Search This Blog

21.3.12

திராவிடர் இயக்கம் என்ன செய்தது?பார்ப்பனர்களின் வாடகை ஒலி பெருக்கிகளுக்கு தெரியுமா?


திராவிடர் இயக்கம் என்ன செய்தது? நா கூசாமல், அறிவு நாணயம் இல்லாமல், நன்றி உணர்வையும் தூக்கி எறிந்து சிலர் புறப்பட்டுள்ளனர்; இவர்களின் குரல் பார்ப்பனர்களின் வாடகை ஒலி பெருக்கி!

சென்னையில் உணவு விடுதிகளில் என்ன எழுதப்பட்டு இருந்தது தெரியுமா?

பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்க்காரர் களும் நுழையக்கூடாது (குடிஅரசு, 3.5.1936) என்று எழுதப்பட்டு இருந்தது!

இந்த நிலை நீக்கப் பட்டதற்கு யார் காரணம்? எந்த இயக்கம் காரணம்? எந்தத் தலைவர்கள் மூல கர்த்தாக்கள்?

இரயில்வே நிலையங்களில்தான் என்ன நிலை? பிராமணாள், சூத்திராள் என்று இடம் பிரித்து அறிவிப்புப் பலகை தொங்க வில்லையா?

இது ஒழிக்கப்பட்ட வரலாறு என்ன?

1924 இல் கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதிகளில் பார்ப்பனர் - பார்ப்ப னர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் கமிட்டியிலே தீர்மானம் கொண்டு வந்தபோது காளிதாச அய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால், 16 ஆண்டுகளுக் குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் செய்த முயற்சியிலே ஈடுபட்டு வெற்றியும் கண்டார். 27.1.1941 விடுதலையில் இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார் களா...? என்ற தலையங்கத்திலே பிராமணாள் - சூத்திரர் பேத நிலையைக் கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார்.

தந்தை பெரியார் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப் பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அது இரயில்வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல், எம்.எஸ்.எம். உணவு விடுதி என்ற அளவிலே இருந்தது. ஆனால், தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே நிலையங்களிலும் இது அமல்படுத் தப்பட்டது.

30.3.1941 ஆம் நாள் இரயில்வேயில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண் டாடுமாறு விடுதலையில் அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார். தந்தை பெரியாரும், அண்ணாவும் சேலத்தில் கலந்துகொண் டனர்.

இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நாவை நாசகரமாகச் சுழற்ற வேண்டாம்!

---------------- மயிலாடன் அவர்கள் 21-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

10 comments:

தமிழ் ஓவியா said...

கழகப் போராட்டத்திற்கு வெற்றி! சோதிடப் பாடத் திட்டத்தை மதுரை காமராசர் பல்கலை. கைவிட்டது!


மதுரை, மார்ச் 21- சோதிட பாடத்தை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் இப்போது கைவிட்டுவிட்டது. திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கள் தெரிவித்த கண்டனம், மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக இந்த முடிவுக்கு பல்கலைக்கழகம் வர வேண்டியதாயிற்று.

கடந்த டிசம்பர் மாதத்தில், சோதிடப் பாடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புக் தொடங்குவதற்கு பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் இசைவு அளித் ததை அடுத்து, பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் இப் பாடத்தை அறிமுகப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது. சோதி டத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்து வதற்கு அகாடமிக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஒத்தி வைப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்த எஸ்.கிருஷ்ண சாமி, ஒரு பல்கலைக்கழகம் என்பது காரண காரியங்களையும், பகுத்தறி வையும் கற்பிக்கும் ஓரிடம் என்பதால், சோதிடப் பாடங்களைத் தொடங்கக் கூடாது என்று கூறினார்.

பகுத்தறிவுக்கு விரோதமான மூடநம்பிக்கைகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது. சோதிடப் பாடத்தை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்த சிண்டிகேட் இத்திட்டத்தை அகாடமிக் கவுன்சில் மற்றும் செனட்டின் முன் ஒப்புதலுக்காக வைத்ததை அறிந்து அதிர்ச்சியை அளித்தது என்று அவர் கூறினார்.

என்.பெரியதம்பி, அய். இஸ்மாயில் போன்ற மற்ற உறுப்பினர்களும் இந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததுடன், சென்னை யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்ட முடிவின் அடிப் படையில், ஒரு புழக்கடை வழியில் சோதிட பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக் கழகம் முயற்சிப்பதைக் கண்டித்தனர்.

அகாடமிக் கவுன்சில் மற்றும் செனட் உறுப்பினர் களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சோதிடப் பாடம் அறிமுகப்படுத்தும் திட்டத்தை பல்கலைக் கழகம் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மற் றொரு உறுப்பினர் எம்.பி.ஆர்.ராஜசேகரன் கூறினார்.

அறிவியலுக்கு விரோதமாக மூட நம்பிக்கை அடிப்படையில் ஒரு பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைப்பது சரியில்லை; உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மதுரையில் 20.1.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 21-3-2012

தமிழ் ஓவியா said...

புள்ளிகள் பேசுகின்றன...


2011 ஆம் ஆண்டின் கணக்குப்படி 1000 ஆண் களுக்கு 995 பெண்களே தமிழ்நாட்டில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மகளிர் குழுக்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கடனாகத் தரப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வீடு இல்லாதோர் எண்ணிக்கை 2011 இல் 14 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கோவையில் ஒரு நாள் மின் விடுமுறை விடுவதால், நாள் ஒன்றுக்கு சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கு ஏற்படும் இழப்பு ரூ.300 கோடி!ட இந்தியாவில் தொடக்கக் கல்விக்காகச் செல வழிக்கப்படும் தொகை வெறும் 6 விழுக்காடே!
2020 ஆம் ஆண்டில் இறப்புக்குக் காரணங்களில் அய்ந்தில் ஒன்றாக மனநோய் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது.

டியூப் லைட் 6000 மணிநேரம் எரியும்.

கேரளாவில் பாயும் நதிகளில் இருந்து 20 விழுக்காடு தண்ணீர்தான் பயன்படுத்தப்படுகிறது - மீதி 80 விழுக்காடு தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

நதிகளை இணைப்பதால் இடைப்பட்ட இடங்களில் கட்டப்படும் அணைகளால் 2720 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

1999 ஆம் ஆண்டுவரை ஆசிரியர்- மாணவர் விகிதம் 20 குழந்தைகளுக்கு ஓர்ஆசிரியர் என்று இருந்தது; பின்னர் 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்று மாறிவிட்டது; வளர்ந்த நாடுகளில் 10 அல்லது 15 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதம் உள்ளது.

2008 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் காணாமற்போன குழந்தைகளின் எண்ணிக்கை 1.7 லட்சம்.
21-3-2012

தமிழ் ஓவியா said...

புறப்படுகிறது கருஞ்சட்டைப் பிரச்சாரப் படை


- மின்சாரம் -

தஞ்சாவூர் மாநாட்டில் தமிழர் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். (11.3.2012)
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகள் காப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் ஒன்றை அறிவித்தார்.

எந்தெந்த வகைகளில் எல்லாம் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்ற தலைப்பில் தஞ்சை மாநாட்டில் சிறப்புமிகுந்த கருத்தரங்கமும் நடைபெற்றது.

(1) ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பாதிப்பு

(2) காவிரி நதி நீர்ப்பிரச்சினை

(3) முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுப் பிரச்சினை

(4) சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடக்கம்.

(5) அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழிலும் எழுதக் கூடிய உரிமை.

இவற்றை முன்னிறுத்தி நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் தக்க புள்ளி விவரங்களை, துள்ளும் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
இவற்றையும் தாண்டி பாலாற்றுக்குக் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் போக்கு.

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு மக்களின் வயிற்றிலடிக்கும் கொடுங்கோன்மை போதாது என்று இப்பொழுது, தென்பெண்ணை ஆற்று நீரையும் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கவிடாமல் திசை திருப்பும் திட்டத்திற்கு 36 கோடி ரூபாய் திட்டம் ஒன்றைத் தீட்டிடத் தினவெடுத்து நிற்கிறது கருநாடகம்.

கிருட்டிணகிரி மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் மா, புளி, மலர், கனிகள், காய்கறிகள் விளைச்சல் தென் பெண்ணை ஆற்றை நம்பியே இருக்கிறது.

400 கிலோ மீட்டர் தூரம் கிருட்டிணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியே பயணம் செய்து கடலூரில் கலக்கிறது! வழி நெடுக விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கிறது. ஒகேனக்கல் பிரச்சினையில் தவித்த வாய்க்குத் தண்ணீர் என்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒட்டாரம் செய்து வரும் கருநாடக மாநிலம், ஒவ்வொன்றிலும் தமிழ் நாட்டை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே ஊட்டி பிலிம் தொழிற்சாலை அடிக்கடி செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் திராவிடர் கழகம் போர்க்குரல் கொடுத்துக் கொடுத்து, உயிர்த் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முனையும்பொழுது எல்லாம் திராவிடர் கழகம்தான் களம் கண்டு தடுத்து வருகிறது.

இவற்றை எல்லாம் முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத் திட்டம்தான் - திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணம் ஆகும்.

23-3-2012 அன்று கன்னியாகுமரியிலிருந்து மானமிகு இரா. பெரியார் செல்வன் தலைமையிலும், 24-3-2012 அன்று ஊட்டியிலிருந்து மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமையிலும்,

29-3-2012 அன்று திருத்தணியிலிருந்து மானமிகு முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமையிலும்,
4-4-2012 அன்று இராமேசுவரத்திலிருந்து மானமிகு இராம. அன்பழகன் தலைமையிலும்,
5-4-2012 அன்று சேலத்திலிருந்து மானமிகு முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையிலும்,

நடைபெறவுள்ள பிரச்சாரப் பயணத்தையும், முடித்து வைத்து மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்

29-3-2012 அன்று மதுரையிலும்,30-3-2012 அன்று கரூரிலும்,4-4-2012 அன்று திருச்சியிலும்,10-4-2012 அன்று கடலூரிலும்,11-4-2012 அன்று தாம்பரத்திலும் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

இதற்கு முன்பும் கூட, தமிழ்நாடு மக்களின் உரிமைகளை முன்னிறுத்திக் கழகம் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதன் பயன்களையும் தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர்.

மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்! எனும் தலைப்பிலும் தமிழ்நாட்டின் அகல நீளப் பரப்புகளை கடந்து வந்துள்ளது கழகப் படை.

ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும் தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்திக் காட்டியுள்ளது.

கடிகாரத்தின் தண்டு போல - இரு பக்கமும் அசைந்து காலத்தைக் காட்டுவது போல -

பிரச்சாரம் - போராட்டம் எனும் இரு அசைவுகளில் தமிழர்களின் வாழ்க்கை வளத்தை உயர்த்தி உரிமைக் கொடியைத் தூக்கிப் பிடித்துவரும் கழகத்தின் கைம்மாறு கருதாப் பணிக்கு கட்சிகளைக் கடந்து தமிழர்களே ஆதரவு தாரீர்!

கழகப் பொறுப்பாளர்கள், திட்டமிட்டுப் பிரச்சாரப் பணிகளை வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பீர்!

நல்ல அளவுக்கு விளம்பரங்கள் செய்து பெரு வாரியான மக்கள் நம் பிரச்சாரத்தை செவிமடுக்க உரியதைச் செய்வீர்!

இளைஞர்களின் காதுகளில் நமது கருத்துக்கள் போய்ச் சேரட்டும்!

மாணவர்கள் மத்தியில் கரை புரளட்டும்.

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

தேவைப்பட்டால் விலையும் கொடுப்போம்!!

இறுதி வெற்றிச் சிரிப்பு நமதே!

வெல்லட்டும் பிரச்சாரப் பயணத்தின் நோக்கு!

வாழ்க பெரியார்! 21-3-2012

Seeni said...

nalla pakirvu!

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரைப் பாராட்டி தினத்தந்தி தலையங்கம் பணியிடங்களில் பாலியல் கொடுமை

தந்தை பெரியாரைப் பற்றி இந்த சமுதாயம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அவர் சொன்ன கடவுள் மறுப்பு கருத்துக்களும், உயர்சாதி வகுப்பினரின் ஆதிக்கத்தை எதிர்த்து கூறிய கருத்துக்களை மட்டுமே சமு தாயம் பார்க்கிறது. கடவுளை மற என்று பெரியார் சொன்ன வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் இந்த சமுதாயம், அடுத்த வார்த்தையான மனிதனை நினை என்பதை விட்டுவிடுகிறது. 1942ஆம் ஆண்டிலேயே பெண் ஏன் அடிமையானாள்? என்ற ஒரு நூலை வெளி யிட்டு, அதில், பெண்களுக்கு சொத்துரிமை உட்பட பல சம உரிமைகள் பற்றி விளக்கியுள்ளார். இந்தக் கருத்துக்கள் எல்லாம், எந்த மதத்துக்கும், எல்லா தேச மக்களுக்கும், எந்த சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்று, அந்தக்காலமே, அவர் சொன்ன தெளிவுரைகளை சமுதாயம் இன்னும் முழுமை யாக அறிந்து கொள்ளவில்லை என்பதே வேதனைக்குரியது என்கிறார் பகுத்தாறிவாளர் காட்டூர் இடையர்காட்டான். பெரியார், அன்று கண்ட கனவு இன்னும் சமுதாயத்தில் சரி யாக புரிந்து கொள்ளாமல், உணர்ந்து கொள்ளாமல், பின் பற்றப்படாமல் இருப்பதால்தான், பெண்கள் பணிபுரியும் இடங்களில் இன்னமும் பாலியல் கொடுமைகளை அனு பவிக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கே.சந்துரு இதுதொடர்பான ஒரு புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளார். தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை, ஆங்கிலத்தில், பிட்ச்(பெட்டைநாய்) என்று கூறுவதே பாலியல் கொடுமை என்று கூறி இருக்கிறார். சென்னை யில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட வழக்கு இது. அங்குள்ள ஒரு ஆசிரியர் மீது தொடரப்பட்ட புகார்கள் தொடர்பாக பள்ளிக்கூடத்தில் ஒரு விசேஷ கமிட்டி அமைக்கப்பட்டது. 3 பேர் கொண்ட இந்த கமிட்டி, அந்த ஆசிரியரால் எந்த கொடுமையும் இழைக்கப்படவில்லை என்று மற்ற ஆசிரியர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது. ஆனால், அவர் பிட்ச் என்று கூறியது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து, அந்தக் கமிட்டி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனக் குரல் எழுப்பிய நீதிபதி கே.சந்துரு. இந்தப் புகார்களை கூறிய ஆசிரி யர்களின் வாக்குமூலத்தை ஆழ்ந்து ஆய்ந்தால், நிச்சயமாக இது பாலியல் கொடுமை என்பதன் கீழ்தான் வருகிறது. எனவே, இந்தப் பள்ளிக் கூட நிர்வாகம் ஒரு புதுக்குழுவை நியமிக்க வேண்டும். அந்த குழு விஷாகா வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார். எல்லோருமே பேசும் இந்த விஷாகா வழக்கு, 1992 ஆம்ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 5 பேர் கொண்ட ஒரு கோஷ்டி, ஒரு பெண்ணை கற்பழித்தது தொடர்பான வழக்கு. 1997 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, நீதிபதிகள் சுஜாதா, டி.மனோகர், பி.என். கிர்பால் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினர்.

அந்த தீர்ப்பில் பணிபுரியும் இடங்களில்-பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்காக, அதன்மீது புகார் சொல்வதற்காக, நடவடிக்கை எடுப்ப தற்காக, சில வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. ஆனால், எந்த இடத்திலும் இந்த வழிமுறைகள் இன்னமும் பின்பற்றப்படாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். மத்திய அரசாங்கமும், அனைத்து மாநில அரசுகளும், இந்த விஷாகா வழக்கு தீர்ப்பில் என் னென்ன? வழிமுறைகள் வழங்கப்படடுள்ளனவோ அதை யெல்லாம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றும் பெண் ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகளில், இந்த வழிமுறைகள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுகிறதா? என்றும் பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பாலியல் கொடுமை பற்றி ஒரு பெண் ஊழியர் புகார் செய்தால், அதை விசாரிப்பதற்கு ஒரு பெண் தலைமையில்தான் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்களில் பாதிக்குமேல் பெண்களாகத்தான் இருக்க வேண்டும். மேல்மட்டங்களில் இருந்து நிர்பந் தங்கள் வராமல் இருக்க, அந்த கமிட்டியில், வெளியே இருந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரையோ, அல்லது இதுபோன்ற விஷயங்களை நன்கு தெரிந்தவர் களையோ நியமிக்க வேண்டும் என்று இருக்கிறது. இப்படி அந்த தெளிவான தீர்ப்பை, எல்லா இடங்களிலும் அமல்படுத்தி பெண்மைக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண் ஊழியர்கள்.

(நன்றி, தினத்தந்தி 23.3.2012

தமிழ் ஓவியா said...

மதவெறியாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன


25 நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாத்திகக் கருத்துகளுக்கு புத்துயிர் ஊட்டியவர் பெரியார்!
- இந்து ஏட்டில் வெளிவந்த கட்டுரை

- மதன்ஜீத்சிங்

(மத மூடநம்பிக்கையாளர் களும், மதவெறியர்களும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் மதச்சார்பற்ற தன்மை யையும், கடவுள் உள்ளாரா? என்பதைப் பற்றிய கருத்தற்ற இந்திய தத்துவ பாரம்பரியத் தையும் கேலிக் கூத்தாக ஆக்கி வருகின்றனர்.)

எனது காலாச்சாரங்களும் கழுகுகளும் என்ற நூலைப் படித்த பிரஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் எப்படி எனது நாத்திகக் கோட்பாட்டு நம்பிக்கையும், சீக்கிய மதமும் ஆன்மீக இந்தியாவுடன் இணைந்து வாழ முடிகிறது என்று வியப்புடன் கேட்டார்.

எனது நாத்திகக் கோட்பாடு, முதன்முதலான இந்து தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சீக்கிய மதத் துடன் தொடர்பற்றது அல்ல. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் வாரந்தோறும் ஆற்றிய கீதைப் பேருரைகளைப் பற்றி நான் குறிப்பிட்டேன். வேதாந்தா என்று அழைக்கப்படும் உத்திர மிமான்சா நீங்கலாக, மற்ற பெரும்பான்மையான இந்து தத்துவ நடைமுறைகள் அனைத் தும் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அத்தத்துவ இயலாளரிடமிருந்து கேட்டறிந்த மாணவர்கள் திகைப்படைந்தனர். நியாயா, வைசேஷிகா, சாம்க்யா, யோகா, பூர்வ மிமான்சா, அதற்கு முந்தைய பிரஹஸ்பதியின் சார்வாகா, மகாவீரரின் ஜைனமதம், தெரவாடா புத்தமதம் ஆகிய அனைத்துமே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உறுதியான கருத்து கொண்டவை அல்ல என்று அவர் கூறினார். புத்தர் என்னும் கவுதம சித்தார்த்தர் (கி.மு. 563-483) தான் அறிவொளி பெற்றதற்கு அடையாளமாக பூமியைத் தொட்டு வணங்கினார்.

தமிழ் ஓவியா said...

அய்க்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமைப்பின் (UNESCO), மனித இனத்தின் வரலாறு என்ற நூலை மாற்றி எழுதவேண்டும் என்று ஒரு கூட்டத்தில் ரொமிலா தாபர் வலியுறுத்தினார். ஆன்மிக இந்தியாவில் முதன் முதலாக நாத்திகப் பருப்பொருள் வாதத்தை முன்னெடுத்து வைத்தவர்கள் சார்வாகர்கள் தான் என்று இந்த புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் கூறினார். விதி, ஆன்மா, மறுபிறப்பு என்ற அறிவுக்குப் புறம் பானவை அனைத்தையும் மடமையென அவர்கள் நிரா கரித்தனர். மனிதர்கள் புழுதி யிலிருந்து புழுதியாக, சாம் பலிலிருந்து சாம்பலாக, மண்ணிலிருந்து மண்ணாகப் போகிறார்கள் என்றும், இந்த உலகத்தைத் தவிர வேறு எந்த ஒரு உலகமும் இல்லை என்றும், புத்தரின் சமகாலத் தவரான அஜிதா கேஷகாம் பலின் என்பவர் பறைசாற் றினார். வேதநூலாசிரியர்களை அவர், கோமாளிகள், நேர்மையற்றவர்கள், தீயசக்திகள் என்றே அழைத்தார்.

25 நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாத்திகக் கருத்துகளுக்கு புத்துயிர் அளித்த பெரியார்

தமிழ் ஓவியா said...

25 நூற்றாண்டுகள் கழிந்த பிறகு, நமது காலத்தில், நாத்திகரும், வேதங் களைப் பற்றி கடுமையாகக் கண்டிப்ப வருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களால் கேஷகாம்பலின் கருத்துகள் எவ்வாறு புத்துணர்வு பெற்று பரப்பப் பட்டது என்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இந்து கடவுள்கள் கடவுளச் சிகளை நையாண்டி செய்யும் தெரு ஊர்வலங்களில் ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பங்கேற்கச் செய்து அவர் வழிநடத்திச் சென்றார். முன்னர் எவருக்குமே அளிக்கப்பட்டிராத ஒரு சிறப்பான விருதினை அய்க்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமைப்பு அவருக்கு அளித்து சிறப்பித்தது:

புது யுகத்தின் தொலைநோக்காளர்,

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை,

அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற பழக்க வழக்கங்கள், இழி பண்புகளுக்கு எதிரான கடும் பகைவர்.

பெரியார் இருந்த வரை மதத்தைப் பற்றி மக்களால் விமர்சித்துப் பேசமுடிந்தது

1973 இல் அவர் மறையும் வரை, இந்தியாவில் இருந்த மக்களால் தங்கள் மனதில் தோன்றியவற்றை சுதந்திரமாப் பேச முடிந்தது. மனுஸ்மிருதியை தாழ்த் தப்பட்ட மக்கள் வெளிப்படையாகக் கண்டனம் செய்தனர்; அதற்காக அவர்கள் மீது தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படவில்லை. சீதை கடத்திச் செல்லப்பட வில்லை என்றும், அழகு நிறைந்த இலங்கை அரசனுடன் ஓடி விட்டாள் என்றும் கூறும் ஆபரி மேனனின் ராமாயண நாட கத்தைப் பார்த்த மக்களால் ரசித்து சிரிக்க முடிந்தது. மன்னார் வளைகுடாவில் ராமர் சேது பாலத்தை குரங்குகள் கட்டின என்ற கதையை நாத்திகரான தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி எள்ளி நகையாடினார். யார் அந்த ராமன்? எந்த பொறியியல் கல் லூரியில் அவன் படித்தான்? என்று அவர் கேட்டார்.
ஓவியர் உசேன் மீதான இந்து மத வெறியர்களின் தாக்குதல்

தமிழ் ஓவியா said...

பாரம்பரியமாக இந்து மதத்தில் இருந்து வந்த, நாத்திகத்தில் தொடங்கிய, கடவுள் இருக்கிறார் என்பது பற்றிய கருத்தே அற்ற தத்துவ நடைமுறைகளை இந்துத்வ அரசியல் செயல் திட்டம் நிராகரித்தது. வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்ட அவர்கள், பாரம்பரியமாக கோயில்களில் நிர்வாண சிலைகளாக வடிக்கப் பட்டிருக்கும் இந்து கடவுளச்சிகளை ஆபாசமாக ஓவியம் தீட்டினார் என்று எனது நண்பர் என்.எஃப். உசேன் மீது குற்றம் சாட்டினர். அந்த மாபெரும் ஓவியக் கலைஞரின் தலையை வெட்டிக் கொண்டு வருப வருக்கு ரூ 51 லட்சம் பரிசளிக்கப்படும் என்று தனிப்பட்ட இந்து சட்டக் குழு அறிவித்தது. மும்பையில் இருந்த அவரது வீட்டை பஜ்ரங் தளம் மற்றும் விசுவ இந்து பரிசத் தொண்டர்கள் தாக்கி சேதப்படுத்தினர். மத, கடவுள்நம்பிக்கை அற்றவர்களைக் கொன்று அவர்களின் தலைகளையும் விரல்களையும் வெட் டுங்கள் என்று குரான் பாடல்களில் முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டது போல, ஹூசைனை குருடாக்குபவர், அல்லது கைகளை வெட்டுபவருக்கு பணமும், தங்கக் கட்டிகளும் தருவதாக அவர்கள் அறிவித்தனர். ஹஜ் புனித யாத்திரையின் போது, மத, கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மீது கல்லெறிந்து தாக்குவது என்பது போன்ற செயலை (கீதா ஹரிஹரன் சூட்டிய பஃண்டூஸ் என்ற புனைப்பெயர் கொண்ட பழக்கத்தை) இந்துத்துவவாதிகளும் கடைபிடிக்கத் துவங்கி விட்டனர். முகமது நபி அவர்களை விவரிக்கும் ஒரு இஸ்லாமிய பாடலில் வரும் சொற்களைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் அழகைப் போற்றும் ஹூசேனின் பாடல் இடம் பெற்ற மீனாட்சி என்ற திரைப்படத்தை வெளியிடுவதற்கு அகில இந்திய உலேமா கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த அச்சுறுத்தலுக்குப் பிறகு அத் திரைப்படம் திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் பட்ட பாடபெண்களின் உரிமைகளை மறுக்கும், மீறும் ஷரியா சட்டங்களைக் குறை கூறிய வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய இப்திஹாட் கவுன்சிலின் தலைவர் டாகி ரசாக் கான் கோரியது இதன் பின்னணியில்தான். நஸ் ரீனின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 லட்சம் அளிப்ப தாக அவர் அறிவித்தார். தான் விரும்பும் கொல்கத்தாவின் கலாச்சாரச் சூழலுக்காக 2005 வரை அங்கு வாழ்ந்து பணியாற்ற அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந் தது. சகிப்புத் தன்மையையும், அகிம் சையையும் வளர்த்ததற்காக 2004 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ-மதன்ஜீத்சிங் பரிசை தஸ்லிமா நஸ்ரீன் வென்றார்.

2007 இல் மேற்கு வங்கத்தில் உள் ளாட்சித் தேர்தல்கள் நடந்தபோது டாகி ரசாக் கானுக்கு எதிர்பாராத கூட்டாளிகள் கிடைத்தனர். முஸ்லிம்களின் வாக்கு களை எதிர்பார்த்த சில காங்கிரஸ்காரர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்த்து தஸ்லிமாவுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். நவம்பர் 22 அன்று காவல்துறைப் பாதுகாப்புடன் அவர் கொல்கத்தாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜெய்ப்பூருக்கு விமானத்தில் அனுப்பப்பட்ட அவர், அன்றே அங்கிருந்து டில்லிக்குக் கொண்டு வரப்பட்டு, யாருக்கும் தெரி யாமல் தனிமைச் சிறையில் வைக்கப் பட்டார். இதில் மனித உரிமை மீறப்பட் டிருப்பதைக் கண்டு கோபமடைந்த நான் பல அரசு அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டேன். ஜோதி பாசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு பல வாரங்களாகக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். பட்டினிப் போராட்டம் மேற்கொள்வேன் என்ற எனது அச் சுறுத்தல் உள்ளிட்ட எனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின், தஸ்லிமா கொல்கத்தாவிலிருந்து வெளியேற்றப்பட்டது, இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்துக்கு எதிரானது என்று வேண்டுகோள் விடுத்து மன் மோகன்சிங் அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். ஒரு புறாவைக் காப்பாற்று வதற்காக, அதனைக் கொல்ல விரும்பிய கழுகு ஒன்றுக்கு, தன் சதையையே அளித்த சிபிச் சக்ர வர்த்தியின் ஓவியம் 5 ஆம் நூற்றாண்டு அஜந்தா குகை ஓவியங்களில் இருப்பதை அவரது கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

தமிழ் ஓவியா said...

பிரதமரின் உருக்கமான கடிதம்

பிரதமர் எப்போதுமே எனது கடிதங் களுக்கு தவறாமல் பதில் எழுதுவார். ஆனால் 2008 ஏப்ரல் 4 அன்று அவர் எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தப் பட்டிருந்த நேர்மையும், சோக உணர்வும் அதற்கு முன் எப்போதுமே கண்டிராததாக இருந்தது. அவரது கடிதத்தின் இறுதிப் பத்தி, இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீண்டும் வலியுறுத்துவ தாகவும், மனித உரிமைகள் மற்றும் கவுரவத்துக்கு மரியாதை அளிப்பதாகவும் இருந்தது. அவர் எழுதியிருந்தார்: ஜாதி, மதம், இன வேறுபாடின்றி மக்களை வரவேற்கும் இந்தியாவின் பெருமை மிக்க பாரம்பரியங்கள் எத்தகைய நெருக் கடியான நிலை ஏற்பட்டாலும் தொடரவே செய்யும். நாட்டில் ஒரு சிலரால் தூண்டிவிடப்படும் வெறுப்புணர்வு கொண்ட சூழ் நிலையினால், நமது இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுக்க முடியாது. தான் தேர்ந்தெடுக்கும் இடத் தில், தற்போது இந்தியாவில், வாழ்வதற்காக தஸ்லிமா நஸ்ரீன் பெற்றுள்ள உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எந்த மாநிலம் அல்லது எந்த நகரில் வாழ்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவருக்கு உள்ளது. டில்லியில் எனது விருந்தினராக தான்விரும்பும் வரை தங்கியிருக்க முடியும் என்பதால் தஸ்லிமா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மத உணர்வுகள் புண்படுத்தப்படு கின்றன என்பது போன்ற போலியான அரசியல் வாதங்களுக்கு அந்தக் கடிதம் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது என்று நான் கருதி இருந்தது, தஸ்லிமாவின் நிர்பாசம் (நாடு கடந்து) என்ற நூல் கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் வைக்கப் படுவற்கு தடை விதிக்கப் பட்டபோது பொய்யாகிப் போனது. அதற்கு முன், ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைத் தடுத்து நிறுத்தி விட்டிருந்தனர். நியாயமற்ற, கேலிக் கூத்தான நாடகத்தை மீண்டும் அரங் கேற்றிய மதமூடநம்பிக்கையாளர்கள், சாத்தானின் பாடல்கள் நூலிலிருந்து சில பகுதிகளைப் படிக்க இருந்ததற்காக நான்கு பிரதிநிதிகள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் 19(2) பிரிவில் கூறப்பட்டிருக்கும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் என்பதற்கான விளக்கத்தை அளிப்பதில் முடிவே இல்லாத குழப்பம் நிறைந்த நிலைக்கு நீதித் துறையையே அது தள்ளிவிட்டது.

ஃபண்டூஸ் மற்றும் கல்லெறிதல் போன்றவை மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் சொற்களாக இருக்கும் வரை, நமது அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையின் ஆதாரமான கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உறுதியான கருத்து அற்ற இந்தியாவின் பண்பாட்டை, கலாச்சாரத்தை அலட்சி யப்படுத்தும் வரை, மதநம்பிக்கைகள் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் வலு வான பிடியை நீதி மன்றங்களால் உடைக்க முடியாது. எனது மதச்சார்பற்ற தன்மையை நான் எனது தாய் சுமித்ரா கவுர் அவர்களிடமிருந்து பெற்றேன்.

இந்தியாவின் பல்வகை கலாச்சாரத்தின் தூண்டுதல் பெற்றதுதான் சீக்கிய மதம்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உறுதியான கருத்து அற்ற இந்தியாவின் தத்துவத்தின் கூறுகளை எதிரொலிக்கும் இந்தியாவின் பல்வகைக் கலாச்சாரப் பண்பாட்டில் இருந்து தூண்டுதல் பெற்றதுதான் குருநானக் அவர்களின் சீக்கிய மதம். ஜாதி அமைப்பு முறை, வெற்று மதச் சடங்குகள், புனிதயாத்திரைகள், அற்புதங்கள் ஆகியவற்றை அவர் மறுத்து எதிர்த்தார். பாலா என்ற இந்து, மர்தானா என்ற முஸ்லிம் இருவரும் அவரின் வாழ்நாள் முழுவதும் சீடர்களாக அவருடன் இருந்தனர். சீக்கியர்களின் வரலாறு நூலில் குஷ்வந்த் சிங் எழுதி யிருப்பது போல இந்து செங்கற்களையும், சுபி இஸ்லாம் சுண்ணாம்புக் கலவையும் கொண்டுதான் குருநானக் தனது மத நினைவுச் சின்னத்தை எழுப்பினார்.

எனது மதச்சார்ப்பற்ற மற்றும் நாத்திக உணர்வுகளும் மிகவும் புண்பட்டுப் போயுள்ளன. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையையும், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உறுதியான கருத்து அற்ற இந்தியாவின் பண்பாட் டையும் கேலிக் கூத்தாக்கும் மூடநம் பிக்கையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக் கின்றனவா என்பது பற்றி அறிய வழக் குரைஞர்களுடன் நான் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.

(யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதுவரான மதன்ஜீத்சிங் தென் ஆசிய பவுன்டேஷனின் தோற்றுனரும் ஆவார்.)
(நன்றி: தி ஹந்து, 16.3.2012 தமிழில் : த.க.பாலகிருட்டிணன்.