Search This Blog

13.3.12

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.விற்கு - கி.வீரமணி வேண்டுகோள்


கூட்டணியில் தி.மு.க.வின் உறவை
மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இனியும் காலம் கடத்தத் தேவையில்லை

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுவதால், அக்கூட்டணியில் தொடர்வதை தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதை அய்.நா. மன்றம் அமைத்த தனிக்குழு தந்த அறிக்கையின்மீது, ஜெனிவாவில் கூடும் மனித உரிமைக் குழு மன்றத்தின் முன், போர்க் குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை இராஜபக்சே அரசினைக் கண்டிக்கும் தீர்மானம் - அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்பதைத் தெளிவாகக் கூறிடும் நிலையில், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அதன் தலைவர் பல முறை வற்புறுத்தியுள்ளார்கள்.

அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் அதன் தலைவர் மூலம் வற்புறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் அத்துணைக் கட்சிகளும் ஏன் காங்கிரஸ் கட்சி உட்பட வற்புறுத்தி, தங்கள் உணர்வுகளைத் தெரிவித்து விட்டனர். தமிழக ஆளுங் கட்சி, முதல்வர், இடதுசாரி கட்சிகள் உட்பட பலரும் இதில் ஒரே குரலில் வற்புறுத்தி விட்டனர். இப்பிரச்சினையால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று நாடாளுமன்றத்தில் ஒருமித்த எதிர்க்கட்சிகளின் குரல்!

இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. இடதுசாரிகள், பா.ஜ.க., உட்பட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன!

இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உணர்ச்சி உச்சக் கட்டத்திற்குச் சென்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உரையில்கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்கும் வகையிலான உத்தரவாதம் இல்லை; ஒப்புக்காக இரண்டு வரிகள் என்கிற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைக் கிஞ்சிற்றும் மதிக்காத வஞ்சிக்கும் போக்காகவே கருதப்படும். தி.மு.க. மறுபரிசீலனை செய்யட்டும்!

இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை கலந்ததாக இருப்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது!

தமிழ்நாட்டையும் காங்கிரஸ் கட்சி கை கழுவி விடத் தயாராக விட்டது என்பதையே இது காட்டும். அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் அவர்கள் எவ்வளவோ வேண்டுகோள் மேல் வேண்டுகோள் கொடுத்த பிறகும் மேலும் பிடிவாதம் காட்டினால், தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடருவதுபற்றி தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

மத்திய ஆட்சி என்பது வெறும் காங்கிரஸ் ஆட்சி அல்ல; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டு, அவர்கள் நினைப்பதுதான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்று செயல்படுவது - கூட்டணி முறைக்கே விரோதமான போக்கு அல்லவா?

தி.மு.க.வுக்கு நமது அன்பான வேண்டுகோள்

தி.மு.க. இது பற்றி சிந்தித்து, இனிமேலும் அதில் தொடருவது விரும்பத்தக்கதல்ல என்பதால் நமது அன்பான வேண்டுகோள் - உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரின் உள்ள உணர்வுகள், நிலைப்பாடு இதுவேதான்.

மத்திய அரசு இதில் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தால் ஏற்கெனவே ஏற்பட்ட அபவாதம் என்ற பழியிலிருந்து தி.மு.க. மீளுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்பது நமது வேண்டுகோள் - தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும்.

--------------கி.வீரமணி , தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 13-3-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிராக தமிழக எம்.பி,.க்கள் ஒருமித்த குரலால் நாடாளுமன்றம் நிலைகுலைந்தது!


புதுடில்லி, மார்ச் 13- ஜெனீவாவில் நடைபெறும் அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்;பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் மக்களவை முடக்கப்பட்டது. இருப்பினும் மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டது.

மக்களவை இன்றுகாலை கூடியதும் தமிழக எம்;பிக்கள் இது தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

அய்க்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என்றார்.

ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த விளக்கத்தை தமிழக எம்பிக்கள் நிராகரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழக எம்பிக்களின் முழக்கங்களுக்கு மத்தியிலும் மக்களவை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இவ்விவகாரத்தை இன்று எழுப்பினார். அ தி.மு.க.வின் மைத்ரேயனும் தமிழக மக்களின் கருத்தை வெளிப்படுத்தி பேசியதுடன் அவையில் அமர்ந்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் அப்போதும் பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாகவே இருந்தார். திமுகவின் எம்பியான திருச்சி சிவாவும் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தினார். மன்மோகன்சிங் வாயைத் திறந்து, அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூற திமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துப் பார்த்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இதேபோல் பாரதிய ஜனதா கட்சி தலைவர் வெங்கய்யா நாயுடுவும், இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசு வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறி தமிழக எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர் பவன்குமார் பன்சால், ஜெனீவா தீர்மானத்தில் என்ன கூறபட்டுள்ளது என்று தெரியவில்லை. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதை நிராகரித்த தமிழக எம்பிக்கள், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி தொடர்ந்து குரல் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 13-2-2012

தமிழ் ஓவியா said...

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: கலைஞர்


சென்னை, மார்ச் 13- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பிரபாகரனின் மகன் சுடப்பட்டு கிடப்பதை இன்று தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருப்பதைப் பற்றி?.

பதில்:- இதுபோன்ற பல கொடுமைகள் நடந்துள்ளன. அதனால்தான் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினைக் குறித்து வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி:- இதற்காக பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா?.

பதில்:- பிரதமருக்குள்ள வேலைகளை எல்லாம் எண்ணிப் பார்த்துதான் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை பிரதமரிடம் அனுப்பி, பேச செய்தேன். அவரும் அவ்வாறே பேசியிருக்கிறார்.

கேள்வி:- நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையொட்டி - அகில இந்திய அளவில் மூன்றாவது அணி, நான்காவது அணி என்றெல்லாம் வரலாம் என்கிறார்களே?

பதில்:- அணி''கள் வருகிறதோ - அதனால் பிணி''கள் வருகிறதோ என்னால் இப்போது சொல்ல முடியாது.

கேள்வி:- நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஒருவரை லாரி ஏற்றி கொலை செய்திருக்கிறார்களே?

பதில்:- மண்'' கடத்தல் - பொன்'' கடத்தல் எல்லாமே இந்த ஆட்சியில் சுலபமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு கலைஞர் கூறினார்.13-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிராக தி.மு.க. எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் ஒலிமுழக்கம்


புதுடில்லி, மார்ச்.13-குடியரசுத் தலைவர் உரை ஆற்றியபோது, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட பிரச்சினை களை எழுப்பி எம்.பி.க் கள் ஒலி முழக்க மிட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க நாளான நேற்று இரு அவைகளும் அடங் கிய கூட்டுக் கூட்டத் தில் குடியரசுத் தலை வர் பிரதீபா பட்டீல் உரை ஆற்றினார். வரு கிற ஜூலை மாதம் அவர் ஓய்வு பெறுவ தால், இது அவரது கடைசி உரை ஆகும். சபையை நடத்துவதில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வ ஒத்து ழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலை வர் கேட்டுக் கொண் டார். இருப்பினும், அவரது உரையே 5 தடவை இடையூறு செய்யப்பட்டது. பல் வேறுகட்சி எம்.பி.க்கள் தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி முழக்க மிட்டதால், இந்த இடை யூறு ஏற்பட்டது.

குடியரசுத்தலைவர் தனது உரையை தொடங் கும்போதே, இலங்கை அரசுக்கு எதிரான அமெ ரிக்க தீர்மானத்தை இந் தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்கள் ஒலிமுழக்கமிட்டனர்.

குடியரசுத் தலைவர் தனது உரையை முடிக்கும் தருவாயில், அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் இதே கோரிக்கையை வலியு றுத்தினார். அப்போது அவரை இருக்கையில் அமருமாறு குடியரசுத் தலைவர் சைகை செய் தார். ஆளும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட, தெலுங் கானா தனி மாநில கோரிக் கையை வலியுறுத்தி, `ஜெய் தெலுங்கானா' என்று முழக்கமிட்டு குடி யரசுத் தலைவர் உரைக்கு இடையூறு செய்தனர். தேசிய தீவிரவாத தடுப்பு மய்யம் அமைப்பது பற்றி குடியரசுத் தலைவர் குறிப் பிட்டபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி குடிய சுரத் தலைவர் குறிப்பிட்ட போது, பா.ஜனதா எம்.பி. ஹுக்கும் நாராயண யாதவ் எதிர்ப்பு தெரிவித் தார். உர உற்பத்தியை அதிகரிப்பது பற்றி குடி யரசுத் தலைவர் குறிப் பிட்டபோது, விவசாயி கள் உரம் கிடைக்காமல் அவதிப்படுவதாக அய்க் கிய ஜனதாதள எம்.பி. ஜெகனாபாத் ஜெகதீஷ் சர்மா குற்றம் சாட்டினார்.

குடியரசுத் தலைவர் பிரதீபாபட்டீல், 70 நிமிட நேரம் உரைஆற்றினார். சமீபகாலங்களில் அவர் ஆற்றிய நீண்ட உரை இதுவே ஆகும். கடந்த ஆண்டு அவரது உரை 67 பத்திகளாக இருந்த நிலையில், நேற்றைய உரை 100 பத்திகள் கொண்டதாக இருந்தது. வழக்கமாக நின்றபடி உரை ஆற்றும் குடியரசுத் தலைவர், நேற்று இருக் கையில் அமர்ந்தபடி பேசினார்.

கூட்டம் தொடங்கு வதற்கு முன்பு, உத்தர பிரதேச முதல்-அமைச்ச ராக பதவி ஏற்க உள்ள அகிலேஷ் யாதவ் எம்.பி., நாடாளுமன்ற மய்ய மண்டபத்தை சுற்றி வந்து அனைவருடனும் கை குலுக்கினார். சபையினுள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்பு, கைகூப்பி தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவுக்கு வாழ்த்து தெரிவிக்க எம்.பி.க்கள் ஆர்வம் காட்டினர். ஒரு எம்.பி., அவரை செல்போனில் படம் எடுத்தார். சோனியா காந்தி, சமாஜ்வாடி தலை வர் முலாயம்சிங் இருக் கைக்கு சென்று, உ.பி. தேர்தல் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரி வித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சபைக்கு வராதது பலரது கவனத்தை ஈர்த்தது. குடியரசுத் தலைவர் உரை, எந்தவகையிலும் உறுப்பினர்களை கவர வில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்வ மின்றி காணப்பட்டனர். சில மூத்த உறுப்பினர்கள் குட்டித் தூக்கம் போட் டனர்.13-3-2012

தமிழ் ஓவியா said...

வீண்பழி சுமக்கவேண்டாம் இந்தியா!


இங்கிலாந்து நாட்டின் அலைவரிசை 4- 14.11.2011 அன்று ஒளிபரப்பிய தகவல்கள் உலக மக்களின் ரத்த ஓட்டத்தை உறையச் செய்தது. விடுதலைப் போராளி களின் உடைகள் களையப்பட்டு, கைகளும், கண்களும் கட்டப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை இப்பொழுது நினைத்தாலும் பார்த்தவர்களை நிலைகுலையச் செய்யும்!

இராணுவத்தின் கைகளில் சிக்கிய தமிழினத்துப் பெண்கள் எப்படியெல்லாம் குதறப்பட்டார்கள் என்பது அப்பப்பா, சொல்லுந்தரமன்று!

கொத்துக் கொத்தாகப் பச்சிளம் குழந்தைகள் சிதறிக் கிடந்த காட்சியைக் கண்டோர் கதறி அழும் நிலைதான்! அதே இங்கிலாந்தின் 4 ஆம் அலைவரிசை வரும் வியாழனன்று விடியற்காலை மேலும் சில குரூரக்காட்சி களை ஒளிபரப்ப உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அய்.நா.வின் மனித உரிமைக் குழுவிடம், இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் உட்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது - உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இலங்கை மட்டுமல்ல - அதன் மனித விரோத நடவடிக்கைகளுக்கு நடை பாவாடை விரிக்கும் நாடுகள் மத்தியிலும் பல அலைகளை எழுப்பிவிட்டன.

இதற்குப் பிறகும்கூட இந்திய அரசு நடந்துகொண்டு வரும் போக்கு - என்றென்றைக்கும் உலக நாடுகள் மத்தியில் கவுரவத்தை இழக்கும் நிலைக்குத்தான் இழுத்துச் செல்லும்.

இந்தியா எடுக்கும் முடிவால் இலங்கையில் அரசுக்கும், தமிழர்களுக்குமிடையே மோதல் போக்கை உருவாக்கி விடக்கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் இதுபோன்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதாம். அப்படியென்றால் எந்த ஒரு நாடும் சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்கலாம் - மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கலாம். இந்தியா அதனைக் கண்டுகொள்ளாதோ! அப்படியென்றால், அய்.நா. மன்றம் என்ற ஒரு அமைப்பு எதற்கு? பேன் குத்தவா?

தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு சென்றதே - நினைவில் இல்லையா?

கிழக்குப் பாகிஸ்தானுக்கும், மேற்குப் பாகிஸ்தானுக் கும் பிரச்சினை என்றால், இந்தியா ஏன் அதில் போய் மூக்கை நுழைக்க வேண்டும்?

தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் பேசினாரே நினைவிருக்கிறதா? கிழக்குப் பாகிஸ்தானுக்கு, முக்தி வாஹினிப் படையை அனுப்பி பங்களாதேசத்தை உருவாக்கியதுபோல இலங்கையிலும் நடக்கும் என்று எதிர்பார்த்தோம் என்று பேசினாரே. (25.8.2011).

ஆனால், இந்தியா ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நடந்துகொண்டு வருகிறது? ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நாடாளு மன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஷைலேந்திரகுமார் ஆகியோர் தாக்கீது கொடுத்திருந்தனர். அது மக்களவையில் 11.8.2011 அன்று விவாதிக்கப்படவும் இருந்தது. நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப் பட்டும் இருந்தது. அதன் நகல் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கவும் பட்டது. ஆனால், திடீரென்று அதில் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

என்ன திருத்தம்?

இலங்கைத் தமிழர்களை இராணுவம் கொன்றது குறித்து அய்.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் பாக விவாதிக்கப்படும் என்பதைத் தலைகீழாக மாற்றித் திருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிவாரணத் துக்கு இந்திய அரசு வழங்கிய நிவாரணம் குறித்து விவாதிப்பது என்று திருத்தப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்ட போது ஆளும் கட்சித் தரப்பில் தலைகுனிய நேரிட்டதே!

உறுப்பினர்கள் கொடுத்த தலைப்பை மாற்ற யாருக்கு அதிகாரம் உண்டு?

ஈழத் தமிழர் பிரச்சினை என்றால், இந்திய அரசின் நிலைப்பாடு இந்த வகையில்தான் நடந்துகொண்டு வருகிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள தி.மு.க., மாநிலத்தில் ஆளும் கட்சி-ஆட்சி, இடதுசாரிகள், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகள், திரா விடர் கழகம் போன்ற சமூக அமைப்புகள், இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. இப்படி இத்தனை அமைப்புகளும் ஒரு கருத்தைச் சொல்லும் போது, காங்கிரஸ் மட்டும் மனித விரோத செயலில் ஈடு படுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் மக்களாட்சியா?

வரும் மக்களவைத் தேர்தலில் இது அரசியலாக்கப் படும்பொழுது காங்கிரசின் நிலைமை என்ன?

எச்சரிக்கின்றோம்!

தஞ்சை மாநாட்டிலும் (11.3.2012) இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் நினைவூட்டுகிறோம்.14-3-2012

தமிழ் ஓவியா said...

உண்மையில் பார்வையற்றோர் யார்?


இந்தூர் (மத்தியப் பிரதேசம்) நகரில் பார்வை குறைந்த ஒரு பெண் பூர்ணிமா. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் சிறப்புத் தகுதி (டிஸ்டிங்சன்) பெற்றார்!

பூர்ணிமா ஜெயின் என்ற அந்த இளம்பெண் 75 விழுக்காடு கண் பார்வைப் பழுதடைந்த நிலையில் இந்த சாதனையைச் செய்துள்ளார்!

அவருக்கு இந்திய ரயில்வே சர் வீஸில் பணி ஆணை வழங்கப்பட்டதாம்; அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர், தனது மதிப்பெண் தகுதியைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, தனக்கு அய்.ஆர்.எஸ்.-க்குப் பதில் அய்.ஏ.எஸ். பணி தந்தாக வேண்டும் என்று பிடிவாதமான உறுதி காட்டிப் போராடினார்!

2008 இல் இவர் யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் 1123 (1200-க்கு) மதிப்பெண்கள் வாங்கியதால், தனக்கு அய்.ஏ.எஸ்., அல்லது அய்.எஃப்.எஸ். (வெளிநாட்டு சர்வீஸ்) கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்!

ஆனால், அவரது பார்வை 75 விழுக் காடு பாதிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாம்!
இவரைவிட குறைவான மதிப் பெண்கள் (991) பெற்ற ஒருவரைத் தேர்வு செய்தார்களாம்!

நேர்காணலில் மொத்தம் 300 மதிப்பெண்கள் என்றால், அதில் 210 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்!

முதல் ரேங்க் மாணவர் வாங்கிய மதிப்பெண்ணுக்கு இது சமம் என்ற நிலை!

இவர் செய்தி அறிந்தவுடன், தனக்கு அய்.ஏ.எஸ். தேர்வுப் பட்டியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றவுடன், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்!

யு.பி.எஸ்.சி.,யை எதிர்த்து வழக்கு - தேர்வு சம்பந்தமாக போட, அதிகார வரம்பு அவருக்கு இல்லை என்று காரணம் காட்டி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று யு.பி.எஸ்.சி. தரப்பு வாதாடியதாம்!

சென்ட்ரல் அட்மினிஸ்ட்ரேடிவ் டிரிபியூனல் (சி.ஏ.டி.) என்ற மத்திய தீர்ப்பாயம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறினர்!

அவரும் விடவில்லை; அங்கேயும் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு அங்கே சாதகமான ஆணை - தீர்ப்பு கிடைத்தது!

ஆனால், அரசோ இந்த ஆணையை ஊறுகாய் ஜாடியில் போட்டுவிட்டது!

அப்பெண்மணி விடவில்லை; மத்திய இணை அமைச்சர் திரு. வி. நாராயண சாமி அவர்களிடம் முறையிட்டு, நீதி கேட்டார் - அவரும் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்!

பிறகு அந்த பூர்ணிமா ஜெயின், பிரதமர் மன்மோகன்சிங் அவர் களுக்கே - திருமதி பிருந்தா காரத் எம்.பி.மூலம், இத்தகவலை கொண்டு சென்றார்!

பிறகு பிரதமர் நேரிடையாகத் தலையிட்டு, இவரது கோரிக்கையில் நியாயம் உள்ளது; இவர் ஒரு மாற்றுத் திறனாளி; அதோடு ஒரு பெண்மணி. எனவே, இவருக்கு உரிய பணி தரப்படுவது நியாயம் என்றார். பிறகு மத்திய பணித்துறை (அய்.ஆர்.பி.எஸ்.) என்பது கிடைத்தது!

எனக்கு எனது தகுதிப்படி மேலும் கிடைக்கவேண்டும் என்றார். இந்த வாய்ப்பை மறுத்த நிலையில், மீண்டும் அது கிட்டியதில் - போராட்டத்திற்குப் பின் - மகிழ்ச்சியளிக்கிறது என்றார்!

இப்பெண்ணின் விடாமுயற்சி, நம்பிக்கையுடன் போராடியது மிகவும் எடுத்துக்காட்டான நல்ல உதாரணம் அல்லவா?

ஆனால், ஒன்று- உண்மையில் சமூகப் பார்வை, நீதி நியாயப் பார்வை யற்றோர்தான் நாட்டில் அதிகம் உள்ள னரே! விழிகள்மூலம் பார்வை குறைந்த வர்களைவிட, மூளை வழியே, இதயம் வழியே பார்வையற்ற குரூரமான மனிதர் கள் அல்லவா அதிகம் இருக்கிறார்கள் - எங்கும்! என்னே கொடுமை! என்று மாறுமோ? 14-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?


மத்திய அரசின் நிலைபற்றி பிரணாப் முகர்ஜி விளக்கம்

புதுடில்லி, மார்ச்.14- இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பது குறித்து மத்திய அரசின் நிலை பற்றி நிதி அமைச்சர் பிர ணாப் முகர்ஜி விளக் கம் அளித்தார்.

அய்.நா. மனித உரி மைகள் குழு கூட் டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வற்புறுத்தி நாடாளு மன்றத்தின் இரு சபைகளிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று குரல் கொடுத்தனர். மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில விளக்கங்களை அளித் தார். அப்போது அவர் கூறியதாவது- எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் ஆதரிப்பது இல்லை என்பது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு ஆகும். இருப்பினும், அய்.நா. மனித உரிமைகள் குழு கூட்டத்தில் தீர் மானம் விவாதத்துக்கு வரும்போது இந்தியாவின் நிலை பற்றி முடிவு எடுக்கப் படும். அப்போது உறுப்பி னர்களின் உணர்வுகளை அரசு முழுமையாக கவ னத்தில் எடுத்துக் கொள் ளும்.

இந்த விவகாரத்தில் அரசின் கருத்தை விளக்கி, முதல்-அமைச்சர் ஜெயல லிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கலைஞருக்கும் மத்திய அரசு சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார். உறுப்பினர்கள் மேற் கொண்டு விவரங்களைப் பெற விரும்பினால் வெளி யுறவுத் துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய் யும்படி கேட்டுக் கொள் கிறேன்''.- இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப் பாடு குறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது-

அய்.நா. மனித உரி மைகள் குழுவில், இலங் கைக்கு எதிரான தீர் மானம் வருகிற 23ஆம் தேதி விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதில் பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியா தொடர்பு கொண்டு வரு கிறது.

23ஆம் தேதி தீர்மானம் விவாதத்துக்கு வந்ததும் இந்தியாவின் நிலை பற்றி முடிவு எடுக்க வேண்டும். ஏனென்றால் தீர்மானத் தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அத னால், இந்த பிரச்சி னையில் இப்போதே அவரசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது.

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர் மானத்தை ஆதரிப்பது இல்லை என்ற பொது வான நிலையின்படி, சமீபத்தில் சிரியாவுக்கு எதிரான தீர்மான வாக் கெடுப்பை இந்தியா புறக் கணித்தது குறிப்பிடத் தக்கது'' - இவ்வாறு அவர் கூறினார் 14-3-2012

தமிழ் ஓவியா said...

பிரபாகரன் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா?


கொழும்பு, மார்ச் 14- இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து சேனல்-4 செய்தி நிறுவனம் புதிய வீடியோ தொகுப்பை வெளி யிட உள்ள நிலையில், பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என் பது குறித்த ஆவணப் படத்தைத் தயாரிக்க துவங்கியுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. அதே நேரம் பிரபாகரன், இலங்கை ராணு வத்தால் சித்திரவதை செய்து கொல் லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அய்.நா., மனித உரிமைக் கவுன்சிலின் 19ஆவது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த ஏழாம் தேதி, இலங்கை குறித்த தீர்மானம் ஒன்றை அமெ ரிக்கா கொண்டு வந்தது. இதன் மீதான வாக்கெடுப்பு 23ஆம் தேதி நடக்கக் கூடும் என்ற நிலையில், இத்தீர்மானத்தை முறியடிக்க இலங்கை, அரசியல் ரீதியாக பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் இயங் கும் சேனல்-4 செய்தி நிறுவனம், இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை ஆதாரபூர்வமாக காட் டும் புதிய வீடியோ தொகுப்பை பிரிட்டன் நேரப்படி இன்று இரவு 10.55 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4. 25 மணி) வெளி யிடுகிறது. பாதுகாப்பு வளையத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றின் மீது இலங்கை ராணுவம் குண்டு களை வீசியது, அந்த வளையத்தில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக் கான மக்களுக்கு உணவு மற்றும் மருந்து வசதிகளைத் தர மறுத்து, மனிதாபிமான உதவிகளுக்கான சட்டபூர்வ கோரிக்கைகளை நிரா கரித்தது, மீட்பு நடவடிக்கையின் போது கொத்துக் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபா கரனின் இளைய மகன் பாலச்சந்தி ரன் உட்பட, பிடிபட்ட விடுதலைப் புலி வீரர்களை கொடூரமான முறை யில் திட்டமிட்டுக் கொன்றது ஆகிய நான்கு விஷயங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காட்சி கள் இடம் பெற்றுள்ளதாக சேனல்-4 செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தமிழ் ஓவியா said...

போர்க் குற்றங்கள் தொடர்பாக அதிகரித்து வரும் நெருக்கடியைச் சமாளிக்கவும், சேனல்-4 செய்தி நிறுவனத்தின் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பதிலளிக்கவும் இலங்கை தன்னை முழுவீச்சில் தயார்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரபாகரன் இறுதிப் போரின் போது எவ்வாறு கொல்லப்பட் டார் என்பது குறித்து இலங்கை ராணுவம் ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்து வருவதாக இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெய சூர்யா தெரிவித்துள்ளார். இதில், நந்திக் கடல் பகுதியில் நடந்த போரை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப் படம் தயாரிக்கப் படுவதாக அவர் கூறினார்.
சேனல்-4 செய்தி நிறுவனம் வெளியிட்ட முதல் வீடியோ தொகுப்பை போலி என மறுத்த இலங்கை அரசு, தான் நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் சேனல்-4 வீடியோ ஆகியவை சுட்டிக் காட்டிய ராணுவத்தின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க, ஒரு ராணுவ விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ராணுவ செய்தித் தொடர்பாளர் நிஹால் ஹப்புவாராச்சி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பிரபாகரனின் இளையமகன் பாலச் சந்திரன் கொல்லப்பட்டதைப் போன்றே பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு சித்திர வதைகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நேற்று பேட்டி யளித்த சேனல்-4ன் புதிய வீடியோ தொகுப்பின் இயக்குநர் கல்லம் மாக்ரே கூறியதாவது: பாலச்சந் திரன், அய்ந்து பாதுகாப்பு வீரர்களு டன் சரண் அடையும் படி அனுப் பப்பட்டார். அவரைப் பிடித்த ராணுவம், பிரபாகரன் எங்கிருக் கிறார் என அவரிடம் கேட்டுள்ளது. அவரது தகவலின்படி தான் பிர பாகரனை ராணுவம் பிடித்ததாக, ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் இருந்து நாங்கள் ஆதா ரபூர்வமான தகவல் பெற்றுள் ளோம். பாலச்சந்திரன் கண் முன்பே, அவரது அய்ந்து காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றால், அவர் சிக்கியிருந்த சூழலை நம்மால் ஓரளவு கற்பனை செய்து பார்க்க முடியும். எனினும் அவரது உடலில் சித்திரவதைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிரபாகரன் பற்றிய தகவலை பெற்ற பின்னர் பாலச்சந் திரனை கொன்றுள்ளனர். இவ் வாறு மாக்ரே தெரிவித்தார்.

இந்நிலையில் பிரபாகரனின் மரணம் குறித்து வேறு சில தகவல் களும் வெளியாகியுள்ளன. அவற் றின்படி, இறுதிக்கட்டத்தில், சில மேற்குலக நாடுகள், அய்.நா., மற்றும் இந்தியா ஆகியவற்றின் ஆலோச னைப்படி பிரபாகரனும், விடு தலைப் புலிகளின் மூத்த தலைவர் களும் குடும்பத்துடன் சரண் அடை யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபாகரனும் அதற்கு ஒப்புக் கொண்டு, அய்.நா., வின் மீட்பு வாகனம் ஒன்றிற்காக காத்திருக் கிறார். ஆனால் நடந்தது வேறு. அதற்குப்பின் பிரபாகரன் அவரது குடும்பத்தினருடன் இலங்கை ராணுவத்தின் பிடியில் சில நாட்கள் இருந்திருக்கிறார். அதன் பின் இறு தியாக நந்திக் கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு கொடூர மான முறையில் கொல்லப்பட்டு உள்ளார் என அத்தகவல்கள் தெரி விக்கின்றன. அவரது மரணத்திற்கு முன்பே அவரது மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் அத்தகவல்கள் கூறுகின் றன. எனினும் இவை எதுவும் இன் னும் உறுதி செய்யப்படவில்லை. பிரபாகரன் எவ்விதம் மரணம் அடைந்தார் என்பதற்கான விடை யும், சேனல்-4 செய்தி நிறுவனம் வெளியிடும் புதிய வீடியோ தொகுப்பில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பெரிய அளவில் நிலவுகிறது 14-3-2012

தமிழ் ஓவியா said...

இந்திய அரசு முடிவை அறிவிக்காதது வருத்தமளிக்கிறது கனிமொழி எம்.பி., தந்த திருத்த தாக்கீது

புதுடில்லி, மார்ச் 14- குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்திற்கு கனி மொழி எம்.பி. கொடுத்து இருக்கும் திருத்த தாக்கீ தில் கூறியிருப்பதாவது:-

நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் இறுதியில் கீழ்க்கண்டவைகள் சேர்க் கப்பட வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிராக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது இந்திய அரசின் நிலைப்பாடு இந்த உரையில் குறிப்பிடப்படாதது வருத்தத்தை அளிக்கிறது.

இந்திய-இலங்கை கடல் பகுதியில் தமிழக மீன வர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில் தமிழக மீனவர்கள் படும் துயரத்தை இந்த உரை பிரதிபலிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. - இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 14-3-2012

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்- இந்தியாவின் நிலை குறித்து எதுவுமே சொல்லாத எஸ்.எம்.கிருஷ்ணா!

டெல்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசபாவை உலுக்கியது. இன்று காலை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். இதையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிற்பகல், லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையைப் படித்தார்.

அவரது அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகளை நீளமாக பட்டியலிட்டுப் பேசிய கிருஷ்ணா, தனது அறிக்கையின் இறுதியில், நாம் எந்த முடிவாக இருந்தாலும் அது இலங்கையுடனான நமது நாட்டின் வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறினார். தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவர் நேரடியாக பதில் தரவில்லை.

கிருஷ்ணாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர்களின் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்.

ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகி விடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாது என்றார் கிருஷ்ணா.

இது போக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்வோருக்கு சைக்கிள் கொடுத்தது, வீடு கட்டிக் கொடுத்தது ஆகியவை குறித்து புள்ளி விவரத்துடன் நீண்ட பட்டியலையும் கிருஷ்ணா வாசித்தார். அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, ஆதரிக்குமா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
------http://tamil.oneindia.in/news/2012/03/14/india-centre-spell-its-stand-on-us-backed-resolution-aid0091.html