Search This Blog

24.3.12

மீண்டும் டெசோ தேவைப்படுகிறது! -கி. வீரமணி


ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா உள்பட 24 உலக நாடுகளின் வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. ஒரு வரலாற்றுத் திருப்பம் - நல்ல தொடக்கம்.

உலகறிய செய்த ஜெனிவா தீர்மானம்

இதன் மூலம் இனப்படுகொலை இலங்கை அரசால் நடத்தப்பட்டது; போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது என்பது உலகறியச் செய்யப்பட்டு விட்டது.

இலங்கை அரசு நியமித்த விசாரணைக் குழுவேகூட (LLRC) இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களை மறுக்கவில்லை. என்னென்ன நலத் திட்டங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது என்றாலும் எந்தவிதமான வளர்ச்சித் திட்டம் நோக்கியும் இலங்கை அரசு பயணிக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.

இலங்கை தலைமை நீதிபதியின் தீர்ப்புப் போன்ற கருத்து

மனித உரிமைக் கவுன்சிலின் கண்காணிப்பில் ஈழ தமிழர்களுக்கான நலத் திட்டங்கள். அரசியல் தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இலங்கை அரசின் ஒத்துழைப்பு எந்த அளவு இருக்கும் என்பதுகேள்விக்குறியே!

இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என்சில்வா முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு என்ன சொன்னார்?

"நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரவேபடவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம் . இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம், கவலையில்லை" என்று சிங்களவரான தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பு போல சொன்னதற்குப் பிறகு இலங்கை அரசின்கீழ் தமிழர்கள் சுயமரியாதையுடன், உரிமைகளுடன் கூடிய குடிமக்களாக வாழ்ந்திட முடியுமா?

இப்பொழுதும் நிலை என்ன?

இப்பொழுதும் நிலைமை என்ன? இலங்கையின் அதிகார பூர்வமான ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே - தமிழ் கிடையாது, பவுத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர் ஒருவர் மட்டுமே இலங்கையின் குடியரசு தலைவராக வர முடியும் என்று சட்டமாக்கிவிட்ட பிறகு இலங்கைத் தீவில் சிங்கள இன அரசாட்சியின் கீழ் தமிழர்கள் சமத்துவ நிலையில் வாழ முடியுமா?

பிரிட்டன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படுகொலைக் காட்சிகளைப் பார்த்த பிறகு இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து இனியும் வாழ முடியும் என்பதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா?

ஓர் இனத்தையே அடையாளம் தெரியாமல் முற்றிலும் கண்மூடித்தனமாக அழித்து விட்டு, கொஞ்சம்கூட மனசாட்சியின்றி சொல்லுகிறார் ராஜபக்சே. The Largest Humanitarian Rescue Operation in Human History - மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையை ராஜபக்சே மேற்கொண்டாராம். இத்தகைய கொடூரர்களை நம்பி தமிழ் மக்களை மறுபடியும் ஒப்படைக்க முடியுமா? 180 நாட்களில் முகாம்களில் உள்ளவர்களைக் குடியமர்த்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தாரே - மூன்று ஆண்டுகள் ஆகியும் முடிக்கவில்லையே!

இந்தநிலையில் தனியீழம் தவிர வேறு வழியே கிடையாது என்பது திட்டவட்டமான தெளிவாகும்.

1985இல் டெசோ

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேதான் தனியீழம்தான் இதற்குத் நிரந்தரமான தீர்வு என்பதை முடிவு செய்தோம்!

1985ஆம் ஆண்டில் (மே15) டெசோ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். (Tamil Elam Supporters Organigation).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகிய நான், மதுரை பழ. நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாபெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.

தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழீழத் தலைவர்கள் சந்திரகாசன் (தந்தை செல்வா அவர்களின் மகன்) பாலசிங்கம் ஆகியோர் நாடு கடத்தப்பட்டபோது டெசோ அமைப்பு கொடுத்த அழைப்பினை ஏற்று, தமிழர்கள் ஒருமுகமாகத் திரண்ட நிலையில் 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதே!

டெசோ முன்னின்று நடத்திய இரயில் நிறுத்தப் போராட்டம் (30.8.1985) தமிழ்நாட்டையே வெறிச் சோடச் செய்ததே! 1983 டிசம்பர் 17,18 நாட்களில் மதுரையில் உலகத் தமிழர்களை ஒன்று இணைத்து திராவிடர் கழகம் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தியதே!

மீண்டும் தேவை டெசோ!

உலக நாடுகள் இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று உணர வைக்கப்பட்ட இந்தக் கால கட்டத்தில், டெசோ அமைப்பு மீண்டும் தேவைப்படுகிறது.

அய்ந்து முறை முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் தனியீழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சரியான - இக்கால கட்டத்திற்கு அவசியமான கருத்தும் - முடிவுமாகும். எனவே டெசோவை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாகூட ஒரு கட்டத்தில் தனியீழம்தான் தீர்வு என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரிப்பதைத் தவிர்ப்போம்!

இந்தப் பிரச்சினையில் நம்மைப் பிரிக்கும் வேறு சில கருத்துக்களைத் திணிக்காமல் தனியீழம்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தரத் தீர்வு என்பதில் ஒன்றுபடும் தோழர்களை, அமைப்புகளை ஒருங்கிணைத்து, மீண்டும் டெசோவின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

இந்தக் கால கட்டத்தில் ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமையாகவும் இதனைக் கருதுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகத்தின் முயற்சி

அரசியல் கட்சியில்லாத சமுதாய இயக்கமான திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்துவதால் இதில் அரசியல் பிரச்சினைக்கும் இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாச்சரியங்களை மறந்து, இன்னமும் முள்வேலிக்குள் ஈழத் தமிழர்கள் வாடி வதங்குகிறார்கள்; மன ரீதியாக பாதிக்கப்பட்டு, உரிமை இழந்து நிற்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவு தர வேண்டாமா?


---------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 24-3-2012

9 comments:

தமிழ் ஓவியா said...

இராஜபக்சேவின் தோல்வி


இராஜபக்சேவின் தோல்வி

சென்னை பெரியார் திடலில் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் இனப்படுகொலைகள், மனித உரிமைகள் மீறப்பட்ட பிறகு இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில் திராவிடர் கழகத்தின் சார்பாக தலைமை நிலையச் செயலாளர் போன் றோர்கள் எல்லாம் அய்.நா. மன்றத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் 18.5.2011 அன்று நடத்தினர்.

எனவே, உலகத் தமிழர்களிலிருந்து தமிழகத் தலைவர்கள் வரை இலங்கையின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு தற்பொழுது ஒரு நல்ல பயன் கிடைத்திருக்கிறது. உலக நாடுகளில் 24 நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்து அய்.நா. தீர்மானத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத் துறையின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அவர்களே இலங்கை நாட்டின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.

இந்தத் தீர்மானம் செயலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ராஜபக்சேவின் அனைத்து முயற்சிகளும் இப்பொழுது தோல்வி கண்டுள்ளன.

- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்,
சென்னை, 24.3.2012)


இறையாண்மை பாதிக்கப்படாதா?

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதை இந்தியா மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கு முன்பு இலங்கை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடமாட்டோம்; இலங்கை இறையாண்மையில் தலையிடமாட்டோம் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருந்தது.

இந்தியா இலங்கைக்குச் செய்த எல்லா வகையான உதவிகள் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். இலங்கைக்கு, இந்தியா செய்த இராணுவ உதவி எல்லோருக்கும் தெரியும்.

இலங்கைக்காரர்களுக்கு, இந்தியாவில், இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டதே.

அவர்களுக்கு எதற்கு இங்கே இராணுவப் பயிற்சி கொடுக்க வேண்டும்?

இலங்கையின் இறையாண்மையை இந்தியாவில் அடகு வைத்துதான் பயிற்சி கொடுக்கப்பட்டது. தேவைப்படும்போது மட்டும் இறையாண்மை என்ற குல்லாயை மாட்டிக் கொள்வார்களோ!

வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததே இந்தியாதானே? அப்போது அடுத்த நாட்டு இறையாண்மை பற்றி நினைவு வரவில்லையா?

எனவே, இந்தியா இப்பொழுது இலங்கைக்கு எதிராக எடுத்த முடிவை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

நாடாளுமன்றத்திலேயே சமீபத்தில் பிரதமர் இலங்கைப் பிரச்சினைக்குப் பதில் அளித்துப் பேசும்போது, ஒரு செய்தியை மிகத் தெளிவாகச் சொன்னாரே. இலங்கையில் உள்ள தமிழர்கள் சமூக நீதியுடன், சுய மரியாதை உணர்வுடன் வாழ்வதுதான் அர்த்தமானது என்று சொல்லியிருக்கின்றார்.

அதைத்தான் நாங்கள் தனி ஈழமாக வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் உள்ள தமிழர்கள், நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை தனி நாடு வேண்டாம் என்று சொல்லி விட்டால், தனி ஈழத்தை வற்புறுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

- (செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர், சென்னை, 24.3.2012)

தமிழ் ஓவியா said...

தமிழின உணர்வாளர்கள் யார்? தமிழின எதிர்ப்பாளர்கள் யார்?


கேள்வி: இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் வடநாட்டுக்காரர்கள் சிலர் எதிர்க்கிறார்களே?

தமிழர் தலைவர்: வடநாட்டுக்காரர்கள் என்ன? தமிழ்நாட்டிலே இருக்கின்ற சுப்பிரமணிய சாமிகளும், சோ ராமசாமிகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரி மைக்கு ஒரு நல்ல விடியல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை வைத்து விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று சொல்லி, தமிழ் ஈழத்தை, தமிழின உணர்வாளர்களைக் கொச்சைப் படுத்துபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்களும் இவர்கள்தான். ஆகவே, தமிழின உண்மையான உணர்வுள்ளவர் கள் யார்? தமிழின உணர்வுகளுக்கு எதிரானவர்கள் யார்? என்பதை இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்க வாருங்கள்

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் எல்லோரும் ஒரே அணியில் வருவார்களா?

தமிழர் தலைவர்: ஈழத்தமிழர் பிரச்சினையில் எல்லோரும் ஒரே அணியில் சேர வேண்டும் என்று சொல்லுகிறோம். அவரவர் களுக்கு பல அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எந்தவித சுருதி பேதமும் இந்தப் பிரச்சினையில் இருக்கக் கூடாது. இதய சுத்தியோடு வர வேண்டும் இவர் இதற்கு முன் என்ன சொன்னார்? அவர் இதற்கு முன் என்ன சொன்னார் என்ற விமர்சனங்கள் கூடாது. டெசோ போன்ற ஓரமைப்பை திராவிடர் கழகம் மீண்டும் துவக்க வேண்டும் என்று கருதுகிறோம். திராவிடர் கழகம்தான் அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை திராவிடர் கழகம் அமைப்பாளராக இருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினையில் எல்லோரும் ஒன்றாக வரவேண்டும் என்பதுதான் தாய்க்கழகத்தின் வேண்டுகோளாகும். இப்பொழுது ஒரு நல்ல சூழல் உருவாகியிருக்கிறது.

- (செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர், சென்னை, 24.3.2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!


பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர் பிரச்சினை எப்படி இருக்கிறது? இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் துக்ளக்கில் திருவாளர் சோ கக்கும் நஞ்சினைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வார துக்ளக்கில் தலையங்கப் பகுதியில் டெக்கான் கிரால்டு நாளேட்டுக்கு சோ அளித்த பேட்டி வெளியிடப்பட்டுள்ளது.
என்ன சொல்ல வருகிறார் இவர்?

கேள்வி: போர்க்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப் பதற்கு நீங்கள் கூறும் வழிமுறை என்ன?
சோ: போரே நடக்கவில்லையே! யுத்தம் நடக்க வில்லை. இலங்கையில் நடந்தது தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை. அவ்வளவுதான்! அது ஒரு யுத்தமல்ல. இப்பொழுது இந்தியாவில் நக்சலைட்டுகளுக்கும், இந்திய அரசுக்குமிடையே யுத்தம் நடந்துகொண்டிருக்கிறதா? சில மத அடிப்படை தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுக்கிற நடவடிக் கைகள் எல்லாம் யுத்தங்களா? அவையெல்லாம் யுத்த மல்ல. தீவிரவாதம் நடக்கிறது; பயங்கரவாதம் நடக் கிறது; அல்லது உள்நாட்டுக் கலகம் நடக்கிறது. அதை எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு இராணுவம் தேவைப்பட்டால் அதையும் பயன்படுத்துகிறது.

இதை யுத்தம் என்று சொல்லிவிட முடியுமா? ராணுவம் வந்தாலே யுத்தம்தான் என்று அர்த்தமா என்ன?

அப்படிப் பார்த்தால் பஞ்சாபில் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப் பட்டது. அப்போது பிந்தரன்வாலே கோஷ்டிக்கும், இந்தியாவுக்குமிடையே யுத்தம் நடந்ததா? அதே போலத்தான் இலங்கையிலும் யுத்தம் நடக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
(துக்ளக், 28.3.2012)

திருவாளர் சோ ராமசாமியின் பதில் விவாதமாக இல்லை; மாறாக வாதமாக உள்ளது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இலங்கையில் ஈழப் போராளிகள் ஆயுதம் எடுத் தனர் என்பது உண்மைதான். எப்பொழுது அந்த ஆயுதங்களை எடுத்தார்கள்?
தமிழர்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து, தமிழர் களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலிருந்து தமிழர்களின் தாய்மொழிக்கு உரிய உரிமைகள் வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து, தமிழ்ப்பெண் கள் சிங்களக் காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட போதிலிருந்து ஆயுதங்களைத் தூக்கினார்கள். முதலில் காந்தியாரைவிட அகிம்சை வாதியாகத்தானே செல்வநாயகம் அறப்போராட்டம் நடத்தினார்.

அவர் தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்ட போது அவர்களை அடித்து ஆற்றில் தூக்கி எறிந்தவர்கள் யார்? சிங்களவர்கள்தானே! அடிபட்ட ரத்தக் காயத்தோடு பிரதமர் பண்டார நாயகாவைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? சிங்கள வர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள் என்றுதானே சொன்னார்!

திருவாளர் சோவின் கண்களுக்குச் சிங்களவர் களின் இந்த வன்முறைகள் எல்லாம் தெரியாது.

பெரும்பான்மையான சிங்கள வெறியர்கள் அரசு துணையோடு ஈழத் தமிழர்களைத் தாக்கினால், பெண்களை வேட்டையாடினால் அவையெல்லாம் வன்முறையாகாது - பயங்கரவாதமும் ஆகாது. இந்தக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்கள் பெண்களின் மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டால் சோவின் பார்வையில் வன்முறை - பயங்கரவாதம்!

இந்த உண்மைகளைத் தலைகீழாக மாற்றி தற் காப்புக்காக ஆயுதம் ஏந்துபவர்கள் பயங்கரவாதிகள் - அவர்களை ஒடுக்கும் வேலையில்தான் இலங்கை இராணுவம் செயல்பட்டது என்று கூறுகிறார் என்றால், இந்த மனிதாபிமானமற்ற பார்ப்பனர்கள், சிந்தனையில் சிங்களவர்களாகவே இருக்கின்றனர் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

சிங்களவர்கள்மீது இனத் துவேஷத்தோடா போராளிகள் ஆயுதம் தூக்கினார்கள்? இனவெறி யோடு தமிழர்களை அழிக்கும் சக்திகளோடுதானே போராளிகள் போராடும் நிலை ஏற்பட்டது!

சோ கண்ணோட்டத்தில் அடிபட்டவன் அடித்த வனை எதிர்கொண்டு தாக்கினால் பயங்கரவாதம் - ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுதர்மவாதிகள் அல்லவா!

சோவிவின் பதிலில் தமிழர்கள்மீதான துவேஷம் தானே தலைதூக்கி நிற்கிறது - உண்மையைத் தலைகீழாகத் திரித்துப் பேசும் நரித்தனம்தானே மேலோங்கி நிற்கிறது.

தமிழர்களே பார்ப்பனர்களைப் புரிந்துகொள்ளுங் கள் என்பதுதான் நமது வேண்டுகோள். 24-3-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரைப் பாராட்டி தினத்தந்தி தலையங்கம் பணியிடங்களில் பாலியல் கொடுமை


தந்தை பெரியாரைப் பற்றி இந்த சமுதாயம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அவர் சொன்ன கடவுள் மறுப்பு கருத்துக்களும், உயர்சாதி வகுப்பினரின் ஆதிக்கத்தை எதிர்த்து கூறிய கருத்துக்களை மட்டுமே சமு தாயம் பார்க்கிறது. கடவுளை மற என்று பெரியார் சொன்ன வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் இந்த சமுதாயம், அடுத்த வார்த்தையான மனிதனை நினை என்பதை விட்டுவிடுகிறது. 1942ஆம் ஆண்டிலேயே பெண் ஏன் அடிமையானாள்? என்ற ஒரு நூலை வெளி யிட்டு, அதில், பெண்களுக்கு சொத்துரிமை உட்பட பல சம உரிமைகள் பற்றி விளக்கியுள்ளார். இந்தக் கருத்துக்கள் எல்லாம், எந்த மதத்துக்கும், எல்லா தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்று, அந்தக்காலமே, அவர் சொன்ன தெளிவுரைகளை சமுதாயம் இன்னும் முழுமை யாக அறிந்து கொள்ளவில்லை என்பதே வேதனைக்குரியது என்கிறார் பகுத்தாறிவாளர் காட்டூர் இடையர்காட்டான். பெரியார், அன்று கண்ட கனவு இன்னும் சமுதாயத்தில் சரி யாக புரிந்து கொள்ளாமல், உணர்ந்து கொள்ளாமல், பின் பற்றப்படாமல் இருப்பதால்தான், பெண்கள் பணிபுரியும் இடங்களில் இன்னமும் பாலியல் கொடுமைகளை அனு பவிக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கே.சந்துரு இதுதொடர்பான ஒரு புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளார். தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை, ஆங்கிலத்தில், பிட்ச்(பெட்டைநாய்) என்று கூறுவதே பாலியல் கொடுமை என்று கூறி இருக்கிறார். சென்னை யில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட வழக்கு இது. அங்குள்ள ஒரு ஆசிரியர் மீது தொடரப்பட்ட புகார்கள் தொடர்பாக பள்ளிக்கூடத்தில் ஒரு விசேஷ கமிட்டி அமைக்கப்பட்டது. 3 பேர் கொண்ட இந்த கமிட்டி, அந்த ஆசிரியரால் எந்த கொடுமையும் இழைக்கப்படவில்லை என்று மற்ற ஆசிரியர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது. ஆனால், அவர் பிட்ச் என்று கூறியது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து, அந்தக் கமிட்டி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனக் குரல் எழுப்பிய நீதிபதி கே.சந்துரு. இந்தப் புகார்களை கூறிய ஆசிரி யர்களின் வாக்குமூலத்தை ஆழ்ந்து ஆய்ந்தால், நிச்சயமாக இது பாலியல் கொடுமை என்பதன் கீழ்தான் வருகிறது. எனவே, இந்தப் பள்ளிக் கூட நிர்வாகம் ஒரு புதுக்குழுவை நியமிக்க வேண்டும். அந்த குழு விஷாகா வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார். எல்லோருமே பேசும் இந்த விஷாகா வழக்கு, 1992 ஆம்ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 5 பேர் கொண்ட ஒரு கோஷ்டி, ஒரு பெண்ணை கற்பழித்தது தொடர்பான வழக்கு. 1997 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, நீதிபதிகள் சுஜாதா, டி.மனோகர், பி.என். கிர்பால் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினர்.

அந்த தீர்ப்பில் பணிபுரியும் இடங்களில்-பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்காக, அதன்மீது புகார் சொல்வதற்காக, நடவடிக்கை எடுப்ப தற்காக, சில வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. ஆனால், எந்த இடத்திலும் இந்த வழிமுறைகள் இன்னமும் பின்பற்றப்படாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். மத்திய அரசாங்கமும், அனைத்து மாநில அரசுகளும், இந்த விஷாகா வழக்கு தீர்ப்பில் என் னென்ன? வழிமுறைகள் வழங்கப்படடுள்ளனவோ அதை யெல்லாம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றும் பெண் ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகளில், இந்த வழிமுறைகள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுகிறதா? என்றும் பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பாலியல் கொடுமை பற்றி ஒரு பெண் ஊழியர் புகார் செய்தால், அதை விசாரிப்பதற்கு ஒரு பெண் தலைமையில்தான் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்களில் பாதிக்குமேல் பெண்களாகத்தான் இருக்க வேண்டும். மேல்மட்டங்களில் இருந்து நிர்பந் தங்கள் வராமல் இருக்க, அந்த கமிட்டியில், வெளியே இருந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரையோ, அல்லது இதுபோன்ற விஷயங்களை நன்கு தெரிந்தவர் களையோ நியமிக்க வேண்டும் என்று இருக்கிறது. இப்படி அந்த தெளிவான தீர்ப்பை, எல்லா இடங்களிலும் அமல்படுத்தி பெண்மைக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண் ஊழியர்கள்.

(நன்றி, தினத்தந்தி 23.3.2012

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்:


கபட நாடகம் போடுவதாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மார்ச் 24- இலங்கைக்கு எதிரான அய்.நா. தீர்மானம் பற்றிய பிரச்சினையில் தேவை யில்லாமல் என்னை கபட நாடகம் போடுவதாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கலைஞர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

20-3-2012 தேதிய இதழ்களில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி அய்.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் கூறியதை பற்றி, ஒரு மழுப் பலான பயனில்லாத ஒரு பதில் என்றும், "கருணாநிதியின் கபட நாடகத்திற்கு பிரதமரே துணைபோகும் வகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அறிக்கை விடுத்த அதே ஜெயலலிதா மூன்றே நாள்களில் இன்று விடுத்துள்ள அறிக் கையில் அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்தமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீண்டதோர் அறிக்கை விடுத்துள்ளார்.

20 ஆம் தேதிய அறிக்கையில் 8.6.2011 அன்று இந்தப் பிரச்சினைக்காக தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தன்னால் தீர்மானம் முன்மொழியப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை மட்டுமா முன்மொழிந்தார்?

16.4.2002 அன்று இதே ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையிலே முன்மொழிந்த தீர்மானம் என்ன தெரியுமா? இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்'' என்ற தீர்மானத்தையே அ.தி.மு.க. ஆட்சியிலே சட்டப் பேரவையிலேயே நிறைவேற்றி, விடுதலைப் புலிகள் தமிழகத்திலேயே நடமாடக் கூடாது என்று தடுப்பதற்கு முதன்முதலாக வழி வகுத்து, விடுதலைப்பு லிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்ட வர்களையெல்லாம் பொடா சட்டத் திலே கைது செய்து சிறையிலே வைத்தவர் தான் ஜெயலலிதா.

நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துப் பற்றி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா தேவையில்லாமல் அந்த அறிக்கையிலே என்னையும் இழுத்து; நான் "கபட நாடகம்'' போடுவதாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது?

இலங்கையிலே நடைபெற்ற இறுதிப் போரில் இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது, 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையிலே என்ன சொன்னார்? "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்; விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது. இலங்கையில் நடக்கும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, இப்போது இலங் கைத் தமிழர்களைக் கொன்றதற்காக அமெரிக் காவின் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று கடிதம் எழுதினால், அறிக்கை விடுத்தால் அதற்குப் பெயர் தானே "கபட நாடகம்?'' -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.24-3-2012

தமிழ் ஓவியா said...

பட்டபின்....


உலக நாடுகள் இலங்கை அதிபர் 21-ஆம் நூற்றாண்டின் இட்லர் ராஜபக்சேவை நறுக் கென்று மூளைதெறிக்க குட்டிய பிறகும்கூட, பக்சே வின், ராஜத் திமிர் அடங்கவில்லை போலும்!

ஜெனிவாவில் தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், நடுநிலை வகித்த நாடுகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்த இந்த நாட் டாண்மைக்காரர் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை மிரட்டியும் உள்ளார். அப்படி வாக்களித்த நாடுகள் பயங்கரவாத விளைவுகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டி வரும் என்று எச்சரிக்கை யும் செய்துள்ளார்.

அரச பயங்கரவாதம் என்று சொல்லுவார்களே அதற்கு முற்றிலும் பொருந் துகிற ஆட்சியின் தலைவர் பயங்கரவாதத்தைப்பற்றி திருவாய் மலர்வது 21ஆம் நூற்றாண்டின் பொறுக்கி எடுத்த நகைச்சுவை!

வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானப் பேச்சுக்கு வந்த வர்களையும் வேட்டை யாடிய கும்பல்; 12 வயது சிறுவனைக்கூட கொடூர மாகக் கொன்ற குரூரர் - பச்சிளம் சிறுவர்கள் வசித்து வந்த விடுதியைக் கூட விட்டு வைக்காமல், மருத்துவமனைகள் என்பதைக்கூட பாராமல் குண்டு வீசி கொலையாட் டம் போட்ட ராஜபக்சேவா பயங்கரவாதம் பற்றி வாய் திறப்பது?

பிரிட்டனின் 4 ஆவது அலைவரிசைக் காட்சியைக் கண்டு கல்லும்கூட கதறுமே! ஆனால் புத்தர் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் போதனை களின் கழுத்தை நெரித்து ரத்தக் குளியல் நடந்தும் நரிகளா இதோபதேசம் செய்வது?

இந்தியாவுக்கு இந்த நேரத்தில் ஒன்று! எவ் வளவுதான் இலங்கைக்கு வெண் சாமரம் வீசினாலும், ஒத்தடம் கொடுத்துப் பார்த்தாலும், திருத்தத் தீர்மானம் கொண்டு வந்து முட்டுக் கொடுத்துப் பார்த் தாலும், கடைசியில் இந்தி யாவுக்கு மிஞ்சியது இலங் கையின் கறுப்புப் பட்டியல்தான்!

வங்கதேசப் போரில் கூட இந்தியாவின் வான் வெளியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பறக்கக் கூடாது என்று இந்தியா எச்சரித்த நிலையில், தமது விமான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பச்சைக் கொடி காட்டியது இந்தச் சுண்டைக்காய் இலங்கை என்பதைக்கூட மறந்து விட்டு, தமிழினப் பிணங்கள்மீது நர்த்தனம் ஆடும் கழுகுக்குக் கைலாகு கொடுக்க எப் படித்தான் இந்தியாவுக்கு மனசு வருகிறதோ தெரிய வில்லை!

பட்டபின் புத்தி கொள் முதல் பெறுவது தான் பகுத்தறிவுக்கு அழகு!

தேறா நட்புதீரா இடும்பை தரும்

- மயிலாடன் 25-3-2012

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்கு ராஜபக்சே எச்சரிக்கையாம்!

சென்னை, மார்ச் 25- அய்.நா. தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொட ரில் இலங்கை எதிர் கொண்ட தோல்வி குறித்து விடுதலைப்புலி களின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவதாக வும், ஆனால் எந்த சூழ் நிலையிலும் பயங்கரவாத அச்சுறுத் தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

தனது பேச்சின்போது இந்தியா உள்ளிட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளை மறைமுகமாக குறிப் பிட்ட ராஜபக்சே, "எங் களுக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்பு கிறேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற் கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர் களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம். இது அவர் களுக்கு பின்னர்தான் புரியும்'' என்றும் எச்சரித்தார். 25-3-2012

தமிழ் ஓவியா said...

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த `செய்தியாளர்களின் கை-கால்களை உடைப்பேன்' இலங்கை அமைச்சர் மிரட்டல்!


கொழும்பு, மார்ச்.25- ஜெனீவாவில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இலங்கையில் செய்தியாளர்களாக பணிபுரிந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் 3 பேர் ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்கள். பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அபயசேகரா ஆகிய அந்த மூன்று பேரும் கொழும்பு திரும்பினால் அவர்களுடைய கை-கால்களை உடைப்பேன் என்று, இலங்கை மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதற்கிடையில் இலங்கை அரசின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான `ஜே.எச்..'வின் செய்தி தொடர்பாளர் உதய காமன்பிலா, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தி இருக்கிறார்.25-3-2012

தமிழ் ஓவியா said...

தினமலரின் சிண்டு துடிப்பது ஏன்?


அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்கு தி.மு.க.வின் பங்கு அதிகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறிவிட்டாராம்.

பொறுக்குமா பூணூல் தினமலருக்கு? மாநிலங்கள் அவையிலே தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்களே, என்று கிண்டல் செய்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில், தனி ஈழக் கோரிக்கையில் ஒத்த கருத்துள்ளவர்கள் தேவை இல்லாமல் மாறுபாடான வற்றைப் பேசி ஒற்றுமை உணர்வைச் சிதைக்காதீர்கள் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கூறிய கருத்து பார்ப்பன வட்டாரத்தைக் கிலி அடையச் செய்திருக்கிறது. அந்த நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக இது போன்ற சில்லுண்டி வேலையில் சிண்டு ஏடு இறங்கியுள்ளது.

தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு உலகில் ஏற்பட்டு விட்டால் அது ஆரியத்திற்கு ஆபத்து என்பதே அவாளின் கணிப்பு. அவர்களால் அப்படியொரு நாட்டைப் பெற முடியாது. காரணம் அவர்கள் நாடற்ற லம்பாடிக் கும்பலாயிற்றே! தனக்குக் கிடைக்காதது, மற்றவர்களுக்கு எவ்வகையிலும் கிடைத்து விடக் கூடாது என்ற பரந்த எண்ணம் பார்ப்பனர் களுக்கு!

பார்ப்பனர்களின் குறி திராவிடர் கழகத்தின் மீது தானே

குறிப்பு: ஞாயிற்றுக் கிழமைகளில் இரு இதழ்களை வெளியிடும் தினமலர் இன்று இரு இதழ்களிலும் டவுட் தனபாலு திராவிடர் கழகத்தை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறது. 25-3-2012