Search This Blog

7.3.12

பகுத்தறிவே முக்கியம்! - பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் தமது அறிவுரையில் பெண்கள் எவ்விதத்திலும் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல. அவர்களும் மனித ஜீவன்கள் என்றும் அவர் களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை எடுத்துக்காட்டவே இம்மாதிரியான திருமணமாகும். எங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வேலை இல்லை என்றாலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் காரணங் கள் தேவைகள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லவே யாகும்.

இந்த நாட்டில் படித்தவன் பணக்காரன் என்பவன் எல்லாம் பகுத்தறிவு பற்றி கவலைப்படாதவர்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் என்பவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகப் படித்தவர்களேயாவர். இந்த நாட்டு மக்களின் சமுதாய இழிவுகள் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. எனவே தான் நாங்கள் தான் எங்கள் கழகந்தான் இந்தத் துறையில் ஈடுபட்டு உழைக்கின்றோம். எங்கள் கருத்தில் மக்கள் மானமற்ற வர்களாக மனிதத் தன்மையற்ற காட்டு மிராண்டிகளாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலையிலுள்ள மக்களைச் சீர்திருத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் குறிக்கோளாகும்.

தோழர்களே, மனிதன் என்றால் ஓர் பெண் துணையும் பெண் என்றால் ஓர் ஆண் துணையும் இருக்க வேண்டும் என்பது இயற்கை. இது மிருகங்கள், புழு பூச்சிகள், மரங்கள், பூ பிஞ்சுகள் எல்லாவற்றிலும் ஆண், பெண் இருக்கின்றன. இது இயற்கை.


இதுவரை நம்மில் ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதற்காக நடத்தப்பட்ட கலியாணம் என்னும் நிகழ்ச்சி மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தே சில மாறுதல்கள் ஏற்படுத்த இம்மாதிரி காரியம் செய்கின்றோம்.

இதுவரையில் இருந்து வந்த கருத்து ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தால் அல்ல, ஓர் ஆணுக்கு ஓர் பெண் சம்பளமில்லாத வெறும் சோற்றுக்காக வேலை செய்யும் அடிமை என்ற கருத்தில்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. நாங்கள்தான் இப்போது அந்தக் கருத்தை மாற்றி ஆணும், பெண்ணும் சரிசமம் உடையவர்கள் என்ற கருத்தில் மாற்றியிருக்கின்றோம். ஆண், பெண் சம உரிமையுடையவர்கள், பகுத்தறிவு உடையவர்கள், மானம் உடையவர்கள் என்பதை உணர்த்தவேயாகும். மனிதன் என்ற சொல்லே மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுந் திருக்க வேண்டும்.

கலியாணம் என்ற பெயரால் நடத்தப் பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் மனிதன் மடையனாக கீழ்ஜாதியாக, சூத்திரனாக, இழிபிறவியாக, காட்டுமிராண்டி யாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன. எவனுக்கு நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, ராஜா வாகவோ, பிரபுக்களாகவோ, படிப்பாளியாகவோ யாராய் இருந்தாலும் இந்த அடிப்படையில்தான் இருந்து வந்திருக்கின்றது. இந்த சீர்திருத்த முறையில் மடைமைக்கோ, காட்டுமிராண்டித் தனத்துக்கோ, இழிவுக்கோ வகை இல்லை. நாம் மானமற்ற இழிபிறவிகள் என்பதன் அறிகுறியாகவே பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துவது ஆகும். நாம் கூப்பிடுவதே அவனை பெரிய ஜாதி என்ற கருத்தில்தான் ஆகும். அதன் காரணமாக அவன் உயர்ந்தவன் நம் வீட்டில் சாப்பிட மாட்டான் என்பதற்கு அறிகுறியாகவே அவனுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை பச்சையாகவே மூட்டை கட்டி அவன் வீட்டில் கொண்டுபோய் வைக்கின்றோம். நாம் நம் அறிவைப் பயன்படுத்தாமல் அவன் மேல் ஜாதி என்று ஒத்துக் கொண்டு அதன்மூலம் நாம் இழிமக்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றோம் என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆதியில் பார்ப்பானைக் கூப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமையெனக் கருதி சமீபகாலமாக பார்ப்பானைக் கூப்பிட ஆரம்பித்து இருக்கிறான். ஆணும், பெண்ணும் திரு மணம் செய்து கொண்டு வாழும் உரிமை, சாஸ்திரத்தில் சூத்தி ரர்களாகிய நமக்கில்லை. நாளாவட்டத்தில் பார்ப்பா னுடைய முறையானது எல்லா வகுப்பாரிடையேயும் வந்துவிட்டது. இதன் காரணமாக நாம் அறிவு, மானம் இல்லாதவர்களாக, காட்டுமிராண்டிகளாக, இழி மக்களாக ஆக்கப்பட்டு விட்டோம்.
எங்களுடைய முயற்சியால் இப்படி நடைபெறும் திருமண முறையால் நாங்கள் மட்டும் பயன் அடைய வில்லை. நாங்கள் மட்டும் செய்யவில்லை - ஆனால், எங்களின் எதிரிகளான காங்கிரஸ், கண்ணீர்த்துளி, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிக்காரர்கள் கூட செய்து வருகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், கடவுள், மதம், ஜாதி ஆகிய வை நீக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும், மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி அறிவுரையாற்றினார்.

-------------------தந்தை பெரியார் -"விடுதலை" 6.9.1960

1 comments:

தமிழ் ஓவியா said...

2014 மக்களவைத் தேர்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க செய்யவேண்டியது என்ன? தமிழர் தலைவர் அறிக்கை


2014 இல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த சில வாரங்களாக நடைபெற்று முடிந்த அய்ந்து மாநில சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன.

உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி - ஆடம்பர, உயர்ஜாதி பார்ப்பனர் கூட்டமும், அதிகார ஆணவமும் நிறைந்த ஆட்சியாக நடந்து பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது! இது நம்மைப் பொறுத்தவரை எதிர்பார்த்ததுதான்.

பகுஜன் சமாஜ்வாடிக்கு தோல்வி ஏன்?

சென்ற முறை 206 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மாயாவதியின் கட்சி, இம்முறை வெறும் 79 இடங்களை மட்டுமே பிடித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளது!

முலாயம்சிங் அவர்களின் சமாஜ்வாடி கட்சிக்கு அமோக ஆதரவினை உத்தரப்பிரதேச வாக்காளர்கள் தந்துள்ளனர். அது சமூகநீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, அவர் உயர்ஜாதியின் வாக்கு வங்கிக்காக ஏங்காமல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமூக மக்களின்மீது நம்பிக்கை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை முலாயம் அவர்களும், அவரது மகன் அகிலேஷ் யாதவ் அவர்களும், நிதானப் போக்குடன் நடத்தி, மக்களின் அமோக ஆதரவு நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்!

யாருக்கும் மெஜாரிட்டி வராது; தொங்கு சட்டசபைதான் என்று அரசியல் ஆலாபனக்காரர்கள் பேசிப் பேசி இரண்டு நாளைக் கழித்தனர்!

ஆனால் மக்களோ, அதிகம் படிக்காதவர்கள் என்றாலும், பொது அறிவு, பட்டறிவுடன் தொங்கு சபை வராமல், தங்கு சட்டமன்றத்தை அல்லவா தந்துள்ளனர்!

கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகம் என்ற ஊடகப் பிரச்சாரம் ஓங்கியுள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு, ஆக்கப் பணிகள், வளர்ச்சிப் பணிகளிலும் சமூகநீதியில் அனைவருக்கும் அனைத்தும் என்று செயல்படவேண்டிய பொறுப்பும், கடமையும் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைக்கும் முலாயம் சிங் (யாதவ்) அவர்களின் சமாஜ்வாடி கட்சிக்கு உண்டு.

மாயாவதி ஆட்சியில் நடந்தவைகளைப் பார்த்து, பாடம் கற்று, மக்களாட்சியாக, சமூகநீதி ஆட்சியாக இப்புதிய ஆட்சி அமையட்டும்!

மிகவும் திட்டமிட்டு வெற்றிக்கனி பறித்த தந்தைக்கும், தனயனுக்கும், அக்கட்சித் தொண்டர்களுக்கும் அதற்கும் மேலாக தெளிவாக வாக்களித்த வாக்காளர்களுக்கும் நமது வாழ்த்துகள், பாராட்டுகள். உ.பி.யில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளன!

காங்கிரஸ் முன்பு இருந்ததைவிட சில இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது என்பதும் உண்மை.

பா.ஜ.க. முன்பு பெற்றிருந்த இடங்களைவிட எண்ணிக்கையில் குறைந்த இடங்களை சில மாநிலங்களில் இழந்துள்ளது என்பதும், இராமன் கோவிலை மீண்டும் கட்டுவோம் என்று மத உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டும், அங்கே அது எடுபடாது இருந்ததையும் விட குறைவான அளவே வந்துள்ளது! அயோத்தியிலேயே தோல்வியைத் தழுவியுள்ளது.

கடுமையாக காங்கிரசுக்குப் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் என்றும், உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் அடிக்கட்டுமானம் சரியானபடி இல்லை என்றும் கூறியிருப்பது, அவரது அறிவுநாணயத்தைக் காட்டுகிறது. நோய்நாடி நோய் முதல் நாடும் முறைதான் சரியானது!

முதல் முறையாக - இத்தனை ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அயோத்தியிலேயே பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. முலாயமின் சமாஜ்வாடி அயோத்தியைக் கைப்பற்றி உள்ளது!

பொதுவாக பா.ஜ.க. பஞ்சாபிலும் (2007) முன்பிருந்ததைவிட குறைவான இடம், உத்ரகாண்டிலும் அதே நிலை. கோவா ஒன்றுதான் அதிக கூடுதலாக இடம்பெற்று ஆட்சி அமைக்கும் நிலை. மற்றபடி பொதுவாக அதற்கு மக்கள் ஆதரவு மங்கி வருகிறது என்பது உண்மை!

காங்கிரஸ் இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் அதிகம்.

1. மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்தி இனி மத்தியில் அரசியல் ஆட்சி இல்லை என்பது. 2. கூட்டாட்சி தத்துவத்தை மேலும் வலுப்படுத்து வதைத் தவிர, பலவீனப்படுத்தக் கூடாது! 3. எந்த முடிவானாலும் விரைந்து தலைமை எடுக்கவேண்டும். மாநில மொழி, மக்கள் உணர்வுகளைப் புறந்தள்ளக் கூடாது. 4. கூட்டணி அமைக்கும்போதுகூட, மற்ற கூட்டணி கட்சிகளை உரிய முறையில் கலந்து, கூட்டுப் பொறுப்பேற்று ஆட்சி செய்ய முன்வரவேண்டும்.

விழுவது முக்கியமல்ல, விரைந்து எழுவதே முக்கியம்!

2014 பொதுத் தேர்தலில் (நாடாளுமன்றத்திற்கு) மீண்டும் மதவாத பிற்போக்கு வராமல், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரின் நம்பிக்கை - நல்லாதரவினைப் பெறவேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் 7-3-2012