Search This Blog

12.3.12

புத்தர் கடவுளா?ஜெனிவாவில் இலங்கையின் போர்க் குற்ற நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா முன் பொழிந்த தீர்மானம் அதிபர் ராஜபக்சேவை ரொம்பவே துடிக்கச் செய்திருப்பதாகத் தெரிகிறது. நாடு நாடாகச் சென்று ஆதரவுப் பிச்சை கேட்பது இருக்கட்டும்.

இலங்கையில் புத்தர் மடாலயங்களில் சிறப்புப் பூஜைகள் தடபுடலாக நடக்க ஆரம்பித்து விட்டனவாம்.

இலங்கைக்கு எதிரான பன்னாட்டு சதி இது. புலி ஆதரவாளர் களின் வேலை இது! இந்தச் சதியிலிருந்து புத்த பெருமாள் எங்களைக் காப்பார் என்று கூறி இருக்கிறார் இலங்கை அமைச்சர் ரஞ்சித்.

புத்தர் ஒன்றும் கடவுள் இல்லை - கடவுள், மத, ஆத்மா நம்பிக்கைகளுக்கு அப்பால் நின்றவர் அவர் போதனைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே அவரைக் கடவுளாக்கி புத்தர் சிலைகள் முன் தலைகளைப் போட்டு உருட்டுவது, அசல் மூடநம்பிக்கையே!


புத்தர் கருணையின் புதுமலர் - அருளென்னும் அன்பின் குழந்தை. எவ்வுயிர்க்கும் எண்ணத்தாலும், செயலாலும் கேடு செய்யாத பெருமகன்.

சிறு ஆட்டுக்குட்டி யின் உயிரைக் காக்க தன் உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருந் தவர்.

அந்தப் புத்த மாமன்னனின் சிலைகளில், தமிழர்களின் உடலைக் கிழித்து அதிலிருந்து பீறிட்ட ரத்தத்தால் அபிஷேகம் செய்த கேடு கெட்டவர்கள் புத்தன் பெயரை உச்சரிக்கக் கூடத் தகுதியற்றவர்களாயிற்றே!

புத்தரின் போதனை களைப் புரிந்து கொள்ளாமல், அவரைக் கடவுளாக்கியும், அவர் உருவாக்கிய மார்க்கத்தை மதமாக்கியும், அவர்தம் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொன்று குவித்தவர்களை புத்தர் காப்பாற்றுவாராம்.

அப்படியே புத்தர் கடவுளாக இருந்தாலும் (ஒரு விவாதத்துக்காக!) இந்தக் கொலைகாரர்களை மன்னிக்கவா செய்வார்?

----------------- மயிலாடன் அவர்கள் 11-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...

நள்ளிரவில் அம்மன் அழுகின்ற குரலா?


இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பெரும்பாலான மக்கள் இரவில் சரியாக தூங்க முடியாத நிலையிலும், மின்விசிறிகள் ஓடாமல் இருப்பதால், இரவு நேரங்களில் எந்தவித சத்தமும் இல்லாமல் இருக்கும். இந்த அமைதியான வேளையில் சேலம் மாநகரில் உள்ள அம்மாபேட்டை என்ற இடத்தில் வெளிப்புறம் கட்டட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் இருந்து ஒரு குழந்தை அழுகின்ற குரலை அந்த பகுதியிலிருந்த மக்கள் நேற்று முன்தினம் இரவு கேட்டுள்ளனர்.

கோவிலின் வெளிப்புறம் கட்டட வேலைகள் செய்வது அம்மனுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அம்மன் குழந்தையாக மாறி தன்னுடைய வேதனையை அழுது வெளிப்படுத்தியுள்ளது என்றும், இல்லை அம்மனுக்கு வேண்டாத ஏதோ ஒரு வேலையை செய்துள்ளார்கள் அதனால்தான் அம்மன் குழந்தை குரலில் அழுதுள்ளது என்றும் ஆள் ஆளுக்கு ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
உண்மையில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள முடிவு செய்த இளைஞர்கள் சிலர் கோவிலின் வெளியில் இரவு மறைந்திருந்து பார்த்தபோது, நள்ளிரவு நேரங்களில் காதல் வயப்படும் பெண் பூனைகள், தங்களின் இனபெருக்கத்துக்கு ஆண் பூனைகளை அழைப்பதும், அந்த சத்தத்தை கேட்டுவிட்டு பக்கத்தில் வரும் ஆண் பூனைகள் கொஞ்சம் கம்மிய குரலில் கத்துவதும், இரண்டு பூனைகளும் நெருங்கி வந்து இணையும் போது அந்த பூனைகளுக்குள் ஏற்படும் கிளுகிளுப்பு சத்தம் தான் குழந்தையின் அழுகை போல கேட்டுள்ளது. 12-3-2012

தமிழ் ஓவியா said...

தொலைக்காட்சிகளால் பிள்ளைகளுக்குகேடு; பெற்றோர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!


பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு
தஞ்சை பெண்கள் மாநாட்டில் தீர்மானம்

தஞ்சாவூர், மார்ச் 11- ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10.3.2012 சனியன்று தஞ்சாவூரில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெண்கள் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மக்கள் தொகையில் பெண்களின் வீழ்ச்சி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய சமூகப் பிரச்சினை

(1) ஆண்கள் எண்ணிக்கை வளர்ந்து வருவதும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் - சமூகத்தில் நிலவும் ஆண்கள் ஆதிக்கத்தின் அடையாளம் என்பதை இம்மாநாடு தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மக்கள் மத்தியில் படிந்து வந்துள்ள மதவாத மனோபாவமும், பெண்ணென் றால் குடும்பத்தின் சுமை என்கிற எண்ணமும், ஆண் குழந்தையே தேவை என்று பெண்களே எதிர்பார்க்கும் தாழ்வு மனப்பான்மையுமே இதற்கு அடிப்படையான காரணங்களாக இருந்து வருகின்றன.

ஆண்களுக்கு நிகராக 50 விழுக்காடு கல்வி, வேலை வாய்ப்புகளில் அளிப்பதை சட்டரீதியாக ஆக்க வேண்டும் என்றும், கருவில் பெண் குழந்தை என்றால் அதை அழிப்பதற்குக் கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் என்றும் மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. சின்னத் திரை மற்றும் பெரிய திரைகளில் பெண்களை வில்லியாகவும், அடிபடுபவர்களாகவும், சதா கண்ணீர் விடும் கோழைகளாகவும், வியாபார நோக்கத்திற்காகப் பெண்களின் சதையை விளம்பரப் பொருளாக மாற்றும் தன்மைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், சின்னத் திரை உள்பட தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அத்தகைய தணிக்கைக் குழுக்களில் பெண்களுக்கு முக்கியமான இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாணவர் - ஆசிரியர் பிரச்சினை

(2) கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் - மாணவர்களிடையே உள்ள உறவு கவலையளிப்ப தாகவும், ஆசிரியை கொலை செய்யப்படும் அளவுக்கு விபரீதமாகவும் வளர்ந்துள்ள சூழ்நிலை குறித்து இம்மாநாடு தன் கவலையை வெளிப்படுத்துகிறது. மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர்கள் - அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அடிக்கடி கூடி இப்பிரச்சினையில் நெருக்கமாக இருந்து, ஒவ்வொரு சிறு பிரச்சினையிலும் அவ்வப் போது தீர்வு காணப்படும் வகையில் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு, பாடத் திட்டங்களில் தேவையான மாற்றங்கள், கல்வி கற்பிப்பதில் புதிய அணுகுமுறைகள் இவற்றோடு கண்டிப்பாக விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் அவசியம் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தொலைக்காட்சிகளில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் நேரம் பலியாவதைத் தடுக்க வேண்டுமானால் பெற்றோர்களும், பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

எட்டு வயது முதல் 18 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் கடந்த பத்து வருடங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வன்முறைக் காட்சிகளைக் காண்பதாக வெளிவந்துள்ள ஆய்வினை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறது.

(3) சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதற்கான மசோதா 1996 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருவது - கட்சிகளைக் கடந்த ஆண் ஆதிக்க சமுதாயம் இது என்பதற்கான அடையாளமாகவே இம்மாநாடு உறுதியாகக் கருதுகிறது. மாநிலங் களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையில் நிறைவேற முடியாத நிலையில் நிற்கிறது. இந்த முட்டுக்கட்டை உடைத்தெறியப்படுவதற்கு மகளிர் விழிப்புணர்வே போதுமானதாக இருக்க முடியும் என்பதை இம்மாநாடு பெண்களுக்கு உணர்த்துகிறது.

மேலும், இதில் உள்ஒதுக்கீட்டுக்கும் கண்டிப்பாக இடம் இருக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரப்புப் பெண்கள் மாநாடு ஒன்றையும், பேரணியையும் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(4) குழந்தைகளுக்கு தாய், தந்தை ஆகிய பெயரில் முன் எழுத்துகளை வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய், தந்தை ஆகிய இருவர்களின் பெயர்களை இணைத்து முன் எழுத்துக்களாக (ஐவையைடள) வைக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(5) மாற்றப்படவேண்டிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

மாமியார் தனது மருமகளை எட்டி உதைத் தாலோ, தன் மகன் விவாகரத்து செய்துவிடுவான் என்று மிரட்டினாலோ அவற்றையெல்லாம் இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 498 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருத முடியாது என்று 27-7-2009 அன்று உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு மாற்றி யமைக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(6) பெரியார் குடும்பநல ஆலோசனை மய்யம் துவங்குதல்

குடும்பங்களிலும், வெளியிலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் தலை மையில் பெரியார் குடும்பநல ஆலோசனை மய்யம் ஒன்றைத் தொடங்குவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

தமிழ் ஓவியா said...

லோகக் குரு என்றால் லோ லோ என அலைபவரா?


கேள்வி: கல்யாணத்தை திருமணம் என்றும் ஆசீர் வாதத்தை வாழ்த்துரை என்றும் மாற்றியது திராவிட இயக்கம்தான் என்று பெருமிதம் கொள்கிறாரே கருணாநிதி?

பதில்: ஏனோ தெரியவில்லை. பெருமிதப் பட்டியலை சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார். அவர்கள் செய்த மாற்றம் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே? நேர்மையை மடத்தனம் என்றும், ஊழலை சம்பாத்தியம், என்றும், உண்ணாவிரதத்தை தமாஷ் என்றும் போலீஸ்காரர்களை கழகக்காரர்கள் என்றும், அமைச்சர்களை - கொள்ளைக்காரர்கள் என்றும், தமிழை வியாபாரம் என்றும் மாற்றி, இன்னும் பல மாற்றங்களையும் செய்து கடைசியாக கழகத்தை குடும்பம் என்றும் மாற்றியவர்களாயிற்றே அவர்கள்! - துக்ளக் 14.3.2012 பக்கம் 3

விதண்டாவாதம் என்று ஒன்றைச் சொல்லுவார்களே அது வேறு யாருக்கும் பொருந்துவதைவிட திருவாளர் சோ, ராமசாமி அய்யர்வாளுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். தமிழ் என்றால் தாண்டிக் குதிக்கும் துவேஷம் அவாளின் ரத்தத்தோடு பிறந்ததாயிற்றே!

நாமும் சொல்லக் கூடுமே! லோகக் குரு என்றால், பெண்களைத் தேடி லோ லோ என்று அலைபவர் களாகவும், காமகோடி என்றால் காமவெறி பிடித்துத் திரிபவர்களாகவும் சங்கராச்சாரியார் என்றால் ஆளை அடியாட்களை ஏவி கொலைகள் செய்யும் தாதாக் களாகவும் அர்ச்சகர் என்றால் பக்தைகளைப் பதம் பார்ப் பவர்களாகவும், கர்ப்பக்கிரகம் என்றால் கர்ப்பத்தை உண் டாக்கும் கட்டில் என்றும் மந்திரம் என்றால் ஜொள்ளுப் பார்ட்டி என்றும் மாற்றியவர்கள் என்றும் சொல்லலாமே! 10-3-2012

தமிழ் ஓவியா said...

அன்னையார் பிறந்த நாள் செய்தி அய்யா பணி முடிக்க வழிகாட்டும் அன்னை!


இன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் - நம் அறிவு ஆசானுக்காகவும் அவர் கண்ட லட்சிய இயக்கமாம் திராவிடர் கழகத்திற்காகவும் தன்னை முழுமையாக ஒப்படைத்து ஒளிதந்து மறைந்தும் மறையாமல் வாழும் எங்கள் தியாகத்தாய்!

பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணினம் எப்படி என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ஒப்புவமை இல்லாத உயர் லட்சியச் சின்னம். தன்னை - தன் உழைப்பை, சேவையை மக்களுக்கு ஒப்படைத்ததல்லாமல், தனது சொந்த சொத்துக்களையும் பொது நலனுக்கே அர்ப்பணித்த அருங்கொடையாளர்!

மான அவமானம் பார்க்காது, வசைப் புயலையும் கடந்து வாகை சூடி நின்ற வையத்துப் பெண் சிங்கம் நம் அன்னையார்!

அவரது தலைமையால் திராவிடர் கழகம் திசை தடுமாறாமல், திக்கெட்டும் புகழ் பரப்பிடும் இயக்கமாக அய்யாவுக்குப் பின் அகிலத்திற்கு அடையாளம் காட்டப்பட்டது!

இராவண லீலா நடத்திய இந்தியத் துணைக் கண்டத்தையே இப்பக்கம் திரும்ப வைத்த இணையற்ற தலைவர் நம் அன்னையார்.

நெருக்கடி கால சுனாமியைச் சந்தித்தவர்

நெருக்கடி கால சுனாமியைத் தாண்டி இயக்கத்தைக் கட்டுக் கோப்பு சிதறாமல் காத்து பெரியார் பணி தொடர அன்னையாரின் அருந்திறன், அணுகுமுறை மாற்றாரும் வியந்து போற்றும் அளவுக்கு ஆதரவற்ற கைவிடப்பட்ட குழந்தைகளின் புது வாழ்வில் பொலிவுடன் வாழ்கிறார்!

அவர்தம் தொண்டறம் நம்மை மேலும் உரம் பெற்றவர்களாக்கி, அய்யா பணி முடிக்க வழிகாட்டும் - வழி காட்டிக் கொண்டுமிருக்கிறது.

வாழ்க பெரியார்!

வாழ்க அன்னையார்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 10-3-2012

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அபாயப் பள்ளிகள்


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலின் செயல் பாடுகள், ஊடுருவல்கள் பற்றி வெளிப்படுத்திய கருத்துகளை, தகவல்களை அலட்சியப் படுத்தினால், அதற்காக நாடு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் திணிக் கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த அமைப்புகள் மூலம் இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.

இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன என்றால், பெரிய விளக்கங்கள் தேவைப்படாது.

முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.

இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?

ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ் ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ் டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.

பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந் துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)

யூதர்கள் மீது வெறியைக் கிளப்புவதற்காக அடால்ப் ஹிட்லர் இப்படித்தான் பாடத் திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்.

இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.

இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் கண் காணிக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் குழு ஒன்றை நியமித்து இப்பள்ளிகளின் பாடத் திட்டங்கள், பயிற்சிகள் பற்றி உண்மை கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...

ழகத் தோழர்களின் முயற்சியால் வீண் புரளி முறியடிப்பு
t

ஈரோடு-வீரப்பன் சத்திரத்தில் இருக்கும் மாசிமலைரங்கசாமி (கவுண்டர்) அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பேய்' நடமாடுவதாக புரளி கிளப்பப் பட்டு 07.03.2012 அன்று ஒரு மாலை செய்தித்தாள் பரபரப்பாக செய்தி வெளியிட்டிருந்தது,அதன் அடிப்படையில் அப்பள்ளியின் தலை மையாசிரியர் திரு. இளங்கோவன் அவர்களைக் கழகத் தோழர்கள் சந்தித்தனர்.

இது வெறும் புரளி, அந்த மாலை செய்தித்தாளைப் பார்த்துத்தான் அச்செய்தியைத் தெரிந்து கொண் டேன், பன்னிரண்டாம் வகுப்பிற்கு அரசு பொதுத் தேர்வு நடக்கும் இந்த நேரத்தில் இச்செய்தி வெளியாகி யிருப்பது வருத்தத்திற்குரியது. இப்பள்ளியில் 302 மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதுகிறார்கள்,

தனியார் பள்ளியைப்போன்று இப்பள்ளியில் தொடர்ந்து சிறப்பு வகுப்பு எடுக்கிறோம், இங்கு படிக்கும் மாணவிகள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே அதிகம் படிக்கிறார்கள்.

தினமும் மாணவிகளுக்கு தன்னம் பிக்கை, விழிப்புணர்வு பற்றி சொல்லி விட்டுத்தான் வகுப்பே தொடங்கு கிறோம் என்றும், அறிவியல் வளர்ந்த இக்காலகட்டத்தில் இதுபோன்ற புரளி பரப்பப்படுகிறது என்றால்,அறியாமை மட்டுமே இருந்த கால கட்டத்தில் எப்படி துணிந்து மக்களுக்கு பெரியார் தன்னம்பிக்கையூட்டினார் என்பதை நினைத்தால் அவரது பணியின் சிறப்பு விளங்கும் என்று கழகத்தவர்களிடம் இச்சந்திப்பில் கூறினார். மாவட்ட செயலாளர் இரா. நற்குணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பா.வைரம், மாநகர தலைவர் கு.சிற்றரசு,மாவட்ட அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன், தனசேகரன், பிரகாசு, செபராசு செல்லத்துரை, மரப்பாலம் சத்திய மூர்த்தி, லெமூரியன். பிரபாகரன் ஆகியோருடன் மாவட்ட செய்தியாளர் த.சண்முகம். 9-3-2012

தமிழ் ஓவியா said...

தலைவர்அழைக்கிறார், தஞ்சைகுலுங்கட்டும்!


தஞ்சைத் தரணி கைகூப்பி அழைக்கிறது

தமிழினக் குடும்பங்களே, திரள்க, திரள்கவே! திராவிடர் இயக்க நூற்றாண்டுத் திசையிலே தீரர் கூடுவீர் தீர்மானம் செய்யவே! வெள்ளி நாணயம் வெண்தாடி வேந்தர்க்கு

வழங்கி மகிழ்ந்த வரலாற்றுப் பூமியில் தங்கக் கட்டிகளை தமிழர் தலைவருக்கு தந்த புகழ்பெற்ற தரணி மீதிலே புலிகளின் பரம்பரை புறப்பாட்டு எழுதிட பூகம்ப உணர்வோடு புறப்படு! புறப்படு!!

அய்யாவின் உயிரை அன்பின் உயிரினில்
அடைகாத்துவந்த அன்னை மணியம்மையார்
பிறந்த நாளும் பீடுற நடக்குது
பெண்கள் கடல்பார் பெரியார் மண்ணிலே!
மங்கைமார் கொட்டுவார் போர்முரசம்
மண்ணே தீயாய் மாறிடக் காண்போம்!
காவிரியானாலும், முல்லையானாலும்
கடல்கடந்த ஈழத் தமிழரே யானாலும்
கடலே வீடெனக் காலந்தள்ளும்
தமிழின மீனவச் சோதரன் ஆனாலும்
இந்திய அரசின் கடைக்கண் கொள்ளி
எரிப்பது என்னவோ தமிழரைத்தானே!
வஞ்சிக்கப்படுவதே தமிழரின் வாழ்க்கையா?
வாழ்வில்லை என்பதே தமிழரின் பாட்டையா?
வஞ்சினம் கொள்வோம் வாருங்கள் தமிழர்காள்
வாழ்வது ஒருமுறை வரட்டுமே மரணமும்தான்!
வாள்போல் உணர்வைக் கூர்தீட்டி
வான்முட்ட ஒலிப்போம் வாருங்கள் தோழர்காள்!
மூடத்தனமாம் முட்டவரும் மாட்டின்
மூக்கணாங் கயிற்றைப் பிடிப்போம் வாரீர்.
பேரணியல்ல போரணியாகட்டும் பெரியாரின் பேரர்காள், வருக, வருக!
இளைஞர் சேனையே ஏறுநடைபோடு
எக்காளம்பாடிக் கிளர்ந்தெழு, கிளர்ந்தெழு
தஞ்சைப் பரப்பு சுருங்கிப் போகட்டும்,
தமிழர் சேனை கருங்கடல் முன்னே!
தமிழர் தலைவர் அழைக்கிறார், அழைக்கிறார்
தஞ்சை குலுங்கட்டும், தலைகளால் நிரம்பட்டும்!

- கவிஞர் கலி. பூங்குன்றன் -

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களே, பதறாதீர்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை விழா ஒன்றில் பேசிய டாக்டர் கலைஞர் அவர்கள் பார்ப்பான் - பார்ப்பனன் என்ற சொற்களைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக மண்ணுக்கும் விண்ணுக்குமாக எகிறிக் குதித்துத் துள்ளாட்டம் போடுகிற பார்ப்பன மக்காள்! யான் பகர்வது கேண்மின்!

ஊர்ப்பானை உருட்டுகிற பார்ப்பான் என்றே பெரியாரியக்கப் பாவலர் பாரதிதாசன் பாடுகிறார்.

பாரதிதாசனின் குரு பார்ப்பனப் பாரதியோ பேராசைக்காரனடா பார்ப்பான் என்றும், பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்றும் அல்லவா படம் பிடித்துக் காட்டுகிறார்.

பார்ப்பான் - பார்ப்பனன் என்ற சொற்களுக்கு என்ன பொருள்? அவர்கள் எண்ணுகிற - சொல்லுகிற - கருதுகிற பொருளின் கருத்துப்படி அவர்கள் இரட்டைப் பிறப்பாளர் ஆகின்றனர்.

அவர்கள் தாய் தந்தையாக்குப் பிறப்பது முதல் பிறப்பு. அடுத்து அவர்கள் முப்புரிநூல் என்னும் பூணூல் அணிந்து கொள்ளும் விழாச் சடங்கு அவர்கள் எடுக்கின்ற இரண்டாவது அவதாரம் அதாவது பிறப்பு ஆகும். ஆக, அவர்கள் இரட்டைப் பிறப்பாளர்கள் ஆவார்கள்.

இதோ அருமையான, உண்மையான விளக்கம்:

கோழிக் குஞ்சு என்று சொல்லக் கூடாது. அவ்வாறு சொல்லுவது இலக்கண முறைப்படி தவறு ஆகும். கோழிப் பாப்பு என்றே சொல்ல வேண்டும். பார்ப்பு என்பதற்கு இரட்டைப் பிறப்பு என்பது பொருள். எப்படி? கோழி முட்டை இடுவது என்பது முதல் பிறப்பு ஆகும். அடுத்து அந்தக் கோழி முட்டை அடைகாக்கப்பட்டு பொரிக்கப்பட்டு குஞ்சாக வெளிவருவது அதன் இரண்டாவது பிறப்பு ஆகும். இரண்டு பிறப்பு பெற்ற அந்த உயிரினம் கோழிப் பார்ப்பு எனப்பட்டது. அது நிச்சயம் கோழிக் குஞ்சு கிடையாது.

இரட்டைப் பிறப்புப் பெற்ற அந்த உயிர்ப் பிராணி பார்ப்பு ஆனதுபோல, இரட்டைப் பிறப்பைப் பெற்ற (இவ்வாறு சொல்லிக் கொள்கிற காரணத்தினால்) அந்த மனிதனும் பார்ப்பனன் _ பார்ப்பான் ஆவான் - ஆனான்.

இதுதானே உண்மையான பார்ப்பன விளக்கம் ஆகும். தமிழர்கள் உள்ளிட்ட உலகின் அனைத்து மக்களும் ஒற்றைப் பிறப்பாளர்களாக விளங்க நீங்கள் மட்டும் உங்களின் கொள்கை விளக்கப் பிரச்சாரத் தத்துவக் கொள்கைப்படி இரட்டைப் பிறப்பாளர் என்னும் தன்மையில் பார்ப்பனர்கள் ஆகிறீர்கள்.

இதற்கு நாங்கள் என்ன செய்ய?
டாக்டர் கலைஞர் என்ன செய்ய?
எங்கள் எண்ணப்படி நீங்கள் பார்ப்பனர்களாக வாழ வேண்டாம்!
உங்கள் எண்ணப்படி நீங்கள் பிராமணர்களாகவும் இருக்க வேண்டாமா!
மக்கள் கருத்துப்படி நீங்கள் மனிதர்களாக விளங்க வேண்டும் - வாழ வேண்டும் என்பதே நியாயத் தீர்ப்பு.

ஆம் (பார்ப்பனர்களே) நீங்கள் நின்று நிதானித்துப் பதறாமல் இருங்கள்!10-3-2012

- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் சண்டை


நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்கள் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைதான் அதிகம்.

- சென்னை தமிழிசைச் சங்கக் கட்டத் திறப்பு விழாவில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் 15.4.1953

தமிழ் ஓவியா said...

கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட்


குதிரை வண்டிகள் நிறுத்த, கிந்தனார் பெயரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் தன் சொந்த செலவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணன் அவர்கள் அமைத்து கொடுத்தார் அவரிடம் எதுக்குங்க? குதிரை வண்டி ஸ்டாண்ட் அமைத்து கொடுத் தீர்கள் என பலர் அவரிடம் கேட்டார்கள்.

திறப்பு விழாவில் கலைவாணர் பதில்:

அய்யா! இந்த உலகத்துல எவனாச்சும் நாம முன்னுக்கு வர்றதெ விரும்புவானா?

ஆனா குதிரை வண்டிக்காரன் மட்டும்தான் நாம வண்டியில் ஏறி உட்கார்ந்த உடன் வாஞ்சை யில்லாமல் அய்யா, முன்னுக்கு வாங்க! முன்னுக்குவாங்க என்று ஆசையாக, அழைப்பார்கள்.

அந்த பரந்த உள்ளத்தை மதிச்சு அவர்களுக்கு கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட் அமைத்து நானே திறந்து வைத்தேன் என்றார்.
தகவல்: மு. அன்புக்கரசன், பெரியகுளம்