Search This Blog

28.3.12

ஓநாய் ஒருபோதும் சைவமாகாது! ஒரே தீர்வு தனி ஈழமே!!


ஜெனிவா தீர்மானத்திற்குப் பிறகும் சிங்கள அரசின் ஆணவமும், திமிரும் அடங்கிடவில்லை!
ஓநாய் ஒருபோதும் சைவமாகாது! ஒரே தீர்வு தனி ஈழமே!! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை
ஜெனிவாவில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட, இலங்கை அரசின் திமிரும், ஆணவமும் அடங்கிப் போய்விடவில்லை; மாறாக இந்தியாவின் சுயமரியாதைக்கே சவால்விடும் வகையில் நடந்துகொண்டு வருகிறது. இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்களின் உரிமை வாழ்வுக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில், தனி ஈழம் ஒன்றே இறுதித் தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் இராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள்பற்றி ஆராய்ந்து அறிந்து, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்கள் நியமித்த மூன்று நாட்டு உறுப்பினர்கள் குழு அதன் அறிக்கையை தந்து 10 மாதங்களுக்குமேல் உருண்டோடிவிட்டன.

ஜெனிவா தீர்மானம்


அண்மையில் சென்ற வாரம் (23.3.2012) ஜெனிவாவில் கூடிய அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கையின் இந்தப் போர்க் குற்ற, மனித உரிமைகள் மீறல்பற்றி அமெரிக்கா முன்வந்து, இலங்கைமீது கண்டனத்தோடு, மீண்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு வழிவகை செய்ய வற்புறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தது.

இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தினை வரவிடாமலும், அது வெற்றியடையாது இருக்கவும் தன்னாலான அத்துணை முயற்சிகளையும் - பல்வேறு முறைகளையும் கையாண்டும், கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும், இறுதியில் படுதோல்வியைத்தான் அடைந்தது.
இந்திய அரசுக்குத் தமிழ்நாட்டின் அழுத்தம்

இந்திய அரசு தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோபாவேசம், கட்டுப்பாடான குரல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருப்பதையும் மறுபரிசீலனை செய்வோம் என்ற தி.மு.க.வின் எச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக ஆளுங்கட்சி, இடதுசாரிகள் எல்லாம் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் - அழுத்தம் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியஅரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததோடு, ஆதரித்து வாக்களிக்கவும் இந்திய அரசு முன்வந்து, தனது மனித உரிமைக்கான கவுரவத்தை உயர்த்திக் கொண்டது - தமிழர்களின் நன்றிக்குரியதாகவும் ஆயிற்று.

இலங்கை அரசு என்ற அடிபட்ட ஓநாய்!

இது கண்டு அடிபட்ட ஓநாய் சீறி எகிறிப் பாய்வதுபோல, தன்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, உலகத்தின் பற்பல நாடுகளுக்கு தனது உண்மையான கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்து தெரிந்துவிட்டதே என்ற எரிச்சலால் நிலை தடுமாறி நடந்துகொள்ளுகிறது இலங்கையின் இராஜபக்சே அரசு!
நாம் எதிர்பார்த்த ஒன்றுதான் இது! தன்னுடைய அரசு இலங்கையின் தீவிரவாதத்திற்கு எதிரானதுதானே தவிர (இலங்கை) ஈழத் தமிழர்களுக்கு - சிவிலியன்களுக்கு - எதிரானதல்ல என்ற பழைய பாட்டைப் பாடிக் கொண்டே, சொந்த நாட்டு குடிமக்கள் மீதே விமானம்மூலம் குண்டு வீசி அழித்த கொடுமை உலக வரலாறு இதற்குமுன் அறியாத ஒன்று!

நம்பிய மக்களைக் கழுத்தறுத்த இலங்கை இராணுவம்!

தமிழர்களே வன்னிப் பகுதிக்கு பத்திரமாக வந்து விடுங்கள்; உங்களுக்கு அது பாதுகாப்பான பகுதி என்று முன்பு கூறியது இலங்கை அரசு. குழந்தை குட்டிகளும், பெண்களும், முதியவர்களும் ஆக சுமார் மூன்றுலட்சத்து முப்பதாயிரம் மக்கள் அங்கே போனால் குண்டு விழாது என்று நம்பிச் சென்ற நிலையில், அந்த மக்களை வான்வழித் தாக்குதல் (குண்டுவீச்சு) மூலம் சிங்கள இராணுவம் கொன்று அழித்ததே! (நேரில் பார்த்த ஒரு செய்தியாளர் விவரிப்பு இரண்டாம் பக்கம் காண்க) அய்.நா. மனித உரிமை மீறல்பற்றி ஆய்வு அறிக்கை தரும் தகவல் இது!
போர் முடிந்ததே; முள்வேலிகளுக்குள் - ஆடு, மாடுகளை விடக் கேவலமாக அந்நாட்டுத் தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கும் அவலம் நீங்கியதா?
180 நாள்களில் முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியமர்த்துவோம் என்ற உத்தரவாதத்தை இராஜபக்சே தந்தது நீர்மேல் எழுத்தா? காற்றில் பறந்த குரலா?
இந்நிலையில், காலந்தாழ்ந்தாவது உலகப் பார்வை வெளிச்சம் இந்த அடிமை இருட்டில் வதியும் எமது ஈழத் தமிழினத்திற்குக் கிடைத்தது கண்டு நம்மைப் போன்ற - கருமத்திற்குரிய கடமையாளர்கள் ஆறுதல் அடைகிறோம்.

இப்பொழுதும் நடப்பது என்ன?

1. இலங்கை அரசு உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒடுக்குவது மட்டும்தான் அதன் குறி என்றால், ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு தந்து அவர்களது நம்பிக்கையை, நல்லெண்ணத்தைப் பெற்று, நல்லாட்சி தமது ஆட்சி என்று உலகத்தாருக்குக் காட்டியிருக்க வேண்டாமா?
ஆனால், இன்று அங்கே இலங்கையில் நடப்பது என்ன? உலக செய்தியாளர்களுக்கும் அடி- உதை; அவர்கள் போர்க்குற்றங்களை விமர்சித்தனர் என்பதற்காக கை, கால்களை உடைப்போம் என்று பகிரங்கமாக பண்பற்றுப் பேசுகிறார் இராஜபக்சே பரிவாரங்களில் ஒருவரான இலங்கை அமைச்சர் பெர்வின் சில்வா என்ற சிங்களர்.
2. வெளிப்படையாகவே அய்.நா. தீர்மானத்திற்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று திமிருடன் உலக நாடுகளுக்கும், அய்.நா.வுக்கும் சவால் விடுகின்றது சிங்கள இராஜபக்சே அரசும், அதன் பரிவாரங்களும்.

இந்தியாவை அவமதிக்கும் பேச்சு!

3. நமது இந்திய அரசிடம் பெற வேண்டியதை கெஞ்சி, கொஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக் கொண்டு, நமது பிரதமர் இலங்கை அதிபருக்கு விளக்கம் தந்து எழுதிய கடிதத்தையும், இந்தியப் பிரதமரையும், அவரது அரசையும் மிகவும் கேவலப்படுத்துவதுபோல், இந்தியப் பிரதமருக்குப் பதில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று ஆணவத்துடன் கூறுகிறார் சிங்கள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் என்ற சிங்கள ஓநாய்க் கூட்டத்தின் ஓருருவம்!
4. அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளில் இலங்கைத் தூதரகத்தை மூட யோசிக்கிறார்களாம்! ஆற்றிடம் கோபித்து கால் கழுவாமல் போன புத்திசாலி போன்ற நடவடிக்கை அல்லவா இது!
ஈழத் தமிழர்களை சுயமரியாதையுடன் வாழ வைக்கும் கடமை நமக்கு உண்டு என்று நமது பிரதமர் சாதுபோல் நாடாளுமன்றத்தில் தனக்கே உரிய மென்மைக் குரலில் பேசினார்!
இப்போது ஈழத் தமிழர்கள் சுயமரியாதைக்கு சிங்கள அரசால் ஏற்பட்ட பங்கம், அவமரியாதை இந்திய அரசுக்கும், பிரதமருக்குமே அவர்களது திமிர்வாத அகங்கார ஆணவப் பேச்சால் வெளியாகிவிட்டது!
இதுதான் சிங்கள வெறியர்களின் உண்மை முகம்! இதை இப்போதாவது இந்திய அரசு புரிந்துகொள்வது முக்கியம்!

நிரந்தரத் தீர்வு - தனி ஈழமே!

ஓநாய் சைவமாகிவிட்டது என்பதை நம்பினால், அது ஓநாயின் குற்றமல்ல, நம்புபவரின் தவறு. அல்லது தப்புக் கணக்கு!
5. அமெரிக்காவின் தீர்மானத்தை செயல்படுத்த அழுத்தம் தரவேண்டியதில் இந்தியாவின் பங்கு மேலும் பெருகவேண்டும்.
அய்.நா.வில் பொருளாதாரத் தடை போன்ற கடும் நடவடிக்கைகள் வரவேண்டும். தமிழீழம்தான் இனி நிரந்தரத் தீர்வு என்ற தி.க., தி.மு.க.வின் யோசனைதான் இனி ஒரே ஒரு வழி.
மருந்துகளால் முடியாதது - இனி அறுவை சிகிச்சையால்தான் முடியும். இந்திரா காந்தி காட்டிய வழியை (வங்கதேசம்) இனி மத்திய அரசு மறக்கக் கூடாது.

----------------கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 28-3-2012

4 comments:

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் சுயமரியாதைக்குச் சவால்!


தமிழகம் கட்சிகளை மறந்து கொடுத்த கடும் அழுத்தத்தினால், இந்தியா வேறு வழியின்றி ஜெனிவா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்குப் பச்சைக் கொடி காட்டியது. கடைசி நேரத்தில் அத்தீர்மானத்தை நீர்த்துப் போகும் ஒரு வேலையிலும் ஈடுபட்டது.

எது எப்படியாக இருந்தாலும் இலங்கையின் கோர முகம் உலக அரங்கில் சிதைக்கப்பட்டு விட்டது. அந்தத் தீர்மானத்தால் பெரிய விளைவு ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்று துக்ளக் சோ ராமசாமி அய்யர்கள் கரடியாகக் கத்தினாலும், இலங்கை துடிப்பதிலிருந்தே தெரிகிறது - ஜெனிவா தீர்மானம் கடுமையாகக் கொட்டி இருக்கிறது என்பது.

உலக அரங்கில் அவமானப்பட்ட ஆத்திரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், நிதானம் சிறிதுமின்றி இன்னும் கெட்டுப் போகிறேன் - என்ன பந்தயம்? என்பது போல இலங்கை அமைச்சர்கள் ஆத்திரம் அனல் கக்க நிர்வாணக் கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர். ஆத்திரக் காரர்களுக்கு அறிவு மட்டு என்பது நம் நாட்டு அனுபவ பழமொழியாயிற்றே!

இலங்கை நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே - பயங்கரவாதிகள் அந்தந்த நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் பாதிப்புகளை அனுபவிக்கக் கூடும் என்று சாபம் விட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பெர்வின் சில்வா தாதா போலவே பேசி இருக்கிறார்.

ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கையில் செய்தியாளர்களாகப் பணிபுரிந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் மூன்று பேர் இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் பற்றிக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளனர். பாக்கிய சோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அபயசேகரா ஆகிய அந்த மூன்று பேர்களும் கொழும்பு திரும்பினால் அவர்களுடைய கை, கால்களை உடைப் பேன் என்று வன்முறை வெறியில் உளறியிருக்கிறார்.

இலங்கையில் ஊடகக்காரர்கள் கொல்லப்பட்டது என்பதைத் தொகுத்தால் அது ஒரு பெரிய தொகுதியாகி விடுமே!

இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் என்பவர் அடிபட்டும் புத்தி கொள்முதல் பெற்றுக் கொள்ளாத நிலையில், கொழும்புவில் செய்தியாளர் களுக்குப் பேட்டி கொடுத்தபோது, இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்துக்குக் கட்டுப்படுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும், ஜெனிவா தீர்மானத்துக்குப்பின் இந்தியப் பிரதமர் இலங்கை அதிபருக்கு எழுதிய கடிதத்துக்குப் பதில் எழுதப் போவதில்லை என்றும் ஆணவத்தின் உச்சியில் தாவிக் குதித்து உறுமுகின்றார்.

ஒரு சுண்டைக்காய் நாடு உலகில் வல்லரசாக ஆகப் போவதாகக் கூறப்படும் இந்தியாவுக்கு எதிராக இப்படிப் பேச முடிகிறது என்றால் இதற்குக் காரணம் 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் முதுகு நிமிர்ந்து பேசாததுதான்.

இதற்குப் பிறகாவது இந்தியா சுதாரித்துக் கொண் டால் நல்லது. ஈழத் தமிழர்களின் சுயமரியாதைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் நல்லது நடக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் கூறினார். இப்பொழுது இந்தியாவின் சுயமரியாதைக்கே சவால் விடும் வகையில் இலங்கை அதிபரும், அவர்தம் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களும் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை நேரில் அழைத்துக் கண்டிக்கும் அளவுக்கு இதில் பிரச்சினைகள் இருக்கின்றன.

இந்தியா வளைந்து நெளிந்து, வழவழா, கொழ, கொழா என்று நடந்துகொண்டதன் விளைவு இதுதான்.

ஜெனிவா தீர்மானத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரகடனப்படுத்திய நிலையில் உலக நாடுகள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

அய்.நா.வும் விளக்கம் கேட்கவேண்டும்; அடுத்து போர்க் குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டும்.

அப்பொழுதுதான் உலகில் ராஜபக்சேக்கள் இனிமேல் உருவாக மாட்டார்கள். இனப் படுகொலைக்கும் முற்றுப்புள்ளி ஏற்படும். அரச பயங்கரவாதம் என்ற ஒன்று தலை தூக்காது.

முடிந்தால் இந்தியா இந்தத் திசையில் சிந்திக்கட்டும்; செயல்களைத் தொடங்கட்டும். இது இந்தியாவுக்கும் நல்லது - உலகுக்கும் நல்லது. 28-3-2012

தமிழ் ஓவியா said...

நெஞ்சு பொறுக்குதில்லையே! இலங்கை இறுதிக்கட்ட போரில் தமிழினம் நாசம்! படம் பிடிக்கிறார் பத்திரிகையாளர்



கொழும்பு, மார்ச் 28- இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது சிங்கள அரசு ராணுவத்துடன் நடத்திய கூட்டுக் கொலை களின் கோரமுகத்தை அலைவரிசை 4 தொலைக்காட்சி வீடியோ மூலம் வெளியிட்டு உலக மக்களின் இதயத்தை அதிர வைத்தது.

இந்த நிலையில் நந்திக் கடலோரம் நடந்த ஈவு இரக்கமற்ற இனப்படுகொலைகள் குறித்து சுரேன் கார்த்திகேசு, என்ற பத்திரி கையாளர் தெரிவித்துள்ளார். இவர் இலங்கை யில் இருந்து வெளியான ஈழ நாதம் பத் திரிகையின் செய்தியாளராகவும், ஒளிப்படக் காரராகவும் இருந்தார். இவர் வன்னிப் பகுதி யில் 7 வருடங்கள் பத்திரிகையாளராக இருந் தவர். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்காலில் இறுதிப்போர் நடந்த போது குண்டுவீச்சில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

மரணத்தில் இருந்து மீண்ட அவர் தற் போது கனடாவில் தங்கியுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது தனது கண்முன் நடந்த கொடூரங்களை விளக்கியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- 2008 நவம்பர் 29 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தோம். அப்போது தர்மபுரம் என்ற இடத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்தமுகாமில் மன்னார் முதல் கிளிநொச்சி வரையிலான மக்கள் இடம் பெயர்ந்து வந்து தங்கியிருந்தனர். அந்த நள்ளிரவில் திடீர் என முகாமில் இலங்கை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. பெரும் புகையும் தீயும் சூழ்ந்து கொள்ள யார் செத்தது என்றுகூட யாருக்கும் தெரியாத நிலை.

தமிழ் ஓவியா said...

மரணம் எங்களைத் துரத்தியது

இரவு 2 மணிக்கு காமிராவை தூக்கிக் கொண்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு ஓடி னேன். மக்கள் ரத்தம் வடிய ஓடிவந்தார்கள். வைத்திய சாலை வரையிலும் வந்த வாசலில் செத்து விழுந்தவர்கள் பலர். அந்தத் தாக்கு தலில் மட்டும் 30க்கும் அதிகமானோர் இறந்து போனார்கள். அதன் பிறகு நாங்கள் ஓடிக் கொண்டே தான் இருந்தோம். மரணம் எங் களைத் துரத்தியபடியே இருந்தது. பொது வாக, ஈழத்தில் யாரேனும் இறந்தால், சில சடங்குகள் செய்துதான் புதைப்போம். அந்த இடத்தில் யாரும் நடக்கக்கூட மாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால், இறுதிக்கட்டத்தில் ஒதுங்க ஒரு நிழலின்றி, ஆட்களைப் புதைத்த இடத்தின் மேலேயே கூடாரம் அமைத்துத் தங்கினோம். 2009 ஏப்ரல் 25 ஆம் தேதி வலைஞர் மடம் என்ற இடத்தில் நான் தாக்குதலில் சிக்கி னேன். நெஞ்சில் குண்டு சிதறல்கள் துளைத் தன. சிகிச்சைக்காக முள்ளி வாய்க்கால் வைத்திய சாலையில் இருந்த போது, அங்கு குண்டு போட்டார்கள். உயிர் பிழைக்க மருத்துவமனைக்கு வந்தவர்கள். உடல் சிதறிச் செத்தார்கள். சாவதைவிட காயம் பட்டு உயிரோடு இருப்பதுதான் கொடுமை. சரியான மருத்துவ வசதிகளோ, உணவோ இல்லாமல் எல்லோரும் நடைப்பிணங்களாக இருந்த நிலையில்...யார் யாரைப் பராமரிப் பது? படுகாயம் அடைந்தபலர் ஆங்காங்கே கைவிடப்பட்டு ஆதரவற்று கிடந்ததை இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது.

அவர்கள் ரத்தம் வெளியேறி செத்திருப் பதைத் தவிர, வேறு வழி இல்லை. சாலையின் இருபுறமும் ஆங்காங்கே பிணங்கள் கிடக் கும். சுதந்திராபுரம் சந்திக்கு அருகில் கிடந்த ஒரு தாயையும் மகளையும் நானே எரியூட்டி னேன். நாள்கள் செல்லச் செல்ல உணவுக் கும், தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டன. தொண்டு நிறுவனங்கள் கஞ்சி கொடுப்பார்கள். 12 மணி கஞ்சிக்கு 10 மணிக்கே போய் நிற்க வேண்டும். அந்த வரிசையிலும் குண்டு விழும். அதில் அய்ந் தாறு பேர் செத்தால் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு, மீதி ஆட்கள் வரிசையில் நிற்பார்கள். ஒரு கிலோ மிளகாய் ரூ.12 ஆயிரம் செத்தவர்கள், சாக இருப்பவர்கள் பிழைக்க போராடினோம் ஒரு கிலோ மிளகாய் 12 ஆயிரம் ரூபாய், சீனி 6, ஆயிரம் ரூபாய், பால்மாவு பாக்கெட் 4,000 ரூபாய்... என்ன செய்ய முடியும்? கொஞ்ச நாள்களில் அந்தப் பொருள்களும் கிடைக்கவில்லை. பல நாள் களாக எல்லோரும் பட்டினியில் கிடந்தோம். தேங்கிக்கிடக்கும் மழை நீர்க்குட்டையில் இருந்த தண்ணீரை எடுத்து வடிகட்டிக் குடித் தோம். 10 நாட்கள் தொடர்ந்தாற்போல பதுங்கு குழிக்குள் இருந்த அனுபவம் பல ருக்கும் உண்டு. பதுங்கு குழியே வாழ் வானது. நடுச்சாமத்தில் தூங்குபவர்களை எழுப்பிவிட்டு மீதி உள்ளவர்கள் தூங்கு வார்கள்.

செல்போன் தொடர்பு அறுந்தது

2009 ஏப்ரல் வரையில் செல்போன் தொடர்பு இருந்தது. மே மாதம் தொடக்கத்தில் அதுவும் அற்றுப்போனது. ம 18 ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என அறி விக்கப்பட்டபோது, எல்லோரும் கைவிடப் பட்டதைப்போல உணர்ந்தனர். தோற்று விட்டோம் என்ற உணர்வு எல்லோருக்கும் வந்து விட்டது. அந்தச் செய்தி வெளியான நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகா மில் இருந்தனர். அங்கு நீண்ட வரிசையில் வெயிலில் சாப்பாட்டுக்காகத் தட்டேந்தி நிற்கையில் பலர் கோவென்று கண்ணீர் விட்டு கதறினார்கள். அதன்பிறகு முகாம் நாட்களில் பலருக்கு மனச்சிதைவு நோய் வந்துவிட்டது. நான் முகாமில் இருந்து வெளியேறி விமானம் மூலம் தாய்லாந்து வந்தேன். அங்கே இருந்து 492பேர் ஒரு கப்பல் மூலமாக மூன்று மாதக்கடல் பயணத் துக்குப் பிறகு கனடா வந்து சேர்ந்தோம். போர் எங்களைச் சிதைத்து விட்டது.

எங்களை என்றால் எங்கள் மகிழ்ச்சியை, எங்கள் போராட்டத்தை, எங்கள் மண்ணை, எங்கள் மக்களை, எங்கள் உடலை, எங்கள் உயிரைப் பறித்துவிட்டது. - இவ்வாறு அவர் கூறியுள்ளார். 28-3-2012