Search This Blog

31.3.12

அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படுகிறார் அண்ணா!

அண்ணாவை அவமதிக்காதீர்!

அண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத்தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.

பவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.

மக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பனரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

இரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மானமும் தோற்றுப் போனது.
----------------(குடிஅரசு 13.10.1929)

நெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே!

1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(சா)ட்சியாகப் பார்க்க முடிகிறது.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.

வி.பி. இராமன் போன்ற பார்ப்பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.

என்னை நம்பி யாரும் வர வில்லையே! என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.

ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.

ஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.

அதன் அப்பட்டமான அடையாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.

இப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).

அண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி?

அண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா?

இராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா?

தீ பரவட்டும்! என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா? தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா?

டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர்களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும் இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்துவதா கூடாதா? என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்?
திராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா? அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?

அந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா? பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா?

புலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும்! -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.

இராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல, தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே!

இராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.

சச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

திராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா? இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும்? உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்?


இது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு?

ஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.

கடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்!

அண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்?

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்?
திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா? இது அசல் ஊடுருவல் அல்லவா?

இப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.

அதுதான் அறிவு நாணயம் என்பது.

இறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.

அய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

தீபரவட்டும்!

சுயமரியாதைக்காரர்களின் சீர்திருத்த முயற்சிகளை ஆரியம் கெடுத்துக் குலைத்து வருகிறது. இஸ்லாமியர் இரண்டாண்டிலே இவ்வளவு வலிமை பெற்றுத் தனிக்கலை, தனிநெறி கொண்டு, இந்துக்கள் என்பவரின் நெறி, கலை ஆகியவை தமதல்ல, வேறு என்பதைத் தெரிந்து வாழ்ந்து வருவதனால்தான். ஆரிய மார்க்கத்தையும் கலையையும் தனதெனக் கருதிக்கொண்டு, ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க் கலையிலே கலக்கிக் கொண்டதனாலேயே, இன்று தமிழர் என்ற தனி உரிமைக்கோ, தன்மானத்துக்கோ, தன்னரசுக்கோ போரிட முடியாத நிலை பெற்றனர். எனவே, தமிழரும், இஸ்லாமியர் போலவே தங்களின் தனிக் கலையைப் போற்றிப் பிற இனக்கலையை ஒழித்து வந்தால்தான், சுயமரியாதையுடன் வாழமுடியும். ஆகவேதான், கம்ப இராமாயணம், பெரிய புராணமாகிய ஆரிய நெறி கூறும் ஏடுகள், பொசுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

*******

இராமாயணம் வைணவர்க்கு மேலான நூல்; பெரிய புராணம் சிவனடியார்களின் பக்தியை விளக்கிடும் நூல். சைவம், வைணவம் எனும் இரு மார்க்கங்களையும் பின்பற்றும் தமிழ் மக்கள் முறையே பெரிய புராணம், கம்ப இராமாயணமாகிய இரு நூற்களையும் தமது மார்க்க நூற்களாகக் கொள்கின்றனர். வைணவம், சைவம் எனும் இரண்டும் இந்து, மார்க்கத்தின் கிளைகள், தமிழர் இந்துக்களல்லர். தமிழருக்குத் தனி நெறி உண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக் கொள்வதால், தமிழர் தம்மை இந்துக்கள் என்று கருதிக் கொள்வதால் தமிழர், தாங்கள் தனி இனம் என்பதை மறுத்து, இந்துக்களில் ஒரு பகுதி என்று எண்ணி, தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர்.
-------------- அறிஞர் அண்ணா, (நூல்: தீ பரவட்டும்!)

------------------- மின்சாரம் அவர்கள் 31-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8 comments:

தமிழ் ஓவியா said...

யார் மோசம்?

மகாராட்டிர மாநிலம் புனேயில் ஒரு நிகழ்ச்சி; அந்த நிகழ்ச்சிக்கு குஜ ராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்திருந் தார். சிறிது நேரத்தில் காமன்வெல்த் விளையாட் டுப் போட்டியில் ஊழல் செய்தார் என்ற அடிப் படையில் சிறை சென்று, பிணையில் வெளி வந் துள்ள சுரேஷ்கல்மாடியும் வந்திருந்தார்.

மோடியைப் பார்த்து மரியாதை நிமித்தமாக கல்மாடி அலோ என்று சொல்லி குலுக்குவதற் காக கையை நீட்டினார்.

அது ஊழல் படிந்த கை என்று கருதிய நரேந்திர மோடி கையை நீட்டாமல் நமஷ்காரம் என்று கை கூப்பி தம் கடனைக் கழித்து விட்டா ராம். விழா முடியும் வரையில் கல்மாடி பக்கம் தன் முகத்தைக் கூடத் திருப்பவில்லையாம் மோடி; விழா நிறைவுற்ற தும் அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்து பறந்து விட்டாராம். இந்தச் செய்தியை சாங் கோபாங்கமாக வெளியிட் டுள்ளன சில பார்ப்பன ஏடுகள்.

மோடி என்னமோ உத்தமப் புத்திரர் போல வும், கல்மாடியின் கையைத் தொட்டு விட் டால், தன் உத்தமக் கற்பு பறிபோய் விடும் என்றும் கருதி விட்டார் போலும். கருநாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூ ரப்பா வந்திருந்து கையை நீட்டினால் அப்பொழுதும் இப்படித் தான் நடந்து கொள்வாரா மோடி?

ஊழலைவிட மிகக் கொடூரமானது, ஒரு சிறுபான்மை இனத்தை, அரச பயங்கர வாதத் தோடு அழித்து முடிப்பது அல்லவா!

பாபர் மசூதி இடிப்பும், குஜராத் கலவரமும் காலம் உள்ளவரை வரலாற்றில் மிகப் பெரிய அசிங்கமான அருவருப் பான, மானுடம் தலை குனியும் கறுப்பு அத்தி யாயமாக இருக்கப் போகிறதே!

உச்சநீதிமன்றமே மோடியை நீரோ மன்ன னுக்கு ஒப்பிட்டுச் சொல் லிவிட்ட பிறகு மோடியிடம் எஞ்சி நிற்பது எது? அமெரிக்காவும், பிரிட்டனும் இங்கே உள்ளே நுழையாதே! என்று மோடிக்கு தடை விதித்ததைவிட மோச மானது எது?

குஜராத் கலவரத் தைத் தொடர்ந்து எந்த முகத்துடன் வெளிநாடு செல்லுவேன்? என்று அன்றைய பிரதமர் வாஜ் பேயி சொன்னாரே அதன் பொருள் என்ன?

வாஜ்பேயி, இவ்வள வுக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவராயிற்றே!

நியாயமாக கல்மாடி தான், மோடியிடம் கை குலுக்க யோசித்திருக்க வேண்டும்! - மயிலாடன் 31-3-2012

தமிழ் ஓவியா said...

எந்தச் சிறையில் என்ன தொழில்?


வேலூர் மத்திய சிறையில் பூட்ஸ் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாராகும் பூட்ஸ்கள் சிறைத்துறை அலுவலர்களுக்கும், தமிழகக் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் அனுப்பப்படுகின்றன.

சேலம் மத்திய சிறையில் ஸ்டீல் ஃபேக்டரி உள்ளது. தமிழகம் முழுக்க உள்ள சிறைகளுக்குத் தேவைப்படுகிற பாத்திரங்கள் இங்குதான் தயாராகின்றன.

கோவை மத்திய சிறையில் இருக்கும் பவர்லூமில் வசதிகளுக்கான வெள்ளை யூனிபார்ம் தயாரிக்கப்படுகின்றன.

திருச்சி மத்திய சிறையிலுள்ள சோப் மேக்கிங் கம்பெனியில் சலவை சோப் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

புதுக்கோட்டை மத்திய சிறையில் தயாரிக்கப்படும் பினாயில் அனைத்து சிறைகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

மதுரை மத்திய சிறையில் அலுவலக உபயோகத்திற்கான ஆஃபீஸ் கவர், பேப்பர் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

புழல் மத்திய சிறையில் டெய்லரிங், கோர்ப்பான் (ஜிகிரீ), பேண்டேஜ் கிளாத், பேக்கரி ஃபைல் பேட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

புழல் பெண்கள் சிறையில் நாடா, நாப்கின், எம்ப்ராய்டரி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 31-3-2012

தமிழ் ஓவியா said...

பொன் விழா கண்ட சுதந்திரத்தின் நிலை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லம்மா நாயுடு பேட்டை தாழ்த்தப்பட்டோரில் மரணம் அடைந்தால் ஆற்றை நீந்தி அக்கரையில்தான் சடலத்தைப் புதைக்க வேண்டும் அல்லது எரியூட்ட வேண்டுமாம்!

ஆம், ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோம் _ பாடுவோம்!


பெண்களே!

பெண்களே மதம் உங்களை நம்பித்தான் இருக்கிறது...

பெண்களே திரைப்படங்கள் உங்களை நம்பியே இருக்கின்றன...!

பெண்களே அரசியல்வாதியும் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள்..!
(துல்லியமான கணிப்பு)

முதலில் விழிப்புணர்வு தேவை பெண்களிடத்தில்தான் தஞ்சை மகளிர் மாநாட்டில் ஆற்றிய தமிழர் தலைவர் அவர்களின் பேருரைக்கு விடுதலை 11.3.2012) தந்த தகத்தகாயத் தலைப்பு பிரமிக்க வைத்தது.

பொறுப்புடன் வழங்கிய இந்த எச்சரிக்கையும் அறைகூவலும் போற்றுதலுக்குரியது. வரவேற்கத்தக்கது. வாழ்க நம் ஆசிரியர்! - சிவகாசி மணியம்
31-3-2012

தமிழ் ஓவியா said...

பெண்கள் மசோதா அன்றுமுதல் இன்றுவரை

1974: நாட்டில் பெண்களின் நிலை தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டி, மத்தி கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், பார்லிமென்டில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, தெரிவிக் கப்பட்டது.

1993: ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வகை செய்யும் 73 மற்றும் 74 ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

1996: (செப்டம்பர் 12): தேவகவுடா தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது, 81ஆவது அரசியல் சட்டத்திருத்தமாக பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், கவுடா அரசு சிறுபான்மை அரசாகி விட்டதால், 11ஆவது லோக்சபா கலைக்கப்பட்டது.

1998: (ஜூன் 26); 12ஆவது லோக்சபாவில், 84ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த முறையும், வாஜ்பாய் அரசு சிறுபான்மை அரசாகி, லோக்சபா கலைக்கப்பட்டதால், மசோதா நிறைவேறாமல் போனது.

1999: (நவம்பர் 22); 13ஆவது லோக்சபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால், இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதால், மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2002 மற்றும் 2003இல் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்ற முடியவில்லை.

2008: (மே 6): அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், ராஜ்யசபாவில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமெண்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

2009: (டிசம்பர் 17): நிலைக்குழு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மசோதாவை தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது.

2010: (பிப்ரவரி 22): பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

2010: (பிப்ரவரி 25): பெண்கள் இடஒதுக்கீடு மசோ தாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2010: (மார்ச் 8): ராஜ்யசபாவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரலாறு காணாத அளவி லான ரகளை அரங்கேறியது.

2010: (மார்ச் 9): பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, ராஜ்யபசாவில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 31-3-2012

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானி சர் அய்சக் நியூட்டன்


1642ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் பிரிட்டனில் உள்ள உள்ஸ்தோர்ப் என்னும் சிறிய ஊரில் நியூட்டன் பிறந்தார். 1666-ஆம் ஆண்டில் ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததைப் பார்த்தார். மரத்திலிருந்து ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது? மேல் நோக்கி போயிருக்க வேண்டியதுதானே அல்லது வேறுபக்கம் பறந்து போயிருக்கலாமே என யோசித்தார். ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். வானத்தில் பல கோள்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிக் கொள்ளாமல் அதனதன் பாதையில் சுற்றுவதற்கு இந்த ஈர்ப்பு சக்திதான் காரணம் எனச் சொன்னார்.

பூமி பிரபஞ்ச பாதையில் எங்காவது காணா மல் போகாதிருக்கவும் சூரியனை ஒழுங்காகச் சுற்றி வருவதற்கும் இந்த புவி ஈர்ப்பு சக்திதான் காரணம் எனக் கண்டுபிடித்தார். பூமி சூரியனைச் சுற்றுவதோடு தன்னைத்தானே சுற்றி வரும்போது பூமியில் வாழும் மக்கள் கீழே விழாமல் இருப்பதற்குக் காரணம் இந்த புவி ஈர்ப்பு சக்திதான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்.

நியூட்டன் விதிகள்: நிலாவும் பூமியும் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. பூமியின் எடை அதிகமானாலோ, நிலாவின் எடை அதிகமானாலோ அதாவது இரண்டில் ஒன்றின் எடை அதிகமானாலோ ஈர்ப்பு சக்திஅதிகமாகி விடும்.

தூரம் அதிகமானால் ஈர்ப்பு சக்தி குறையும் என்ற இரண்டையும் கண்டுபிடித்தார்.

நியூட்டன் விதி 1: அசையும் பொருளானது பிறபொருள் தடுக்கும் வரை அசைந்தபடி இருக் கும். அசையாத பொருள் பிறபொருள் அசைக்கும் வரை அசையாமல் அப்படியே இருக்கும்.

நியூட்டன் விதி 2: எந்தப் பொருளையும் அசைக்கும் பொழுது ஏற்படும் இயக்கமானது. அந்தப் பொருளை அசைத்த சக்தியின் அளவுக்கு ஏற்பவும், அந்தப் பொருளை அசைக்கிற சக்தி எந்த திசையிலிருந்து உண்டாகிறதோ அதே திசையிலும் நிகழும்.
நியூட்டன் விதி 3: எந்த அசைவு ஏற்பட்டா லும் அதே அளவில் அதற்கு எதிரான திசை நிகழும்.

புதிய தொலைநோக்குக் கருவி

கலிலியோ முதலில்தொலைநோக்கி கருவியைக் கண்டுபிடித்தார். அதில் சில குறை பாடுகள் இருந்தன. அதில் உள்ள குறைபாடு களைக் களைந்து புதிய கருவியைக் கண்டு பிடித்தார் நியூட்டன். சூரிய ஒளியானது வெண்மை நிறமாகத் தெரிந்தாலும் அது ஏழு நிறங்களால் ஆனது என்று நியூட்டன் கண்டுபிடித்தார்.

பொருள்கள் நிறங்களை உண்டாக்கவில்லை. பொருள்களின்மீது படுகிற ஒளிக்கதிர்கள்தான் நிறங்களைக் கொண்டிருக்கின்றன என்றும், ஒரு பொருள் மஞ்சள் நிறம் என்றால் அது தன்மேல்படுகிற மஞ்சள் ஒளிக்கதிர்களை மட்டும் நம் கண்ணுக்குத் தெரியும்படி செய்துவிட்டு புறநிறங்களை உள்வாங்கிக் கொள்கிறது என்றும் கண்டுபிடித்தார். மழைத்தூறலின் ஊடே புகுந்துவரும் சூரிய ஒளி ஏழு நிறங்களாகப் பிரிகின்றன. முப்பட்டைக் கண்ணாடி வழியே ஊடுருவிச் செல்லும் ஒளியும் ஏழு நிறங்களாகப் பிரிகின்றன. இதை மழைத் துளிகள் செய்வதால் வானவில் தோன்றுகிறது எனக் கூறினார். இவரது மேஜையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவத்தியை இவர் வளர்த்த நாய் தட்டி விட்டதால் 20 ஆண்டுகால ஆராய்ச்சிகள் எரிந்து சாம்பலானது.

கடைசி காலத்தில் வறுமையில் வாடிய நியூட்டன் 1727ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி மரணமடைந்தார். 31-3-2012

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்

நத்தைகள் மூன்று ஆண்டுகள்கூட விடாமல் தூங்கும்.
கடல் இறால் லாப்ஸ்டர்க்கு கண்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், உடனே அதற்கு மறுகண் முளைத்து விடும்.
பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி ஒரு பழம் அல்ல. அது அந்தச் செடிப்பூவின் பருத்த தண்டுதான்.
கோலா கரடிகளின் ஆகாரம் மூங்கில் தழைகள்.
பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட, இரண்டு மடங்கு நீளம்.
கறுப்பு திமிங்கலங்கள் பிறக்கும்போது வெள்ளையாக இருக்கும்.
31-3-2012

தமிழ் ஓவியா said...

நினைவில் கொள்க!

தமிழ்மொழியை இகழ்கின்றான்; தமிழர் தம்மைத்
தாழ்ந்தவர் என்றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
தமது நலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத்
தான் உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
சொன்னாலும் கேட்பதில்லை, அந்தோ! அந்தோ!
வீணரல்ல யாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

Seeni said...

varalaaatru thakavalkal!
pakirvukku nantri!