கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்
ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்
அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்
நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்
உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே
மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்
எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி
சற்குருவை அறியாமல் உலகிலேதான்
சண்டாளர் கல்லுகளைத் தெய்வ மென்று
பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்
மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்
சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன்
- சிவவாக்கியர்
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் - சிவவாக்கியர்
வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
கோபுரம் தேர் திருவாசல்
கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
கொத்துவே லைகளுக்குப் பார்த்தால்,
சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக் காட்டு
சாயலு மோகலீ லைகளின்
சாத்திர மன் மதன் நூல்கொக்கு வத்தினிற்
சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
விம்பவா சனஞ்சிங் காரித்து ரதத்தின்மீது
சாமிகள் வைத்து யதனில்
தாசிவேசி களையேற்றி ராசதெரு வீதியில்
தட்சணம் புரியும் செயலால்
கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
கியானமோ அல்லதக் கியானமோ உங்கள்
கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்
உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்
ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்
பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
எண்ணி எண்ணி யென்னநின் றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்
அண்டர்கோன் இருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே - சிவவாக்கியர்
கல்லிலேயுஞ் செம்பிலேயும் என் கருத்தை வைத்துப் போற்றாமல்
சொல்லிறந்த பாழ் வெளியில் தூங்குவது மெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை
கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்
கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
- திருமூலர் திருவிருத்தம்
வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி,
வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி
பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்
---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950
1 comments:
nalla oru thokuppu!
vaazhthukkal!
Post a Comment