வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி முறை நம்மிலே புதிய முறையில் நடைபெறுகின்றது. நமக்கு இம்மாதிரியான நிகழ்ச்சிக்கு என்ன முறை இருந்தது? எப்படி நடத்தப்பட்டு வந்தது என்பது நம் மக்களுக்கு ஒன்றும் தெரியாது.
சூழ்ச்சிக்காரர்களால் தந்திரக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட முறையில் வைதிகத் திருமணம் அவ்வப்போது நடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முறை எது முதல் ஏற்பட்டது என்று சொல்லுவதற்கும் இல்லை.
சாதாரணமாகக் கூற வேண்டுமானால் நாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் ஏற்படுத்திய முறையிலேயே நடந்து வந்து இருக்கின்றோம் என்று தான் கூற வேண்டும்.
இதன் மூலம் நம்மைக் காட்டுமிராண்டி களாகவும், பெண்களை நிபந்தனை அற்ற அடிமைகளாகவும் ஆக்குவதே இலட்சியமாகக் கொண்டே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இவற்றைச் சாஸ்திரத்தில், புராணத்தில், ஜாதியில் புகுத்திக் கொஞ்சம் கூட மாறுதல் ஏற்படாத அளவுக்கு நன்றாக ஆணி அடித்து விட்டார்கள்.
சிறு மாறுதல் ஏற்பட்டாலும், அது கடவுளுக்கு, மதத்துக்கு, சாஸ்திரத்துக்கு, ஜாதி முறைக்கு விரோதமானது என்று கருதி வெறுக்கும்படிச் செய்து விட்டார்கள்.
நாங்கள் நமது இழிநிலைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் காரணமாக இருப்பவை எவை எவை என்று சிந்தித்ததன் காரணமாகவே, இவை தான் காரணம் என்று உணரலானோம்.
எதை எடுத்துக் கொண்டாலும் சாஸ்திரப்படி, மதப்படி, ஜாதிப்படி என்று எண்ணுவதானாலேயே நமது அறிவு வளர்ச்சிக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
காட்டுமிராண்டிக் காலத்திலும், மூர்க்கத்தனமான காலத்திலும் ஏற்பட்ட முறை என்று ஏன் சொல்லுகின்றேன் என்றால், நம்மிடையே செய்யப்படும் முறையில் ஒவ்வொன்றுக்கும் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளாமலே செய்து வருகின்றோம்.
தமிழ் பழமையான மொழி; இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட மொழி; எல்லாப் பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் பெயர் உண்டு என்று பெருமைப்படுத்திக் கொள்ளுவார்கள்.
இப்படிப்பட்ட மொழியில் இம்மாதிரியான காரியத்துக்குப் பெயர் இல்லாமல் அந்நிய மொழியின் பெயர் இருக்கக் காரணம் என்ன?
ஒரு பொருளை உணர்த்தப் பல சொற்கள் உள்ள மொழி தமிழ் ஆகும். உதாரணமாக, நிஜம் என்ற கருத்தில் மூன்று சொற்கள் உள்ளன. உண்மை, மெய்மை, வாய்மை என்று குறிப்பிட்டு, அதன் நுட்பத்தைப் பற்றி விளக்குவார்கள். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை என்றும், உடலினால் பொய்யாது ஒழுகுவது மெய்மை என்றும், வாய்ச் சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை என்றும் நுண்பொருள் கூறுவார்கள்.
இப்படி எல்லாம் உள்ள மொழியில் முக்கியமான நிகழ்ச்சியாகிய கல்யாணத்துக்குப் பெயரோ, நிகழ்ச்சிக்கு ஆதாரமோ இல்லாத காரணம் என்ன?
நம்மிடையே இந்த முறையானது ஆதியில் இல்லை என்பது தான் ஆகும்.
கல்யாணம் என்பதன் பொருளே, ஒரு பெண்ணை ஓர் ஆணுக்கு அடிமைப் படுத்துவது என்று தான் பொருள் ஆகும்.
பெண்டாட்டி ஓர் ஆணுக்குச் சம்பளம் இல்லாத வேலைக்காரி என்பது தான் ஆகும். வேலைக்காரியைக் கூட அடிக்கவோ, உதைக்கவோ முடியாது. பெண்டாட்டியை அடிக்கலாம், உதைக்கலாம். மற்றவர் ஏன் என்று கேட்க மாட்டார்கள். கேட்டால் என் பெண்டாட்டியை நான் அடித்தால் உனக்கு என்ன? என்று கேட்பான்.
நம் புராணங்கள், சாஸ்திரங்கள், புருஷன் தன் மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு; பட்ட கடனுக்கு விற்கலாம், வைத்துச் சூதாடலாம், மோட்சத்துக்குப் போக மற்றவனுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்று கூறுகின்றனவென்றால், இதனைப் படிக்கும், நம்பும் மனிதன் எப்படி ஒழுக்கமாக நடக்க முடியும்?
-----------------25.8.1963 அன்று திட்டக்குடி திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 31.8.1963.
இன்றைக்குச் சட்டத்தில் கூட ஆணுக்குப் பெண் அடிமை அல்ல. உத்தியோகம், கல்வியில் உரிமை, சொத்துரிமை, மணவிலக்கு உரிமை முதலிய எல்லாம் வந்து விட்டன.
பெண்களுக்கு என்ன வரவேண்டும் என்றால், புத்தி தான் இன்னும் கொஞ்சம் வர வேண்டும். பெண்கள் அடிமை களாக இருப்பதனாலேயே தான் கணவன் மூர்க்கனாக ஆகிவிடுகின்றான்.
பெண்கள் தங்கள் சம உரிமையினை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முற் பட்டால் தான், ஆண்கள் எல்லாம் யோக்கியர்கள் ஆவார்கள்.
---------------------29.8.1963 அன்று தென்னூர் திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 12.9.1963.
தமிழர் திருமணம் என்பதற்கு என்ன முறை இருந்தது என்று தெரியவே இல்லை. தமிழர்களின் இன்றியமையாத திருமண முறைக்குத் தமிழில் என்ன பெயர் இருந்தது என்று கூறுவதற்குச் சொல்லே இல்லை. கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம், பாணிக்கிரகணம், கல்யாணம், விவாகம், தாராமுகூர்த்தம் என்று இப்படித்தான் வேற்று மொழிச் சொற்கள் தான் இருந்து வந்து இருக்கின்றன. தமிழில் திருமண முறைக்குப் பேர் இல்லாததனாலேயே தமிழர்களுக்கு என்று ஒருமுறை இருந்ததென்று கூறுவதற்கு இல்லை.
நாங்கள் தான் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்ற சொல்லைக் குறளில் இருந்து கண்டு பிடித்தோம்.
3 comments:
அருமையான கருத்துக்கள். திருமணம் என்பது தமிழ்ச் சொல் இல்லையா ?
கருப்புப் பின்புலமும் வண்ண எழுத்துக்களும் படிப்பதற்கே மிகுந்த சிரமத்தைக் கொடுக்கின்றன. மாற்றினால் நன்றாயிருக்கும். வலைப்பூவின் டெம்ப்ளேட்டும் பார்ப்பதற்கு குழப்பமாகவே தெரிகிறது. நாளொன்றுக்கு ஒரு பதிவு வெளியிடும் ஒருதளம் இன்னும் சிறப்பான முறையில் இருக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்து
appadiyaa?
Post a Comment