Search This Blog

17.3.12

கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வேண்டுமா? மூட வேண்டுமா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வேண்டுமா? மூட வேண் டுமா? என்ற பிரச்சினை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதில் மத வாதத்தை வழக்கம்போல சங்பரிவார்க் கும்பல் திணித்துப் பிரச்சி னையைத் திசை திருப்பி வருகிறது.

இதில் சிவசேனை என்றஅமைப்பு (அதுவும் சங்பரிவார் சேனையின் மகாபாரதக் குழந்தைதான்) மேற்கொண்ட ஒரு செயல்தான் அதிபுத்திசாலி (?)த் தனமானது.

பொள்ளாச்சி அருகே மாசாலை அம்மன் என்ற ஒரு கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் மசாலா அரைத்தல் சடங்கை சிவசேனை செய்திருக்கிறது.

எதற்காக இந்தச் சடங்காம்?

தமிழ்நாட்டில் மின் வெட்டு நீங்க வேண்டும். கூடங்குளம் நிலையம் வேலை செய்யத் தொடங்க வேண்டும். அதற்குத் தடையாகவிருக்கும் உதயகுமாரும் அவரின் ஆதரவாளர்களும், அமைப்பும் அழிய வேண்டும் என்பதுதான் (என்ன நல்ல எண்ணம்!)

அந்த மசாலா அரைப்புச் சடங்கில் உள்ள மசாலா இதுதான். மண்டையில் மசாலா இருக்கிறதா என்ற கேள்வி இப்படித்தான் வந்திருக்குமோ, என்னவோ!

சடங்குகள் செய்வதால் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றால் மனித முயற்சிகள் எதற்கு? அரசுகள் எதற்கு? நிருவாகங்கள் எதற்கு? திட்டங்கள்தான் எதற்கு?

இது புரியாமல் இந்த மண்டு மசாலாக்கள் இப்படி நடக்கலாமோ என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது. சிவசேனாக்காரர்கள் எண்ணம் நிறைவேறக் கூடாது என்று எதிர் சடங்கு ஒன்றை நடத்த சடங்கு இல்லாமலா இருக்கும் இந்த அர்த்தம் உள்ள இந்து மதத்தில்)

தமிழ்நாட்டில் இராசிபுரம் காவல் நிலையத்தில் ஒரு வேலை செய்திருக் கிறார்கள்.


தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைப் பிடித்து விட்டார்களாம். இதைச் செய்வதற்குத் தானே காவல்துறை இருக்கிறது.

அப்படியெல்லாம் அவர்கள்மீது இல்லாத திறமையைப் புகுத்தக் கூடாது. அவர்களது அது போன்ற நம்பிக்கையெல் லாம் அறவே கிடையாது.

அதனால் என்ன செய் தார்கள் கொள்ளையர்கள்? பிடிபட்டதற்காக நேர்த்திக் கடன் என்ற பெயரில் கிடா வெட்டிப் பூஜை செய் திருக்கிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் காக்கி உடை களைக் கழற்றி எறிந்து விட்டு காஷாயம் தரித்துக் கொண்டால் ஆச்சாரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

------------ மயிலாடன் அவர்கள் 16-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

தமிழ் ஓவியா said...

வன்முறை!


கேள்வி: புதுவையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; பொது மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள புதுவை அரசு துப்பாக்கி வழங்க வேண் டும் என்கிறாரே காங் கிரஸ் எம்.பி. கண்ணன்?

பதில்: கத்தி வைத்துக் கொள்ளுங் கள் என்று முன்னொரு நாள் ஒரு தமிழகத் தலைவர் சொன்னதற்கு ஒருபடி மேலே போய் விட்டார் கண்ணன். சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட யோசனை சொல் வதற்குப் பதில், அதை மேலும் கெடுக்க வழி சொல்லும் கண்ணன் ஒரு எம்.பி. என்று நினைத்துப் பார்க்க வெட்கமாயிருக் கிறது. - கல்கி (18.3.2012 பக்கம் 85)

பார்ப்பனர்கள் எங்கே சுற்றினாலும் பெரி யாரைச் சீண்டா விட்டால் அவர்களுக்கு நித்திரையே நிச்சயமாக வராது.

ஆம், பெரியார் கத்தியை வைத்துக் கொள்ளச் சொன்னார். சட்டத்துக்குட்பட்ட கத்தியை வைத்துக் கொள்ளுமாறு சேலம் ஆத்தூர் மாநாட்டில் தீர்மானம் போட்டார்.

தற்காப்புக்காகத் தானே தவிர யாரையும் குத்தவோ கொலை செய்யவோ அல்ல. கறுப் புச் சட்டைக்காரர்கள் அந்தக் கத்தியைக் கொண்டு யாரைக் குத் தினார்கள்? தகவல் இருந்தால் கல்கி கூறட்டுமே!

மாறாக பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் நடத்திய போது பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முதல் அமைச்சர் என்ற பொறுப்பு இல் லாமல் வன்முறையைத் தூண்டியவர் தான் கல்கிக்கு மிகவும் வேண் டப்பட்டவரான ஆச்சாரி யார் ராஜாஜி.

தற்காப்பு என்று கூறி துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக் கொன்றவர் ராஜாஜி என்பதையும் நினைவுபடுத்திக் கொள் ளட்டும். இவ்வளவு பேசும் இந்தக் கூட்டம் ஷாகா என்ற பெயரால் ஆர். எஸ்.எஸ். கும்பல் வன் முறை பயிற்சி அளித்து வருகின்றதே - அதுபற்றி மூச்சு விட்டதுண்டா?, பெண்களுக்கே ஆர். எஸ்.எஸ். பாசறையில் துப்பாக்கி சுடும் பயிற் சியை அளிப்பது எந்த நோக்கத்தில்?

இந்துக் கடவுள்கள் கைகளில் அரிவாள், அம்பு, சங்கு என்ற ஆயுதங்கள் ஏந்தி நிற்கின் றனவே. அதன் தாத் பரியம் என்ன?

இவை எல்லாம் நன் முறையின் சின்னங்களா? வன்முறை பெற்றுப் போட்ட குட்டிகளா?

இந்துக் கடவுள்களே சண்டை போட்டுள்ளன, கொலை புரிந்துள்ளன, கற்பழித்துள்ளன என்று புராணங்களை ஒரு பக்கம் எழுதி வைத்துக் கொண்டு, அதற்கு வக்காலத்துப் போட்டு எழுதும் கல்கி கள் வன்முறையைப் பற்றிப் பேசலாமா, வீணாக தந்தை பெரியாரை வம் புக்கு இழுக்க வேண்டாம்! - மயிலாடன் 17-3-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி


தமிழ்நாட்டில் விதவையர், விவாகரத்து பெற்றோர் திருமணத்திற்கான மதத் தடை உடைபடுகிறது!

சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டை ஒரு அமைதிப் புரட்சி புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தில் விதவையர் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் இதற்கு இருந்த மதத் தடையை மறந்து சமூகம் இதனை ஏற்றுக் கொண்டுள் ளதாகவே தோன்றுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகரமயமாதல், பெண்கள் தற்போது பெற்றுள்ள பொருளாதார சுதந்திரம், மாறிவரும் பண்பாட்டு மதிப்பீடுகள் போன்றவையே இந்த மாற்றத்திற்கான காரணங்கள் என்று கல்யாண தரகர்கள் கூறுகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த போக்கு இப்போது அதிக அளவில் வளர்ந்துள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

இது பற்றிய விதவைகளின் பெற் றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மனநிலையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாரத திருமண மய்யத்தின் தோற்று நரும் துலைமை அலுவலருமான முருகவேல் ஜானகி ராமன் கூறுகிறார். இளம் விதவை களுக்குத் தகுந்த மணமகன்களை பெண்களின் பெற்றோர்களே தேடு கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டத்தின் கீழ் 20,000 ரூபாய் நிதி உதவியை தமிழ்நாடு மாநில அரசு வெகு காலத்திற்கு முன்பாக 1975 லேயே அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் மறுமணம் செய்து கொள்ளும் அனைத்து விதவைகளும் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பம் செய்வதில்லை என்று கூறும் சமூக நலத்துறை அலுவலர்கள், 2008-09 ஆம் ஆண்டில் 167 விதவைகளும், 2009-10 இல் 181 விதவைகளும் மட்டுமே அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

இளம் விதவைகள் இந்த முன்னேற் றத்தை வரவேற்கின்றனர். எனக்கு 27 வயதாகும்போது எனது முதல் கணவர் விபத்தில் இறந்துவிட்டார். சில ஆண்டுகள் கழிந்தபின் மறுமணம் செய்து கொள்ள நான் சம்மதித்தேன். எனது வாழ்க்கை இப்போது நன்றா கவே உள்ளது. எனது அய்ந்து வயது மகளுடன் என்னை மணந்து கொள்ள மகிழ்ச்சியுடன் முன்வந்தவரை நான் மணந்து கொண்டேன். அழகான குடும்ப வாழ்க்கையை இப்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இத்தகைய மாற்றம் நமது சமுதாயத்ததில் நீடிக்கும் என்று நம்புகிறேன் என்று பன்னாட்டு நிறு வனப் பணியாளர் ரோஹினி கூறு கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப் பட்ட விதவைகள் மறுமணத் திட்டத்தின் கீழ் இணையர் தேடி செய்யப்படும் பதிவுகள் ஆண்டு தோறும் 20 - 30 விழுக்காடு அதிகரித்து வருவதாக ஜானகிராமன் கூறுகிறார். பதிவு செய்துள்ளவர் களில் பெரும்பாலோர் விவாகரத்து பெற்றவர்கள். என்றாலும் 10,000 க்கும் மேற்பட்ட விதவைகளும் பதிவு செய்துள்ளனர். மும்பை, பெங்களூரு, கோவைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மறு மணங்கள் சென்னையில் நடை பெறுகின்றன என்று அவர் கூறுகிறார். மறுமணம் செய்து கொள்ளும் ஆண்களின் சராசரி வயது 36 ஆகவும், பெண்களின் வயது 32 ஆகவும் இருக்கிறது.

மறுமணத்திற்கு என்றே தனியான திருமண மய்யம் ஒன்றை நடத்தி வரும் பிரியா என்பவர் தான் இந்த மய்யத்தைத் துவக்கியபோது ஒரு சில நூறு பெண்களே பதிவு செய்திருந்ததாகவும், இன்று ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் கூறுகிறார்.
கிராமப்புற தமிழ்நாடு இந்த விஷயத்தில் பெரிய அளவில் மாறிவிடவில்லை என்று பாலியல் மற்றும் ஊடக ஆய்வாளரும், நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியருமான ராதா என்பவர் சுட்டிக் காட்டுகிறார். 17-3-2012

தமிழ் ஓவியா said...

மத்திய பட்ஜெட் : தலைவர்கள் கருத்துகலவை பட்ஜெட்: கலைஞர் கருத்து

திமுக தலை வர் கலைஞர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

இந்த நிதி நிலை அறிக்கை, குடியரசுத் தலை வர் தமதுரையில் குறிப்பிட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும், நாட்டை அனைத்து முனைகளிலும் உயர்த்தி மேம்பாடு அடையச் செய்வதற்கும் எந்த அளவுக்கு உதவிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஏழையெளியோர் வாங்கும் சக்தியைப் பெறுவதற்கு அரசு வழங்கும் மானியங்களே பெரிதும் துணை புரிகின்றன. எனவே மானியங்களைக் குறைப்பது குறித்து தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை 18 சதவிகிதம் அதி கரித்திருப்பதும், வேளாண் கடனுக் கென ரூ.5,75,000கோடி ஒதுக்கியிருப் பதும், ரூ.3,884கோடி அளவுக்கு நெசவாளர் கடனை ரத்து செய்திட முன் வந்திருப்பதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீட்டினை 18 சதவிகிதம் உயர்த்தி யிருப்பதும் வரவேற்கத்தக்க அம் சங்கள்.

வருமான வரி விலக்கு ரூ.2லட்சம் வரை மட்டுமே என்று அறிவித் திருப்பது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். மிதிவண்டி என்பது சாமான்யரின் வாகனம். அதற்கு அடிப்படை சுங்க வரியை 30 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது சரியான யுக்தியாகத் தோன்றவில்லை. மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கவற்றையும், தவிர்த்திட வேண்டியவற்றையும் கொண்ட ஒரு கலவையாகவே இருக் கிறது.

பா.ஜனதா

பா.ஜனதா கட்சியின் தலைவர் களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்கா கூறுகையில், ``இந்த பட்ஜெட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை. பொரு ளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் பயனுள்ள எதுவும் இதில் சொல் லப்பட வில்லை. பொருளாதார உயர்வுக்கு வழி காட்ட இந்த பட்ஜெட் தவறி விட்டது. இது ஒரு கணக்கு அறிக்கைதானே தவிர, கொள்கை உயர்வுக்கான ஆவணமாக இல்லை. வெறுமனே திட்டங்களால் பூசி மெழுகப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட்

``இந்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு நிறைய நிவாரணம் அளிக்கும் என்று எதிர் பார்த்தோம். ஆனால், அதற்குப் பதிலாக மறைமுக வரிகளால் சாமானிய மக்களின் நிதிச் சுமை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது. நேரடி வரிகள் மூலம் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு நிவாரணம் அளித்துள்ள பிரணாப் முகர்ஜி, மறைமுக வரிகள் மூலம் ரூ.45 ஆயிரம் கோடிக்கு சுமையை அதிகரித்து உள்ளது. இதன் மூலம் மேலும் விலைவாசி அதிகரிக்கும். இதை ஏற்றுக் கொள்ள முடியாது, பொறுத்துக் கொள்ள முடியாது, நியாயமல்ல. விவசாயம் பற்றி பிரணாப் முகர்ஜி நிறைய சொல்லி இருக்கிறார். ஆனால் அவை பற்றி தெளிவாக எதுவும் இல்லை'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி சொன்னார்.

இந்திய கம்யூனிஸ்ட்

``இந்த பட்ஜெட் அர்த்தமற்ற, ஏட்டளவிலான, பயனற்ற பட்ஜெட். வேலை வாய்ப்புகள் அளிக்க இதில் ஒன்றும் இல்லை. சாதாரண குமாஸ்தாக்கள் தயாரித்து, தாக்கல் செய்யக் கூடிய இந்த பட்ஜெட்டை சமர்ப்பிக்க ஒரு நிதி அமைச்சர் தேவை இல்லை. நிதி அமைச்சகமும் தேவை இல்லை'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் தாஸ்குப்தா தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி

தலைவர்களில் ஒருவரான டி.ராஜா கூறுகையில், ``சாதாரண மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்தப் பயனும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தற் போதைய நிலையே நீடிக்கும் வகையில்தான் உள்ளது. தொழில் துறை பற்றி ஒன்றுமே சொல்லப்பட வில்லை. மேலும் பல இனங்களுக்கு சேவை வரிகள் விதிக்கப்பட்டுள்ள தாலும், சேவை வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாலும் விலைவாசி மேலும் உயரும்'' என்று சொன்னார்.

பிஜு ஜனதாதளம்

``இது ஒரு மங்கலான, ஜீவனற்ற, உயிரோட் டமில்லாத பட்ஜெட்'' என்று பிஜு ஜனதாதளம் கட்சி தலைவர்களில் ஒருவரான பைஜயந்த் ஜெய் பாண்டா கூறினார்.

சமாஜ்வாடி சமாஜ்வாடி கட்சி, இது ஒரு ஏமாற்றம் அளிக்கக் கூடிய பட்ஜெட் என்று தெரிவித்து உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இது நகர்ப்புறங்களை குறி வைத்து சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட். கிராம வளர்ச்சிக்கு ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளது.

தமிழ் ஓவியா said...

அய்.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு தருக!


மத்திய அரசைக் கண்டித்து ஆங்காங்கே கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் குழுவில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத் தோழர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து அய்.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பாக நேற்று (16.3.2012) மாலை 5.30 மணியளவில் நாகை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


திருச்சி மத்திய பேருந்துநிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலை அருகே இன்று காலை 10.30 மணியளவில் மாநில மாணவரணி செயலாளர் திராவிட எழில் தலைமையில் அமெரிக்கா கொண்டு வந்த அய்.நா. தீர்மானத்தை இந்தியா தாமதமின்றி ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் கழகத் தோழர்கள் கருப்பசாமி, சுந்தரவடிவு, விஜயன், சி.கருப்புசாமி, சுர்ஜித், செந்தில், ஜான்பிரிட்டோ, வெற்றிக்குமார், புவனேஸ்வரி, மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மாநகர தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் இளவரி, மாநகர செயலாளர் ஜெயராஜ், மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம், திருவரங்கம் நகரத் தலைவர் குமார், செயலாளர் மோகன்தாஸ், முத்துக்குமாரசாமி, உலகநாதன், ஸ்டாலின் உள்ளிட்ட 18 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து அய்.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இன்று (17.3.2012) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில், இலங்கை அரசுக்கு துணைபோவதை கண்டித்து, திராவிடர் மாணவர் கழகம் சார்பில் உரத்தநாடு, அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. தி.க. மாவட்ட செயலாளர் த.செகநாதன், மண்டல இளைஞரணி செயலாளர் நா.இராமகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் ஆ.இலக்குமணன், ஒன்றிய துணைத் தலைவர் அ.உத்திராபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் மாநல்.செய்க்கப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் த.பிரிதின், பெரியார் பெருந்தொண்டர் ஆர்.பி.சாமி, ஒன்றிய விவசாய அணி தலைவர் பூவை.இராமசாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெ.விமல், நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், நா.சிவசீலன், அ.மாதவன், க.சுடர்வேந்தன், கு.லெனின், ஜெ.சரவணன், வீ.ஆசைத்தம்பி, க.பசுபதி, ஆர்.ராஜேஷ், வினோத், தினேஷ், ஜெ.பெரியார்செல்வன், ஜெ.அன்புவீரமணி, குணசீலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 17-3-2012

தமிழ் ஓவியா said...

பூமியைப் போல் ஒருவன்


நாம் பூமியில் வாழ்கிறோம். இந்த பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? என்று நாசா மண்டையைக் குடைந்து தேடுகிறது. அப்படிப்பட்ட கிரகம் இருந்தால் அதில் பூமியைப் போன்று உயிரினங்கள் இருக்கலாம் அல்லவா?

கோல்டிலாக்ஸ் என்பது பூமியைப் போன்ற அமைப்பு வட்டத்துக்குள் வரும் கிரகங்களின் பெயர். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் 2326 கிரகங்களைக் கண்டறிந்திருக் கிறார்கள். இவற்றில் உயிரினங்கள் வாழலாம் என்பது ஒரு எண்ணம். இந்த 2326இல் 207 கிரகங்கள் பூமியைப் போன்றே சம அளவில் உள்ளன. 680 கிரகங்கள் பூமியைவிட 10 மடங்கு பெரிதாக உள்ளன. 48 கிரகங்கள் கோல்டிலாக்ஸ் பிரிவில் அடங்குகின்றன.

சமீபத்தில் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் கண்டறிந்துள்ள கிரகத்துக்கு கெப்ளர் 22 பி எனப் பெயர் வைத்து இருக்கிறார்கள். இதை நாசா 2011 டிசம்பர் 5இல் உறுதி செய்தது.

இந்த கெப்ளர் 22 பி கிரகத்தின் ஆரம் நம் பூமியைவிட 2.4 மடங்கு பெரியது. இது சுற்றிவரும் சூரியனுக் கும் கெப்ளர் 22 எனப் பெயர் வைத் திருக்கிறது. இந்தச் சூரியன் நமது சூரியனைவிடச் சிறியது. 290 நாள் களில் இக்கிரகம் இச்சூரியனைச் சுற்றுகிறது.

இதில் முக்கியமான அம்சம் இங்கு தண்ணீரும், காற்றும் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதன் தரை அமைப்பு பாறையா? திரவமா? வாயுவா? என்பது உறுதி செய்யப்பட வில்லை. பாறையாக இருந்தால் பூமியைப் போல் 13 மடங்கு எடை இருக்கும். அங்கு திரவம் இருந்தால் நிச்சயம் உயிர்கள் இருக்கும்.

மனிதன் வாழத்தக்க இடமாக இருந்தால் எதிர்காலத்தில் அங்கு போய்க் குடியேறி விடலாம். சரி அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது தெரியுமா?

600 ஒளியாண்டு தூரம்.

அப்படியானால் வினாடிக்கு 3 லட்சம் மைல் வேகத்தில் பயணித்தால் அங்கே போய்ச்சேர 600 ஆண்டுகள் ஆகும். அம்மாடியோவ்! 17-3-2012

தமிழ் ஓவியா said...

இதுதாண்டா ஆரியம் - திராவிடம்!

தந்தை பெரியார் தமிழை மேம்படுத்த எழுத்துகளில் சீர்திருத்த முயற்சி எடுத்தார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், அதை ஏற்று ஒரு குழு அமைத்தார். ராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக்கு வந்ததும் அதைக் கை கழுவினார்.
-- -சந்தனத்தேவன், திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...

இவர்தான் ராஜபக்சே.....


மகிந்தா ராஜபக்சே முதன்முதலாக 1970 இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2-004 ஆம் ஆண்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறகு 2005 ஆம் ஆண்டு இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அய்ந்தாண்டு காலங்களில் ஈழத் தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆட்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத் திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது.

இப்போரில் இளந்தளிர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

சரணடைய வந்தவர்களைக் கண்களைக் கட்டியும், கைகளைக் கட்டியும், நிர்வாணப்படுத்தி அவர்களைச் சுட்டுக் கொன்ற காட்சியை இங்கிலாந்து தொலைக் காட்சியான சேனல் 4 வெளியிட்ட ஆவணங்கள் ராஜபக்சேவின் போர்க்குற்ற நடவடிக்கைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின.

இலங்கையில் கடந்த 2009- ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது சிங்கள ராணுவம் ரசாயன கொத்துக் குண்டுகளை வீசி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்தது.

இந்தக் கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் தப்பவில்லை. மனித உரிமைகளை மீறும் வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தாங்கள் ஒருபோதும் போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று மறுத்தது. போரின் போது தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்த ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவை நாடியது.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை அய்.நா. மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தது. இந்தத் தீர்மான நகல் அய்.நா. மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர் களாக அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 47 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் கருத்துக்களுடன் இந்த தீர்மானத்தின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் விவாதமும் பின்னர் வாக்கெடுப்பும் நடைபெறும். அமெரிக்கா அய்.நா. மனித உரிமைகள் குழுவில் திடீரென இந்த தீர்மானத்தைத் தாக்கல் செய்ததால் இலங்கை கடும் அதிர்ச்சி அடைந்தது.

அய்.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு பிரான்ஸ், நார்வே, கனடா உள்பட 22 நாடுகள் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளன.

தாங்கள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவு திரட்டி வருகிறது. இதில் ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் தீர் மானத்தை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன.

24 நாடுகளின் ஆதரவு இருந்தால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என நம்பப்படுகிறது.

தமிழகத்திலும் ஒருமித்த குரல் எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்திலும் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

வருகிற 27 ஆம் தேதி ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றத் தீர்மானத்தின் கதி என்னாகும் என்பது தெரிந்துவிடும்.17-3-2012