Search This Blog

22.3.12

சோதிடம் என்பது வேறு - வானவியல் என்பது வேறு



மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடத் திட்டம் வைப்பது என்ற முடிவை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. (20.1.2012)

அதற்குக் கை மேல் பலன் கிடைத்துள்ளது. சோதிடம் (Astrology) என்பது வேறு வானவியல் என்பது வேறு (Astronomy!) இரண்டும் ஒன்றல்ல படித்தவர்கள்கூட இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது பரிதாபமே!

சோதிடர்கள் கோள் என்று சொல்லும் சூரியன் உண்மையில் நட்சத்திரமாகும். சோதிடத்தில் முக்கிய கோளான பூமிக்கு இடமில்லை அதே நேரத்தில் பூமியின் துணைக்கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

இராகு, கேது என்று இரு கோள்களைக் குறிப்பிடுகிறார்களே உண்மையில் அப்படி கோள்கள் கிடையாது என்று வானவியல் அறுதியிட்டு அறை கிறது. செவ்வாய், வியாழன், சனி இவைகளுக்குத் துணைக்கோள்கள் முறையே 2,16,22 இருக்கின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் எழுதி வைத்துள்ளனரா? இப்படி துணைக்கோள்கள் உண்டு அறியாதவர்கள் எப்படி இவற்றிற்குப் பலன் எழுதி வைத்திருக்க முடியும்?

பூமி நிலையானது என்றும், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்கிற சோதிடத்தை நம்பி பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்று எப்படிதான் துணிந்தனரோ தெரியவில்லை.

நம் நாட்டுக் கல்வியின் தரம் இதுதானா?

சோதிடர் கூறும் இராசி வட்டத்தில் பல கோடி நட்சத்திரங்கள் உண்டு. இவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் 27 நட்சத்திரங்களே.

ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு இடைவெளி துரத்தில் இருக்கும் பொழுது கிரகங்கள் எப்படி இராசி வட்டத்துக்குள் குடியிருக்கின்றன?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் கிடையாது.

சனிக்கிரகம் பொல்லாதது - பாவம் பிடித்தது என்றெல்லாம் உளறி வைத்துள்ளனர். 28.1.2006 அன்று சூரியன் - பூமி - சனி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அதனால் என்ன பாவம் வந்து சூழ்ந்து விட்டது?

இப்படி நேர்நோட்டில் வந்ததைக்கூட விஞ் ஞானிகள்தானே தெரிவித்தனர். 10.2.2007 அன்று பூமிக்கு அருகில் வந்த சனிக்கிரகத்தை பெரியார் அறிவியல் மய்யத்தில் உள்ள கோளரங்கத்திற்குச் சென்று பொது மக்கள் பார்வையிட்டனரே! அப்படிப் பார்வையிட்டவர்களை சனிப் பகவான் பிடித்துக் கொண்டானோ!

கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படு கின்றன; நிரூபணம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக புளூட்டோ என்னும் கிரகம் பற்றி 1930இல் கூறப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கிரகத்திற்குரிய தகுதிகள் அதற்கு இல்லை என்று கூறி கோள்களின் பட்டியலிலிருந்து அகற்றி விட்டனர்.

இப்படி விஞ்ஞானம் புதுப்புது உண்மைகளைக் கண்டறியும் நிலையில், அறிவியல் வளராத காலத்தில் வெறும் கண்களால் விண்வெளியைப் பார்த்து அப்பொழுது இருந்த அறியும் பக்குவத்திற்கு ஏற்ப எதையோ கிறுக்கி வைத்தனர்.

அவற்றை நாளும் அறிவியல் வளரும் இந்தக் கால கட்டத்தில் கண்மூடித்தனமாக நம்புவது, பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் கூறுகிறது; இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகத்திலேயே அறிவியல் மனப்பான்மைக்கு விரோதமாகப் பாடத் திட்டத்தை வைக்கத் துடிக் கின்றனர் என்பது வெட்கக் கேடாகும்.

பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம்தான் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

---------------"விடுதலை” தலையங்கம் 22-3-2012

6 comments:

தமிழ் ஓவியா said...

ஈடில்லாதது


திராவிடர் கழகத்திற்கு - அதன் தோழர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் கம்பீர மான மரியாதை என்ன தெரி யுமா? அவர்கள் கொள்கை வாதிகள் என்பதுதான்.

எந்தக் கட்சியிலும் உறுப் பினராகச் சேருவதற்கு அதற்குரிய படிவத்தைப் பூர்த்தி செய்து நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி னால் போதும். உறுப்பினர் அட்டை பளபளப்பாகக் கிடைத்துவிடும்.

திராவிடர் கழகத்தில் அப்படி எளிதாகச் சேர்ந்து விட முடியாது. காரணம் - அதற்கென்று வலுவாக நிற்கக்கூடிய கொள்கை.

எடுத்த எடுப்பிலேயே பி.எச்.டி.தான்- கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை ஏற்றுக் கொள்வ தோடு அதன்படி நடந்து காட்டவேண்டும்.

அதனால்தான் இலட்சக் கணக்கான உறுப்பினர்கள் இங்குக் குவிவது கிடையாது. மறைந்த டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம், எம்.ஏ., சொல்லுவார்: பல்லாயிரம் பன்றிக் குட்டிகளை விட ஒரு சிங்கக் குட்டி மேல் என்பார்.

ஒரு தகவலை புதுச் சேரியிலிருந்து அதன் தலைவர் மானமிகு சிவ. வீரமணி அவர்கள் அனுப்பி யுள்ளார்.

புதுச்சேரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் சு.துளசிராமன் - கதிர்காமம் ஆனந்தா நகரில் தாம் கட்டி யுள்ள இல்லத்தை எப்படி அறிமுகம் செய்து திறப்பு விழா நடத்தினார் என்பது தான் அந்தச் சேதி.

புதிய இல்லத்தைத் திறந்து வைத்தவர்கள் கண வனை இழந்த கைம் பெண்கள். ( பெற்ற மகன் -மகள் திருமணம் நடக்கும் போது கூட அவர்கள் அந்த இடத்தில் இருக்கக்கூடாது என்று நம்புகிற கொடிய சமூகம் இது என்பதை இந்த இடத்தில் கட்டாயம் நினைவு கூர்க! )

நடந்ததோ செவ்வாய்க் கிழமை! (செவ்வாய், சனி கிழமைகளில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்பதில் குரங்குப் பிடியாக இருக்கக்கூடிய நம்பிக்கையாளர்கள் வாழும் நாடு என்பதையும் கவனத் தில் கொள்க! )

அதுவும் எமகண்ட நேரத்தில் (செவ்வாய் 12 மணி முதல் 1.30 மணி வரை) இந்நிகழ்ச்சி நடந்துள்ளது.

(இராகு, எமகண்டம், குளிகை என்று நாள் ஒன்றுக்கு நான்கரை மணி நேரத்தைக் கெட்ட நேரம் என்னும் குழியில் புதைத்து பேன் குத்திக் கொண்டு இருக்கும் படித்தவர்கள் உண்டு என்பதையும் எண் ணிப் பார்க்க! )

இந்த மூடக் கும்மிருட் டுச் சூழ்ந்த சமூகத்தில் தந்தை பெரியாரின் தொண் டன், கறுப்புச் சட்டைக்காரன் - மூட மதியின் இருளை விரட்டும் வகையில், இதோ பார். இந்த மூடத்தனத்தின் முதுகெலும்பை முறித்து வாழ்ந்து காட்டுகிறோம்! என்பதை செயல்முறைப் படுத்திக் காட்டும் திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஈடு இணை ஏது?

- மயிலாடன் 22-3-2012

தமிழ் ஓவியா said...

துன்பம் என்னும் பேராசானிடம் படிப்போம்!


நல்லாசிரியர்கள்கூட பலவகை உண்டு; காரணம் மனித சுபாவம் என்பது மனிதருக்கு மனிதர் மாற்ற மானதுதானே! ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள மூளையின் அளவு - எடை ஒரே மாதிரிதான் என்றாலும், சிந்திக்கும் தன்மை ஒத்த வயதுள்ளவர்களிடையே கூட ஒரே மாதிரி இருப்பதில்லையே! சுபாவம் என்பதன் விளைவு.

எவ்வளவு பெரிய துயரத்தைச் சந்தித்தாலும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாது மனக்கட்டுப்பாட்டை பயிற்சியாக்கிக் கொண்ட மனிதர் களையும் பார்க்கிறோம். ஒன்றுமில் லாமல் ஒரு சிறிய காயம், சில துளி இரத்தம் சொட்டுவதைக்கூட பார்த்து சகிக்காது; ஓ வென்று கதறி அழுது புலம்பி, கண்ணீர்க் கடலையே பொங் கவிட்டு தங்கள் துயர அனுபவங்களால் உலகைக் கூட்டி விடுவோரையும் காண்கிறோம்.

காரணம், மனங்கள் வேறுபடு கின்றன. அதற்கேற்ப அவரவர் குணங் களும் மாறுபடுகின்றன!

துன்பங்கள் என்பவை முக்கியமாக இரு வகை; எதிர்பார்த்த துன்பங்கள், எதிர்பாராது திடீரென்று நம்மைத் தாக்கும் இடி, மின்னல் போல வந்து நம்மை அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கும் ஏவுகணை துன்பம்! மற்றொரு வகை.

எப்படியிருந்த போதிலும் துன்பம் என்பது ஒரு கண்டிப்பு நிறைந்த பேராசான் ஆகும்! கண்டிப்பு என்பது துவக்கத்தில் கசப்பு; பிறகோ நிரந்தர இனிப்பு!

அண்மையில் ஒரு நூலைப் படித்தேன். ரெய்னர் மரியார ரில்கேயின் அந்தப் பொன்மொழி போன்ற அறிவுரை மிகவும் சிறந்த பாடமாக நமக்கெல்லோருக்குமே அமையும் என்பது உறுதி!

... உங்கள் உள்ளத்தில் தீர்வின்றி இருக்கும் அனைத்தின்மீதும் பொறுமை யுடன் இருங்கள்.
பூட்டிய அறைகள் போலவும், அன்னிய மொழி நூல்கள் போலவும், உங்களுக்குள் எழும் கேள்விகளை நேசிக்க முயற்சி யுங்கள். உடனுக்குடன் (ரெடிமேட்) விடைகளைத் தேடாதீர்!

விடை உங்களுக்குக் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் அதற்கேற்றாற் போல் உங்களால் வாழ முடியாது என்பதாலேயே!

அப்பொழுதுதான் அந்த வினாவின் ஆழத்தைப் புரிந்து வாழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

இனி எதிர்காலத்தில், ஒரு வேளை உங்களை அறியாமலேயே நீங்கள் அந்த விடைகளைக் கண்டு அனுபவித்து பயன் பெறக்கூடியவர்களாகவும் இருக்கக் கூடும்!

எனவே தான் வள்ளுவர் ஒரு குறளில் பொதுத் தொண்டு செய்பவர்களுக்கு மட்டுமல்ல, தனி வாழ்க்கையில் அறநெறி யாளர்களாக, மனத் தூய்மையாளர்களாக உள்ளவர்களுக்கு அறிஞர் அண்ணா சொன்னதைப் போல கையில் காசில்லாத வர்களாயினும் மனதில் மாசில்லாதவர் களாக வாழும் நண்பர்கள் அமைதி யுடன் எவ்வகை துன்பங்கள் தொடர்ந்து கொட்டினாலும் அதன் வலியைப் பொருட்படுத்தாது, வளர முடியும். வாழ முடியும்.

துணிந்து இன்பம் (பொது மக் களுக்கு - பிறருக்கு - தன்னைத் தவிர மற்றையோருக்கு) பயக்கும் வினை செய்து மகிழும் மாந்தர்களாக மானுட வாழ்வை அமைப்பதே அறிவார் தொழில்!

இந்த சிறந்த பண்பு நலனை நாம் வளர்த்துக் கொள்ள நமக்கு அவ்வப் போது கிடைக்கும் பேராசான்தான் துன்பம் என்பது.

துவண்டு விடாமல் சற்று வளைந்து, பிறகு நிமிர்தலில்தான் நம் அறிவும், ஆற்றலும் நம் பயனுறு விளைச்சலைக் கொண்டு சேர்க்கும்!

இருட்டு வந்த பிறகுதானே வெளிச் சத்தின் பெருமை விளங்குகிறது - அதுபோல! 22-3-2012

தமிழ் ஓவியா said...

இந்தியா ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி- ஆதரவு 24; எதிர்ப்பு 15!

ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா.

தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது.

நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.

ஆனால், உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

ஆதரவளித்த நாடுகள்:

ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே

எதிராக வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.
Read: In English
இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.

தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.
---------http://tamil.oneindia.in/news/2012/03/22/world-us-resolution-against-sri-lanka-passed-successfully-aid0136.html

Seeni said...

nalla pakirvu!

தமிழ் ஓவியா said...

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.

உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?

தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இப்படி மெனக்கெட்டதாம்.

இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலியக்க வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.

சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.

ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.

இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.

இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.

இப்போது ஐநாவில் தோற்ற 'கடுப்பில்' உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
=========http://tamil.oneindia.in/news/2012/03/22/world-china-heavily-lobbying-sl-geneva-aid0091.html

தமிழ் ஓவியா said...

இந்தியாவிடம் கெஞ்சி தோற்ற 'ராஜபக்சே அண்ட் கோ'!

ஜெனீவா/கொழும்பு/டெல்லி: அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஆதரவைத் திரட்டி வந்த இலங்கை, தங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்றதுமே, இந்தியாவிடம் கடைசி நேரத்தில் ஆதரவு கேட்டு கெஞ்சிப் பார்த்தது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது செய்யுங்கள் என்று ராஜபக்சேவே கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்களது ஆதரவை முன்பு தெரிவித்திருந்தன. ஆனால் சீனா தயவு இருந்ததால் எப்படியும் தீர்மானம் தோற்கடிக்கப்படும், இந்தியாவும் நமக்கே ஆதரவு தரும் என்று நம்பிய இலங்கைக்கு, ஐரோப்பிய யூனியன் மொத்தமாக எதிர்ப்பு நிலை எடுத்தது பெரும் பீதியைக் கிளப்பியது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் ஒரு தீர்மானம் நிறைவேற 24 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு கிட்டத்தட்ட 24 நாடுகள் -இந்தியா உள்பட - ஆதரவு இருப்பது ராஜபக்சேவுக்கு தெரிந்துவிட்டதால் கடைசி நேர முயற்சியில் தீவிரமாக இறங்கிப் பார்த்து தோற்றார்.

இன்னொரு பக்கம், இலங்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் ஒரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதை பெரும்பாலான நாடுகளும் புறக்கணித்து விட்டன. இலங்கை போடும் விருந்தை சுவைப்பதற்காக மேற்கண்ட சில நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவலோடு வந்திருந்தனராம். இதனால் விருந்தை கசப்புணர்வுடன் இலங்கைத் தரப்பு முடித்ததாம்.

இதற்கிடையே, கடைசி நேர முயற்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவின் நிலையை மாற்றிக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டாராம்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துச் சொல்லி இந்தியாவின் நிலையை மாற்ற வேண்டும் என்று அவர் பிரணாப்பிடம் கோரினாராம். ஏற்கனவே நேற்று கிருஷ்ணாவை, சந்தித்த பெரீஸ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு கிருஷ்ணா, கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே பிரணாப்பைத் தொடர்பு கொண்டார் ராஜபக்சே என்கிறார்கள்.

நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், சோனியா காந்தியிடமும் கூட ராஜபக்சே பேசி ஆதரவு கோரலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லி விட்டதால் இந்திய அரசு தனது நிலையை கடைசிவரை மாற்றிக் கொள்ளவில்லை.
======http://tamil.oneindia.in/news/2012/03/22/world-sri-lanka-has-only-7-nations-support-in-unhrc-aid0091.html