Search This Blog

9.3.12

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?



இந்நாள் உலக மகளிர் நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை - இந்து மத ஆதிக்கம் நிலை நின்ற இச்சமூகத்தில் பெண்கள் நான்கு வருணத்துக்குள்ளும்கூட கொண்டு வரத் தகுதியற்றவர்கள் என்பதுதான் உண்மை நிலை.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17).

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும் யௌனத் தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டிய தல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது.
(மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148).

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் இந்தியாவிலேயே பெண்ணுரிமைக்காகப் போர்க் குரல் கொடுத்தது தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கமாகும்.

யாரும் கனவு காணாத காலத்திலேயே, யாருடைய கோரிக்கையின் அடிப்படையிலும் அல்லாமல், தன் சிந்தனையின் ஆற்றலால், மனிதநேய உணர்வின் மேம்பாட்டால் இவற்றைவிட வேறு யாரும் சிந்திக்கவும் முடியாது - போராடவும் முடியாது என்கிற அளவுக்குப் புரட்சிகரமான உயர் எண்ணங்களை உரத்த முறையில் சொன்னவர் தந்தை பெரியாரின்றி வேறு யார்?

தன் தங்கையின் ஒன்பது வயது பெண்ணின் கணவர் மறைந்த நிலையில், வீட்டார் எதிர்ப்பையும் கடந்து ஊரார் தூற்றலையும் தூக்கி எறிந்து, மறுமணம் செய்து வைத்ததிலிருந்து அவரது புரட்சிகர சிந்தனையின் வித்து இம்மண்ணில் விழுந்தது.

பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள் என்னும் புயல் நிகர்த்த வினாவினை எழுப்பியவர்! பெண்களே கர்ப்பப்பையைத் தூக்கி எறியுங்கள் என்கிற அளவுக்குப் பூகம்பமாய் வெடித்த சிந்தனையின் கருப்பை பெரியார்.

அவர் நடத்திய மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைக்கேகூட அதிர்ச்சி அலைகளைப் பிரசவிக்கக் கூடியவை.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று. 24.11.1928இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போதுமே!

(1) மக்கள் பிறவியிலும் ஆண், பெண் என்கிற தன்மையிலும் உள்ள உயர்வு - தாழ்வு என்கிற வித் தியாசங்கள் கண்டிப்பாய் ஒடுக்கப்பட வேண்டும்.

(அ) குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(ஆ) புருஷன் மரணமடைந்து விட்டால், அவன் சொத்து முழுமையும் பெண் சாதிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(இ) பாகம் பிரிக்காத குடும்பங்களில் கணவன் இறந்து போனால் அக்கணவனுக்குள்ள சகல உரிமைகளும் சொத்துகளும், அவனது மனைவிக்கு சர்வ சுதந்திரமாக அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(ஈ) எல்லா பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண், பெண் என்கின்ற வித்தியாசமில்லாமலும் உயர்வு - தாழ்வு என்கின்ற வித்தியாசமில்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகு தீர்மானங்கள் 84 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றப்பட்டன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னொரு முக்கிய தகவல்:

இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்கியது நீதிக்கட்சி ஆட்சியில்தான் (1921). கோவில்களில் பெண்களைப் பொட்டுக்கட்டி விடும் தேவதாசி முறையை ஒழித்ததும் நீதிக்கட்சி ஆட்சியில்தான் (1930).
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியிலே யேயாகும் (1990).

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று வாயைத் திறப்பவர்களின் வாய்களை அடைப்பதற்கு இவை போதும் அல்லவா!

--------------------"விடுதலை” தலையங்கம் 8-3-2012

0 comments: