Search This Blog

27.3.12

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2012-13

2012-2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டுக் கான நிதி நிலை அறிக்கை நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரத்த முறையில் விவாதங்கள்  எல்லா மட்டங்களிலும் வெடித்துக் கிளம்பி யுள்ளன.

பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகளை நிதி நிலை அறிக்கை பேசினாலும் சமுதாயத்தின் பக்கம் அரசின் பார்வை அறவே இல்லை என்பது வேதனையானது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் மகத்தான பாய்ச்சலாகக் கருதப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் மற்ற   மாநிலங்களும் இதனை ஒரு வியப்பாகவே கருதின.

புதிதாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை உருவாக்கும் மனம் இல்லா விட்டாலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சமத்துவபுரங்கள் சரிவரப் பராமரிக்கப்படுமா என்று தெரியவில்லை.

தலைவர்களின் நினைவுச் சின்னங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான தந்தை பெரியார் நினைவகம் - (வைக்கத்தில்) ஈரோடு அய்யா, அண்ணா நினைவு இல்லம் மேம்பாடு குறித்து பேசப்படவில்லையே!

வேளாண் பிரச்சினைக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பதற்கு உழவர் சந்தைகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன.

அதுபற்றிய பேச்சுக்கே இடம் இல்லை இந்த நிதி நிலை அறிக்கையில்; அவர்களின் உற்பத்திக்கு நல்ல விலை பற்றிய வாடையும் இல்லை. இந்துஅறநிலையத்துறை என்ற தலைப்புப் பற்றிப் பேசும்போது இந்துக் கோவில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான தமிழ்நாடு சட்டத்தை செயல்படுத்துவதுபற்றி ஒரு சிறு குறிப்பும் பேசப்படவில்லையே!

அன்னை நாகம்மையார், டாக்டர் தருமாம்பாள், அன்னை மணியம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி போன்ற வீராங்கனைகளின் பெயர்களால் மகளிர் முன்னேற்றத்திற்கு கலைஞர் தலை மையிலான அரசால் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுபோல ஏதாவது ஒரு புதிய மறுமலர்ச்சித் திட்டத்தைப்பற்றி இந்த ஆட்சி இதுவரை சிந்தித்ததுண்டா? அறிமுகப்படுத்தியதுண்டா?

இந்தப் புதிய திட்டம் இதுவரை யாராலும் சிந்திக்கப்படாதது, நாங்கள் மட்டுமே முதன் முதலாகக் கொண்டு வந்துள்ள திட்டம் என்று சொல்லும் படியாக இவ்வாட்சி இதுவரை எதையாவது அறிவித்ததுண்டா?

இந்த ஆட்சி தனித் தன்மையாக செய்வது ஒன்று உண்டு என்றால் இது ஏற்கெனவே இருந்த ஆட்சி அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்களை ஒன்றுமில்லாமல் செய்வதுதான்!

விலைவாசி என்று எடுத்துக் கொண்டால் ஏற்கெனவே பால் விலை, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்கிற இடி தலைமேல் விழும் என்கிற அபாயம் ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்கும்போது எண்ணெய்க்கு வரி விதிப்பது ஒவ்வொரு சமையல் கட்டிலும் பெண்களால் அர்ச்சனைக்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை. ஓட்சுக்கும், கோதுமைக்கும் வரியைக் குறைத்து எண்ணெய்க்கு வரியை உயர்த்துவது யார் நன்மைக்காக? 1500 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையா? பள்ளிக்கூட ஆண்டு அறிக் கையா என்று தெரியவில்லை.

             -------------"விடுதலை” தலையங்கம் 27-3-2012

8 comments:

தமிழ் ஓவியா said...

தி.க. தலைவர் வீரமணி: இணைந்து வாழ முடி யாத பெண்கள், விவாகரத்து பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், கால தாமதங்களைத் தவிர்த்து, அவர்கள் உடனே விலகி, மனநிம்மதியுடன் வாழச் செய்யும் திரு மணச் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது, தந்தை பெரியார் வெகுகாலமாக சொல்லி வந்த ஒரு கருத்து.

டவுட் தனபாலு: தெரியாமத்தான் கேட்குறேன்... மணவிலக்கு, கர்ப்பப் பையை அகற்றிடறது, தாலியே இல்லாம இருக்கிறது... இந்த மாதிரி விஷயங்களைத் தான் உங்க அய்யா பெரியார் வலியுறுத்திட்டே வந்திருக் காரா...? ஒழுங்கா கல்யாணம் பண்ணி, ஒழுக்கமா குடும்பம் நடத்துறது பத்தி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையா?
(தினமலர் 27-3-2012)

பெண்கள் உரிமைக்கானவை என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லும் கீதைதானே இவாளின் தேவாமிர்தம்!

தங்கள் தாயை, ஒரு கணம் நினைத்துப் பார்ப்பார்களா? தான் பெற்ற மகளை ஒரே ஒரு மணித்துளி எண்ணிப் பார்ப்பார்களா? தனக்கு ஒரு பங்குதான் திரவுபதி என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணை வைத்துச் சூதாடிய அயோக்கியர்களை உச்சி மோந்து கூத்தாடும் கூட்டமாயிற்றே! உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு எந்தத் தடிப்பயலோடும் உறவு கொள்ளலாம் என்கிற சாத்திரங்களை எழுதி வைத்திருக்கும் சழக்கர்கள் பேனா பிடிக்கலாமா? பெண்ணைத் துணைவராக, இணையராக ஆக்கியவர் பெரியார். பெண் ஏன் அடிமையானாள் என்ற பெரியாரின் அறிவு நூலை பூணூல் கூட்டம் படித்துப் பார்க்கட்டும்!

ஒழுங்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்புத் தோணியில் இணையராகப் பயணிக்க வேண்டும் என்பதுதான் பெரியார் கூறும் வாழ்வியல்! பெரியாரியல் என்பது ஒரு வாழ்க்கை நெறி! (A way of life) பெண்ணைக் கூட்டுறவு சொசைட்டியாக நடத்தும் மகாபாரதப் பேர்வழிகள் பெரியாரைப்பற்றிப் பேச லாயக்கற்றவர்கள்! 27-3-2012

தமிழ் ஓவியா said...

சென்னை - பெரியார் திடலில் தமிழக மூதறிஞர் குழு சார்பாக மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக்கூட்டம் - தமிழர் தலைவர் தலைமையில் வரியியல் அறிஞர், தணிக்கைக் கணக்கு வல்லுநர்களின் விளக்க உரைகள்!



- தொகுப்பு : நீட்சே

தமிழக மூதறிஞர் குழு சார்பாக மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், ஆடிட்டர் எம்.கந்தசாமி, ஆடிட்டர் என்.கே.பரத்குமார் ஆகியோர் மேடையில் உள்ளனர். (21.3.2012 சென்னை)

நாட்டின் நிதிநிலை அறிக்கை (Budget) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் மய்ய அரசின் நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஏப்ரல் 2012 முதல் மார்ச் 2013 முடிய நடை முறைப்படுத்தப்பட உள்ள நிதிநிலை அறிக்கை வடக்கே சில, மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் காரணமாக சற்று தாமதாக (தேர்தல்கள் முடிவடைந்த பின்னர்) மார்ச் மாதம் 16ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையின் அடிப்படை நோக்கம், ஆட்சியாளர்களால் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படவேண்டும். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பட்ஜெட்பற்றி தனது அறிக்கையில் (விடுதலை - 18.3.2012) பொதுவாக பட்ஜெட் என்பது வெறும் வரவு - செலவு திட்டம் மட்டுமல்ல; உண்மையான பொருளாதார நிபுணர்கள் பார்வை யில் அது சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கக்கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டிய மிக அருமையானதொரு கருவியும் ஆகும் என வெகு கச்சிதமாகக் குறிப்பிட்டார். சமூ கத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார, சமூக வாழ்வில் பாதிப்பினை ஏற்படுத்தவல்ல நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள் என்ன என்பதுபற்றி பொதுமக்கள் அறிந்திடல் வேண்டும்.

நிதிநிலை அறிக்கை பற்றி அறிந்திட சில அடிப்படை விளக்கங்கள்

தமிழ் ஓவியா said...

மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல்நாள், நடப்பு ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) சமர்ப்பிக்கப்படும். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை, ஆய்வின் அடிப்படையில் நாட்டின் நிலைமை பற்றிய புள்ளிவிவரங்கள் அடங்கிய அதிகாரப் பூர்வமான ஆவணமாகும். நாட்டின் மொத்த வருவாய் (National Income) என்பது நாட்டின் மொத்த உற்பத்தி(Gross Domestic Product -GDP) என்ற குறியீட்டில் குறிப்பிடப்படும். இந்தக் குறியீட்டில் வரும் உற்பத்தி எனும் சொல்லாட்சி பரந்துபட்ட பொருளுடையது. சாதாரணமாக நடைமுறையில் புழக்கத்தில் உள்ள உருவாக்கம் எனும் பொருளில் மட்டும் முடிந்துவிடாது. உற்பத்தி(product) என்பது நாட்டின் மொத்த வருவாய்(revenue income) மற்றும் செலவீனம் (revenue expenditure) இரண்டையும் உள்ளடக்கியது ஆகும். வருவாயும் உற்பத்திதான்; செலவீனமும் உற்பத்திதான். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வருவாய் என்பது அரசுக்கு வரக்கூடிய வருமானம். செலவீனம் என்பது வளர்ச்சித்திட்டங்களுக்கான செலவு செய்தல். இதையும் தாண்டி சில ஆய்வுகளின் அடிப்படையில் தனிநபர், நிறுவன வருவாய் மற்றும் செலவீனங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நாட்டின் மொத்த உற்பத்தி கணக்கீடு செய்யப்படுகிறது. வருவாயும் அதிகமாக இருத்தல் வேண்டும்; செலவீனமும் அதிகமாக இருக்க வேண்டும். இரண்டும் அதிகமாக இருப்பது பொருளா தாரம் நல்ல நிலையில் இருப்பதற்கான அறிகுறியாகும். நிதி நிலை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும் நாட்டின் மொத்த உற்பத்தியில், எத்தனை விழுக்காடு என்பதை வைத்து அரசின் வருவாயும், செலவீனமும், இன்ன பிற அம்சங்களும் ஒப்பிடப்படும். குறிப்பாக சேவை வரி (Service Tax)
என்பது நாட்டின் மொத்த உற்பத்தியில் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என நிதிநிலை அறிக்கை குறிப்பிடுகிறது. நிதிநிலை அறிக்கையில் அரசின் வருவாயான வரிகள் - நேரடி வரிகள், மறைமுக வரிகள் என வகைப்படுத்தப்படு கின்றன. நேரடி வரி என்பதன் எடுத்துக்காட்டு வருமான வரி. தனிநபரோ, நிறுவனமோ தமக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியினை வரியாக, நேரடியாக அரசுக்கு செலுத்திட வேண்டும்.

வாங்குகின்ற பொருள் மற்றும் சேவைகளின் மீது சில வரிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக விற்பனை விலை என குறிப்பிடப்படும். இவற்றை மறைமுக வரியாக பொருள் களை வாங்கும் மற்றும் சேவையினைப் பயன்படுத்தும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு விற்பனை வரி, சேவை வரி மக்களிடம் இப்படி வசூலிக்கப்பட்ட மறைமுக வரிகள் இறுதியில் அரசுக்கு செலுத்தப்படும். இவையன்றி உற்பத்தி நிலையிலும் அரசுக்கு வருவாய் தரவல்ல வரி போன்ற விதிப்புகளும் செஸ்(Cess) என்ற பெயரில் அரசுக்கு கிடைக்கின்றன. செலவீனங்களைப் பொறுத்த அளவில், பொருள் உற்பத்தியினைப் பெருக்குகின்ற வகையில் குறிப்பிட்ட தொழில்களுக்கு ஊக்கத்தொகை (incentive) என வளர்ச்சித் திட்டங்களுக்கும், பயன்பாட்டு இடு பொருள்களுக்கும் மானியம் (Subsidy) என்ற பெயரிலும் அரசு வழங்கி வருகின்றது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் (ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் முடிய) நிலவியுள்ள பொருளாதாரச் சூழலையும் கடந்த ஆண்டு செயல்பாட்டையும் கருத்தில் கொண்டு வருவாயைக் கூட்டியோ, குறைத்தோ, செலவீனங்களைக் கூட்டியோ, குறைத்தோ நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

தமிழ் ஓவியா said...

அரசின் மொத்த வருவாய்க்குள் செலவீனம் அடங்கிட வேண்டும். அண்மைக் காலங்களில் வருவாயைவிட செலவீனங்கள் அதிகமான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப் போக்கினை பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை(Deficit Budget) என குறிப்பிடுவர். பற்றாக் குறை அளவு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் குறைந்து கொண்டே செல்லுவதை ஒருவகையான பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என கருத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட பொருளாதாரக் குறிப்புகள் சார்ந்த பின்னணியில், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சமர்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டை ஆளும் அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப முன்னுரிமை, பெரும் அக்கறை, சிறப்பு சலுகைகள் வளர்ச்சித் துறை சார்ந்த அறிவிப்புகளின் ஆவணம் ஆகும்.

நடப்பு ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, நிதிநிலை அறிக்கைபற்றிய கண்ணோட்டம்

நடப்பு ஆண்டின் (2011-2012) நிதி பற்றாக்குறை (fiscal deficit) எதிர்பார்த்த அளவை விட 1.3 விழுக்காடு கூடுதலாகவே இருந்த நிலைமை, சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் (2012-2013) எண் கணித குறிப்புகளின் ((arithmetic) நம்பகத்தன்மைக்கு விடப்பட்ட சவாலாகவே இருக்கிறது. ய நடப்பு ஆண்டின் நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 5.1 விழுக்காடாகவே அமையும்.

மானிய (subsidy) அளவு வரும் நிதியாண்டில் (2012-2013) ரூபாய் 1.9 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் ஆரம்ப ஒதுக் கீடான ரூபாய் 1.43 லட்சம் கோடி என்ற நிலைமை இறுதியில் ரூ.2.16 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது. மானிய ஒதுக்கீடு உயர்வு, பலூனில் ஊதப்படும் காற்றைப்போலப் பெருகி உறக்கமில்லாத இரவு களைதான் வழங்குகிறது. என நிதியமைச்சர் அடை மொழி நயத்தோடு குறிப்பிட்டார். எனினும் மானிய ஒதுக்கீடு நாட்டின் மொத்த உற்பத்தியில் 2 விழுக் காட்டிற்கும் மிகாமல் இருக்க ஆவன செய்யப்படும் என உறுதியளித்தார்.

ஒட்டுமொத்தத்தில் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டு அளவுகள், நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 7.6 விழுக்காடு மற்றும் பண வீக்க அளவு 6 முதல் 6.5 விழுக்காடு என்ற அனு மானத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. எதிர்கால பொருளாதாரச்சூழல் கணித்தபடி நிலவுமா என்பது விளக்கங்களை மீறிய வினாவாகவே நீடிக்கிறது!

இருக்கின்ற நிதி ஆதாரம், எதிர்நோக்கும் வருவாய் இவற்றைக் கொண்டு செலவீனங்கள் திட்டமிடப் பட்டு ஓராண்டிற்குள் நடைமுறைப்படுத்தி, வெற்றி காணும் விழுக்காட்டைப் பொறுத்தே அரசின் ஆளுமைத்திறன் வெளிப்படுகிறது. நிதிநிலை அறிக்கை பற்றிய விவரங்களை, விளைவுகளை எந்த அளவிற்கு பொது மக்கள் உணர்ந்து கொண்டு எதிர்வினை ஆற்றுகின்ற னரோ அந்த அளவிற்கு எந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும், அக்கறையுடன் ஆட்சி செய்கின்ற போக்கு பலப்படும். அத்தகைய ஆய்வுக் கண்ணோட்டத்தினை மக்களிடம் உருவாக்கிட வேண்டும், நிதி நிலை அறிக்கை பற்றிய விவரங்கள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் எனும் சீரிய நோக்கத்தில் மத்திய அரசின் 2012-2013 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பற்றிய விளக்கக் கூட்டத்தினை பெரியார் இயக்கத்தின் அங்கமான தமிழக மூதறிஞர் குழு ((Tamil Nadu Intellectual Forum) ஏற்பாடு செய்தது.

மார்ச் 20ஆம் நாள் மாலை 6.30 மணி அளவில் சென்னை-பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை (2012 -2013) விளக்கக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மூதறிஞர் குழுவின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். வரியியல் முதுபெரும் அறிஞர் எஸ்.ராஜரத்தினம், தணிக்கைக் கணக்கு வல்லுநர் எம்.கந்தசாமி மற்றும் தணிக்கை கணக்காளர் வி.கே.பரத்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். -(தொடரும்) 28-3-2012

தமிழ் ஓவியா said...

சென்னை - பெரியார் திடலில் தமிழக மூதறிஞர் குழு சார்பாக மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக்கூட்டம்


தமிழர் தலைவர் தலைமையில் வரியியல் அறிஞர், தணிக்கைக் கணக்கு வல்லுநர்களின் விளக்க உரைகள்!

தொகுப்பு : நீட்சே

நேற்றையத் தொடர்ச்சி

தமிழர் தலைவரின் தலைமை உரை

தமிழக மூதறிஞர் குழுவின் புரவலர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது தலைமையுரையில் குறிப்பிட்டதாவது:

நிதிநிலை அறிக்கையினை பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். பட்ஜெட் எனும் சொல்லாட்சி ஆங்கில அகராதியில் நிதிநிலை அறிக்கை எனும் பொருளில் கையாளப்படவில்லை. பட்ஜெட் என்பது நிதி அறிக்கையினை எடுத்துச் சொல்ல பயன்படும் பையை குறிப்பதாகும். மக்களாட்சி நடைமுறை உள்ள நாட்டில் பட்ஜெட் என்பது மக்களுக்காக, மக்களால், மக்களுடைய பட்ஜெட்டாக இருக்க வேண்டும்.

மக்கள் நலன் பேணும் அரசால் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை இருப்பது இயல்பே. காரணம், பொது நிதிநிலை, தனிநபர் நிதிநிலை இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடே. தனிநபர் நிதிநிலையில் முதலில் வருவாய் பின், அதற் கேற்றாற்போல செலவினம். ஆனால் பொது நிதிநிலையில் முதலில் செலவினம், பின்பு எதிர் நோக்கும் வருவாய்.

நிதிநிலை அறிக்கை என்பது வெறும் நிதி சார்ந்த முன்மொழிவு அல்ல; நிதிப்பட்டியலும் அல்ல; பொது நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை ஓரள விற்கு வரவேற்கத் தகுந்ததே. மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் எனும் சீரிய நோக்கமே அதன் காரணமாகும். வரவு-செலவு பட்டியல் எனும் நிலையினைத் தாண்டி அரசாங்கத்தின் கொள்கை விளக்கக் கருவியாக நிதிநிலை அறிக்கை திகழ்ந்திட வேண்டும். முறையீடு இன்றி வரிவிதிப்பு இல்லை.

முறை யீட்டுக்கான அரசியல் கருவியே வரிவிதிப்பு ஆகும். அண்ணல் அம்பேத்கர் தெளிவாகக் கூறுவார். ஒருவரின் மொத்த வருமான அளவைக் கொண்டு வரி விதிக்கக் கூடாது. அவரது வரி செலுத்திடும் சக்தியைப் பொறுத்தே வரி விதிக்கப்படவேண்டும். எந்தவொரு வரிக்கொள்கையும் மனித வாழ்க்கைத் தரத்தினை தாழ்த்துவதாக அமையக் கூடாது. பெரும் பணப்புழக்கம், கறுப்புப் பணப் புழக்கத் திற்கு வழிவகுத்துள்ளது. கறுப்புப் பணம் குறட்டைவிட்டு தூங்குகிறது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் கறுப்புப் பணத்தினைத்தட்டி எழுப்பிட யாருக்கும் துணிவில்லை. கறுப்பு பணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப் படவேண்டும் எனும் கோரிக்கை வலுப்பட்டுள்ளது. பணம் படைத்திட்டோர் மீது அதிகமாக வரிவிதிக்கப்பட வேண்டும். பணம் இல்லாத பாமரர்கள் மீது வரிவிதிப்பு குறைக்கப்பட வேண்டும். பீட்டரின் பணத்தை எடுத்து பால் வசம் வழங்குவது எனும் அடைமொழிக்கு ஏற்ப வரிவிதிப்பு அமைந்திடல் வேண்டும்.

நியாய அடிப்படையில் ஓர் அளவிற்கு கீழ் வருமானம் உள்ளோருக்கு வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும். நில வரி நீட்சித் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும். சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களிடையே நியாயத்தைக் கடைப் பிடிக்கின்ற வகையில் வரிவிதிப்புக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். -இவ்வாறு கூறினார்.

வரியியல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம்

2012ஆம் ஆண்டுக் கான நிதிப்பட்டியலில் நேரடி வரி தொடர்பான 108 திருத்தங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இதில் சில வரிச் சுமையை குறைக் கும் திருத்தங்கள், வரிச் சுமையைக் கூட்டும் தன்மையில் பல திருத் தங்கள், மேலும் சில திருத்தங்கள் சற்று மாறுபட்ட தன்மை வாய்ந்தன.

வரவேற்கத்தக்க திருத்தங்கள் எனக் குறிப்பிடும் பொழுது தனிநபர் வருமான வரி விலக்கு அளவு ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சம் என்ற அளவிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர்க்கான வருமான வரிவிலக்கு ஆண்டு வருமானம் 1.9 லட்சம் என்ற அளவிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மூத்த குடிமக்களுக்கான வயது நிர்ணயம் 65 இலிருந்து 60 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.

சிறு சேமிப்புக் கணக்கு மூலம் பெறப்படும் வட்டியில் ரூ.10,000/- வரை வருமான வரிவிலக்கு, நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கான மருத்துவப் பரிசோதனை செலவில் ரூ.5000/- வரை வருமான வரி விலக்கு எனக் குறிப்பிடலாம்.

தமிழ் ஓவியா said...

பாதகங்களை ஏற்படுத்திடும் திருத்தங்கள்

செலுத்திடும் வரியின் கணக்கீட்டு பரிசீலனை ஆறு வருடங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், 1962 முதல் உள்ள காலம் பற்றிய கணக்கீடுகளையும் பரிசீலனை செய்திட வாய்ப்பு அளிக்கிறது. இது நியாயமற்றது மட்டுமல்ல. வெளிநாட்டு நிறுவன வர்த்தகப் பெருக்கமும் இதனால் பாதிப்புக்கு ஆளாகும்.

சேமிப்புப் பழக்கத்தில் இந்தியா சிறப்பாகச் செயல்படு கிறது. ஆனால் சேமிப்பு முழுவதும் பயன்படாத சேமிப் பாக, தங்க கட்டிகளாக, தங்கநகைகளாக முடங்கிக் கிடக்கிறது, வங்கிப் பெட்டகங்களில் உள்ளன. நடமாடும் நகை மாளிகையாக மகளிரின் அலங்காரச் சாதனைங் களாக நிலவுகின்றன. (பத்ம நாபன் கோயில் பெட்டகத் திலும் பயனற்றுக்கிடக்கின்றன எனும் குரல்கள் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எதிரொலித்தன!)

மேலும் வெளிநாட்டு வங்கிகளில், கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம் - இந்த நாட்டினருக்குச் சொந்தமான பணம் உள்ளது. அதைக்கொண்டு வந்து இந்நாட்டு வளர்ச்சியில் பயன்படுத்தலாம். கறுப்பு பண உரிமையாளர்களுக்கு மன்னிப்பு வழங்கிடும் வழி முறைகள் வருமான வரிச்சட்டத்தில் உள்ளன.

அந்த சட்ட விதிகள் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டன. அந்த அணுகுமுறையினை இப்பொழுது மேற்கொண்டால் மக்களின் மீதான வரிப் பளு குறைந்திடும் வாய்ப்பு உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். கறுப்புப் பணம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் நிலையில் இந்த 3 விழுக்காட்டினருக்கும் கூட வருமான வரி விலக்கு அளித்திட இயலும்.

ஒரு நாட்டின் பொருளாதார நற்சூழல் அங்கு கடைப்பிடிக்கப்படும் வரி கொள்கைகளைப் பொறுத்தே அமைகிறது. நிதிநிலை அறிக்கை உருவாக்க நிலையில், நாட்டின் நிதி அமைச்சர், பொருளாதார வல்லுநர்களு டன் கலந்து பேசுகிறார்; ஆலோசனை பெற்றுக்கொள் கிறார். சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனால் வரியியல் வல்லுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துகள் கேட்கப் படுவதில்லை. வரியியல் வல்லுநர்களும் நிதிநிலை அறிக்கை உருவாக்கத்தின் ஆலோசகர்களாக இருப்பது நியாயமான வரி விதிப்பிற்கும் நியாயமற்ற வரிச்சுமை யினை களைவதற்கும், அரசுக்கு தேவையான வரி வருமானம் பெருக்கிடவும் வழிவகுக்கும்.

தணிக்கைக் கணக்கு வல்லுநர் எம்.கந்தசாமி

நிதிநிலை அறிக்கை பற்றிய பொருளாதாரக் காரணீயங் கள் பற்றி தணிக்கைக் கணக்கு வல்லுநர் எம்.கந்தசாமி விளக்க உரையாற்றினார்.

நிதிநிலை அறிக்கை என் பது அரசின் நிதி மேலாண்மை என்பதைவிட மக்களின் நிதி மேலாண்மை என்ற பொரு ளில் அணுகப்பட வேண்டும். மக்களின் நிதி மேலாண்மை பற்றிய ஆய்வு செய்திட பல்வேறு வழி முறைகள் உள்ளன. அப்படிப்பட்ட வழிமுறைகளுள் ஒன்றுதான் அரசினரால் மேற் கொள்ளப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கை. ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வெறும் எண் குறிப்புகள் அல்ல.

ஒவ்வொரு குடி மகனையும் குறிப்பாக அடித்தள மக்களை, மாற்றுத் திறனாளிகள் உட்பட உழைக்கும் மக்களை நோக்கிய வளர்ச்சிப் பயணத்தை படம் பிடித்துக்காட்டுபவை. நிதிநிலை அறிக்கை செயலாக்கத்தின் பெரும் வெற்றி நாட்டின் வளர்ச்சி விகித அதிகரிப்பில்தான் உள்ளது. அதே நேரத்தில் நிதி நிலை பற்றாக்குறை குறைந்திடவும் வேண்டும். நாட்டு வளர்ச்சி விகிதம் 6.9 விழுக் காட்டிலிருந்து 7.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டைவிட நிதிநிலை பற்றாக்குறை 5.9 விழுக் காட்டிலிருந்து 5.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது நியாயமான காரியங்களுக்கு உரிய செலவினங்கள் மேற்கொள்ளப்படவில்லை. சமூகப் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உரிய செலவினங்கள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

அய்க்கிய நாடுகள் அவையின் புத்தாயிரம் வளர்ச்சி குறிக்கோள்களில் இந்தியா ஏற்றுக்கொண்ட உறுதி மொழிகளில் 90 விழுக்காடு வெறும் உறுதிமொழி நிலையிலேயே உள்ளன. அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷ அபியான்) திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான செலவினங்கள் 6.1 விழுக் காட்டிலிருந்து 5.8 விழுக்காடாக குறைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

சேவை வரி என்பதன் மூலம் சமூகத்தின் ஒட்டு மொத்தத் தரப்பினரும் வரிச் சுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். 17 சேவைகளைத் தவிர்த்து இதர சேவைகள் அனைத்தும் சேவை வரிவிதிப்பிற்கு உள்ளா கின்றன. சேவை வரி என்பதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமே வரிவிதிப்பிற்கு ஆளாகி உள்ளது.

நிதிநிலை அறிக்கை என்பதில் வரிவிதிப்பு அதிகமாவது தவிர்க்க இயலாதது. பணக்காரர்களுக்கு வரிவிதிப்பு அதிகரிக்கப்படவேண்டும். வசதி குறைந்த பிரிவினருக்கு வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும். வருமான வரி பாக்கியாக நிலுவையில் உள்ள தொகையில் 60 விழுக்காடு பெரும் தொழில் அதிபர்கள் செலுத்த வேண்டியுள்ளது. அந்த 60 விழுக்காடு நிலுவையிலும் 90 விழுக்காடு 12 அதிபர்கள் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலுவையினை முழுமையாக வசூலிக்க வகை செய்யும் வழிமுறை எதுவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அரசு செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன. நிலுவையில் உள்ள வரியினை வசூலிக்க முனைப்பு காட்டப்படவில்லை. வளர்ச்சிப் பணி ஆற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவான அறிவிப்புகளும் வர வில்லை. மாறாக வரிச்சுமை கூட்டப்பட்டுள்ளது. அமெ ரிக்காவில் லாபநோக்கமில்லாது செயல்படும் நிறுவனங்கள், நிறுவன குறிக்கோள் சார்ந்த வணிகச் செயல் ஆற்றினால் வரிவிதிப்பிற்கு ஆளாவது கிடையாது. இந்தியாவில் அப்படிப்பட்ட குறிக்கோள் சார்ந்த வணிகச் செயல்பாடுகள் வரிவிதிப்பிற்கு ஆளாகின்ற அவல நிலைகள் தொடர்கின்றன.

நல்லன செய்வது நன்று.
கெட்டன செய்வது தீது
நல்லன செய்யத் தவறுவது பெரும் குற்றம்.

என்ற அடைமொழிக்கு ஏற்ப இந்த நிதிநிலை அறிக்கையில் நல்லன செய்யத் தவறிய பகுதிகள் ஏராளம். வருமான வரி விலக்குக்கான குறைந்தபட்ச வரம்பு கூட்டப்பட்டதால், மற்றும் சலுகைகளால் வரி இழப்பு ரூ.4500 கோடி மட்டுமே. மொத்த வரி உயர்வால் வருவாய் வரவு ரூ.41,440 கோடி ஆகும். வசதியானவர்களுக்கு வரிச்சுமை குறைப்பு என்பதன் மூலம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறு தாவரங் களைப் பராமரித்துவிட்டு, பெரிய ஆலமரத்தை வெட்டிச் சாய்ப்பது போன்ற செயல், நிதிநிலை அறிக்கையில் தென்படுகிறது. செழுமையின் அடையாளங்கள் ஆங் காங்கே திட்டுகளாகத் தென்பட்டாலும், வறுமையின் அடையாளங்கள் வற்றாத சமுத்திரமாகவே நிதிநிலை அறிக்கையில் நிறைந்திருக்கிறது.

சமூக சீர்திருத்தத்திற்கு தந்தை பெரியார் மிகவும் பாடுபட்டார். அதன் பலன் கண்கூடாகத் தெரிகிறது. பெரியார் இயக்கம் நாட்டின் நிதி சீர்திருத்தத்திலும் கவனம் செலுத்திட வேண்டும். சமூகத்தில் மூடநம்பிக் கைகளை களைய பிரச்சாரம் செய்வது போல நிதி நம்பிக்கையினை வளர்த்து நாட்டின் மேம்பாட்டிற்கு பங்காற்றிட வேண்டும். -இவ்வாறு கூறினார்.

தணிக்கை கணக்காளர் என்.கே.பரத்குமார்

மறைமுக வரிவிதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தணிக் கைக் கணக்காளர் என்.கே. பரத்குமார் பேசியதாவது :

தமிழ் ஓவியா said...

மறைமுக வரிகளுள் ஒன்றான சேவை வரி 10 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தியினைக் குறைத்திடும் தன்மை வாய்ந்ததாக இந்த வரி உயர்வு உள்ளது.

என்னென்ன வகை சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்பட வேண்டும் என்ற கடந்த கால நடை முறையிலிருந்து, எந்தெந்த வகைச் சேவைகளுக்கு வரி விதிப்பு தேவையில்லை எனும் அறிவிப்பால் சேவை வரியின் விழுக்காடு உயர்வோடு சேவை வரிவிதிப்பும் பரந்து படுத்தப்பட்டுள்ளது.

சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வரிச்சுமையினை வெகுவாகக் கூட்டியுள்ளது. பொதுவாக அரசு கொண்டு வரும் வரி அதிகரிப்பு, மலர்களுக்கு வலி இல்லாமல், தேனீக்கள் செயல்படுவது போல இருந்திட வேண்டும்.

இதனால் மலருக்கும் பங்கமில்லை. தேனீக்களுக்கும் வருவாயாகத் தேன் கிடைக்கிறது. பால் மாட்டிடமிருந்து இயல்பாக பால் கறப்பதுபோல வரி விதிப்பு இருக்க வேண்டும். ஹார்மோன் செலுத்தி அதிகமாகப் பாலை கறக்கும் முறையால் பால் மாட்டின் நலம் பாதிக்கப்படும். இந்த சேவை வரி விதிப்பு உயர்வு, விதிப்பரப்பு பெருக்கம் மக்களைக் கசக்கிப் பிழியும் தன்மை உடையதாக உள்ளது.

நிதிநிலை அறிக்கையின் கடுமையான அம் சங்களை குறிப்பிடும்பொழுது நிதியமைச்சர் ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகத்தில் வரும் டென்மார்க் இள வரசனின் கூற்றான, நான் கட்டாயக் கடுமையைக் கடைப்பிடிப்பது அன்பாக இருப்பதற்காகவே! என்பதை தன்னிலை வெளிப்படாகக் காட்டிக்கொண்டார். உண்மை நிலைகள் எப்படி உருவெடுக்கும் என்பதை எதிர்காலம்தான் உணரவைக்கும்! -இவ்வாறு கூறினார்.

பார்வையாளர்களின் கேள்விக்கு பதில்

வல்லுநர்கள் தங்களது உரைக்குப்பின்னர் பார்வை யாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

நிதிநிலை அறிக்கை பற்றிய விளக்கக்கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்று, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பரஞ்சோதி முகவுரையாற்றினார். நிறைவாக தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளர் பேராசிரியர் முனைவர் வி.சுந்தரராஜுலு, வல்லுநர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சத்தை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.

நிதிநிலை அறிக்கை பற்றிய விளக்கக் கூட்டத்திற்கு வருகை தந்தோரைப் பற்றி உரையாற்றிய வல்லுநர் தமது உரையில் குறிப்பிட்டு, நன்றி பாராட்டியது நினைவு கூரத்தக்கது. வருகை தந்துள்ள பெரியார் இயக்கப் பற்றாளர்கள் விளக்க உரையினை கேட்டுச் செல்பவர்கள் மட்டுமல்ல; அவர்கள் சிந்தனையாளர்கள்; செயல்வீரர்கள். நிதிநிலை அறிக்கை பற்றிய சிந்தனை பொதுமக்களிடம் பரவிட இந்தக் கூட்டமும், வருகை தந்தோரும் மிகவும் பயன்படுவர்.

நாங்கள் தந்தை பெரியாரின் சமுதாயப் பணியால் படித்து, தணிக்கை கணக்குப் பணியாற்றி விளக்கவுரை வழங்கிடும் நிலையில் உள்ளதற்கு நன்றியினை தெரிவித்து மகிழ்ச்சியடைகிறோம். நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம், நிலைத்த, நீடித்த பொது விழிப்புணர்வினை, பொருளாதார ஆய்வுக் கண்ணோட்டத்தினை உருவாக்கிய கூட்டமாக அமைந்திருந்தது.


(நிறைவு