Search This Blog

16.3.12

இலங்கை இந்தியாவுக்கு நட்பு நாடா?


இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி அய்.நா. நியமித்த மூன்று பேர்களைக் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையில் இலங்கை இராணுவம் இழைத்த போர்க் குற்றங்களை விசாரித்தது. அதன்படி 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இந்தக் குழுவின் அறிக்கையை அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அய்க்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்தார். மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் (Human Rights Watch) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கை அது. இலங்கை அரசு நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு வதைத் துரிதப்படுத்துவற்கும் பொறுப்பேற்பதற்கும் தவறியுள்ளது.

பாதுகாப்புப் படை மூலம் கொடுமைப் படுத்துதலுக்கும் ஊடகத்தையும் சிவில் சமூகக் குழுக்களையும் மிரட்டியதற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பின்மைக்கு அதிபர் மகிந்த ராஜபக்சேதான் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறியுள்ளது.

படைத்துறை சாராதோர் குண்டு வீசி கொல்லப் பட்டுள்ளனர். பொது மக்கள் வாழும் பகுதிகளிலும், மருத்துவ மனைகள் மீதும் குண்டு வீசுவது குறித்து இராணுவம் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்கிறது அந்தக் கண்காணிப்புக் குழு.

நார்வே அரசு 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை 2011 இல் தயாரித்து வெளியிட்டது. நார்வே தலைநகரமான அஸ்லோவில் அது வெளியிடப்பட்டது. நார்வே அரசு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல் விக்கு இந்தியா எப்படி காரணமாக இருந்தது என்பதை அவ்வறிக்கை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.
புலிகளின் நண்பன் நார்வே நாடு என்ற எண்ணம்தான் இந்தியாவுக்கு இருந்ததாக அவ்வறிக்கை கூறியது.

2007இல் சமாதான முயற்சியில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என்ற நார்வே நாட்டின் கோரிக் கையை இந்தியா நிராகரித்துவிட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த நிலையிலிருந்து இன்று வரை இந்தியா இம்மி அளவும் நகரவில்லை என்பது வெளிப்படை.

இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதி சரத் என்சில்வா முள்வேலி முகாமில் முடக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளை பார்வையிட்டு என்ன சொன்னார்?

நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்ப ததெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்த நிலை நீடித்தால் விடுதலைப் புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவலை இல்லை என்றார்.

உண்மையான நிலை என்ன என்று இந்தியாவுக்கு நன்கு தெரிந்திருந்தும் பிடிவாதமாக இந்தியா நியாயத்துக்கு விரோதமாக, மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்வது வெட்கப்படத்தக்கதே!

மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி குறிப்பிட்டது போல தமிழ் உணர்வு என்பதையும் தாண்டி இதில் மனித உரிமை இருக்கிறதே - அது பற்றி இந்தியாவின் நிலைப்பாடு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டாமா?

ஈழத் தமிழர் குறித்து தமிழ்நாடு சட்டப் ப்ரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே தரக்குறைவாக விமர்சனம் செய்தாரே - இந்திய அரசு கண்டு கொண்டதா?

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் சாயம் உலக நாடுகள் மத்தியில் வெளுத்துவிட்டது.

யுத்த நெறிமுறைகளை மீறி, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த ஒரு நாடு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு நாடு, இந்தியாவின் நட்பு நாடு என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது இந்தியாவைப் பற்றிய மரியாதையை வெகுவாகக் குறைப்பதோடு அல்லாமல் ஒட்டு மொத்தத் தமிழினத்தைத் துச்சமாக மதிக்கிறது இந்தியா என்றே எடுத்துக் கொள்ளப் படும். இந்தியா இலங்கையை நட்பு நாடாகக் கருதுவது இருக்கட்டும். இலங்கை இந்தியாவை நட்பு நாடாக மதிக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. பாகிஸ்தான், சீனா யுத்தத்தின் போது இலங்கை யாருக்கு நட்பாக இருந்தது? எந்த வகையிலும் இந்தியாவின் முடிவு விரும்பத்தக்கதாக இல்லை.

இதற்கான விலையை காங்கிரஸ் எதிர்காலத்தில் கொடுக்க நேரிடும் என்பதில் அய்யமில்லை

------------------------------”விடுதலை” தலையங்கம் 15-3-2012

6 comments:

தமிழ் ஓவியா said...

இந்திய அரசின் முடிவு - தமிழர்களுக்கு எதிரான துரோகம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி


சென்னை, மார்ச் 15- நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறிய கருத்து தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்றார் கலைஞர். சென்னையில் செய்தி யாளர்களிடம் (14.3.2012) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கூறியதாவது:-

செய்தியாளர் :- இன்று நாடாளுமன்றத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில், இலங்கைப் பிரச்சினையில் கருத் துக்களை எடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பாக, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி யும், திருச்சி சிவாவும் பேசியிருக்கிறார்கள். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது அண்டை நாடான இலங்கைக்கு எதிராக, முடிவெடுக்க மாட்டோம் என்று கூறியிருக் கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழர்களுக்குத் துரோகம்

கலைஞர்:- திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் பேசியதை சுட்டிக்காட்டி, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், திருச்சி சிவாவும் மாநிலங்களவையில் பேசும்போது, ``அண்டை நாடுகளுக்கு எதிராக முடிவெடுக்க மாட்டோம் என்றால்; பங்களாதேஷ் பிரச்சினையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள், (மத்திய அரசினர்) பதில் சொன்ன தாகத் தெரிய வில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லா விட்டால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக தி.மு.க. அதைக் கருதும்.

செய்தியாளர்:- இந்திய அரசு அப்படி முடி வெடுத்தால், மத்திய அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?

கலைஞர்:- அது நான் ஒருவன் மாத்திரம் தீர்மானிக்கக் கூடியதல்ல; அதைப் பற்றி நாங்கள் எங்கள் செயற்குழுவில் கலந்தாலோசித்து முடி வெடுப்போம்.

செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் நீங்கள் நாளை பேசவுள்ள மேடையை அகற்ற வேண்டுமென்று போலீஸ் தரப்பில் சொல்லியிருக்கிறார்களே?

கலைஞர்:- அதெல்லாம் சிறிய விஷயங்கள். உள்ளூர் அ.தி.மு.க. தோழர்கள் ஈடுபட்டு செய்கின்ற காரியங்கள். அதை நாங்கள் பெரிதாக கருதவில்லை.

செய்தியாளர்:- தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு அங்கே எப்படி உள்ளது?

கலைஞர்:- தேர்தல் ஆணையம் அங்கே ஓரவஞ் சகமாக செயல்படுகிறது என்று புகார்கள் வரு கின்றன. செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் 32 அமைச்சர்கள் முற்றுகையிட்டு பல்வேறு வாக்குறு திகளை வாக்காளர்களுக்கு அளித்து வருகிறார்கள். இது எந்த அளவிற்கு தேர்தலை பாதிக்கும்?

கலைஞர் :- இதைப் பற்றியெல்லாம் அறி வார்ந்த ஆசிரியர்களை கொண்ட பத்திரிகைகள் விமர்சனம் செய்து எழுத வேண்டும்.

செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?

கலைஞர்:- நடைபெற வேண்டும். செய்தியாளர்:- தேர்தல் நியாயமாக நடைபெற் றால் - தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி?

கலைஞர்:- தேர்தல் நியாயமாக நடை பெற்றால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு உறுதி.

செய்தியாளர்:- இரயில்வே பட்ஜெட் டில் கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ளதே?

கலைஞர்:- தமிழகத்தில் பேருந்துக் கட்ட ணத்தை உயர்த்தியதைப் போல - மத்திய அரசு ரயில்வேயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி யிருக்கிறது. கட்டண உயர்வு என்றாலே, சாதாரண ஏழை மக்களை பாதிக்கக் கூடியது தான். கட்டணங் கள் மக்களால் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தால் அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஒரே வரியில் கட்டணத்தை ஏற்றிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எப்படி, என்ன காரணத் தால் ஏற்றியிருக் கிறார்கள், எப்படியெல்லாம் ஏற்றியிருக்கிறார்கள், அதன் நிறை குறை என்ன என்பதைப் பற்றி யெல்லாம் யோசிக்க வேண்டும். கழகத்தின் கருத்தை கனிமொழியும் - சிவாவும் எதிரொலித்திருக்கிறார்கள்!

செய்தியாளர்:- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா பேசியது சரியாக இல்லையே?

கலைஞர்:- அதைப் பற்றி கனிமொழி, மாநி லங்களவையில் இன்று பேசியது தி.மு.க. வின் கருத்தாக அமைந்திருக்கிறது. திருச்சி சிவாவும் கழகத்தின் கருத்தை எதிரொலித் திருக்கிறார்.

செய்தியாளர்:- சங்கரன்கோவில் தேர்தல் முடிவு தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி?

கலைஞர்:- நல்லதை நினைப்போம். - இவ்வாறுகலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.15-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கைமீதான அமெரிக்கத் தீர்மானம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்


தி.மு.க. - வெளி நடப்பு, அ.தி.மு.க. - நகல் கிழிப்பு



புதுடில்லி, மார்ச் 15- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இந்தியா எடுத் துள்ள முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பும், கண்டன மும், தெரிவிக்கப்பட் டது.

நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் ஒரு ஒழுங்குப் பிரச் சினையைக் கிளப்பிக் கூறியதாவது:

எனது நண்பர்கள் முற்றிலும் குழப்பமான நிலையில் இருப்பது போல் தெரிகிறது. நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை மூலமாக பிரச்சினை விளக்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. என்ன பிரச் சினை? பிரச்சினை அமெரிக்கா முன் வைத் துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தொடர்பானது.

இன்றைக்கு அவை நடவடிக்கைகள் இலங் கையின் நிலைமை பற்றிய அறிக்கை அளிப் பதாகும். தமிழில் ஒரு முதுமொழி உண்டு. பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட் டைப் பாக்கு என்ன விலை? என்று சொல் கிறார். அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா முன் மொழிந்துள்ள தீர்மா னத்துக்கு ஆதரவு குறித்து அமைச்சரிடமி ருந்து அறிக்கையைக் கேட்டால் அவர் இலங் கையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த் தல் போன்றவை குறித்து அறிக்கையுடன் வந்துள் ளார். நாங்கள் பல முறை கேட்டுவிட்டோம்.

இதற்கு மேல் டி.ஆர். பாலு மற்றும் எவரும் பேச அனுமதிக்கப் படாததால் வெளி யுறவுத் துறை அமைச்சர் அறிக்கையை சமர்ப்பித் தார்.

இறுதியாக இந்த அவையில் கூறப்பட் டுள்ள கருத்துக்கள், உணர்வுகள் ஆகிய வற்றை அரசு மனதில் இறுத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அரசு இந்த அவைக்குத் தெரிவிக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று முடித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர்.

தமிழ் ஓவியா said...

இதை அடுத்து டி.ஆர்.பாலு இலங் கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை கள் மீறல் குறித்து அரசு தீவிரமாக இல்லை என்று வருந்துகிறேன். நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து நாடா ளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப் பித்த பிறகு அதன்மீது நடைபெற்ற விவாதத் தில் கலந்து கொண்ட தி.மு.கழக உறுப்பினர் கனிமொழி பேசிய தாவது:

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அதன் முடிவில் பொறுப்பு நிர்ணயம் கிடைக்கும் என்று நாம் நம்புவதாகவும் அமைச் சர் அறிக்கையில் கூறி யுள்ளார். அவர்களது கூற்றுகள் மற்றும் சமரச கமிஷனின் அறிக்கை இலங்கை அரசு எந்தப் போர்க் குற்றங்களையும் செய்யவில்லை என்று கூறுகிறது. பெண்கள், குழந்தைகள் உள்பட 40,000 அப்பாவி குடி மக்கள் கொல்லப்பட்ட தில் இலங்கை அரசுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்றுஅது கூறுகிறது. இலங்கை அரசுக்கு இந்தக் குற் றங்கள் எதிலும் பாத் திரம் இல்லை என்று அது மன்னிக்கிறது. பின்னர் இலங்கை அரசு பற்றி இந்த உறுதியும் நம்பிக்கையும் எங் கிருந்து வருகிறது?

அடுத்து நாம் நமது அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலை யிட முடியாது என்று கூறுகிறோம். ஆனால் 1971 வங்கதேசப் போரில் இந்தியா வகித்த பங்கு பற்றி நமக்குத் தெரியும். உலகம் முழுவதற்கும் தெரியும்.

நமது பிரதமர் தென்னாப்பிரிக்கா, சென்றிருந்தபோது பெருமையுடன் அறிவித் தார்.

எங்களது விடு தலைக்கு முன்பே 1946ஆம் ஆண்டில் நாங்கள் நிறவெறிக் கொள்கையை அய்க்கிய நாடுகள் அமைப்பில் ஒரு பிரச்சினையாக எடுத்தோம். 2009 ஜனவரி 9 அன்று அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் (பாலஸ்தீனில்) காசா பகுதியில் இஸ்ரேலால் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் அத்துமீற லுக்கு எதிராக தீர்மா னம் கொண்டு வரப் பட்டபோது இந்தியா ஆதரித்தது என்று பெருமையுடன் பிரதமர் பிரகடனம் செய்தார். எனவே இலங்கையி லுள்ள தமிழர்கள் என்று வரும்போது தென் இந்தியா மற்றும் தமிழ் நாடு மக்களின் உணர்வு கள் என்று வரும்போது நாம் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்?

நாங்கள் வேறெதுவும் கோரவில்லை. இலங்கை யில் நடைபெற்றுள்ள மனித உரிமை அத்து மீறல்கள் பற்றிய விசா ரணையை இந்திய அரசு ஆதரிக்கிறதா என்று மட்டும்தான் நாங்கள் கேட்கிறோம்.

இதுபோன்ற அறிக் கையை எங்களால் ஏற் றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.

இன்னும் சொல்லப் போனால் தமிழர் என்ற உணர்வையும் கடந்து இதில் மனித உரிமை இருக்கிறது என்பது முக்கியமானது என்றார்.

திமுகவைச் சார்ந்து திருச்சி சிவா பேசும் போது கூறியதாவது:

இலங்கை அரசு சொல்லிக் கொண்டிருக் கும் தகவல்களையே அமைச்சரும் அறிக்கை யில் கூறுகிறார். இலங்கை அரசின் அறிக்கை போலவே உள்ளது.

சொன்னதையே திரும் பத் திரும்ப சொல்லு கின்ற ஜெராக்ஸ் காப்பி போல உள்ளது அமைச் சர் அறிக்கை வரலாற்று பூர்வ நட்புறவுக்கு தமி ழர்களின் உயிர்கள்தான் விலையா? இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க உறவு தேவை என்பதற் காக தமிழக மீனவர்கள் பலியாக வேண்டுமா? தமிழர்களின் உணர்வு களை மத்திய அரசு துச்சமாக மதிக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் விரும்பத் தகாதவையாக இருக் கும்.

இந்தியா எடுத்திருக்க வேண்டிய முயற்சியை பிற நாடுகள் எடுத்துள் ளன. இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் இந்தியா இதற்கு குறைவாக வேறு எதுவும் எங்களை சமா தானப்படுத்தி விடாது. அதையும் செய்ய மறுத் தால், இதன் விளைவுகள் எதிர்காலத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்றார்.

கிருஷ்ணா தன் உரையை நிறைவு செய்த வுடன் அதிமுக எம்.பி.க் கள் அமைச்சரின் அறிக் கையை கிழித்தனர். கிழித்ததை சபைத் தலை வர் இருக்கைமுன் வீசி விட்டு வெளியேறினர். 15-3-2012

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகளுடன் தமிழக எம்.பி.க்களுக்கு தொடர்பா?


இலங்கைத் தூதர் மன்னிப்பு கேட்டார்

புதுடில்லி, மார்ச்.16- விடுதலைப்புலிகளுடன் தமிழக எம்.பி.க்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பேசிய இலங்கை தூதரை, வெளியுறவு அமைச்சகம் நேற்று நேரில் அழைத்து அதுபற்றி விளக்கம் கேட்டது. இதைத்தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்ற நடவடிக் கைகள் பற்றியும் விசாரிக்க கோரி ஜெனீவாவில் உள்ள அய்.நா.சபை மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசியல் கட்சிகளும் இந்த கோரிக் கையை வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், டில்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் அளித்த பேட்டி ஒன்றில், அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க் களுக்கும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன் நட்புறவு இருப்பதாகவும், எனவே இதுகுறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

மேலும், இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரத் துக்கு அவர்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்து வதாக கருதுவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

சம்மன்

இதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராகி தனது கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்துக்கு வெளி யுறவு அமைச்சகம் `சம்மன்' அனுப்பியது.

அதை ஏற்று நேற்று அவர் டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் ஹர்ஷ் வர்தன், தமிழக எம்.பி.க்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து பற்றி இந்தியாவின் கவலையை தெரிவித்ததோடு, விளக்கமும் கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரசாத் கரியவாசம், தான் தெரிவித்த கருத்து குறித்து வருத்தமும் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக எம்.பி.க்கள் சிலர் பற்றி நான் தெரிவித்த கருத்து குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கவலையை தெரிவித்தது. தமிழக எம்.பி.க்கள் மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறேன். அவர்களில் சிலர் எனக்கு நல்ல நண்பர்கள் ஆவார்கள்.

விடுதலைப்புலி ஆதரவு குழுக்கள் வெளிநாடு களில் இலங்கைக்கு எதி ராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இலங்கை அரசு மேற் கொண்டுள்ள சமரச முயற்சியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் தான் நான் கூறினேன். நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. நான் தெரிவித்த கருத்து தமிழக எம்.பி.க்களின் மனதை புண்படுத்தி இருந்தாலோ அல்லது அவர் களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலோ அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். - இவ்வாறு பிரசாத் கரியவாசம் கூறினார்.
அய்.நா.மனித உரிமை குழு கூட்டத்தில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கருது கிறீர்களா? என்று கேட்டதற்கு; இதுபற்றியும் தான் பேசியதாகவும், இந்தியா பொறுப்புள்ள நாடு என்பதால் இந்த பிரச்சினையில் சரியான முடிவு எடுக்கும் என்றும் கூறினார். 16-3-2012

தமிழ் ஓவியா said...

மனித உரிமைகள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடென்ன?


2011 ஜூன் 14ஆம் தேதி பிரிட்டன் அலை வரிசை வெளியிட்ட கொலைக் களக்காட்சி இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத் தில்கூட நாகரிகமற்ற மனித மாமிசத்தைத் தின்னும் கூட்டம் இருக்கிறதே என்று எண்ணித் தலைகுனியும் ஒரு நிலையை ஏற்படுத்தியது.

கண்கள் கட்டப்பட்டும், கைகள் பின்னால் கட்டப்பட்டும் நிர்வாணமாக்கப்பட்டு தமிழினக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்கள் கொல்லப்பட்டது மட்டுமல்ல; அவர்கள் உடலை காமவெறி பிடித்த ஓநாய்கள் கடித்துக் குதறி, ரத்தக் காட்டில் மிதக்கச் செய்தன.

இப்பொழுது பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகளோ அதைவிடக் குரூரமானவை. தமிழர் பிணங்கள் குப்பைக் கூளங்களாக அலங்கோலமாகக் காணப்படுகின்றன.

மாவீரன் பிரபாகரனின் 12 வயது மகன் - போருக்குஎந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத அந்தச் சிறுவனை நெறிமுறைகளுக்கு சற்றும் பொருந்தாத வகையில் பக்கத்தில் இருந்து துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்துக் குதியாட்டம் போட்டுள்ளார்களே - இவற்றைப் பார்த்தாவது இந்தியாவுக்கு மனிதநேயம் கசியவில்லை என்றால் இந்தியாமீது கடுமை யான வெறுப்புதானே கொழுந்து விட்டு எரியும்?

இவ்வளவு கொடுங்கோன்மையை செய்த அந்த நாடு இந்தியாவின் நண்பன் என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சற்றும் கூசாமல் கூறுகிறார் என்றால் இதனைக் கேட்க சகிக்க முடியவில்லை.

ஹிட்லர் என் உயிருக்கு நிகரான நண்பர் என்று ஒருவர் சொன்னால், அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அந்த இடத்தில்தான் இப்பொழுது இந்தியா இருக்கிறது.

ஏன் இந்தியா இந்தப் பிரச்சினையில் கல் நெஞ்சமாக இருக்கிறது? உண்மைக்கு மாறாக நடந்து கொள்கிறது, நியாய விரோதம் என்று தெரிந்திருந்தும் இலங்கையை ஏன் சார்ந்து நிற்கிறது? என்பது நியாயமான கேள்வியாகும்.

இதற்கான பதிலும் எளிதே! ஈழத் தமிழர் களைக் கொன்று குவிப்பதற்கு இராணுவத் தளவாடங்களை, கருவிகளை, யுத்தக் கப்பலை பயிற்சிகளை அளித்ததே இந்தியாதானே?

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றால் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்தியா, எப்படி இலங்கையைக் கண்டிக்கும்?
இது இந்தியாவின் தொண்டைக்குள் சிக்கிய முள்போன்றது. ஆனாலும் அதற்கான காரண மும், பொறுப்பும் இந்தியாதானே?

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தைக் (Human Rights Council) கூட்டுமாறு 17 நாடுகள் கையொப்பமிட்டு விடுத்த வேண்டு கோளை ஏற்று அந்தக் கூட்டம் கூட்டப் பெற்றதே - அதன் நிலை என்ன?

இனப்படுகொலையைத் திட்டமிட்டுச் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அதிபரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானம் அல்லவா நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்குக் கைதூக்கி ஆதரவு தெரிவித்தது இந்தியா என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இப்பொழுது இந்தியா நடந்து கொள்ளும் போக்கு ஆச்சரியத்தைக் கொடுக்காது.

ஆனால் ஒன்று, இந்தியாவின் மரியாதை இம்மாத இறுதியில் ஜெனிவாவில் நடக்க உள்ள வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக நடந்து கொள்வதைப் பொறுத்தே இருக்கிறது.

இந்தியாவின் மரியாதை மிஞ்சுமா? மனித உரிமைகள் விடயத்தில் இந்தியா பிற்போக்குத் தனமானது என்ற பெயரை ஈட்டப் போகிறதா? எங்கே பார்ப்போம்!17-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாதாம் - ஆர்எஸ்எஸ் 'புதுக் கரடி'!

டெல்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் திடீர் எதிர்ப்பு காட்டியுள்ளது.

சுப்பிரமணியசாமி போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபிமானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக்களும் கருத்து கூறி வருகின்றனர்.

இலங்கைக்கும் ஈழத்தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது.

அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப சிதம்பரம் போன்றவர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தின் மூலம் ஒரு ஜனநாயக அரசை அடி பணியவைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என அந்த அமைப்பு 'புதுக்கரடி' விட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா, ஆதரிக்காதா என்பதை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுடன் நேரடியாக தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிடும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்ஸின் ஆர்கனைஸர் பத்திரிகை தலையங்கம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் நிழலில் செயல்படும் இயக்கத்தினர் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சிலர் கொண்டிருந்த மாயை நொறுங்கியுள்ளது.

மதவாத, ஆதிக்க சக்திகள் ஒருபோதும் சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்ததில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம் என்று தமிழுணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
----------http://tamil.oneindia.in/news/2012/03/18/india-india-should-not-support-us-on-lank-aid0136.html