Search This Blog

25.3.12

ஆண்டாள் வழியில் அய்யா பெரியாரா? - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி

மறுமலர்ச்சி எங்கே போகிறது?


(மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கக்கூடிய தோழர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைக் கொச் சைப்படுத்தும் வகையில் ஆண்டாள் வழியில் அய்யா- என்று கூறி இருப்பதால் இதனை எழுத நேர்ந்தது. ஆன்மிகப் பிரச்சாரம் செய்யப் பெருமைப் படுவதாகக் கூறி இருக்கும் ஒருவர் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரா? என்ற கேள்வியும் எழுகிறது).

தமிழகத்தில் தமிழினம் மரபு சார்ந்த அடையாளங்களை இழந்து வரும் இத்தருணத்தில் மரபுகளைக் காப்பாற்றும் வகையில் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள் மார்கழி பாவை விழாவைநடத்திக் கொண்டிருக்கின்றன. சமயத்திற்கும் சம்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். தமிழை வளர்ப்பதில் சமயங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. சைவமும் வைணவமும் போட்டி போட்டு தமிழை வளர்த்தன. சமயங்கள் தமிழை வளர்த்திருக்காவிட்டால் இன்று தமிழ், ஆளுமைத் தமிழாக இருந்திருக்காது.

தமிழை மறந்த தமிழன்

அதிலும் தமிழன் தமிழையும் மறந்துவிட்டான் ; தமிழகத்தையும் மறந்துவிட்டான். அடிபடும்போது மட்டும்தான் ஆ. . . ஆ . . . என்று அலறும்போது மட்டுமே தமிழைப் பேசுகின்றான். நான் தென் திருவிதாங்கூர் கல்லூரியில் படித்தேன். மாணவர் தலைவராக இருந்தேன். அப்போது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பங்கேற்ற சொற்பொழிவு எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. அதில் நான் நன்றியுரை ஆற்றினேன். தமிழை வாரி வழங்க வாரியாரை விட வேறு யார் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். உடனே என்னை அழைத்த வாரியார், நெற்றி நிறைய திருநீற்றைப் பூசிவிட்டு, இரை தேடும்போது, இறையையும் தேடு என ஆசீர்வாதம் செய்தார். நான் தேடிய ஞானச்சிறுவன் இவன்தான். எனவே இந்த மாணவனுக்கு ஞானச் சிறுவன் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என்றார்.

அன்றைய தினம் மாலையில் நடைபெற்ற சொற்பொழிவில் என்னை கந்தர் அலங்காரம் பேசச் செய்தார். அவரது ஆசீர்வாதத்தால் அறிந்தோ, அறியாமலோ, சரியோ, தவறோ நான் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். தமிழ் மீது காதல் கொண்டு நான் சொற்பொழிவாளனாக நிற்கிறேன்.

அதே நேரம் தமிழகத்தில் தலைசிறந்த பேச்சாளனாக வேண்டும். ஆனாலும் தமிழைப் பேசும் வாய்ப்பு கிடைத்தால் நாத்திக மேடையல்ல. அரசியல் மேடையல்ல. சைவமும், வைணவமும் பேசும் ஆன்மீக மேடையில் கூட பேச முடிவு செய்துவிட்டேன்.

பெரியாரை நச்சாறு என்று கூறிய வாரியார் அண்ணாவிடம் எப்படி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது பரிதாபம் - இந்தச் சம்பத்துக்குத் தெரியாது போலும்! (காண்க, திராவிட நாடு 6.7.1944).

நல்ல கணவனுக்காக பாவை விழா?

மார்கழி பாவை விழா என்பது நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் நோற்கும் நோன்பல்ல. ஆண்டாளின் பாவை நோன்பை ஆன்மீக ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது. அதனை ஆன்மீகம் கடந்த சமூக நலன் நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் மகளிர் பார்க்கவேண்டும்.

அரங்கன்மீது அளவற்ற காதல் கொண்டாள் ஆண்டாள். மணம் புரிந் தால் அரங்கனை மட்டுமே மணப்பேன், மானிடர்க்கல்ல நான் என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வென்றாள் ஆண்டாள். ஆண்டாள் கொண்ட உறுதியை இக்காலப் பெண்கள் ஆன்மீக ரீதியால் மட்டுமல்லாமல், தமிழ் மரபு சார்ந்த கலாச்சார ரீதியாக பின்பற்ற வேண்டும்.

ஆண்டாள் வழியில் அய்யா பெரியார்

ஆண்டாளின் திருப்பாவையில் 23 ஆவது பாடலை அய்யா பெரியாருக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நாத்திகவாதிக்கு திருப்பாவைப் பாடலுடன் ஒப்பிடலா? என்று நீங்கள் கருதலாம். பழமைகளில் இருந்து - புதுமைக்கும், சமுதாயத் தாழ்வுகளில் இருந்து சமுதாய மேன்மைக்கும் மானிட சமுதாயத்தைக் கொண்டு சென்றவை ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள்.
ஆணாதிக்கம் மிகுந்த இச்சமயத்தில் ஆண்டாளின் திருப்பாவையே பெண்களை சமுதாயத்தின் சிகரங்களை நோக்கி அழைத்துச் சென்றது. பெண் சமுதாயத்தின் சிறகுகளை விரிக்கச் செய்தது. பெண்களுக்கு லட்சியத்தையும், வைராக்கியத்தையும் உருவாக்கி வெற்றி பெறும் நம்பிக்கையை உருவாக்கியது.

பெரியார் சிந்தனைக்கு முன்னோடி ஆண்டாள் திருப்பாவை

தந்தை பெரியார் மேற்கொண்ட சமூக சீர்திருத்த சிந்தனைக்கு முன்னோடியாக அமைந்தது ஆண்டாளின் திருப்பாவை. எனவேதான் ஆண்டாளின் 23 ஆவது பாடலை பெரியாருக்குப் பொருத்திப் பார்க்கிறேன். ஆண்டாள் பாசுரம்தான் பாரதிக்கும் ஆதர்ச வழிகாட்டியாக இருந்தது. கனவு காணுங்கள் எனக் கூறி வரும் அப்துல் கலாமுக்குக் கூட ஆண் டாள் திருப்பாவை வழிகாட்டியாக இருந்தது.

ஆண்டாள் கண்ட தமிழகம் எங்கே?

ஆனால் ஆண்டாள் கண்ட தமிழகம் இன்று இருக்கிறதா? என்றால் இல்லை. வடக்கே திருவேங்கடம் என்கிற திருப்பதியும், தெற்கே அரங்கன் பள்ளி கொண்ட திருவனந்தபுரமும், கிழக்கே வேதாரண்யமும், மேற்கே சேரன் ஆண்ட திருச்சூரும்தான் ஆண்டாள் கண்ட தமிழகமாக இருந்தது. 12 ஆழ் வார்களில் 8 ஆழ்வார்களுடைய தலங்கள் எல்லாமே கேரளத்திலும், ஆந்திரத்திலும்தான் உள்ளது. ஆண்டாள் கண்ட தமிழகம் இன்றும் இல்லை. அனைத்தையும் இழந்து அம்மணமாக நிற்கிறோம். இழந்ததைத் தமிழகம் மீட்டெடுக்கவேண்டும். புதுமை செய்யும் பெண்களுக்கு ஆண்டாள் கதவைத் திறந்து வைத்துள்ளாள். மாதம் மும்மாரி மழை, தானே பால் சுரக்கும் பசுக்கள், துள்ளி விளையாடும் மீன்கள், பசுமைப் புல், வயல்வெளிகள் இவை எல்லாம் ஆண்டாள் சுட்டிக் காட்டிய தமிழக மாகும். அந்தத் தமிழகம் இன்று அழிந்து வருகிறது. இந்த நிலையை இன்றைய மாணவ சமுதாயம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான மாணவிகள் சமுதாயம் ஆண்டாள் திருப்பாவையை ஆன்மீக நோக்கில் பார்க்காமல் அதனைக் கடந்து தமிழ்ச் சமுதாயம் சீர் பெறவும், முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவும், தமிழகம் இழந்த பெருமை களைப் பெற்றுத் தரவும் _ கொண்ட கொள்கையில் உறுதி என்ற மன உறுதியைப் பெற்று புதிய தமிழகம் படைக்க மாணவிகள் திருப்பாவைக்குப் புதிய உருவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டாள் கண்ட தமிழகம் உருவாக இன்றைய மாணவிகள் சமுதாயம் மேற்கத்திய கலாச்சாரத்தை மறந்து தமிழ் மரபுகளைப் பின்பற்றி புதிய ஆண்டாள்களாக உருவாக வேண்டும்.
--------------------(மதுரை மணி 14.-1.-2012)

ஆண்டாள் வழியில் அய்யா என்று இப்படிப் பேசி இருப்பவர் சேங்காலிபுரம் தீட்சிதர்வாளின் வாரிசு அல்ல - குறைந்த பட்சம் சுகி சிவமும் அல்ல.

தி.மு.க.வையும் தாண்டி மறு மலர்ச்சியை முன்னோட்டமாகக் கொண்ட ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கக்கூடிய அருமைத் தோழர் சம்பத் அவர்கள்தான் இப்படிப் பேசி இருப்பவர்.

திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப் படுத்திப் பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் புறப்பட்டுள்ள நிலையில் மறுமலர்ச்சித் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கக்கூடிய ஒருவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற பெரிய தலைவர்களின் கருத்துக்களுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் விரோதமாக மலத்தில் அரிசி பொறுக்கக் கிளம்பி இருப்பது பரிதாபமே!

ஒரு சமயம் தந்தை பெரியார் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலையுணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றும் கூறினார். அதற்குப் பெரியார் கூறிய பதில்:

நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூற வில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்ப ராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்? என்றார். - (தமிழர் தலைவர் சாமி சிதம்பரனார் பக்கம் 162)

கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் ஏன் கொளுத்த வேண்டும் என்ற விவாதப் போரில் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் புராணங்களை ஏன் கொளுத்துகிறோம்? இலக்கியத்தில் உள்ள கலை அம்சத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டாமா என்ற கேள்விக்கு மிக அருமையாகப் பதிலடி கொடுத்தார்.

ஏடுகளை ஏன் கொளுத்தவேண்டும்?

புலியைக் கொன்று தோலை ஆசன மாக்குவது போல் சுயமரியாதைக்காரர் களாகிய நாம் ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம் ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கை விடவேண்டும் என்பதை வலியுறுத்து கிறோம். எமது செயலின் விளைவாக அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்தபின், புலி செத்தபின் தோலை உபயோகிப்பது போல் - ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு ஏடுகளின் இலக் கண, இலக்கிய எழிலை எடுத்து தழுவிக் கொண்டு நீங்கள் பூரித்து வாழுங்கள்.
-------------(அறிஞர் அண்ணா, திராவிட நாடு 9-.5.19-43)

தமிழும் - மதமும்

முதலாவதாக தமிழ் முன்னேற்ற மடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் - கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

மத சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம் கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது. உதாரணமாக மக்கள், தேவர், நரகர் - உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத் திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?

-----------(13.1.1936 அன்று சென்னை பச்சையப் பன் கல்லூரியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து குடிஅரசு 26-.1.-1936)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களோ சொற்பொழிவாளர்களுக் கென்றே தமிழியக்கத்தில் தலையில் குட்டி சொல்லியிருக்கிறார்.
சமயமென்னும் சூளையிலே தமிழ் நட்டால் முளையாது. ம.தி.மு.க.வின் சொற் பொழிவாளர் தோழர் சம்பத் இதனைப் படித்ததுண்டா என்று தெரியவில்லை.

நமது முக்கிய வேலை முதலாவதாகக் கடவுளைப் பற்றியும், சமயத்தைப்பற்றியும் ஆழ்வார், நாயன்மார்கள் என்பவர்களைப் பற்றியும் மக்கள் பேசிக்கொண்டு திரியாமலிருக்கும் படிச் செய்ய வேண்டும். அவற்றின் மீது பழி போட்டு மக்களை ஏமாற்றிச் சோம்பேறிகளாக்கி வயிறு வளர்ப் பவர்களின் தொழிலையும், செல்வாக்கையும் அடியோடு ஒழிக்க வேண்டும். ஆக இவ்விரண்டு காரியமும் நம் சுயமரியாதைத் தொண்டர்களுக்கு முக்கியப் பிரச்சாரமாயிருக்க வேண்டும்.

இரண்டாவதாக விதவை மணமும் கலப்பு மணமும் எங்கும் நடக்கும்படியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

புராணங்களிலும், புராண மதங்களிலும் நம்பிக்கையுள்ள அல்லது அவற்றை ஜீவனமாகக் கொண்ட பண்டிதர்களை எங்கும் பகிஷ்கரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களேதான் மக்களுக்கு மூடநம்பிக்கை என்னும் விஷத்தைச் செலுத்துகின்ற கொடிய ஜந்துக்களாய் இருக்கிறார்கள்.
---------(குடிஅரசு 18-.5-.1930)

தோழர் சம்பத் வக்காலத்து வாங்கும் சைவ, வைணவ நாயன்மார்கள், ஆழ்வார்களைப் பற்றியும் இப்படி கடுமையாக விமர்சித்துள்ளார் தந்தை பெரியார்.

பக்தி இலக்கியங்களில் சீர்திருத்தம் இருக்கிறது என்று பேசுவோர்க்கு அண்ணா அவர்கள் அழகாகப் பதில் தந்துள்ளார்.

புராணங்களில் எதற்காகச் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தப் பார்க்கிறார்கள்? பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் குடிப்பதையும், சிவன் ரிஷப வாகன ரூபமாக வந்து சேர்ந்ததையும், வெட்டப்பட்ட தலை மீண்டும் ஒட்டிக் கொண்டது என்ற அற்புதங்களைப் புராணத்தில் புகுத்தி, இவை யாவும் ஈசனை நேசித்ததன் பலன் என்று முடித்து, இத்தகைய மேலான பலனை ஆண்டவன் அருளைப் பெற வேண்டுமானால் நீங்களும் பக்தி செலுத்திக் கொண்டிருங்கள் என்று உபதேசம் செய்ய இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன.

இதில் சீர்திருத்தம் நுழைய என்ன அவசியம் இருக்க முடியும்? சீர்திருத்தம் என்றால் என்ன ? இருப்பதைச் சீராகும்படி திருத்துவது, கெட்டுக் கிடக்கிறது. ஆனால் திருத்தக் கூடிய அளவிலே இருக்கிறது திருந்தி விட்டால் கேடு போய் சீராகி விடும் என்பதுதான் இதன் பொருள். அடி யார்கள் எதைக் கெட்டுக் கிடக்கிறது என்கிறார்கள்? சமூகத்திலே சாதி பேதம் தலைவிரித்தாடுகிறது. அதை ஒழித்தாக வேண்டும். எல்லா மக்களையும் ஒன்று படுத்த வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க வேண்டும். சேரிகளைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும். உழவனின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைத் தரவேண்டும் என்ற இன்னோரன்ன பிற சீர்திருத்தங்கள் தேவை என்று செப்பினரா? அதற்காக அவர்களிடம் அன்பு காட்டி, அரசரிடம் வாதாடினரா? பிரச்சாரம் புரிந்தனரா? இல்லையே! அவர்களுடைய கவலை யெல்லாம் பக்தி பரவ வேண்டும். பரமனைத் தொழ வேண்டும். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்த யாத்திரைகளின் பெருமையை மக்கள் அறிதல் வேண்டும் என்பதிலே சென்றதேயொழிய இன்று நாம் சீர்திருத்தம் என்று எண்ணுவதில் அவர்கள் அக்கறை காட்டினரா? காட்டியிருக்க முடியுமா? என்று அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கடுக்கான வினாக் கணைகளைத் தொடுத்துள்ளாரே!
----------------(திராவிட நாடு 3-.2.-1946)

தோழர் சம்பத் இனி ஏதாவது பதில் சொல்வதாக இருப்பின் அண்ணாவின் இந்தக் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லவேண்டும் - அதற்கான சரக்கு இருந்தால். பதில் சொல்ல வேண்டிய இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அண்ணா அவர்களின் கேள்விகளை நெஞ்சில் தாங்கி எதிர் முகாம்களின் மீது ஏவுகணை ஏவ வேண்டிய ஒரு திராவிட இயக்கத்தின் கொள்கை பரப்புச் செய லாளருக்கு அண்ணாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பரிதாபம் அல்ல - அவலம் ஆகும்!


அவர் எந்த அளவுக்குச் சென்றுள்ளார் என்றால் அரசியல், ஆன்மீகம் இரண்டும் உலகம் உவக்கவே செயல்படுகின்றன. எனவே நான் ஆன்மீகமும் பேசுவேன், அரசியலும் பேசுவேன் என்று சொல்லும் அளவுக்குச் சம்பத் சாஸ்திரியாகத் தம்மை உருக்குலைத்துக்கொண்டுள்ளார்.

அதோடு மட்டுமா? அடுத்த கட்டத்துக்கும் தாவிவிட்டார். சன்னியாசி என்பவர் பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஆதி சங்கரர் பிச்சை கேட்டுச் சென்ற வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி வறுமையை வெளிக்காட்டாமல் கண்களில் கலக்கத்துடன் தன்னிடமிருந்த நெல்லிக் கனியை ஆதி சங்கரரின் திருவோட்டில் இட்டார். இதைக் கண்ட ஆதி சங்கரர் கனகம் மாரிபோல பொழிய கனகதாரா ஸ்தோத்திரம் பாட, அந்த வீட்டில் பொருள் மாரி போல் பொழிந்ததாம்.

அவ்வளவு ஆற்றல் மிக்க ஆதி சங்கரருக்குத் தீராத நோய் வரவேண்டி அபிநவகுப்தன் என்பவன் அபிசார வேள்வி செய்து நோய் ஏற்படச்செய்தார். நோயால் அவதியுற்ற ஆதிசங்கரரின் கனவில் ஆத்மலிங்கேஸ்வரர் தோன்றி, நோய்தீர வேண்டுமானால் ஜெயந்திபுரம் (இப்பொழுது திருச்செந்தூர்) சென்று அங்குள்ள முருகனை வழிபடுமாறு கூறினாராம். ஆதிசங்கரருக்கே தீர்வு பெற்றுத் தந்தது திருச்செந்தூர்.

ஆவினன் குடி முருகனுக்கு ஆளாவது எப்படி என்று சிந்திக்க வேண்டும். மனத்தில் உள்ள அசுத்தம், அழுக்காறு நீங்க இந்தப் பயணம் உதவ வேண்டும் என்று பேசி இருப்பவர் மறைந்த பித்துக் குளி முருகதாஸ் அல்ல. ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர். அதிலும் எந்த நிகழ்ச்சியில்?

இப்படி அற்புதங்களை நம்புவோர் குறித்து இதோ அண்ணா பேசுகிறார்:

ஆறுகாலுடைய எருமைக் கன்று. மூன்று கண்ணுடைய மாடு, ஆண் பெண் இல்லாது அலியாக இருக்கும் கோழி, இரு பக்கம் தலையுள்ள பாம்பு, கிளைகளை உடைய பனை மரம் இன்னும் இதுபோன்ற பலவற்றை இயற் கையின் விசித்திரம் என்பர். இயற்கைக்கு இவை மாறுபட்டிருக்கிற காரணத்தால்.

சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுருவாவது, பனை ஓலைத் துண்டு வெள்ளத்தை எதிர்த்துச் செல்வது, கருங்கல் பாறை மிதப்பது, நரி பரியாவது, அறுத்துக் கறி சமைத்த பிள்ளை உயிர் பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிரம்பால் அடித்ததும் அனை வர் முதுகிலும் அடிவிழுவது, யானை கதறினதும் ஆண்டவன் வருவது, சிலந்தி பந்தல் போடுவது, சிவனாரை பூஜித்த யானை சிவபாதம் அடைவது போன் றவை எங்கும் எக்காலத்திலும் நிகழ்ந் திருக்குமா? நிகழ்ந்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

-----------(பள்ளியறையில் பரமசிவன் (சிறுகதை) -திராவிட நாடு இதழ் (16.4.1944)


தோழர் நாஞ்சில்சம்பத் அவர்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

சிவகங்கை சிறீபாலதண்டாயுதபாணி பழனி பாதயாத்திரை விழாவை முன்னிட்டு சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது. அதில் நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு பேசியதுதான் மேலே காண்பது. (தினமணி மதுரை பதிப்பு 1-.2.-2012)

அனுப்பி உதவியவர். தென் மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் மானமிகு தே.எடிசன் ராஜா அவர்கள்).

ஆதிசங்கரரின் அற்புதங்களைக் கொட்டியளக்கவும், திருச்செந்தூர் முருகனின் திவ்வியங்களைத் தேன் சொட்டச் சொட்ட பேசும் அளவுக்கு ரொம்பவும்தான் முன்னேறிவிட்டார்.

பூணூல் மகாத்மியத்தைப் பற்றி புளகாங்கிதத்துடன் அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு சிலாகிக்கிறது. மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதுகிறது. கோவில் அர்ச்சகர் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக்கி அண்ணாவுக்கும், அவர் கண்ட தி.மு.க. வுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறது என்றால், ம.தி.மு.க.வின் கொள்கைபரப்புச் செயலாளரோ, திருச்செந்தூர் பக்தராகவே மாறிவிட்டார். (மறுமலர்ச்சி என்பது இதுதானோ?)

திருப்பாவை பாடிய ஆண்டாளைப் பற்றி அவதானித்துள்ளார். ஆண்டாள் வழியில் அய்யாவாம்! - அடேயப்பா எவ் வளவு பெரிய ஆராய்ச்சி! பெண் சமுதாயத்தின் சிறகுகளை ஆண்டாள் அம்மையார் விரிக்கச் செய்து விட்டாராம் . அப்படி என்ன புரட்சியை உண்டாக் கினார் ஆண்டாள்? நாச்சியார் திருமொழி என்றும் அவர் பாடியதாக வெளிவந்துள் ளது. அதில் ஒரு பாடல் இதோ:

ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது :

முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்!

புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்குவட்டில் துளி
சோரச்சோர் வேனை
காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்லுதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!

ஒரு பக்தை கடவுளைக் கணவனாக்கிக் கொள்ளத் துடிப்பது (பக்தைக்குக் கடவுள் தந்தையல்லவா?), அவனோடு புணரத் துடிப்பது, இந்த காமவெறி பிடித்த பக்தைதான் விரகதாபம் எடுத்து வெறியின் உச்சியில் அலமரும் ஒரு பெண்தான். பெண்குலத்தின் சிறகுகளை விரிக்கச் செய்து கிரகங்களை நோக்கி பறக்கச் செய்தவராம்.

இந்த ஆண்டாள் வழிதான் அய்யா பெரியார் சென்றாராம். பகுத்தறிவு தன்மான இயக்கத்தின் வழி வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் இப்படி திரிபுவாதம் செய்வதை அக்கட்சி அனுமதிக்கிறதா?

ஆமாம், நன்றாகத்தானே இருந்தார். சம்பத்துக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்கலாம். கட்சியின் பொதுச் செயலாளர் மானமிகு வைகோ அவர்களைத் தான் கேட்க வேண்டும்.


தமிழை வளர்த்ததா பக்தி இலக்கியங்கள்?

பக்தி தமிழை வளர்த்ததாகப் பசப்புகிறார் தோழர் சம்பத்.

மணிப் பிரவாளம் என்னும் நடையைப் பெரும்பாலும் புகுத்தியவர்களே வைணவர்கள்தாம்.

தேவாரம் பற்றி அண்ணா அவர்கள் கூறுவதும் கவனிக்கத் தக்கதாகும்.

தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே பிறரைத் துன்புறுத்துவதுதான் என்பதனைத் தேவாரத்தை நடு நிலையுடன் படிக்கும் எவரும் எளிதில் புரிந்து கொள்வர். தேவாரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத்தில் நிற்கமாட்டான். ஒரு சமணன் நிற்க மாட்டான். ஒரு புத்தன் நிற்க மாட்டான். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமரச சன்மார்க்கம் பேசும் ஒரு சைவன் கூட - அதன் பக்கத்தில் நிற்கமாட்டான். அந்த அளவுக்கு வசைமொழிகளை வாரி வாரி இறைத்திருப்பார்கள். தேவாரத்தைப் பாடிய திருஞானசம்பந்தரும், பிற நாயன்மார்களும் தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசை மொழிகள் பல தேவாரம் பாடிய நாயன்மார்கள் வாயினின்றும் வந்திருக்கின்றனவே என்கிறார் அறிஞர் அண்ணா.

(டாக்டர் பரிமளம் தொகுத்த அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம் - பக்கம் 126)

பக்தி வளர்த்த தமிழின் இலட்சணம் இதுதானே! முடிந்தால் அண்ணாவை மறுக்கட்டுமே தோழர் நாஞ்சில் சம்பத்.

வைணவர்கள் வளர்க்கும் தமிழ் எத்தகையது? அதனையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சென்னையில் 11-2-1978 அன்று நடந்த திருப்பாவை - திருவெம்பாவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்ன?

பிராந்திய மொழிகளில் அர்ச்சனை நடத்துவது சாஸ்திரங்களுக்கு விரோதமானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மொழியில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை நடந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு பலப்படும். - (தினமணி 13.-2.-1978)


அய்யாவும் - அண்ணாவும்

பொதுவுரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொது வுடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும்.

(தந்தை பெரியார் குடிஅரசு 25-.3-.1944 பக்.9)

பார்ப்பனீயத்தை வைத்துக் கொண்டு எவ் வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனீயமாவது பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்காதா?

(அறிஞர் அண்ணா திராவிடநாடு 22.-4.-1945 பக்கம் 9)


ஆண்டாள் உண்மையா?

ஆண்டாளைப்பற்றி அவதானிக்கும் தோழர் சம்பத் அவர்களின் கவனத்துக்கு: வைணவரான ராஜாஜி என்ன கூறுகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வைணவ மதத்தின் ஆழ்வார் களுள் ஒருவர் எனப்போற்றிப் புகழ்படுபவரும், சூடிக் கொடுத்த நாச்சியார் என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப் பெறும் பாடல்களுக்கு உரிமை உடையவர் என்று கூறப்படுபவருமான ஆண் டாள் என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச்சாரியார் கூறி இருக்கிறார்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்விய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று திரிவேணி என் னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் 1946ம் ஆண்டு செப்டம்பர் இதழில் ராசகோபாலாச்சாரியார் எழுதியுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைண வர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர்கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள் வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?


அண்ணா சழக்கர் என்றது யாரை?

தேவார - திருவாசக பிரபந்தங்களிலும் ஏனைய சைவ-வைணவ நூல்களிலும் கூறப்படும் எந்தக் கடவுளும் பண்டைத் திராவிட மக்களால் வழிபட்டவை அல்ல. பண்டைத் திராவிட மக்கள் பால் இவ்வேதாகமங்களுக்கு ஏற்ற கடவுள் வழிபாடு என்ற ஒரு வேண்டப்படாத மூடக் கொள்கை இருந்திருக்க முடியாதென்றும் யாம் கூறும் உண்மை நிலைபெறுதல் காண்க. காணவே கருத்தழிந்த சிலர் திருக்குறளையும் தேவார, திருவாசக பிரபந்தங்களையும் பண்டைத் தமிழ் நூல்களின் சாரம் என்று கூறுவது சழக்கர் உரையாம் என்று கருதப்படும். - (அறிஞர் அண்ணா திராவிட நாடு 15-.10.-1944)

---------------------24-3-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் மின்சாரம் எழுதிய கட்டுரை

4 comments:

Seeni said...

nalla thakavalkal!

தமிழ் ஓவியா said...

பட்டபின்....


உலக நாடுகள் இலங்கை அதிபர் 21-ஆம் நூற்றாண்டின் இட்லர் ராஜபக்சேவை நறுக் கென்று மூளைதெறிக்க குட்டிய பிறகும்கூட, பக்சே வின், ராஜத் திமிர் அடங்கவில்லை போலும்!

ஜெனிவாவில் தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், நடுநிலை வகித்த நாடுகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்த இந்த நாட் டாண்மைக்காரர் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை மிரட்டியும் உள்ளார். அப்படி வாக்களித்த நாடுகள் பயங்கரவாத விளைவுகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டி வரும் என்று எச்சரிக்கை யும் செய்துள்ளார்.

அரச பயங்கரவாதம் என்று சொல்லுவார்களே அதற்கு முற்றிலும் பொருந் துகிற ஆட்சியின் தலைவர் பயங்கரவாதத்தைப்பற்றி திருவாய் மலர்வது 21ஆம் நூற்றாண்டின் பொறுக்கி எடுத்த நகைச்சுவை!

வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானப் பேச்சுக்கு வந்த வர்களையும் வேட்டை யாடிய கும்பல்; 12 வயது சிறுவனைக்கூட கொடூர மாகக் கொன்ற குரூரர் - பச்சிளம் சிறுவர்கள் வசித்து வந்த விடுதியைக் கூட விட்டு வைக்காமல், மருத்துவமனைகள் என்பதைக்கூட பாராமல் குண்டு வீசி கொலையாட் டம் போட்ட ராஜபக்சேவா பயங்கரவாதம் பற்றி வாய் திறப்பது?

பிரிட்டனின் 4 ஆவது அலைவரிசைக் காட்சியைக் கண்டு கல்லும்கூட கதறுமே! ஆனால் புத்தர் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் போதனை களின் கழுத்தை நெரித்து ரத்தக் குளியல் நடந்தும் நரிகளா இதோபதேசம் செய்வது?

இந்தியாவுக்கு இந்த நேரத்தில் ஒன்று! எவ் வளவுதான் இலங்கைக்கு வெண் சாமரம் வீசினாலும், ஒத்தடம் கொடுத்துப் பார்த்தாலும், திருத்தத் தீர்மானம் கொண்டு வந்து முட்டுக் கொடுத்துப் பார்த் தாலும், கடைசியில் இந்தி யாவுக்கு மிஞ்சியது இலங் கையின் கறுப்புப் பட்டியல்தான்!

வங்கதேசப் போரில் கூட இந்தியாவின் வான் வெளியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பறக்கக் கூடாது என்று இந்தியா எச்சரித்த நிலையில், தமது விமான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பச்சைக் கொடி காட்டியது இந்தச் சுண்டைக்காய் இலங்கை என்பதைக்கூட மறந்து விட்டு, தமிழினப் பிணங்கள்மீது நர்த்தனம் ஆடும் கழுகுக்குக் கைலாகு கொடுக்க எப் படித்தான் இந்தியாவுக்கு மனசு வருகிறதோ தெரிய வில்லை!

பட்டபின் புத்தி கொள் முதல் பெறுவது தான் பகுத்தறிவுக்கு அழகு!

தேறா நட்புதீரா இடும்பை தரும்

- மயிலாடன் 25-3-2012

தமிழ் ஓவியா said...

தினமலரின் சிண்டு துடிப்பது ஏன்?


அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்கு தி.மு.க.வின் பங்கு அதிகம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறிவிட்டாராம்.

பொறுக்குமா பூணூல் தினமலருக்கு? மாநிலங்கள் அவையிலே தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்களே, என்று கிண்டல் செய்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில், தனி ஈழக் கோரிக்கையில் ஒத்த கருத்துள்ளவர்கள் தேவை இல்லாமல் மாறுபாடான வற்றைப் பேசி ஒற்றுமை உணர்வைச் சிதைக்காதீர்கள் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கூறிய கருத்து பார்ப்பன வட்டாரத்தைக் கிலி அடையச் செய்திருக்கிறது. அந்த நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக இது போன்ற சில்லுண்டி வேலையில் சிண்டு ஏடு இறங்கியுள்ளது.

தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு உலகில் ஏற்பட்டு விட்டால் அது ஆரியத்திற்கு ஆபத்து என்பதே அவாளின் கணிப்பு. அவர்களால் அப்படியொரு நாட்டைப் பெற முடியாது. காரணம் அவர்கள் நாடற்ற லம்பாடிக் கும்பலாயிற்றே! தனக்குக் கிடைக்காதது, மற்றவர்களுக்கு எவ்வகையிலும் கிடைத்து விடக் கூடாது என்ற பரந்த எண்ணம் பார்ப்பனர் களுக்கு!

பார்ப்பனர்களின் குறி திராவிடர் கழகத்தின் மீது தானே

குறிப்பு: ஞாயிற்றுக் கிழமைகளில் இரு இதழ்களை வெளியிடும் தினமலர் இன்று இரு இதழ்களிலும் டவுட் தனபாலு திராவிடர் கழகத்தை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறது.25-3-2012

தமிழ் ஓவியா said...

யாராம்?

செய்தி: தமிழ்நாட்டில் புரையோடிப் போன திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும்.
- மருத்துவர் ச. இராமதாசு

சிந்தனை: ஆமாம். சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து அந்த மேடை யில்தான் இப்படிப் பேசி இருக்கிறார்! சுய மரியாதைத் திருமணத்தைக் கொண்டு வந்தது - சட்டமியற்றியது யாராம்? ஹி... ஹி.... 26-3-2012