Search This Blog

26.3.12

பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சுயமரியாதை உணர்வுக்கு வெற்றி!


மகளிர் உரிமைப் பாட்டையில் புதிய மைல் கல்

மண விலக்கு, சொத்துரிமை, தாம்பத்தியம் ஆகியவைபற்றி மத்திய அரசின் புதிய சட்டம் வரவேற்கத்தக்கவை!

தந்தை பெரியார், அம்பேத்கர் உருவாக்கிய சுயமரியாதை உணர்வுக்கு வெற்றி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற் றப்பட்ட மகளிர் உரிமைக்கான சட்டத்தை வர வேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

நம் நாட்டுத் திருமண சட்டங்கள் - குறிப்பாக இந்து திருமண சட்டங்கள் திருமணத்தை ஒரு புனிதக்கட்டு - பிரிக்க முடியாத, பிரிக்கக்கூடாத பந்தம் - புனிதம் (Sacrament) என்று ஆக்கியதன் மூலம் பெண்கள் வெறும் ஜடங்களாக, பொருள்களாக, மிருகங்களைப் போல நடத்தப்பட்ட நிலையை மாற்றிவிட அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்து இந்து சட்டத் திருத்த மசோதா(Hindu Code Bill) என்ற அந்த அற்புத உரிமைச் சாசனத்தை நிறைவேற்றிட முயலுகையில், அன்றைய ஆட்சி பீடத்தின் வைதீகத் தலைமை இராஜேந்திரபிரசாத் போன்றவர்களும் பழைமை வாதிகளும் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள்.

பிரதமர் நேருவால் சமாளிக்க முடியவில்லை; துவக்கத்தில் அம்பேத்கருக்கு அளித்த வாக்கு றுதியை அவரால் காப்பாற்ற இயலவில்லை; விளைவு அமைச்சர் பதவியிலிருந்து - கொள்கைக்காக - அண்ணல் அம்பேத்கர் விலகினார்.

கிடப்பில் போடப்பட்ட பெண்ணுரிமைகள்

சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, தத்து எடுத்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு சீர்திருத்த புரட்சிக் கருத்துக்கள், பெண்களுக்குப் பாலியல், சமூகநீதி வழங்கும் வாய்ப்புள்ளவை கிடப்பில் போடப்பட்டன.

பிறகு காலம் கனிந்தது; நம் இயக்கம் போன்றவை களால் ஏற்பட்ட புயல் வேக பிரச்சாரம், திராவிடர் இயக்கமாம் தி.மு.க. போன்றவை மத்தியில், மாநிலத்தில் ஆளுங் கட்சியானதன் விளைவு - சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்குச் சொத்துரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன் கொடுமை, பாலியல் கொடுமை, பெண்ணை மதிக்காமை - பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளல் எல்லாம் ஒழிக்கப்படும் வகையில் இன்று சட்ட பூர்வமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் புதிய சட்டங்களால் - புதிய திருத்தங்களால் பல்வேறு நல்ல திருப்பங்களைக் கண்டு வருகிறது.

1929இல் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்

ஆண்களையொத்த சொத்துரிமை பெண்களுக்கும் வேண்டும் என்று அய்யா தந்தை பெரியார் 1929 செங்கற்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானம் 2005-2006இல் மத்தியில் சட்டமாகி, நடைமுறைக்கு வந்துள்ளது. இணைந்து வாழ முடியாத பெண்கள், மண விலக்குப் பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், கால தாமதங்களைத் தவிர்த்து அவர்கள் உடனே விலகி, மன நிம்மதியுடன் வாழச் செய்யும் வகையில் அண்மையில் 2010 திருமணச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23.3.2012 அன்று ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

தந்தை பெரியார் அவர்கள் வெகு காலமாக சொல்லி வந்த ஒரு கருத்து, மற்ற மேலை நாடுகள் போல மணவிலக்கு - விவாகரத்து - எளிமையாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

வரவேற்கத்தக்க புதிய சட்டம்

1) சில கணவன்மார்கள் வழக்கை நீட்டி, இழுத்தடித்து - வேண்டுமென்றே - மீண்டும் வாழ விரும்புவதுபோல நாடகம் ஆடுவதை தற்போது உள்ள சட்டம் அனுமதிக்கும் நிலை - புதிய சட்டத் திருத்தம் மூலம் இனி முடியாது. காத்திருக்கும் காலம் என்பது ரத்து செய்யப்பட்டு - இரண்டு பேரும் இணைந்து தந்த மணவிலக்கு மனுவினை நீதிமன்றங்கள் ஏற்று - அனுமதி அளிக்க வழி செய்கிறது!

2) கணவன் சொத்தில் மனைவிக்கு மணவிலக்கு பெற்ற நிலையிலும் சொத்தில் உரிமை தர வேண்டும் என்பதும் முக்கிய திருப்பமாகும்.

படிப்பறிவில்லாத பல பெண்கள் - மனைவிமார்களுக்கு - இப்படி சொத்தில் உரிமை கோரலாம் என்பதே தெரியாத அறியாமை நிலைதான் நாட்டில் உள்ளது. அதற்கும் இந்தத் திருத்தம் விடியலை ஏற்படுத்துகிறது!

டில்லி உயர்நீதிமன்றம்கூட நேற்று முன்னாள் ஒரு தீர்ப்பில் பாலுறவு - தாம்பத்யம் வைத்துக் கொள்ள மறுப்பதையே ஒரு தகுந்த காரணமாக கொண்டு மணவிலக்குப் பெற வாய்ப்பு உண்டு என்று ஒரு புரட்சிகர தீர்ப்பைத் தந்துள்ளது!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் எழுப்பிய புயல்

பல மாதங்களாக தாம்பத்திய வாழ்வே நடத்தாது வெறும் அக்னிசாட்சியாக, சப்தபதி சடங்குகள் செய்து ஊருக்கு, உலகத்தாருக்கு கணவன், மனைவி என்று வாழ்ந்தால் எஜமானன் - அடிமை உறவு தானே? எங்கே தோழமை உள்ளது? அதனையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.

தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைகள், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சிகள் என்னும் சூறாவளி எங்கும் சுழன்றடிக்கிறது!

இது மேலும் நல்ல சமுதாய மாறுதலை உருவாக்கும்.

--------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --”விடுதலை” 26-3-2012

4 comments:

மாசிலா said...

பதிவு பகிர்வுக்கு நன்றி.

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் கடவுள் மறுப்புப் பதாகை ஓங்குகிறது!


நல்லவராக வாழ கடவுள் தேவையில்லை என முழக்கம்

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய புரட்சி! வாசிங்டன், மார்ச் 27- நல்வாழ்க்கைக்குக் கடவுள் தேவையில்லை என்ற முழக்கத் துடன் அமெரிக்காவின் தலை நகரான வாசிங்டனில் 30 ஆயிரம் பேர் கூடினர். பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவில், இந்த இடி முழக்கம்! அமெரிக்காவே இதனை உற்று நோக்கியது.

30,000-த்துக்கும் மேற்பட்ட வெள்ளை, கறுப்பு, பழுப்பு, இளையோர், முதியோர், ஆண்கள், பெண்கள், மாணவர், பெரிய வேலையில் உள்ளோர் என்று அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்து குவிந்தனர்.

பல பேருந்துகளிலிருந்து அமெரிக்காவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் கனடாவி லிருந்தும் வந்து மார்ட்டின் லூதர் கிங் கூடிய அதே வாசிங்டன் மால் எனும் பெரிய இடத்தில் குவிந்தனர்.

இங்கிலாந்தின் ரிச்சர்ட் டாக்கின்சு, ஆஸ்திரேலியாவின் டிம் மிட்சன், பாடகி செல்லி சீசல் , ரோமேனியாவின் கிரீடா, இந்தியாவிலிருந்து டச்லீமா நச்ரீன்,மெக்சிகோவின் இன்றா சோனோ, தென் ஆப்பிரிக்கவின் ஜமீலா என்று பல பேச்சாளர்கள்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற தந்திரவாதி ஜேம்சு ரேண்டி தந்தை பெரியார் போலவே உங்கள் மேல் கோபம் இல்லை, உங்களை வெறுக்கவில்லை, உங் கள் மூட நம்பிக்கைகளைத்தான் வெறுக்கின்றோம். நாங்கள் எங்களைத் திருத்திக் கொள்ளத் தயார். கடவுளைக் காண்பியுங் கள்; இருக்கிறார் என்று ஒத்துக் கொள்கின்றோம், ஏமாற்றாதீர் கள்! முன்னேற்றத்தைத் தடுக்கா தீர்கள் என்றார்.அவருடைய ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை இன்னும் எந்த மந்திரவாதியாலும் பெற முடியாமல் அப்படியே இருக்கின்றது !

தமிழ் ஓவியா said...

ரிச்சர்டு டாக்சின்சு

ரிச்சர்டு டாக்கின்சு அறிவியல் முன்னேற்றத்தின் தடைக் கற்கள் நீங்கள். இனி அதை அனுமதிக்க மாட்டோம். பள்ளிப் பிள்ளை களுக்கு "அறிவார்ந்த அமைப்பு" என்று கடவுள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனைப் படைத்தார் என்பது அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனுக்கும் கலி போர்னியாவின் சான்பிரான்சிஸ் கோவிற்கும் இடையில் உள்ள 6000 மைல் தூரத்தை ஒரு மீட்டர் என்று சொல்வதற்கு ஒப்பான மடத்தனம் என்றார் !நீங்கள் தோற்கப் போவது உறுதியென் றார்.

அமெரிக்காவின் ரோடு அய்லண்ட் மாநிலத்தில் கிரேன் சடன் என்னும் நகரில் பள்ளியில் கடவுள் பெயர் இருப்பது சட்டத்திற்கு எதிரானது என்று நீதி மன்றத்தில் வென்ற மாணவி அவரடைந்த வெறுப்புகள், தனிமை, கொடுமைகளைப் பற்றிச் சொன்னார். ஆனால் தான் செய்தது ஒன்றும் பெரிதல்ல, எந்த மாணவர் வேண்டுமானா லும் செய்யலாம் என்று கூறினார். அவருக்குப் பல அமைப்புகளும் சேர்ந்து கல்லூரி படிப்பிற்காக 62000 டாலர்கள் பணத்தாளைப் பரிசளித்தனர்.

அமெரிக்க காங்கிரசின் உறுப் பினர் பீட் ச்டார்க், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாம் ஃகாக்கின்சும் வரவேற்றனர். மற்றவர்களைப் போலவே நமக் கும் நம் கருத்துகளைச் சொல்ல உரிமை உள்ளது.

அமெரிக்காவின் தலைவர்கள் ஜெஃபர்சனும், மேடிசனும் கட வுள் பெயரைச் சொல்லவில்லை. பின்னால் வந்தவர்கள் கடவுள் பெயரைப் புகுத்தினர். அமெரிக் கத் தலைவர் ஜான் கென்னடி மதத்திற்கும் அரசிற்குமுள்ள இடைவெளி கட்டாயமாகக் காப்பாற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்தனர்.

அமெரிக்கப் படைகளில் உள்ள போர் வீரர்களின் சார்பில் மத ,கடவுள் நம்பிக்கையற்றோர் கலந்து கொண்டனர்.

டச்லீமா நச்ரீன் கொரானைப் படிக்கும் யாவரும் அதில் உள்ள அநியாயங்களைப் புரிந்து கொண்டு மதத்தை எதிர்ப் பார்கள். கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கச் சொல்லும் வெறித்தனம் விரைவில் அடங்கும் என்றார். ஹேமந்த் மேதா மதங்களில் உள்ள மடத் தனங்களைத் தன் பள்ளி மாணவர்களுக்குச் சொல்வதில் பெருமைப்பட்டார். மாணவர் கள் யாரிடம் போய் உண்மை களைக் கேட்பது என்று திண் டாடிக் கொண்டுள்ளனர். சரியான பதில் சொல்ல வேண் டியது நமது கடமை என்றார். கேள்வி கேட்க வேண்டியது மாணவர்களின் ஆர்வம். பெற் றோர்கள் சரியான பதில் சொல்வதில்லை என்பது அவர்களுக்குப் புரிகிறது. ஆகவே யாரிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும் என்ற தயக்கத் துடன் அலைகின்றனர் என்றார்.

எங்கு பார்த்தாலும் பதாகைகள். நல்லவராக வாழக் கடவுள் தேவையில்லை.
நான் நாத்திகன், நாத்திக வாழ்வே நல் வாழ்வு.

பொய், பயத்தைப் பரப்பாதே!

என்று பல விதம்.

மாணவர்கள் அவரவர் செல விலே பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர். பலர் குடும்பங் களாகப், பச்சிளம் குழந்தைகளு டனும், வயதானவர்கள் தள்ளு நாற்காலியுடனும் வந்திருந்தனர்..

நாள் முழுவதும் பலர் பெரும்பாலும் நின்று கொண்டே கேட்டனர். பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் தொடர்ந்து நடந்தது.ஆங்காங்கே பெரும் திரைகளில் மக்கள் பார்த்தனர்.

அமெரிக்காவில் கடவுள் மறுப்பாளர் வெளியே பெருமையுடன் வரும் நாட்கள் பிறந்து விட்டது. இனி நாம் மறைந்து வாழத் தேவையில்லை என்று முழங்கினர்.

(தகவல்: டாக்டர் சோம. இளங்கோவன்,
பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் 27-3-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2012-13


2012-2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டுக் கான நிதி நிலை அறிக்கை நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரத்த முறையில் விவாதங்கள் எல்லா மட்டங்களிலும் வெடித்துக் கிளம்பி யுள்ளன.

பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினை களை நிதி நிலை அறிக்கை பேசினாலும் சமுதாயத்தின் பக்கம் அரசின் பார்வை அறவே இல்லை என்பது வேதனையானது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் மகத்தான பாய்ச்சலாகக் கருதப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் மற்ற மாநிலங்களும் இதனை ஒரு வியப்பாகவே கருதின.

புதிதாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை உருவாக்கும் மனம் இல்லா விட்டாலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சமத்துவபுரங்கள் சரிவரப் பராமரிக்கப்படுமா என்று தெரியவில்லை.

தலைவர்களின் நினைவுச் சின்னங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான தந்தை பெரியார் நினைவகம் - (வைக்கத்தில்) ஈரோடு அய்யா, அண்ணா நினைவு இல்லம் மேம்பாடு குறித்து பேசப்படவில்லையே!

வேளாண் பிரச்சினைக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பதற்கு உழவர் சந்தைகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன.

அதுபற்றிய பேச்சுக்கே இடம் இல்லை இந்த நிதி நிலை அறிக்கையில்; அவர்களின் உற்பத்திக்கு நல்ல விலை பற்றிய வாடையும் இல்லை. இந்துஅறநிலையத்துறை என்ற தலைப்புப் பற்றிப் பேசும்போது இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான தமிழ்நாடு சட்டத்தை செயல்படுத்துவதுபற்றி ஒரு சிறு குறிப்பும் பேசப்படவில்லையே!

அன்னை நாகம்மையார், டாக்டர் தருமாம் பாள், அன்னை மணியம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி போன்ற வீராங்கனைகளின் பெயர்களால் மகளிர் முன்னேற்றத்திற்கு கலைஞர் தலை மையிலான அரசால் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுபோல ஏதாவது ஒரு புதிய மறுமலர்ச்சித் திட்டத்தைப்பற்றி இந்த ஆட்சி இதுவரை சிந்தித்ததுண்டா? அறிமுகப்படுத்தியதுண்டா?

இந்தப் புதிய திட்டம் இதுவரை யாராலும் சிந்திக்கப்படாதது, நாங்கள் மட்டுமே முதன் முதலாகக் கொண்டு வந்துள்ள திட்டம் என்று சொல்லும் படியாக இவ்வாட்சி இதுவரை எதையாவது அறிவித்ததுண்டா?

இந்த ஆட்சி தனித் தன்மையாக செய்வது ஒன்று உண்டு என்றால் இது ஏற்கெனவே இருந்த ஆட்சி அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்களை ஒன்றுமில்லாமல் செய்வதுதான்!

விலைவாசி என்று எடுத்துக் கொண்டால் ஏற்கெனவே பால் விலை, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்கிற இடி தலைமேல் விழும் என்கிற அபாயம் ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்கும்போது எண்ணெய்க்கு வரி விதிப்பது ஒவ்வொரு சமையல் கட்டிலும் பெண்களால் அர்ச்சனைக்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை. ஓட்சுக்கும், கோதுமைக்கும் வரியைக் குறைத்து எண்ணெய்க்கு வரியை உயர்த்துவது யார் நன்மைக்காக? 1500 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையா? பள்ளிக்கூட ஆண்டு அறிக் கையா என்று தெரியவில்லை.
27-3-2012