Search This Blog

24.3.12

வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வன்முறை பற்றி வாய் திறக்கலாமா?


காவிகள் வன்முறை பற்றி வாய் திறக்கலாமா?

வாழும் கலை என்னும் பெயரால் பெரும் சாம்ராஜ்ஜியம், ஒன்றை நடத்தி வரும் திருவாளர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்பவர், வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் உளறிக் கொட்டி நாலா திசைகளிலிருந்தும் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

அரசு கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவரும் மாணவர்கள் நக்சலைட்டுகளாக உருவாகி வெளி வருகின்றனர் என்பதுதான் அந்த உளறல் படலம்.

இப்படி திருவாய் மலர்ந்துள்ளாரே - இதற்கான ஆதாரங்கள் உண்டா? - புள்ளி விவரங்களைத் தம்வசம் வைத்துள்ளாரா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.


ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் இந்தியா முழுமையும் எவ்வளவு கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன தெரியுமா? 28,861 கல்வி நிறுவனங்களில் 32,33,337 மாணவர்கள் பயிலுகின்றனர். பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,57,741 ஆசிரியர் பயிற்சிக்கென தனி கல்வி நிறுவனங்களும் உண்டு (பாரதிய சிக்ஷா மண்டல்)
இந்தக் கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கப் படும் கொள்கைகள், பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் எந்த நிலையில் உள்ளவை என்பது எல்லோருக்குமே தெரியும்.
ஃப்ரண்ட் லைன் இதழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று இவ்வாறு கூறுகிறது.

இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (க்ஷடிஅ குயஉவடிசநைள) மாற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட வில்லையா?


இதுபற்றியெல்லாம் என்றைக்காவது இந்த ரவிசங்கர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டா? வெறும் பாடங்கள் மட்டுமல்ல; வன்முறைப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்து வருகிறதே! பெண்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள்கூட அளிக்கப்படுகின்றனவே! வன்முறை கூடாது - நாட்டுக்கு ஆபத்தானது - அதுவும் மாணவர்களுக்கு இவற்றைப் போதிப்பது நாட்டின் தற்கொலைக்கு நிகரானது என்று இந்தக் காவிகள் கண்டித்ததுண்டா? இதுபற்றியெல்லாம் வாய் திறக்காதவர்கள், அரசுக் கல்வி நிறுவனங்கள்பற்றி அவதூறுகளை அள்ளிவிடுவானேன்?

உள்ளூரில் தாம் செய்த தவறு காரணமாக ஊரை விட்டு ஓடிவந்த ஒருவர் இன்றைக்கு பெரிய தொழிலதிபராக கோடிக்கணக்கான சொத்துகளில் படுத்துப் புரள்பவராக ஆனது எப்படி? என்ன தொழில் செய்து இத்தனை ஆயிரம் கோடிக்கு அதிபதியானார்?

இந்தியாவில் சாமியார்கள் ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி; ஆயுத பேரத் தொழில்களில் எல்லாம் ஈடுபட்டு வருவது கண்கூடு.

ஆட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் சாமியார்களின் சீடர்களாக மாறும் சூழலில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இதுபோன்ற தொழில்களில் குதிக்கின்றனர்; ராம்தேவ் போன்ற காவிகள் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட நகைச்சுவை நாடகங்களையெல்லாம் நாடு அறியும். அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஆசாமி, ஆமை தன் முகத்தைக் கூட்டுக்குள் பதுக்கிக் கொண்டதுபோல ஆகிவிட்டார்.

நக்சலைட்டுகள் பற்றி பேசி இருக்கிறாரே - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் - நக்சலைட்டுகள் உருவாவதற்கான சமூகச் சூழல் பற்றி என்றைக்காவது சிந்தித்த துண்டா? அதுபற்றிய கருத்துக்களைத் தெரிவித்த துண்டா?

இந்துத்துவா என்பதே ஒருவகையான ஒடுக்கு முறைதானே? பிறவியிலேயே கோடானு கோடி மக்களை இழி ஜாதி என்று முத்திரை குத்துவது சிந்தனை ரீதியான ஒருவகை ஒடுக்குமுறையும், வன்முறையும் அல்லவா!

தலைமுறை தலைமுறையாக இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் புரட்சி வெடித்தால் அது குற்றமாகுமா? வன்முறை ஆகுமா? காவிகள் வன் முறைபற்றிப் பேசுவது கடைந்தெடுத்த பித்த லாட்டமாகும்.

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பது போன்றதுமாகும்.

----------------------”விடுதலை” தலையங்கம்23-3-2012

1 comments: