Search This Blog

13.3.12

பார்ப்பனர்களே, பதறாதீர்!


சென்னை விழா ஒன்றில் பேசிய டாக்டர் கலைஞர் அவர்கள் பார்ப்பான் - பார்ப்பனன் என்ற சொற்களைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக மண்ணுக்கும் விண்ணுக்குமாக எகிறிக் குதித்துத் துள்ளாட்டம் போடுகிற பார்ப்பன மக்காள்! யான் பகர்வது கேண்மின்!

ஊர்ப்பானை உருட்டுகிற பார்ப்பான் என்றே பெரியாரியக்கப் பாவலர் பாரதிதாசன் பாடுகிறார்.

பாரதிதாசனின் குரு பார்ப்பனப் பாரதியோ பேராசைக்காரனடா பார்ப்பான் என்றும், பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்றும் அல்லவா படம் பிடித்துக் காட்டுகிறார்.

பார்ப்பான் - பார்ப்பனன் என்ற சொற்களுக்கு என்ன பொருள்? அவர்கள் எண்ணுகிற - சொல்லுகிற - கருதுகிற பொருளின் கருத்துப்படி அவர்கள் இரட்டைப் பிறப்பாளர் ஆகின்றனர்.

அவர்கள் தாய் தந்தையர்க்குப் பிறப்பது முதல் பிறப்பு. அடுத்து அவர்கள் முப்புரிநூல் என்னும் பூணூல் அணிந்து கொள்ளும் விழாச் சடங்கு அவர்கள் எடுக்கின்ற இரண்டாவது அவதாரம் அதாவது பிறப்பு ஆகும். ஆக, அவர்கள் இரட்டைப் பிறப்பாளர்கள் ஆவார்கள்.

இதோ அருமையான, உண்மையான விளக்கம்:

கோழிக் குஞ்சு என்று சொல்லக் கூடாது. அவ்வாறு சொல்லுவது இலக்கண முறைப்படி தவறு ஆகும். கோழிப் பாப்பு என்றே சொல்ல வேண்டும். பார்ப்பு என்பதற்கு இரட்டைப் பிறப்பு என்பது பொருள். எப்படி? கோழி முட்டை இடுவது என்பது முதல் பிறப்பு ஆகும். அடுத்து அந்தக் கோழி முட்டை அடைகாக்கப்பட்டு பொரிக்கப்பட்டு குஞ்சாக வெளிவருவது அதன் இரண்டாவது பிறப்பு ஆகும். இரண்டு பிறப்பு பெற்ற அந்த உயிரினம் கோழிப் பார்ப்பு எனப்பட்டது. அது நிச்சயம் கோழிக் குஞ்சு கிடையாது.

இரட்டைப் பிறப்புப் பெற்ற அந்த உயிர்ப் பிராணி பார்ப்பு ஆனதுபோல, இரட்டைப் பிறப்பைப் பெற்ற (இவ்வாறு சொல்லிக் கொள்கிற காரணத்தினால்) அந்த மனிதனும் பார்ப்பனன் _ பார்ப்பான் ஆவான் - ஆனான்.

இதுதானே உண்மையான பார்ப்பன விளக்கம் ஆகும். தமிழர்கள் உள்ளிட்ட உலகின் அனைத்து மக்களும் ஒற்றைப் பிறப்பாளர்களாக விளங்க நீங்கள் மட்டும் உங்களின் கொள்கை விளக்கப் பிரச்சாரத் தத்துவக் கொள்கைப்படி இரட்டைப் பிறப்பாளர் என்னும் தன்மையில் பார்ப்பனர்கள் ஆகிறீர்கள்.

இதற்கு நாங்கள் என்ன செய்ய?
டாக்டர் கலைஞர் என்ன செய்ய?
எங்கள் எண்ணப்படி நீங்கள் பார்ப்பனர்களாக வாழ வேண்டாம்!
உங்கள் எண்ணப்படி நீங்கள் பிராமணர்களாகவும் இருக்க வேண்டாமா!
மக்கள் கருத்துப்படி நீங்கள் மனிதர்களாக விளங்க வேண்டும் - வாழ வேண்டும் என்பதே நியாயத் தீர்ப்பு.

ஆம் (பார்ப்பனர்களே) நீங்கள் நின்று நிதானித்துப் பதறாமல் இருங்கள்!

-------------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் “விடுதலை”10-3-2012

2 comments:

மதுரை அழகு said...

பாரதி பார்ப்பான் என சொல்லக் காரணம் வயித்தெரிச்சலால் தான்...! (பார்க்க : திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்)

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்- இந்தியாவின் நிலை குறித்து எதுவுமே சொல்லாத எஸ்.எம்.கிருஷ்ணா!

டெல்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசபாவை உலுக்கியது. இன்று காலை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். இதையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிற்பகல், லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சமயம் பார்த்து ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையைப் படித்தார்.

அவரது அறிக்கையில் உருப்படியாக எதுவுமே இல்லை. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகளை நீளமாக பட்டியலிட்டுப் பேசிய கிருஷ்ணா, தனது அறிக்கையின் இறுதியில், நாம் எந்த முடிவாக இருந்தாலும் அது இலங்கையுடனான நமது நாட்டின் வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று கூறினார். தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பது குறித்து அவர் நேரடியாக பதில் தரவில்லை.

கிருஷ்ணாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

இலங்கை தொடர்பாக இந்திய அரசு எது செய்தாலும், அது இலங்கைத் தமிழர்களின் நலன்களையும், நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்குத்தான் முதல் கடமை உள்ளது. இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம்.

ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்றுப் பூர்வமான உறவு, நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகி விடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாது என்றார் கிருஷ்ணா.

இது போக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்வோருக்கு சைக்கிள் கொடுத்தது, வீடு கட்டிக் கொடுத்தது ஆகியவை குறித்து புள்ளி விவரத்துடன் நீண்ட பட்டியலையும் கிருஷ்ணா வாசித்தார். அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, ஆதரிக்குமா என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.
------http://tamil.oneindia.in/news/2012/03/14/india-centre-spell-its-stand-on-us-backed-resolution-aid0091.html