தந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும் - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.
இம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.
அன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.
மேடைப்பேச்சில் எத்தனை, எத்தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.
அரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலியார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம் தன்வரலாறு வாழும் சான்றாகும்.
ஒரு காலை ஒன்றாக நாட்டு விடுதலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளியேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.
1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா? பெரியார் மூத்தவரா?
தலைவர் அவர்களே! பெரியார் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே! நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் படித்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற்பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.
திராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப்பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங்கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.
திராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர்கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.
பின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.
திராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள் என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்
என்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.
திராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.
------------------ முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 12-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
11 comments:
பெரியார் அன்று சொன்னார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் இன்று கூறுகிறது
இன்றைய தினம் இந்தியாவின் பிரச்சினை என்ன? இங்கு வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது எது என்பது முக்கியமான பிரச்சினை!
7ஆம் தேதி இந்து பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
India May Never be a Super Power: LSE Study. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னா மிக்ஸின் ஆய்வுபற்றிய தகவல்.
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்தபோது ஒன்றைச் சொன்னார். இந்தியா வட்டார அளவில் சக்தி வாய்ந்த நாடு மட்டுமல்ல - உலகளாவிய அளவில்கூட சக்தி வாய்ந்த நாடு என்று 2009இல் கணித்துச் சொன்னார்.
ஆனால் இன்றைய உண்மையான நிலை என்ன தெரியுமா? ஒரு பக்கத்தில் வளர்ச்சியிருந்தாலும், ஜனநாயகம், வளர்ச்சி, கலாச்சாரம் என்ற ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டாலும், இந்தியாவில் நிலவும் ஊழல், பலகீனமான தலைமை, மக்களைக் கூறுகளாகப் பிரிக்கும் ஜாதியும் மதத் தீவிரவாதமும் இவற்றை அழித்து விடுகின்றன என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் ஆய்வு கணித்துக் கூறியுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு முன் தந்தை பெரியார் அவர்களும், அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும் சொன்ன கருத்துதானே இவை? நூறு ஆண்டு களுக்குப் பிறகு லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கூறுகிறது, தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்கு எத்தகையது என்பதற்கு இது ஒன்று போதாதா?
இந்தியா எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை எவ்வளவோ மாற்றங்கள், நமது இயக்கத்தால் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பரவுதலால் நடந்திருக்கின்றன.
இங்கே மதவாதம் தலையெடுக்க முடியாததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களும், நமது இயக்கமும்தான்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம் என்று நாடு தழுவிய அளவில் குரல் கொடுத்தவர்கள் நாம், வட்டார மாநாடுகளை நடத்தியவர்கள் நாம்.
மேலும் மேலும் இளைஞர்களைத் தயார் செய்வோம் - தேவையான பயிற்சிகளை அளிப்போம்! சமூகப் புரட்சியை உருவாக்கிக் காட்டுவோம்!
தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல - மதவாதத்தை ஒழித்து மனிதநேயத்தை வளர்க்க உலகுக்கே தேவைப்படு கிறார்.
- வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைக் காப்பு மாநாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி (தஞ்சை, 11.3.2012)
பெண்கள் மாநாடும் நமது சிந்தனையும்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ஒரு தட்டில் போட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தை இன்னொரு தட்டில் போட்டால் எடை கனக்கும் என்கிற அளவுக்குத் தஞ்சை மாவட்டம் எனக்குக் காங்கிரஸ் காலத்திலிருந்து ஆதரவு அளித்து வந்த மாவட்டம் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.
அந்தப் பெருமை பழம் பெருமையல்ல; அதனை இன்றளவும் தக்க வைத்துக் கொண்டுள்ளோம், புதுப்பித்துக் கொண்டுள்ளோம் என்பதன் நிரூபணம் தான் 10.3.2012 அன்று தஞ்சையில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டிய மகளிர் மாநாடும் மறுநாள் (11.3.2012) நடைபெற்ற வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக் காப்பு மாநாடும்! பேரணியும் விடுதலை சந்தா அளிப்பும்.
எல்லாம் நேர்த்தியாக அமைந்திருந்தன. திட்டமிட்ட வகையில் சிறு குறைபாட்டுக்கும் இடமின்றி நிறைவாக அமைந்த மாநாடுகள் இவை! வரவேற்புக் குழுவினரும் களப்பணியாற்றிய கழகக் கண்மணிகளும் பலபடப் பாராட்டப்பட வேண்டியவர்கள் பாராட்டுகிறோம்! பாராட்டுகிறோம்!!
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா என்பது அவர்களின் அளப்பரிய தியாகத்துக்கும் தொண்டுக்கும் காட்டப்படும் நன்றி என்பது ஒருபுறம் இருந்தாலும் உலகில் புரட்சிகரமான சமுதாயப் புரட்சி இயக்கத்துக்கு, நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கி, தலை தாழாமல் நடத்திக் காட்டிய வீரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாகும். அந்த வழியிலே நம் பெண் குலத்தை உயர்த்தும் உன்னத உணர்வை ஊட்டுவதாம்.
அன்னை மணியம்மையார், இராவண லீலாவை நடத்திக் காட்டினார்கள் என்றால் அதன் பொருள் திராவிடர் இனத்தின் தன்மானத்தை எந்த விலை கொடுத்தும் காப்போம் என்ற உணர்வை ஊட்டுவதாகும். ஆரியர் - திராவிடர் போர் இன்னும் ஓய்ந்து விடவில்லை என்பதை ஊருக்கும், உலகுக்கும் அறிவிப்பதோடு, நம் இன இருபால் இளைஞர்களை இனமானப் போராட்டக் களத்திலே ஊக்குவித்து வளர்த்தெடுப்பதாகும்.
தமிழர் நலம் பேணும் தந்தை பெரியாருக்காகத் தம்மை அழித்துக் கொள்ளலாம் என்ற மையப் புள்ளி அன்னை மணியம்மையார் அவர்களின் தொண்டறத் திலே அடிநாதமாக ஊற்றெடுத்துள்ளது.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அமைதியான நீரோட்டம் போல எளிமையாக வாழ்ந்து அதே நேரத்தில் கொள்கையில் ஆழமான பிடிப்பும், அதனை நிறைவேற்றுவதற்காக சர்வ பரி தியாகம் செய்யும் அப்பழுக்கற்ற தொண்டுள்ளத்தை அன்னையார் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அதன் வெற்றிக்கு முழு மூச்சாக பாடுபடும் பக்குவத்தை அன்னையார் என்ற தலைமைப் பண்பிலிருந்து பெற்றுக் கொள்வோம்.
எதிர்ப்புகளும், தூற்றல்களும் கூட்டு சேர்த்துக் கொண்டு தம்முன் நின்றாலும், பொதுத் தொண்டில் மானம் - அவமானம் பார்க்காதே என்ற பகுத்தறிவுப் பகலவனின் வழிகாட்டும் உரையை அம்மா அவர்கள் எப்படி தன்வயப்படுத்திக் கொண்டார் - தூற்றியவர் களால் பிற்காலத்தில் பாரட்டப்பட்டார் என்பதை நினைவில் கொள்வோம்.
தனி வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியார் வைத்த தேர்வுகளில் கம்பீரமான வெற்றியைப் பெற்றவர்!
தொண்டர்களாகிய நமக்கு இந்த வகையில் பலமான வழிகாட்டியாவார்கள்.
மகளிர் மாநாட்டில் உரையாற்றிய மகளிர் தக்க வகையில் உரையை அமைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரக் கட்டுக்குள் பேசியது வரவேற்கத்தக்கது, மேலும் மேலும் மெருகேறி வருகிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு! அனைவருக்கும் பாராட்டுகள்! பாராட்டுகள்!! 12-3-2012
தஞ்சை வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - உரிமைக் காப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்
4மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்குக!
4நதிநீர்ப் பிரச்சினைகளில் நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் அரசுகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
4தூக்குத் தண்டைனையை ரத்து செய்க!
தஞ்சை வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - உரிமைக் காப்பு மாநாட்டுத் தீர்மானங்கள
தஞ்சை, மார்ச் 12- நதிநீர்ப்பிரச்சினைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் உள்பட தஞ்சை மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.
தஞ்சாவூரில் கிரேசி அரங்கத்தில் 11.3.2012 அன்று நடைபெற்ற - வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - உரிமைக் காப்பு மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
(1) கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!
மாநில அரசின் பட்டியலில் இருந்த கல்வி நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்குத் தன்னிச்சையாகக் கொண்டு செல்லப்பட்டது. இது அப்பட்டமான மாநில உரிமையை மத்திய அரசு பறித்த செயல் என்பதை இந்த மாநாடு திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடு கள் உடைய பல மாநிலங்களின் தொகுப்பான இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான கல்வி என்பதெல்லாம் இயற்கைக்கு விரோதமான - சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லாத அணுகு முறையாகும்.
கல்வியைப் பொதுப்பட்டியலில் கொண்டு சென்றதால் மாநில அரசுகளின் முடிவுகளுக்கு மாறாக நுழைவுத் தேர்வை நடத்திட மத்திய அரசு முடிவு எடுக்க முடிகிறது. புதிது புதிதாக அகில இந்திய சர்வீஸ்கள் என்கிற அறிவிப்புகளையும் மத்தி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தன்னிச்சையாக அறிமுகப்படுத்த முடிகின்றது.
பி.ஜே.பி., மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சமஸ்கிருதம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து, கோடிக்கணக்கான ரூபாய்களை அந்தச் செத்த மொழிக்கு உயிரூட்டுவதற்காகச் செலவழித்தது. வேத கணிதம் என்றும், அறி வியலுக்கு முரணான சோதிடப் பாடம் என்றும் அறிவிக்க முடிந்தது.
இது போன்ற அறிவிப்புகள் மூலம் பொது நலனுக்கும், பொது உரிமைக்கும் விரோதமாக மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த விரும்புகிறது மத்திய அரசு என்பதோடு அதற்கான வாய்ப்பை அளிப்பது கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதுதான். எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசு இதற்கான தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றுவதோடு, முதல் அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல் அமைச்சர் களுடனும் தொடர்பு கொண்டு இதற்கு ஆவன செய்யுமாறும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(2) நுழைவுத் தேர்வைக் கைவிடுக!
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி இல்லாத ஒன்றாகும். இந்நிலையில் அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வினை நடத்திட முடிவு செய்வதைக் கைவிட வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.
மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கான நிறுவனங்களில் தேர்வு பெற அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அத்தகைய தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் எழுது முடியும் என்ற நிலை இருப்பது - இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படிக்காதவர்களுக்கும் பெரும் தடையாகவும், அதே நேரத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும், ஆங் கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டவர்களுக்கும் சாதகமாகவும் உள்ளதால் - அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதுதான் சரியான சட்டரீதியான நிலைப் பாடாக இருக்கும் வகையில் அய்.ஏ.எஸ். போன்ற தேர்வுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது போல அனைத்து மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வை எழுதிட ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசும் இதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(3) மாநில மொழிகளை ஆட்சி மொழிகளாக்கு!
மாநில ஆட்சி மொழிகளை மத்திய ஆட்சி மொழிப் பட்டியலில்சேர்ப்பது, அரசமைப்புச் சட்டம் எட்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகளை மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஏற்றுக் கொள்வது பற்றிய சீதா காந்த மகாபத்ரா குழு அறிக்கையை வெளியிடு மாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(4) ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தேவை!
இலங்கையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இனவெறிப்போர் நடந்து முடிந்து இரண்டாண்டுகள் ஆன நிலையிலும், இலங்கை அரசு இந்திய அரசுக்கு அளித்த வாக்குறுதிகளை நாணயமான முறையில் நிறைவேற்றிடவில்லை.
முள்வேலிகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முடங்கிக் கிடக்கும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளில் இலங்கை அரசின் முழு ஒத்துழைப்போடும், திட்டங்களோடும் சிங்கள மக்களின் குடியேற்றம் நடத்தப்பட்டு, ஈழத் தமிழர்கள் என்ற ஒரு இனம் உண்டு என்பதற்கான அடையாளத்தை முற்றிலும் அழித்துக் கட்டும் வேலை அரங்கேற்றப்பட்டுவிட்டது.
இவ்வளவுக் கொடுமைகளும் இந்திய அரசின் மறைமுக ஒத்துழைப்போடுதான் தங்குதடையின்றி நடைபெற்று வந்துள்ளது.
ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் சரி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதிலும் சரி இந்திய அரசு அவ்வப்போது சம்பிரதாய முறையில் வெளியிடுவது வெற்று உதிரிச் சொற்களே என்று ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகத் தமிழர்களும், மனித உரிமை, மனித நேயம் பேணுபவர்களும் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.
120 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான - வல்லரசாகத் துடிக்கும் இந்தியா இந்தப் பிரச்சினைகளில் நடந்து கொள்ளும் முறை பெருமைப்படத்தக்கதாக இல்லை என்பது வருந்தத் தக்கதாகும்.
2014 இல் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் காங்கிரஸ் கட்சி எந்த முகத்தோடு மக்களிடத்தில் வாக்குக் கேட்கும் என்பது கேள்விக் குறியாகிவிட்டது. ஈழத் தமிழர் பிரச்சினையிலும் சரி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினை யிலும் சரி, இதுவரை கடைபிடித்து வந்த நம்பத்தகாத நடைமுறைகளைத் தூக்கி எறிந்து, நேர்மையான முறையில் நம்பிக்கை அளிக்கும் தன்மையிலும், மதிப்புக் கூடும் வகையிலும் அந்தரங்க சுத்தியுடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஜெனீவாவில் அய்.நா.வின். மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் இந்திய அரசு இதுவரை செய்திருக்கும் தவறுகளுக்குப் கழுவாய்த் தேடிக் கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(5) தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்படுவதற்கான தீர்வுகள் தேவை
தமிழர்களின் நீண்ட காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இதிகாசக் கற்பனைப் படைப்பான ராமன் பெயரைச் சொல்லி, ராமன் பாலத்தை இடிக்கக்கூடாது என்கிற அறிவியலுக்குப் புறம்பான மதவாத மூடக் கருத்தின் அடிப்படையில் வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறுவது - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிற அடிப்படைக் கொள்கைக்கு 51 A(h) விரோதமானது என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு மய்யம் (NEERI - The National Environmental Engineering Research Institute) ஆய்வு செய்து உருவாக்கித் தந்த வழித் தடத்தை மதவாதக் காரணத்துக்காக மாற்றச் சொல்லுவது அறிவார்ந்தது அல்ல என்பதோடு, இந்த வழித்தடத்தில் திட்ட வேலைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு விட்ட நிலையில், அதனை மாற்றச் சொல்லுவது - பொது மக்கள் வரிப்பணமும் காலமும் வீண் விரயம் என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டி, நீரி நிறுவனம் வகுத்துத் தந்த அறிவியல் பூர்வமான வழித்தடத்தில் திட்டத்தை நிறைவேற்றி தமிழர்களின் நீண்ட காலக் கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுமாறு நீதிமன்றம் மற்றும் மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(6)காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினைகள்
தமிழ்நாட்டின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினை களான காவிரி நதி நீர்ப் பிரச்சினை; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பிரச்சினை, பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் பிரச்சினை இவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப் பட்டு வருகிறது.
சட்டரீதியான உரிமைகள் தமிழ்நாட்டுக்கு இருந்தும், மற்ற மற்ற மாநிலங்களின் அடாவடித்தனத்தாலும், மத்திய அரசு தன் பொறுப்பை உணர்ந்து செயல்படாது அரசியல் நோக்கத்தேர்டு பாராமுகம் காட்டுவதாலும், தமிழ்நாட்டு மக்கள் பெரும் அவதிக்கும், பொருள் இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.
நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் கூட அவற்றை நடை முறைப்படுத்த கருநாடக, கேரள மாநில அரசுகள் மறுப்பது நீதிமன்ற அவமதிப்பேயாகும். மேலும் காலங் கடத்தாமல் நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அரசுகள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(7) வேலை வாய்ப்பு:
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும், தனியார்த் துறைகள், பன்னாட்டு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்க புதிதாகச் சட்டம் ஒன்றை இயற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் விதி விலக்கின்றி இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(8) பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்குக!
20 ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ச்சிக்கு ஆளாக்கிய பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான வழக்கை விரைவுபடுத்தி, குற்றவாளி களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும், அதை போலவே குஜராத்தில் 2002 இல் சிறுபான்மையினர் மீது படுகொலையை ஏவிவிட்ட குஜராத் முதலச்சர் நரேந்திர மோடி மற்றும் வன்முறையாளர்கள் மீது மேலும் கால தாமதமின்றி சட்டப் படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனையைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(9)தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(9) (அ) நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ஆணை பிறப்பித்தபடி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடைபாதை கோயில்களையும் அகற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஆ) தமிழ்நாடு முதல் அமைச்சர் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோதமாகக் குறிப்பிட்ட மதத்துக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் வெளிப்படையாகப் பூஜை, புனஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பக்தியைத் தனிப்பட்ட முறையில் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
(10) தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டத்தை மீண்டும் கொண்டு வருக!
முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்ப்பட்ட தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைக்கும் - தமிழறிஞர்களின் முடிவுக்கும் - திராவிடர் இயக்கப் பண்பாட்டுக் கொள்கைக்கும் விரோதமானது என்பதைத் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு இம்மாநாடு சுட்டிக்காட்டி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் மீண்டும் சட்டம் இயற்றவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.
(11) தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு தி.மு.க. அரசு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, கட்டுமானங்களைப் புறந்தள்ளி அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் மக்கள் விரோத செயல்பாடுகளை மறந்து தேர்தலில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் நல அரசு என்னும் கடமையைச் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது 12-3-2012
பார்ப்பன எதிர்ப்பே தமிழர் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் காரணம்! தஞ்சையில் கழக முன்னணியினர் முழக்கம்!
தஞ்சாவூர், மார்ச் 12- பார்ப்பனர் எதிர்ப்பு உணர்ச்சிதான், தமிழர்களுக்கு எல்லா உரிமைகளையும் வாங்கித் தந்தது என்றனர் கழக முன்னணியினர்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக் காப்பு மாநாடு மற்றும் விடுதலை சந்தா வழங்கும் விழா தஞ்சாவூரில் நேற்று (11.3.2012) மாலை திலகர் திடலில் பல்கலைச் செல்வன் பாப்பாநாடு பாஸ்கர் -கருங்குயில் உரந்தை கணேசன் குழுவினரின் இன்னிசை. அதனைத் தொடர்ந்து தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் - பி.பெரியார்நேசன் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. குலுங்கச் குலுங்கச் குலுங்க சிரிக்க வைத்து சிந்தனையைத் தட்டி எழுப்பும் குறும் நாடகங்களால் கலக்கினர். திலகர் திடலில் கூடியிருந்த மக்கள் கடல் வெகுவாகவே ரசித்தது.
செயலவைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு
விழாவிற்கு திராவிடர் கழகச் செயலவைத் தலைவரும், வரவேற்புக் குழுத் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராசு தலைமை வகித்தார். அவர் தமதுரையில் விடுதலை கடந்த காலத்தில் நடந்து வந்த பாதையை அவரது அனுபவத்தின் வாயிலாக எடுத்துரைத்தார்.
தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் வெ.செயராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மன்னை ஆர்.பி.சித்தார்த்தன், மாநில மாணவரணி செயலாளர் ம.திராவிட எழில், மாநாட்டு வரவேற்புக்குழுப் பொருளாளரும், மாவட்டக் கழகத் துணைத் தலைவருமான மு.தேசிங்கு, தஞ்சை நகர திராவிடர் கழக செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர் சி.அமர்சிங்
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்புரை வழங்கினார்.
வரவேற்புரை என்று சொல்லப்பட்டாலும் மாநாட்டு வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்த அனைவருக்கும் தனித்தனியே நன்றி கூறி, வரவேற்புரையை ஒரு நன்றி உரையாக அமைத்துக்கொண்டு பேசினார்.
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன் அவர்கள் தமது உரையில், எல்லோரும் இடைத்தேர்தலில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுப்பது திராவிடர் கழகமே என்று குறிப்பிட்டார்.
தஞ்சை மண்டலத் தலைவர் வெ.செயராமன் அவர்கள் தமதுரையில், பார்ப்பனர் எதிர்ப்புகளே தமிழர்களின் வளர்ச்சிக்குக் காரணம் - அதனைத் தீவிரமாக திராவிடர் கழகம் முன்னெடுத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.
தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ்
விடுதலை சந்தாக்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் பெருக முயற்சி எடுப்போம் என்றார் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ்.
பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் சுருக்கமாகக் குறிப்பிடும் போது சென்னையில் விக்டோரியா விடுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை நினைவூட்டினார். அப்பொழுதெல்லாம் விடுதிகள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்த நிலையில், எடுப்புச் சாப்பாடு எடுத்து வெளியில் கொண்டு வந்து சாப்பிடும் நிலைதான் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு இருந்தது.
அத்தகைய காலகட்டத்தில்தான் டாக்டர் சி.நடேசனார் திராவிடன் இல்லத்தை ஏற்படுத்தி, பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படித்திட அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்.
பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக விளங்கிய மணவாள ராமானுசம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணிய நாடார், இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் போன்ற பெருமக்கள் எல்லாம் டாக்டர் சி.நடேசனார் ஏற்படுத்திய விடுதியில் - திராவிடன் இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் என்ற நன்றியுணர்வை தமிழர்கள் மறக்கவே மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
50 ஆண்டுகளுக்கு முன் அரசு ஆவணங்களில் நாம் எல்லோரும் சூத்திரன் என்றும் பஞ்சமர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தையும் நினைவூட்டினார் கழகப் பொதுச்செயலாளர், இன்று அந்த இழிவு பட்டங்களிலிருந்து நாம் விடுபட்டு இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கமே என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
அகிலா எழிலரசன்
மகளிர் சார்பில் மகளிர் பாசறைப் பொருளாளர் திருப்பத்தூர் அகிலா எழிலரசன் உரையாற்றினார்.
மற்ற ஏடுகள் எல்லாம் நாம் வாசிப்பது. விடுதலை மட்டும்தான், நாம் சுவாசிப்பது என்று அழகாகக் கருத்தாழத்துடன் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் தமதுரையில் குறிப்பிட்டதாவது:
திராவிட இயக்க நூற்றாண்டு விழா தொடக்கம் என்று திராவிடர் கழகமும், தி.மு.க.வும் நிகழ்ச்சிகளைத் தொடங்கிய நிலையில் பார்ப்பனர்கள் அச்சத்திற்கும் - ஆத்திரத்திற்கும் ஆளாகி இருப்பதாகத் தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆரியர்களை, பார்ப்பனர்களைப் பிரித்து அடையாளம் காட்டுகிறது. பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை எதிர்த்துப் பார்ப்பனர்கள் அல்லாதாரைக் கிளர்ந்தெழத் தூண்டுகிறது என்று அவர்கள் சரியாகவே நினைக்கிறார்கள்.
இந்தக் கழகத்திற்குத் திராவிடர் கழகம் என்று ஏன் பெயர் வைத்தேன் என்பது குறித்து தந்தை பெரியார் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
நாம் வைக்கும் ஒரு பெயரில் பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து கொள்ள ஏதாவது ஒரு வகையில் வசதி செய்து கொடுத்துவிடக் கூடாது.
தமிழன் என்று வைத்தால்கூட பார்ப்பான் உள்ளே புகுந்துவிடுவான். வரலாற்றுப் பெயராக இருக்கும் காரணத்தாலும், பார்ப்பனர்கள் உள்ளே நுழைய வசதியில்லாத நிலையிலுமே திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியதாக தந்தை பெரியார் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டினார் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன்.
இதனைப் புரிந்துகொள்ளமலோ புரிந்து கொண்டோ தமிழ்த்தேசியவாதிகள் பார்ப்பனர்களின் குரலை இரவல் வாங்கி திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று குரல் கொடுப்பது பச்சைத் துரோகமாகும்.
தஞ்சை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் கூட உரத்தநாடு சத்திரம் ஒரு காலத்தில் பார்ப்பனர் மாணவர்கள் மட்டும் தங்கிப்படிக்கும் விடுதியாக இருந்தது. பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் விடுதியில் அந்த நிலைதான் அதனை மாற்றி பார்ப்பனர் அல்லாத மாணவர்களும் தங்கிப் படிக்கலாம் என்று நீதிக்கட்சித் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் ஜில்லா போர்டு தலைவராக இருந்து உத்தரவிட்டார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? திருவையாறு கல்லூரி வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாகத்தானே இருந்தது. அதில் தமிழ் படிக்க ஆணை பிறப்பித்தவர் நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம்தானே.
நீதிக்கட்சி என்ன செய்தது, திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நன்றி உணர்வின்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கலைஞர் அவர்கள் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியதை, செல்வி ஜெயலலிதா இன்று சட்டம் போட்டுத் தடுத்தாரே எந்தத் தமிழ்த்தேசியவாதிகள் வாய் திறந்தனர் என்ற வினாவையும் அவர் எழுப்பினார்.
கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை
கலைஞர் அவர்கள் பார்ப்பனர்களை எதிர்ப்போம் என்று கூறிவிட்டார். அதனைப் பிடித்துக்கொண்டுள்ள னர். பார்ப்பானுக்குப் பார்ப்பான் என்றுதானே பெயர் . அதில் என்ன குற்றம்?
அண்ணாவின் பெயரையும், திராவிட என்ற பெயரையும் இன்றைய முதல்அமைச்சர் தவறான வகையில் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை.
இறுதியாக - மாநாட்டில் நிறைவுரையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார்கள்.
அவர் தமதுரையில், திராவிடர் என்ற வரலாற்றுப் பெயர்களுக்கான ஆதாரங்களையும், கழகம் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரத் திட்டங்களையும் அறிவித்தார். (உரை விரிவாக பின்னர் வெளியிடப்படும்)
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் த.செகந்நாதன் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.
கடைசி வரை கலையாமல் மக்கள் கடல் தமிழர் தலைவர் உரையைச் செவிமடுத்தது குறிப்பிடத் தக்கதாகும். 12-3-2012
வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு : கருத்தரங்கம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திங்கள், 12 மார்ச் 2012 15:26
E-mail Print
வஞ்சினம் கூறினர் கழகப் பேச்சாளர்கள்
அடிபடுவதற்கென்றே பிறந்தவனா தமிழன்?
தஞ்சாவூர், மார்ச் 12-உலகில் அடிபடுவதற்கென்றே பிறந்தவனா தமிழன் என்ற ஆத்திரம் நிறைந்த வினாவை எழுப்பினர் கழகச் சொற்பொழிவாளர்கள்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக்காப்பு மாநாடுக் கருத்தரங்கம் தஞ்சாவூர் - தொல்காப்பியர் சதுக்கம் - கிரேசி அரங்கத்தில் நேற்று (11-3-2012) காலை 9 மணிக்கு எழுச்சிமிகு கலை நிகழ்ச்சி களுடன் தொடங்கப்பட்டது.
பல்கலைச் செல்வன்
பாப்பாநாடு பாஸ்கர் - கருங்குயில் உரந்தை கணேஷ் குழுவினரின் பண்ணிசை நிகழ்ச்சி எழுச்சியூட்டியது. குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் அனை வரையும் வர வேற்று உரையாற்றினார்.
துரை - சந்திரசேகரன்
கருத்தரங்கத்திற்குத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். உலகின் பல நாடுகளில் ஏற்பட்ட புரட்சி வரலாறுகளை யெல்லாம் எடுத்துக் காட்டினார். இந்தியா - 6400 ஜாதிகளின் கூடாரமாக இருப்ப தையும் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் தேசபக்தி, தெய்வபக்தி, சர்வ, தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் இருக்கின்றன. நடப்பில் தேசியத்தைக் காணோம் - சர்வதேசியத் தையும் காணோம். தென் பெண்ணையின் குறுக்கே ஆந்திரா அணையைக் கட்டுவோம் என்கிறது. அப்படி ஒரு அணைக் கட்டப்பட்டால் வடாற்காடு மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வறட்சிக்கு ஆளாகும் என்று எச்சரித்தார்.
வழக்குரைஞர் புலிகேசி
வழக்குரைஞர் புலிகேசி - தமிழில் அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற தலைப்பில் பல புள்ளி விவரங்களுடன் பேசினார். 8,22,000 மாணவர்கள் பல துறைகளில் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வினை இருபால் மாணவர்கள் ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர். இவற்றைத் தமிழில் எழுத முடியாது. இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் எழுத முடியும்.
இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர் களுக்கும், ஆங்கில வழிக் கற்றவர்களுக்கும் இதனால் அனுகூலங்கள் ஏற்படுகின்றன. அய். ஏ.எஸ். தேர்வுக்கூட அவரவர் தாய்மொழியில் எழுதிட அனுமதிக்கப்படும்பொழுது, அய்.அய்.டி., அய். அய்.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிற்கான நுழைவுத் தேர்வுகளை ஏன் தமிழில் எழுத முடியாது? இந்தத் தடைக்குக் காரணம் என்ன? என்ற அர்த்தம் மிக்க வினாவை எழுப்பினார் வழக்குரைஞர் புலிகேசி.
இரயில்வே பணிகளுக்கான தேர்வுகளை அனைத்துத் தாய்மொழிகளிலும் எழுதலாம் என்று இரயில்வே நிதி நிலை அறிக்கையிலேயே மம்தா பானர்ஜி வெளியிட்டதையும் வழக்குரைஞர் சுட்டிக் காட்டினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (4-2-2012) இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் அவர் பொருத்தமாக எடுத்துக்காட்டினார்.
இராம. அன்பழகன்
சேது சமுத்திரத் திட்டம் குறித்து கழகச் சொற் பொழிவாளர் இராம அன்பழகன் விரிவாகப் பேசினார். மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தபோது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எந்த வழித் தடத்தில் நிறைவேற்றுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அந்தத் தடத்தில்தான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சேது சமுத்திரத் திட்டத்தின் செயல்பாடுகள் அமைந்தன. திடீரென்று ராமன் பாலம் என்ற புதுக்கதையை பி.ஜே.பி. அவிழ்த்து விடுவானேன்? 2003இல் அத்வானியில் கனவிலோ, வாஜ்பேயியின் கனவிலோ ராமன் வரவில்லையா?
ராமன் பாலமாம், அதைக் குரங்குகளும் அணில் களும் கட்டினவாம். அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டினார்களாம். இவர்கள் நம்பிக்கை அவர்களுக்குள் எப்படியோ இருந்து தொலைந்து போகட்டும். இதனால் பாதிக்கப் படுவது தமிழ்நாடு அல்லவா? தமிழனின் காரியம் எந்த வகையிலோ வஞ்சிக்கப்படுவதுதான் வாடிக்கையாகி விட்டது என்பதை உருக்கமாக எடுத்துரைத்தார். இதற்காக கழகத் தலைவர் போர்க்குரல் கொடுத்து வருகிறார் - கழகம் களத்தில் இறங்கும் என்றும் குறிப்பிட்டார்.
தஞ்சை இரா.பெரியார் செல்வம்
காவிரி நீர் என்ற தலைப்பில் தஞ்சை இரா.பெரியார் செல்வம் ஆவேசமாகப் பேசினார். மைசூர் சமஸ் தானத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் என்ன சொல்லுகிறது? உலகின் நதி நீர் ஒப்பந்தங்கள் என்ன சொல்லுகின்றன?
ஓர் அணையைக் கட்டும்போது அதன் கீழ்ப் பகுதியில் உள்ள நாடுகளின் அனுமதியைப் பெற வேண்டும். காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறப்பட்டதா? கபினி அணையைக் கட்டினார்களே - மத்திய அரசு தடுத்ததா?
1974-களில் தமிழ்நாட்டின் விவசாயப் பகுதியில் 5 லட்சம் ஏக்கர் . இன்றைய நிலை என்ன? 3 லட்சம் டன் உணவு உற்பத்தி இழப்புக்கு ஆளாகி இருக்கிறோமே!
நடுவர் மன்றம் சொன்னாலும் சரி, உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கினாலும் சரி. அவற்றை ஏற்கமாட்டோம் என்று கருநாடகம் அடம் பிடிக்கிறதே - இதற்குத் தீர்வுதான் என்ன? தமிழன் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் கரு நாடகத்தில் தமிழன் தாக்கப் படுகின்றானே! உலகில் அடிபடுவதற்கு என்பதற்காகவே பிறந்தவன் தமிழன் தானா? என்ற வினாவை எழுப்பினார் தஞ்சைப் பெரியார் செல்வன்.
வழக்குரைஞர் கி.மகேந்திரன்
முல்லைப் பெரியாறு எனும் தலைப்பில் கழகத்தின் சட்டத்துறை மாநிலத் தலைவர் கி.மகேந்திரன் அவர்கள் தக்க ஆதாரங்களுடன் கருத்துக்களை எடுத்து வைத்தார். திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு உரியது. அப்படி இருக்கும்போது கேரள மாநில அரசுக்கு இதில் மூக்கை நுழைத்திட சட்டப்படி அதிகாரமே கிடையாது. 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகே இந்த அணையை மய்யப்படுத்திப் பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். 1895 ஆம் ஆண்டுக்கும் 1979 ஆம் ஆண்டுக்குமிடையே எந்த சர்ச்சைகளும் இல்லை.
1989 இல் முதல் அமைச்சராக கலைஞர் இருந்தார். அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவும் போட்டார். உச்சநீதிமன்றம் வரை பிரச்சினை சென்றது. உச்சநீதிமன்றமும் 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத் திற்கு உரிமை இல்லை என்று கேரள அரசு சொல்லு கிறதே - இதன் மீது நடவடிக்கை என்ன? இதுதான் இந்தியாவின் தேசியமா?
இடுக்கி மாவட்டத்தை நாம் திரும்பப் பெற போராடியாக வேண்டும் என்று கூறினார் வழக்கு ரைஞர் மதுரை மகேந்திரன்.
முனைவர் அதிரடி அன்ழகன்
ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் எனும் தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன் கருத் தரங்க உரையை வழங்கினார். செடிக்கு, கொடிக்கு, பறவைக்குக் கூட நாட்டில் பாதுகாப்பு இருக்கிறது. அவற்றைப் பாதுகாக்க நாட்டில் அமைப்புகள் உண்டு. இலங்கையில் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் ஓர் அரசால் படுகொலை செய்யப்பட்டனர். கேட்க நாதியில்லையே! இந்தியாவின் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை சென்ற போது சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒரு சிப்பாயால் துப்பாக்கியின் அடிக்கட்டையால் தாக்கப்பட்டார். கண்டிப்பாக அது கொலை முயற்சிதான். அந்த சிங்கள இனத்தின் மீது இங்கு இருப்பவர்களுக்கு கோபம் வரவில்லை; மாறாக தமிழர்கள் பலிகடா ஆக்கப்படுவது நியாயம்தானா? என்று வினா எழுப்பினார்.
தமிழக மீனவர்கள் 500 பேர்களுக்கு மேல் இலங்கை அரசின் கடற்படையால் படு கொலை செய்யப் பட்டுள்ளனர். இந்தியா என்ன செய்தது? அய்.நா. சபை இருந்து பயன் என்ன? இதே நிலை இந்தியாவில் உள்ள வேறு ஓர் இனத்துக்கு ஏற்பட்டிருந்தால் இந்தியா வெங்கும் எவ்வளவுப் பெரிய உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டிருக்கும்? இந்திய அரசும் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும்?
இந்தியாவில் தமிழன்தான் இளிச்சவாயனா? என்ற நியாய பூர்வமான வினாவை எழுப்பினார் அதிரடி. தஞ்சை நகர திராவிடர் கழகத் தலைவர் வ.ஸ்டாலின் நன்றி கூறினார்.
நிறைவுரையைக் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார். 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Post a Comment