலே ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்கிறார்கள் என்ற உண்மையும் தெற்றென விளங்கு கிறது.

கண்டுபிடிக்கவே முடியாத களவு! வெளிக்குத் தெரியாமல் நடைபெறும் விபசாரம்! ஓசைப்படாமல் கடிக்கும் நாகம்! - இவைபோல் இது பிரிக்கவே முடியாதபடி கலந்து போயிருக்கக்கூடும் இஃதோ புதைபொருள் தோண்டப்படும் காலம். மொகஞ்சதாரோக்கள் காணப் படும் காலம்! மனித அறிவுக்கு எட்டாதது என்று எண்ணப்பட்ட எண்ணற்ற விஷயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கண்ட காலம்.

எனவேதான், எது ஆரியம், எது திராவிடம் என்று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்து போய் விட்டது என்று கூறப்படும் தன்மையை, மாற்றிட முடிகிறது.

மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே, எவ்வளவு முன்னேற்பாடாக, திராவிடக் கலையினைச் சிதைத்தும் குறைத்தும், ஆரியத்தை அத்துடன் இணைத்தும் இழைத்தும், ஒட்டியும் கட்டியும், பூசியும் தூவியும் பலவகையாலும் பலகாலமாகப் பாடுபட்டுக் கலந்தும், இன்று இந்தப் பாவிகள் எப்படியோ துப்புக் கண்டுபிடித்து, துருவித் துருவிப் பார்த்துச் சலித்தும் புடைத்தும் புடம் போட்டும் பார்த்து, இதோ ஆரியம், இதோ திராவிடம், இன்னது இன்ன அளவு உள்ளது என்று பிரித்துக் காட்டுகின் றனரே!

அந்த நாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்நாள் வந்ததே விபத்து! என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர்; அவர்கள் கவலைப்படுகிறார்களே என்ப தற்காகக் காலவேகம் வேலை நிறுத்தம் செய்யுமா? தடையும், எதிர்ப்புப் படையும் அந்த வேகத்தை அதிகப்படுத்துகின்றன.

இராவண காவியத்தை இந்த மன நிலையின் கனியெனக் கொள்ள வேண்டும். இதுவும், அந்நாள் இராமா யணம் போலக் கலைப்போர் முரசுதான். இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது, இரா வணனைத் தேவனாக்கவல்ல - தமிழ னாக்க. அதாவது வீரனாக்க!

தற்குக் கவி, வானையும் வானிலுறைவோ ரையும் துணைகொள்ள நேரிட்டது. இந்நூலுக்கு அது தேவையில்லை. முன்னூலில் புதைந்துள்ளவைகளைக் கொண்டே, இராவணனின் உருவம் இத்தன்மையது என்று எடுத்துக்காட்டு கிறார் நூலாசிரியர். சம்பராசுர யுத்தம் என்று முன்னூல் கூறுகிறது; அசுரன் அவன் என்று பயங்காட்டுகிறது. இரா வண காவியத்திலே சம்பரன் அசுர னல்லன், பாண்டியன் எனப்படுகிறது.

எதைக் கொண்டு இம்முடிவு கட்டுகிறார் ஆசிரியர்? முன்னூலிலே சம்பராசுரன், மீனக் கொடியோன் என்று குறிக்கப் பட்டிருக்கிறது; ஆக, மீனக்கொடி பாண்டியனுக்குரியது. எனவே, சம்பரன் அசுரனென்று ஆரியரால் நிந்திக்கப்பட்ட பாண்டிய மன்னனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறது இந்நூல். இஃதே போலவே, இந்நூலின் கண் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சி கட்கும் ஆதாரங்கள், இராமாயணத்தி லிருந்து சலித்து எடுக்கப்பட்டவையே யாகும்.

இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், ஆரிய நேசர்கட்கும், ஒரே ஒருவழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை, அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறி வித்து விடுவதுதான். வேறு மார்க்கம் இல்லை.

தமிழ் ஓவியா said...

கல்கியின் நல்லுரை


கேள்வி: அய்ம்பது சதவிகிதம் அர்ச்சகர் பணி யிடங்களில் பிராமணர் அல்லாதாரை திருவாங்கூர் சமஸ்தானம் நியமித்திருக்கிறதே?

பதில்: துணிவான முடிவு. ஆனால், தமிழகத்திலோ அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்றுவிக்கப்பட்ட 207 அர்ச்சகர்கள், வேலை வழங்கப்படாமல், அரசின் கருணைக்காக காத்திருக் கிறார்கள். சிரத்தையான ஆன்மீகக் கல்வியும், ஆழ்ந்த பக்தியும் அர்ச்சகரிடம் இருந்தால் சுவாமி தரிசனத்துக்கு கோவிலுக்கு வருவோரை பரவசப் படுத்தும்.அவை பிறப்பினால் மட்டும் வந்து விடுவதில்லை.

(கல்கி 1.4.2012 பக்கம் 93)

கல்கியின் இந்தப் பதில் பார்ப்பனர்கள் மத்தியில் புதிய சிந்தனையை ஏற்படுத்துமா என்று தெரிய வில்லை. சங்கராச்சாரியார்களின் புத்தியில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்துமா என்பதும் கேள்விக் குறியே!

தமிழ்நாட்டில் 207 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு வேலை வழங்கப்படாமல் அரசின் கருணைக்காகக் காத்திருக்கிறார்கள் என்று கல்கி எழுதுகிறதே - இந்த நிலைக்குக் காரணம் என்ன?

அரசா? இல்லை; இல்லை; அரசு தானே சட்டத்தை இயற்றியிருக்கிறது. அதற்கான பயிற்சியையும் அளித்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அரசுக்கு வேலை வழங்கிட தயக்கம் எப்படி இருக்க முடியும்?

எங்கே முட்டுக்கட்டை? உச்சநீதிமன்றத்தில்; உச்சநீதிமன்றத்தில் ஏன் முட்டுக்கட்டை? தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து அங்கு சென்றவர்கள் யார்? பார்ப்பனர்கள்தானே!

ஆகமங்களுக்கு விரோதமானது - சூத்திரர்கள் கடவுள் சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று வைகனாச ஆகமத்தை ஆதாரப்படுத்து பவர்களும் பார்ப்பனர்கள் தானே!

தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து 13 பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் சென்ற நேரத்தில் (தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை - காரணம் தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் என்று அவாளின் நினைப்பு!) பிரபல வழக்குரைஞர் பல்கி வாலாவுக்குப் பரிந்துரை கடிதம் கொடுத்தவர் யார்? சாட்சாத் ஆச்சாரியார் ராஜாஜி தானே!

இந்தப் பிரச்சினையில் ஜெகத் குரு சங்கராச் சாரியாரின் கருத்தென்ன? கல்கியே கேட்டுச் சொல்லட்டுமே!

தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும் என்று சொல்லும் பொழுதுகூட - மொழி துவேஷம் என்று துக்ளக் தலையங்கம் தீட்டுகிறதே. கரூர் அருகில் கோவில் குட முழுக்கு விழாவை தமிழில் நடத்தியபோது கோவில் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, நடையை இழுத்துச் சாத்தி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் செய்து அதற்குப் பிறகு தானே அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கோவிலைத் திறந்தனர். அந்த செயலுக்குக் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி வக்காலத்து வாங்கவில்லையா?

திருஞானசம்பந்தன் தமிழில் பாடிய பதிகத்தைக் கேட்டு, செத்துப் போன பெண் உயிர் பெற்றாள் என்று கூறி, சாதாரண தமிழ் அல்ல, தெய்வத் தமிழ் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் தமிழில் பாடினால் அர்த்தம் இருக்கும். ஆனால், அருள் இருக்காது என்று பிரபல அரசியல் விமர்சகர் சோ ஆன்மீகத்தில் புகுந்து தன் பூணூல் மொழியை அரங்கேற்றுகிறாரே!

கல்கியாருக்காவது அறவுரை, அறிவுரை கூற வேண்டும் இந்தப் பிரச்சினையில் என்றால் அது பார்ப்பனர்களுக்குத்தான்.

இந்த மொழியில் அர்ச்சனை செய்தால்தான் கடவுளுக்குப் பிரீதி - இன்னார் அர்ச்சனை செய்தால்தான் கடவுளுக்குச் சந்தோஷம் என்று கூறுவதேகூட கடவுளைச் சிறுமைப்படுத்துவது தானே!

அம்மையும், அப்பனும் அவன்தான் என்று சொல்லி விட்ட பிறகு, அவனுடைய மக்களில் பிரிவினை ஏது? பேதம் ஏது??

கல்கியின் பதில் நன்று - அதனை அக்கிரகார வட்டாரத்தில் எடுத்துச் சென்றால், எடுத்துச் சொன்னால் நல்லது. செய்யுமா? சொல்லுமா? எங்கே பார்ப்போம்! 29-3-2012

Seeni said...

nalla pakirvu

தமிழ் ஓவியா said...

ராமன் பாலம் என்று இன்று சொல்லும் அதே வழித் தடத்தில்தானே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி.ஆட்சி முடிவு செய்தது?


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் ஒப்புக் கொண்டது!
இன்று முரண்படுவது ஏன்? அரசியல் கண்ணோட்டமே!

மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்!

மதுரை, மார்ச், 30- ராமன் பாலம் அதை இடிக்கலாமா என்று இன்று கொடி தூக்கும் பி.ஜே.பி. ஆட்சியில் தானே இதே வழித் தடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப் பொழுது குரல் மாற்றிப் பேசுவானேன்? அதிமுக தேர்தல் அறிக்கையில் மணல் திட்டு என்று சொல்லப்பட்டது இப் பொழுது எப்படி ராமன்பாலம் ஆனது? என்ற வினாவை எழுப் பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய வஞ்சிக்கப் படும் தமிழகத்தின் உரிமைக் காப்பு தொடர் பிரச்சாரப் பயணத்தின் நிறைவுக்கூட்டம் மதுரை அண்ணா நகரில் 29.3.2012 மாலை 6 மணியளவில் நடை பெற்றது.

இதில் நிறைவுரை ஆற்றிய தமிழர் தலைவர் அவர்கள் வஞ்சிக்கப் படும் தமிழகத்தின் நிலை பற்றி உணர்ச்சிகரமான உரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழ் நாடு பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது, இன்னும் சில ஆண்டு களில் தமிழகம் முழு வதுமாக பாலைவனம் ஆகிவிடும், இதனை நாங் கள் ஓட்டுக் கண் ணோட்டத்தை நினைக் காமல், வீட்டுக் கண் ணோட்டத்தை நினைக்காமல், நாட்டுக் கண்ணோட்டத்தோடு சொல்கின்றோம். . நாம் விழிகளை மூடி உணர்வற்று இருந்த நேரத்தில், நமது விழிகளை அகலத் திறந்து பார்ப்பதற்கு ஓடி ஓடி உழைத்து தனது விழிகளை மூடிய தந்தை பெரியார் ஊட்டிய உணர்வோடு இதனைச் சொல்கின்றோம். நாம் இன்னும் அடிமை களாக இருந்து கொண் டிருக்கிறோம், அடிமை கள் பல வகை உண்டு. கொத்தடிமை, தற்காலிக அடிமை போன்ற பல வகைகளில் நாம் மத்திய அரசின் அடிமைகளாக இருந்து கொண்டிருக் கிறோம்.

தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக் கக்கூடிய இயற்கை வளங்கள் படிப்படியாக பறிக்கப்படுகின்றன.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணை 152 அடியாக உயர்த்தப்படவேண்டும். ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் எனச் சொல்கின்றனர். அணை உடைக்கப்பட்டால் தமி ழகத்தின் வாழ்வாதாரம் என்னவாகும்? ஆங்கிலத் தில் ஒரு சொற்றொடர் உண்டு. எப்போதும் விழிப்பாக இரு, அது தான் நீ சுதந்திரத்திற்காக கொடுக்க வேண்டிய விலை .

தமிழர்கள் நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என் பதற்காக உழைப்பவர் கள் நாங்கள். அரசியல் வாதிகள் தேர்தல்கள் பற்றிக் கவலைப்பட லாம். இடைத்தேர்தல் கள் வரலாம், போக லாம். ஆனால் நாங்கள் அதைப்பற்றிக் கவலைப் படாதவர்கள் எனக் குறிப்பிட்டு முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு, அதில் தமி ழகம் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டது, வஞ் சிக்கப்படுகிறது என்ப தனை ஆதாரங்களோடு குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழ் ஓவியா said...

தமிழகம் பாலைவன மாக மாறக்கூடிய சூழல் காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் எப்படி கருநாடக அரசின் பிடி வாதத்தால் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதனை விளக்கிப் பேசினார். தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண் ணீர்கூட கொடுக்க மாட்டோம் என்று சொல்கின்றார்கள் கரு நாடகத்தில், ஆளுங் கட்சி ,எதிர்க்கட்சி, ஆள நினைக்கும் கட்சி என அனைவரும் ஒன்று போல தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்களே !

தீர்ப்புகள் மதிக்கப்படவில்லை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை கேரள அரசு களும் மதிக்கவில்லை, கருநாடக அரசுகளும் மதிப்பதில்லை, கடைசி வாய்ப்பாக நீதி மன் றங்கள் இருக்கின்றன, அதன் தீர்ப்பையும் மதிக்கமாட்டோம் என்று சொன்னால் இவற்றிற்கு என்ன தீர்வு எனக் கேள்விகளை எழுப்பினார். அதனைப் போலவே ஆந்திர அரசினால் பாலாறு நீர் வரத்து தடுக்கப்படும் அபாயம் வந்திருக்கிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் எல்லாக் கட்சியினரும் ஒன்று பட்டு நிற்கின்றார்கள்.

ஆனால் தமிழகத்தில் அப்படிப் பட்ட நிலைமை இல்லையே, ஏட்டிக்குப் போட்டி என்னும் நிலைமை தானே இன்னும் இருக் கிறது. இது மாறவேண் டாமா? எவ்வளவு பெரிய திட்டம் சேது சமுத்திரத்திட்டம்; தமிழர்களின் எத்தனை ஆண்டுகாலக் கனவு? இதே மதுரையில்தானே சேது கால்வாய்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது ? 2400 கோடி ரூபாய் கால்வா யில் கொட்டப்பட்டி ருக்கிறதே!

தமிழகத்தில் எங்கும் அரசியல், எதிலும் அரசி யல், எப்போதும் அரசி யல் என்னும் கொடுமை இருக்கிறதே? ராமர் பாலமா அது ? ஆதம்ஸ் பாலம் என்ற அந்த இடம் மணல் திட்டுக் கள்தானே! என்ப தனைக் குறிப்பிட்டு சேது சமுத்திரத் திட் டத்தில் தமிழர்கள் எப் படி வஞ்சிக்கப்பட் டோம் என்பதனைக் குறிப்பிட்டார். தமிழகத் தின் முதல்வர் அந்த மணல் திட்டுக்களை தேசிய சின்னமாக அறி விக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

அண்ணா கொள்கைக்கு விரோதம் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு , அண்ணாவின் கொள்கைக்கு எதிராக தமிழக முதலமைச்சர் செய்ல்படுகிறாரே! இதோ அ.இ. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் எனக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத்திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றியதைக் குறிப்பிட்டார்.

பி.ஜே.பி.தானே இந்த வழித்தடத்தை கொடுத்தது ? திட்டம் முழுமையாக முடிய வேண்டிய நிலையில் இல்லாத ராமன் என்னும் கதாபாத்திரத்தைக் காட்டி இந்தத் திட்டத்தை தடுத்திருக்கிறார்களே.

கொடுங்கள் தந்திகளை...

இன்றைக்கு தமிழக முதல்வர் அந்த மணல் திட்டுக்களை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுக்கலாமா? தமிழர்களே இந்தக் கோரிக்கையை எதிர்த்து பிரதமருக்கு தந்தி கொடுங்கள் ! இலட்சக் கணக்கில் தந்தி கொடுங்கள்! என வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

ஈழத் தமிழர்கள் பட்ட இன்னல்களையும் இன்றைக்கும் முள்வேலி முகாம்களில் அவர்கள் படும் இன்னல் களையும் குறிப்பிட்டுப் பேசிய தமிழர் தலைவர் அவர்கள் ஜெனிவா தீர்மானத்தில் இந்தியா மதில் மேல் பூனையாக இருந்தது. நமது ஒன்றுபட்ட போராட்டத்தால், குரலால் ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

தனியீழமே தீர்வு!

ஏன் மறு நாள் பிரதமர் இலங்கைக்கு கடிதம் எழுத வேண்டும்? அந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்கத் தேவையில்லை என இலங்கை சொல்கிறதே! அவர்கள் மனித நேயமற்ற கொடுங்கோலர்கள், ராஜபக்சே, ஹிட்லரை விட, இடி அமீனை விட மோசமான கொடுங்கோலன் என்பது பன்னாட்டு ஊடகங்களால் அம்பலப்பட்டிருக்கிறதே என்பதனைக் குறிப்பிட்டு தமிழர்கள் பட்ட இன்னல்களை எடுத்துக்கூறினார்.

1983-இல் தமிழ் ஈழம்தான் தீர்வு என்பதனை மதுரையில் சொன்னோம், அதுதான் இன்றைக்கும் தீர்வு. தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு, தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று உணர்ச்சிகரமாக எடுத்துக்கூறினார். (முழுமையான உரை விவரம் பின்னர் வரும்). 30-3-2012

தமிழ் ஓவியா said...

பிரதமருக்குத் தந்திகள் குவியட்டும்!


To
The Hon’ble Prime Minister of India,
New Delhi - 110 001

The request of the Tamil Nadu Chief Minister to declare Ramar Sethu as a National Monument may please be rejected , as it is not a visible monument, but only sand dunes under seabed. The implementation of Sethu Samudra Canal Project may please be expedited. The Government should strictly follow the principle of secularism.