Search This Blog

21.3.12

வறுமைக்கோட்டுச் சண்டை! திட்டக் குழு ஒன்று தேவையா?

வறுமைக்கோட்டுச் சண்டை!

திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம் நாடாளுமன்றத்தை அமளிக்கு ஆளாக்கியது. வறுமைக்கோட்டுக்கும் கீழ் என்பதைக் கணிக்கும் புள்ளி விவரம் அது.

நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65 வருமானம் பெற்றால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வரமாட்டார்கள். அதேபோல், கிராமப்புறத்தில் நாள் ஒன்றுக்கு வருவாய் ரூ.22.5 என்று இருந்தால் அவர்கள் ஏழைகள் அல்லர்; அதாவது வறுமைக் கோட்டுக்கும் கீழ் வரமாட்டார்கள்.

திட்டக் கமிஷன் அளித்த இந்தப் புள்ளி விவரம் தான் பிரச்னைக்குக் காரணம்.

கடந்த ஆண்டு இதே திட்டக் குழு உச்சநீதி மன்றத்தில் இந்தப் பிரச்சினையில் ஒரு புள்ளி விவரத்தை அளித்தது. நகர்ப்புறத்தில் ரூ.32-ம், கிராமப் பகுதியில் ரூ.26-ம் வருமானம் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வரமாட்டார்கள் என்பதுதான் அந்தப் புள்ளி விவரம்.

ரூ.32 நாள் வருமானம் என்று கொடுத்த புள்ளி விவரத்தை எதிர்த்தே கடுமையான எதிர்ப்பும், சர்ச்சைப் புயலும் எழுந்தது. இது தவறானதுதான். திருத்தி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்பொழுது என்னவென்றால், பெருமாள் போய் பெத்த பெருமாள் என்று வந்ததுபோல அதற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள்தான் வறுமைக் கோட்டுக்கும்கீழ் என்று அறிவிக்கப்பட்டது.

நாட்டின் விலைவாசி உயர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் நகர்ப்புறத்தில் ரூ.28; கிராமப் பகுதியில் ரூபாய் இருபத்திரண்டு வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் இல்லை என்று சொல்லுவது எத்தகைய பைத்தியக்காரத்தனம்! இதுபோன்ற புள்ளி விவரங்களைச் சொல்லுவதற்கு மெத்தப் படித்த மேதாவிகளைக் கொண்ட திட்டக் குழு ஒன்று தேவையா என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது.

வீட்டில் இரண்டு பேர்கள் இருந்தால் காலை, மாலை இருவேளைகளிலும் தேநீர் அருந்தினாலே இந்த வருமானம் சரியாகப் போய்விடுமே!

அவர்கள் மூன்று வேளை சாப்பிடவேண்டாமா? வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டாமா? பிள்ளைகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்பவேண்டாமா? அதற்கெல்லாம் வருமானத்திற்கு எங்கே போவது?

ஒரு லிட்டர் பாலின் விலைதான் ஒரு குடும்பத்துக்கு வருமானம் என்றால், அந்தக் குடும்பத்தவரின் வாழ்க்கை நிலை என்னாவது!
பல அய்ந்தாண்டுத் திட்டங்கள் போட்டும் வறுமைக்கோட்டுக்கும்கீழ் உள்ள மக்களின் எண் ணிக்கை குறைந்தபாடில்லை.

இத்தகைய தவறான புள்ளி விவரங்கள் மூலம் வறுமைக்கோட்டுக்கும் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று ஊருக்கும், உலகுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த ஏற்பாடு என்று எண்ணுவதற்கு இடம் இருக்கிறது.

வறுமைக்கோட்டுக்கும்கீழ் உள்ள மக்களுக்கு இலவச அரிசி போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான் செயல்படுத்த முடியும் என்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்க வாய்ப்புள்ளது.

65 ஆண்டு சுதந்திர நாட்டில் இன்னும் நாம் வறுமைக்கோட்டைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறோம் என்பது வெட்கக்கேடே!


நம்மோடு சம காலத்தில் சுதந்திரம் அடைந்த சீனாவும், இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடுதான்.

அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி எங்கே? பாரத புண்ணிய பூமியின் வளர்ச்சி நிலை எங்கே?

விமான முதலாளிகளுக்கு வரிச் சலுகை காட்டி விவசாயிகளின் கடன்களை வட்டியும், முதலுமாய்ப் பறிமுதல் செய்வதில் கருத்துச் செலுத்தும் நாடாகத் தான் இந்தியா இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா முதலில் கவனம் செலுத்தட்டும்; அய்ந்து நட்சத்திரக் கலாச்சாரம் பற்றி பிறகு கனவு காணட்டும்!

--------------------"விடுதலை” தலையங்கம் 21-3-2012

1 comments: