Search This Blog

25.3.12

தாலி ஒரு விளம்பரப் பலகை! - பெரியார்


சைவ - வைணவ சம்பாஷணை

வைணவதாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப் பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.


வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்கு போய்விடும் என்கிறீர்களே. மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மை கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லுவேன்.

------------------9.11.1930 குடி அரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதியது

கிண்டல் (தாலி மகத்துவம்)

ராமன்: தாலி என்றால் என்ன?

கிருஷ்ணன்: அது ஒரு விளம்பரப் பலகை!

ராமன்: அதை ஏன் பெண்கள் கழுத்தில் கட்ட வேண்டும்?

கிருஷ்ணன்: அட அப்பாவி! நாய் வளர்ப்பவர்கள் அதன் கழுத்தில் ஒரு பாஸ் கட்டுகிறார்கள் அது ஏன் தெரியுமா?

ராமன்: முனிசிபாலிட்டியார் அதனை பிடிக்காம லிருப்பதற்காக.

கிருஷ்ணன்: அதுபோலத்தான் தாலியும் பெண் களுக்கு உதவுகிறது. தாலி ஒரு விளம்பரப் பலகை. அது பறை சாற்றுவதென்னவென்றால் இந்துப் பெண்மாடு ஒருவனுக்கு விற்கப்பட்டு விட்டது. எனவே இம்மாட்டை வேறு ஒருவரும் விரும்பி விடாதீர்கள். எச்சரிக்கை!

------------------தந்தை பெரியார் -" பகுத்தறிவு"- 1936

4 comments:

தமிழ் ஓவியா said...

யாராம்?

செய்தி: தமிழ்நாட்டில் புரையோடிப் போன திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும்.
- மருத்துவர் ச. இராமதாசு

சிந்தனை: ஆமாம். சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து அந்த மேடை யில்தான் இப்படிப் பேசி இருக்கிறார்! சுய மரியாதைத் திருமணத்தைக் கொண்டு வந்தது - சட்டமியற்றியது யாராம்? ஹி... ஹி.... 26-3-2012

தமிழ் ஓவியா said...

இந்தியாவை உடைக்கும் நதி நீர்!


இந்தியாவில் நதி நீர்ச் சிக்கல் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகிறது. குறிப்பாக தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் காவிரி நீர்ச் சிக்கல் தமிழ்நாட்டை நாளும் பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறது.
நடுவர் மன்றம் சொன்னாலும் சரி, உச்சநீதிமன்றம் ஆணையிட்டாலும் சரி அதனைத் துச்சமாகத் தூக்கி எறியும் போக்கு சர்வசாதாரணமாகி விட்டது. இதன் மூலம் அரசமைப்புச் சட்டச் சீர்குலைவு ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது திராவிடர் கழகமே! (19.12.1980) 1990 மே 4 இல் வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது நடுவர் மன்றம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

17ஆண்டுகளுக்குப்பின் நடுவர் மன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது (2007 பிப்ரவரி 5) அத்தீர்ப்பு கூறியது என்ன? மொத்த காவிரி நீரின் அளவு 740 டி.எம்.சி. என்று கணக்கிடப்பட்டது. அதில் தமிழ் நாட்டுக்கு - 419, கருநாடகத்துக்கு - 270, கேரளா வுக்கு - 30, புதுச்சேரிக்கு - 07 சுற்றுச்சூழலுக்கு - 10 கடலில் கலக்கும் அளவு 0.4 ஆகக் கூடுதல் 740 டி.எம்.சி.,

நடுவர் மன்றம் இரண்டு முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் நியாயத்தை ஒப்புக் கொண்டது.

1892, 1924 ஆம் ஆண்டுகளில் அன்றைய சென்னை மாநில அரசு மைசூர் அரசுடன் போட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லும் என்பது முக்கிய தீர்ப்பாகும்.

இந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று கருநாடக அரசு சாதித்ததை நடுவர் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

(குடியரசுத் தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன்கூட ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று பொறுப்பு இல்லாமல் கூறியதற்காக தமிழ்நாடு வந்த அவருக்குத் திராவிடர் கழகம் சென்னையில் கறுப்புக் கொடி காட்டியது - தோழர்கள் கைது ஆயினர் என்பதையும் நினைவூட்டுகிறோம்) இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நடுவர் மன்றம் கூறியது. ஆண்டுக்குச் சராசரியாக 1970ஆம் ஆண்டு வரை 378 டி.எம்.சி.யை மேட்டூரில் பெற்று வந்த தமிழ்நாட்டுக்கு 6 ஆண்டு கால சராசரியை மட்டும் கணக்கில் கொண்டு 205 டி.எம்.சி. நீருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படிகூட இந்நாள் வரை கருநாடக அரசு நடந்து கொண்டதேயில்லை. நீதிமன்ற அவமதிப்பு நூறு வந்தாலும் அவற்றைச் சந்திக்கத் தயார் என்றார் கருநாடக மாநில சட்ட அமைச்சர் டி.பி. சந்திரகவுடா.

கருநாடக மாநிலத்தில் விவசாயப் பாசனப் பரப்பு 10 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் போகக் கூடாது என்றும் அறுதியிட்டுக் கூறியது நீதிமன்றம் அதனையும் கருநாடகம் பொருட்படுத்தவேயில்லை. 19 லட்சம் ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டதாக பதற்றமின்றிக் கூறியது கருநாடக அரசு,

அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நிலை என்ன?

28 லட்சம் ஏக்கர் நீர்ப்பாசனப்பகுதி 2000 ஆண்டில் பதினேழரை லட்சமாகக் குறுகிவிட்டது. இந்த நிலை நீடித்தால் 30 விழுக்காடு பாசனப் பரப்பு இருந்த இடம் தெரியாமற் போய்விடும் என்கின்றனர் வல்லுநர்கள்.

இப்பொழுது அடுத்த கட்டத்திற்குத் தாவியுள்ளது கருநாடகம். கோடை காலத்தில் கூடுதல் தண்ணீரை கருநாடகம் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்குப் போதிய அளவு தண்ணீர் விடாமல் தடுக்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதனை எதிர்த்துதான் தமிழ்நாடு அரசு இப்பொழுது உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. காவிரியின் குறுக்கே மேக தூது என்ற இடத்தில் 50 முதல் 60 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் அளவுக்குப் புதிய அணை ஒன்றையும் கட்டத் திட்டமிட்டுள்ளதாம். கேட்டால் பெங்களூரு மக்களின் குடிநீர்ப் பிரச் சினையைத் தீர்க்கவாம்.

சட்டத்துக்கு விரோதமாகவும், ஒப்பந்தத்துக்கு விரோதமாகவும் கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கபினி, ஹேமாவதி, சுவர்ணாவதி ஆகிய அணைகளைக் கட்டிக் கொள்ள நீதிமன்றமும் தடுக்கவில்லை - மத்திய அரசும் தடுக்கவில்லை.

நதிநீர்ப் பிரச்சினைதான் இந்தியாவை உடைக்கப் போகிறது. இந்தியத் தேசியவாதிகளும், சர்வதேச தேசியவாதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 26-3-2012

தமிழ் ஓவியா said...

மண விலக்கு, சொத்துரிமை, தாம்பத்தியம் ஆகியவைபற்றி மத்திய அரசின் புதிய சட்டம் வரவேற்கத்தக்கவை!


மகளிர் உரிமைப் பாட்டையில் புதிய மைல் கல்

மண விலக்கு, சொத்துரிமை, தாம்பத்தியம் ஆகியவைபற்றி மத்திய அரசின் புதிய சட்டம் வரவேற்கத்தக்கவை!

தந்தை பெரியார், அம்பேத்கர் உருவாக்கிய சுயமரியாதை உணர்வுக்கு வெற்றி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற் றப்பட்ட மகளிர் உரிமைக்கான சட்டத்தை வர வேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

நம் நாட்டுத் திருமண சட்டங்கள் - குறிப்பாக இந்து திருமண சட்டங்கள் திருமணத்தை ஒரு புனிதக்கட்டு - பிரிக்க முடியாத, பிரிக்கக்கூடாத பந்தம் - புனிதம் (Sacrament) என்று ஆக்கியதன் மூலம் பெண்கள் வெறும் ஜடங்களாக, பொருள்களாக, மிருகங்களைப் போல நடத்தப்பட்ட நிலையை மாற்றிவிட அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்து இந்து சட்டத் திருத்த மசோதா(Hindu Code Bill) என்ற அந்த அற்புத உரிமைச் சாசனத்தை நிறைவேற்றிட முயலுகையில், அன்றைய ஆட்சி பீடத்தின் வைதீகத் தலைமை இராஜேந்திரபிரசாத் போன்றவர்களும் பழைமை வாதிகளும் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள்.

தமிழ் ஓவியா said...

பிரதமர் நேருவால் சமாளிக்க முடியவில்லை; துவக்கத்தில் அம்பேத்கருக்கு அளித்த வாக்கு றுதியை அவரால் காப்பாற்ற இயலவில்லை; விளைவு அமைச்சர் பதவியிலிருந்து - கொள்கைக்காக - அண்ணல் அம்பேத்கர் விலகினார்.

கிடப்பில் போடப்பட்ட பெண்ணுரிமைகள்

சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, தத்து எடுத்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு சீர்திருத்த புரட்சிக் கருத்துக்கள், பெண்களுக்குப் பாலியல், சமூகநீதி வழங்கும் வாய்ப்புள்ளவை கிடப்பில் போடப்பட்டன.

பிறகு காலம் கனிந்தது; நம் இயக்கம் போன்றவை களால் ஏற்பட்ட புயல் வேக பிரச்சாரம், திராவிடர் இயக் கமாம் தி.மு.க. போன்றவை மத்தியில், மாநிலத்தில் ஆளுங் கட்சியானதன் விளைவு - சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்குச் சொத்துரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன் கொடுமை, பாலியல் கொடுமை, பெண்ணை மதிக்காமை - பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளல் எல்லாம் ஒழிக்கப்படும் வகையில் இன்று சட்ட பூர்வமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் புதிய சட்டங்களால் - புதிய திருத்தங்களால் பல்வேறு நல்ல திருப்பங்களைக் கண்டு வருகிறது.

1929இல் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்

ஆண்களையொத்த சொத்துரிமை பெண்களுக் கும் வேண்டும் என்று அய்யா தந்தை பெரியார் 1929 செங்கற்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானம் 2005-2006இல் மத்தியில் சட்டமாகி, நடைமுறைக்கு வந்துள்ளது. இணைந்து வாழ முடியாத பெண்கள், மண விலக்குப் பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், கால தாமதங்களைத் தவிர்த்து அவர்கள் உடனே விலகி, மன நிம்மதியுடன் வாழச் செய்யும் வகையில் அண்மையில் 2010 திருமணச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23.3.2012 அன்று ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

தந்தை பெரியார் அவர்கள் வெகு காலமாக சொல்லி வந்த ஒரு கருத்து, மற்ற மேலை நாடுகள் போல மணவிலக்கு - விவாகரத்து - எளிமையாக் கப்பட வேண்டும் என்பதாகும்.

வரவேற்கத்தக்க புதிய சட்டம்

1) சில கணவன்மார்கள் வழக்கை நீட்டி, இழுத்தடித்து - வேண்டுமென்றே - மீண்டும் வாழ விரும்புவதுபோல நாடகம் ஆடுவதை தற்போது உள்ள சட்டம் அனுமதிக்கும் நிலை - புதிய சட்டத் திருத்தம் மூலம் இனி முடியாது. காத்திருக்கும் காலம் என்பது ரத்து செய்யப்பட்டு - இரண்டு பேரும் இணைந்து தந்த மணவிலக்கு மனுவினை நீதிமன்றங்கள் ஏற்று - அனுமதி அளிக்க வழி செய்கிறது!

2) கணவன் சொத்தில் மனைவிக்கு மணவிலக்கு பெற்ற நிலையிலும் சொத்தில் உரிமை தர வேண்டும் என்பதும் முக்கிய திருப்பமாகும்.

படிப்பறிவில்லாத பல பெண்கள் - மனைவிமார் களுக்கு - இப்படி சொத்தில் உரிமை கோரலாம் என்பதே தெரியாத அறியாமை நிலைதான் நாட்டில் உள்ளது. அதற்கும் இந்தத் திருத்தம் விடியலை ஏற்படுத்துகிறது!

டில்லி உயர்நீதிமன்றம்கூட நேற்று முன்னாள் ஒரு தீர்ப்பில் பாலுறவு - தாம்பத்யம் வைத்துக் கொள்ள மறுப்பதையே ஒரு தகுந்த காரணமாக கொண்டு மணவிலக்குப் பெற வாய்ப்பு உண்டு என்று ஒரு புரட்சிகர தீர்ப்பைத் தந்துள்ளது!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் எழுப்பிய புயல்

பல மாதங்களாக தாம்பத்திய வாழ்வே நடத்தாது வெறும் அக்னிசாட்சியாக, சப்தபதி சடங்குகள் செய்து ஊருக்கு, உலகத்தாருக்கு கணவன், மனைவி என்று வாழ்ந்தால் எஜமானன் - அடிமை உறவு தானே? எங்கே தோழமை உள்ளது? அதனையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.

தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைகள், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சிகள் என்னும் சூறாவளி எங்கும் சுழன்றடிக்கிறது!

இது மேலும் நல்ல சமுதாய மாறுதலை உருவாக்கும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 26-3-2012