பெரியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது.
மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் அப்படியே ஒருவித மாற்றமும், முன்னேற்றமும் இன்றி இருப்பதைக் கொண்டு அறிகிறோம். ஆனால், மனிதன் அப்படி இல்லை. 10, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளான். நாளுக்கு நாள் மனித வாழ்க்கை பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன் னேறிக் கொண்டே போகிறது. இவ்வுண்மை நம் நாட்டை விட மேல்நாடுகளில் மிக விரைவில் செல்லுகிறது. சரியான முறையில் பகுத்தறிவின் மேன்மை தெரிய பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் அதற்கேற்ற வண் ணம் நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றி அதிசயிக்கத்தக்க அற்புதங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆனால், இந்த நாட்டிலே காட்டுமிராண்டி வாழ்க்கை இன்னும் அழிந்தும் போகவில்லை. பழக்க வழக்கம், முன்னோர்கள் கூறியவை, சாஸ்திர - புராணங்கள் கூறியவை, முனிவர்கள் - ரிஷிகள் கூறியவை, கடவுள் அவதாரங்களும், கடவுள்களும் கூறியவை என்பதின் பேரால் எதையும் கண்மூடித்தனமாக ஆராய்ந்து பார்க் காமல் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர். எனவே, பகுத்தறிவுக்குப் போதிய இடமின்றிப்போய் அநாகரிக வாழ்க்கை வாழுகிறார்கள். மற்ற நாடுகளைப் போன்று இங்கும் நாகரிகமும், விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் விளங்க வேண்டுமென்றால், பகுத்தறிவுக்குப் புறம்பானவை அத்தனையும் அழிக்கப்பட வேண்டும் என்பதாகத் தெரிவித்து இந்துக் கடவுள்களின் அநாகரிக அமைப்பு முறைகளைப் பற்றியும், கடவுள்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையின் கதைகளைப் பற்றியும் விளக்கினார். இறுதியில் வால்மீகி இராமாயண சம்பந்தப்பட்ட ஊழல்களையும் எடுத்துக் கூறி இரவு 10 மணி வரை பேசினார்.
------------------10.1.1956 அன்று மீனாட்சிபுரம் படிப்பக 5ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 15.1.1956
2 comments:
நூற்றாண்டு காணும் திராவிடர் சங்கம்
சுப.வீரபாண்டியன்
கால்டுவெல் தந்த ஒப்பிலக்கண நூலுக்குப் பிறகு, திராவிடம் என்னும் சொல் நடைமுறை வழக்கிற்கு வரத் தொடங்கியது. அதனை முதலில் இதழ்கள் மற்றும் இயக்கங்களின் பெயர்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களே. அவர்களுள் முதன்மையானவர் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்.
ayothidasa_2501885ஆம் ஆண்டிலேயே, ரெவரென்ட் ஜான் ரத்தினம் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், "திராவிடப் பாண்டியன்' என்னும் இதழைத் தொடங்கினார். அவ்விதழின் ஆசிரியரா கவோ, ஆசிரியர் குழுவிலோ அயோத்திதாசப் பண்டிதர் பணியாற்றினார் என்னும் குறிப்புகள் கிடைத்துள்ளன.
முதன் முதலாகத் "திராவிட' என்பதை இயக்கத்தின் பெயரில் சேர்த்த நிகழ்வு 1892 செப்டம்பரில் நடைபெற்றது. அயோத்திதாசப் பண்டிதர் "ஆதி திராவிட ஜனசபா' என்னும் அமைப்பை அப்போது தொடங்கினார். பிறகு, 1894 அக்டோபரில், ரெட்டை மலை சீனிவாசன் அவர்களால், "பறையர் மகாஜன சபா' என ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டு, அதுவே பின்னாளில் "திராவிட மகாஜன சபா' என்று மாற்றப்பட்டது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவைப் போக்கிக் கொள்ள, திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டனர் என்று தன் நூல் ஒன்றில் (Indian Political Associations and Reform of Legislature) கூறுகின்றார், வரலாற்று ஆசிரியர் பி.பி. மஜும்தார்.
இவ்வாறு இழிவு நீக்கும் வாளாகத்தான் திராவிடம் என்னும் சொல் அரங்கிற்கு வந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலும் அது கூர்மைப்பட்டது.
குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் சிலரால் அச்சொல் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு பெருவழக்காயிற்று என்னும் வரலாற்றை, அன்றைய ஆங்கில ஏடுகள் (தி மெட்ராஸ் மெயில் முதலானவை), நூல்கள் மூலம் விரிவாகவும், அதே வேளையில் நுட்பமாகவும், தன் ஆய்வேடான "தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும்' என்னும் நூலில் திறம்பட நிறுவுகின்றார், முனைவர் கு. நம்பிஆருரன். இந்நூல் மிக அண்மையில், க. திருநாவுக்கரசு, பி.ஆர். முத்துக் கிருஷ்ணன் ஆகியோரால் தமிழில் மொழிபெயர்க் கப்பட்ட ஒன்றாகும்.
1909ஆம் ஆண்டு பி. சுப்பிரமணியம், எம். புருசோத்தமன் ஆகிய இரு வழக்கறிஞர்கள், "சென்னைப் பார்ப்பனர் அல்லாதார் சங்கம்' (The Madras Non Brahmin Association) என் ஓர் அமைப்பை உருவாக்கினர். அவ்வமைப்பின் சார்பில் அவர்களின் நேர்காணல் ஒன்று, 01.05.1909 அன்று தி மெட்ராஸ் மெயில் நாளேட்டில் வெளியாகி உள்ளது. அதனை நம்பிஆருரன் அப்படியே எடுத்துத் தந்துள்ளார். அந்நேர்காணலில்,
"சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்லாத வகுப்பினரைச் சீர்படுத்தி, சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு அவர்களை எடுத்துச் செல்லவும், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் அளித்து, கல்வியில் அவர்கள் முன்னேறு வதற்கு வழிவகுப்பதும், இந்த இளைஞர் கள் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிலைகளில் பயிற்சி பெறுவதும், இதரக் கல்வித் திட்டங்களுக்கு உதவித் தொகை வழங்குவதும், அவர்களின் சமூகப் பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதும் ஆகிய நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.'' என அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
அதே மெயில் நாளேட்டில், 06.05.1909 அன்று, வி.வண்ணமுத்து என்பார் ஆசிரியருக்கு எழுதிய மடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாதவர்கள், திராவிட இன வழி வந்தவர்கள். எனவே, இந்த அமைப்பிற்கு, 'தி மெட்ராஸ் திராவிடியன் அசோசியேசன்' என்று பெயர் சூட்டலாம்''என அவர் எழுதியுள்ளார். இவ்விரு இன்றியமையாத ஆவணங்களையும் தேடி எடுத்துத் தந்துள்ள முனைவர் நம்பிஆரூரன் நம் நன்றிக்குரியவர்.
இவ்விரண்டையும் ஆழ நோக்குங்கால், பல உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது, பார்ப்பனர் அல்லாதார் என்னும் சொல்லுக்கு மாற்றாகவே, திராவிடன் என்னும் சொல் முன் மொழியப்பட்டுள்ளது என்பதாகும். ஆந்திர, கேரள, கர்நாடக மக்களையும் சேர்த்துக் கொள்ளும் சொல்லாகத் திராவிடன் என்னும் சொல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நடைமுறை வழக்கில் இல்லை என்பது தெளிவாகிறது. பார்ப்பனர் அல்லாத தமிழர் என்பதையே திராவிடர் எனக் குறித்துள்ளனர்.
பார்ப்பனர் அல்லாதவர்களிலும், ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதையே அவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே வருண அடிப்படையிலும், வர்க்க அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே திராவிட இயக்கத்தின் நோக்கமாக இருந்துள்ளது.
எனினும் அவ்வமைப்பு நிலைத்து நின்று செயல்படவில்லை என்பதாகவே தெரிகிறது. மெயில் ஏட்டிலும் கூட, ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வேறு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்கிறார் நம்பிஆரூரன். Natesanar_250அதன் பிறகே, 1912ஆம் ஆண்டு "சென்னை ஐக்கிய சங்கம்' (The Madras United League) என்னும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் செயலர் மருத்துவர் சி.நடேசனார் ஆவார். வருவாய்த் துறையிலும், அரசுப் பொதுப்பணித் துறையிலும் பணியாற்றியவர்களே இவ்வமைப் பின் பெரும்பான்மையான உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இவ்வமைப்பின் நோக்கமும், ஏறத்தாழ 1909ஆம் ஆண்டில் தோன்றி மறைந்த பார்ப்பனர் அல்லாதார் சங்கத்தின் நோக்கத்தை ஒட்டியே உள்ளது.
ஓராண்டிற்குள் 300 உறுப்பினர்கள் புதிய சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது அனைவருக்கும் ஒரு புதிய ஊக்கத்தைத் தந்தது. அமைப்பின் முதல் ஆண்டு விழாவில், அமைப்பின் பெயர் பற்றிய விவாதம் எழுந்தது. நோக்கத்திற்கும் பெயருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாகப் பலரும் கருதினர். பார்ப்பனர் அல்லாதார் சங்கம் என்ற பெயரையே சூட்டிக்கொள்ளலாம் என்று சிலர் கூறினர். ஆனால் எதிர்மறையாக ஏன் நாம் பெயர் சூட்டிக்கொள்ள வேண்டும் என்னும் கேள்வி எழுந்தது. இறுதியில், சென்னை ஐக்கிய சங்கத்தின் பெயர், "திராவிடர் சங்கம்' என மாற்றப்பட்டது. இங்கும், பார்ப்பனர் அல்லாதார் என்பதற்கு மாற்றாகவே திராவிடர் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
1912இல் உருவான திராவிடர் சங்கம், மூன்று விதமான பணிகளை மேற்கொண்டது. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் அனைவரும் கல்வி பெற ஒத்துழைப்பது, பார்ப்பனர் அல்லாத பட்டதாரிகளுக்குப் பாராட்டு விழா நடத்துவது, மாதம் தோறும் சமூக, இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்துவது என மூன்று தளங்களில் அவர்கள் பணியாற்றினர்.
சென்னை திருவல்லிக்கேணியில், திராவிடன் விடுதி என்னும் பெயரில், சுற்றுப்புறக் கிராமத்து மாணவர்கள் தங்கிப் படிக்க ஓர் இல்லத்தையும் சங்கம் உருவாக்கியது. ஏழை மாணவர் கள் பலருக்கு உதவித் தொகை வழங்கியது. மாதம் தோறும் நடை பெற்ற கூட்டங்களில், மாணவர்களுக்கு சமூக வரலாறு விளக்கிச் சொல்லப்பட்டது. எனவே கல்விக்கான உதவி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், கல்வியின் தேவை குறித்த விழிப்புணர்ச் சியையும் திராவிடர் சங்கம் ஏற்படுத்தி உள்ளது.
திராவிடர் சங்க நிறுவனரான மருத்துவர் சி. நடேசனார், இன்னொரு பெரும் பணிக்கும் மூல வித்தாக விளங்கினார். அன்று இரு துருவங்களாக இருந்த, சர்.பிட்டி. தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் இருவரையும் இணைத்த பாலமும் நடேசனார்தான். அதன் விளைவாகவே 1916ஆம் ஆண்டு "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' தொடங்கப்பட்டது. அதுவே பின்னாளில் நீதிக்கட்சி என அறியப்பட்டது.
தமிழ்கூறு நல்லுலகம் நடேசனாருக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது. திராவிடர் சங்கத்தின் நூற்றாண்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நமக்கு மகிழ்வையும், பெருமையையும் தருகின்றதெனினும், மீண்டும் பார்ப்பனிய மேலாதிக்கமும், ஆரிய அடிவருடிகளின் காவடிகளும் மிகுந்து கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நம் முன்னோர்கள் தொடக்கிச் செயல்படுத்திய பணிகளை இப்போது மீண்டும் தொடக்க வேண்டிய இடத்தில் நிற்கிறோமோ என்னும் ஐயமும் உருவாகின்றது.
Post a Comment