Search This Blog

20.3.12

ஜெனிவா தீர்மானம் -முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏன்?

அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரலை ஏற்று பிரதமரின் ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது வரவேற்கத்தக்கது

அரசியல் கண்ணோட்டத்தோடு தமிழக முதல் அமைச்சர் மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்திருப்பது தேவையற்றது! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு முதல் அமைச்சர் பிரதமரின் தீர்மானத்தைக் குறை கூறி கருத்துத் தெரிவிப்பது தேவையற்றது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.நா. மாமன்றத்தின் மனித உரிமைக் குழுவின் கூட்டம் - சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் நிலையில், வருகிற 23ஆம் தேதி அன்று, அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை, இலங்கை அரசு அப்பட்டமாக போர்க் குற்றம் புரிந்துள்ளது; மனித உரிமைகளை மீறியுள்ளது. அப்பாவி இலங்கைக் குடிமக்களை - தமிழர்களை - சிவிலியன்களை, பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற சாக்கில் கொன்று குவித்துள்ளது. இதற்காக குற்றவாளிக் கூண்டில் அது உலக நாடுகளால் நிறுத்தப்பட வாய்ப்பளிக்கும் மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்திய ஒரு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

நாடுகளின் ஆதரவு

அய்ரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் சுமார் 27 நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போர்க் குற்றவாளியான இலங்கையின் சிங்கள இராஜபக்சே அரசு அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சைனா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகளிடம் சரணடைந்துள்ளது!

இதற்குமுன் இந்திய அரசின் இராணுவ உதவி உட்பட, நிதி ஆதாரங்களையும் பெற்ற நினைப்பில், எப்படியும் இந்தியாவில் உள்ள ஒரு ஊடகத்தின் ஒரு சாரார், சில ஈழ தமிழர் விரோத வாழ்வுரிமையை விரும்பாத ஆரிய சிங்கள உறவின் மிச்சசொச்சமாகத் திகழுவோர், சில அனாமதேய அரசியல் புரோகிதர்கள், இந்து ராஜ்யத்தை உருவாக்க முனையும் ஆர்.எஸ்.எஸ். போன்ற பார்ப்பனீய பாதுகாப்பு அமைப்புகள் இவைகளின் பிரச்சாரத்தையும், அதிகார வர்க்கத்தில் ஊடுருவிய தமிழின விரோத ஆதிக்க சக்திகளையும் நம்பி, இந்தியாவை எப்படியும் தன் வயப்படுத்தி விடலாம் என்று கருதி, பல அரசியல் சித்து வேலைகளை தங்கள் லாபி மூலம் செய்து கொண்டே உள்ளன!

தமிழ்நாட்டில் இன உணர்வும், மொழி உணர்வும், மனிதநேயமும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது; இந்த சக்திகளால் ஊதி விடப்பட்டதால் மிகப் பெரிய தீயாக மத்திய அரசுக்கு எதிராக வளர்ந்து விடுமோ என்ற நிலை வந்து விட்டது!

தி.மு.க.வின் முக்கிய பங்கு!

அனைத்துத் தரப்பு மக்களும், கட்சிகளும் ஓங்கிய குரலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தே தீர வேண்டும் என்பதில் அறப்போர்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் முழங்கிய நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சி களாய், செய்திகளாய் ஓங்கி நின்றன!

மத்திய அரசில், அய்க்கிய முன்னணி அரசில் முக்கிய அங்கம் வகித்து வரும் தி.மு.க. இம்முறை ஓங்கி போர்க் குரலை எழுப்பியது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தந்த வண்ணமே இருந்தனர்.
அதன் தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமான வேண்டுகோளில் தொடங்கி உண்ணாவிரதம் இருப்போம் என்று தி.மு.க. உயர்நிலை செயற்குழு கூடி, இந்த ஆட்சியில் இப்பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, அமெரிக்காவின் தீர்மானத்தை ஜெனிவா கூட்டத்தில் இந்திய மத்திய அரசு ஆதரிக்காவிட்டால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதுபற்றியும் பரிசீலிப்போம் என்று திட்டவட்டமாக பிரகடனம் போல அறிவிக்க 20ஆம் தேதி தி.மு.க. முடிவு செய்யும் என்ற நிலையில் மத்திய அரசு தனது மவுனத்தைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!

வரவேற்கத்தக்க பிரதமரின் அறிவிப்பு

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் நேற்று (19.3.2012) மக்களவையில் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று திட்டவட்டமாக, சுயமரியாதையுடன் ஈழத் தமிழ் மக்கள் வாழ வகை செய்ய வேண்டும் என்று சிறப்பாகக் கூறியது - அனைத்துத் தரப்பு மக்களாலும், உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், மனிதாபிமான உரிமையை மதிக்கும் மாண்பாளர்கள் அனைவராலும் வரவேற்கத்தக்க அறிவிப்பாக கருதப்படுகிறது.
அதற்காக பிரதமருக்கும் அவர் சார்ந்த கூட்டணித் தலைமைக்கும் நாம் நமது பாராட்டத்தக்க நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!

முதல் முறையாக தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வெளிப்படை யாக தங்கள் கருத்தை மத்திய அரசுக்கு எடுத்து வைத்து அதன் மூலம் ஒரு திருப்பத்தையும் நிலை நாட்டியுள்ளனர்.

அரசியல் மாச்சரியங்களுக்கு இடமில்லை

இதில் அரசியல் மாச்சரியங்களுக்கு இடமில்லை என்பதற்கொப்ப, தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களும் அவரது கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, மத்திய அரசு நிலைப்பாடு எடுக்கத் தூண்டியுள்ளனர். இடதுசாரிக் கட்சியினரும் தங்களது குரலை ஓங்கி ஒலித்தனர்; நாடாளுமன்றத்திலும் அனைத்துத் தரப்பினரும், வீதிகளில் மாணவர்கள், இளம் வழக்குரைஞர்கள், வணிகர்கள் போன்ற அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பினர்.

அய்.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் ஜெனிவாவில் விரைவில் கூடும் கூட்டத்தில், இலங்கை சிங்கள இராஜபக்சே அரசு போர்க் குற்றவாளியென்ற அய்.நா. குழுவின் அறிக்கைப்படி, மனித உரிமைகள் மீறல் பற்றிய இலங்கை அரசுமீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏன்?

முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கும் கடிதங்கள் எழுதிவிட்டு, இப்போது பிரதமர் முன்வந்து நேற்று மக்களவையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற கூறியதோடு, இலங்கையில் உள்ள தமிழர்கள் வருங்காலத்தில் சமத்துவம், கவுரவம், நீதி, சுயமரியாதையுடன் நடத்தப்படுவ தற்கான அம்சங்கள் அத்தீர்மானத்தில் முக்கியம். நிச்சயம் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்போம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றுதானே முதல் அமைச்சர் பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்; பிரதமர் அறிவிப்பை அவர் வரவேற்று மேலும் இந்திய அரசு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புத் தேட வேண்டிய கடமை படைத்த முதல் அமைச்சர் ஏன் இப்படி அறிக்கை விடுகிறார்?
இப்போது திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, பிரதமர் நாடகம் ஆடுகிறார்; கருணாநிதிக்குத் துணை போகிறார் என்றெல்லாம் அறிக்கை விட்டிருப்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது; வெறும் அரசியல் பார்வை கொண்டது!

பழைய கூற்றுகளைக் கிண்டினால் முதல்வருக்குத்தான் தர்மசங்கடமாகும்

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் டில்லிக்கு அழுத்தம் கொடுத்து, ஒரே அணியில் நிற்காவிட்டாலும், ஒரே மாதிரி குரலில் சுருதி பேதமின்றி தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே இப்போது உள்ள முக்கிய பிரச்சினை என்பதை வசதியாக மறந்துவிட்டு, இதனால் தி.மு.க.வுக் குப் பெருமை வந்துவிட்டதே, காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற மத்தியில் உள்ள அரசுக்கு எதிரான பிரச்சார ஆயுதம் பறிக்கப்பட்டுவிட்டதோ என்பதாலோ என்னவோ திடீரென்று இப்போது பிரதமர் பதில் தெளிவற்றது என்று முதல்வர் கூறியிருப்பது - எவ்வகையிலும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற, அரசியல் தீர்வு காண உதவவே உதவாது! திருமதி சோனியா காந்தி கலைஞருக்கு எழுதிய கடிதம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் பதுங்கு குழியிலிருந்து வெளிவந்தவுடன், ஒட்டு மொத்தமாக கொல்லப்பட்டனர் என்று இப்போது கூறுகிறார் (நமது எம்.ஜி.ஆர். 20.3.2012 பக்கம் 12) அதற்குப் பரிகார நட வடிக்கைகளை உலக நாடுகள் பார்வையில் துவக்கியுள்ள தன் முதல் கட்டம் தானே அமெரிக்காவின் தீர்மானம்!

பழைய கூற்றுகளை கிளற ஆரம்பித்தால், முதல்வருக்கு தர்ம சங்கடம் வரும். போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்! என்ற தத்துவம் பேசியது யார்?

வெளி உறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதிலிருந்து, பிரதமர் கூறிய பதில் நல்ல மாற்றம் எனக் கருதி அதை வரவேற்று, ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு உருவாக்க வேண்டுமே தவிர, அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பகடையாக ஆக்கலாமா?

இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆதரித்துள்ளதே!

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உதவ வேண்டிய மகத்தான பொறுப்பும் இந்திய அரசு, உலகத் தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைத்திட வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

----------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --”விடுதலை” 20-3-2012

7 comments:

தமிழ் ஓவியா said...

அட அமாவாசையே

ரயில் பயணிகள் கட்டணம், பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் குறைகூறும் தி.க. தலைவர் வீரமணி, பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்திற்கு பத்து ஆண்டுகளுக்குமுன் பெற்ற கட்டணத்தை இப்பொழுதும் வசூலிப்பாரா? - தினமலர் 26.3.2012

இனிமேல் விலைவாசி உயர்வுபற்றி கண்டிப்பாக தினமலர் கண்டித்து எழுதாது என்று நம்புவோமாக! (அதிலும் கூட பார்ப்பனர் ஆட்சி என்றால் ஒரு அளவுகோல் சூத்திரர் ஆட்சி என்றால் இன்னொரு அளவுகோல் தினமலருக்கு இருக்காது என்று நம்புவோமாக!)
அரசு பட்ஜெட்டுக்கும், தனியார் பட்ஜெட்டுக்கும் உள்ள வேறுபாட்டைக்கூட அறியாத அமாவாசை இருட்டுகளை நினைத்தால் வாயால் சிரிக்க முடியாது!

ராமனுக்குத்தான் வெளிச்சம்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.
-ஆர்.எஸ்.எஸ்.,

ஆதரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த அரசியல் குழந்தை பி.ஜே.பி. கூறுகிறது. பி.ஜே.பி.யின் தாயோ அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

ஏன் இந்த இரட்டை வேடம்? ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள்தான் பி.ஜே.பி. யின் பொதுச் செயலாளராக வர முடியும் என்று கட்சியின் விதி முறை கூறுகிறது.

சட்டமன்றம் மற்றும் நாடா ளுமன்றத் தேர்தல்களுக்கு பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக யாரைத் தேர்வு செய்ய வேண் டும் என்ற குழுவில் கட்டாயம் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் உண்டு. குருதட்சணை என்ற பெயரால் ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் பி.ஜே.பி. பிரதமர் உட்பட கியூவில் நின்று கத்தைக் கத்தையாகப் பணம் உண்டி யலில் போடுவது இன்றுவரை தொடரப்படுகிறதே! இப்படி எல்லாம் இருக்கும்போது ஆர். எஸ்.எஸ். முடிவுக்கு எதிராக பி.ஜே.பி. எப்படி செயல்படப் போகிறது? ஊரை ஏமாற்றத் தானே இந்த இரட்டை வேடம்! அவர்கள் நம்பும் ராமனுக்குத் தான் வெளிச்சம்! ஊருக்கு இளைத்தவர்கள்

வருங்கால வைப்பு நிதிக்கு (Provident Fund) 8.25 சதவிகிதம்தான் வட்டி - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி

ஊருக்கு இளைத்தவர்கள் இந்த நாட்டில் அரசுப் பணி யாளர்களும், ஊழியர்களும் தானா? 2010ஆம் ஆண்டில் கூட வட்டி விகிதம் ஒன்பதரை சதவிகிதமாக இருந்தது. வங்கி களில்கூட இதைவிட வட்டி விகிதம் அதிகம், நிதி நிறுவனங் களிலும் வட்டி அதிகம். அப்படி இருக்கும்போது அமைச்சர் ஊழியர்களின் வயிற்றில் அடிப் பது ஏன்? ஊருக்கு இளைத்த வர்கள் இவர்கள்தானா?

வருங்கால வைப்பு நிதியில் 4 கோடியே 70 லட்சம் தொழி லாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் அரசுக் கருவூலத்தில் குவியும் தொகை ரூ.3 லட்சம் கோடி யாகும்.

பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு ஏலங்கூறி விற்று விட்டு, தொழிலாளர்களின் தலையைத் தடவுவது மிகப் பெரிய சுரண்டலாகும். நீதி மன்றம் சென்றால் நிற்குமா? ஹிட்லருக்கு மகாத்மா விருது?

ராஜபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது - பத்திரிகைச் செய்தி

இனப்படுகொலையில் இட்லரையும் விஞ்சிய மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது வழங்கும் விழா ஒன்று டில்லியில் அரங்கேற உள்ளது. டில்லியில் பத்திரிகை விழா ஒன்றில் சிறந்த சர்வ தேச இளைஞன் என்ற பாராட்டு விருது அளிக்கப்பட உள்ளது.

இந்த விழாவுக்கு இந்திய அரசு அனுமதிஅளித்ததோடு அவருக்கு இசட் பாதுகாப்பு அளிப்பதாகவும் இந்திய அரசு கூறியுள்ளது. இட்லருக்கு மகாத்மா விருது, இடி அமீனுக்கு உலக அமைதிக் கான நோபல் பரிசு, (இறந்தவர் களுக்கும் அளிக்கப்படுவது உண்டே!)

விருதுகளை அளிக்க சிறந்த இடம் இந்தியா என்ற புகழைத் தட்டிப் பறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொலை செய்த ரத்தக் கரங்களோடு நின்ற ராஜபக்சேவுக்கு டில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படவில்லையா?

தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் மமதை யும், மனப்பான்மையும் இருக் கும் நிலையில் இதுபோன்ற மோசமான நிகழ்வுகளும் பூர்ண கும்பத்தோடு நடக்கத் தான் செய்யும்.

இந்தியாபற்றி தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும். 20-3-201

தமிழ் ஓவியா said...

கிருஷ்ணாவை சந்திக்கும் இலங்கை அமைச்சர்- பதிலுக்கு ஹில்லாரியை களமிறக்கிய அமெரிக்கா!

ஜெனீவா: அமெரிக்க ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால் பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து இந்திய அரசை சமாதானப்படுத்தி தங்களுக்கு ஆதரவாக திருப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, தனது வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே, அமெரிக்கா களம் இறக்கியுள்ளதால் இலங்கை மேலும் வெறுத்துப் போயுள்ளதாம்.

இலங்கைக்கு எதிரான தனது பிடியை அமெரிக்கா படு வேகமாக இறுக்கி வருவதாக தெரிகிறது, இலங்கைக்கு எதிரான வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அப்படியே அள்ளும் வகையில் தனது நடவடிக்கைகளை வியாபித்து மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா.

முதலில் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் ஆதரவை, தற்போது உறுதிப்படுத்த ஆரம்பித்துள்ளது. மேலும், இலங்கை எந்த வகையிலும் தனது ஆதரவு நிலையை சீர்குலைத்து விடக் கூடாது என்ற நோக்குடன் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஜெனீவாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே நேரடியாக களம் இறக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஹில்லாரியே களம் இறங்கியிருப்பதால் அமெரிக்கா, இலங்கை குறித்து படு தீவிரமான நிலையை எடுத்துள்ளதாக கருத்தில் கொள்ளப்படுகிறது.

இதனால் இலங்கை பெரும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும், பயத்திலும் உள்ளது. இந்த நிலையில்தான், தீர்மானத்தில் என்ன உள்ளது என்று தெரியாவிட்டாலும் கூட அதை ஆதரிப்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பேசினார். இது இலங்கைக்கு இன்னொரு அடியாக வந்து சேர்ந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்றுயோசித்த அந்த நாட்டு அரசு, எஸ்.எம்.கிருஷ்ணாவை எப்படியாவது மடக்கி அவர் மூலம் மத்திய அரசை சமாதானப்படுத்த முடியுமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளதாம்.

இதற்காக தனது வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸை ஜெனீவாவுக்கு இலங்கை அரசு அனுப்பி வைத்துள்ளது. அங்கு வரும் கிருஷ்ணாவை, பெரீஸ் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளாராம். அப்போது கையில் காலில் விழுந்தாவது தனக்கு ஆதரவு தருமாறு கிருஷ்ணாவிடம் பெரீஸ் கெஞ்சலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்திலிருந்து கிளம்பிய வரலாறு காணாத கடும் எதிர்ப்பலைகளுக்கு பிரதமரே பணிந்து போயிருப்பதால், எஸ்.எம்.கிருஷ்ணாவால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா உறுதிபட முடிவு செய்து விட்டால், இந்தியா சார்பான சில நாடுகளும் கூட இலங்கைக்கு எதிராக திரும்பலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் முடிவைப் பொறுத்து முடிவெடுக்க பல நாடுகள் காத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இதனால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்தியா, இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தானே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கைக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமெரிக்க நாடுகள் சிலவும் கூட தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன. குறிப்பாக நமீபியா, காமரூன் ஆகிய நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இப்படியாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு படு வேகமாக அதிகரித்து வருவதால் இலங்கை என்ன செய்வது என்று தெரியாமல் ஆப்பசைத்த குரங்கின் நிலை போல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-----------http://tamil.oneindia.in/news/2012/03/20/india-lankan-external-affairs-minister-meet-aid0091.html

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதாவின் கூடங்குளம் 'நாடகங்கள்': புட்டு புட்டு வைக்கும் கருணாநிதி

சென்னை: கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, போராட்டக்காரர்களுக்கு ஊக்கமும் கொடுத்துவிட்டு இப்போது அவர்களை கைது செய்து வருவதற்குப் பெயர் தான் நாடகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைவி ஜெயலலிதா என்ன தான் முதலமைச்சர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது திமுக மீது தான்.

அது சங்கரன்கோவில் இடைத் தேர்தலாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் திமுகவையும், என்னையும் கடுமையாகத் தாக்கி, அதை “ நாடகம்” என்று வர்ணிக்காமல் அவரால் இருக்க முடியாது.

அவருடைய அறிக்கைகளை அலட்சியப்படுத்தி விட்டு நாம் நமது பாதையில் செல்லலாம் என்று பார்த்தாலும், வலிய வந்து வம்பு வளர்ப்பதைப் போல நம் மீதே தொடர்ந்து பாய்ந்து சீண்டினால் நாம் என்ன தான் செய்வது?.

இலங்கை ராணுவத்தால் நமது இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது- இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக- மத்திய அரசு அதிலே தாமதமின்றித் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட வேண்டுமென்று கேட்டு நான் விடியற்காலை 5.45 மணியளவில் - கட்சிக்காரர்களோ, உதவியாளர்களோ கூட உடன் வராத நிலையில்- தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கியதை பின்னர் அங்கே வந்த செய்தியாளர்கள் எல்லாம் அறிவார்கள்.

நான் அங்கே உண்ணாவிரதம் இருக்கும் செய்தி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் அதிகாரிகளும், கழகத் தோழர்களும் அங்கே வந்தார்கள். அதன் பின்னர் தான் நான் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி டெல்லி வரை சென்று, மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி என் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின்பேரில், இன்னும் சொல்லப் போனால், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 27-4-2009 அன்று நான் உண்ணாவிரதம் இருந்தபோது விடுத்த அறிக்கையில்,

“போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்கு கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள், இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசு அறிவித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும். போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்க் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளே முதன்மையானவையாகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்று தெரிவித்ததையொட்டித் தான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றேன்.

தமிழ் ஓவியா said...

இலங்கைத் தமிழர்களுக்காக அதைக் கூட செய்ய முன்வராத, “போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்” என்று அறிக்கை விட்டு விட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டு திசை திருப்பும் ஜெயலலிதா, நான் ஏதோ மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

ஜெயலலிதா கூற்றுப்படியே நானாவது என்னுடைய இந்த வயதில் அந்த அளவிற்கு உண்ணாவிரதம் இருந்தேன்.

இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், தி.மு. கழகத்தினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும், அதிலே நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன்.

மத்திய அமைச்சரவையிலிருந்தே தி.மு.கழக அமைச்சர்கள் விலகுவார்கள் என்றும் தீர்மானம் எழுதி உயர்நிலைச் செயல் திட்டக் குழுவிலே நிறைவேற்றுவதாக இருந்தேன். ஆனால் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன செய்தார்?.

தி.மு. கழகம் ஆட்சி பொறுப்பிலே இருந்த போது, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரிலே சென்று பிரதமரிடம் எடுத்துக் கூற வேண்டாமா என்று எத்தனை அறிக்கைகளிலே ஜெயலலிதா என் மீது தாக்குதல் தொடுத்தார்? தற்போது முக்கியமான பிரச்னைகளிலே கூட முதலமைச்சர் என்ற முறையிலே ஏன் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரிடம் முறையிடவில்லை?

அதற்கு மாறாக பிரதமரே கருணாநிதியின் நாடகத்திற்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அறிக்கை விடுகிறார் என்றால் அது நாடாளுமன்ற நடவடிக்கைகளையே அவமதிக்கின்ற செயலாகும்.

இலங்கைத் தமிழர்களுக்காக 1956ம் ஆண்டிலிருந்து தி.மு. கழகம் எந்த அளவிற்குப் பாடுபட்டது என்பதைப் பற்றியெல்லாம் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றவிருந்த தீர்மானத்திலேயே ஆண்டுவாரியாக, தேதி வாரியாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பாக; கழக உயர் நிலை செயல் திட்டக் குழு கூடும் என்பதும், மாநில அளவில் தி.மு. கழகம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் என்பதும், அதிலே நான் பங்கேற்பதும் செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது, பிரதமர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறியதை வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நான் கை விட்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா.

பிரதமரின் பேச்சின் போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட வரவேற்று மேசையைத் தட்டியதை தொலைக் காட்சியிலேயே காட்டினார்கள்.

பழ. நெடுமாறன் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் 23ம் தேதி நடத்தவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கூட திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மட்டும் பிரதமர் தெளிவற்ற பதிலைக் கூறியதாக அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

மேலும் ஜெயலலிதாவின் அறிக்கையிலேயே “தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும் அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று பிரதமர் பேசியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தைகளை பிரதமரின் தெளிவற்ற பதில் என்று கூறி, அது வருத்தத்திற்குரியது என்று கூறியதோடு, தேவையில்லாமல் நான் ஏதோ துரோகம் இழைத்து விட்டதாகவும், நாடகத்தை அரங்கேற்றாமல் இருக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா சாடியிருப்பது எப்போதுமே அவருடைய சுபாவம் என்ற அளவில் நான் அதை அலட்சியப்படுத்த முனைந்தாலும் அவர் தமிழ் மக்களை ஏமாற்றி திசை திருப்ப முயற்சிப்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

அதுபோலவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்படும் என்ற முடிவினையும் ஜெயலலிதா எடுத்துள்ளார்.

கூடங்குளம் கடந்த ஆறு மாதங்களாக மூடிக் கிடக்க யார் காரணம்? போராட்டக் குழுவினரை ஜெயலலிதா அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்று 22-9-2011 அன்று நடைபெற்ற அமைச்சரவையிலே கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தானே கடந்த ஆறு மாதமாக அந்த அணு மின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு- இருள் சூழ்ந்ததோடு, கடந்த ஆறு மாத காலமாக அந்த கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம் பணியே இல்லாமல் ஊதியம் கொடுத்த அளவிலே மட்டும் 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படக் காரணம் யார்?.

அது மாத்திரமல்ல, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் கொடுத்த காரணத்தால், அப்பாவிப் பொதுமக்கள் ஏமாந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு, இன்று அந்தப் போராட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஏமாற்றி அவர்களையே கைது செய்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல அந்த அப்பாவி மக்களை மேலும் ஏமாற்றுவதற்காக ஏற்கனவே மத்திய அரசு பதினைந்து பேரைக் கொண்ட குழுவினை அமைத்த பிறகும், முன்னாள் குடியரசு தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம் போன்றவர்கள் உண்மையைத் தெளிவாக்கிய பிறகும், தமிழக அரசின் சார்பாக தேவையே இல்லாமல் மேலும் ஒரு குழுவினை அறிவித்து, அவர்களை அந்தப் பகுதிக்கெல்லாம் அனுப்பி, அவர்கள் அந்தப் பகுதி மக்களையே சந்திக்காமல், அறிக்கை கொடுத்து, அதை அப்படியே அலட்சியமாக கிடப்பிலே போட்டு விட்டு, தற்போது அந்தப் பகுதி வளர்ச்சிப் பணிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்போவதாகத் திடீரென்று அறிவித்திருப்பதற்குப் பெயர் தான் “ நாடகம்”.

கடந்த கால வரலாற்றை மறந்து- நம்பி- ஏமாந்து போராட்டத்திலே ஈடுபட்ட கூடங்குளம் பகுதி மக்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-----------http://tamil.oneindia.in/news/2012/03/20/tamilnadu-karunanidhi-blames-jayalalithaa-koodankulam-crisis-aid0090.html

தமிழ் ஓவியா said...

ஷாக் அடிக்குது.. ஷாக் அடிக்குது'.. அணு மின்சாரத்துக்குள் மதத்தை 'புகுத்தும்' ராம கோபாலன்!

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாக இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கையை ஆய்ந்து அணுமின் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை இந்து முன்னணி பாராட்டுகிறது.

தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 8 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு ஏற்பட்டு தொழில், விவசாயம், வியாபாரம் போன்ற துறைகள் செயல்பட முடியாமல் தடுமாறிவருகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையம் உடனடியாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததன் மூலம் இது சீர் செய்யப்பட்டு மின் தட்டுப்பாடு குறைந்து தொழிலும், விவசாய உற்பத்தியும் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கூடங்குளம் போராட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களும் இதனைத் தூண்டி நடத்துபவர்கள் வெளிநாட்டுச் சக்திகள் என்றும், கிருஸ்தவர்களால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்புகளுக்குக் கிடைத்திடும் வெளிநாட்டுப் பண பலத்தால்தான் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

வெளிநாட்டின் உதவி என்ற பெயரில் வரும் கொழுத்த பணத்தால் தனி அரசாங்கத்தையே இவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த அபாயத்தை மத்திய, மாநில அரசுகள் தற்போது உணர்ந்துள்ளன. இதனால் அரசு சாரா தன்னார்வத் தொண்டு அமைப்புகளைத் தீவிர விசாரணை செய்து மக்களுக்கு அவர்களின் நிழல் உலக செயல்பாடுகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வந்தது கிருஸ்தவ சர்ச் மிஷனரிகள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவர்களின் தனி அரசாங்கத்தால் தான் தமிழக அரசு அணு மின் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுத்ததை அடுத்து சர்ச்களில் மணியடித்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைக் கரை திரும்ப வைத்து போராட்டத்தைத் தூண்டியுள்ளனர்.


இப்போராட்டத்தில் கிருஸ்தவ சர்ச்களுக்குச் சம்பந்தமில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்துத் திசை திருப்பினர். ஆனால் போராட்டம் நடத்த சர்ச்சில் இடம் அமைத்துக் கொடுத்தும், சர்ச்சில் மணியடித்து மக்களைத் திரட்டி வன்முறையைத் தூண்டியும், பணபலம் ஆள்பலம் கொடுத்தும் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க சூழ்ச்சி செய்துள்ளனர். கிருஸ்தவர்களின் சூழ்ச்சியை அரசு முறியடிக்க வேண்டும். தமிழக மக்களும் கிருஸ்தவ சதியை உணர வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான கோடி நிதியின் வரவையும், அவர்கள் செய்யும் சதியையும் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒடுக்க வேண்டும். அன்னிய சக்திகளால் நமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, சுதந்திரம், பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை எதிர்தது இந்து முன்னணி மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தியது. ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டங்களில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கூட்டம் கூட நடத்த முடியாத நிலையை மக்கள் சக்தியின் துணைகொண்டு ஜனநாயக ரீதியில் போராடி இந்து முன்னணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் அணு மின் நிலையம் செயல்பட எடுத்த நடவடிக்கை, இந்து முன்னணிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

கூடங்குளம் பகுதி வளர்ச்சிக்குத் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதைப் பாராட்டுகிறோம். இந்த நிதி, அங்கு வாழும் அப்பாவி பொதுமக்களின் நலனுக்கே போய்ச் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் எந்த ஒரு பகுதியும் தயவுதாட்சண்யம் காட்டி சர்ச்சினால் ஆதாயம் பெற்று அரசுக்கு எதிராக செயல்படுவோருக்குப் போய்ச் சேரக்கூடாது. சர்ச்களுக்கும் என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கும் வரும் நிதியையும் மத்திய, மாநில அரசுகள் சமூக நலத்துறையின் மூலம் அனைத்து மக்களுக்கும் உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் ராமகோபாலன்.
----http://tamil.oneindia.in/news/2012/03/20/tamilnadu-rama-gopal-sees-christian-churches-behind-koodankulam-aid0090.html

தமிழ் ஓவியா said...

இந்தியா ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி- ஆதரவு 24; எதிர்ப்பு 15!

ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா.

தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது.

நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.

ஆனால், உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

ஆதரவளித்த நாடுகள்:

ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே

எதிராக வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.
Read: In English
இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.

தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.
---------http://tamil.oneindia.in/news/2012/03/22/world-us-resolution-against-sri-lanka-passed-successfully-aid0136.html